தி.ஜானகிராமனின் நாடகங்கள்


தமிழின் புனைகதைப் பரப்பிற்குத் தனது கதை நிகழ்வுப் பரப்பாலும், அப்பரப்பில் உலவிய விதம் விதமான கதாபாத்திரங்களாலும்-குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்களின் புறவெளியின் நிலைபாட்டையும் மனத்தின் சுழற்சி யையும் எழுதிக்காட்டியதின் மூலம்-புதிய வீச்சையும் அலையையும் உருவாக்கித் தந்தவர் தி.ஜானகிராமன். நவீனத்தமிழ் இலக்கியப் பரப்பில் தனது சிறுகதைகளாலும் நாவல்களாலும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள தி.ஜானகிராமன் நாடகங்களையும் எழுதியுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்திருந்த போதிலும் அவை அதிகம் கவனம் பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.தி.ஜானகிராமன் மட்டுமே நாடகக் காரராகக் கவனிக்கப்படவில்லை என்று யாரும் கருதி விடவேண்டியதில்லை.
நவீனத்தமிழ் இலக்கியத்திற்கு முக்கியமான பங்களிப்பு செய்துள்ள மணிக்கொடி எழுத்தாளர்களில் பலரும் நாடகங்கள் எழுதியுள்ளனர்.பின்னர் அதன் தொடர்ச்சியாக சி. சு. செல்லப்பா நடத்திய எழுத்துப் பத்திரிகையிலும் அதன் எழுத்தாளர்கள் சிலர் நாடகங்கள் எழுதியுள்ளனர். சிலர் பத்திரிகையில் எழுதியதோடல்லாமல் அக்காலத்தில் நாடகங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த நாடகக் குழுக்களுக்காகவும் நாடகங்கள் எழுதியுள்ளனர். அவ்வாறு எழுதப்பட்ட நாடகங்கள் பலவும் முதலில் மேடையேற்றம் பெற்றபின் அச்சு வடிவம் பெற்றுள்ளன. இக்கட்டுரை தி.ஜானகிராமனின் நாடகங்களை மதிப்பீடு செய்யும் விதமாக அமைகிறது.

