வெண்ணெயும் சுண்ணாம்பும்

தொழில் நுட்பத் தேர்ச்சி பெற்ற ஊழியர்களும் அறிவார்ந்த மனித உற்பத்தியும் தாராளமயப் பொருளாதாரத்திற்கு அடிப்படையான தேவைகள். இத்தேவைகளைத் தீர்க்கும் சக்தி உடையவை உயர்கல்வி நிறுவனங்கள் தான். தாராளமயப் பொருளாதாரத்தை முன்மொழியும் - உலகமயத்தைத் தீர்மானிக்கும்- உலக வங்கியும் மேற்கத்திய நாடுகளும் பின்னின்று இயக்க, நமது அறிஞர்களும் வல்லுநர்களும் பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தைத் தயாரித்துள்ளனர். இந்த ஐந்தாண்டுத் திட்டத்தை உயர்கல்விக்கான ஐந்தாண்டுத் திட்டமாக அறிவித்துள்ளதே அதற்குச் சான்று. 
உயர்கல்வியின் மூலம் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக மாறி விட்ட நமது பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், உயர்கல்வி நிறுவனங்களின் தேவைகளையும் அவற்றில் தரமான கல்வி வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார். அந்த வலியுறுத்தல் மற்றும் அறிவிப்பின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் புதிதாகப் பல பல்கலைக் கழகங்களும் உயர் தொழில் நுட்ப நிறுவனங்ககளும், உயர் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களும் தொடங்கப் பட உள்ளன. ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து மேலும் சிறந்த நிறுவனங்களாக ஆக்கும் நோக்கத்தோடு சிறப்பு உதவிகளும் அளிக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறது மைய அரசு. மைய அரசின் நடவடிக்கைகளைப் போலவே மாநில அரசும் உயர்கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. 

கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டதன் மூலம் கல்லூரிகளில் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் இந்த ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. முதல் கட்டமாக அரசுக் கல்லூரிகளில் ஆயிரத்திற்கும் மேலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கல்வி ஆண்டின் இறுதிக் கட்டமாக மேலும் 1500 பேர் நியமிக்கப்பட உள்ளனர் என அரசின் அறிக்கைகள் சொல்கின்றன. அரசுக் கல்லூரிகளுக்குப் புதிய ஆசிரியர்களை நியமித்தது போலவே அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் காலியாக இருந்த பணி இடங்களை நிரப்பிக் கொள்ளும் அனுமதியை வழங்கியுள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தங்கள் கல்லூரிகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்குப் பதிலாகப் புதிய ஆசிரியர்களை நியமிக்காமல் இருந்து வந்த பல கல்லூரிகள் இந்தக் கல்வி ஆண்டில் புதிய ஆசிரியர்களை நியமித்துள்ளன. தொடர்ந்து தனியார் மயத்தில் நம்பிக்கை கொண்டு அவற்றை வளர்த்தெடுக்கும் போக்கில் செயல்படாமல் அரசுக் கல்லூரிகளையும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளையும் ஒன்றாகவே அரசு கருதியுள்ளது. அதனால் தான் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரிய நியமனத்திற்கு வாய்ப்பளித்த அதே வேலையில் அரசுக் கல்லூரிகளின் பணியிடங்களும் நிரப்பப் பட்டுள்ளன. 

இன்னும் சொல்லப்போனால் அரசுக் கல்லூரிகளின் ஆசிரியர்கள் மீது கூடுதல் அக்கறையைக் காட்டியுள்ளது தமிழக அரசு எனலாம்.அரசுக் கல்லூரிகளில் பணியாற்றுவதற்காகத் தேர்வு பெற்றவர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகள் வழங்கிய பின்பே பணியிடங்களுக்கு அனுப்ப வேண்டும் எனத் திட்டமிட்ட செயல் இதுவரை இல்லாத ஒன்று. பாடத்திட்டங்கள், பாடப் பொருட்கள், கல்விச் சூழல், கற்பித்தல் முறைகள் என அனைத்திலிருந்தும் பெரிய மாற்றங்கள் நடந்துள்ள நிலையில் அவற்றை உணர்ந்தவர்களாகப் புதிய ஆசிரியர்கள் திகழ வேண்டும் என நினைத்துப் பயிற்சி வகுப்புகளை முதலிலேயே நடத்தி விடுவது எனத் திட்டமிட்ட செயல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பணி ஆற்றப்போகும் கல்லூரி வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பாக பதினைந்து நாள் பயிற்சிகளில் பொதுக் கற்பித்தல் முறையோடு, துறை சார்ந்த வளர்ச்சியையும் அறிந்து கொண்டவர்களாகப் புதிய ஆசிரியர்கள் வந்துள்ளனர்.உயர்கல்வியின் மீது அக்கறை கொண்ட தமிழக அரசின் கல்வித்துறை மேற்கொண்ட இச்செயல்பாடுகள் நம்பிக்¢கை ஊட்டும் செயல்பாடுகள். இந்த ஆண்டு கல்லூரிகளில் செய்யப்பட்டுள்ள ஆசிரியப் பணி நியமனங்கள் மாணவர்களுக்கும் எதிர்கால உயர் கல்விக்கும் பெறுமளவு பயன்படும் என்பதில் சந்தேகமுமில்லை. பாராட்டப்பட வேண்டிய இந்தப் பணிகளை அரசு பல கட்டங்களில் திட்டமிட்டே செய்துள்ளது என்றாலும் சில குறைபாடுகளும் உள்ளன. 

