வாக்கப்படும் மனிதர்கள்: வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள்

அரசு அலுவலகங்கள் மீதும், பொதுத்துறை அலுவலகங்களின் மீதும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மீதும் தொடர்ந்து வைக்கப்படும் விமரிசனங்கள் சில உண்டு. முதன்மையான விமரிசனம் அவர்கள் செய்ய வேண்டிய பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்படுவது இல்லை என்பது.

பணிப்பண்பாடு –ஒர்க் கல்சர் - என்பதைக் கற்றுக் கொள்ளாமல் சம்பளம் வாங்குவதை மட்டுமே குறியாகக் கொண்டவர்களாக இருப்பதற்கு ஊழியர்கள் மட்டுமே காரணம் அல்ல; அவர்கள் அவ்வாறு ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் முக்கியக் காரணம் என்பதை அதன் நிர்வாகிகள் புரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

அரசுத்துறைக்கும், பொதுத்துறைக்கும் பணியாற்ற வரும் ஒரு ஊழியருக்கு விருப்பு வெறுப்பற்ற பயிற்சிகள் கிடைக்கும் வாய்ப்புகள் இல்லை. மேல் அதிகாரிகள் சொல்லும் வேலைகளைச் சக பணியாளர்கள் செய்வதைப் பார்த்துத் தாங்களே கற்றுக் கொண்டு செய்ய வேண்டிய முறையே இங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. பணிப்பயிற்சி வகுப்புகள் எனத் தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், அவை வெறும் விழாக்களாகவும், சடங்கார்த்த நிகழ்வுகளாகவும் மட்டுமே நடைபெறுகின்றன. முறையான பயிற்சிகளோ, கற்றுக் கொண்டதைச் சோதிக்கும் முறைகளோ கடைப்பிடிக்கப்படுவதில்லை.
இக்காரணங்கள் அல்லாமல் பணியாளர்கள் தேர்வில் இருக்கும் இன்னொரு பிரச்சினையும் பணிப் பண்பாடு உருவாகாமல் இருக்கக் காரணமாக இருக்கிறது. மைய , மாநில அரசுகள் பின்பற்றும் இட ஒதுக்கீடு சார்ந்த பணியாளர் தேர்வு முறையும், பொதுத்துறையை அரசியல் கட்சிகளின் அதிகார விளையாட்டுக் களமாகவும் ஆக்கி விட்டதும் பணிப் பண்பாடு உருவாகாமல் தடுக்கின்றன.

அரசு அலுவலகங்களுக்கு அதன் வாரியங்கள் பணியாளர்களைத் தேர்வு செய்யச் சில முறைகளைப் பின்பற்றுகின்றன. தேர்வுகள் நடத்துவது; நேர்காணல் செய்வது என அம்முறைகள் வெளிப் படையாகத் தெரிந்தாலும், அவற்றின் பின்னணியில் லஞ்சமும், அரசதிகாரத்தின் குறுக்கீடுகளும் இருக்கின்றன என்பதும் வெளிப்படையான உண்மைகளாக இருக்கின்றன. பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர் தேர்வு முறையோ இதைவிடவும் மோசமாக இருக்கின்றன. வேலை வாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படைகளோடு நேர்காணல் மட்டுமே தேர்வுக்கான முறையாக இருக்கின்றன. இதன் காரணமாக கட்சி அரசியல், கூட்டணி அரசியல் போன்றன பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர் சேர்க்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

போக்குவரத்துக் கழகங்கள், கூட்டுறவு சங்கங்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் எல்லாம் இந்த முறைகள் தான் நடைமுறையில் உள்ளன. இந்த உண்மைகள் நிர்வாகத்தின் தலைமையிடத்திற்கு வரும் பலருக்கும் தெரிந்த போதிலும், அதனை எப்படி எதிர் கொள்வது என்பதிலும், களையும் முறையைக் கண்டு பிடித்துப் பின்பற்றும் தைரியம் இல்லாததாலும் பல நேரங்களில் தங்களின் கையாலாகாத் தனத்தை நொந்து தவிக்கின்றனர்; அல்லது அதன் போக்கில் தாங்களும் பயணம் செய்து ஊழலில் பங்கு பெறுகின்றனர். பணியாளர்கள் தேர்வு இப்படித்தான் நடக்கிறது என்றாலும் எல்லா நிலையிலும் , இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது என்பதும், அதில் எந்த வித மீறலையும் யாரும் செய்து விட முடியாத படி கண்காணிப்புகள் இருக்கின்றன என்பதும் உண்மை.

