இக்கால இலக்கியம் குறித்த பல்கலைக்கழக ஆய்வுகள்

இக்கால இலக்கியம், ஆய்வுக்கான பரப்பு என்பதாகப் பல்கலைக் கழகங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மூன்று பத்தாண்டுகளைத் தாண்டி இருக்கிறது.தமிழகப் பல்கலைக் கழகங்களில், தமிழியலின் எல்லைகளை விரிவடையச் செய்ததில் முக்கியப் பங்காற்றியுள்ள மதுரைப் பல்கலைக் கழகமே -இன்றைய மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்- இக்கால இலக்கியங்களைப் பாடங்களாக ஆக்கியதிலும், ஆய்வுப்பொருளாக ஆக்கியதிலும் முன்கை எடுத்தது. அதன் விளைவுகள் இன்று விரிந்துள்ளன; பரந்துள்ளன.
ஆய்வுப் பட்டங்களுக்காக இக்கால இலக்கியம் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்குச் சில பத்து ஆண்டுகளுக்கு முன்பே அவை குறித்துக் கல்விப்புல ஆய்வாளர்களால் ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டன.இக்கால இலக்கியங்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை/ திறனாய்வுக் கட்டுரைகளை எழுதிய முன்னோடி யாகப் பேரா. எஸ்.வையாபுரிப் பிள்ளையைத் தான் குறிப்பிட வேண்டும். இக்காலக் கவிஞர்கள் பற்றியும் சிறுகதையாசிரியர்கள் பற்றியும் கவனஞ் செலுத்தி எழுதியவர் வையாபுரிப் பிள்ளையே. அவரைப் போல சங்க இலக்கியம் தொடங்கி அவரது சமகாலச் சிறுகதையாளன் வரை படைப்பு சார்ந்து மதிப்பீடுகளை முன்வைத்த இன்னொரு கல்விப்புல ஆய்வாளரை-பேராசிரியர் ஒருவரைக் காட்டுதல் இயலாத ஒன்று. பேரா.எஸ்.வையாபுரிப் பிள்ளை தொடங்கி வைத்த அந்தப் பாரம்பரியம் தொடரப்படவில்லை. அதற்கு மாறாக வேறு விதமான அணுகுமுறைகளுடன் இக்கால இலக்கியங்கள் ஆய்வு செய்யப் பட்டன; படுகின்றன.

மதுரைப் பல்கலைக் கழகம் தொடங்கி வைத்த இவ்வகை ஆய்வுகள் இன்று விரிந்து பரந்து அகன்றுள்ளன. என்றாலும் இக்கால இலக்கியங்களின் பகுதிகள் முழுவதும் கவனிக்கப் பட்டுள்ளனவா...? என்பதும், அவைகளைக் கணிக்கவும் நுட்பங்களைப் புலப்படுத்தவும் தேவையான முறையியல்கள் பயன்பட்டுள்ளனவா..?என்பதுவும் கேள்விகளுக்குரியனவே. இந்தக் கட்டுரை இதுவரை யிலான இக்கால இலக்கிய ஆய்வுகளின் போக்கை மதிப்பீடு செய்து விட்டு, புதிய தளங்களையும் களன்களையும் அடையாளம் காட்ட முயன்றுள்ளது.பரப்பின் விரிவு.இக்கால இலக்கியம் அதன் அண்மை காரணமாகவும், காலச்சூழலில் அதன் தேவை காரணமாகவும் அகன்று விரிந்து நீளும் பரப்பினதாக இருக்கிறது.

தினந்தோறும் தமிழ்மொழியில் எழுதிக் குவிக்கப்படும் ஒவ்வொன்றும் அல்லது அச்சாகி வாசகனிடம் வந்து சேரும் ஒவ்வொன்றும் எழுத்துக்கள் (Writings) என்ற அளவில் ஆய்வுக் குரியன தான். என்றாலும், இலக்கியப்பனுவல்கள் (Literary texts ) என்ற அளவில் அவை ஆய்வுக்குரியன தானா..? என்றொரு வினா எழுப்பப்படுவதும், விடை கண்டு பிடிக்கப்படாமல் விட்டுவிடுவதும் தொடர்ந்து கொண்டுள்ளது. இக்கால இலக்கியம் என்பது என்ன..? அதன் தொடக்கப்புள்ளி எது..? அதனை உறுதி செய்ய என்னென்ன வரையறைகள் பின்பற்றப்பட்டன..? அந்தத் தொடக்கப் புள்ளிக்குப் பின்னாள் எழுதப்பட்ட எல்லாமே இக்கால இலக்கியங்கள் தானா.? என்பன போன்ற வினாக்களும்கூட இங்கு எழுப்பப்பட்டு விடைகள் கண்டறியப் படவில்லை. என்றாலும் தமிழின் இக்கால இலக்கியங்கள் ஆய்வுப் பொருளாக -தலைப்புகளாக - தேர்வு செய்யப்படுதல் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

தமிழகப் பல்கலைக் கழகங்களில் பதிவு செய்யப்படும் முனைவர் (Ph.D.) மற்றும் இளம் முனைவர்(M.Phil.) பட்ட ஆய்வுத் தலைப்புக்களைத் தொகுத்துப் பார்த்தால், இக்கால இலக்கியங்கள் அதிகம் ஆய்வுத் தலைப்பு களாகின்றன என்ற உண்மை, புள்ளி விவரங்களுடன் உறுதி செய்யப்படலாம். (1986-இல் பேரா. தமிழண்ணல் தொகுத்த தமிழியல் ஆய்வு என்ற புள்ளி விவரத்தொகுப்பு ஓரளவு இதனை உறுதி செய்தது. தொண்ணூறுகளில் இதில் மாற்றம் ஏற்பட்டு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் முதலிடத்தை பிடித்து வருகின்றன). கல்விப் புல ஆய்வாளர்களால் விரும்பப்படும் ஆய்வுப் பரப்பாக இக்கால இலக்கியம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் இன்று காத்திரமான விவாதங்களை எழுப்பும் ஒரு படைப்பாளி- நாவலாசிரியன், சிறுகதையாளன், கவிஞன், நாடகாசிரியன் என அனைவரும் - இந்த ஆய்வுகளைப் பொருட் படுத்தத் தக்கனவாகக் கருதுவதும் இல்லை. அதிகம் செய்யப்படும் இந்த ஆய்வுகள் படைப்பாளிகளால் மதிக்கப் படுவதும் இல்லை என்பது ஒரு சோகமுரண்தான்.தான் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட படைப்புகள் அல்லது படைப்பாளிகளைத் தவிர, பிறவற்றைப் பற்றிய விமரிசன/ ஆய்வு மதிப்பீடுகளைத் தரத் தயாரில்லாத கல்விப்புல ஆய்வாளர்களின் ஆய்வுகள் கவனிக்கப் படவேண்டியன அல்ல என்பது படைப்பாளிகளின் எண்ணம்.


படைப்பாளிகளுக்கும் இக்கால இலக்கியம் குறித்த கல்விப்புல ஆய்வாளர் களுக்குமான இடைவெளி- விலகல்- கூடிக்கொண்டே வருகிறதேயொழிய, நெருங்கி வரும் சூழல் உருவாவதாகத் தெரியவில்லை. திறமான படைப்பாளிகள் மட்டுமல்ல, திறமான விமரிசகனும் கூடக் கல்விப்புலம் சார்ந்த, இக்கால இலக்கிய ஆய்வுகளைக் 'கருதத்தக்கன' என்று நம்பு வதில்லை. எனவே கல்விப்புல ஆய்வாளர்கள் இந்த மனநிலையை மாற்றவேண்டாமா..? என்பதையும் இடைவெளிகளைக் குறைக்க வேண்டாமா..? என்பதையும் தீர்மானிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. "அவசியம் இல்லை" என்று முடிவு செய்து விட்டால் நடப்பு நிலையைத் தொடர்ந்து கொண்டே இருக்கலாம். ' இல்லை; இந்நிலை தொடரக் கூடாது; கல்விப்புல ஆய்வுகளைப் பொருட்படுத்தத் தக்கனவாய் மாற்ற வேண்டும்' என முடிவு செய்தால் அதற்கேற்ப கல்விப்புல ஆய்வுகளின் முறையியலை மாற்ற வேண்டும்
ஆய்வுகளின் பொதுத்தன்மைகள்:

1.பட்டக் குறிக்கோளும் மேலோட்டத்தன்மையும்
கல்விப் புலங்களில் விளக்கமுறை ஆய்வு என்று பெயரிட்டு அழைக்கப்படும் ஆய்வுகளே அதிகம் நடக்கின்றன. இக்கால இலக்கியப்பரப்பு என்பதில் மட்டுமல்ல; பொதுவாக எல்லாவிதப் பரப்பிலும் செயல்படும் இவ்விளக்க முறை ஆய்வுகளைச் சற்று நுணுகி நோக்கினால், அவை வெறும் விளக்கமுறை ஆய்வுகள் மட்டுமல்ல என்பது புலப்படலாம். ஒருவிதச் செயல்முறைத்(Applied) தன்மை இவ்வகை ஆய்வுகளின் பொதுத் தன்மையாகக் காணப்படுகிறது. ஏற்கெனவே உருவாக்கப்பட்டுக் கைவசம் உள்ள வரையறைகளைப் புதிய தரவுகளின் மேல் பொருத்திப் பார்க்கும் செயல்முறை அது.இலக்கிய அறிமுகம், இலக்கியத்திறனாய்வு அறிமுகம், இலக்கியக் கோட்பாடுகள் அறிமுகம் என்பதான தலைப்புகளில் மேலைநாடுகளில் மாணாக்கர்களுக்கு இலக்கியக் கல்வியைத் தரும் நோக்கத்தில் பல நூல்கள் வந்துள்ளன. அவைகளில் இலக்கிய வகைகளையும், திறனாய்வு முறைகளையும், கோட்பாடுகளையும் எளிமையாக விளங்கிக் கொள்வதற்கான விளக்கக் குறிப்புக்களும் தரப்பட்டுள்ளன.அவை பெரும்பாலும் எல்லாவற்றை யும் பொதுநிலைப் படுத்தி விளக்கங்கங்கள் கூறும் தன்மையுடையன. எடுத்துக் காட்டாக நாடகம் பற்றிய விளக்கமாக நாடகக் கட்டுமானங்கள், நாடகவகைகள், நாடகவளர்ச்சியென்று அவை பேசும்.புனைகதைகள் என்றால், எடுத்துரைப்பு (Narration), பின்புலம், கதாபாத்திரங்கள், சிக்கல்கள், முடிவு, எனப் பிரித்துப் பேசியிருக்கலாம்.


