தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்

இலக்கியம் பற்றிய- இலக்கிய வரலாறு பற்றிய இலக்கியத்தின் அடிப்படைக் கச்சாப்பொருட்கள் பற்றிய மேற்குலகப் பார்வைகளிலும், கிழக்குலகப் பார்வைகளிலும் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. ஓர் இலக்கியப் பனுவலை அதன் இயல்பைக் கவனித்து அப்படைப்பு ஒரு குறிப்பிட்ட வகையான இலக்கியப் போக்குக்குள் அடங்கக்கூடியது எனப் பேசுவது கீழ்த்திசை மரபல்ல; ஒருவிதத்தில் மேற்கத்தியத் திறனாய்வு மரபின் வழிப்பட்டது. மேற்கத்தியத்திறனாய்வு மரபு கலை , இலக்கியப்படைப்புகளை வகைப்படுத்திப் பேசும் பொருட்டு சில போக்குகளை அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறது.
 
தமிழின் தொன்மை இலக்கியமான தொல்காப்பியம் இலக்கியத்தின் - குறிப்பாகக் கவிதையின் அடிப்படைக் கூறுகளாக முதல், கரு, உரி என்ற மூன்றையும் கூறுகிறது. ஆனால் மேற்கத்திய இலக்கியத்தின் இலக்கிய வரையறைகளைப் பேசும் அரிஸ்டாடிலின் கவிதையியல்(Poetics) காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றும் முக்கியமானவை என்கிறது. தொல்காப்பியம் கூறும் முதல்பொருளுக்குள் காலமும் வெளியும் அடக்கும். கருப்பொருள் என்பது வெளியில் இருக்கக்கூடிய பாத்திரங்களும் அவற்றின் இயல்புகளும் நிலத்திற்கான பின்னணிகளும் தான். உரிப்பொருள் என்பது ஒரு கவிதையின் ஆதாரமான பாடுபொருள். பாடுபொருளான உரிப்பொருள் பற்றி மேற்குலகக் கோட்பாட்டில் விளக்கம் எதுவும் இல்லை. அதற்கு மாறாக படைப்பில் வெளிப்படும் உணர்வுகள் மட்டுமே - இன்பியல், துன்பியல், கேலி, அங்கதம் எனப் பேசப்பட்டுள்ளன.
 
இதே போல இலக்கியத்தின் வரலாற்றைப் பார்க்கும் பார்வையிலும் கீழ்த்திசைப் பார்வைக்கும் மேற்குலகப்பார்வைக்கும் வேறுபாடுகள் உள்ளன. பாத்திரங்களின் வரலாறாகப் கிழக்குலகம் பார்க்கிறது என்றால் மேற்கத்திய இலக்கிய வரலாறு மனிதனின் சாராம்சம் என்ன என்று பார்க்கிறது. அப்படிப் பார்க்கும் போக்கினால் தான் செவ்வியல் (Classicism), புனைவியல் அல்லது கற்பனாவாதம், (Romanticism), இயற்பண்பியல் (Naturalism), நடப்பியல் அல்லது எதார்த்தவியல் (Realism) என்ற நான்கும் ஒன்றையடுத்து ஒன்று தோன்றி வளர்ந்ததாக விளக்குகிறார்கள். இந்த நான்கிலிருந்தும் மாறுபட்டு வளர்ந்த போக்குகள் பல இருந்தன; அவற்றைப் பொதுநிலையில் நடப்பியல் அல்லாத அல்லது நடப்பியலுக்கு மாறான ( Non-realism) போக்குகள் என வகைப்படுத்தி அடையாளப்படுத்தினார்கள். எதார்த்தமல்லாத இலக்கியப் போக்குக்குள் மிகை நடப்பியல், குறியீட்டியல், வெளிப்பாட்டியல், மனப்பதிவியல், இருத்தலியல், அபத்தவியல், எனப் பலவிதமான அடையாளங்களோடும் தனிச்சிறப்புகளோடும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாதம் அல்லது இயல் என்று மொழிபெயர்க்கப்படும் ism என்ற ஆங்கிலப் பதம் படைப்பின் மூன்று அம்சங்களும் ஒரு படைப்பிற்குள் எவ்வாறு இருக்க வேண்டும் எனப் பேசினாலும், மனிதனை அல்லது மனிதனின் சாராம்சத்தை எவ்வாறு படைத்துக் காட்ட வேண்டும் என்று பேசுவதில் தான் வேறுபடுகிறது. அந்த விதத்தில் இது ஒரு ஐரோப்பிய மையப் பார்வை என்பதை நாம் மறந்து விட முடியாது.

