சி.என். அண்ணாதுரைக்கு வயது நூறு: நாடகங்களை முன் வைத்து ஒரு மறுவாசிப்பு

இறப்புக்குப் பின்னும் எவ்வளவு காலம் நினைக்கப்படுகின்றனர் என்பதில் தான் மாமனிதர்களின் செயல்பாடுகள் அளக்கப்படுகின்றன. 1908,செப்டம்பர்,15 அன்று காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி தனது 61 ஆம் வயதில் மறைந்தார். மறைந்து 39 ஆண்டுகள் ஆன பின்பும் அவரது பிறந்த நாளை – நூற்றாண்டு விழாவாகத் தமிழகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அவரை நினைப்பது என்பதன் மூலம் அவரது செயல்பாடுகளும் வழிகாட்டல்களும் நினைக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம்.



ஒருவனது செயல்பாடுகளும் வழிகாட்டல்களும் கருத்தியல்களும் சில பத்தாண்டுகள் கழித்து நினைக்கப்படும் போது அப்படியே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதற்கில்லை.எந்தத்துறை சார்ந்து அந்த மனிதன் செயல்பட்டானோ அதனைத் திரும்பவும் மறுபரிசீலனை செய்து பொருத்தமற்ற கருத்தியல்களைத் தள்ளுவதும், பொருத்தமானவற்றை ஏற்பதும் சிந்திக்கும் கூட்டத்தின் இயல்பு. அப்படியொரு நோக்கம் மறு வாசிப்பில் அண்ணா என்ற கருத்தரங்க ஏற்பாட்டாளர்களுக்கு இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன். அந்த நோக்கத்திலேயே எனது விருப்பத் துறைகளில் ஒன்றான நாடகவியலில் அண்ணாவின் பங்களிப்பினை மறுவாசிப்புச் செய்ய முயன்றுள்ளேன்.இன்றைய தலைமுறைக்கு அண்ணாவைப் பற்றிய பிம்பமாக அவரது பேச்சாற்றலே அதிகம் அறிமுக மாகியிருக்கிறது. அதுவும் அரசியல் தலைவர் என்ற வகையினம் சார்ந்த பேச்சாளர் என்ற பிம்பமே இன்னும் தங்கி இருக்கிறது. அண்ணா ஒரு பேச்சாளர் மட்டும் தானா? அதுவும் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி அதன் தலைமைப் பொறுப்பில் இருந்து வழி நடத்துவதற்காகப் பேசிய பேச்சாளராக மட்டுமே அவரை இன்றைய தலைமுறைக்கும் இனிவரும் தலைமுறைக்கும் அறிமுகப் படுத்தும் வேலையைச் செய்தால் போதுமா? என்ற கேள்வியை அவரது நூற்றாண்டை ஒட்டி நாம் கேட்டுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அவரவர் குடும்பத்திற்குள் நினைக்கப்படுபவர்கள் சாதாரண மனிதர்கள். சாதாரண மனிதர்களின் நினைவுகளை அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே சில பத்தாண்டுகளுக்குப் பின் மறந்து போய் விடுகின்றனர். சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டவர்கள் வெற்றி பெற்ற மனிதர்கள். ஏதாவது ஒரு துறையில் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துவதன் மூலம் பலருக்கும் அறிமுகமாகும் வெற்றி பெற்ற மனிதர்கள் அந்தத்துறை சார்ந்த மனிதர்களால் தொடர்ந்து நினைக்கப்படுவர். ஒரு தேசம் அல்லது அந்தத் தேசத்தில் உள்ள பெருங்கூட்டம் ஒருவரது மரணத்திற்குப் பிறகும் நினைவில் வைத்துக் கொண்டாடப்படுகிறது என்றால், அவர்களைச் சாதாரண மனிதர் என்றோ, வெற்றி பெற்ற மனிதர் என்றோ குறுக்கி விட முடியாது. அவர்கள் மாமனிதர்கள். வெற்றி பெற்ற சாதாரண மனிதர்கள் என்ற எல்லையைத் தாண்டிப் பெருவெளியில் பயணம் செய்து பல பரிமாணங்களில் தன்னை விரித்துக் காட்டும் நிலையில் தான் அவர்கள் மாமனிதர்கள் ஆகிறார்கள்.
