மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்

இந்திய நாட்டின் சமூகவியலை ஆய்வு செய்த அறிஞர்களில் அயல் தேசத்து ஆய்வாளர்களும் உண்டு; இந்திய நாட்டின் அறிஞர்களும் உண்டு. இருவகைப்பட்ட ஆய்வாளர்களும் அதன் சிறப்புக்கூறாகவும், மாறாத இயல்பாகவும் குறிப்பிட்டுச் சொல்லும் கருத்தியல் ஒன்று உள்ளது. அது கருத்தியலா? செயல்தளமா ? என்பதைப் பற்றிய விவாதங்களும் அவர்களிடத்தில் உண்டு. தொடர்ந்து சமூகவியலாளர்களால் விவாதிக்கப்படும் அது இந்தியாவின் சாதி அமைப்புத் தான். ஒருவித கூம்பு வடிவத்தில்- எகிப்தின் பண்டைய பிரமிடு வடிவத்தில் -அதன் அமைப்பு உள்ளது எனப் படம் போட்டுக் காட்டும் ஆய்வாளர்கள், கூம்பின் உச்சி முனையாக இருப்பவர்கள் பிராமணர்கள் எனவும், அடித்தளமாக இருப்பவர்கள் சூத்திரர்கள் எனவும் கூறுகின்றனர்.
 
அடித்தளத்திலும் இல்லாமல், கூம்பு வடிவத்திற்கும் வெளியே இருக்கும்படி வைக்கப்பட்டவர்கள் பஞ்சமர்கள் என அழைக்கப்பட்ட தீண்டப்படாத சாதியினர் என அதன் வரலாற்றையும் இருப்பையும் விளக்குகின்றனர். இந்த வரலாற்றையும் இருப்பையும் பெருமளவு மாற்றாமல் வைத்திருக்கும்படி தத்துவ விளக்கம் அளித்துக் காப்பாற்றும் வேலையை இந்து மதத்தின் தத்துவ வெளிப்பாடுகளான விதி,கர்மா, மறுபிறப்பு போன்றன செய்கின்றன என்பது அவர்களின் விளக்க மாகவும் விமரிசனமாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் ‘இந்திய சமுதாயம் மாறவே மாறாது; மாற்றத்திற்கு இடமளிக்காத சமூக அடித்தளத்தைக் கொண்டது’ என்பதை ஒத்துக்கொள்ளாத சமூகவியல் அறிஞர்களும் உண்டு. தலைநகரின் டில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான எம்.என். ஸ்ரீனிவாஸ் அத்தகைய அறிஞர்களுள் ஒருவர். இருபதாம் நூற்றாண்டு இந்திய சமுதாயத்தின் நகர்வுகளைப் பற்றி விரிவான ஆய்வுகளைச் செய்துள்ள அவர், இந்திய சமூகங்கள் ஒருவித மேல்நிலையாக்கத்தில் உள்ளன என விளக்கியுள்ளார். 

சமஸ்கிருதமயமாதல் என அந்த நகர்வுகளை அடையாளப்படுத்தும் சீனிவாஸ் இந்தியாவில் ஒவ்வொருவரும் சமூகக் கட்டமைப்பில் உச்சியில் இருக்கும் பிராமணர்களைப் போலவே ஆக விரும்புகின்றனர் என்று கூறியுள்ளார். தனி மனித விருப்பம், குடும்பவாழ்க்கையின் நியதிகள், கலை ஈடுபாடு, பொழுதுபோக்கு ஆர்வங்கள், பொதுவெளியில் நடந்து கொள்ளும் முறை, ஆன்மீக வாழ்வு என அனைத்திலும் இந்தியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் முன்மாதிரிகளாகப் பிராமணர்களையே கொள்கின்றனர் என்பது அவரது வாதம். அந்த வாதம் ஒருவிதத்தில் உண்மைதான் என்று சொல்லலாம். குறிப்பாக இருபதாம் நூற்றாண்டு இந்திய வாழ்க்கையைக் கூர்மையாகக் கவனிக்கும் ஒவ்வொருவரும் அதனை ஒத்துக் கொள்ளத்தான் செய்வர். அதே நேரத்தில் இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளிலும் இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளிலும் காணப்படும் ஒரு போக்கு அந்தக் கூற்றை முழுமையான உண்மை அல்ல என்பதைச் சொல்கின்றன.