நடப்பியல்வாதம் என்பது என்ன?
இலக்கியப் பனுவல்களில் சமகால வாழ்வும் இயற்கையும் மிகச் சரியாக - கூடுதல் குறைவின்றி, நுட்பமாகப் படைத்துக் காட்டப்படும் விதத்தைக் குறிக்கும் சொல் நடப்பியல் அல்லது எதார்த்தம் நடப்பியல். ஒரு விதத்தில் அதற்கு முன்பு கடைப்பிடிக்கப்பட்ட இலக்கியக் கோட்பாடான , மனிதனை ஆகக் கூடிய லட்சியவாதியாகச் சித்திரிக்கும், கற்பனாவாதத்தை நிராகரிக்கும் நோக்கத்தில் வந்த ஒரு படைப்புப் பார்வை என வரையறுத்துச் சொல்லலாம்• எதார்த்தவாதம் அல்லது நடப்பியல் என்பது, பனுவலுருவாக்கத்தில் இருக்கும் செவ்வியல் கூறுகளையும் புனைவியல் கூறுகளையும் நிராகரித்ததன் வழியாகவே அதன் பண்புகளை உருவாக்கிக் கொண்டது.• நடப்பியல் கடந்த காலத்தைப் பற்றி எழுதுவதை விட நிகழ்காலச் சமூகவாழ்வும் அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் சாராம்சமும் தான் படைப்பின் கச்சாப் பொருளாக இருக்க வேண்டும் எனச் சொன்னது.

இந்த வலியுறுத்தல் காரணமாக, நடப்பியல் எழுத்தாளர்கள் மேட்டுக்குடி மனிதர்களைப் படைப்பின் பாத்திரங்களாகப் படைப்பதைத் தவிர்த்துவிட்டு, நடுத்தர வர்க்க, அடித்தள மனிதர்களைப் பாத்திரங்களாக்குவதை முதன்மைப் படுத்துகிறார்கள். நடுத்தர மற்றும் அடித்தட்டு மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரத்தைப் படைத்துக் காட்டுவதை முக்கிய உத்தியாகக் கடைப்பிடிக்கிறார்கள். உடல்தோற்றத்தில் தொடங்கி, அன்றாடம் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள், பின்பற்றும் நம்பிக்கைகள் வழக்காறுகள், தேடிக் கொள்ளும் தீர்வு முறைகள் எனப் பலவகையான கூறுகளின் வழியாக நடப்பியல் வாதப் படைப்பு உருவாகிறது எனலாம். அப்படைப்பு முக்கியப்படுத்தும் மனிதக் குணங்கள் சாதாரணமானவைகளாக இருக்க வேண்டுமேயொழிய விதி விலக்கானவைகளாக இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியம். அதனால் மனிதர்களிடம் காணப்படும் பணிவு, சக மனிதர்களோடு பழகும் விதத்தில் காணப்படும் உறவுகளும் முரண்பாடுகளும், ஆடம்பரமற்ற தன்மையும் முக்கியமானவைகளாக அமைந்து விடுகின்றன. வாழ்க்கையின் போக்கில் கவனிக்கப்படாமல் ஒதுக்கப்படும் கூறுகளைப் பிரதிநிதித்துவப் படுத்துதல் முக்கியம் எனக் கருதும் நடப்பியல்வாதப் படைப்பாளிகள், சமகால வாழ்விலும் சமூகத்திலும் காணப்படும் ஒதுக்கப்பட்ட மனிதர்களின்பால் தங்கள் படைப்புப் பார்வையைச் செலுத்துகின்றனர். ஆன்மப் பார்வை, பருண்மையான கட்டுப்பாடுகள், வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் பொருளாதாயச் சூழல் என வாழ நேரும் விதத்தையும் அவற்றினூடாகவும் ஒருவன் வெளிப்படுத்தும் மனித சாராம்சத்தின் முக்கியத்துவத்தையும் நடப்பியல் வாத எழுத்துகள் முக்கியம் எனக் கருதுகின்றன.