நாடகம் எழுத வந்தது  

தி.ஜானகிராமன் எழுதியதாக நாலுவேலி நிலம், வடிவேலு வாத்தியார் என இரண்டு நாடகங்கள் கிடைத்துள்ளது.* தி.ஜானகிராமன் புனைகதை எழுதுவதில் கொண்டிருந்த தன்விருப்பம் அல்லது ஈடுபாடு போல நாடகம் எழுதுவதிலும் விருப்பத்தோடு இருந்தார் எனச் சொல்ல முடியாது. வடிவேலு வாத்தியார் அச்சான போது அதற்கு முன்னுரை எழுதியுள்ள பி.எஸ். ராமையா இப்படி எழுதுகிறார்: "ஸேவாஸ்டேஜினருக்காக நான் நாடகம் எழுதத் தொடங்கிய வுடன் நாடக இலக்கியப் படைப்பிலே கிட்டும் உள்ளக் கிளர்ச்சியை உணர்ந்தேன். அதைப்பற்றி திரு. தி.ஜானகிராமனிடம் சொல்லி அவரும் நாடகம் எழுத வேண்டும் என்ற என் ஆசையை வற்புறுத்தினேன். அவர் 'நாலு வேலி நிலம் ' எழுதினார். நாடக இலக்கியச்சுவை அவரையும் பற்றிக் கொண்டது.' வடிவேலு வாத்தியார்' என்ற இந்த இரண்டாவது நாடகத்தை எழுதினார்". பி.எஸ். ராமையாவின் கூற்றுப்படி தூண்டுதலின் பின்விளைவே அவரது நாடக எழுத்து என்பது தெரிய வருகிறது.
1957, ஜூலை 15-இல் ஊரும் தேரும் என்னும் பெயரில் எஸ்.வி. சகஸ்ர நாமத்தின் சேவாஸ்டேஜ் குழுவினர் நடத்திய நாடகமே ஒருமாதத்திற்குப் பின்னர் -1957, ஆகஸ்டு 15, சுதந்திர நூற்றாண்டு விழாவின் போது முழு நாடகமாக மேடையேறியுள்ளது.ஜுலையில் மேடையேறிய போது அதன் வடிவம் ஓரங்க நாடகமே. ;முழு நாடகமாக எழுதி, சென்னை கார்ப்பரேஷன் ஸ்டேடியம் மேடையில் அரங்கேறியபோது அதன் பெயர் நாலுவேலி நிலம்.இந்த நாடகம் பின்னர் சென்னை அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட் சார்பில் முதல் பதிப்பாக ஜூலை 1958-ல் நூல் வடிவம் பெற்றுள்ளது.விலை 30 புதுக்காசுகள்.அவரது இரண்டாவது நாடகம் வடிவேலு வாத்தியார் சரியாகப் பத்தாண்டு இடைவெளிக்குப் பின் - 1968 -ல் அச்சாகியுள்ளது. சென்னை , மணிக்கொடிப் பண்ணை வெளியீடாக அந்நாடகம் அச்சாக்கம் பெறுவதற்கு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் நிதி உதவி செய்துள்ளது.விலை ரூ.2.75. வடிவேலு வாத்தியார் நாடகமும், நாலுவேலி நிலம் போல முதலில் மேடையேறிய பின்னரே நூலாக்கம் பெற்றுள்ளது. ஆனால் கால இடைவெளி நீளமானது; பத்தாண்டுகள். இந்நாடகத்தை மேடையேற்றிய குழுவும் அதே சேவாஸ்டேஜ் குழுவினர்தான்.1959, நவம்பர் 19 அன்று சென்னை அண்ணா மலை கலைமன்ற மேடையில் அரங்கேற்றப் பட்டதாக நூலில் உள்ள குறிப்பு கூறுகிறது.நாலுவேலி நிலம் நாடகத்தின் முதல் மேடையேற்றத்தில் யார் யார் பங்கேற்றார்கள் என்றவிவரம் இல்லை. ஆனால் வடிவேலு வாத்தியாரின் முதல் மேடையேற்றத்தில் பங்கேற்று நடித்தவர் களாக எஸ்.வி.சகஸ்ரநாமம், முத்துராமன், வீரப்பன், வீராசாமி,முருகன், வைத்தீஸ்வரன், எஸ்.என்.லக்ஷ்மி, தேவிகா, கல்பகம்,வசந்தா ஆகிய பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.இரண்டு நாடகங்களுக்கும் காட்சிகளை அமைத்தவர் கலாசேகரம் ராஜகோபால். இயக்கியவர் எஸ்.வி.சகஸ்ரநாமம்.

நாடகக் கட்டமைப்பு

தி.ஜானகிராமனின் முதல் நாடகமான நாலுவேலி நிலத்திற்கும் இரண்டாவது நாடகமான வடிவேலு வாத்தியாருக்கும் நூலாக அச்சிட்டதில் பத்தாண்டு இடைவெளி இருந்தபோதிலும் மேடையேற்றத்தில் அந்த இடைவெளியில்லை. ஓராண்டு இடைவெளியில் எழுதப்பட்ட இரண்டு நாடகங்களும்  அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே மேடையேற்றமும் கண்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு நாடகங்களையும் இன்று - நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் - படிக்கின்ற ஒருவருக்கு இரண்டு நாடகங்களும் ஒரே நபர் அடுத்தடுத்த ஆண்டுகளில் எழுதியிருக்க முடியாது. சில ஆண்டுகள் இடைவெளி இருந்திருக்கும் எனக் கூறத்தோன்றலாம். ஏனெனில் முதல் நாடகமான நாலுவேலி நிலத்திலிருந்து வடிவேலு வாத்தியார் வடிவரீதி யாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் பெரிய அளவு வேறுபாடுகளைக் கொண்டதாகத் தோன்று கின்றன. இரண்டு நாடகங்களுமே மேற்கத்திய நாடகவடிவமான நல்முறைக் கட்டமைப்பு( Well made play) வடிவத்தை அறிந்த ஒருவரின் நாடகப்படைப்பு என்பதற்கான சான்றுகளைக் கொண்டவைதான். இரண்டிலுமே நாடக இலக்கியத்தின் ஆதார அம்சமான முரண்நிலை அமைந்துள்ளன. என்றாலும், நாலுவேலி நிலம் நாடக இலக்கியத்தின் உள்கட்டமைப்பான நாடகத்தொடக்கம், முரண், சிக்கல், உச்சநிலை, விடுவிப்பு, முடிவு ஆகியவற்றிலும் புறநிலைக் கட்டமைப்புக்கூறுகளான அங்கம்,(Act) காட்சி,(Scene) போன்றனவற்றிலும் கறாரான தன்மையைக் கொண்டிருக்க வில்லை. இன்னும் சொல்வதனால் முதல் நாடகத்தை எழுதும் பொழுது நாடக இலக்கியம் பற்றிய மேற்கத்திய வரையறைகளை தி.ஜானகிராமன் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூடக் கூறலாம். ஆனால் வடிவேலு வாத்தியார் எழுதியபோது முழுமையாக அந்த வரையறைகளைக் கற்றுத் தேர்ந்து, பி.எஸ்.ராமையா சொல்லியுள்ளது போல் 'அது தரும் கிளர்ச்சியை அனுபவித்தே எழுதியுள்ளார்' எனலாம் .

