அரங்கியல் பேராசிரியர்கள் இருவர்:நாடகக் கல்வி: கிழக்கும் மேற்கும்

இன்று, நாடகக் கலை ஒரு கல்வித்துறைசார் படிப்பு. நாடகக்கலை மட்டுமல்ல; நடனம்,இசை, ஓவியம்,சிற்பம்,திரைப்படம் எனக் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும் நிகழ்த்துக்கலைகளும், நுண்கலை களும், நிலைக் கலைகளும் கூடக் கல்வித்துறைசார் படிப்புகளாகி இருக்கின்றன. பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பட்டப்படிப்பாகவும் பட்டமேற்படிப்பு களாகவும் இவை யெல்லாம் கற்றுத் தரப்பட்டு பட்டங்கள் தரப்படுகின்றன. இப்படிச் சொல்லுவதால் இவையெல்லாம் இப்பொழுதுதான் கற்றுத் தரப்படுகின்றன என்றோ, அதற்கு முன்பு அத்தகைய கல்வி இல்லை என்றோ அர்த்தமில்லை. சுதந்திரத்திற்கு முன்னும்கூட இக்கலைகளைக் கற்றுத்தருபவர்களும் கற்றுக் கொள்பவர்களும் இருந்தார்கள். கல்வி நிறுவனங்களும் இருந்தன ; ஆனால் வேறுவிதமாக இருந்தன. குரு-சிஷ்யப்பாரம்பரியத்தில் ஒருசில குழுக்களுக் குள்ளேயே / சாதிகளுக்குள்ளேயே கற்றுக் கொள்ளப்பட்டன.

சுதந்திர இந்தியாவில் கலைகள் பட்டங்கள் தரும் கல்வித்துறைசார் படிப்பாக ஆனதற்குத் தெளிவான நோக்கங்களும் இலக்குகளும் உண்டு. எதிர்கால இந்தியாவைப் பற்றித் தனக்கெனத் தனித்துவமான பார்வைகளையும் இலக்கு களையும் கொண்டிருந்த பண்டித ஜவகர்லால் நேருவின் பண்பாட்டுக் கொள்கை இதன் பின்னணியில் இருந்தது. எல்லாவகையான படிப்புகளும் ஜனநாயகப் படுத்தப்படவேண்டும் என்ற வகையில், அவர்காலத்தில் கலை களைப் பற்றிய படிப்புக்குள்ளும் மேற்கத்தியக் கற்பித்தல் முறை அறிமுகப் படுத்தப்பட்டது. அதன்வழிப் பட்டம் பெற்ற பலரும் அரசுத் துறைகளிலும் தனியார் துறைகளிலும் தங்கள் கலைசார்ந்த பணிகளை விருப்பத்தோடும் விருப்பமின்றியும் செய்து வருகின்றனர்.சிலர் தனித்துவமான கலைஞர்களாக உலா வருகின்றனர். இன்னும் சிலர் வெகுமக்கள் ஊடகங்களின் தேவைக்கான சரக்குகளை உற்பத்தி செய்யும் பணியாளர்களாகவும் தொழில்நுட்ப வல்லுநர் களாகவும் வெளிப்பட்டுள்ளனர். கலைகளைப் பல்கலைக் கழகப் பட்டங்களாக ஆக்குவதில் இவ்வாறு பல்வேறு நன்மைகளும் உண்டு;தீமைகளும் உண்டு. என்றாலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் ஒரு துறையாக கலை ஆகின்ற பொழுது அது அனைவரும் கற்கக் கூடிய ஒன்றாக ஆகிவிடுகின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ராமானுஜமும் மௌனகுருவும்

பேராசிரியர் ராமானுஜம், பேராசிரியர் மௌனகுரு- இந்த இரண்டு பெயர்களும் தமிழில் நாடகக்கலை சார்ந்த செயல்பாட்டாளர்களின் மனதில் தங்கிவிட்ட பெயர்கள்.கல்விப்புலங்களுள் ஒன்றாக நாடகக்கலை ஆனபின்பு, தன்விருப்பத் தோடு இப்புலத்திற்குள் நுழைந்த தமிழ் நாடகக் கலை மாணவன் இவ்விரு பெயர்களையும் பலமுறை உச்சரித்திருக்ககூடும். நாடகக்கலை சார்ந்து ஓய்வினை அறியாத பேரா.சே.ராமானுஜம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பேரா.மௌனகுரு இலங்கையின் கல்விச்சூழல் காரணமாகத் தனது அறுபதாவது வயதிற்குப் பின்னரும் தான் பணியாற்றிய மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தின் நுண்கலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