இப்படியான பணியாளர் தேர்வு முறைகள் நிகழ்கால இந்தியாவின் பணிப்பண்பாட்டு உருவாக்கத்தில் பெரும் தடைகளாக இருக்கின்றன என்பதைத் திட்டமிடுபவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் அறிந்தே உள்ளனர். அதன் ஆழத்தையும் அகலத்தையும் தெரிந்து கொண்டதன் மூலம் அதனை மாற்றுவதற்கான முறைகளையும் அளவுகோல்களையும் முன் மொழியாமல், அதற்குப் பதிலாக எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி விட்டால் அந்தப் பிரச்சினை சரியாகி விடும் என்று இன்னொரு மாற்றை முன் வைக்கின்றனர். ஆனால் சமூகத்தளத்திலும் பொருளாதார நிலையிலும் ஆகப் பெரும் வேறுபாடுகள் கொண்ட இந்தியாவின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் தனியார் மயம் தீர்வாகாது என்பதை எதிர்காலம் உணர்த்தப் போகிறது என்பதும் நிதரிசனமான உண்மை.

இப்படியான சிந்தனைகள் வரும் போதெல்லாம் அறிஞர்களின் சிந்தனைக் கட்டுரைகள் நினைவுக்கு வருவது போலவே சில படைப்புகளும் நினைவுக்கு வருவதுண்டு. சில படைப்புகள் பணிப்பண்பாட்டை நேர்மறையாக அணுகியிருக்கும்; சில படைப்புகள் எதிர்மறையாக அணுகும். வண்ணதாசன் கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற சிறுகதை பணிப் பண்பாட்டில் ஊறிப் போன ஒருவனை இரங்கத்தக்கவனாகப் படைத்துக் காட்டியதின் மூலம் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது.தனது அனுபவத்தையும், பரிச்சயமான மனிதர்களின் அனுபவம் சார்ந்த தருணங்களையும் மென்மையான உணர்வுகளையும் அன்பின் வெளிப்பாடுகளையும் எழுதும் வண்ணதாசனின் கதைகளைப் படிப்பது என்பது, தெரிந்தவர்களையும் தெரியாதவர்களையும் மிக அருகாமையில் சந்தித்து , மென்மையாக உரையாடும் மனநிலையை உண்டாக்கக் கூடியது.
2001 இல் புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்ட வண்ணதாசன் கதைகள் என்ற மொத்தத் தொகுப்பில் அதுவரை வெளிவந்த ஒன்பது தொகுதிகளிலும் இடம் பெற்ற 117 கதைகளும் இடம் பெற்றுள்ளன. அதில் மூன்றாவது கதை கலைக்க முடியாத ஒப்பனைகள். மொத்தத் தொகுதிக்குப் பின்பும் அவரது கதைகள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் ஆனந்த விகடனில் அவர் எழுதிய கதையல்லாத தொடர் கூடப் பல நேரங்களில் புனைகதையின் இயல்போடுதான் வெளிப்பட்டது.

