தீர்க்கவாசகன் கவிதைகள்

கட்டுரை மனம் என்னுடையது. ஆனால் விரிவாக அமர்ந்து எழுதமுடியாத கட்டுரைகளைக் கவிதை வடிவத்திற்குள் அடைத்துவிடவும் முயற்சிசெய்வேன். அந்த வகையில் எனது கவிதைகள் எப்போதும் புறம் சார்ந்த நிகழ்வுகளை விவரிப்பனவாகவும் விமரிசனம் செய்வனவாகவும் இருக்கின்றன. 

நகல்களின் ஊடே ஒரு பயணம்
 

நமது காலம் நகல்களின் காலம். 
காகித நகல்கள் மட்டுமல்ல 
மனித நகல்களும் மலிவாகவே கிடைக்கின்றன. 

உங்கள் நகல்களுக்கு வயது என்ன இருக்கும் 
நினைவுச் சக்கரத்தைத் திருப்பிச் சுற்றுங்கள் 
பிறந்த நாட்கள்.., 
ஓராண்டு..ஈராண்டுப் பிறந்த நாட்கள்.. 
சீருடைபோட்டுச் சென்ற நாள், 
பெரிய மனுசி ஆன நாள், 
கணவனாகவும் மனைவியாகவும் 
காலம் கணித்த கனவு நாட்கள் 
 கனவான்களெனக் கருதிக் கொண்டு 
கம்பீரமாக நின்ற நாட்கள் 
நல்ல நாட்களும் நகல் எடுக்கும் நாட்களும் 
ஒன்றாக இருந்த நாட்கள் எனச் சில இருந்தன. 

இவை எல்லாம் இருப்பவர்களுக்குத் தான். 
இல்லாதவர்களுக்கு இவை எதுவும் இல்லை 
தான் இருப்பவர் - இல்லாதவர் என்னும் இருவேறு உலகத்தியற்கை.
 நகரெங்கும் நகல்களின் கூடாரங்கள். அழைக்கின்றவர்களாய்..அசைகின்றவர்களாய் விரிக்கின்றவர்களாய்..விற்கின்றவர்களாய்.. எ
ண்ணெய் வண்ணத்தில் இரும்புத் தகடுகள். 
படபடக்கும் வண்ணக் காகிதங்கள்.. 
பளபளக்கும் வினய்ல் படுதாக்கள்.. 
நகல்கள் மலிவாகக் கிடைக்கின்றன. 
பெயர்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.. 
புகைப்படங்கள்,. நிழல் படங்கள்.. வண்ணப்படங்கள்.. 
வெண்மையும் கருமையும் வண்ணங்கள் அற்ற வண்ணங்கள். 
காலம் கரைத்த குடுவைக்குள் 
கறுப்பும் வெள்ளையும் காணாமல் போய்விட்டன. 
அது ஒரு முடிவின் தொடக்கம் 
தொடக்கத்தின் முடிவு 
நினைத்துப் பாருங்கள் 
நினைவுகளைத் திருப்பிப் பாருங்கள் 
நமது குழந்தமை .. , 
நமது குமரப்பருவம் 
நமது நட்புக்கள்,.. 
நமது குடும்பத்தினர், .. 
நமது நாகரிகம் நமது மாற்றங்கள்.. 
முகம் பார்க்க வேண்டி 
தலையைத்தூக்கி நிழலைப் பிடிக்கக் கையையூன்றி.. ..
காற்றை நிறுத்த விரல்களை அசைத்து 
தவழுதல் வேண்டிய தருணங்கள்.. 
விழுதல் வேண்டிய விளையாட்டுக்கள் 
தள்ளுவண்டியின் பயணங்கள்.. 
மட்டக் குதிரையில் ஊர்வலங்கள்.. 
பொக்கைவாய்த் திறப்புக்களும் 
புன்னகையின் மடிப்புக்களும் 
 ஆடைகளில் தான் எத்தனை மாற்றங்கள் 
ஒற்றை வண்ணம் பலவண்ணங்களாக. 
சின்னப் பூக்கள்.. பெரிய பூக்கள் 
நீண்ட கைகள்.. குட்டைக் கைகள். . 
படமெடுத்தாடிய சடைகள் 
முன்னே பார்க்க விரியும் மையுண்ட கண்கள் 
அகன்ற கால்களுடன் அலையும் பேண்டுகள் 
விரியும் காலர் விசிறி மடிப்புக்கள் 
நாகரிகம் நம்மை நகர்த்தி வந்தது. 
 குறுகுறுப்புக்கள் கொண்ட குமரப்பருவம்.. 
வேறுபாடுகள் உணரும் வேகம் அதன் சாரம்.. 
அரும்பிய மீசைகள் அலையும் கூந்தல்கள் 
கனவுகள் பிறக்கும் கண்ணாடிகள் 
கண்ணாடிக்குள் நிஜம் 
நிஜத்தின் நிழல் வெளியே..
தம்பதிகள்.. .. இளம் தம்பதிகள்.. 
இருவரும் நின்ற காலங்கள் நகர..
கணவன் இருக்க மனைவி நிற்க. 
மனைவி இருக்கக் கணவன் நின்ற கணங்களும் வந்தன 