இவ்விரு பேராசிரியர்களையும் இந்த நேரத்தில் நினைவுகூர ஒரு காரணமும் உள்ளது.அவர்களது எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு நூல்களாகக் கிடைக்கின்றன என்பதுதான் அந்தக்காரணம்.தனது எழுத்தின் படிகளைச் சேர்த்து வைப்பதில் அதிக அக்கறை காட்டிக் கொள்ளாதவர் பேராசிரியர் ராமானுஜம். நாடகக் கலையின் மாணவன், அதில் பெறும் செய்முறைப் பயிற்சி சார்ந்த கல்வியின் மூலமே வல்லுநனாக ஆக முடியும் என்பது அவரது நம்பிக்கை; அந்த நம்பிக்கை முழுமையான உண்மையும்கூட. செய்முறைப்பயிற்சி பெற்றுக் கொள்ளாத நாடகக்காரன். நாடகக்காரனாகச் சாதனைகள் எதுவும் செய்துவிட முடியாது. தொடர்ந்த பயிற்சிகள் என்பதும், பயிற்சிகளைப் பயன்படுத்தி தயாரிப்புப் பணிகளைச் செய்வது என்பதும்தான் நாடகக்கலையின் கற்றல் முறையும்கூட.

டெல்லி, தேசிய நாடகப்பள்ளியின் தலைசிறந்த இயக்குநரும் நாடகத் துறையில் சர்வதேச அளவில் அறியப் பட்டவருமான இப்ராகீம் அல்ஹாசியின் மாணவர் சே.ராமானுஜம். அவரது படிப்பையும் பயிற்சியையும் தொடக்கத்தில் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.அவர்கற்றுத் திரும்பிய வுடனே அவரைப் பயன்படுத்திக் கொள்ளும்படியான கல்விச்சூழல் தமிழ் நாட்டில் இல்லாமல் இருந்தது என்று கூடச் சொல்லலாம். கேரளாவின் திருச்சூர் நாடகப்பள்ளியில் பயிற்றுநராக இருந்த ராமானுஜத்தை அழைத்து வந்து தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையின் தலைவராக்கியவர் அதன் முதல் மற்றும் முதன்மையான துணைவேந்தர் பேராசிரியர் வ.அய்.சுப்பிர மணியம்.
பேரா.சே. ராமானுஜம் நாடகத்துறையின் பேராசிரியராகப் பணியாற்றினாலும் அவரது விருப்பங்கள் அதிகமும் எழுத்து சார்ந்தன அல்ல. பயிற்சிகள், நாடகத் தயாரிப்புகள் சார்ந்தனவே. தனியான பட்டறைகளாகவும் நாடகத் தயாரிப்புக் கான பட்டறைகளாகவும் அவர் முன்னின்று நடத்திய பட்டறைகள் பல. அவற்றிலிருந்து உருவான நாடக நடிகர்களும் நாடகக்கலைசார்ந்த தொழில்நுட்பப் பணியாளர்களும் பலருண்டு. அப்பட்டறைகளில் அவர் பயிற்று விக்கும் முறைகள் அனைத்தும் எழுத்துப் பதிவுகளாகவும் ஒளிநாடாக் களாகவும் ஆக்கப்பட வேண்டியவை. பின்வரும் சந்ததியினருக்கு பேரா. சே. ராமானுஜத்தின் பங்களிப்புக் களை அப்படித்தான் அறிமுகப்படுத்த வேண்டும். அதை யார் செய்யப்போகிறார்களோ தெரியவில்லை. பேராசிரியர் ராமானு ஜத்தின் எழுத்துசார்ந்த பங்களிப்பைத்தொகுத்து தமிழர்களுக்கு அறிமுகப் படுத்தும் பணியை நாடகக்காரரும் பத்திரிகையாளருமான சி.அண்ணாமலை செம்மையாகவே செய்துள்ளார். ராமானுஜத்தின் நாடகங்கள் தனியாகவும், அவரது கட்டுரைகள் தனியாகவும் தொகுக்கப்பட்டு இரண்டு நூல்களாக காவ்யா பதிப்பக வெளியீடுகளாக வந்துள்ளன. அதற்காக சி.அண்ணாமலையும் காவ்யா பதிப்பகத்தாரும் பாராட்டப்படவேண்டியவர்கள்.