இவ்விளக்கங்கள் எல்லாம், இலக்கியங்களைக் கற்பதற்கான ஆரம்பப் படிக்கட்டுகள் தான். ஆனால் தமிழில் நடைபெறும் இக்கால இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளில் இவைகளே ஆய்வுச் செல்நெறியைத் தீர்மானிக்கும் துணைமை ஆதாரங்களாக விளங்கி வருகின்றன என்பதுதான் உண்மை. ஐ.ஏ.ரிச்சற்ஸ், டபிள்யூ. எச்.ஹட்சன், ரெனே வெல்லக் போன்ற பேராசிரியர்களின் நூல்கள் தந்த வெளிச்சத்தில்- வரையறைகளின் உதவியுடன்- தான் இக்கால இலக்கியங்கள் பற்றிய தொடக்க நிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு குறிப்பிட்ட படைப்பாளியின் படைப்புகளைத் தொகுத்தும் பகுத்தும் வகைப்படுத்தியும் விளக்கியும் காட்டிய ஆய்வுகளைச் செய்த ஆய்வாளர்களின் பணி என்பது கைவசம் உள்ள வரையறை (definition)களை அந்தப்படைப்பாளியின் படைப்புகள் மீது பொருத்திக் காட்டிய பணிதான்.இவ்வகையான பொருத்திக்காட்டல்கள் இக்கால இலக்கியங்களைப் பொறுத்தவரை மேற்கத்திய வரையறைகளின் துணையோடு நடந்தன. ஆனால் அதற்கு முந்திய கால இலக்கியங்களுக்கு இங்கேயே தமிழிலும் சமஸ்கிருதத்திலும் வரையறைகள் இலக்கணங்களாகக் கிடைத்தன.


தொல்காப்பியரின் அக, புற இலக்கணங்களைக் கொண்டு சங்க இலக்கியங்களையும் , தண்டியின் பெருங்காப்பிய இலக்கணங்களைக் கொண்டு காப்பியங்களையும் பாட்டியல்களின் வரையறைகளைக் கொண்டு சிற்றிலக்கியங்களையும் விளக்கிக் காட்டுவதும் பொருத்திக் காட்டுவதும் எளிமை யானதாகவே நடந்துள்ளன. இத்தகைய ஆய்வுகள், இலக்கியப் படைப்பை, இலக்கணத்திற்கேற்ப எழுதும் ஒன்றாகக் கணித்துள்ளன என்பதுதான் உண்மை. இத்தகைய கணிப்புகளில் உண்மை ஓரளவுக்கு உண்டு. ஒரே மாதிரியாக எழுதித் தள்ளப்பட்டுள்ள அறநூல்களும், உலா, பள்ளு, குறவஞ்சி, புராணம், கலம்பகம், அந்தாதி, தூது, மடல், கோவை என்பதான சிற்றிலக்கியங்களும், பதினெட்டாம் நூற்றாண்டுத் தலபுராணங்களும் பிள்ளைத் தமிழ்களும் சீட்டுக்கவிகளும் ,இக்காலப் பரப்பிற்குள்ளேயே இடம் பிடித்து நிற்கின்ற வரலாற்று, துப்பறியும் தொடர்கதைகளும், காதல் , மொழிப்பற்று, புரட்சிக்கு வரவேற்பு, எதிரிகளுக்குச் சவால் என்பதாக எழுதிக் குவிக்கப்பட்ட மரபு மற்றும் புதுக் கவிதைகளும், மனோன்மணீயத்தை அடியொற்றி எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான பா நாடகங்களும் என ஏராளமாக உள்ளன, இத்தகைய கணிப்புகளை அறஞ்செய்ய. ஆகவே யாரொருவரும் அத்தகைய கணிப்புகளை -விளக்கங்களை- ஆய்வுகள் அல்ல என்று ஒதுக்கி விட முடியாது.' இன்னாருடைய படைப்புக்கள் எவ்வாறு உள்ளன ' எனக் கேள்வியை-கருதுகோளை எழுப்பிக் கொண்டு ' இவ்வாறெல்லாம் உள்ளன' எனப் பதில்களைத் தருவது ஆய்வாளனின் வேலை தான். என்றாலும் இவ்வகையான ஆய்வுகளும் ' இலக்கணத்திற்கேற்ப எழுதப்பட்ட இலக்கியங்கள்' போல, 'போலச் செய்தல்' (imitation) என்னும் தன்மையுடையனவாகவே இருக்கும்.


இதுவரைத் தமிழில் வந்துள்ள இக்கால இலக்கிய ஆய்வுகளில் தொண்ணூறு சதவீத ஆய்வுகள் இத்தகையனவே என்பதும் உண்மை. 'போலச் செய்தல்' என்னும் தன்மையின் -குறைபாட்டின் காரணமாகவே கல்விப்புல ஆய்வுகளைப் படைப்பாளிகளும் திறனாய்வாளர்களும் மதிப்பதில்லை; பொருட்படுத்துவதுமில்லை. எனவே ஒரு கல்விப்புல ஆய்வாளன் தனது ஆய்வு கவனிக்கத்தக்கதும் பொருட்படுத்தத் தக்கதுமான ஆய்வாக அமைய முதலில் இந்தக் குறை பாட்டை -'போலச்செய்தல்' அல்லது 'பொருத்திக் காட்டி விளக்குதல்'-என்ற குறைபாட்டைக் களைந்தாக வேண்டும்.இதற்கான முயற்சிகளே இக்கால இலக்கிய ஆய்வாளர்களின் முன்னுள்ள மிக முக்கியமான பிரச்சினைகளாகும். கல்விப்புலத்தினர் இலக்கியப் பிரதிகளை எவ்வாறு கணிக்கின்றனர் என்பதும் அக்கணிப்பின் காரணமாக நேர்ந்துள்ள பிழைகளைக் கண்டறிந்து களைய வேண்டியதும் தமிழ் இலக்கியக் கல்வியில் முக்கியமாகச் செய்ய வேண்டிய ஒன்று.

இலக்கியம் வெறும் தகவல்களின் களஞ்சியமாகவும் விவரணத் தொகுப்புக்களாகவும் கணிக்கப் படும் நிலை இன்று தூக்கலாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக இலக்கியம் சமூகத்தின் பிரதிபலிப்பு, காலக் கண்ணாடி என்ற திறனாய்வுக் கருத்தியல்களுக்குள் முடங்கிப் போனதாக ஆகிவிட்டது.மொழியின் இலக்கணத்தை பேசும் தொல்காப்பியத்தையும் அதற்குள் கவிதை களை எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான இலக்கணங்களாகத் திணைக் குறிப்புக்கள், அவற்றின் பல்வேறுநிலைகளான துறைக்குறிப்புக்கள், கவிதைகளில் இடம்பெறும் புனைவுப் பாத்திரங்கள், அக்கவிதையின் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பற்றியெல்லாம் கற்றுத்தேர்ந்துள்ள மரபுத்தமிழ் வாசகர்கள் இலக்கியத்தை இவ்வாறு வாசிக்க நேர்ந்தது எப்படி என்பது சிந்திக்க வேண்டிய கேள்வி.

"சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறாஅர் " எனவும் அகம் ,புறம் எனவும் களவு ,கற்பு எனவும் செவ்வியல் இலக்கியக்கோட்பாட்டையும் , கவிதை அழகியலாக நாடக வழக்கும் உலகியல் வழக்கும் இணைந்த புலனெறி வழக்கம் பற்றியெல்லாம் படித்துள்ள தமிழ் மாணவனின் ரசனையை வெறும் தகவல் சார்ந்த ரசனையாகவும் இடம்பெறும் குறிப்புக்களின் விளக்கங் களாகவும் மாற்றிய அம்சங்கள் எவை எனச் சிந்திக்க வேண்டிய கட்டாயம் நம்முன் இருக்கிறது. அழகியலின் நுட்பங்களாக உள்ளுறை, இறைச்சி, உவமம், வண்ணம்,நோக்கு எனச் சிந்தித்துக் கவிதை எழுதி ரசித்த வளமான கவிதைப் பாரம்பரியத்தில் வந்த தமிழ் மாணவனும் ஆய்வாளனும் இன்று கவிதையைப் பற்றிய படிப்பை வெறும் அர்த்தம் சொல்லும் படிப்பாகப் பார்க்கும் அவலம் எவ்வாறு நிகழ்ந்தது எனக் கண்டறிய வேண்டியது அவசியம். இத்தகையதொரு அவலம் நேர்ந்ததின் பின்னணியில் ஆங்கிலேயரின் வருகையும் அதனால் ஏற்பட்ட மரபுத் தொடர்ச்சியின் விலகலும் முக்கியதொரு காரணம் எனக் கூறத் தோன்றுகிறது.

கற்கை நெறியிலும் கற்பித்தல் நெறியிலும் மேற்கத்திய முறையியல்களைப் பின்பற்றத் தொடங்கிய தமிழ்க் கல்வி எல்லா இலக்கிய வடிவங்களையும் ஒன்றெனக் கருதத் தொடங்கி பொதுவான கற்கை நெறியையே கைக்கொண்டது இந்நூற்றாண்டில் நடந்த பெருந்தவறு எனலாம். இப்படிச் சொல்வதால் இத்தகைய தவறான முறையியல் ஐரோப்பியக் கற்பித்தல் முறையிலும் கற்கை நெறியிலும் இருப்பதாகக் கருதி அதைக் கைவிடுவதைப் பற்றிச் சிந்தித்து விட வேண்டியதில்லை. யோசித்துப் பார்த்தால் தவறு அதில் இல்லை என்பதும் நம்மவர்கள் கைக் கொண்ட விதத்தில் இருக்கிறது என்பதும் புரிய வரலாம்.


அந்நிய மொழியான ஆங்கிலமொழி மற்றும் இலக்கியக்கல்வியில் அர்த்தம் சொல்வதும் உள்ளுறைந்து கிடைக்கும் தகவல்களைத் தேடுவதுமே முக்கியப் பணியாக இருக்கலாம். ஆனால் தாய்மொழிக் கல்வியிலும் சொந்த மொழி இலக்கியக் கல்வியிலும்கூட சொல்லுக்கு அர்த்தம் தேடுவதும் அதையே கற்பிப்பதும் இலக்கியக் கல்வியாக இருக்க முடியுமா..? நிச்சயமாக இருக்க முடியாது.அதே போல் இலக்கியம் சமூகத்தின் வெளிப்பாடு என்பதும் பிரதிபலிப்பு எனச் சொன்னதும் இலக்கியம் பற்றிய ஒரு பார்வை தானே ஒழிய அதுவே முற்ற முழுதான உண்மை எனக்கொண்டு இலக்கியம் குறித்த மற்ற பார்வைகளைக் கைவிட்டு விடுவது எப்படிச் சரியாகும். இப்படி விட்டு விலகியது சொந்தச் சிந்தனையில் கிடைத்த தெளிவாக இருக்கும் நிலையில் தவறாகாது. கூட்டத்தில் கறைந்துவிடும் நிலையாக இருந்தால் பயன் ஒன்றும் கிட்டப் போவதில்லை.

