ஊடக அதிகாரம்


தமிழர்களாகிய நாம் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாள் கொண்டாட்டங்களைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தொலைக்காட்சியைப் பெட்டியை ஆக்கிப் பல வருடங்களாகி விட்டன. தொலைக்காட்சிப் பெட்டிகளோ விழாநாள் மனிதர்களாகத் திரைப்பட நட்சத்திரங்களை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றன.
தீபாவளி என்றால் புத்தாடைகள் அணிந்து வேட்டுப் போடுகிறார்கள்; புத்தாண்டு என்றால் கேக் வெட்டிப் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஊட்டி விட்டுத் தாங்களும் சாப்பிடுகிறார்கள். பொங்கல் என்றால் பட்டு வேட்டி கட்டிக் கரும்பு தின்கிறார்கள்; முடிந்தால் பக்கத்திலிருக்கும் கிராமத்திற்கும் சென்று வயல் வெளிகளைச் சுத்தியும் வருகிறார்கள்.
இப்படிச் செய்வது தங்களது ரசிகர்கள் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு என நாம் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த அன்பின் வெளிப்பாட்டுக்குப் பின்னால் தங்கள் மீது முதல் கட்டி வியாபாரத்தை நடத்த உத்தேசித்த முதலாளிகளுக்கு உதவும் கருணையும் கடமையும் கூட இருக்கின்றன. சிறப்பு நாள் நிகழ்ச்சிகள் என்பது கொஞ்சங் கொஞ்சமாக வியாபாரத்தை விருத்தி செய்யும் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் உணரக்கூடும்.
நடந்து முடிந்த பொங்கல் அன்று ஒளிபரப்பப் பட்ட சிறப்பு நாள் நிகழ்ச்சிகளை நினைத்துக் கொண்டால் இது புரிய வரலாம். இந்தப் பொங்கலுக்குத் திரைக்கு வந்துள்ள வில்லு படத்தின் கதாநாயகனாகிய விஜய் ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் வந்து கொண்டிருந்தார். அவர் மட்டும் அல்ல. அதன் நாயகி நயன்தாராவும், காமெடி நடிகர் வடிவேலுவும் கூட அன்றைய நிகழ்ச்சிகளை நிறைத்துக் கொண்டிருந்ததைக் கவனித் திருக்கலாம். நடிகர்களோடு அந்தப் படத்தின் இயக்குநர் பிரபுதேவாவும் தொலைக் காட்சியில் தோன்றி இந்தப் படத்தின் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
வில்லு படத்தோடு போட்டி போட வந்துள்ள படிக்காதவன் படத்தின் நாயகன் தனுஷும் அவரது மனைவி சௌந்தர்யாவும் பட்டாடைகள் சகிதம் தோன்றி பொங்கல் சிறப்புகளையும் குடும்ப வாழ்க்கையின் ரகசியங்களையும் சொல்லிக் கொண்டிருக்கும் அதே வேளையில் படிக்காதவன் படத்தின் நாயகி தமன்னா படிக்காதவனின் காதலி என்ற தலைப்பில் தோன்றி பொங்கல் பண்டிகையின் பெருமைகளோடு படிக்காதவன் படத்தின் பெருமைகளையும் சேர்த்துச் சொல்லிப் படத்தைப் பார்க்கும்படி தூண்டிக் கொண்டிருந்தார்.
ஒரு படத்தில் நடித்த நடிகர்களும் நடிகைகளும் சொல்லும் காரணங்களையும் சிறப்புக்களையும் ஏற்று ரசிகர்கள் அந்தச் சினிமாவைப் பார்த்து விடுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதுவும் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாள் நிகழ்ச்சிகளில் தோன்றிப் பேசும் நட்சத்திரங்களின் வார்த்தை களுக்கு விசேடமான முக்கியத்துவம் எதையும் தருவதில்லை என்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. நல்ல உதாரணமாக ரஜினிகாந்தே இருக்கிறார். அவரது திரைப்பட வாழ்க்கையில் பெரும் நெருக்கடிகளை உருவாக்கிய பாபா படமும் குசேலன் படமும் படம் வருவதற்கு முன்பும் படம் வெளி வந்த பின்பும் அதில் பங்கேற்ற நடிகர்கள், தொழில் நுட்பத்துறையினர், இயக்குநர் எனப் பலரும் பங்கேற்றுத் தொலைக்காட்சிகளை நிறைத்தார்கள். ஆனால் அவ்விரண்டு படங்களும் நினைத்த அளவுக்கு வசூல் வெற்றியை அளிக்கவில்லை.