ராமானுஜத்தின் எழுத்துக்கள் எழுதவேண்டும் என்ற வேட்கையுடன் எழுதப் பட்டன அல்ல. தனது செய்முறைப் பயிற்சி சார்ந்த கற்பித்தல் முறையின் போக்கில் சில தேவைகளுக்காக எழுதப்பட்டவைகளே அவரது நாடகப்பிரதிகள். அவை வாசிப்பில் தருகின்ற அனுபவங்களையும் அர்த்தங் களையும்விட மேடையேற்றத்தில் தருகின்ற அர்த்தங்களும் அனுபவங்களும் கூடுதலானவை. அவரது கட்டுரைகளும்கூட தனித்த ஓர்மையோடு விவாதங் களையும் விமரிசனங்களையும் முன்வைக்கும் தன்மையன அல்ல. அவ்வப் போது நாடகத்துறைசார்ந்த நூல்களுக்கு எழுதப்பட்ட முன்னுரைகளும், சில நாடக நிகழ்வுகளைப் பற்றிய குறிப்புகளும் தான்.இவை நாடகத்துறைக்கு வெளியேயிருந்து அதனை அறிந்து கொள்ள முயலும் ஒரு வாசகனுக்கு எவ்வளவு தூரம் பயன்படும் என்று சொல்ல முடியாது.ஆனால் நாடகத் துறைசார்ந்த கல்வியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இவற்றின் பயன் திறமானவை என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

#########################################################

பேராசிரியர் மௌனகுருவின் கட்டுரைகள் அரங்கியல் என்னும் தலைப்பில் ஒரு நூலாகவும் அவரது மணிவிழா மலராக-அவரது எழுத்துக்களும் அவரைப் பற்றிய எழுத்துக்களுமாக- ஒரு நூலும் வெளிவந்துள்ளது. மணிவிழா மலரில் இலங்கையைச்சேர்ந்த கல்வியாளர்கள் பலரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அக்கட்டுரைகள் தமிழகக் கல்வியாளர்களுக்கு புலம்சார்ந்த கட்டுரை களின் நுண்மான் நுழைபுலம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைக் காட்டக் கூடியன.அத்துடன் பேராசிரியர் மௌனகுருவின் கல்விப்பணி களையும் அரங்கியல் பணிகளையும் விரிவாகக் கூறுகின்றன.

தமிழ் அரங்கியல் சார்ந்த விவாதங்களில் ஈடுபடுகிறவர்களுக்கும் அவற்றைப் பயிற்சி செய்து பார்க்கத் துடிக்கும் இளம் மாணவர்களுக்கும் பேரா.மௌன குருவின் அரங்கியல் என்னும் நூல் மிகமிக உதவிகரமாக விளங்கக் கூடியது. மூன்று பகுதிகளையுடைய அந்நூலில் முதல் இரண்டு பகுதிகள் தமிழக அரங்கியல் மாணவர்களும் கற்றுக் கொள்ளவேண்டிய பகுதிகள்.சர்வதேச அளவில் அரங்கவியலில் காணப்படும் சொல்லாடல்களை மிகத்தெளிவாகவும் சுருக்க மாகவும் விளக்கும் கட்டுரைகள் முதல் பகுதியில் இடம் பெற்றுள்ளன. நாடகக் கலையின் பயன்கள், நடிப்பு முறைகள் பற்றிய எண்ணக்கருக்கள், முழுமை அரங்கு, ஐரோப்பிய நவீன நாடக அரங்கும் ஆசிய நாடக அரங்கும், சிறுவர் களுக்கான நாடகங்களும் ஆசிரியர்களும் என்ற ஐந்து கட்டுரைகளும் அரங்கியல் அடிப்படைகளைத் தமிழில் சொல்லும் கட்டுரைகள். இத்தகைய கட்டுரைகள் தமிழில் இதுவரை எழுதப்படவில்லை என்பதுதான் உண்மை. இரண்டாவது பகுதியில் தமிழ்ப் பாரம்பரிய அரங்குகளைப் பற்றிய ஒரு வரலாற்றுத் தொகுப்பும் பின் நவீனத்துவப் பின்னணியில் தமிழ்ப் பாரம்பரியக் கூத்தைப் புரிந்து கொள்ளவேண்டிய முறையியலும் பேசப்படுகின்றன. இக்கட்டுரைகளில் காணப்படும் முறையியலும் தெளிவும் தமிழக அரங்கியலாளர்களிடம் காணப்படாத ஒன்று.