நாலுவேலி நிலம்

காவிரிப் பாசனத்தஞ்சை மாவட்டக் கிராமத்தின் கோயில் மண்டபம்,தேரடி,வயல், ஆஸ்பத்திரி, போலீஸ் ஸ்டேசன், களம், ரயிலடிக்கும் போகும் சாலை எனப் பொது இடங்களிலும் தலைமைக் கதாபாத்திரமான கண்ணுச்சாமியின் வீடு, அவருக்கெதிராகச் செயல்பட்டு நாடகமுடிவில் மனம் மாறும் வாள்சுத்தியாரின் வீடு என்பன இந்நாடகத்தின் நிகழ்வெளிகள். இந்நாடகத்தின் நிகழ்வுக் காலமாக சுமார் ஓராண்டு எனக் கூறலாம்.உறுதியாக இத்தனை மாதம் அல்லது நாள் எனக்கூறும்படியாகக் குறிப்புக்கள் இல்லை.

இருபத்து ஆறு காட்சிகளில் விரியும் நாலுவேலி நிலம் சொத்து, ஊர் மரியாதை, பாரம்பரியப் பெருமை முதலானவற்றில் முரண்படக்கூடிய இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இளைஞனும் யுவதியும் குடும்ப முரண் களைத்தாண்டிக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிற கதையைத்தான் காட்சிகளாக விரித்துள்ளது. இரண்டு பண்ணையார்களின் குடும்பப் பகையில் தொடங்கி, இடையில் அப்பகை பலரின் தூண்டுதலால் வளர்ந்து, இறுதியில் காதலின் முன்னால் தோற்றுப்போக சுமுகமான முடிவுடன் நிறைவு பெறுவது என்பது 1950 - கள் தொடங்கிப் பல தமிழ்ச் சினிமாக்களின் கதைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ள கதைக்கரு தான்.சிக்கல், உச்சம், முடிவு என்ற முத்திருப்புப் புள்ளிகள் கொண்ட எளிமையான நாடகவடிவம் இது.இத்தகைய நாடகங்களின் நாடக முத்திறமான வெளி, காலம், கதாபாத்திரங்கள் என்ற மூன்றும் ஓர்மையுடன் அமைந்து விடும் நிலையில் அந்நாடகம் நல்திறக் கட்டமைப்புக் கொண்ட நாடகமாக ஆகிவிடும்.நாலி வேலி நிலம் அவ்வோர்மைகளை மிகச் சரியாகப் பின்பற்றியுள்ள நாடகமாகத் தோன்றவில்லை. அதற்கு மாறாக ஒரு நிகழ்வுக்கு முரணாக அமையும் இன்னொரு நிகழ்வு என்னும் எதிர் நிலை உத்தியைப்பயன்படுத்தியே அமைந்துள்ளது.

ஊர்த் தேரோட்டத்தின் போது சிம்மவாகனப்புறப்பாடு நடத்தும் பொறுப்பு பழைய பணக்காரர் வாள்சுத்தியார் குடும்பத்தினுடையது.ஆனால் அவரது பொறுப்பற்ற நடவடிக்கைகளாலும் சோம்பேறித்தனத்தாலும் குடும்பம் பொருளாதாரச் சிக்கல்களுக்குள் இருப்பதால் , அந்தக்குடும்பத்திற்குப் பாரம்பரி யமாகக் கிடைத்து வந்த அந்தப் பெருமை கை மாறுகிறது. ஊரின் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கண்ணுச்சாமி தனது பொறுப்பில் அந்தச் சிம்ம வாகன ஓட்டத்தை நடத்துகிறார்.அதன் தொடர்ச்சியாக வாள் சுத்தியாருக்கும் கண்ணுச்சாமிக்கும் இடையில் பகை வளர்கிறது. ஆனால் வாள் சுத்தியாரின் மகன் நடராஜனுக்கும் கண்ணுச் சாமியின் மகள் நீலாவுக்கும் இடையில் காதல் வளர்கிறது. பாரம்பரியமான வறட்டுக் கௌரவத்துடன் முரண்படும் கருத்தமைவுகளாக, விட்டுக் கொடுத்துச் செல்லும் ஜனநாயகமும் (வாள்சுத்தியார்-கண்ணுச்சாமி), புதிய தலைமுறை யினரின் காதலும் (வாள்சுத்தியார்-நடராஜன்) என எதிர்நிலைகளைக் கட்டமைக்கும் தி.ஜானகிராமன் விட்டுக் கொடுத்தலே வெற்றி பெற வேண்டியது என்பதைச் சொல்லத் தவறவில்லை.
 