படைப்பு முகம்:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்த சி.என்.அண்ணா துரையை அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அண்ணா என்று அழைத்த போது வெளிப்பட்டது அன்பு. ஆனால் அறிஞர் என்றும் பேரறிஞர் என்றும் சொன்ன போது வெளிப்பட்டது வெறும் அன்பு மட்டும் அல்ல; அதையும் தாண்டிய மதிப்பும், மரியாதையும், ஆச்சரியமும் ஆகும். இன்று அவரது எழுத்துக்களை மொத்தமாகத் தொகுத்து வாசிக்கத் தொடங்கும் ஒருவருக்கும் அந்த ஆச்சரியமும் மரியாதையும் மதிப்பும் தோன்றாமல் போகாது. தனது இயக்கம் முன்னெடுக்க வேண்டிய கருத்துக்களைப் பேச்சாக மட்டுமல்லாமல், எழுத்தாகவும் பெருந்திரளான மக்களுக்கு எடுத்துச் சொன்னவர். தம்பிக்கு என விளித்துத் தன் கட்சிக்காரர்களுக்கு எழுதிய கடிதங்களும் கட்டுரைகளும் பல தொகுப்புகளாகக் கிடைக்கின்றன. கட்டுரை இலக்கியத்தின் பல்வேறு மாதிரி களை அந்தத் தொகுப்புகளில் வாசிக்க முடிகிறது.
கட்டுரை இலக்கியத்தைத் தாண்டி அவரது இலக்கியப் பணிகள் புதினங்கள், நாடகங்கள், திரைப்பட வசனங்கள் என விரிந்து கிடக்கின்றன. ஒரு தனிமனிதனாக எத்தனை மேடைகளில் பேச முடியுமோ அந்த இலக்கைத் தாண்டிப் பல மேடைகளில் பேசியவர் அண்ணா. அதே போல் தனி ஒரு எழுத்தாளராக எவ்வளவு எழுத முடியுமோ அதனைப் பல மடங்கு தாண்டியவர் அண்ணா. இந்தப் பரிமாணம் புதிய தலைமுறைக்குச் சொல்லப் பட வேண்டும். அண்ணா எழுதிய 113 சிறுகதைகளும் 6 நாவல்களும் 23 குறும்புதினங்களும் ஒரு நூறு கவிதைகளும் உள்ளன. இவையெல்லாம் அவரது நூற்றாண்டை ஒட்டி அச்சில் வந்துள்ளன.படிக்கக் கிடைக்கின்றன.
புதினம்,கட்டுரை,கவிதை என்ற படைப்பு வெளிகளைத் தாண்டி அண்ணாவின் படைப்பாளுமையை வெளிப்படுத்தும் இலக்கியவகை ஒன்று உண்டு. அதுதான் நாடகக் கலை. திரும்பவும் அண்ணாவின் நாடகங்கள் அனைத்தையும் மொத்தமாக வாசித்துப் பார்க்கும் போது ஆச்சரியமும் மலைப்பும் உண்டாக்கும் விதத்தில் அவரது வேலைகள் உள்ளன. அவர் எழுதிய நாடகங்களைப் பெரும் நாடகங்கள், குறுநாடகங்கள் என வகைப்படுத்திப் பிரித்துப் பேச முடியும்.