 யார் சொல்ல முடியும் 
நாகரிகம் நம்மை நகர்த்தவில்லையென்று 
எதிரெதிர் அமர்ந்து கால்மேல் காலிட்ட கணங்களும் வந்தன 
குடும்பம் ஒரு புறம் குதூகலம் தான்..
குடும்பம் ஒரு புறம் கூட்டல் கழித்தல்தான் 
குடும்பத்தின் விருப்பம் அடையாளங்கள்.. 
குடும்பத்தின் விருப்பம் கொண்டாட்டங்கள்.. 
உறவின் அடையாளம். உடைமையின் அடையாளம்.. 
சாதியின் அடையாளம்.. 
மதத்தின் அடையாளங்கள் 
அடையாளங்கள் விருப்பங்களாகக் 
கொண்டாட்டங்கள் அடையாளங்களாகும் 
குடும்பம் விரும்புகிறது கொண்டாட்டங்களை.. 
குடும்பங்கள் வேண்டுகின்றன அடையாளங்களை.. 
குடும்பம் விரும்புகிறது கட்டுப்பாடுகளை 
ஆனால் தனியனின் விருப்பம் 
விட்டு விடுதலையாதல் விட்டு விடுதலையாகி 
ஒரு சிட்டுக் குருவியைப் போல 
குற்றமும் தண்டனையும் 
தண்டனைகள் இல்லாத உலகமெனில் 
குற்றங்கள் மட்டும் எதற்கு..? 
மாறுபாடுகள், தவறுகள்,மோதல்கள்
 வழித்தடங்கள் எனில்
விருப்பங்களையும் ஆசைகளையும் 
எப்படி அழைப்பது..? 
தேவைகளும் உள்நினைவும்
 இருப்புக்களென்றால்தண்டனைகளும்.


கறுப்பின் பயணம்

மூடப்பட்ட புதைகுழியிலிருந்து
எழுந்து புறப்பட்டது
கறுப்பு.
சாப்பிட நினைத்து முடியாமல்
போனதெல்லாம் நினைவில்
இருந்தது.
நினைவுகளெதற்கெனப் பிடிவாதம்.

புதிய விருப்பங்களும்
ஆசைகளும்
நினைவுகளாயின.
ரத்தங்குடிப்பதோ மயானக்கொல்லையோ
ஆழ் மனமாகிட மிதந்து நகர்ந்தன.

கிளிப்பச்சைப் புடவைகள்,
வெண்பட்டுக்குஞ்சங்கள்.
காலைக்குளிரில்
மென்பாதம்உரசும் கொலுசுகளோடு
ஜெபமாலை உருட்டும்
விரல்கள் வேண்டும்.

கண்கள் மூட நெற்றியில் சுழலும்
அக்னிக்கு மாற்றாய்
நெய்விளக்கோடு நெகிழ்ந்து
நழுவும்.
புன்னகை வேண்டும்.

புழுதி கிளம்பப் போட்ட
குதியாட்டம் போதுமென்றானது.

வாகனமில்லா வாழ்க்கை
வெறுத்து
ஊழி பலவாச்சு.
சாலைதழுவி
விரைவு காட்டும்
வாகனமொன்றைநேர்த்திக் கடனாக்கு.