வாள் சுத்தியார் பாரம்பரியமான வறட்டுக் கௌரவத்தின் அடையாளமாக நிற்கக் கண்ணுச்சாமி, புதிதாகக் கிராமத்திற்கு அறிமுகமாகியுள்ள தேர்தல் அரசியலின் வழி முக்கியத்துவம் பெறும் நபராகவும் விட்டுக்கொடுத்து நடக்கும் மனநிலை கொண்டவராகவும் காட்டப்படுகிறார். அதே போல் வாள் சுத்தியாரின் மகன் நடராஜனும் மாறியுள்ள சூழலில் தனது தந்தையின் வறட்டுக் கௌரவமும் வீம்பும் கூடாநட்பும் எதிர்க்க வேண்டியது என உணர்ந்தவனாகக் காட்டப்படுவதும் தந்தை மீட்கத்தவறிய சொத்துக்களைத் தனது சாதுரியத்தாலும் முயற்சியாலும் மீட்டுக் கொண்டு வந்தான் எனக் காட்டுவதும் முக்கியமான அம்சங்கள். தந்தை-மகன் உறவை இவ்வாறு புதிய நிலைமைகளுக்குள் நிறுத்திப் பேசும் இந்நாடகம் அதன் சூழலில் முக்கியமான படைப்பாகக் கணிக்கத்தக்கது.உயர் கல்வி கற்றுத்திரும்பிய பின்னும் தனது சந்ததியினரின் மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும் இயல்பு கொண்டது இந்திய சமூகம்.அதற்கு மாறாகப் புதிய தலைமுறையின் செயல்பாடு மிகச்சரியாக இருக்கிறது எனக்காட்டி அதன் மீது நம்பிக்கை வைக்கும்படி வலியுறுத்தும் இந்நாடகம் இன்றையச் சூழலிலும் கூடப் பொருத்தமான நாடகம்தான்.
 
ஜனநாயக நடைமுறைகளில் நம்பிக்கையுள்ள அரசியலின் பிரதிநிதியான கண்ணுச்சாமியைக், குறைகளே இல்லாத -அப்பழுக்கற்ற மனிதனாக தி.ஜானகி ராமன் படைத்துக்காட்டவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. தன்னிடம் வந்துள்ள புதிய பதவியின் சாதகமான சூழலைப் பயன்படுத்தி, வங்கிக்கடன் பெற்று,புதிய நிலங்களை வாங்கிப் போடுவது போன்ற விருப்பங்கள் அவருக்கும் உண்டு என்றும் அதனால் அவர் ஏமாறும் நிலைமை உண்டானது என்றும் காட்டுவது மூலம் தனது நாடகத்தின் தலைமைக் கதாபாத்திரத்தை இலட்சியக்கதாபாத்திரமாகப் படைத்திட ஜானகிராமன் விரும்பவில்லை என்று சொல்லலாம்.நாலு வேலி நிலம் நாடகத்தின் மையக்கதாபாத்திரமான கண்ணுச்சாமி அன்றைய காலகட்டத்துக் காங்கிரஸ் அரசியல்வாதிகளின் பிம்பம் எனவும் அதன் சாராம்சத்தை தன்னிலையாகக் கொண்ட எதிர்கால நம்பிக்கை தான் அவருக்கு மருமகன் ஆகப் போகும் நடராஜன் எனவும் கூறலாம்.