பின்னணியும் வளர்ச்சியும்

நடப்பியல்வாத இலக்கியப் போக்கிற்கு குறிப்பான அரசியல் பார்வை, தொழில் நுட்ப வளர்ச்சிக் காரணங்கள், அறிவுவாத வளர்ச்சி எனப் பல பின்னணிகள் ஐரோப்பாவில் உண்டு. ஐரோப்பாவில் சமூகவியலின் தந்தை எனச் சொல்லப் படும் அகஸ்டோ காம்டே (1798-1857) முன் மொழிந்த நேர்மறை வாதத்தை [Positivism] எதார்த்தவாதத்தின் தோற்றக் காரணம் எனச் சொல்லலாம். நேர்மறை வாதம் இயற்கையை அதன் காரண காரியங்களைக் கவனித்து அதற்குள் செயல்படும் தர்க்கங்களுக்கு முக்கியத்துவம் தந்து விளங்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திய ஒரு அறிவுத் தோற்றவியல். உருவாகும் தொழில் மய வளர்ச்சியை மனித வாழ்வின் மேம்பாட்டிற்குப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதைப் பரிந்துரை செய்த சிந்தனை முறையாகக் கூட அதனை வரையறை செய்யலாம்.

1860-ல் பிரான்சில் தோற்றம் கண்ட அறிவியல் வாதத்தின் விளைவான நடப்பியல்வாதம் ,
1] நமது ஐம்புலன்களாலும் உள்வாங்கப்பட்ட ஒன்றை அறிவியல் விதிகளால் சோதித்துப் பார்க்க வேண்டும்.
2] அறிவியல் பார்வை என்பது தொடர்ச்சியான கவனிப்பால் உருவாகக் கூடியது.
3] மனிதர்களின் பிரச்சினகளை அறிவியல் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையில் எழுந்தது எனலாம்.
அந்த நடப்பியல்வாதம் இரண்டு கட்டங்களைக் கொண்டது. அகஸ்டோ காம்டேயின் நேர்மறை வாதத்தோடு சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடும், கார்ல் மார்க்சின் இயங்கியல் தத்துவமும் இவ்விருவகை எதார்த்தவாத இலக்கியப் போக்கின் பின்புலமாக இருந்தன.

1]மனிதர்கள் வம்சாவளிச் சிந்தனையாலும் நடப்புச் சுழலாலும் கட்டுப்படுத்தப் படுகிறார்கள்
2] நமது நடத்தைகள் நமது கட்டுப் பாட்டையும் மீறியவைகளாக இருக்கின்றன
3]மனிதத்துவம் என்பது இருப்புக்கும் காட்சிக்கும் அப்பாலும் இருந்து கொண்டே இருக்கிறது.
 
அது இயற்கையான ஒரு பொருள் என்று மனிதர்களின் இயல்பினையும் மனிதகுல வளர்ச்சியையும் பற்றிச் சொன்ன டார்வினின் கோட்பாடும் , நகர்மயமாதல், தொழில் மயமாதல், சமப்பங்கீட்டு வளர்ச்சி முறை பற்றி விளக்கிய கார்ல் மார்க்சின் இயங்கியல் தத்துவமுமே நடப்பியல்வாத படைப்பியல் போக்கின் வரையறைகளை உருவாக்குவதில் பின்புலமாக இருந்த முக்கியமான சிந்தனைகள். .பிரான்சின் அலக்சாண்டார் துய்மே தொடங்கி நார்வேயின் ஹென்ரிக் இப்சன் வரையிலான கால கட்டம் முதல் பாகம். இதில் எமிலி அகய்யர், பிரான்சுவா டெல்சார்த்தே, அடால்ப் மாண்டிக்னி போன்ற பிரெஞ்சுப் படைப்பாளிகளும், இங்கிலாந்தின் தாமஸ் வில்லியம்ஸ் ராபர்ட்சன், ஹென்றி இர்விங், ஜார்ஜ் பெர்னாட் ஷா, போன்றவர்களும், நார்வேயின் இப்சனும் அடங்குவர். இரண்டாம் கட்டம் ரஷ்யாவின் சோசலிசப் புரட்சிக்குப் பிந்திய சோசலிச யதார்த்த வாதத்தின் வளர்ச்சியைக் குறிக்கும். இவான் துர்க்னேவ், அலெக்சாண்டர் ஒஸ்றொவ்ஸ்கி, ஆண்டன் செகாவ்,போன்ற சோவியத் படைப்பாளிகளும் அடங்குவர். அமெரிக்காவின் எட்வின் பூத், அகஸ்டின் டாலி, ஸ்டெலி மெக்கயா போன்றவர்களும் கூட சமூக எதார்த்தவாதக் கூறுகளை வெளிப்படுத்திய படைப்பாளிகள் என்றே அறியப் படுகின்றனர்.