பக்தனே
உனது பக்தியை மெச்சிட
வழியெதுவென்றால்
சாலை வரிகட்டி
இன்ஸ்யூர் செய்த
வாகனக்காணிக்கை
முடிவது ஒன்றே.
கறுப்பின் பயணம் காற்றில் அல்ல
காற்றினும்கடிதாய் விரையும் காரில்.
==================
சூளையின் தீனி

அவன் நின்றநேரம்
அவளும் நின்றிருந்தாள்
அவன் சொன்ன வார்த்தைகள்
திருப்பி அனுப்பப்பட்டன.
இடைமறித்த ஆந்தை
விதைத்த இடம் களர்நிலம்.
அனாதைகளாகிக் காற்றில்
வார்த்தைகள் அலைகின்றன.
பிச்சிக் கொடியின் பரவல்
மறிக்கப்பட்ட வேலி.
கதவுகளைக் காணோம்.
ஜன்னல்களில் மட்டுமல்ல;
வாசலிலும்கூடத்தான்.
முகம் தேடி அல்ல
கொலுசுச் சத்தம் கேட்க
அலைகிறது மனம்.
பவள மல்லிகை மட்டும்தான்
பாவனையில் இருக்கிறது.
அழுகைதான் பிடிக்குமெனில்
கேட்டுத் தெரிந்துகொள்ள
என்ன இருக்கிறது.
ஆட்சேபனைகள் ஏதுமில்லை.'
இருட்டில் என்ன கனவு ' 'என்றவன்,
மூடாதே நினைவு திரும்பும் ' என்கிறான்.
வானமும் நிர்வானமும்
அழகெனச் சொன்னது யார்... ?
செம்பருத்திப் பூவில்
வண்ணத்துப்பூச்சியின் பிறப்பு;
பிறந்தவுடன் பறப்பது அதனின் சாத்தியம்.
போடு மண்ணும் பொரி மணலும்
ஆற்றுநீர் உண்ணச் செங்களிம்புப் பூசுமண்.
அடுக்கப்பட்ட செங்கல்சூளை
வீடாகும்; கல்லாகும்.ரத்தம் குடித்த மண்குழம்பு
கரும்பழுப்புக்கல்லாகும்.
ஈசான மூலையிலோ
தென்வடல் சுவற்றிலோ
இல்லை அதன் இடம்.
மண்ணாகலாம்..
கல்லாகலாம்..
இரும்பின் பாகாகலாம்..
நரம்புகளின் திணவு..
சூளையின் தீனி..
சாம்பலின் ருசியில் அவனது புலம்பல்.
கொன்றை மரத்துக்
கிளை ஏறி
கேட்டுவிட்டுப் போகிறதுசெம்போத்து.

=====================28-07-04

அந்தரங்கக் காதலியின் துர்மரணம்

ஒன்பது; அழகின் விரோதம்.
எப்பொழுதும் பட்டியல் எட்டைத் தாண்டாது.
கடைசி நான்கும் தற்காலிக இடங்கள்.
முதல் மூன்றும் நிரந்தர இடங்கள்.
நான்கு மட்டும் இரண்டுக்கும் இடையில்.
ஏக்கத்தைச் சொல்லி
இயலாமையில் போனவளும்,
முதல் ஸ்பரிஷம் பெற்று
முதல் கலவி தந்தவளும்
விதிகள், விளையாட்டுக்கள், வினைகள்
என விவாதங்கள் புரிந்தவளும்
செத்துப்போவது நிச்சயம் இல்லை.
தோற்பதற்கெனவே களமிறங்கும் வீராங்கனையும்,
சூட்டியபோது வாய்பிளந்த அழகுராணியும்
தற்கொலையில் செத்துப்போனதிரை நட்சத்திரமும்,
அட்டைப் படத்தில் இடம்பிடிக்கும்
ஆதிவாசிப் பெண்ணும்,
வருவார்கள்;போவார்கள்.
ஆனால் இவள் மட்டும்
போவாள்; வருவாள்...
வருவாள்; போவாள்....
புதுமை நழுவிய மரபின் முழுமை.
நளின வகிடு; வட்டப் பொட்டு.
அதிராப்பேச்சு;
அதிரும் உதடுகள்.
தொலைக்காட்சிப் பெட்டிகளின்அதிகார தேவதை.
வெண்துகில் போர்த்திகூந்தல்
களைய விரும்பி யுரைத்தாள்.
நான்காமிடமும் காலியாச்சு..
இல்லை.. இல்லை.. செத்துப் போச்சு.
====================== 28-05-2004
காணவில்லை
=======================
எழுந்திருங்க பெண்டுகளே..விடிவெள்ளி வந்திருச்சி
பொழுது மறையுமுன்னே போரடிச்சுக்குமிக்க வேணும்
எழுந்திருங்க பெண்டுகளே..எழுந்திருங்க..
கொத்தன் குரல்கேட்டு கிராமம் முகம் அலம்பும்
கம்மம்புல் மாளிகைகள் கதவு இமைதிறக்கும்
ககனவெளித்தேடலுக்கு காற்றோடு பறவை போதும்
கலைந்தெறிந்த சருகு கொண்டு
ஆலமரம்குளிர்காயும்;அருகே சிறுவருடன்.