இப்படிச் சொல்வதால் திரைப்பட ஊடகத்தின் வெற்றிக்கு அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் உதவாது என்று சொல்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். திரும்பத் திரும்பக் காட்டப்படுவதன் வாயிலாக ஏதொன்றையும் பார்வையாளனின் கண்ணின் வழியாக மனத்திற்குள் அனுப்பி விட முடியும் என்பது காட்சி வழி ஊடகவியலாளர்களின் கணிப்பு. காட்டப்படும் காட்சியோடு சேர்ந்து அனுப்பப்படும் உணர்ச்சியின் தாக்கம் பார்வையாளனை நிலை குலைய வைப்பதாக இருக்கும் பட்சத்தில் அந்தக் காட்சியைப் பார்வையாளன் புறந்தள்ளி விட முடியாது என ஊடகத்திறனாய்வாளர்கள் சொல்கின்றனர்.
ஊடகத்திறனாய்வாளர்களின் இந்தக் கருத்தியலை நிருபிக்கும் சோதனையைத் தமிழகத்தின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான சன் குழுமம் தொடர்ந்து செய்து வருகிறது. மனிதர்களின் பொழுது போக்கு நேரத்திற்கான திரைப்படம் என்னும் பொருளின் உள்ளடக்கமோ, உத்திகளோ முக்கியமில்லை; அதில் பங்கேற்கும் நடிக நடிகையர்களின் வசீகரமும் பரவலான அறிமுகமும் கூட இரண்டாம் பட்சம் தான். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துச் சினிமாவைக் கலையின் பக்கத்தில் நிறுத்தி விட முயலும் இயக்குநரின் பங்களுப்பும் கூடத் தேவையில்லை. இவை எல்லாம் இல்லையென்றாலும் ஒரு சினிமாவை வியாபாரரீதியாக வெற்றி அடையச் செய்ய முடியும் என்பதை சன் குழுமம் நிரூபித்துள்ளது.
தயாரிப்பு நிலையில் கவனிப்பாரற்றுக் கிடந்த மூன்று படங்களை வாங்கி வெளியிட்டு மூன்று படங்களையும் வியாபார வெற்றிப் பொருள்களாக ஆக்கியுள்ளது சன் குழுமம். நாக்கமுக்க.. நாக்கமுக்க.. என்ற வார்த்தையை உருட்டி விளையாடும் ஒரு பாடலையும் அதற்கேற்ப ஆடப்படும் குத்தாட்டத்தையும் மூலதனமாகக் கொண்டு வெளியிடப்பட்ட காதலில் விழுந்தேன் படம் தயாரிப்புச் செலவினைக் கடந்து மூன்று நான்கு மடங்கு லாபம் ஈட்டிய படமாக ஆகி விட்டது. அப்படி ஆனதற்கு சன் குழுமத்தின் சன், கே, சன் மியூசிக் அலைவரிசைகளில் ஒரு நாளில் இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் ஒரு நூறு தடவையாவது அந்தப் பாடலை ஒளிபரப்பு செய்தது ஒரு முக்கியமான காரணம் எனலாம். தொலைக் காட்சி அலைவரிசைகள் ஒளிபரப்பு செய்யும் அதே நேரத்தில் அவர்களின் அச்சு ஊடகமான குங்குமம் அந்தப் படத்தைப் பற்றி விதம் விதமான செய்திகளை அச்சிட்டுக் கொண்டிருந்தன.
இந்த உத்தியை அடுத்து அவர்கள் வாங்கி வெளியிட்ட தெனாவட்டு, திண்டுக்கல் சாரதி படங்களுக்கும் நீட்டித்துக் கொண்டிருக்கிறார்கள் .கடந்த ஆறு மாதங்களுக்குள் இந்த மூன்று படங்களையும் வெற்றி பெறச் செய்ததில் அப்படங்களின் கலைத்தன்மைகளுக்கும் திரைப்பட நுட்பங்களுக்கும் எந்தவிதப் பங்கும் இல்லை என்பதை அப்படங்களைப் பார்த்தவர்கள் உறுதியாகக் கூறுவார்கள். சன் குழுமத்தின் முழு நோக்கமும் முதன்மையான நோக்கமும் வியாபார வெற்றி மட்டும் தான் என்பதை இப்படங்களைச் சன் குழும ஊடகங்கள் முன் நிறுத்தும் முறையிலிருந்து அறிந்து கொள்ளலாம். சாதாரணமான வியாபாரப் படங்களுக்குரிய செய்நேர்த்தியோ, கதைசொல்லலோ, கருத்தோ இல்லாமல் எடுக்கப்பட்ட இப்படங்கள் ஏறத்தாழ திரைப்படக் கலையின் பலத்தை நிராகரிக்கும் நோக்கம் கொண்டனவாக இருக்கின்றன. ஆனால் வியாபார ரீதியாக வெற்றியும் பெற்றுள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இந்த முரண் தான் ஊடக அதிகாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருக்கின்றன. திரும்பத் திரும்பச் சொல்லப்படும் செய்தியும் காட்டப்படும் காட்சியும் அதன் தொனி மற்றும் உணர்ச்சிகள் காரணமாகப் பார்வையாளனிடம் எதிர்பார்ப்பை உண்டு பண்ணுகின்றன. காட்டப்படும் காட்சிக்கு முன்னும் பின்னும் எத்தகைய காட்சிகள் இருக்கக் கூடும் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணும் விதமாக ஒரு திரைப்படத்தின் ஒரு துண்டுப் பகுதி காட்டப்படும் போது, அதன் முழுமையைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டப்படுகிறது. எல்லா வகைப் பார்வையாளர்களையும் அவை ஈர்ப்பதில்லை என்ற போதிலும், அவ்வகைக் காட்சி களின் பால் ஈர்ப்புக் கொள்ளும் இலக்குப் பார்வையாளர்களை ஈர்க்கவே செய்யும். இலக்குப் பார்வையாளர்களைக் குறிவைப்பதுதான் ஊடக அதிகாரத்தின் தனித்தன்மை.