வடிவேலு வாத்தியார்

தி. ஜானகிராமனின் இன்னொரு நாடகமான வடிவேலு வாத்தியார் நாலுவேலி நிலத்திலிருந்து பெருமளவு வேறுபடுகின்ற நாடகம். நாடகமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள விதம் அதன் கதாபாத்திர உருவாக்கங்கள், அவைகளை தி.ஜானகிராமன் முன்னிருத்தும் பாங்கு, இதன்வழி வெளிப்படும் அவரது படைப்பு நோக்கம் என அனைத்துமே திட்டவட்டமானவை. இருபத்தோரு கதாபாத்திரங்களுடன் ,வடிவேலு வீடு, வீரமுத்து வீடு, சாமியப்பா வீடு, தலைமையாசிரியர் அறை, நந்தவனம், ரிஜிஸ்தரார் வீடு,தெரு எனக் குறிப்பான நிகழிடங் களைக் கொண்ட வடிவேலு வாத்தியார் நாடகம் அரிஸ்டாடிலிய வடிவக் கட்டமைப்பில் நான்கு அங்கங் களையும் 17 காட்சிகளையும் கொண்டதாக வடிவம் பெற்றுள்ளது. வெள்ளி விழாக் கொண்டாடப் போகும் ஒரு பள்ளியின் நேர்மையான தலைமையாசிரியர் வடிவேலு, கல்வித் துறையில் நுழையும் சுயநலமிக்க மனிதர்களுக் கெதிராக நடத்தும் அறப் போராட்டத்தையும், இறுதியில் அவரது வெற்றியையும் காட்டும் நாடகம், அறம் வெல்லும்;மறம் தோற்கும் என்ற முரணின்- நம்பிக்கையின்மேல்- கட்டமைக்கப் பட்ட நாடகம் தான் .தன்னலமற்ற போராட்டங்களை நடத்துபவர் களுக்குத் துயரங்கள் வந்த போதும் நல்லவர்கள் அவர்களை ஆதரிக்க இறுதி வெற்றி நியாயத்தின் பக்கம் இருப்பவர்களுக்கே எனக் காட்டும் நோக்கம் கொண்ட இந்நாடகம் வடிவேலு வாத்தியார் என்ற ஒற்றைக் கதாபாத்திரத்தைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது.

முதல் அங்கத்தின் முடிவில் நாடகமுரணைத் தெளிவாகக் காட்டத்தக்கதாகக் காட்சிகள் அமைந்துள்ளன. முதல் காட்சியிலேயே வடிவேலு வாத்தியாரின் நாயகத்தனத்தைக் கட்டமைக்க விரும்பும் தி.ஜானகிராமன்,அவரது தொழில் பக்தியைப் பாராட்ட பல வருடங்களுக்கு முன்பு அவரிடம் பயின்ற இருவர் வந்து அவரது கற்பிக்கும் முறையையும் மாணாக்கர்களிடமும் ஆசிரியப் பணிமீதும் காட்டிய மரியாதையையும் நினைவு கூர்ந்து பாராட்டி விட்டுச் செல்வதாகவும் அவரது சொந்த வாழ்க்கை அமைதியான குடும்ப வாழ்க்கையாக இருக்கிறது எனவும் காட்டுகிறார். இதற்குப் பங்கம் ஏற்படும் நிகழ்வுகள் அடுத்தடுத்தக் காட்சிகளில் நடந்து முதல் அங்கத்தின் முடிவில் வடிவேலு வாத்தியார் X பள்ளியின் புதிய நிர்வாகக்குழுவின் தலைவர் சாமியப்பா என எதிர்வு கட்டப்படுகிறது. ஆசிரியப் பணிக்குப் பொறுத்தமற்ற செயல் பாடுகளில் ஈடுபட்டதால் வடிவேலுவின் கண்டனத்திற்கு உள்ளாகும் ஆசிரியை மங்களத்தை முன்னிட்டு உருவாகும் இவ்வெதிர்வின் பின்னணியில் சாமியப்பாவின் மாணவப்பருவக் காலத்தில் அவன் செய்த ஒரு பெரும் தவறும் அதனைக் கண்டித்த வடிவேலுவின் மீது அவன் கொண்ட பகை உணர்வும் இருந்தது என நாடகப்பின்னல் கட்டப்பட்டுள்ளது.