தமிழ் ஆய்வுலகம் இந்தக் கருத்தியலுக்குத் திரும்பி- சமூகத்தின் குரலாக இலக்கியத்தைக் காணும் கருத்தியலுக்குத் திரும்பி-ஆய்வை மேற்கொண்டு வருவது தெளிவின் வெளிப்பாடாக இல்லை. மந்தைத் தனத்தின் வெளிப் பாடாகத் தான் உள்ளது. மந்தைகளில் இருக்கும் ஆடுகளில் ஒன்றாக உயர் பட்ட ஆய்வுகள் அமைவது ஆய்வைச் செய்தவருக்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால் ஆய்வு மேற் கொள்ளப்பட்ட புலத்திற்கோ, அப்புலத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் போகும் மொழிக்கோ, அம்மொழியில் உள்ள இலக்கியக் கல்விக்கோ பயன் எதையும் தரப்போவதில்லை.

2.தகவல்களாகக் கணித்தல்

ஐரோப்பாவில் கூடக் கலை இலக்க்¢யங்களின் சமூகப் பாத்திரத்தைப் பற்றிக் கூறியவர்கள் அவ்வொன்றை மட்டுமே வலியுறுத்தினார்கள் என்று சொல்வதற்கில்லை. கவிதை மற்றும் நாடக வடிவங்களின் இலக்கணங் களைப் பேசும் அரிஸ்டாடிலின் கவிதையியலை வெறும் தேர்வுக்கான ஒன்றாக மட்டும் ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள் கற்பிப்பதில்லை. அங்கு மொழி இலக்கியக் கல்வி கற்கும் மாணவர்களும் அப்படிக் கற்பத்¢ல்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆனால் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் நிலையோ வேறு. தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலுமே தொல்காப்பியம் வெறும் தேர்வுக்கான வினாவிடையாக மட்டுமே கற்றுத் தரப்படுகிறது. இந்நிலை 2000-க்குப் பிந்திய நிலை என்று கருதிட வேண்டியதில்லை. எனக்குத் தெரியக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நிலைமை இதுதான்.

ஐரோப்பாவில் முதலாளிய வளர்ச்சிக்குப் பின் தோன்றிய புனைகதைகளின் முக்கியத் தன்மை சமூகத்தை எழுதுவதாக-பிரதிபலிப்பதாக-இருக்கவேண்டும் எனக்கூறப்பட்டது. அதன் நோக்கம் சமூக மாற்றத்திற்கு உதவுவதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இலக்கியத்திற்கான மனிதமுகம் பற்றிப் பேசியவர்கள் அதன் நுட்பங்கள் பற்றியும் பேசியிருக் கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. கதைகளின் களன்கள், கதைகள் கூறப்படும் முறை, கதைக்குள் அதைக் கூறுபவனின் இடம், கதையின் மொழி நடை உண்டாக்கும் அர்த்தங்கள். இடம்பெறும் பாத்திரங்கள் பற்றித்தரும் தகவல்கள் , தராமல் தவிர்க்கும் செய்திகள் பற்றியெல்லாம் கூட இலக்கியத் திறனாய்வு நூல்கள் முக்கியத்துவம் தந்து பேசத்தான் செய்துள்ளன. அப்படிப் பேசியதின் நோக்கம் இலக்கியத்தின் நம்பகத் தன்மையைக் கூட்டுவது தான். நம்பகத் தன்மை கூடுகிற போது எழுப்பப்படும் விவாதங்களிலும் விசாரணை களிலும் தீவிரம் கூடும். முன் வைக்கப்படும் முடிவுகளுக்கும் சொல்லப்படும் தீர்வுகளுக்கும் அர்த்தம் கிடைக்கும் என்பதுதான் அதன் உள்நோக்கம். ஆனால் தமிழ் ஆய்வாளர்கள் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் இலக்கியத்தில் இடம் பெறும் தகவல்களுக்கும் உருவாக்கப்படும் முரணுக்கும் மட்டுமே முக்கியத்துவம் தந்து ஆய்வு செய்கின்றனர். இத்தகைய ஆய்வுகள் படைப்பாளியின் ஒட்டுமொத்தப் படைப்புலகத்தையும் கணக்கில் கொண்டதாக ஆகாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இலக்கியத்திற்குச் சமூகப்பாத்திரத்தை வழங்கி, அதனைச் சமூக மாற்றத்திற்கு உதவும் கருவியாகப் பாவித்ததில் ஐரோப்பிய மறுமலர்ச்சிச் சிந்தனைக்கு ஒரு தேவை இருந்தது போலவே தமிழ் அறிவுலகத்திற்கும் ஒரு தேவை இருந்தது உண்மையே. எனவே தமிழ் ஆய்வுலகமும் கலை இலக்கியம் பற்றிய ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலச் சிந்தனைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அவற்றின் பயன்மதிப்புக்கு முக்கியத்துவம் தந்து விளக்கிக் கொண்டி ருக்கிறது.

நிலமானிய காலச் சீமான்களிடமிருந்து கலை இலக்கியங்களை மீட்டெடுக்க விரும்பிய மறுமலர்ச்சி யுகம், அவற்றிற்கு மனித முகங்களை- சாதாரண மனிதர்களின் முகங்களைப் பொருத்த வேண்டிய கட்டாயம் இருந்தது.உழைப்பாளிகளின் ரசனைக்கும் ஓய்வுக்கும் உரியதாக ஆக்கிக் காட்டுவதுடன் அதிலிருந்து அவனது வாழ்க்கைக்கான உந்து சக்தியையும் தரவேண்டிய கட்டாயம் அதற்கு இருந்தது. தமிழில் கலை இலக்கியங்களின் பயன்மதிப்பு பற்றிய வலியுறுத்தலில் கூட ஒற்றைப் பரிமாணம் மட்டுமே நிலவியதாகக் கருதிவிடக் கூடாது.
இலக்கியத்தின் பயன்மதிப்பைப் பற்றிப் பேசியவர்களிலும் இரண்டு முக்கியமான போக்குகளை நாம் அடையாளப் படுத்திக்காட்ட முடியும். ஒரு போக்கு இலக்கியத்திற்குள்ளாகக் கடந்த கால வரலாற்றைக் கண்டறிந்து கட்டமைக்க முயன்ற திராவிட இயக்கத்தினர். இன்னொரு போக்கினர் இலக்கியத்தின் மனிதாபிமான முகத்தினை அடையாளப்படுத்தியும் வலியுறுத்தியும் வரும் மார்க்சியக் கோட் பாட்டாளர்கள். இவர்களிடமும் வரலாற்று வாதம் ஓரளவுக்கு உண்டு என்ற போதும் நிகழ்காலம்- சமகாலம் பற்றிய சித்திரிப்புகளே மார்க்சியர்களுக்கு முக்கியம். ஆனால் திராவிட இயக்கத்தவர்களுக்கும் அவர்களின் கருத்தியலை ஆதரித்த தமிழ்ப் பேராசிரியர் களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இருந்த நோக்கமும் வேறானவை.

சமஸ்கிருதத் தொன்மைத்துவத்தை யொத்த தமிழ்த் தொன்மையைக் கட்டமைக்கவும், அத்தொன்மை உலக நாகரிகங் களுக்கெல்லாம் முன்னோடியான நாகரிகம் கொண்டது எனக் காட்டவும் நினைத்தனர். அப்படி விரும்பிய திராவிட இயக்க இலக்கியக்காரர்களும் அவ்வியக்கம் சார் ஆய்வறிஞர்களும் பழந்தமிழ் இலக்கியங்களை அவை தோன்றிய காலத்து நடப்பு வாழ்க்கையைப் பதிவு செய்த விவரணச் சித்திரிப்புக்களாகவும் மறுக்க முடியாத ஆவணங் களாகவும் கருதி அவற்றில் இடம்பெற்ற தகவல்களையும் நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டி உண்மை களாகப் பேசிவந்தனர். அவ்விலக்கியங்களில் இடம் பெற்றுள்ள பெயர்கள், காட்சிகள். மோதல்கள், முரண்கள், முடிவுகள் என அனைத்தும் அவர்களால் உண்மைகளாக முன்வைக்கப் பட்டுள்ளன.

மார்க்சீயர்களின் வரலாற்றுவாதத்தின் பின்னணியில் இருந்தது வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்னும் கருத்தியலாகும். வெவ்வேறு காலகட்டத்தை இயக்கிய பொருளாதார சக்திகளுக்கிடையே நிலவிய முரண்பாடு களின் வெளிப்பாடே கலை இலக்கிய வெளிப்பாடுகள் என நம்பிய மார்க்சியம், வரலாறு முன்நோக்கிய நகர்வு கொண்டது எனவும், உழைக்கின்ற கூட்டம்தான் ஒவ்வொரு காலகட்டப் பொருளாதாரத்தைத் தீர்மானித்து வெற்றி கண்டது எனவும் நம்பிய ஒரு கோட்பாடுடையதாகும். இவ்விரண்டும் இரு வேறு நம்பிக்கை சார்ந்து இயங்கினாலும் இலக்கியத்தைப் பற்றிய பார்வையில் ஒன்றாகவே இயங்கின என கூறலாம். அந்தப் பார்வைதான் இலக்கியத்தை ஆவணங்களின் தொகுப்பாகவும் காலத்தின் கண்ணாடியாகவும் கருதிட வைத்தது எனலாம்.

3.போலச்செய்தல்

இக்கால இலக்கியம் பற்றிய ஆய்வேடுகளில் காணப்படும் போலச்செய்தல் தன்மைக்கு ஒரு வெளிப் படையான எடுத்துக் காட்டு அவைகளில் இடம்பெறும் படைப்பாளிகளின் நேர்காணல் களாகும். வாழும் படைப்பாளியின் படைப்புகளைப் பற்றிய ஆய்வேட்டில் அவரின் நேர்காணல் ஒன்று தவறாது இடம் பெறுகிறது. அந்த ஆய்வேட்டின் கருதுகோளுக்கும் ஆய்வு நோக்கத் திற்கும் படைப்பாளியின் நேர்காணல் அவசியம் என்றால் இடம்பெறச் செய்வதில் தவறொன்றும் இல்லை. படைப்புக்கும் படைப்பாளியின் சொந்த வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கிறது என நம்பும் உளவியல் அணுகுமுறை சார்ந்த ஓர் ஆய்வில் படைப்பாளியின் வாழ்க்கை வரலாறு, அவனது விரிவான நேர்காணல் போன்றவற்றிற்கு இடமுண்டு; கட்டாயமும் கூட. ஆய்வேட்டின் உடல்பகுதி இயல்களில் நேர்காணல் சார்ந்து எந்த விவாதமும் எழுப்பப் படாத நிலையில் அந்த நேர்காணல் இடம் பெறுவதின் தேவையென்ன ..?