அரங்கியல் முகம்:
அண்ணாவின் நாடக முயற்சிகள், தமிழ் நாடக வரலாற்றில் ஒரு புதிய பாணியையும் முன் மாதிரியையும் உருவாக்கியவை. அதுவரை இருந்த இரண்டு முக்கியமான போக்குகளை மறுத்து மூன்றாவது போக்கொன்றைத் தமிழுக்கு அறிமுகம் செய்த பணியை அண்ணாவின் அரங்கியல் பயணம் செய்துள்ளது. சிறுவர் கூட்டத்திற்கு இசை, குரல் மற்றும் பேச்சுப் பயிற்சி அளித்து பாய்ஸ் கம்பெனிகளை நடத்திய பலர் புராணக் கதைகளை அப்படியே மேடை ஏற்றி வந்தனர். தமிழ் நாடகக் கலை வரலாற்றின் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்த சங்கரதாஸ் சுவாமிகளை முன்னோடியாகக் கொண்டு செயல்பட்ட இவர்களின் நாடகங்கள் சுவாமிகளின் பெயராலேயே நடத்தப் பெற்றன. மேற்கத்திய ஓபராய் பாணியைக் கொண்ட இசைநாடகங்கள் பாணியிலான இவற்றிலிருந்து மாறுபட்ட நாடகங்களை நகரவாசிகளுக்குத் தர விரும்பியவர்கள், ஐரோப்பிய நகைச்சுவை நாடகங்களை முன்மாதிரிகளாக்கி மேடை ஏற்றி உள்ளனர். பம்மல் சம்ப்ந்த முதலியார் இதன் முன்னோடியாக இருந்துள்ளார். பிரெஞ்சுக் காமெடி நாடகாசிரியர் மோலியரின் பல நாடகங்கள் தமிழில் தழுவல் நாடகங்களாக மேடை ஏறியதைப் புரிந்து கொள்ள சபாபதி என்ற பாத்திரத்தை மையப்படுத்தி எழுதி மேடையேற்றப்பட்ட நாடகப் பிரதிகள் சாட்சிகளாக இருக்கின்றன. தமிழ்ச் சினிமாக்களில் 1970 கள் வரை இடம் பெற்ற அப்பாவியான –புத்திக் கூர்மையற்ற வேலைக் காரப் பாத்திரங்கள் அவற்றின் நகல்களே. சந்திரபாபு, வி.கே.ராமசாமி, தங்கவேலு, நாகேஷ், சுருளிராஜன், செந்தில் வரை இத்தகைய பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இவ்விருவகை நிகழ்த்து முறைகளுமே சமகாலத்தை நேரடியாக விவாதிக்கும் தன்மையிலிருந்து விலகிச் செல்லும் நோக்கம் கொண்டவை. எனவே அண்ணா தனது நோக்கத்தை நிறைவேற்றும் நோக்கத்தோடு தனக்கான அரங்க வடிவத்தை ஐரோப்பிய மாதிரியிலிருந்து தேர்வு செய்துள்ளார்.

பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிட இயக்கம், கலை இலக்கிய வடிவங் களைக் கருத்துப் பரப்பும் கருவியாகவும், போர்க் கருவியாகவும், கேடய மாகவும் ஆக்கிக் கொண்ட இயக்கம் என்பதை நாம் அறிவோம். திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் சாதனங்களாகவும், பகுத்தறிவைப் பரப்பும் சாதனங்களாகவும் எல்லாக் கலை இலக்கிய வடிவங்களையும் பயன்படுத்தியது போலவே நாடகக் கலையையும் பயன்படுத்தியது என்பது அதன் வரலாற்றின் முக்கியமான பக்கங்கள். அந்தப் பக்கங்களைத் தனது நாடகப் பிரதிகளால் முழுமையாக்க முயன்றவர் அண்ணா என்பதை அவர் எழுதிய நாடகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கருத்தியல் களான ஆரிய எதிர்ப்பு, பகுத்தறிவு, திராவிட இனமேன்மை, கடவுள் மறுப்பு, சுயமரியாதை முதலான இயக்கக் கொள்கைகளை நாடகங்களின் உள்ளடக்கமாக்கி அண்ணா எழுதிய நாடகங்கள் எண்ணிக்கையில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

ஐரோப்பிய நாடகக் கோட்பாளர்கள் கூறும் ஆரம்பம், சிக்கல், பின்னல், உச்சம், வீழ்ச்சி அல்லது முடிவு நோக்கிய பயணம், முடிவு என்ற ஐந்தங்க வடிவத் தோடு அவர் எழுதிய நாடகங்கள் மொத்தம் 12. சந்திரோதயம் ,சிவாஜி கண்ட இந்து இராச்சியம், வேலைக்காரி, ஓர் இரவு, நீதிதேவன் மயக்கம், நல்லதம்பி, காதல்ஜோதி, சொர்க்கவாசல், பாவையின் பயணம் ,கண்ணாயிரத்தின் உலகம், ரொட்டித் துண்டு, இன்பஒளி முதலான 12 பெரும் நாடகங்களும் உள்ளடக்கத்தில் மட்டும் வேறுபட்டவை அல்ல; வடிவம் மற்றும் நிகழ்த்து முறை ஆகியவற்றிலும் புதிய புதியசோதனைகளைச் செய்து பார்த்த நாடகங்களாக உள்ளன.
