அழித்து எழுதும் ஆற்றல்-

கடந்த இரண்டு மாதகாலமாகத் தினசரி ஒரு நூறு தடவைக்கும் குறையாமல் அந்தச் சொல் என் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. காதில் விழும் சொல்லாக இருந்த நிலை மாறி கண்ணில் படும் பிம்பங்களாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கடந்த ஒரு மாதமாக வந்து கொண்டே இருக்கிறது. என் முன்னால் போகும் நகர்ப் பேருந்தின் பின்புறத்தில் அந்தப் பெயரையும் , அதன் அருகில் பிரபல நடிகர் ஒருவரின் ஒப்பனையோடு கூடிய முகத்தையும்¢ கடந்த நான்கைந்து மாதங்களாகத் தினசரி சில பத்துத் தடவையாவது பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
திருநெல்வேலி நகரத்தில் வாழும் எனக்கு மட்டும் தான் இந்த அரிய வாய்ப்பு என்றில்லை. தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் கால் நடையாகவும்¢ வாகனப் பயணமாகவும் பயணிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழச்சிக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கத்தான் செய்திருக்கும். ஒலியாகவும் ஒளியாகவும் பிம்பமாகவும் தமிழர்களைத் தாக்கிக் கொண்டிருக்கும் அந்தச் சொல் சிவாஜி. ஒரு வருட காலத்திற்கு முன்பு தொடங்கப்பட்டுப் படப்பிடிப்பும், அதன் தொடர்ச்சியான வேலைகளும் முடிந்து இதோ வரப்போகிறது..! அதோ வரப்போகிறது..! எனப் போக்குக் காட்டத் தொடங்கியே சில மாதங்கள் ஆகி விட்ட ஒரு திரைப்படத்தின் பெயர். போக்குக் காட்டத் தொடங்கிய அன்று முதல் சிவாஜி என்ற பெயரைத் தமிழர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் ஒரு புதிய அர்த்தத்தில். ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் பெருவரவாகத் தமிழகத்தைத் தாக்க உள்ள அந்தப் படம் ஒருவேளை தமிழ் கூறும் நல்லுலகுக்குப் பிடித்துப் போய்விட்டால் வெள்ளி விழாக் கொண்டாடலாம். பாட்ஷா தொடங்கி வசூலில் வெற்றிக் கொடி கட்டிய வெற்றிப்பட வரிசைகளில் ஒன்றாக மாறி ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை மேலும் கூட்டக் கூடும். அதன் பிறகு சிவாஜி ஒரு திரைப்படத்தின் பெயர் தான். ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு சிவாஜி என்பது ஒரு திரைப்படத்தின் பெயர் மட்டுமல்ல. விழுப்புரம் சின்னையா கணேசனாக இருந்த ஒரு நபர், நாடகத்தில் நடிக்கத் தொடங்கி, நடிப்புக்கலையின் சில பரிமாணங்களில் உச்சத்தை அடைய வேண்டும் எனக் கொண்ட ஆசையின் வெளிப்பாடாகப் பெற்ற பட்டத்தின் பெயர் சிவாஜி. மேடை நடிப்பைத் தொடர்ந்து திரைப்பட நடிப்பில் தனது ஈடுபாட்டை ஒருவிதக் காதலும் வெறியும் கலந்து வெளிப்படுத்தி, வாழ்நாள் முழுக்க அது ஒன்றையே தனது அடையாளமாகக் கொண்டு மறைந்து போன ஒரு நடிப்புக் கலை ஆளுமையின் பெயர் சிவாஜி.பராசக்தியில், மனோகராவில், வீரபாண்டிய கட்டபொம்மனில், எனத் தமிழ் வசனங்களை உச்சரிக்கும் முறைக்கு உதாரணமாக இருந்த பெயர் சிவாஜி. 