சாதிகளை ஒழிப்போம் எனத் தீவிரமாகப் பிரசாரம் செய்த பெரியார் ஈ.வெ.ராமசாமியின் இலக்குகள் எதிர்மறை விளைவுகள் அளித்துக் கொண்டிருக்கின்றன. திருமணப் பத்திரிகைகளிலும் பொது இடங்களிலும் தங்களுடைய சாதி அடையாளத்தைக் காட்டத் தயங்கிய காலம் முடிந்து விட்டது. தங்கள் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்களைச் சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்து வந்த தமிழ்ச் சமுதாயம் சாதி அடையாளத்தைக் காட்டுவதையே முக்கிய இலக்காகக் கொண்ட சாதிச்சங்கங்களின் பின்னால் அணி திரண்டு கொண்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்காகத் தங்களை ஒரு அணியாகக் காட்டி அரசாங்கம் தரும் சலுகைகளிலும் அரசியல் அதிகாரத்திலும் பங்கு பெற விரும்பிய தாழ்த்தப்பட்டோர்கள் சாதியாக அணிதிரட்டப் பட்டதில் சில நியாயங்கள் இருந்தது. ஆனால் இன்று ஒடுக்கும் சாதிகளும் அதிகாரத்தின் அனைத்துத் தளங்களையும் கைப் பற்றியிருக்கும் சாதிகளும் கூட்டம் காட்டி அரசாங்கத்தை மிரட்டுவதற்கும், அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசுவதற்கும் சாதிச்சங்க ஒற்றுமையை வலியுறுத்துகின்றன. இந்தப் போக்கினை முன்னிறுத்துபவர்கள் முன் வைக்கும் முதல் கோரிக்கை இட ஒதுக்கீட்டில் பெறும் கூடுதல் சலுகைகளாகவே இருக்கின்றன.

முற்பட்ட வகுப்பார் என்ற பட்டியலில் இடம் பெற்ற ஒரு சாதியின் சங்கம் தங்கள் சாதியைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறது. பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் வேண்டும் என்கின்றனர். மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் சாதிகள், பழங்குடிப் பிரிவில் இடம் வேண்டிக் கோரிக்கை வைக்கின்றனர். தாழ்த்தப் பட்டோர் பட்டியலில் இருப்பவர்களில் உள் ஒதுக்கீடு வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் தான் இத்தகைய கோரிக்கைகள் இருக்கின்றன என்பதில்லை. இந்தியா முழுக்க இத்தகைய கோரிக்கைகள் இருக்கின்றன என்பதற்குச் சமீபத்திய உதாரணம் தான் ராஜஸ்தானில் நடந்த குஜ்ஜார்களின் கலவரம். இந்த கோரிக்கைகளின் பின்னணியைக் கவனமாக ஆராய்ந்தால், இந்திய சாதிகளின் பயணம் எம்.என். சீனிவாஸ் சொன்னதைப் போல மேல் நோக்கிய பயணமாக மட்டுமே இல்லை என்பது புரிய வரலாம். வாழ்க்கையின் அடிப்படையான பொருளாதாரத் தேவைகளுக்காகவும், அரசுப் பணிகளைப் பெறுவதற்காகவும் இந்திய சாதிகள் தங்களின் இடத்தை பின்னோக்கி நகர்த்திக் கொள்வதையே விரும்புகின்றன. இது விதத்தில் மேல்நிலையாக்கம் அல்ல; கீழ்நிலையாக்கம் எனலாம்.