ஆழ்ந்த விசாரணைகளை எழுப்பிப் பார்வையாளர்களைச் சிந்திக்கச் செய்யும் பெரும் நாடகங்களை எழுதியதோடு, உடனடியான ஒற்றை முடிவை நோக்கிப் பார்வையாளர்கள் இழுத்துச் செல்லும் குறுநாடகங்களையும் அவர் எழுதியுள்ளார். அவர் காலத்துச் சமூகத்தில் உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்சினைகளைக் கருவாக்கி அண்ணா எழுதிய 50 குறு நாடகங்கள் அன்றைய மேடைகளில் அரங்கேறிச் சமூக விழிப்புணர்வுகளை உண்டாக்கியுள்ளன. சமூக சீர்திருத்தம் என்ற பரிமாணத்தைத் தாண்டி அரசியல் மேடைகளில் விவாதிக்கத் தக்க கருத்துக்களையும், ஆட்சி மன்றங் களில் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகளையும் நாடகமேடைக் காட்சிகளாக்கி அவர் எழுதிய நாடகங்களாக அவரது குறுநாடகங்கள் உள்ளன.
அண்ணாவின் குறுநாடகங்களின் பரிமாணங்களையும் அவரது நாடக நோக்கங்களையும் அந்நாடகங்களுக்கு அவர் வைத்த தலைப்புகளே எளிமை யாக உணர்த்துகின்றன. காங்கிரஸ்வாளா, ஊரார் உரையாடல், ரோம் எரிகிறது, அவன் பித்தனா, கலப்பு மணம் , துரோகி கப்லான்,ஆற்றங் கரையிலே, பாபுலர் ஸ்டோர்,வழக்கு வாபஸ், நடந்ததுதான் நடக்கிறது, யார் கேட்க முடியும், இரக்கம் , ஓர் பயணம், அவினாசியார்காணவேண்டிய காட்சி, காசூரார் கருணை,ஆலை ஆறுமுகம், செல்லப்பிள்ளை, பாஜிராவ், அவர்கள் உள்ளம், மகுடாபிஷேகம்,சமங்கலி பூஜை,கட்டை விரல், மடமான்மீயம்,கல் சுமந்த கசடர், தர்மம் தலைகாக்கும்,பாங்கர் பணம் பெருத்தான், இளங்கோவின் சபதம், எத்தன் திருவிளையாடல், நன்கொடை,அவர்கள் பேசாதது, குறும்புக்காரன், ஒரே ஒரு வித்யாசம், ராகவாயணம்,பாங்காக் பங்கஜா ,மாங்காய் ஊறுகாய், சன்மானம், சீமான் சந்தர்ப்பவாதி, கண்ணீர்த்துளி ,காந்திஜெயந்தி,மொரார்ஜி விருந்து,சுயேச்சை யாகிவிடுவேன், பெரிய மனிதர்கள், கைலாயம் வேண்டாம், பாகீரதியின் பந்தயம், ஜனநாயக சர்வாதிகாரி, பாரதம் ஆடியபாதம், முதலாளித்துவ சமுதாயம், புதிய காங்கிரசார் ,அம்பாள் கடாட்சம், மங்களபுரி மைனர் என்று தலைப்பிட்டு எழுதிய ஓரங்க அல்லது குறுநாடகங்கள் சமகால அரசியல் விமரிசனங்கள் என்ற முதன்மை நோக்கத்தைக் கொண்டனவாக இருக்கின்றன.