தினந்தோறும் வீட்டுமுன் சாணியில் பாதம்படும்.
மாக்கோலம் முகம்வெளுக்க முழங்கையும் சடையுரசும்
இடுப்புக்குடம் சலசலத்து வளையலுக்குப் போட்டியாகும்
பிறைக்குப் பிடிபோட்டு கையில் எடுப்பார்கள்
காலைமென்பனியில் கால்கள் பதிப்பார்கள்.

இந்தக் கிராமத்தில் வளர்ந்து பிரிந்துவந்தேன்
ஆண்டுகள் இரண்டுபத்து உருண்டோடிக்காலமாச்சு.
திரும்பி வந்து பார்த்தபோது
திசையெங்கும் அருகம்புல் தீய்ஞ்சு விரிஞ்சிருக்கு
திணைக்கதிர்கள் படப்புமில்லை; கேழ்வரகுக்கூழுமில்லை.
திரண்டு மேய்ந்துவரும் ஆட்டுச் சத்தந்தானுமில்லை
அருவாள் நெழிபோல நீண்டுவிழும் அருவியில்லை
நீரோடைதானுமில்லை;ஓரத்து நாணலுடன்.

கொண்டுபோனார் யாரென்று அறிந்திருந்தால் சொல்லுங்களேன்.சொன்னவர்க்குப்
பரிசாக பாராட்டுச் சொல்தருவேன்
நிதிகூட நான் தருவேன் திருப்பித்தரும் அறிவினுக்கு.
பசுமைப்புரட்சியென்று
பெயர்சொல்லி திருடிச் சென்ற
எனது ஊர் கிடைத்திடுமா..?
தொடித்தலை விழுத்தண்டூன்றி நடந்துசெல்ல ஆசையுண்டு.

==============

எதுவுமற்றுப் போகவில்லை
தோட்டம்.
முல்லை சிரிக்கவில்லை,
குரோட்டன்களும் குளிரவில்லை,
செம்பருத்தியைக்காணாமல்
ரோஜாவும் தூங்கவில்லை.
கனவு காணாமல் விழிப்பென்பதேது.
என்றாலும்,
செவ்வந்தி பூக்கவும்
மல்லிகை மணக்கவும்
தடையெதுவும் இல்லை.

நாயகியாகவோ வில்லனாகவோ
அன்றி நடித்தலும் கூடும்.
உள்ளாகவும் வெளியாகவும்
இருத்தலும் கூடும்
மாவீரனாதலெனக்குச்சாத்தியமில்லையாதலின்
கோழையாதலும்....

எதுவுமற்றுப் போகவில்லைதோட்டம்.
=================17-11-200


வில்வளைப்பு
=========================
1200/- ரூபாய்
வாடகை வீட்டுமொட்டை மாடியில் அவள்,
தவணை முறையில் பாக்கி நிற்கும்ஸ்கூட்டருடன் அவன்.
அவளும் நோக்க அண்ணலும் நோக்க
இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தி...

பத்தாயிரத்திச் சொச்சம் சம்பளம் வாங்கியும்
அவள் தகப்பன்
வரதட்சணை வில்லை
இன்னும்
வளைக்கவேயில்லை.

அப்புறம் தானே
ராமன் வீட்டிற்கு வருவதும்
அம்பை எடுப்பதும்,
வில்லை வளைப்பதும்
அல்லது முறிப்பதும்.
========================

சொல்லத்தொடங்கினால்
விடுபடும் பெயர்கள் குறித்தேஅக்கறை.
தாள்கள் உள்ளன.
பேனாக்கள் உள்ளன.
குறித்து வைத்துக் கொள்ள நினைவுகள் தான்...

விசிறியடித்தபின்
வரிசை காட்டினால்பல்லிளிப்பே மிஞ்சும்.
எழுதத் தொடங்கியபோது
இல்லாமல் போன நீ
கசக்கி எறிந்தபின்
கனவாகலாம்.
யாருக்கு இல்லையென்றாலும்
அவனுக்கு உண்டு.
அழிரப்பர் கொண்டு அழிக்க நினைத்துக்
கறையெனச் சொல்லி காணாமல் போனவன்.

நன்றி..நன்றி...நன்றி... நன்றி...