படைப்பாளியின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களைத் தட்டையாகக் கேட்டு வினாப்பட்டியல் தயாரித்துப் பெறப்படும் ஒரு நேர்காணல் இந்த ஆய்விற்கும் கூடப் பயன்படாது. படைப்பாளியின் படைப்புகள் அனைத்தையும் முழுமையாகக் கற்று பொது வெளியில் விளக்கம் தர முடியாத பகுதிகள் இருக்கும் நிலையில் படைப்பாளியின் நேர்காணலைக் கொண்டு- அவனது அந்தரங்கம் மற்றும் சொந்த அனுபவங்களைக் கொண்டு- ஆய்வாளர் தரும் விளக்கங்கள் விவாதங்களுக்குக் கூடுதல் அர்த்தங்களைத் தரும். ஆனால் நிலைமை என்ன..? இக்கால இலக்கியம் பற்றிய ஆய்வேடுகளில் படைப்பாளியின் நேர்காணல்கள் தவறாது இடம் பெறவேண்டும் என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதற்காகப் படைப்பாளியைச் சந்திக்கத் தவம் கிடைக்கின்றனர். முறையான வாசிப்பின்றிச் செல்லும் ஆய்வாளர்களால் படைப்பாளிகள் எரிச்சல் அடைந்து நேர்காணல்கள் தர மறுக்கின்ற நிலையும்,ஆய்வுலகம் பற்றிய மதிப்பில் வீழ்ச்சியும் ஏற்பட் டுள்ள நிலைமை தோன்றியுள்ளது. இன்னும்சிலர் அந்தப் படைப்பாளியின் நேர்காணல் ஏதாவது இதழ்களில் இடம் பெற்றிருந்தால் அதை நன்றியுடன் தங்கள் ஆய்வேட்டில் இடம் பெறச் செய்து பக்கத்தைக் கூட்டிக் கொள்கின்றனர். இத்தகைய போக்குகள் குறைய வேண்டும். இதற்கு முதல் கவனம் செலுத்த வேண்டியவர்கள் ஆய்வாளர்கள் அல்ல நெறியாளர்கள் தான்.


சில பல்கலைக்கழகங்களில் முதுகலைப்பட்ட(M.A.)ங்களின் பாடத்திட்டத்திலும் சில பல்கலைக் கழகங்களில் இளநிலை ஆய்வுப்பட்ட (M.Phil.) வகுப்பிலும் ஆராய்ச்சி நெறிமுறைகள் மற்றும் அணுகுமுறைகள் பாடங்களாக இருக்கின்றன. முனைவர் பட்டம் செய்ய வரும் ஓர் ஆய்வாளர் அதனைக் கற்காது ஆய்வுப்பட்டம் செய்ய எந்தப் பல்கலைக்கழகமும் அணுமதிப் பதில்லை. முதுகலை முடித்து நேரடியாக வருபவர்களைக்கூட இந்தத் தாள்களை எழுத வேண்டும் எனக் கட்டளை இட்டு எழுதும்படி வலிறுத்துகின்றன நமது பல்கலைக்கழகங்கள். ஆனால் இது வரை வெளிவந்துள்ள ஆய்வேடுகளின் பொதுத்தன்மையைப் பார்த்தால் இவற்றைக் கற்றதற்கான அறிகுறிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவகையில் பார்த்தால் ஆராய்ச்சி நெறிமுறைகள் மற்றும் அணுகுமுறைகள் என்னும் தாள்கள் வெறும் கோட்பாட்டு அறிமுகத் தாள்கள்(theory papers) அல்ல. அவை ஆழமான புரிதலுடன் கற்றுப் பயிற்சி செய்து கொள்ள வேண்டிய தாள்கள்(practical papers). ஆனால் அவையும் இங்கே தேர்வில் வெற்றி பெற வேண்டிய தாள்களாகவே கற்கப்படுகின்றன;கற்றுத்தரப்படுகின்றன.


ஆய்வு நெறி முறையில் குறைந்த பட்சம் தொகுப்பு ஆய்வு, வகைப்படுத்தல் ஆய்வு, வரலாற்றாய்வு போன்றவற்றின் இயல்புகள், தேவைகள் பற்றிய புரிதலை உணர்த்தி அவற்றில் ஆய்வாளர்களைக் களம் இறக்கினாலே தீவிரமான ஆய்வுகள் வெளிவரக் கூடும். தொகுப்பும் வகைப் படுத்தலும் வரலாறும் இல்லாமல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தும் ஆய்வு களுக்குள் நுழைவது இலக்கற்ற பயணங்களாக அமையவே செய்யும்.

களையும் வழி.
பொதுவாக ஆய்வு என்பது ஒரு பொருளைப் பற்றிய பேச்சுகள் என்பதாகப் புரிந்து கொள்ளப் படவேண்டும். இதனை நவீனத்திறனாய்வு சொல்லாடல் (Discourse) எனப் பெயரிட்டுள்ளது. ஒரு பொருள் பற்றி -படைப்பு பற்றி- ஆய்வு செய்பவன் சில வினாக்கள் மூலமாகவே சொல்லாடல் களை உருவாக்குகிறான். கல்விப் புல ஆய்வாளர்கள் தங்களின் சொல்லாடல்களை 'எவ்வாறு உள்ளது? - எவ்வாறு செய்யப்பட்டுள்ளது.? என்ற வினாவ்¢ன் மூலமே எழுப்புகின்றனர். இந்த வினா ஒரு கலைப் படைப்பு நோக்கி எழுப்பப்படுவதிலும் பார்க்க நுகர் பொருட்களை-பயன்படு பொருட்களை- நோக்கி எழுப்பப்பட்டு விடை காணுவதற்கேற்ற வினாக்களாகும். ஒரே மூலப் பொருட்கள் அளவிலும் குணத்திலும் ஒத்த தன்மையுடையனவாகவே இருக்கும்.பெரும் எண்ணிக்கையில் வியாபார நோக்கோடு செய்யப்படும் அப்பயன்படு பொருட்கள் (பிளாஸ்டிக் நாற்காலி, தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை எந்திரங்கள்) பற்றிய பேச்சுகள் இந்த ஒற்றைக் கேள்விக்கு மட்டுமே விடையாக அமையத் தக்கன. பெப்ஸி,கோலா,மிராண்டா எனப் பல்வேறு வணிகப் பெயர்களில் வந்தாலும் இந்நுகர்வுப் பொருட்களைப் பற்றிய பேச்சுக்களும் 'எவ்வாறு ?' என்ற ஒற்றை வினாவிற்கான விடையாகவே அமையத்தக்கன.

ஓர் ஓவியம், ஒரு சிற்பம், அல்லது ஓர் அரங்க நிகழ்வு, கவிதை, புதினம் போன்றன பற்றிய சொல்லாடல் இந்த ஒற்றை வினாவிற்கான பதிலாக இருக்க முடியாது. ஏனெனில் இவை யெல்லாம் பயன்படுபொருட் களோ, நுகர்வுப்பண்டங்களோ அல்ல; அவை கலைப்படைப்பு.. இந்த அடிப்படையை ஒரு ஆய்வாளன் புரிந்து கொள்ளும் நிலையில், ' இவரது படைப்புகள் எவ்வாறு உள்ளன?' என்ற ஒற்றை வினாவோடு மட்டும் நின்றுவிடாமல், 'ஏன் இவ்வாறு உள்ளன..?,' ' இவ்வாறு எடுத்துரைக்கும் படி தூண்டியது எது.?', 'இவ்வாறான மொழிநடையைக் கையாள வேண்டிய தேவைகள் எவை?' இந்தச் சூழலில் தனது படைப்புகளின் மூலம் எவ்வகையான விசாரணைகளை எழுப்ப முயல்கிறார்?' என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி முடிவுகளைத் தர முயல்வான்.அந்த முடிவுகள் எல்லாம் சேர்ந்து ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட படைப் பாளியின் இடம், வரலாற்றில்- இலக்கிய, சமூக, சிந்தனை வரலாற்றில்- எதுவெனத் தீர்மானிப் பதாக அமையும்.

ஒரு படைப்பாளி பற்றிய ஆய்வு, அவனைத் தனியொரு நபராகப் பார்க்காமல், வரலாற்றின் நீட்சியாகவும், சமூகத்தின் விளைவாகவும், கருத்தியலின் வெளிப்பாடாகவும் பார்த்து முடிவுகளைத் தருகின்ற பொழுதே பலதள ஆய்வாக மாறும் சாத்தியங்களைப் பெறுகிறது. இதற்கு ஆய்வாளன் தனது கேள்விகளைப் படைப்பை நோக்கி மட்டும் எழுப்பாமல் படைப்பாளியின் வாழ்க்கை மற்றும் இருப்பையும் நோக்கி எழுப்ப வேண்டும். அத்துடன் இப்படைப்பை எழுதும்படி தூண்டிய சமூக நெருக்கடிகளை நோக்கியும், படைப்பை வாசிக்கும் வாசகர்களைக் குறி வைத்தும் வினாக்களைத் தொடுக்க முனைய வேண்டும். இந்தக் கேள்விகளுக்கான விடைகள் எல்லாம் படைப்புக்குள்ளேயே கிடைத்துவிடாது. இந்நிலையில் விடை தேடி படைப்பாளி வாழ்ந்த சமூகத்தின் நிலையை, சமூகத்தில் நிலவிய சிந்தனைகளின் நிலையை, சிந்தனைகளை உருவாக்கிய நிறுவனங்களின்/நபர்களின் தாக்கத்தை, அவற்றில் படைப்பாளி செய்ய விரும்பும் மாற்றத்தை/ கலகத்தை என ஒவ்வொன்றையும் நோக்கிப் பயணம் செய்ய நேரிடும். அத்தகைய பயணம் மேற்கொள்ளும் பொழுதுதான், கலைப்படைப்புகளைப் புரிந்து கொள்ள அணுகுமுறைகளின் உதவி தேவைப் படுகிறது.

எல்லா அணுகுமுறை களும் ஓராய்வில் பயன்படுத்தப்படவேண்டும் என்பதில்லை; பயன்படுத்திடவும் இயலாது. ஒரு ஆய்வில் எந்த அணுகுமுறையைப் பயன்படுத்தலாம் என்பதைத் தீர்மானிப்பன, ஆய்வாளனுக்குள்ள ஐயங்களும் வினாக்களும்தான்.தான் ஆய்வுப்பொருளாக எடுத்துக் கொண்ட ஆய்வுப் பொருளினை- தரவுகளை - நோக்கி ஐயங்களையும் வினாக்களையும் எழுப்பு வதற்கான பயிற்சியை ஆய்வாளன், தான் ஆய்வாளனாவதற்கு முன்னரே அறிந்திருக்க வேண்டும். அத்தகைய பயிற்சிகள் இல்லாத ஒருவனால் சிறந்த ஆய்வுப்பொருளைத் தேர்வு செய்யவோ, உருவாக்கிடவோ இயலாது. இத்தகைய புரிதலோடு கல்விப் புலங்களில் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானவைகளே. இக்கால இலக்கியப்பரப்பு என்று இல்லை; ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியப் பரப்பையுமே இத்தகைய புரிதலோடு கல்விப் புலத்தினர் ஆய்வு செய்திட முயன்றதே இல்லை.