அண்ணா தான் நாடகங்களை எழுதும் போது தனது சமகால அரசியல்வாதிகளும் எதிர்க் கருத்தாளர்களும் கவனிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே நாடகங்களை எழுதியுள்ளார். விவாதிப்பது, எதிர்க் கருத்தோடு முரண்படுவது, அதற்கு மாற்றாகத் தனது கருத்தை முன் வைத்து வாசகனை ஏற்கச் செய்வது என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்ட பத்தி எழுத்துக்களை இன்று ஆங்கிலப் பத்திரிகைகளிலும், ஒரு சில தமிழ்ப் பத்திரிகைகளிலும் காணலாம். அத்தகைய பத்தி எழுத்துக்களின் பொது இயல்பை நாடகம் என்னும் இலக்கியவகைக்குள் ஏற்றுவதின் மூலம் புதிய பாணி ஒன்றை அன்றே உருவாக்கியுள்ளார் அண்ணா. பத்தி எழுத்துக்களில் இடம் பெறும் சமகால விவாதங்கள் என்னும் காத்திரமான நோக்கத்தை நிறைவேற்ற நாடகவடிவத்தை அண்ணா பயன்படுத்தியுள்ளார் என்பதை அந்நாடகங்களை வாசிக்கும் ஒருவர் உணர முடியும்.
நாடகக் கலை மற்ற கலைகளிலிருந்து வேறுபட்டது. நாடகக்கலை ஒரு முப்பரிமாணக் கலை எனவும் உயிருள்ள கலை எனவும் சிறப்பாகக் குறிப் பிடப்படும் கலை. ஒரு ஓவியம் அகலம், உயரம் என இரண்டு பரிமாணங்களைத் தான் அதன் பார்வையாளர்களுக்குக் காட்டும். சிற்பக் கலையில் மூன்றாவது பரிமாணத்தை உணர முடியுமென்றாலும். உயிரற்ற ஒன்று சிற்பம். ஆனால் நாடகம் தான் உயிருள்ள ஓவியத்தையும் சிற்பத் தையும் மேடையில் நிறுத்தி நேரடியாகப் பார்வையாளனோடு பேசும் தன்மை கொண்டது. இதனை நன்குணர்ந்த அண்ணா நாடகக் கலைவடிவத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டுள்ளார்.

ஐரோப்பிய மறுமலர்ச்சியின் – அறிவொளிக்காலத் தாக்கத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்ட இலக்கியக் கொள்கை திராவிட இயக்கங்களின் பொதுவான இலக்கியக் கொள்கை. பாதிக்கப்படும் தனிமனிதர்களுக்கு ஆதரவு என்பதை விடவும் அம்மனிதர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டத்திற்கு ஆதரவு என்ற நிலைபாட்டைக் கொண்டது. பெரும்பாலும் வகைமாதிரிப் பாத்திரங்களையும், பிரதிநிதித்துவப் பாத்திரங்களையும் மையப்படுத்தி கலை இலக்கியங்களைப் படைக்கும் தன்மை கொண்டது. அண்ணாவின் வேலைக்காரி, ஓரிரவு, ஆகிய இரண்டு நாடகங்களும் இவ்வகைப் படைப்புகளுக்குச் சரியான உதாரணங்கள். பணம் படைத்தவர்களாலும், ஆணாதிக்கக் கருத்தியலாலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதைச் சொல்லும் வேலைக்காரியும் ஓரிரவு நாடகமும் நல்திறக் கட்டமைப்பு வடிவத்தில் எழுதப்பட்ட நேர்த்தியான நாடகங்கள். ஓரே இரவில் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்படும் ஓரிரவு நாடகம், ஒரே இரவு என்ற கால எல்லைக்குள் சமூகவிமரிசனத்தை முழுவதும் விசாரணைக்குள் கொண்டு வந்து விடும் கட்டமைப்பு கொண்ட நாடகம்.
