பரபரப்பின் விளைவுகள்


வாழ்க்கையின் திருப்புமுனை ஒவ்வொருவருக்கும் எப்படி வந்து சேரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. தற்செயலாக நடந்த ஒரு வினையோ அல்லது சொன்ன ஒரு வாக்கியமோ கூட ஒருவரைப் பிரபலமாக்கி விடும். அதன் மூலம் அவரது வாழ்க்கை ஓட்டம் பெரிய திருப்பத்தில் பயணமாகி விடும். ஏற்படும் திருப்பம் ஒரு மனிதனை என்னவாக மாற்றும் என்பதை அதற்குப் பிந்திய வாழ்க்கை தான் வெளிச்சம் போட்டுக் காட்டும். இதற்குப் பல உதாரணங்களை உலக அளவிலும் காட்ட முடியும்; தமிழக அளவிலும் சொல்ல முடியும்.

நடிகை குஷ்பு தமிழ்நாட்டில் பிரபலமாக இருப்பதற்கான காரணங்கள் தற்செயலானவை அல்ல. தனது தாய்மொழியான இந்தியில் குழந்தைப் பருவத்திலிருந்து நடித்து அனுபவங்கள் பெற்றவர். பதினாறாவது வயதில் வருஷம் 16 என்ற தமிழ்ப் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர். முதல் படத்தில் பெற்ற நடிப்புத்திறமையைத் தக்கவைத்துக் கொண்டு பலவகையான பாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் நடிகை என்ற பெயரைப் பெற்றவர். தமிழ் சினிமாவிலிருந்து சொந்த வாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்கும் முன் மாதிரிகளைத் தேர்வு செய்யும் ரசிகனின் பொதுப்புத்தி நாயக நடிகனை நாட்டை வழி நடத்தும் தலைவனாக ஆக்கிப் பார்க்கிறது. நடிகையைத் தனது கனவுக்கன்னியாக நினைத்து அந்தரங்க வெளிக்குள் குடும்பம் நடத்துகிறான்.

தமிழ்ப் பொதுபுத்தி குஷ்புவையும் விட்டு விடவில்லை. அவரது உடல் அழகுக்காக உணவுப் பண்டங்களுக்கு அவர் பெயரை வைத்துச் சொல்லிப் பார்த்தார்¢கள், அவருக்குக் கோயில் கட்டி விழா எடுக்கும் அபத்தத்தைக் கூடச் செய்தார்கள். இவை எதற்கும் அவர் பொறுப்பு அல்ல என்பதால் ஊடகத்தின் கவனம் தகவல் தருவது என்ற அளவோடு ஒதுங்கிக் கொண்டது. அதே போல் குஷ்புவை மையப்படுத்தி உருவாக்கப்படும் சர்ச்சைகள் எதற்கும் அவர் பொறுப்பல்ல. அதனால் அவர் ஒளிவெளிச்சம் உண்டாக்க விரும்பி இவ்வாறு நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டை அவர் மீது சுமத்த விட முடியாது என்பதுதான் நடுநிலையான பார்வையாக இருக்க முடியும்.

திருமணத்திற்கு முன் ஆண்-பெண் உடலுறவு பற்றி குஷ்பு சொன்ன கருத்து தற்செயலானதா? ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடா? என்று தீர்மானிக்காத தமிழ் பொதுப்புத்தியும் அப்பொதுப் புத்தியை உருவாக்கும் ஊடகங்களும் தொடர்ந்து அவரை விளம்பரத்திற்காகச் சர்ச்சைகளை உருவாக்குபவராகக் காட்டிக் கொண்டிருக்கின்றன.பள்ளிக் கல்வியிலேயே பாலியல் கல்வியின் அவசியம் பற்றி விவாதிக்கத் தொடங்கியிருக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். இந்திய சமூகத்தில் நிலவும் சில கட்டுப் பெட்டித்தனத்திற்கும், உடல் சார்ந்த நோய்களுக்கும், குறைபாடுகள் கொண்ட குழந்தைப் பிறப்பிற்கும் பாலியல் சார்ந்த அறிவும் புரிதலும் இல்லாததே காரணங்கள் என மருத்துவ அறிவியல் கூறுவதன் பின்னணியில் பாலியல் கல்விக்கான பரிந்துரைகளைச் செய்வதற்கு ஆணையமே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை அது பற்றிக் கருத்துக் கூறுவது எப்படித் தவறாகும்?படப்பிடிப்பின் போது உருவாக்கப்படும் தற்காலிக வழிபாட்டிடத்தில் காலணியுடன் செல்வதும், காலணியுடன் அமர்வதும் சினிமாக்காரர்கள் அனைவரும் செய்யும் ஒன்று என்றாலும், குஷ்புவின் செயல்பாடு மட்டும் குறி வைத்துத் தாக்கப்படுகிறது.எப்போதும் ஒளிவெளிச்சத்தை விரும்புகிறவர்கள் தினசரி எதையாவது சொல்வதன் மூலமும் செய்வதன் மூலமும் சர்ச்சைகளை உருவாக்கி அதன் மையத்தில் சிரித்துக் கொண்டு நிற்பார்கள். அவர்கள் சொல்வதற்கு அவர்களே உதாரணமாக இருக்கிறார்களா என்ற கேள்வியைக் கூட கேட்டுப் பார்த்துக் கொள்வதில்லை. தனது வேலை அறிவுரைகளை வழங்குவதும், வெளிச்சப் பெருக்கில் இருப்பது மட்டுமே என நினைக்கிறவர்கள் தான் தமிழ் அரசியலையும் பண்பாட்டையும் தீர்மானிக்கிற சக்திகளாக வலம் வருகிறார்கள்.