==============19-11-2003

சைக்கிள் பழகுதல் சாலச்சிறந்தது
நடத்தலைவிடவும் கூடுதல் பயிற்சி
நடந்து செல்வோரை முந்தவும் இயலும்.
போட்டியென வந்தால்
மைகள் ஜெயிப்பது கதையின் சுவாரசியம்;
முயல்கள்தோற்குமென நம்புதல் விரயம்.
இருசக்கர வாகனங்கள்
விபத்துக்குள்ளாக்கிவிடும் என்பதுபோல.
இயக்குவதற்கு இன்னொருவனிருந்தால்

காயமார்க்கமும் பத்தில்லைதான்.
நம்பிக்கையின் கதவுகள்மட்டும் மூடியே கிடக்கின்றன.
================01.10.03


======================
காசு சுண்டலில் தீர்மானமாகிறதுபோட்டியின் தொடக்கம்.
அலையும்பந்து ஒன்றேயாதலின்
உதைக்கப்படுவதும் உதைபடுவதும் அதன் மேலானது.
அடிக்கப்படும் பந்து
தடுக்கப்படவேண்டும்;
திருப்பப்பட வேண்டும்;
நகர்த்தப்படவேண்டும்.
அல்லது பிடிக்கப்படவேண்டும்
இவை விளையாட்டின்விதிகள்
அதிகநேரம் பந்துவசமாதல்
நுட்பத்தின் சாதுரியம்.
விளையாட்டாக வாழ்தலென்பது கனவில் இருக்கு.
பந்துகள் எகிறும்
மைதானவெளியும் கண்முன் இருக்கு.
==============08-10-03


சிலிர்ப்புகள்



சிலிர்ப்பு-4

---------------
ஞாயிற்றுக்கிழமைப்
பின்மதியத் தூக்கத்தின்
தொடர் கனவுகள்
இன்னொரு ஞாயிற்றுக்கிழமைப்
பின்மதியக் கனவில் 
தொடரும் போடுகிறது.


சிலிர்ப்பு-3
---------------
கருக்கலின் வெளியேற்றம்
கதகதப்போடு தொனதொனக்கிறது
முந்தாநாள் பின்யாமத்து 
ஈரமுத்தமும் உரசும் கூந்தலும்
கனவே ஆயினும் கடந்த காலத்தில்
வாழ முடியாதென்பதைச்
சாளர வெளிச்சம்
சொல்லிவிட்டுப் போகிறது .

சிலிர்ப்பு-2
============
கொம்புகளின் வண்ணங்கள் தரித்துப்
போடப்பட்ட துணிப்பின்னல்
கொம்புசுத்திக் கழற்றும்போது
குட்டைக்கொம்பெனச் சிரித்து
படுத்தது பூம்பூம் மாடு
மரமேறி இறங்கும் குரங்கு பறித்த
அன்னாசிப் பழப் புளிப்பில்
தவளை கவ்விய பாம்பின் தவிப்பு
உறியடியில் கிட்டாத வெற்றி.
பார்த்த இடங்கள் நினைவில் இருக்க 
ரசித்த முகங்கள் இன்னொன்றில் நழுவும்
படித்த புத்தகங்களும் பார்த்த சினிமாக்களும்
அப்படித்தான்.
நினைவில் இருந்தவை கனவில்
நினைவில் பதியாதன மனதில்

சிலிர்ப்பு -1
ஆடைகள் நீக்கலும்
துருத்திய எலும்புகளில்
தேசத்தைத் தரிசித்தலும்
ஞானத்தின் ஆரம்பம்
மோகன்தாஸ் கரம்சந்த்
தேசத்தின் அடையாளம்.
ஆடைகள் ஏற்றலும்
நிர்வாணம் நீக்கிப்
பசியைக் கொல்லுதலும்
அறிவின் தேவை.
பாபா சாகேப்பின்
தேச அடையாளம்
ஞானம் மாயை
அறிவு நடப்பு
எங்கிருந்து தொடங்கலாம்
ஞானத்தின் தேடலிலா?
அறிவின் பாதையிலா?
எமது தேசம் எந்தத் தேசம்?