செய்யப்பட்டுள்ள திறமான கல்விப்புல ஆய்வுகளும் கூட, பட்டங்களுக்காகச் செய்யப்பட்ட ஆய்வுகள் இல்லை. அதற்கு அப்பால், தன்விருப்பத்தோடு, தனது சிந்தனையின் வெளிப்பாட்டைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, தனது சமூகக் கடமையை ஆற்ற வேண்டும் என்ற பொறுப்போடு அவர்களால் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளே ஆகும். அவர்களின் பொறுப் புணர்ச்சியும் நோக்கமும் தனக்கும் உண்டு என ஓர் இளம் ஆய்வாளர் முதலில் நம்ப வேண்டும். அப்படி நம்பும் நிலையில் தமிழியலில் ஏராளமான ஆய்வுக்களன்கள் விரிந்து கிடக்கின்றன. அதற்குள் ' இக்கால இலக்கியப்பரப்பும்' பரந்தே கிடக்கிறது. செய்ய வேண்டியன தமிழ் மொழி செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் அதனை உறுதிசெய்யும் விதமாகவும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவும் பலவித ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டாக வேண்டும். காலப்பழைமை, மரபுத் தொடர்ச்சி, இலக்கியவளம், வரையறை களின் மேல் இயங்குதல், புதிய வரையறைகளை உருவாக்குதல் எனச் செவ் வியலின் கூறுகள் தமிழுக்கு ஏற்கெனவே வாய்க்கப்பெற்றன தான் என்றாலும் அவற்றின் ஒளியைக் குறையாமல் வைத்துக் கொள்ள வேண்டியது நிகழ்காலத்தமிழர்களின் தலையாய பணி.
இந்தப் பின்னணியில் ஆய்வுகள் செய்ய வேண்டிய களங்களைக் கண்டறிவதும் , தங்கள் ஆய்வின் தலையாய நோக்கம் என்ன எனத் தீர்மானிப்பதிலும் அதன் உடன் விளைவாகக் கிடைக்கக் கூடிய பயன்கள் எவையெவை என்பதைத் தீர்மானித்துச் செயல்பட வேண்டிய பொறுப்புணர்வு ஆய்வாளர்கள் முன்னுள்ள முக்கியமான ஒன்றாகும். இந்தப் பொறுப்புணர்வுடன் செயல்படும் ஆய்வாளர்கள் கவனம் செலுத்த வேண்டிய களங்களாகப் பின்வரு வனவற்றைச் சுட்டலாம்:

1.வரலாறு பற்றிய ஆய்வுகள்.
2.கலை இலக்கியங்களுக்கும் சமூக இயங்குநிலைக்கும் உள்ள உறவுகள் பற்றிய ஆய்வுகள்
3.ஆளுமைகள் குறித்த ஆய்வுகள்
4.ஒப்பியல் ஆய்வுகள்
5.வணிக எழுத்துக்கள் குறித்த ஆய்வுகள்
6.அண்மைக்காலப் போக்குகள் பற்றிய ஆய்வுகள் என்பன கவனப்படுத்த வேண்டிய களங்கள்.
இவ்வாறு கவனப்படுத்திக் கொண்ட நிலையில் இவற்றுக்குள்ளும் செயல்படும் நுட்பங்களையும் அவற்றின் வேறுபாடுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

1.வரலாறு பற்றிய ஆய்வுகள்:
'இக்கால இலக்கியம் ' என்ற சொல்லின் பொருள் குறித்தே ஒரு மிகப்பெரிய ஆய்வு நடத்தப் பட வேண்டியுள்ளது. சாதாரணமான உரையாடல்களில் இடம்பெறும் ,' இக்கால இலக்கியம், தற்கால இலக்கியம், சமகால இலக்கியம் நவீன இலக்கியம், மறுமலர்ச்சி இலக்கியம், புத்திலக்கியம்' என்பதான சொற்களின் இயங்கு நிலைகளைக் குறித்து ஓர் ஆய்வு நிகழ்த்தப்படும் நிலையில், அந்த ஆய்வு தோற்றம், வளர்ச்சி என விரியக் கூடிய வரலாற்றாய்வாக மாறிவிடும் வாய்ப்புக்கள் உண்டு. இந்த வார்த்தைகளின் பின்னணியில் காலம் இருக்கிறது; கருத்தியல் இருக்கிறது; சமூக மாற்றம் சார்ந்த நிகழ்வுகள் இருக்கிறது. எந்தச் சொல் பிரயோகத்தின் பின்னணியில் என்ன இருக்கிறது என ஆராயத்தொடங்கும் நிலையில் அந்த ஆய்வு தோற்றக்காரணிகளைக் கண்டறியும் ஆய்வாகவும், அதன் வளர்ச்சி நிலைகளைச் சுட்டும் ஆய்வாகவும் நீளும் வாய்ப்புகளுண்டு.தோற்றம், வளர்ச்சி, வரலாறு என்பதான ஆய்வுகளுக்கு மேலும் பல பொருட்கள் உள்ளன. 'இக்கால ' எனும் அடைமொழியுடன் சொல்லப்படும் பரப்பில் பல்வேறு இலக்கிய வகைமைகள் உள்ளன. புதினம், என அழைக்கப் படும் நாவல், சிறுகதை, நாடகம், கவிதை எனப்பல உண்டு. சிறுகதையையும் நாவலையும் உள்ளடக்கிய புனைகதைகள் இந்திய/ தமிழ் மொழிக்குப் புதியன. ஆனால் கவிதையும் நாடகமும் பழையன. என்றாலும் இந்த நான்குமே புதியன போலவே அறியப்படுகின்றன.
இத்தகைய அறிதலின் தோற்றமும் வளர்ச்சியும் வரலாறும் இனிவரும் சந்ததியினருக்கு முறையாகச் சொல்லப்பட வேண்டியன. அத்தகைய நோக்கத்தில் ஆய்வுகள் செய்யப் பட வேண்டியுள்ளன. பொதுவாக ஆய்வுகளில் வகைப்படுத்திப் (classification) புரிந்து கொள்ளுதல் என்பது அடிப்படையான ஒன்று. இந்த அடிப்படையான போக்கே,இக்கால இலக்கியங்களை இலக்கிய வகை (genre)களாகப் பிரித்துப் பார்க்கிறது. அதன் பிறகும் முடிந்த அளவு வகைமைப் படுத்த முயல்கிறது.


தேசிய இலக்கியம், திராவிட இலக்கியம், பொதுவுடைமை இலக்கியம், தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், வட்டார இலக்கியம் என்பன ஒரு முயற்சி. வட்டார இலக்கியத்திற்குள் கொங்கு, கரிசல், தாமிரபரணி, தஞ்சை, என்பன அதனுள்ளாகவே இன்னொரு முயற்சி.விரிந்த ஒன்றைச் சுருக்கிச் சுருக்கிச் சென்று எல்லையை உருவாக்கி விளங்கிக் கொள்ளுதல், ஆழமான புரிதலின் அடிப்படைகள்.இதனை ஏற்றுக்கொண்டு, தமிழில் இதுவரை செய்யப்பட்டுள்ள வகைமையாக்கல்களின் பின்னணிகளையும் வரலாற்றையும் ஆய்வு செய்தல் தேவையான முயற்சிகள் எனலாம். இத்தகைய முயற்சிகளே தனியொரு படைப்பாளிகளைப் பற்றிய- படைப்புகளைப் பற்றிய மேலாய்வுக்கு அடிப்படை களாக அமையத்தக்கன.தோற்றம், வளர்ச்சி, வரலாறு என்ற நோக்கிலேயே, இலக்கிய இயக்கங்கள் சார்ந்த பெயரிடலையும் - வகைமைப் படுத்தலையும்-ஆய்வு செய்யலாம். தமிழில் மேற்கத்திய இலக்கிய இயக்கங் களான செவ்வியல், புனைவியல், நடப்பியல் (அதன் உட்பிரிவுகள் உட்பட) , நடப்பியலுக்கு எதிராகத் தோன்றிய மிகைநடப்பியல், இருத்தலியல், குறியீட்டியல், அபத்தவியல், சிதைவாக்கவியல், எனப் பலவும் அறிமுக நிலையிலும் வளர்ந்த நிலையிலும் பயன்பாட்டில் உள்ளன. இவை பற்றியெல்லாம் கூட விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டு, அவற்றின் தாக்கங்களும் பாணிகளும் கண்டறியப் பட்டுச் சொல்லப் பட வேண்டியுள்ளது.
அப்படிச் சொல்லப்படும் நிலையிலேயே இக்கால இலக்கியத்தின் வரலாறு முழுமை பெறும் வாய்ப்புண்டு. இதனைப் போலவே, இலக்கியத்தோடு தொடர்புடைய சமூகவியல், உளவியல், மானுடவியல், தொல்படிமவியல் போன்றவற்றின் தாக்கங் களும் பாணிகளும் கண்டறியப் படுதலும் சொல்லப்படுதலும் முக்கியத் தேவைகளே எனலாம்.எல்லாவகையான வரலாற்றிலும் தனித்த ஒன்றாக உருவாகி வளரும் ஒரு நிகழ்வு, அதன் வீரியம் குறைகின்றபொழுது தேய்ந்து அழிவதும் உண்டு. முழுவதும் அழிந்துவிட்டது எனச் சொல்ல முடியா விட்டாலும், 'தேய்ந்து விட்டது' எனச் சொல்லத் தக்கனவாகப் பலவற்றை அடையாளப்படுத்த முடியும். அப்படித் தேய்ந்த இடத்திலிருந்து இன்னொன்று உருவாகி இருக்கவும் கூடும். அல்லது அதன் பழைய இயல்புகளை மாற்றிக் கொண்டு, புதியனபோல் தோற்றம் காட்டவும் செய்யும். இதையெல்லாம் தீர்க்கமாகச் சொல்வதற்குக் காத்திரமான வரலாற்றாய்வுகள் தேவை.

அரசியல் இயக்கங்களோடு சேர்ந்து உருவான தேசிய இலக்கியம், திராவிட இலக்கியம் போன்றன இன்று அடையாளமிழந்து விட்டன. ஆனால் அரசியலில் தீர்மானகரமான சக்தி களாகவே இருக்கின்றன. இது ஒருவகை முரண்நிலை. இதுபற்றி ஒருவரியில் காரணம் சொல்லி விடமுடியாது. ஆழமான ஆய்வுகள் தேவை. அதேபோல் இடதுசாரி அரசியல், அதிகாரத்திற்கு வராமலேயே அதன் இலக்கிய ஆளுமையைச் சிதைத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. அதனிடத்தில் தலித் இலக்கியமும், பெண்ணிய இலக்கியமும் கிளைவிடத் தொடங்கியுள்ளன. இவற்றின் காரணங்கள் அறியப்பட வேண்டியன.அதற்கான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இவையெல்லாம் சில உதாரணங்களே.