அரசுக் கல்லூரிகளுக்கும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் வேறுபாடுகள் காட்டாமல் பணி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்றாலும் நியமிக்கப் பட்ட முறை ஒன்று போல் இல்லை. அரசுக் கல்லூரிகளின் நியமனங்களில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளைப் போல ஒரே மாதிரியான நடைமுறைகளையும் தகுதி அடிப்படைகளையும் தனியார் கல்லூரிகள் பின் பற்றவில்லை. அடிப்படைத் தகுதி, மூப்புக்கான மதிப்பு ஆகியவற்றோடு வெளியீடுகள், ஆய்வுகள், கூடுதல் பட்டங்களுக்கான கூடுதல் வாய்ப்பு, எனத் திட்டமிட்டு மதிப்பெண்கள் வழங்கியதோடு நேர்காணலும் நடத்தி அரசுக் கல்லூரிகளின் ஆசியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அரசு உதவி பெறும் தனியார்கல்லூரிகளில் இந்த நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றும் கட்டாயம் ஏற்படுத்தப் படவில்லை. நேர்காணல் நடத்துவதற்கான வழிகாட்டுக் குறிப்புகளை மட்டும் அனுப்பி விட்டு அரசு விலகிக் கொண்ட நிலையில் நடைபெற்ற நேர்காணல்கள் பெரும்பாலும் கண்துடைப்பாக நிகழ்ந்துள்ளன. அரசின் சார்பில் கல்லூரிகளின் நியமனங்களைக் கண்காணிக்கும் பல்கலைக்கழகங்களும் பெரும்பாலும் தங்கள் பிடியை இறுக்கிப் பிடிக்காமல் நீக்குப் போக்காக நடந்து கொள்ளும் நிலையே பல இடங்களில் நடந்துள்ளது. இதனால் தரமான ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வாய்ப்புகள் தடை பட்டுள்ளன. தனியார் துறைகளில் நடக்கும் வழக்கமான குறைபாடுகள் வேண்டியவர்களுக்குச் சலுகைகள் வழங்குவது என்பதே. சாதி, மதம், உறவினர், அதிக நன்கொடை தருபவர் என்ற காரணங்களால் சரியான ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் ஒதுக்கப்படும் நிலை உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இப்போது நடந்துள்ள ஆசிரிய நியமனங்கள் இந்தக் குறைபாடுகளுடன் தான் நடந்தேறியுள்ளன. 

தகுதியையும் சமூக நீதியையும் காப்பது ஜனநாயக அரசின் கடமைகளுள் தலையாயது. இதை அறிந்திருந்தும் தவறுகள் நடக்கும் விதமான நடைமுறையை அரசு ஏன் அனுமதிக்க வேண்டும் ? என்பதுதான் தெரியவில்லை. இவ்வளவுக்கும் அரசுக்கல்லூரி ஆசிரியர்களுக்கும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் சம்பளம் தரும் பொறுப்பில் இருப்பது அரசாங்கம் தான். தன்னிடம் சம்பளம் வாங்கும் ஒரு ஊழியரைத் தானே தேர்வு செய்வது தானே சரியாக இருக்கும். அரசுக்கல்லூரிகளுக்கான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நடைமுறைகளைப் பின்பற்றி உதவி பெறும் கல்லூரிகளுக்கும் தேர்வு செய்து அனுப்புவதில் எந்தவிதச் சிக்கலும் இல்லை. அதைப் பின்பற்றாமல் நியமனப் பொறுப்பைத் தன் வசம் வைத்துக் கொள்ளாமல் தனியார் கல்வி நிறுவனங்களிடம் அரசு ஏன் வழங்க வேண்டும்? என்ற கேள்வி பதிலின்றி அப்படியே நிற்கிறது. இப்படித் தேர்வு செய்யும் நிலையில் இன்னொரு குறைபாட்டையும் சரி செய்திருக்கலாம். 

அரசுக்கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படைப் பயிற்சிகளைப் போலத் தனியார் கல்லூரியில் பணி வாய்ப்புப் பெற்றவர்களுக்கும் பயிற்சி வகுப்புக்கள் இப்போது நடத்தப் படவில்லை. ஒரே மாதிரியான அடிப்படைகளைப் பின்பற்றி மொத்தமாகத் தேர்வு செய்து, மொத்தமாகப் பயிற்சி அளித்து, தகுதிப் படுத்தி ஆசிரியர்களை வகுப்பறைக்குள் அனுப்பும் பொறுப்பைச் செய்ய வேண்டியது பொறுப்புள்ள அரசின் கடமைதானே. அரசுக் கல்லூரியில் பயில்பவர்களுக்குத் தகுதியும் திறமையும் கொண்ட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற அக்கறையின் வெளிப்பாட்டைக் காட்டிய அரசு தனியார்கல்லூரிகளுக்கும் அதே அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதுதான் சரியாக இருக்கும். ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஒரு கண்ணில் வெண்ணெயும் வைத்தது போல என்ற பழமொழிக்குத் தனிநபர்கள் உதாரணங்களாக இருக்கலாம். ஜனநாயக அரசு உதாரணமாக இருக்கக் கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்