வேலைக்காரியில் வரும் வேதாசல முதலியார் அன்றைய சமூகத்தில் இருந்த ஆதிக்கக் கருத்தியலின் வகை மாதிரிப் பாத்திரம் என்றால், அந்நாடகத்தில் இடம் பெறும்ஆனந்தனும், ஓரிரவில் இடம் பெற்றுள்ள டாக்டர் சேகரும் அக்காலகட்டத்தில் உருவாகி வந்த புதிய மறுமலர்ச்சி இயக்கக் கருத்தியலை உள்வாங்கிய பாத்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். புதிய சமூக மாற்றம் என்பது பெண்களின் நிலையில் ஏற்படும் மாற்றத்திலேயே கருக்கொள்ள முடியும் என்ற கருத்தோட்டம் கொண்ட திராவிட இயக்கப் படைப்பாளிகளின் முன்னோடி அண்ணா என்பதை அவரது பார்வதி பி.ஏ. போன்ற புதினங்கள் மட்டுமல்ல, பாவையின் பயணம், சந்திரோதயம் போன்ற நாடகங்களும் உணர்த்துகின்றன.

வகைமாதிரிப்பாத்திரங்களும், பிரதிநிதித்துவப் பாத்திரங்களும் பின்னர் வந்த ஐரோப்பிய நவீனத்துவப் போக்கினரால் விமரிசிக்கப் பட்டன என்ற போதும், அத்தகைய பாத்திரங்களைப் படைப்பது ஒரு கால கட்டத் தேவையாக இருந்தது என்பதை நாம் மறுத்து விட முடியாது. கறாரான விமரிசனக் கண் கொண்டு பார்த்தால், ஆண்டன் செகாவின் செர்ரித் தோட்டம் (Cherry Orchard), ஹென்றிக் இப்சனின் பொம்மை வீடு( Doll’s House) போன்ற உலகப் புகழ் பெற்ற நாடகங்களும் கூட வகைமாதிரிப் பாத்திரங்களைப் படைத்துக் காட்டிய நாடகங்கள் தான். அத்தகைய பாத்திரங்களை உருவாக்கியதன் காரணமாகவே ஒரு போக்கின் முன் மாதிரிகளாக ஆன நாடகங்களும் கூட. அந்த வரிசையில் அண்ணாவின் வேலைக்காரியையையும் ஓரிரவு நாடகத்தையும் வைத்து விமரிசிக்க முடியும் என்றே தோன்றுகின்றது.