2.கலை இலக்கியங்களுக்கும் சமூக இயங்குநிலைக்கும் உள்ள உறவுகள் பற்றிய ஆய்வுகள்

இக்கால இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகள் பலவற்றை வாசிக்கும் போது அவற்றின் பின்னணியில் இருந்த கருத்தியலாக இதைத் தான் சொல்ல வேண்டும். கலைக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் உறவு உள்ளது ; கலை இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையைப் பிரதி பலிக்கவும் வாழ்க்கையை மாற்றவும் உதவுயுள்ளன என்ற கருத்தியலோடும் நம்பிக்கையோடும் பல ஆய்வாளர்களும் தங்கள் ஆய்வுகளை நிகழ்த்தவே செய்துள்ளனர். ஆனால் அத்தகைய ஆய்வுகளில் வாழ்க்கை என்பது அன்றாட நடைமுறை நிகழ்வுகள் என்பதாக மட்டுமே கவனப் பட்டுள்ளன என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. படைப்பாளி தன்காலத்தில் நடந்த மகா நிகழ்வுகளைத் தனது சார்புடன் கலந்து பதிவு செய்கிறான் என்ற நம்பிக்கை பல ஆய்வாளர்களின் ஆய்வேடுகளின் அடிநாதமாக உள்ளது. இந்த நம்பிக்கை முற்றிலும் தவறு எனச் சொல்வதற்கில்லை. ஆனால் இந்த ஒன்று மட்டும்தான் இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் இடையே யுள்ள உறவா? என்று யோசித்தால், இல்லை இன்னும் பலவும் உள்ளன என்பது புரியும்.

படைப்பாளி தன்கால நிகழ்வுகளைப் பதிவு செய்வது தன்னுடைய விவரண அறிவையும் பதிவு செய்யும் திறமையையும் காட்டிட மட்டும் அல்ல; அந்நிகழ்வுகளின் மேல் தன் கருத்துக்களைக் கூறவும், அந்நிகழ்வுகள் எதிர்க்கப்பட வேண்டியன என நினைத்தால் அதனை நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்யவும் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். புதுமைப்பித்தன் நாசகாரக் கும்பல் என்றொரு கதை எழுதியுள்ளார் என்றால் அது வெறும் பதிவு மட்டும் அல்ல; தன் சாதியினரும் அவர்களின் கையாட்களாகச் செயல்படக்கூடிய குழுவினரும் பொருளாதார ரீதியாக மேலெழும்பும் மனிதர்களுக்கு எதிராக எத்தகைய மோசடிகளைச் செய்பவர்களாக இருக்கிறார்கள் என்ற கோபத்தையும் வெளிப்படுத்தியதுதான் அந்தக் கதை.பதிவு செய்தல், விமரிசனம் செய்தல்,அடையாளப் படுத்தல், காரணம் சுட்டல், எதிர்த்து நிற்றல், எனப் படைப்பு பலநிலையினதாக வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.படைப்பின் பல்கோணங்களிலிருந்து வாசிக்கவும் விளக்கவும் முடிகிற நிலையில் ஆய்வாளன் படைப்பாளனின் நிலைக்குச் சமமாகவும் கூடுதலாகவும் சிந்திக்கின்றவனாக ஆகி விடுகிறான்.படைப்பு-படைப்பாளி- வாசகன் என்கிற கண்ணிகளுக்கிடையேயுள்ள உறவை விளக்கும் அதே வேளையில் வாசகனும் படைப்பாளியும் வாழுகின்ற சமூகச்சூழல் அந்தப் படைப்புக்கு என்ன அர்த்தங்களைத் தர முயல்கிறது எனக் கணிப்பதும் ஆய்வாளனின் வேலையாகவே இருக்கிறது.

எழுதப்பட்ட படைப்பு தரும் தகவல்கள், நிகழ்வுகள், கோணங்கள், சார்புகள் மட்டுமே கலை இலக்கியங் களுக்கும் சமூகத்திற்குமுள்ள உறவு என்பதற்குள் அடங்கி விடக் கூடியன எனக் கருத வேண்டியதில்லை. புதிய புதிய இலக்கிய வடிவங்களின் தோற்றமும், இலக்கிய இயக்கங்களின் தோற்றமும் அல்லது உள்வாங்கலும் கூடச் சமூகத்தேவை கருதியே நிகழ்கிறது. அதேபோல் பிரபலமாக இருந்து வந்த இலக்கிய வடிவங்களும் இயக்கங் களும் கூடக் காணாமல் போவதற்கும் கூட சமூகப் பின்னணி உண்டு. அவற்றையும் இந்தப் பின்னணி யிலேயே ஆய்வு செய்யலாம்.இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள உறவை இடமாற்றி வைத்து ஆய்வு செய்யும் போக்கும் இலக்கியப்புலத்திற்குள் ஓர் ஆய்வாக இருந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் முக்கிய சமூக மதிப்புக்களைப் பற்றிய பார்வை ஒரு குறிப்பிட்ட எழுத்தாளனின் படைப்புக்களில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது எனக் கவனித்து அந்தப் படைப்பாளியை மதிப்பீடு செய்வது இத்தகைய ஆய்வுகளின் நோக்கங்களாகும்.

ஜெயகாந்தன் கதைகளில் ஆண்- பெண் உறவுகள் அல்லது நீலபத்மநாபன் நாவல்களில் குடும்ப உறவுகள் என்ற தலைப்பில் செய்யப்படும் ஆய்வுக்கும், சாதீயமுரண்களும் தமிழ் நாவல்களும் எனத் தலைப்பிட்டுச் செய்யப்படும் ஆய்வுக்கும் இடையேயுள்ள அடிப்படை வேறுபாட்டையும் மைய நோக்கத்தின் இடப்பெயர்ச்சியையும் விளங்கிக்கொள்ள வேண்டும். இத்தகைய ஆய்வு களை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் நிகழ்காலச் சமூகத்தின் உறவுகளைச் சமூகவியலின் துணை கொண்டு விளங்கிக் கொண்டு இரண்டாவதாக இலக்கியத்தின் தரவுகளுக்குள் நுழைய வேண்டும். சமூகக் கருத்தியல்களான மார்க்சீயம், பெண்ணியம், தலித்தியம், போன்றனவற்றை ஆய்வுக் குரிய கருவிகளாகக் கொள்ளும்பொழுது அதன் நுட்பங்களைக்கற்றுத் தேர்ந்து கொள்ள வேண்டும் .

3.ஒப்பியல் ஆய்வுகள்
தமிழ் இலக்கியப்பரப்பில் பிற காலகட்ட இலக்கியங்களை விட இக்கால இலக்கியப்பரப்பில் உள்ள இலக்கியங்கள், ஒப்பியல் ஆய்வுக்கு ஏற்ற களங்கள் எனலாம்.ஒப்பியல் ஆய்வின் விரிவான எல்லைகளுக்கு இக்கால இலக்கியங்கள் துணை நிற்கத்தக்கன எனக் கூறுவதற்கு வேறுசில காரணங்களும் உள்ளன. தகவல் தொழில் நுட்பப் பெருக்கத்தின் காரணமாகச் சமூகங் களிடையேயும் தேசங்களிடையேயும் அவற்றின் மொழிகளுக்கிடையேயும் இருந்து வந்த வேறுபாடுகள் குறையத் தொடங்கியுள்ளன. மனிதர்கள் இன்று சர்வதேச மனிதர்களாக ஆகும் போக்கில் உள்ளனர் என்று கூடக் கூறலாம். அதே நேரத்தில் இத்தகைய பேரடையாளங்களை ஒதுக்கி விடும் சிற்றடையாளங்களை நாடியும் தக்க வைத்தும் வருகின்றனர். இத்தகைய பின்னணியில் ஆய்வுத்துறைகளில் பெரும்பங்கு வகிக்கக் கூடிய ஆய்வு வகையாக இருக்கத்தக்கனவற்றில் ஒப்பிலக்கிய ஆய்வுக்கு முதன்மை இடம் உண்டு எனக்கூறலாம்.

ஒப்பியல் ஆய்வின் அனைத்து வகைகளும் இங்கு செல்லத்தக்கதாக உள்ளன. 1.மொழிகளுக்கிடையேயும்இலக்கியங்களுக்கிடையேயும் பண்பாடுகளுக்கிடை யேயும் நிலவக்கூடிய ஒத்த கூறுகளை இனங்காட்டுதல்,

2.ஒத்த தன்மையின் தோற்றங்களுக்கான காரணங்களைச் சுட்டுதல்

என இருமொழி சார் ஒப்பிலக்கிய ஆய்வுகளையும் - பலமொழிசார் ஆய்வுகளையும் மேற் கொள்ள அதிக வாய்ப்புகளுண்டு.ஏனெனில் தமிழில் மொழிபெயர்க்கப்படும் இலக்கியங்களில் இக்கால இலக்கியங்களே அதிகம் என்பதும் விரும்பினால் மொழி பெயர்க்கப்படும் சாத்தியங்கள் அதிகம் என்பதும் ஒரு காரணம். அத்துடன் தேவைகளும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியும் இதனோடு தொடர்புடையது மற்ற காரணம். இருமொழி ஆய்வாக இல்லாமல் ஒரு மொழியின் இலக்கியத்துக்குள்ளேயே மேற்கொள்ளத்தக்க ஒப்பிலக்கிய ஆய்வுக் கொள்கைகளான தாக்கக் கொள்கைக்கும் தழுவல் கொள்கைக்கும் கூட இக்கால இலக்கியப்பரப்பில் ஏராளமான இடமுண்டு.


பாரதி, பாரதிதாசன் முந்திய தலைமுறைக்கவிஞர்களின் கவிதைகள் பின்வந்த கவிஞர்களைத் தாக்கிய விதமும் புதுமைப்பித்தன், கு.ப.ரா.போன்ற முந்திய தலைமுறைச் சிறுகதை யாளர்களின் கதைகள் பிந்திய தலைமுறைச் சிறுகதைக்காரர்களைப் பாதித்த விதங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டிய பரப்புகளே. அதே போல் சமகால அரசியல் சமூக இயக்கங்களும் இலக்கிய இயக்கங்களும் இக்காலத் தமிழ் இலக்கியப்பரப்பைப் பாதித்த விதங்கள் ஆராயப்பட வேண்டிய பரப்புக்களாகவே உள்ளன. இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ளும் போது ஒப்பிலக்கிய ஆய்வின் அணுகுமுறைகள் மிகுந்த துணை புரியக்கூடியன. இந்த வகையில் ஒப்பிலக்கிய ஆய்வின் கூறுகளான ஒத்த கூறுகள், தோற்றக்காரணிகள், தாக்கம், செல்வாக்கு என அனைத்தும் விரிவாகவும் நுட்பமாகவும் கற்கப்படவேண்டியன மட்டுமல்ல; பயன்படுத்தப்பட வேண்டியன.


4.ஆளுமைகளைப் பற்றிய ஆய்வுகள்:

கலை இலக்கிய ஆய்வுகளில் தனித்த படைப்புகளின் மீதான ஆய்வும், தனித்தன்மை கொண்ட படைப்பாளிகளின் மீதான ஆய்வும் முக்கியமான இடத்தைப் பெறத்தக்கன. ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியப்பரப்பையே திசை திருப்பிய படைப்பாளிகள் என்றில்லாமல், ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு இலக்கியவகையிலும் முத்திரை பதித்த படைப்பாளிகள் பற்றிய விரிவான ஆய்வுகள் தேவை. அத்தகைய படைப்பாளிகளை அடையாளங்கண்டு கல்விப்புல ஆய்வாளர்கள் ஆய்வேடுகளைச் சமர்ப்பிக்கவே செய்துள்ளனர்.