உணர்ச்சிகரமான தமிழ்க் குடும்பங்களில் இருந்த அண்ணணாக, கணவனாக, தந்தையாக, வேலைக்காரனாக, காதலனாக, மகனாக எல்லாம் தனது மிகை நடிப்பின் வழியே நிமிர்ந்து நின்ற பெயர் சிவாஜி. புதிய பறவை, சிவந்த மண், தங்கப் பதக்கம், கௌரவம் போன்ற படங்களில் மேற்கத்திய வகைமாதிரி கதாபாத்திரங்களின் வெளிப்பாடாக வந்து போன ஆளுமை சிவாஜி.சவாலே சமாளி, பழனி, எனத் தொடங்கி கிராமத்துப் பாத்திரங்களில் வாழத் தொடங்கிய வாழ்க்கையை முதல் மரியாதையிலும் , தேவர் மகனிலும் முழுமையடையச் செய்த கலைஞனின் பெயர் சிவாஜி. ஓராண்டுக்கு முன்புவரை சிவாஜி என்ற சொல்லைச் சொல்லியவுடன் நினைவுக்கு வரும் அடையாளங்கள் அனைத்தும் வரப்போகும் திரைப்படப் பெயரின் விளம்பரங்கள் வழியாக அழிக்கப்படும் வேலை வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. அழிக்கப்பட்ட அடையாளங்களுக்குப் பதிலாக திரைக்கு வரும் படம் எழுதப் போகும் அடை யாளங்கள் எவை என்பதையும் படத்தின் முன்னோட்டமே சொல்லிவிட்டது. சிவாஜி என்பது ஒருவிதத்தில் நளினம் (The Style), ஒருவிதத்தில் காதலன் (The lover), இன்னொரு விதத்தில் கேலி (The fun), மற்றொருவிதத்தில் அச்சமூட்டுபவன்(The terror), யோசித்துப் பார்த்தால் சீர்திருத்தக்காரன், (The reformer), அவன் தான் சக்தி (The force).மொத்தத்தில் அவன் ஒரு தலைவன் (The boss). எனப் புதுப்புது அர்த்தங்களை எழுதப் போகிறது ரஜினிகாந்தின் சினிமா. [கொள்ளைக் கூட்டத்தின் தலைவனா..? கொள்கைக் கூட்டத்தின் தலைவனா..? என்பதைப் படம் வந்தபின் எழுதப்படும் விமரிசனங்கள் சொல்லக்கூடும்]

இப்படிச் சொன்னவுடன் ஷங்கர், ரஜினிகாந்த், ஏவிஎம் கூட்டணி சிவாஜி எனப் பெயர் வைத்து நடிகர் திலகம் சிவாஜியின் பெயரை அழிக்கும் சதித்திட்டத்தோடு படம் எடுத்தார்கள் எனக் கூறுவதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இந்தக் கூட்டணிக்கு அந்த நோக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை; அவர்கள் நினைத்தது சிவாஜியின் பெயருக்கு இன்னொரு பரிமாணத்தைச் சேர்க்கப்போகிறோம் என்பதாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பின்பற்றும் பெருந்திரள் வாதம் (Populism) வேறுவிதமான ஆற்றல் உடையது என்பதுதான் கவனிக்க வேண்டியது. நிகழ்கால ஊடகங்களின் அடிப்படைத் தத்துவமாக பாப்புலிசம் ( populism ) என்னும் பெருந்திரள்வாதம் தான் இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. பாப்புலிசம் என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்த ௲ populus- என்ற சொல்லிலிருந்து உருவான ஒரு சொல்.ஆங்கிலத்தில் பீயூப்பிள்- People-என்பதே மூலச்சொல். அதன் பொருள் மக்கள் என்பதுதான். தேசத்தின் மக்கள் என்ற அர்த்தத்தில் தேசப்பற்றையும் சேர்த்துக் கொள்ளும் இயல்புடையது.மக்கள் ஆட்சி, மக்கள் கலை, மக்கள் சினிமா என ஒவ்வொன்றோடும் அது சேரும் போது பெருந்திரளின் சார்புடையது என மாற்றம் அடைந்து பொது மக்கள் என்னும் கவசத்தைத் தனதாக ஆக்கிக் கொள்ளும் இயல்புடையது. அப்படியொரு கவசம் கிடைத்தவுடன் அதன் உதவியுடன் ஏற்கெனவே இருக்கும் அடையாளங்களையும் அர்த்தங்களையும் அழித்துவிட்டுப் புதிய அர்த்தங்களை எழுதுவதில் தயக்கம் காட்டுவதே இல்லை. பெருந்திரளை வசப்படுத்துவது என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பாப்புலிசம் உறுதியான தத்து வத்தையோ, இலக்குகளையோ வைத்துக் கொள்வதில்லை. மக்கள்கலை எனச் சொல்லிக் கொண்டாலும் மக்களின் ரசனையுணர்வையும் வாழ்க்கை முறையையும் மாற்றுவதற்கு உறுதியான கலை இலக்கியக் கோட்பாடு எதனையும் பின்பற்றுவதும் இல்லை. இதில் ஆச்சரியமான ஓர் உண்மை என்னவென்றால் பெருந்திரள் வாதம் என்பதை வலதுசாரிகளும் விரும்புகின்றனர்; இடதுசாரிகளும் விரும்புகின்றனர் என்பதுதான். இடதுசாரிகள் சொல்லும் பெருந்திரள் வாதமும், வலதுசாரிகள் பயன்படுத்திய பெருந்திரள் வாதமும் அடிப்படையான வேறுபாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தாலும் மைய நோக்கம் அதிகாரத்தை நோக்கி நகர்தல் என்பதும், ஏற்கெனவே இருக்கும் அடையாளங்களை அழித்துவிட்டுப் புதிய அடையாளங்களை எழுதுதல் என்பதுமாகத் தான் இருக்கிறது.வலதுசாரிப் பெருந்திரள் வாதம் தேசியம், புனித இனம், கலப்பற்ற பண்பாடு, கடவுளால் உருவாக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்பதான அடிப்படைவாதச் சொற்களை உத்திகளாகப் பயன்படுத்தி அதிகார மையங்களைக் குறி வைக்கின்றன என்றால், இடதுசாரிப் பெருந்திரள்வாதம் அதிகாரத்தை நோக்கி நகர உழைக்கும் வர்க்கம், நடுத்தரவர்க்கம், விவசாயக் கூலிகள், ஏழைகள், பாமரர்கள், பாட்டாளி வர்க்கம் என்பதான சொல்லாடல்களை உற்பத்தி செய்கின்றன. பெருந்திரளான தமிழ் மக்களைக் கவர வரும் சிவாஜியின் கதாநாயகனான ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம்,மட்டுமே பெருந்திரள் வாதத்தின் பிரதிநிதிகள் என்று நினைக்க வேண்டியதில்லை. அப்படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், வசனகர்த்தா சுஜாதா என அனைவருமே மக்கள் கூட்டத்தின் ரசனைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். அவர்கள்,‘மக்களைச் சென்று சேர வேண்டும்; மக்கள் விரும்பு கிறார்கள், அதனால் படம் எடுக்கிறோம்’ என்று சொல்பவர்கள். ஆனால் அப்படிச் சொல்வதெல்லாம் திரள்மக்கள் மூலம் கிடைக்கக் கூடிய பணம், பொருள், அதிகாரம் ஆகியவற்றைக் குறிவைத்துச் சொல்வது என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. 
பெருந்திரள் வாதத்தை எந்தக் கேள்விகளுமற்று ஏற்றுக் கொள்ளும் ஊடக வலைப்பின்னல், பெருந்திரள் வாதத் தோடு இணைந்து வரும் தனித்த அடையாளத்தையும் கூட அப்படியே ஏற்றுக் கொள்ளவே செய்கிறது. இதற்கும் தமிழ் நாட்டில் உதாரண நிகழ்வொன்று நடந்து கொண்டிருக்கிறது. கவிஞர் கனிமொழி எந்தக் கேள்விகளும் இல்லாமல் பெருந்திரள் ஊடகப் பரப்பில் கவிஞர் கனிமொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளார். அவரது அரசியல் நுழைவைக் குறித்து துருவித் துருவிக் கேள்விகள் எழுப்பும் பத்திரிகைகள், கனிமொழி என்ன வகையான கவிதைகள் எழுதுபவர்;அவரது இலக்கியம் சார்ந்த, பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள் தமிழ்நாட்டிற்கு புதுவகை அரசியலைக் கொண்டுவருமா? என்பதை அறிந்து கொள்ளும் விதமாகக் கேள்விகளை எழுப்பவே இல்லை. கலைஞர் கருணாநிதி என்ற பெருந்திரள் அடையாளத்தைப் போலக் கவிஞர் கனிமொழி என்பதும் இன்னொரு பெருந்திரள் அடையாளம். அவ்வளவுதான். பெருந்திரள் வாதம் மட்டுமே ஆபத்தானது என நினைக்க வேண்டியதில்லை; அதனோடு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கைகோர்த்துக் கொள்ளும் ஊடக வலைப் பின்னல்களும், அதைவிட ஆபத்தானவைதான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்