மழைக்காலப் பாடல்கள்

இந்தவருடத்து மழை
என்னைக் கவிதைகள்
எழுதவைத்துவிட்டது
நன்றி மழைக்கு---
05/12/2015
மங்குனிப்புலவனின் கங்கணக் கவிதை
==============================
யாயு மாயும் நீயே ஆகினை
நானும் நீயே நமதும் நீயே
தீயும் நீயே தீர்ப்பும் நீயே
நீயும் நீயே நின்னெதிர் சதியும்நீயே
பேயும் நீயே பேய்களின் கதியும்நீயே
கையும்நீ கையின் கலையும் நீ
காலம்நீ காலன் விலையும் நீ
பொய்யும்நீ பொய்யின் மெய்யும் நீ
பொய்யும் வழுவும் நீயே தாயே!
ஆணவம் கன்மம் மாயை யென்றோர்
ஆழ்மனச் சொற்கள் ஆழி சூழ்ந்திட
பேணவர் பெண்மதி பொன்மதி யாகி
புகுந்து மறைந்து போதலும் நீயே
பொங்கலும் கங்குலும் பூத வுடலும்
மங்கலும் மமதையும் தாயே நீயே
சங்கும் நீ சங்கறுத்த சடங்கும்நீ
மங்கும் புகழின் மங்காச் சுடரொளி
மங்கள கீதமும் மதுவின் போதையும்
தீரா வியாதியும் தினமும் நீயே
ஆற்று மணலும் சேற்று நீரும்
ஆடி யடங்கலும் அனைத்தும் நீயே
எண்ணு மெழுத்து மறியும் கூடம்
எண்ணிப் பெற்றாய் எல்லாம் நீயே.
பொன்னோ பொருளோ போதைப் புகழோ
நின்னைக் கடந்து நின்றே செல்லும்
அதுவும் இதுவும் எதுவெனக் கேட்கின்
உதுவும் விதுவும் உரிமை நின்னதே.
எதுவும் அறியா கோழைச் சிறுமதி
கூட்டம் களையக் கிளம்பிடு தாயே
அப்பனில்லா அருளே சரணம்
அம்மையே அம்மையே நீயே சரணம்.
===================================
04/12/ 2015
சிங்கி - சிங்கி உரையாடல்
=========================
”பகலை இரவென்றால் பகல் குளிர்ந்து போகாது;
இயற்கை வழி மாறாது இன்னுமொரு சேதியுண்டு
பெய்யு மழையம்மா இங்கே பெய்யு மழையம்மா
பேயா மழையொன்னு இங்கே பெய்யு மழையம்மா”.
ஏடெடுத்துப் பாடிவந்தாள்
எங்களூர்க் குறத்தி
”ஊசிபோல மின்னி மின்னி ஊர் செழிக்கப் பெய்த மழை
நல்ல மழையாகாமல் நாடழிக்க நினைத்தது ஏன் .
எதிர்க்கேள்வி கேட்டு இடைமறித்தான் சிங்கன்.
மனிதரைக் கடவுளென்றார் மாமனிதர் நீயென்றார்
ராத்திரியைப் பகலென்பார் பகலொளியை இரவென்றார்.
மாதமும்மாரி பொழியதென்று மந்திரிகள் சொல்லி வந்தார்.
சொல்லிவந்த மந்திரிகள் தந்திரிகள் ஆன கதை
அடைமழையில் வெளுத்ததடா சிங்கா..
அதை நீ அறியாயோ சிங்கா..
அதை நான் மறந்தேனே அளந்து தந்த மதுவால
குடித்த மதுக்குடியில் குடிமறந்து போனேன்.
குடிகெடுத்த மதுவைக் கூண்டில் வைத்துப்பூட்டடி
சிங்கி - உன்கொண்டைக் கூட்டில் வைத்துப்பூட்டடி.
மனுசியுன்னைக் கடவுளென்று மாய்மாலம் செய்வேன்
மாயக்குதிரை பூட்டியதேர் நகர்வலமும் தருவேன்
கண்ணாடிக் கோட்டைக்குள் கணகாலம் வைப்பேன்
விண்ணதிர வந்தமழை வினைமுடித்த பின்பு
வீதிவலம் வருவோம்; விரசம்கொண்டு திரிவோம்..
சிங்கி- வீதிவலம் வருவோம்
விரசம்கொண்டு திரிவோம்..
நாடு காடாகுமென்றும் காடு நாடாகுமென்றும்
ஏடுகளில் எழுதியதை ஏன் மறந்தாய் சிங்கா..
காடழித்து நாடாக்கி நிதிக்குவியல் சேர்த்து
நரியைப் பரியாக்கிச் சோம்பல்தனை முறித்து
நாடாண்ட மந்திரிகள் பழைய கதையல்ல.
புதுக்கதையு மதுதான் புத்தம்புதுக் கதையுமதுதான்.
சிங்கன் சொன்னதற்குச்
சிங்கி பதிலுரைத்தாள்
நாடு காடானாலும் காடு நாடானாலும்
நல்ல மழை மாறாது; நானிலத்தோர் அறிக.
அவ்வை சொன்ன வாக்கு
அதையும் சொல்லி முடிப்பேன்
”நாடாகொன்றோ ! காடாகொன்றொ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.”
ஆடவர் என்றது அரசுவென அறிக.
========================================
நன்றி; குறவஞ்சிக் கவிஞன் திரிகூடராசப்பன்
04/12/2015
சென்னைக்காக
---------------------------
'பத்திரமாக இருக்கிறேன்'
எனச்சொல்லும் பட்டியலில்
எண்ணிக்கை
கூடிக்கொண்டே இருக்கிறது.
'பேஸ்புக்கி'ற்கும் 
'வாட்ஸ்-அப்பி'ற்க்கும் நன்றி.
அந்தரவெளியில் அலையும்
பெயர்களில் மட்டும் இல்லை
சென்னை.
சேரிக் குடிசைகளிலும்
மீனவப் பாக்கங்களிலும்
கூவத்தின் கரையிலும்
அடித்துப் புரளும்
அடையாற்றின் மருங்கிலும்
ஏரிக்கரைத் திட்டங்களில்
ஏமாந்த கூட்டமென
தரையில் கால்பாவாத்
தேவரீரெனத் திரிவதிலும்
இருக்கிறது சென்னை.
நிலமாக இருந்த கதை
நீராக ஆனதென
நிச்சயம் ஆகாது.
நானும் இருக்கிறேன் நனைந்த படி.
நதியுமிருக்கிறது ஓடியபடி.
இருந்தோம் இருக்கிறோம் இருப்போம்
========================================== 
29/11/2015/ இது மழையைத்தவற வேறென்ன?
-------------------------------------------------------
வெப்பம் அதிகமானது தெரிந்தது.
என்றாலும் சாளரங்களைத்
திறக்கவில்லை.
செய்தி அலைவரிசைகளையும் நிறுத்திவிட்டு
இளையராஜாவோடு பேசிக்கொண்டிருந்தேன்
எப்படிப்பெயரிடுவது -
முடிவுசெய்யாமல் தவிப்பது புரிந்தது.
காற்று.. காற்றைத் தவிர வேறென்ன?
என்று பெயரிட்டுச் சொன்னதைப்
புரிந்துகொள்ள எனக்குத் தான் நேரமில்லை.
வேறுவழியில்லை.
சாளரங்களைத் திறந்தே
ஆகவேண்டும்.
நான் கடல், நான் ஆறு, நான் நதி, நான் ஓடை,
நான் அருவியெனத் தட்டும்போது
இழுத்துமூடி இருப்பது எப்படி?
மழை இது மழையைத் தவிர வேறென்ன?
-----------------------------------------------------------
23/11/2015/
மழை.. மாமழை.
======================
மாலையில் திரண்டு கருத்தமேகம் 
இருட்டானபோது இடியாய்க் கேட்டது 
தூரத்து இடிமுழக்கம் மின்னலாய்ச்
சாளரம் தட்டிப்பாடியது.
காளியாட்டத்தின் கர்ஜனை.
இன்றிரவும் மழையோடும்
மழையின் இசையோடும்
நாளை இன்னுமொரு நாளாகட்டும்

21/11/2015
மழைநாளின் நினைவுகள்
===============================
அறைகள், வீடுகள், தெருக்கள்
எல்லாம் சொற்கள்தான்.
சொற்கள் சொற்களாகவே இருந்தன.
சேரிகளும் ஊர்களும் கிராமங்களாயின
புரங்களும் பட்டிகளும் பாக்கங்களும்
கிராமங்கள் நகர்ந்து நகரங்களாயின
நகரங்களுக்குள்ளும்
நகர்கள், காலனிகள்,பாளையங்கள்
அவென்யூக்கள், கார்டன்கள், வில்லாக்கள்.
பழக்கப்பட்ட சொற்கள்;
பழகும் சொற்கள்
பழக்கமாகும் சொற்கள்
நினைவுகளை நகர்த்திப்
பதிவுகளாகவும் படங்களாகவும்
கடந்த காலத்தின் அலைவுகளோடு..
நடுப்பகலுக்குப்பின் திரண்ட
மேகங்களின் நிழலில்
வீதிகள் நகர்ந்துகொண்டிருந்தன.
தட்டான்பூச்சிகளின் தவிப்பு
ஈழமின்னல் மலையாள மின்னல்
இணைந்துகொண்டன
மாலையில் தூறிச்சென்ற
காற்று திரும்பவில்லை.
விதைத்துப் போட்ட
நட்சத்திரங்களுக்கும் பயம்
திரும்பி வந்தன பெருங்காற்றும் பேரிடியும்
தண்ணீர், வெள்ளம் நகரும் சொற்கள்
அருவி, ஓடை, நதி, ஆறு பாயும் சொற்கள்
கிணறு, குளம், கண்மாய், ஏரி தேங்கிய சொற்கள்
கடல், பெருங்கடல், சமுத்திரம், மகாசமுத்திரம்
நீர் புனிதம் என்றதும் நீர் தீட்டு என்றதும்
சுத்தம் செய்தோர் அழுக்கானவரானதும்
குப்பை கொட்டியோர் புனிதர்களானதும்
நீரின் பிழையன்று; நதியின் பிழையன்று
மழைநீர் புனிதமுமன்று; தீட்டுமன்று
மழை, மழையாகவே இருக்கிறது.
கோடுகள் அழிக்கும் மழை
வேற்றுமை விரட்டும் மழை
வித்தியாசம் துறக்கும் மழை
மழை போற்றுதும் மழை போற்றுதும்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்.
ஆதியில் இருந்தன வார்த்தைகள்
அர்த்தங்களும் அனர்த்தனங்களும்..
வந்தன; வருகின்றன..
சொற்கள் சொற்களாகவே இருக்கின்றன
மழையும் சொல்லாகவே இருக்கிறது
[முன் யாமம் தொடங்கி எற்பாடு வரை பெய்த மழைக்கு நன்றி]