நாடக எழுத்து எப்போதும் நிகழ்காலத்தைக் கவனப்படுத்தும் என்பது ஒரு பொதுத்தன்மை. ஒரு புராண காலத்து நிகழ்வையும் வரலாற்றுக் காலத்து நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் கூட நிகழ்காலப் பார்வையாளர்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்திச் சமகாலப் பொருத்தத்தைப் பேசும் சிறப்பு அக்கலைக்கு உண்டு. ஏனெனில் நாடகக் கலை அடிப்படையில் ஒரு நிகழ்த்துக்கலை. நிகழ்த்த வேண்டிய கலை. நிகழ்த்துதல் என்பதற்கு அடிப்படையாகத் தேவை நிகழ்காலப் பொருத்தம் என்பதை உணரும் நாடகக்காரன் எப்போதும் நவீன நாடகக்காரனாக விளங்க முடியும். உலகப் புகழ் பெற்ற நாடகக்காரர்கள் பலரும் வரலாற்றையும் தொன்மங்களையும் புராணங்களையும் சமகால விளக்கத்திற்கு உட்படுத்தியதன் மூலம் நவீன நாடகக்காரர்களாக விளங்குகின்றனர். வில்லியம் சேக்ஸ்பியர் சர்வதேச உதாரணம் என்றால் கிரிஷ் கர்னாட் இந்திய உதாரணம். தமிழ் உதாரணம் வேண்டும் என்றால் இந்திராபார்த்தசாரதியைச் சொல்ல முடியும். ஆனால் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் மற்றும் நீதிதேவன் மயக்கம் ஆகிய நாடகங்களை வாசித்தால் இந்திரா பார்த்தசாரதியின் இடம் கேள்விக் குள்ளாவது தவிர்க்க முடியாதது. அதிலும் நீதிதேவன் மயக்கம் நாடகம் பயம்படுத்தும் உத்திகள் பார்வையாளர்களைக் குதூகலத்துடன் பங்கேற்கச் செய்யும் உத்திகளாக உள்ளன. அதே போல் அந்த நாடகத்தின் உரையாடல் தர்க்கம் என்பது நாடக மொழியின் தர்க்கம் சார்ந்த அனைத்துச் சாத்தியங்களையும் தனதாக்கிக் கொண்ட மொழியாக இருக்கிறது என்பதை உறுதியாக உணர முடியும்.
அந்நாடகத்தைப் படிக்கும் போது டாக்டர் அம்பேத்கர் பிராமணியத்தின் வெற்றி என்ற தலை சிறந்த நூல் நினைவுக்கு வந்தது. அந்நூலை எழுத வைதீக சமயத்தின் அடிப்படை நூல்களைக் கற்றுத் தேற வேண்டிய அவசியத்தை அம்பேத்கர் உணர்ந்தவராக வெளிப்பட்டிருப்பார். அதே போல நீதி தேவன் மயக்கம் நாடகத்தை எழுதும் போது அண்ணா வைதீக சமயம் சார்ந்த இந்தியப் புராணங்களையும் தொன்மக் கதைகளையும் கற்றுத் தேற வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கக் கூடும். அவ்வாறு கற்றுத் தேறவில்லை என்றால் அந்நாடகத்திற்கான தர்க்க மொழியைக் கண்டறிந்து பயன்படுத்தியிருக்க முடியாது. நவீன நாடகக்காரர்கள் அதிகம் உச்சரிக்கும் மறுவிளக்கப் பிரதி(Interpretation of text) என்பதற்கு எடுத்துக்காட்டாக நீதிதேவன் மயக்கம் விளங்குகிறது என்பதை மேடையேற்றிப் பார்ப்பதன் மூலம் உணர முடியும்.

அண்ணாவின் நாடகம் சார்ந்த சிறப்புக்களைக் கட்டுரை எழுதிச் சொல்வதைவிட தமிழகத்தில் செயல்படும் இயல் இசை நாடக மன்றம் அவருக்கான நாடகவிழாக்களைத் தமிழக நகரங்களில் நடத்துவதோடு இந்தியப் பெருநகரங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதன் மூலமே அவரை இந்திய/ உலக நாடகக்காரர்கள் வரிசையில் நிறுத்திக் காட்ட முடியும். அத்தோடு இந்திய அளவில் செயல்படும் தேசிய நாடகப் பள்ளி போன்ற ஒரு நாடகப்பள்ளியை நிறுவி நாடகத்தமிழை வளர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதையும் சொல்ல விரும்புகின்றேன். இயல் இசை நாடகம் என்ற மூன்று தமிழும் வளர்க்கப்பட வேண்டும் என்ற ஆசை அண்ணாவின் விருப்பங்களாக இருந்துள்ளன. அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதே அவரது நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் பயன்களாக இருக்க முடியும்.
===================================================================================
தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம் 2008, டிசம்பர் 4-6 தேதிகளில் நடத்திய அண்ணா நூற்றாண்டு விழா நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்