தொலைக்காட்சி அலைவரிசை என்ற எல்லைக்குள் தங்கள் வியாபார விதிகளை முழுமையாகப் பின்பற்றித் தங்கள் வலைப்பின்னலின் விரிவாக்கத்தை உறுதி செய்த சன் குழுமம், தனது அடுத்த கட்டப் பாய்ச்சலைத் தொடங்கத் திரைப்படத்தின் பக்கம் திரும்பி யுள்ளது என்பதே இந்த மூன்று படங்களின் வெளியீடுகள். அடுத்து ஷங்கர், ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் எந்திரன் படமும் சன் குழும வெளியீடாகவே தமிழர்களுக்குக் கிடைக்க உள்ளன.
தமிழில் திரைப்படத்தயாரிப்பும் வெளியீடும் வணிக சினிமா என்ற எல்லைக்குள் இருக்கின்றன. அதையே சன் குழுமமும் செய்கிறது. இதில் நாம் கேள்வி கேட்டுப் புரிந்து கொள்ள என்ன இருக்கிறது என்று தோன்றலாம். சன் குழுமமும், அதன் துணை நிறுவனங்களான சன் பிக்சர்ஸும் வெறும் வியாபார நிறுவனங்கள் என்ற எல்லைக்குள் இருக்கின்றன என்று சொல்வது முழுமையான உண்மை அல்ல. தற்காலிக முரண்பாடாகச் சன் குழுமத்தோடு போட்டியிடும் வகையில் உருவான உதயநிதி ஸ்டாலினின் படத் தயாரிப்பு நிறுவனமும் தயாநிதி அழகிரியின் படத்தயாரிப்பு நிறுவனமும் கூட வெறும் வியாபார சினிமா நிறுவனங்கள் என்ற வகைப்பாட்டிற்குள் அடங்கி விடக் கூடியன என்று நம்புவது இயலாத காரியம்.
இந்நிறுவனங்கள் அனைத்தும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆசியோடு தொடங்கப்பட்ட நிறுவனங்கள். தாங்கள் தமிழ்நாட்டின் பெரும்பணக்காரர்களாக ஆவதற்கு மட்டுமே தங்கள் தாத்தா ஆசி வழங்கியதாகக் கருதினால் அது பெரும் அபத்தமாகவே இருக்கக் கூடும். தமிழ்ச் சினிமாவின் திருப்புமுனைப் படமான பராசக்தியைத் தந்த கலைஞரின் வாரிசுகள் காதலில் விழுந்தேன் படத்தையும், தெனாவட்டு படத்தையும் தருகிறார்கள் என்பதை நினைத்தே பார்க்க முடியவில்லை.
மாறன் சகோதரர்களும் அழகிரி மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் குமாரர்களும் கலைஞரின் குடும்ப வாரிசுகள் மட்டும் அல்ல. தமிழ்ச் சமுதாயத்தை மேம்படுத்தித் தனி அடையாளம் கொண்ட சமூகமாக, சமத்துவம் உலாவும் பூங்காவாக, சமூக நீதி காக்கப்படும் மாநிலமாகத் தமிழகத்தை ஆக்கிக் காட்டப் பாடுபடுவதற்கு உறுதி பூண்ட திராவிட இயக்கத்தின் வாரிசுகளும் என்பதை எப்படி மறந்து விட்டார்கள் என்பதுதான் ஆச்சரியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்