வடிவேலுவை எதிர்க்கும் சாமியப்பாவின் அணியில் பள்ளி நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களான நாகராஜன், கிட்டுப்பிள்ளை, வன்னியர் ஆகியோருடன் ஆசிரியை மங்களம், அவரது ஜோஸியர் தந்தை,கிராமத்தில் அவ்வப்போது கிளர்ச்சியில் ஈடுபடும் காளியப்பன் எனப் பலரும் இருப்பதாகவும் இவர்களின் அணிச்சேர்க்கை நியாயத்திற்கானதாக இல்லை; சுய நலத்திற்காகவும் அதிகாரத்திற்கு அடங்கிப்போவதாகவும் இருக்கிறது எனக்காட்டுகிறார். செல்வச் செழிப்பு, அதன் காரணமாக வந்து சேரும் அதிகாரம், அதற்கு அடங்கிப் போகும் சுயநலம் என்பனவற்றிற்கு எதிராக ஒற்றையாளாக தனது தொழில் பக்தியையும் நேர்மையையும் காட்டும் வடிவேலு வாத்தியார் பள்ளித்தலைமையாசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட அவருக்கு ஆதரவாக மாணவர்கள் நிற்கிறார்கள். மாணவர் தலைவரான தசரதன், லோகநாத வாத்தியார், பள்ளி அலுவலகத்தில் ரைட்டராக வேலை பார்க்கும் ஹிருதயம்பிள்ளை முதலானவர்கள்தான் அவரது ஆதரவு சக்திகள்.தனது தந்தை சாமியப்பாவின் மோசமான நடவடிக்கைகள் தெரிந்த பின்பு சாமியப்பாவின் மகள் வள்ளியும் வடிவேலுவின் ஆதரவு சக்தியாக மாறுகிறாள்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட எதிர்வுகளின் வழி நாடகத்தின் முடிச்சுக்களையும் திருப்பு முனைகளையும் அமைத்துள்ள தி.ஜானகிராமன், நாடகத்தின் உள் ரகசியமாக இன்னொன்றையும் வைத்துள்ளார். அதனை இரண்டாவது அங்கத்தில் கசியவிட்டு மூன்றாவது அங்கத்தில் வெளிப்படுத்தியுள்ள விதம் படைப்பு நுட்பம் சார்ந்த ஒன்று. நாடகத்தின் தொடக்கத்தில் வடிவேலு வாத்தியாரின் மகளாக அறிமுகமாகும் கமலம், உண்மையில் அவரின் மகளே இல்லை என்ற தகவலும், அவள் சாமியப்பாவின் மகள்தான் என்ற உண்மையும் நாடகத்தின் பார்வையாளனுக்கு அந்நாடக நிகழ்வின்மீது ஈர்ப்பு உண்டாக்கும் அம்சங்களாகும். மாணவனாக இருந்த போது தன்னைக்கண்டித்த வடிவேலு வாத்தியாரைப் பழிவாங்கும் பொருட்டு அவரது மனைவி கௌரியையே மிரட்டி உறவு கொள்ள முயன்றவன் சாமியப்பா;ஆனால் அவளின் திடமான பேச்சாலும் நடவடிக்கைகளாலும் அதிலிருந்து பின்வாங்கிக் கொண்டான். அதன் பிறகு அவனால் ஏமாற்றப்பட்ட ஓர் அபலைப் பெண்ணின் மகள்தான் கமலம்.அந்தப் பெண் குழந்தையைப் பெற்றுப் போட்டுவிட்டுச் செத்துப் போக அவளைத் தங்களது சொந்த மகள்போல வளர்த்து வருகின்றனர் வடிவேலு- கௌரி தம்பதியினர் என்பதுதான் நாடகத்தின் உள் ரகசியம்.
 