தமிழில் எதார்த்தவாதத்தின் தொடக்கமும் போக்குகளும்

தமிழில் எதார்த்த வாதத்தின் தொடக்கமாக மணிக்கொடி எழுத்துக்களையே கூறவேண்டும் என்றாலும் அதன் சரியான அர்த்தத்தில் 1950 களிலே தான் எதார்த்தவாதப் படைப்புக்கள் உருவம் கொண்டன. கவிதையின் இடத்தைப் பிடித்த புனைகதைகள் தான் எதார்த்தவாத வெளிப்பாட்டிற்கு ஏற்ற வடிவங்கள் என்பதால் தமிழ்ப் புனைகளின் தொடர்ச்சியான வளர்ச்சிப் போக்கில் எதார்த்தவாத இலக்கியம் சில அடைப்படையான வேறுபாடுகளையும் நோக்கங்களையும் வெளிப்படுத்தின. எதார்த்தவாத எழுத்துக்களை எழுதிய தமிழ்ப்படைப்பாளிகளைப்¢ பின்வருமாறு அடையாளப்
படுத்தலாம்.

1] சமூக எதார்த்தத்தை எழுதியவர்கள்

சமூக யதார்த்தை எழுதுவதில் இரண்டு போக்குகள் உண்டு. முதல் போக்கு குறிப்பான இலக்கு எதனையும் வைத்துக் கொள்ளாமல் சமூகத்தின் இருப்பையும் அதன் விசித்திரங்களையும் அதற்கான சமூகக் காரணங் களையும் தனிநபர் காரணங்களையும் எழுதிக் காட்டும் முறை. இதன் தொடக்கப் புள்ளியாகப் புதுமைப்பித்தன் எழுத்துக்களைச் சொல்லலாம். அவர் தொடங்கிய இந்தப் போக்கின் நீட்சியாக சுந்தரராமசாமி, சா.கந்தசாமி, அசோகமித்திரன், பிரபஞ்சன், பாவண்ணன், சுப்ரபாரதி மணியன் போன்றவர்களின் சிறுகதைகளும் நாவல்களும் நீண்டன எனக்கூறலாம். இவர்களிலிருந்து மாறுபட்ட இன்னொருவகை சமூக யதார்த்தவாதிகள் தங்களைச் சோசலிச யதார்த்தவாத எழுத்துக்காரர்கள் என அழைத்துக் கொண்டார்கள். சமுகத்தின் இருப்பையும் விசித்திரக் காரணங்களை எழுதிக் காட்டு வதைவிட எப்படியிருக்க வேண்டும் எனக் கூறுவதையும், அப்படியான மாற்றத்தைச் சாத்தியமாக்கும் சக்திகள் எவை என அடையாளப் படுத்திக் காட்டும் பொறுப்பும் படைப்பாளிகளுக்கு உண்டு எனக் கூறி, அதன்படித் தங்கள் புனைகதைகள் எழுதிக் காட்டினர்.தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும் தொடங்கி வைத்த இந்தப் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்தவர்களாக டி.செல்வராஜ், பொன்னீலன், சி.ஆர்.ரவீந்திரன், சு.சமுத்திரம், மேலாண்மை பொன்னுச்சாமி போன்றவர்களைக் கூறலாம்.