உதிர்வது உத்தமம்

அற்றைத்திங்கள்
வலியின் துயரம் சுமந்த கருவறை
வாசனை முகர்ந்து சொல்ல முடிந்தது.
புன்னகை கசியும் எளிமையும் தோற்றம்
இவளெனச் சொன்ன முன்னோன் நாவை
ரசிக்க முடிந்தது.
மாற்றுக் கருத்தின் களம் ஒன்று கண்டு
விரித்துப் பரப்பி விசும்ப முடிந்தது.
விலக்கி வைக்கப்பட்ட கனிகள் ருசிக்கும்
நாவின் ருசியை உணர முடிந்தது.

இற்றைத்திங்கள்
ரகசியக்குறிகள் விரைக்கும் வேகம்
அறிய முடிகிறது.
அதிகாரத்தின் வேர்கள் பரவும் வழிகள்
சொல்லத்தெரிகிறது
பணத்தின் மதிப்பும் உறையும் வெளியும்
ஆழ்கடல் எனினும் துடுப்புகள் உண்டு.
துரத்திச் செல்லும் வலிமையும் உண்டு.
எதிரிகள் கூட்டம் எழுந்து வந்தால்
வலிமை காட்டிட இனமென்னும் துருப்பு
என் வசம் உண்டு,

அவ்வெண்ணிலவில் கவியுணர் கனவும்
கலைக்கும் ஆற்றலும் இருந்தன அறிவேன்.
இவ்வெண்ணிலவில் உருவேற்றிய பிம்பம்
இனியுமெதற்கு? உதிர்வது உத்தமம். 

ஒரு பாடல்


மரம் தனது இலையிடம் கேட்டது, ” ஏன் இப்படி?”
என்னிலிருந்து உருவானவன் என்பதில் உனக்கு ஏன் சந்தேகம்?

இலை திருப்பிக் கேட்டது.
எனது பெயர் இலை என்றானது எப்போது?
உனது பெயர் மரம் என இருப்பது ஏன்?
இருவருக்கும் இடையே ஏன் இந்த வேற்றுமை
இருவரையும் இணைக்கக் கிளையொன்று இருப்பது ஏன்?

மரம் சொன்னது
‘ தொடர்ந்து நீ பச்சையாய் இருக்கக் காரணம் நான்.
எனவே எனக்கே எல்லாம் தெரியும்.

இலை சொன்னது.
‘ நான் வானத்தைத் தொட்டு விட ஆசைப்படுகிறேன்.
என்னைத் தரையோடு இருக்கச் சொல்கிறாய். அது ஏன்?
மரம் சொன்னது.
‘ அது மண்ணின் மீது கொண்ட காதல் .

மண்ணே நம் எல்லோரையும் பிணைத்து வைத்திருக்கிறது.
உன்னைப் பாதிக்கும்; தாக்கும்
சின்னப் பிரிவைக் கூட ஏற்றுக் கொள்ளாது.
ஆகவே தான் அந்த அன்பை உன்னிடம் அனுப்பி வைக்கிறேன்.

- ஆங்கிலம் வழி தமிழில் அ.ராமசாமி/ 29-05-10
ரமேஷ் பரேக் குஜராத்தியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் : திலீப் ஜாவேரி INDIAN LITERATURE/255/JAN-FEB.2010




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்