ஒரு கதாபாத்திரத்தின் பிறப்பு சார்ந்த ரகசியம் ஒன்றை உருவாக்கி, இடையில் அந்த ரகசியம் வெளிப்படத் தொடங்குவதும் முடிவில் அதன் முழு உண்மையும் வெளிப்படுவதும் புதிதான படைப்பு நுட்பம் என்று சொல்வதற்கில்லை. பலநாடகங்களிலும் திரைப்படங்களிலும் திரும்பத் திரும்பப் பார்த்த ஒன்று தான்.தி.ஜானகிராமன் எழுதிய அந்தக் கால கட்டத்திலும் கூட அவர்தான் இதன் முன்னோடி என்று சொல்லி விட முடியாது. ராஜகுமாரிகள் காட்டில் வளர்வதையும் காட்டுவாசிகள் அரண்மனை இளவரசனாக வளர்க்கப் படுவதையும் புராணம் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் பல காட்டியுள்ளன.
இந்த உள்ரகசியம் நாடகத்தின் பார்வையாளனுக்கு ஆர்வம் ஊட்டத்தக்கது என்ற போதிலும், நாடகத்தின் பொதுத்தள விவாதத்தைச் சுருக்கி இருநபர் களுக்கிடையே உள்ள சொந்தப்பகை சார்ந்த முரணைப் பேசும் நாடகமாக ஆக்கியுள்ளது என்பதுதான் உண்மை. தான் பணியாற்றும் கல்வித்துறையில்- பள்ளிக்கூட நிர்வாகி களாகக் கல்விக்குச் சற்றும் தொடர்பில்லாத கள்ளமார்க்கெட் வியாபாரி, பொறுப்பற்ற அரசியல்வாதி, கலப்பட வியாபாரி போன்றவர்கள் வருவதால் ஏற்படும் சமூக விளைவுகளுக்கு எதிராக வடிவேலு நடத்தும் போராட்டமாக நாடகம் தொடங்குகிறது. ஆனால் அதற்கான தீர்வை நோக்கி நாடகம் நகராமல் சாமி யப்பாவின் மாணவப் பருவத் தவறும் அதன் பின்விளைவுகளும் என்ற தனிநபர் ஒழுக்கப் பிரச்சினைக்குள் திசை மாறிக் கொள்கிறது. ஒழுக்கத் தவறுக்கான தண்டனை யாகச் சாமியப்பா ,வடிவேலுவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய சூழலை அவளது சொந்த மகள் வள்ளியே உருவாக்கினாள் என நாடகம் முடிகிறது. 

இந்தத் திசை மாற்றத்திற்குக் காரணம் நாடகத்தின் பார்வையாளனுக்கு ஆர்வத்தை உண்டாக்குவதற்காக தி.ஜானகிராமன் உருவாக்கிய உள்ரகசியம்தான் எனலாம். இத்தகைய உள்ரகசியத்தை நாடகத்தின் ஒரு பகுதியாக வைப்பது அக்காலகட்டத்தின் பொதுவான ஒரு போக்காக இருக்கலாம் என்று கூறத்தோன்றுகிறது. ஏனெனில் தி. ஜானகிராமன் நாடகம் எழுதிய காலகட்டத்தை ஒட்டி முன்னும் நாடகங்கள் எழுதிய திராவிட இயக்க நாடக ஆசிரியர்களும் பலரும் -சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி உள்பட - இந்த அம்சங்களைத் தங்கள் நாடகங்களின் கூறாகவே கொண்டுள்ளனர்.

தி.ஜானகிராமன் நாடகங்களின் அரசியல் தளம்.

பொதுவாக நாடகக் கலை மற்றெல்லாக் கலை வடிவங்களைவிடவும் கூடுதலாக அதன் சமகால அரசியல், சமூகப் பின்னணிகளைக் காட்டிவிட வல்ல ஒரு வடிவம். இதற்கு முதன்மையான காரணங்கள் இரண்டு. ஒன்று நாடகக் கலையின் சாராம்சக் கூறாக இருக்கும் முரண். இரண்டாவது அதன் நிகழ்த்துநிலை நோக்கம். எழுதப்பட்ட பிரதியில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிகன் ஒருவனால் வேடந்தாங்கி நடிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் அவைகளின் சமூகப் பொருளாதார அரசியல் பின்புலங்களும் குறியீடுகளும் வெளிப்படையாக அமைய வேண்டியது அவசியமானது. தி.ஜானகிராமனின் இரண்டு நாடகங்களிலும் எழுதப்பட்ட மற்றும் மேடை யேற்றப் பட்ட காலத்தின் பின்புலங்கள் தெளிவாகவே வெளிப்பட்டுள்ளன.அத்துடன் நாடக ஆசிரியர் தி.ஜானகி ராமனின் ஆதரவு நிலைப்பாடு எதற்கு என்றும் காட்டப்பட்டுள்ளது.