2] அகவய எதார்த்தத்தை எழுதியவர்கள்


சமூகயதார்த்தம் என்பதற்கு மாறாக மனிதனின் அகவய உண்மைகள் என்பதின் மீது நம்பிக்கை வைத்துத் தங்கள் படைப்புகளை எழுதிக் காட்டியவர்களை அகவய எதார்த்தவாதிகள் என அடையாளப்படுத்தலாம். இவர்களின் எழுத்து பருண்மையான வெளியை முக்கியமானதாகக் கருதாமல் தனிமனிதனின் மனத்தையே படைப்பின் வெளியாகக் கருதியவை. பருண்மையான வெளியை முக்கியப்படுத்தாதால், காலம் சார்ந்த தர்க்க விலகலும் அவ்வகைப் படைப்புகளில் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. புதுமைப்பித்தனின் காலத்திலேயே தனது படைப்புகளை வெளியிட்ட மணிக்கொடியின் எழுத்தாளரான மௌனியை இப்போக்கின் முன்னோடியாகக் குறிப்பிடலாம். அவரது பாணியை அப்படியே பின்பற்றிய எழுத்தாளர்களையும், ல.ச.ரா, நகுலன், க.நா.சுப்பிரமண்யம் ஆகியோரையும், அவர்களிலிருந்து குறிப்பான வெளியில் அதர்க்க மனக்கோலங்களில் இயங்கிய பாத்திரங்களை எழுதிக்காட்டிய எழுத்துக்களாக ந.முத்துசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், ஜீ.முருகன், கோணங்கி ஆகியோரது படைப்புக்களைக் குறிப்பிடலாம்.

தமிழில் முக்கியமான படைப்பாளுமைகளாக் கருதப்படும் ஜெயகாந்தனும், தி.ஜானகிராமனும் இவ்வகை எல்லைக் கோட்டைத் தகர்த்தவர்கள் எனலாம். சமூக யதார்த்தைத்தைப் பேசிய உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான், நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவல்களையும் சில பத்துச் சிறுகதைகளையும் எழுதிய ஜெயகாந்தன்தான் கோகிலா என்ன செய்துவிட்டாள், ரிஷிமூலம், சமூகம் என்பது நாலுபேர், பாரிசுக்குப் போ, ஒரு வீடு, ஒருமனிதன், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற அகவயக் கதாபாத்திரங்களைக் கொண்ட படைப்புகளையும் எழுதிக் காட்டினார். தி.ஜானகிராமனின் சிறுகதைகளிலும் நாவல்களிலும் ஒரே நேரத்தில் அகவய மனக்கோலங்களும் சமூகயதார்த்தப் பின்புலங்களும் இடம்பெற்றுத் தனித் தன்மையை உருவாக்குகின்றன. நல்ல உதாரணங்கள் அவரது மரப்பசு, அம்மா வந்தாள், மோகமுள் போன்றவற்றைக் கூறலாம்.

3] வட்டார யதார்த்தம்

எதார்த்தம் என்பது படைப்பின் மையக் கதாப்பாத்¢திரங்கள் சார்ந்து இருப்பது உண்டாகும் நம்பகத்தன்மை மிகத்துல்லியமானது அல்ல; அது ஒவ்வொரு மனிதனுக்கும் மாறக்கூடிய உண்மையாகத் தான் இருக்க முடியும். அதற்குப் பதிலாகச் சமூக எதார்த்தம் என்பது பிரதேச வேறுபாடுகள் கொண்டது; அதனைப் படைப்பு வெளிப்படுத்த வேண்டும். அப்படி வெளிப்படுத்த ஒவ்வொரு பிரதேசத்தின் வழக்குமொழியும் பொருளாதார , சமூகப் பிரிவுகளின் இருப்பும், முரண்களும் எழுதப்பட வேண்டும் என்ற சிந்தனை 1970 களில் மேலோங்கியது. இதன் தொடக்கமாக 1950 களில் மண்ணாசை, சட்டி சுட்டது, நாகம்மாள் போன்ற தனது நாவல்களை எழுதிய சண்முக சுந்தரத்தைக் குறிப்பிடலாம் என்றாலும் எழுபதுகளில் தான் இந்தப் போக்கு தீவிரம் பெற்றது. கரிசல் வட்டார மொழியையும் வாழ்முறைகளையும் விடாப் பிடி யாகப் பேச்சு மொழியில் எழுதிக் காட்டிய கி.ராஜநாராயணனைத் தொடர்ந்து பூமணி, பா.செயப்பிரகாசம், தமிழ்ச்செல்வன், எனப் பலர் கரிசல் வட்டாரத்தை எழுதினர். சண்முக சுந்தரம் தொடங்கி வைத்த கொங்கு வட்டாரத்தை சி.ஆர்.ரவீந்திரன், சூர்யகாந்தன், தஞ்சை வட்டாரத்தை பாவை சந்திரன், சோலை சுந்தரப் பெருமாள், சு.முத்து, போன்றவர்கள் எழுதிக் காட்டியுள்ளனர்.