வரலாற்றைச் சமகாலத்தேவைகளின் பின்னணியில் புரிந்து கொள்ள இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர்களிடம் தான் தமிழகம் பாடம் கேட்க வேண்டியுள்ளது. இலக்கியத்தளத்தில் இத்தகைய பாடங்களைப் பேராசிரியர்கள் க. கைலாசபதியும் கா.சிவத்தம்பியும் ஏற்கனவே நடத்தியுள்ளனர் என்பதைத் தமிழ்க் கல்வியுலகம் நன்கு அறியும். இத்தகைய பாடங்கள் நான் முன்பே சொன்னபடி மேற்கையும் கிழக்கையும் சரியாகப் புரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.தமிழகக் கல்வியாளர்கள் பலருக்கு மேற்கின் விமரிசன முறையும் கைவரப்பெறவில்லை. மரபின் சமகாலத் தேவையையும் சொல்ல இயலவில்லை. மரபு என்பதற்காக போற்றுவது மட்டுமே சாத்தியமாகிறது.

மூன்றாவது பகுதி இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களின் மரபுக்கலைகளின் நிகழ்கால நிலைமைகள் குறித்து எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்.ஈழம், மட்டக்களப்பு, பாண்டிருப்பு என அதற்குள்ளும் இருக்கும் பிரதேச வேறுபாடு களை அடையாளப்படுத்தி அரங்கியல் நிகழ்வுகளை ஆய்வு செய்துள்ளார் மௌனகுரு. மொத்தத்தில் இந்த நூல் தமிழ் அரங்கியல்/ நாடகக் கல்விக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கக் கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

  #######################################################

பேரா.ராமானுஜமும் பேரா.மௌனகுருவும் தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நாடகக் காரர்கள். ஏனென்றால் தமிழர்கள் அனைவரும் நாடகக் கலையின் பார்வையாளர்களாக ஆக்கப்படவேண்டும் என்பது அல்ல அவர்கள் விருப்பம். நாடகக் கலையின் மூலம் தமிழர்கள் இந்த உலகத்தினை- சமகால வாழ்வைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பது அவர்கள் இருவரது விருப்பங்கள். அதற்காகத் தமிழர்கள் அனைவருக்கும் நாடகக்கலையைக் கற்பிக்கும் விருப்பம் கொண்ட பேராசிரியர்கள். அதிலும் மேற்கையும் கிழக்கையும் மிகச் சரியாகப் புரிந்து கொண்ட பேராசிரியர்கள். தங்கள் கற்பித்தல் முறையில் இந்திய /கீழ்த்திசைப் பாரம்பரியத்தின் எல்லைகளை எங்கே நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்கும் மேற்கின் விமரிசன அறிவை எங்கெல்லாம் நமதாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்கும் அவர்களிடம் தெளிவான பார்வைகள் உண்டு.

வார்த்தை சார்ந்த மொழியும் உடல் மொழியும் அரங்கியலின் பிறகூறுகளுடன் இணைந்து உருவாக்கும் மொழியே மேடை மொழி. அரங்கியல் செயல்பாடுகளின் அடிப்படையான இதில் தெளிவு இல்லாத நிலையில் எந்த இயக்குநரும் நல்ல படைப்புகளைத் தந்து விடமுடியாது.இந்தத் தெளிவுகள் கைவரப்பெறாத சிலபேர் தங்களின் நாடகங்கள் என்ன நோக்கத்தொடு மேடையேறுகின்றன என்பதைக் கோடி காட்டக் கூட முடியாமல் தவிக்கின்றனர். அவர்களது மேடையேற்றங்கள் பார்வையாளர்களிடம் தொடர்பு கொள்ளத் தேவையான தொடர்பு மொழி எவையென்பதையே உறுதிசெய்து கொள்ளாமல் தவிக்கின்றன. வார்த்தை சார்ந்த மொழியின்வழி பார்வையாளனுடன் உறவு கொள்வதா..? உடல்மொழியால் தொடர்பு கொள்வதா என்ற தெளிவுகள் இல்லாத நிலையில்.. தொடர்புநிலை தொடர்ந்து அறுபட்டுக்கொண்டே இருப்பதே இத்தகைய அரங்கியல் செயல்பாடுகளின் பாணியாக இருக்கிறது. இதுதான் இன்று தமிழில் நாடகம் செய்ய-நவீன நாடகங்கள் செய்ய விரும்பும் பலரது பிரச்சினையாக இருக்கிறது. அது பற்றிப் பின்னொரு முறை பேசலாம். இப்போதைக்கு பேராசிரியர்கள் ராமானுஜம், மௌனகுரு ஆகியோரது எழுத்துக்களிலிருந்து பாடங்கற்றுக் கொள்ளலாம்.
##################################################### #############

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்