பாரதி, புதுமைப்பித்தன், சண்முகசுந்தரம், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், அகிலன், கல்கி, நா.பார்த்தசாரதி, பாரதிதாசன், மு,வ., இந்திராபார்த்தசாரதி, சி.என். அண்ணாதுரை, தொ.மு.சி.ரகுநாதன், ராஜம் கிருஷ்ணன், நீலபத்மநாபன், நாஞ்சில் நாடன், சிவகாமி, தோப்பில் முகமது மீரான், கி.ராஜநாராயணன், பிரபஞ்சன் எனப் பலரையும் பற்றி ஆய்வுகள் செய்யப் பட்டுள்ளன. இந்த வரிசையைச் சரியாகப் பட்டியலிட்டால், சில நூறு பெயர்களைச் சொல்ல வேண்டியதிருக்கும். சொல்லப்படும் அந்தப் பெயர்கள் அனைத்தும் இக்கால இலக்கியப்பரப்பில் சொல்லப் படவேண்டிய தனித்த ஆளுமைகள் தானா..? எனக் கேட்டால் ' இல்லை' என்றே சொல்வேன்.


தனித்த ஆளுமையாகக் கருதப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு, பட்டம்பெற உதவியுள்ள படைப்பாளிகளின் படைப்பாளிகளின் படைப்பாளுமை தனித்தன்மைகள் கொண்டன அல்ல. சி.ஆர். ராஜம்மா என்ற கதைக்காரரோ, ஜெகசிற்பியன், சாண்டில்யன் போன்ற வரலாற்றுப் புனைவாளர்களோ தனித்த ஆளுமைகளாகச் சொல்லப்பட வேண்டியவர் கள்தானா..? என்று கேள்வி எழுப்பிக் கொண்டு ஆய்வு செய்யப்படுவதில்லை இங்கு. அதன் நீட்சியாகவே, இன்று விமலாரமணி, பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தரராஜன், லேனா தமிழ்வாணன் போன்றவர்களும் கேள்விகளற்றுப் படைப்பாளுமைகளாகக் கருதப்பட்டு ஆய்வு செய்யப் படுகின்றனர். இந்தப் போக்கு ஆபத்தானது; ஒட்டுமொத்தக் கல்விப்புல ஆய்வுகளுக்கும் அவப் பெயரைத் தேடித் தரவல்லது. கலைப்படைப்புக்கும் நுகர்பண்டங்களுக்கும், மனவுணர்வுகளை அலசும் இலக்கியப் பனுவல்களுக்கும் பயன்படு பொருளெனத் தயாரிக்கப்படும் பத்திரிகைத் தொடர்கதைகளுக்கும் வேறுபாடுகள் காணத் தெரியாத நிலையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை வரையறை செய்யும் பயிற்சிகள் தரப்பட வேண்டும்; இப்பயிற்சிகள் தருவதில் ஆய்வு நெறியாளர்களின் பங்கு முக்கியமானதாக அமையும்.

இப்பயிற்சி இப்போதைய சூழலில் வெறும் வகுப்பறைக் கல்வி மூலமாக வாய்த்து விடுவதில்லை. படைப்புகளுக்கென, திறனாய்வுக்கென, சமூக நடப்பு விமரிசனங் களுக்கென வெளிவரும் இதழ்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் தொடர்ந்து வாசிப்பதன் மூலமாகவே இத்தகைய பயிற்சிகளைப் பெற முடியும். அத்தகைய பயிற்சிகளைப் பெற்ற ஆய்வாளர்கள் திறமான ஆய்வேடுகளைத் தந்துள்ளனர். ' தொடர்ந்த வாசிப்பு ஆய்வின் முதல்படி' என்பது கைக்கொள்ள வேண்டிய சித்தாந்தம் ஆகும்.தொடர்ந்த வாசிப்புடைய ஒருவராலேயே பாரதி தொடங்கி வைத்த நவீன கவிதையையும் பாரதிதாசன் திசை திருப்பிய மறுமலர்ச்சிக் கவிதையையும் இன்று வரை அது அடைந்துள்ள மாற்றங்களையும் கண்டறிய முடியும். இடையில் எழுத்துக்கவிஞர்கள் ஏன் முணுமுணுத்தார்கள் என்று சொல்ல முடியும். வானம்பாடிகள் கோஷமிட்ட பின்னணியைப் புலப்படுத்தமுடியும். அவர்களிலிருந்து விலகி இன்குலாப் பயணப்பட்டதைப் புரிந்து கொள்ள முடியும்.

இக்கால இலக்கியங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளத் தயாராகும் பலரும் நவீனத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளத் தயங்கியே நிற்கின்றனர். பல்கலைக்கழகப் பட்ட வகுப்புகளிலும் பட்டமேல் வகுப்புகளிலும் கவிதைகளைக் கற்பிப்பதில் மிகப் பின்தங்கியுள்ள காரணம் இதன் பின்னணியில் உள்ளது. இக்காலக் கவிகளுள் முக்கியமானவர்களாகக் கருதிப் பேசப்படும் ஞானக்கூத்தன், பழமலய், கலாப்ரியா, விக்கிரமாதித்தியன், கல்யாண்ஜி, பிரும்மராஜன், ஆத்மாநாம், பசுவய்யா, மனுஷ்யபுத்திரன், எம்.யுவன், தேவதேவன், சுகுமாரன், அப்பாஸ், கனிமொழி, சல்மா, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி பற்றியெல்லாம் கல்விப்புல ஆய்வாளர்கள் கவனம் செலுத்தவே இல்லை.

அதைப்போல நாடகங்களிலும் ஒருவித ஒதுக்கல் தன்மைகளே நீள்கின்றன. நவீன நாடகப் பிரதிகள் ஆய்வுப் பொருளாகக் கவனப்படவே இல்லை. எண்ணிக்கை அளவில் குறிப்பிடத்தக்க நாடகங் களைத் தந்துள்ள இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, ஜெயந்தன் போன்றவர்கள் கூட கவனிக்கப்பட வில்லை. அவர்களோடு ஓரிரு நாடகங்களிலேயே தங்களை வெளிப்படுத்தியுள்ள ரமேஷ்:பிரேம், எம்.டி. முத்துக்குமாரசாமி, முருகபூபதி, அ.ராமசாமி, ஞாநி, வேலுசரவணன், எஸ்.எம்.ஏ.ராம், நிஜந்தன், அம்பை போன்றவர்களும் நாடக உலகில் ஆய்வுக்குட் படுத்தப் படாமலேயே உள்ளனர். அத்துடன் நாடகமேடையேற்றத்தில் புதிய பங்களிப்பு செய்துள்ள மு,ராமசுவாமி, சே.ராமானுஜம், வ.ஆறுமுகம், கே.ஏ.குணசேகரன், பிரளயன், மங்கை போன்றவர்களும் இக்கால நாடகப்பரப்பு என்ற எல்லைக்குள் ஆய்வு செய்யப்பட வேண்டியவர்கள்.

அந்தப்பரப்பை ஆய்வுக்குத் தேர்வு செய்யும் ஆய்வாளன் நாடகக் கதையாடல், நாடக வகைப்பாடு, நாடக மேடையேற்றம். என்பனவற்றைப் பற்றிய புரிதலுடன், நவீனச் சிந்தனைகளும் வடிவமாற்றமும் பற்றியெல்லாம் அறிந்து கொண்டு நுழைய வேண்டும். அத்துடன் இந்திய அடையாளம், தமிழ் அடையாளம், தலித் அடையாளம், பெண் அடையாளம் எனப் பேசப்படும்' அடையாளச்சொல்லாடல்களையும் அறிந்தவனாக ஆதல் வேண்டும், இந்த அடையாளச் சொல்லாடல்கள் நாடகம் சார்ந்த ஆய்வுகளுக்கு மட்டும் உரியதன்று; ஒட்டுமொத்த நவீனத்தமிழ் இலக்கியங்களுக்கும் உரியனதான்.

தனித்த ஆளுமைகளைப் பற்றிய ஆய்வுகளில் ஒரு ஆய்வாளன் கண்டறிந்து சொல்ல வேண்டியன பலப்பலவாகும். இலக்கிய வரலாற்றில் அவனது இடம், அவனை எழுதத் தூண்டிய சமூகப் பின்புலம், அவன் கவனித்துச் சித்திரித்துக் காட்டிய மனிதர்கள், அவர்களின் மொழி, அவர்களுக்கும் அவர்கள் இயங்கும் வீடு,தெரு, ஊர், வட்டாரம், மாநிலம்,தேசம்,உலகம் எனும் வெளிகளுக்கும் உள்ள உறவு, அவர்களை இயக்கும் சிந்தனைத் தளம், அவர்களின் ஆசைகள், அதனைத் தடுக்கும் தடைகள் என எழுத்தாளன் எழுதிக்காட்டும் அனைத்தையும் கண்டு சொல்லும் பொழுது, ஆய்வாளனின் ஆய்வே இன்னொரு மறுபடைப்பாகும் வாய்ப்புகளுண்டு. ஏனென்றால் இவைகளையெல்லாம் காரணகாரியங்களோடு ஆய்வாளனால் விளக்க முடியும்.

தமிழ் இலக்கியப் படைப்பாளி என்றில்லாமல் இந்தியமொழிகளில் எழுதும் எந்தவொரு படைப்பாளி யையும் அவன் இயங்கும் சிந்தனைத் தளத்திலிருந்தும் ஆய்வாளன் கணித்தாக வேண்டும். ஏனெனில் இந்திய மனிதன் ஒரே நேரத்தில் மூவகை மனிதனாக இயங்கும் ஆற்றல் வாய்ந்தவன். அவனது நம்பிக்கைகள் சார்ந்து பாரம்பரியத்தில் பிடிமானம் கொண்டவனாகவும் (Traditionalist ), வெளிப்பாடு மற்றும் செயல்பாடுகளில் நவீனத்துவ விரும்பியாகவும் (Modernist ) ஆசைகள், விருப்பங்கள், அந்தரங்கங்கள் போன்றவற்றில் பின்னை நவீனத்துவ வாதியாகவும் (Post-Modernist ) இயங்குகிறான்.

இந்த மூன்றில் எந்த மனநிலை படைப்புகளில் வெளிப்படுகின்றன என்பதைக் கண்டு சொல்வதும் பொருத்திக் காட்டுவதும் ஆய்வாளனின் கவனமான பணியாக அமைய வேண்டும். இந்தப் பணியை எளிதாக்கிவிடும் ஆய்வாளன் மட்டுமே, ஒப்பிலக்கிய ஆய்வு, தொல்படிமவியல் ஆய்வு,சமூகவியல் ஆய்வு, உளவியல் ஆய்வு எனப் பல நிலைகளில் பயணம் செய்ய முடியும். இதனை உணராமல் மரபு, நவீனத்துவம், பின்னை நவீனத்துவம் போன்றனவற்றை ஓராய்வு முறையியலாகவும், அணுகுமுறையாகவும் கருதும் போக்குகள் எல்லாம் நிலவுகின்றன. இவைகள் களையப்பட வேண்டியன. மேற்கத்தியக் கருத்துக்கள், கருத்தமைவுகள், இயக்கங்கள், போக்குகள் என்பனக் கட்டாயம் பயன்படுத்த வேண்டியன என்று கருத வேண்டியதில்லை. தவறாகப் பயன்படுத்துவதை விடப் பயன்படுத்தாமல் விடுவதே சிறந்தது.