4] விளிம்பு நிலை எதார்த்தம்


எல்லா வகை மனிதர்களுக்கும் உரிய பொது ஒழுங்கு ஒன்று இருக்க முடியாது; பாதுகாப்பான வாழ்க்கை வசதிகள் கிடைக்கப்பெற்ற மனிதனும், கிடைக்க வேண்டும் என விரும்பும் மனிதனும் கடைப்பிடித்து வாழும் மனித நியாயங்களை உதிரித்தொழிலாளிகளும், விபச்சாரிகளும், திருடர்களும், வேலைகிடைக்காமல் தெருவில் அலைபவர்கள், அனாதைகளும், நம்பியவர் களால் ஒதுக்கி வைக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் நிற்பவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. இருட்டுப் பிரதேசத்து மனிதர்கள் என அடையாளப்படுத்தப்படும் இவர்களின் யதார்த்தம் பொது ஒழுங்கிலிருந்து விலகியவை; அவர்களின் வாழ்க்கை முறைக்கேற்ப புதிய ஒழுங்கு விதிகளை உருவாக்கிக் கொள்பவை. பெரும்பாலும் தற்காலிகத் தன்மை கொண்ட எதார்த்தம் அவை. இவ்வகை எதார்த்தத்தைத் தங்கள் படைப்புக்களில் எழுதிக் காட்டிய முன்னோடி ஜி.நாகராசன். அவரது நாளை மற்றும் ஒரு நாளே, குறத்தி முடுக்கு போன்ற நாவல்களும் ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளும் அத்தகைய படைப்புகளே. அவரைத் தொடர்ந்து அத்தகைய பின்னணிகள் கொண்ட மனிதர்களை எழுதியவராக ராசேந்திர சோழனைக் குறிப்பிடலாம். சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளிலும் இத்தகைய மனிதர்களும் எதார்த்தமும் பதிவாகியுள்ளன.

5] பெண் மற்றும் தலித் எதார்த்தம்

தமிழ்ப் புனைகதை வரலாற்றில் எண்பதுகளில் பெண் எழுத்துக்களும் தொண்ணூறுகளில் தலித் எழுத்துக்களும் அதிகம் வெளியாகின. பாலின வேறுபாடு காரணமாக இந்தியச் சூழலில் பெண் கடுமையான ஒதுக்குதலுக்குள்ளாகிறாள் எனச் சில படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் முன் வைத்தனர். அதே போல் சாதி வேறுபாடு காரணமாக தீண்டாமைக் குள்ளாகும் தலித் மக்கள் ஒதுக்குதலுக்குள்ளாகின்றனர் என்றன தலித் படைப்புகள். பெண் படைப்புகளும் தலித் படைப்புகளும் ஒதுக்குதலும், ஒதுங்கு தலும் தான் நிகழ்கால இருப்பும் யதார்த்தமும் என்பதை ஆதாரமாகக் கொண்டு படைப்புகளைக் கட்டமைத்தன. குறிப்பாக ஹெப்சிபா ஜேசுதாசன், அம்பை, சூடாமணி, லட்சுமி, வாசந்தி போன்ற பெண்களின் படைப்புகளில் பெண் பாலினம் எவ்வாறு இரண்டாம் நிலை உயிரியாகக் கருதப்படுகிறது என்ற பார்வையைக் காணலாம். பாமா, சிவகாமி போன்றவர்களின் படைப்புகள் பாலின வேறு பாட்டாலும் சாதி வேறுபாட்டாலும் ஒடுக்கப்படும் இரட்டை ஒதுக்குதலை எதார்த்தப்படைப்புகளாக ஆக்கியுள்ளனர். சாதிகாரணமாக ஒதுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வாழ நேர்ந்துள்ள மனிதர்களை எழுதிக் காட்டிய படைப்புகளாக பூமணியின் பிறகு, வெக்கை தொடங்கி வைத்த தனித்த அடையாளம் பின்னர் இமையம், சோ.தர்மன், விழிபா இதயவேந்தன், பாப்லோ அறிவுக்குயில், அபிமானி, அறிவழகன் ஜே.பி.சாணக்யா, அழகிய பெரியவன், ஆகியோரின் புனைகதைகள் எழுதிக்காட்டியுள்ளன.

2007,மார்ச் 13, 14 தேதிகளில் திருவனந்தபுரம்,பல்கலைக்கழகக் கல்லூரி நடத்திய நான்காவது தேசியக் கருத்தரங்கத்தில் வாசிக்க எழுதப்பட்ட கட்டுரை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்