முன்னரே கூறியபடி நாலுவேலி நிலம் நாடகம், தமிழ் நாட்டுக் கிராமங் களுக்குள் புது வகை அதிகார உருவாக்க நடைமுறையான தேர்தல் அரசியல் நுழையும் காலகட்டத்தை அடையாளப்படுத்தியுள்ளது. பாரம்பரியமான குடும்பப் பெருமையின் வழிச் செல்வாக்குப் பெற்றிருந்த வாள்சுத்தியாருக்குப் பதிலாக ஓட்டெடுப்பின் வழி தேர்ந்தெடுக்கப் படும் கண்ணுச்சாமியையே மையக் கதாபாத்திரமாக ஆக்குவதுடன் அதன் செயல்பாடுகளை ஆதரித்துப் பேசும் தொனியும் நாடத்தில் வெளிப்படுகிறது.அன்பு ,விட்டுக்கொடுத்தல், தனது தவறுக்குத்தானே வருந்தும் குணம் போன்றவற்றின் சாரமாக கண்ணுச்சாமியைப் படைக்க முயன்றுள்ளார் தி.ஜானகிராமன்.

ஒருவிதத்தில் இக்குணங்கள் ஒரு காந்தியவாதியின் குணங்கள். நாலுவேலி நிலத்தின் கண்ணுச்சாமியும் வடிவேலு வாத்தியார் நாடகத்தின் மையக் கதாபாத்திரமான வடிவேலுவும் ஏறத்தாழ காந்தியவாதிகளின் குறியீடுகள் தான். தவறு செய்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று நினைக்காமல் அவர்களே உணர்ந்து திருந்தும் படியாக நடந்து கொள்வது என்பது அந்த இரண்டு கதாபாத்திரங்களின் சாரமாக இருக்கின்றன. இதற்கு மாறாக நிற்கும் வாள்சுத்தியார், சாமியப்பா என்ற இரு கதாபாத்திரங்களும் ஒரே அச்சில் வார்க்கப் பட்ட எதிர்நிலைக் கதாபாத்திரங்கள் அல்ல. நாலுவேலி நிலத்தின் வாள்சுத்தியார் மாற்றத்தை மறுக்கிற மனிதர்களின் குறியீடு. ஆனால் சாமியப்பா மாற்றத்தைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ளும் மனிதர்களின் குறியீடு.
 
காங்கிரசுக்கு மாற்றாக வந்த திராவிட இயக்க அரசியல், பொதுநலனைக் கருத்தில் கொள்ளாமல் சுயநலத்தை மட்டும் கவனத்தில் கொண்ட அரசியல் என்றும் அதன் தலைவர்களும் அவர்களின் வழித் தோன்றல்களும் ஆட்சியதிகாரத்தையும் பொதுத்துறை நிறுவனங் களையும் தங்கள் சுகபோக வாழ்க்கைக்குப் பயன்படும்படியாக மாற்றிக் கொண்டவர்கள் என்ற விமரிசனக் கருத்து தமிழ்நாட்டின் அரசியல் தளத்திலும் இலக்கிய விமரிசனத்தளத்திலும் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அத்தகைய விமரிசனத்தை திராவிட இயக்கத்தினரின் தாக்குதலுக்கும் எதிர்ப்புக்கும் அதிகம் உள்ளான பிராமண எழுத்தாளர்களின் படைப்புக்கள் தீவிரமாகவே முன்வைத்துள்ளன. அந்த வரிசையில் தி.ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார் நாடகமும் தன்னை இணைத்துக் கொள்ளும் விருப்பம் உடையது என்று சொல்லலாம். சாமியப்பா என்ற எதிர்நிலைக்கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ள விதத்தை மட்டும் வைத்து அப்படிக் கூறவில்லை. அவருக்குத் துணையாக இருந்து பள்ளிக்கூட நிர்வாகக் கமிட்டியையும் பள்ளிக்கூடத்தையும் தங்கள் விருப்பம் போல் நடத்தி விடத்துடிக்கும் நாகராஜன், கிட்டுப்பிள்ளை, வன்னியர்வாள் முதலான கதாபாத்திரங்களை அவர் படைத்துள்ள விதமும் அதனை உறுதி செய்துள்ளது. தி.ஜானகிராமனும் அவரைப் போல வேறு பல எழுத்தாளர்களும் திராவிட இயக்க அரசியல்மீது வைக்கும் அந்தப் பரிமாணம் மட்டும் தான் அதன் அடையாளமா? அல்லது வேறுசில பரிமாணங்களும் -நேர்மறை அம்சங்களும்- திராவிட இயக்க அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உண்டா..? என்று விவாதிக்க வேண்டும். அந்த விவாதம் இதனுடன் நேரடித்தொடர்புடையது அல்ல என்பதால் இந்தக் கட்டுரை இங்கு முடிக்கப்படுகிறது.
========================= ======================= ========================

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்