கீழ்நிலையாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அரசுப் பதவிகளையும் அதிகாரத்தையும் கைப்பற்ற நினைக்கும் இந்திய மனிதர்கள் பண்பாட்டுத் தளத்தில் , மேல்நிலையாக்க அடையாளங்களையே விரும்புகின்றனர். பண்பாட்டுத்தளத்தில் மேல் நோக்கிய பயணமும் பொருளாதாரத் தளத்தில் கீழ்நோக்கிய பயணமும் என இரட்டைச் சவாரியை இந்தியர்கள் ரசித்துச் செய்கின்றனர் என்று சொல்வதற்கில்லை. ஒருவிதக் குற்ற உணர்வோடுதான் அப்பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்தியர்களை ஒரே நேரத்தில் ஆண்டை- அடிமை என்ற இரட்டைத் தன்னிலையில் வைத்தது மனுஸ்மிருதியின் வருணக் கோட்பாடு என்றால், ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக உண்டாக்கிய -முற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட அல்லது பட்டியல் இனச் சாதி யினர், பட்டியலிடப்பட்ட பழங்குடிகள் என்பதான பட்டியல்கள் வேறுவிதமான இரட்டைத் தன்னிலைகளை உருவாக்கி விட்டன என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
 
ஒரே நேரத்தில் ஆதிக்கசாதி அடையாளங்களோடும் ஒடுக்கப்பட்ட சாதிக் கோரிக்கையோடும் அலையும் இந்தப் பயணம் எதிர்காலத்தில் உண்டாக்கப் போகும் ஆபத்தான விளைவுகளின் பாரதூர வெளிப்பாடுதான் குஜ்ஜார்களின் போராட்டம்.இடஒதுக்கீட்டின்படி தங்களை -குஜ்ஜார் சாதியினரை- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் தொடங்கிய அச்சாதியினர் அதிகம் வசிக்கும் மாநிலங்கள் ராஜஸ்தான்,பஞ்சாப், காஷ்மீர் போன்ற வட இந்திய மாநிலங்கள். வழக்கமான கோரிக்கை வைப்பாகத் தொடங்கிய போராட்டம் தெருக்களில் இறங்கி நடத்தும் அத்துமீறலாகவும், போர்க்களக்காட்சிகளாகவும் மாறியுள்ளன என்பதை செய்தி அலைவரிசைகள் தினந்தோறும் அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சி ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக் காட்டின. ராஜஸ்தான் அரசிடம் கோரிக்கை வைத்த குஜ்ஜார்கள் தங்கள் கோபப்பார்வையை அரசின் கட்டமைப்பை விட்டு விட்டு அடுத்துள்ள சாதிகளின் பக்கம் திருப்பிய போதுதான். போராட்டம் போர்க்களமாக மாறியுள்ளது. இத்தகைய போராட்டங்களை எதிர்கொள்ளும் திறமை இப்போதுள்ள வாக்கு வங்கி அரசியலுக்கும் கொள்கைகளை விட்டு விட்டு அதிகாரத்தை மட்டும் பங்கு போடும் அரசுகளுக்கும் இருக்கிறதா என்பதுதான் கவலையோடு நம்முன் எழும் கேள்வி.
 
அவை உண்மைகளை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தாமல் மக்களை ஏமாற்றும் வேலைகளையே செய்து வருகின்றன. இன்று முன்னெடுக்கப்படும் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என வேகமாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில் அரசாங்கம் தரும் வேலை வாய்ப்புப் பணிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் தெருவில் இறங்கிப் போராடும் கலவரங்கள் எத்தகைய விளைவுகளை உண்டாக்கி விடப் போகின்றன. மாயமானை விரட்டும் பயணத்தை விட்டு மான்களை நோக்கி இந்தியர்கள் பயணம் செய்யும்படி எந்த இயக்கம் வழி நடத்தப் போகிறது? கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெளிச்சம் தெரியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்