ஒரு புத்தக வெளியீட்டில் தனது கருத்துச் சுதந்திரத்தையும் அடையாளத்தையும் உறுதியாகவும் தைரியமாகவும் வெளிப்படுத்த விரும்பிய குஷ்புவின் வெளிப்பாடு நிச்சயம் ஒளிவெளிச்சம் விரும்பிய செயல் அல்ல. அதை மிகுந்த பொறுப்புணர்வோடு எதிர்கொண்ட விடுதலைச்சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பேச்சும் செயல்பாடுகளும் கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட அரசியல்வாதியின் நாகரிகமான வெளிப்பாடு. ஆனால் அவரது கட்சியினரை உணர்ச்சி வசப்படச் செய்து கொடும்பாவி எரிப்புக்கும் கண்டன அறிக்கைக்கும் தூண்டிய ஊடகங்களின் வேலை பொறுப்பானவைகள் அல்ல. பரபரப்பை உருவாக்கும் இதழியல் போக்கின் வெளிப்பாடு என்ற வகைப்படுத்தத் தக்க செயல்.

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்வை நமது தினசரிப் பத்திரிகைகள் சித்திரித்ததன் பின்னணியில் தான் கடலூர் மாவட்டத்திற்குள் குஷ்புவை நுழைய விட மாட்டோம் என அறிக்கை வெளியிட்ட விடுதலைச்சிறுத்தைகள், நாகர்கோவிலில் குஷ்புவின் கொடும்பாவியைக் கொளுத்தினார்கள்.

உண்மைக்கு மாறான செய்தியின் பேரில் வினையாற்றும் போது இயக்கத்திற்கு ஏற்படும் இழப்பைத் திருப்பிக் கொண்டு வருவது இயலாது என்பதை அறியாமலேயே இவையெல்லாம் நடந்து விடுகிறது.ஆண் - பெண் உறவு பற்றிய தனது கருத்து சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லை; புரிந்து கொள்ளப்படாமலேயே எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது. எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் தலைவர் தொல்.திருமாவளவன். அவரை நேரில் சந்திக்கும் இந்த வாய்ப்பைத் தனது கருத்தைப் புரிய வைக்கப் பயன் படுத்த வேண்டும் என நினைத்த குஷ்புவின் நோக்கத்தில் பெரிய தவறு இருப்பதாகத் தோன்றவில்லை.

புத்தக வெளியீட்டு மேடையில் தனது கருத்தையும் நிலைபாட்டையும் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட தொல். திருமாவளவனும் அந்தக் கருத்திற்கு நாங்கள் எதிரி அல்ல; அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில்- போகிற போக்கில் ‘தமிழ் நாட்டுப் பெண்கள் அனைவரும் திருமணத்திற்கு முன்பு உடல் உறவு வைத்துக் கொள்ளக்கூடியவர்கள்’ என்ற அர்த்தத்தில் சொன்னதைத் தான் நாங்கள் எதிர்த்தோம்; போராட்டங்கள் நடத்தினோம் எனத்தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். அத்தோடு உங்கள் மீது வழக்குகள் போட்டவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் அல்லர் என்ற உண்மையையும் புரிய வைத்துள்ளார்.

குஷ்பு தனது நிலைபாட்டைப் புரியவைக்க முயன்ற அதே மேடையைப் பயன்படுத்தித் தொல்.திருமாவளவனும் தங்கள் கட்சியின் நிலைபாட்டையும் செயல்பாடுகளையும் குஷ்புவிற்கும் புரிய வைத்துள்ளார். பரஸ்பரம் புரிதலை உண்டாக்கும் விதத்தில் நடந்த அந்த மேடை நிகழ்வில் கவிஞர் அறிவுமதியின் தூண்டுதலான பேச்சுக்கள் மட்டுமே சர்ச்சைகளை உண்டாக்கும் விதமாக இருந்துள்ளது. ஆனால் ஊடகங்கள் அவரை விட்டு விட்டு குஷ்புவை சர்ச்சையின் நாயகி என்பதாகச் சித்திரிப்பது ஏன்? அவர் பிரபலமான நடிகை என்பதாலா? நிகழ்காலத்துச் சமூகம் யோசிக்க வேண்டிய கருத்துக்கள் கொண்ட பெண் என்பதாலா?

தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற பொருளாதார அடித்தளத்தில் இயங்கும் இன்றைய வாழ்க்கை ஓட்டம், எந்த ஒரு துறையிலும் போட்டிகளை அனுமதிப்பதை வரவேற்கவே செய்கிறது. போட்டிகளை அனுமதிக்காத மனிதர்களை, அமைப்புக்களை, இயக்கங்களைப் பழைமைவாதிகள் அல்லது வளர்ச்சிக்குத் தடையானவர்கள் என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைக்கலாம் என்ற முடிவுக்கும் கூடப் போய்விடுகிறது. ஊடகங்கள் இப்படி மட்டுமே செயல்பட முடியாது . பொறுப்பற்ற சர்ச்சைகளை உருவாக்குவதற்குப் பதிலாக முன் மாதிரிகளை உருவாக்குவதிலும் முன் மொழிவதிலும் ஊடகங்கள் போட்டி போடலாம். நிகழ்காலச் சமூகத்திற்கு அது தான் தேவை.

ஜனவரி, 9

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்