5.வணிக எழுத்துக்கள் பற்றிய ஆய்வுகள்:
நவீனத் தமிழ்ப்பரப்பைப் பற்றிப் பேசும் அரங்குகளில் வணிக எழுத்துக்களைப் பற்றிய விவாதங்களும் இடம் பெறுவதுண்டு.'வணிக எழுத்துக்கள் ஆய்வுக்குரியன அல்ல' என்று ஒதுக்குதல் சரியான பார்வையன்று. ' அதிக எண்ணிக்கையிலான வாசகர்களால் வாசிக்கப் படுவதே இலக்கியத்தின் தகுதியாகி விடக் கூடாது' என்பது மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். வணிக எழுத்தின் (Commercial writings) இயல்புகளையும் அவை வெகுமக்கள் பண்பாட்டைக் கட்டமைக்கும் விதங்களையும் பற்றி ஏராளமான ஆய்வுகள் மேற்கத்தியப் பல்கலைக் கழகங்களில் வரத் தொடங்கியுள்ளன. அத்தகைய கோணத்திலிருந்து தமிழகப் பல்கலைக் கழகங்களின் இலக்கியத் துறைகள் எதுவும் ஆய்வுகளை இன்னும் தொடங்கவே இல்லை. அப்படித் தொடங்கப்படும் ஆய்வுகள் வெறும் எழுத்தைப் பற்றிய ஆய்வாக அமையாமல், தமிழ்ச் சமூக உருவாக்கத்தைப் பற்றிய ஆய்வுகளாகவும், அதன் திசைவழிகளைச் சுட்டும் ஆய்வாகவும் அமையும் வாய்ப்புகளைக் கொண்டனவாகும்.

வெகுமக்களுக்கும் வெகுமக்கள் பண்பாட்டிற்கும் இடையேயுள்ள கொடுக்கல்-வாங்கல் உறவுகளின் மேல் ஆய்வுரைகளைத் தொடங்குபவர்கள் தங்களுக்கான ஆய்வுத் தரவுகளை முதலில் வணிக இதழ்களில் (தினசரி, வார, மாத இதழ்களில்) தொடங்கிடலாம். அவற்றைத் தொடர்ந்து வெகுமக்கள் ரசனையையும் உளவியலையும் கட்டமைக்கும் திரைப்படங்கள், மேடைக்கச்சேரிகள் (பேச்சு, வழக்காடு மன்றம், பட்டிமன்றம், அரட்டை அரங்கம், பாட்டுக் கச்சேரிகள் உள்பட) தொலைக்காட்சித் தொடர்கள் என நீட்டித்துச் செல்லும் வாய்ப்பு களுண்டு. இவ்வகையான ஆய்வுகளுக்குப் புதிதாக வந்துள்ள சிந்தனை முறைகளான அமைப்பியல், பின்னை அமைப்பியல், குறியியல், எடுத்துரைப்பியல் (Narratalogy ) போன்றன அதிகம் உதவக் கூடியன. அவற்றை முறையாகக் கற்றுப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.வணிக எழுத்துக்கள் பற்றிய ஆய்வின் ஒரு பகுதியாக வணிக எழுத்துக்கும் இலக்கிய எழுத்துக் குமான உறவும் முரணும் பற்றியும் ஆய்வு செய்யலாம்.

வணிக எழுத்துப் பரப்பு தொடர்ந்து சிறு பத்திரிகைகளில் எழுதிப் பழகியவர் களைக் கவர்ந்திழுத்தே வருகின்றது. சிறுபத்திரிகையெழுத்தின் அம்சங்கள் எந்தெந்த இடங்களில் விரிவடைகின்ற பொழுது வெகுமக்கள் எழுத்தாக மாறுகின்றது என்பது ரசமான ஆய்வாகவே அமையத்தக்கது. தமிழ் எழுத்தாளர்களில் சிலர் இரண்டு பரப்புகளிலும் மதிக்கப்படுகிறவர்களாக இருக்கின்றனர். ஜெயகாந்தன், கி.ராஜ நாராயணன், பிரபஞ்சன், திலகவதி, சுஜாதா போன்ற மிகச்சில பெயர்கள்தான் இப்பட்டியலில் இருப்பர்.

இப்பொழுதுள்ள இளம் எழுத்தாளர்களில் இப்பட்டியலில் இடம் பெறும் ஆசை ஜெயமோகன், எஸ்.ராம கிருஷ்ணன் போன்றவர்களுக்கு உண்டு. இவர்களல்லாமல், சிறுபத்திரிகைகளில் எழுதிப் பழகிவிட்டுப் பெரும் பத்திரிகைகளில் வெற்றி பெற்றவர்க்ள் பலருண்டு. பாலகுமாரன் மிகச் சிறந்த உதாரணம். இந்துமதி, சிவசங்கரி, மாலன், மேலாண்மை பொன்னுச்சாமி, சு,சமுத்திரம் என அந்தப்பட்டியலில் மேலும் சில பெயர்களைச் சேர்க்கலாம்.இவ்வகையான ஆய்வுகள் படைப்பின் நுட்பங்கள் பற்றிய ஆய்வுகளாகவும்,மக்கள் மனத்தைக் கட்டமைக்கும் உளவியலைப் பற்றிய ஆய்வுகளாகவும் அமையத்தக்கன.

6.அண்மைக்காலப் போக்குகள்:
தமிழ் இலக்கியப்பரப்பு தொண்ணூறுகளிலும் இரண்டாயிரத்துக்குப் பின்னும் புதுப்புது நுழைவுகளால் விரிவடைந்து கொண்டு வருகிறது. அவற்றையெல்லாம் உடனடியாக மதிப்பிட்டு ஆய்வுசெய்வதோ, நுட்பங்களைப் பேசுவதோ இயலாமல் போகலாம். தலித் இலக்கியம், கவிதை, புனைகதை, நாடகம், விவரணை (documentary ) என்பதாக விரிந்து வருகிறது. பெண்ணியவாதிகள் புனைகதைகளைவிடக் கவிதை வடிவத்தை லாவகமாகக் கையாளத் தொடங்கியுள்ளனர். 'உணர்வுகளின் வெளிப்பாடு கவிதை, ' என்பதற்கும் ‘பெண்கள் உணர்வு மயமானவர்கள்’ என்ற பொதுப்புத்தி சார்ந்த கருத்தியலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என ஆய்வு செய்து பார்க்கலாம். அத்துடன், 'மனத்தைப் பேசுவது இலக்கியம்' என்ற பார்வையிலிருந்து நகர்ந்து, 'உடலைப் பேசுவதும்; உடலைக் கொண்டாடுவதும் இலக்கியத்தின் பகுதிதான்' என்ற நிலைபாட்டிற்கு வந்துள்ளது.

இளம் வயதுப் பெண்களின் இத்தகைய பார்வை தமிழ்க்கவிதையில் புதிய போக்காக வளரும் சாத்தியங்களைக் கொண்டது. இவற்றை யெல்லாம் தொகுத்து வகைப்படுத்திப் பேசுவதே கூடப் பொருட் படுத்தத் தக்க ஆய்வாக அமையும். அதேபோல் தொண்ணூறுகளின் திறனாய்வாளர்கள் தங்களின் எல்லைகளைப் பலதளப் பார்வைகளாக விரித்துள்ளனர். அவற்றைப் புரிந்து கொள்ளத் தொடங்குவதே கூடத் தேவையானா ஆய்வு தான்.தொண்ணூறுகளின் தமிழ் இலக்கியப்பரப்பு ஈழம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் படைப்புகளாலும் விரிவடைந்து வருகிறது. தாயக இலக்கியம், போர்க்கால இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், அகதி இலக்கியம் எனப் பெயரிட்டு வகைப்படுத்திப் பேசத்தக்கனவாக அவை நிறைய அச்சாகியுள்ளன. இந்திய மொழிகளில் வேறெதற்கும் இந்தப் பரப்பு சாத்தியமில்லை. இவையெல்லாமும் இக்கால இலக்கியங்களே.

முடிவுரை:
விவரித்தனவும் விளக்கப்பட்டனவும் இக்காலத்தமிழ் பற்றிய ஆய்வுகள் பொறுப்பான ஆய்வுகளாக வரவேண்டும் என்ற நோக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ளன. செயல்படுத்த வேண்டியதும் சிந்திக்க வேண்டியதும் தமிழ் ஆய்வுலகத்தின் முக்கிய பொறுப்பாகும்.

கருத்துகள்

RP RAJANAYAHEM இவ்வாறு கூறியுள்ளார்…
sampiradhayamaaga paaraatta virumbavillai. Anaiththu Palkalaikalagangalin kavanaththirkkum intha katturai
sendru sera vaendum.

eppadi irukkeenga Sir?
R.P.Rajanayahem ninaivirukka?
kaalam odipochi. ungalai santhikka mudiyamalae poyiduchi.
AMUDHAN JAYAKODI இவ்வாறு கூறியுள்ளார்…
thanks for your research methodology essay to my higher studies .. thanks sir...
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்
தங்களின் கல்விப்புல ஆய்வு என்ற இந்த கட்டுரையைப் புதுத்தமிழ் என்ற சிற்றிதழில் பயன்படுத்திக் கொள்கிறோம்.. அனைவரும் அறிந்து கொள்வதற்காக... நன்றி...
ப.லோகேசு...
அ.ராமசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தக் கட்டுரையைத் தினசரி 10 பேருக்குக் குறையாமல் படிக்கிறார்கள். அது பற்றிய கருத்தை/ விமரிசனத்தை எனது இணைய முகவரியில் அனுப்பினால் மகிழ்வேன். இந்தக் கட்டுரையைப் போலவே சங்க இலக்கிய ஆய்வுகள், இலக்கண ஆய்வுகள், இடைக்கால இலக்கிய ஆய்வுகள், கோட்பாட்டு ஆய்வுகள் பற்றியும் எழுதும் திட்டம் உள்ளது. அதற்கு உதவியாக அந்தக் குறிப்புகள் /விமரிசனங்கள் பயன்படும்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் இணையதளத்திற்கு எனது பாராட்டுகள், உங்களை போன்ற இணையதளத்தின் சேவை தமிழுக்கு தற்போது தேவை, இந்நிலையில் நான் ஒன்றை குறிப்பிட்டு கூற ஆசை படுகிறேன். சங்க
இலக்கியங்களின் அறிய தொகுப்புகளை http://www.valaitamil.com/literature என்ற இணையதளம் தொகுத்து வைத்துள்ளது. அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்