திருமண பந்தத்தைக் கிராமப் புற மொழி வாக்கப் படுதல் என்ற சொல்லால் குறிக்கிறது. வாழ்க்கைப் படுதல் என்ற சொல்லின் திரிபு இது. ஆணும் பெண்ணும் சேர்ந்து இணைகிறார்கள் என்றாலும் வாழ்க்கைப் படுதல் என்ற சொல் பெண்ணைச் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒரு பெண் தான் நமது மரபான திருமணங்களில் வாழ்க்கைப் பட்டு மணமகன் வீட்டிற்குப் போகிறாள். அப்படிப் போன பின் அவள் அந்த வீட்டின் உறுப்பினளாக- அதன் பகுதியாக ஆகி விட வேண்டும் என எதிர் பார்க்கப் படுகிறாள். அவளது விருப்பங்கள், ஆசைகள், நண்பர்கள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அங்கு தொடர முடியாது. அதுவரை அவளுக்கு இருந்த சொந்த பந்தங்களும் இரண்டாம் இடத்திற்குப் போகக் கணவனின் சொந்த பந்தங்கள் முதலிடத்திற்குப்போட்டியிடுவார்கள். இவற்றையெல்லாம் உணர்ந்தவளாகவும் ஏற்றுக் கொள்பவளாகவும் இருக்க வேண்டும் என்பதைத்தான் வாழ்க்கைப் படுதல் என்ற சொற்றொடர் குறித்து நிற்கிறது.

திருமண பந்தத்தின் வழியாகப் பெண்ணொருத்தி அடையும் நிலையைச் சிலர் பணியிடம் வழியாக உருவாக்கிக் கொள்வதுண்டு. தனக்குக் கிடைத்த வேலையையே காதலித்து, அதில் கிடைக்கும் இன்பத்தையே ரசிக்கப் பழகி அதுவாகவே ஆகி விடுவார்கள். அவர்களின் பணியிட அடையாளமே வெளி அடையாளமாக மாறிப் போகும். வாத்தியார் மாமா, போலீஸ் தாத்தா, கலைக்டர் சித்தப்பா, டீச்சர் அக்கா என உறவினர்களால் அழைக்கப் படுவதோடல்லாமல் சுற்றியிருப்பவர்களும் அப்படியே அழைக்கத் தொடங்கும் போது, அந்த அடையாளம் கலையாத ஒப்பனையாக மாறிச் சுகமாகவும், சுமையாகவும் ஆகி விடக் கூடும்.

கலைக்க முடியாத ஒப்பனைகள் கதையில், வங்கியில் காஷியராகப் பணியாற்றும் ஒருவனுக்குள் அவனது பணி அடையாளம் உண்டாக்கும் மனநிலையை- சுகத்தையும் சுமையையும் -அற்புதமாகப் படம் பிடித்துள்ளார் வண்ணதாசன். நண்பனின் திருமணத்தில் பங்கேற்கும் ஒரு காட்சியின் வழியாக அந்த மனநிலையை வாசிப்பவர்களுக்குக் கடத்தும் வண்ணதாசன் மொழி வெகு எதார்த்தமானது. இனி அவரது கதையின் வரிகளையே வாசிக்கலாம்:

“காஷுவல் லீவ் மிச்சமிருப்பது இரு தினங்கள்தான். இன்னும் நான்கு மாதங்களில் எத்தனையோ நிகழும். அதற்கு ஒரு நாளாவது வேண்டும்” இது கதையின் தொடக்கம்.
“ பந்தலுக்கு வெளியே வந்ததும், அவனுக்குக் கண்கள் ஒரேயடியாகக் கூசின. எழுந்திருக்க நேரமில்லாமல் அதிகமாக வேலை செய்துவிட்டு வருகிற நாளில் எல்லாம் அவனுக்குக் கண்கள் வழக்கமாகக் கூசும்”-அதன் முடிவு இப்படி எழுதப் பட்டிருக்கிறது. இடையில் அவன் கடந்தது வங்கிப் பணி அல்ல; நண்பனின் திருமணம் தான். ஆனால் அவன் ஒவ்வொரு கணமும் வங்கிப் பணியாளனாகவே உணர்கிறான்; உணர்த்தப் படுகிறான் எனக் காட்டுவதில் வண்ணதாசனின் கதை நுட்பம் கொள்கிறது. அப்படி உணர்த்துவதில் நண்பனின் திருமணச் சூழல் முக்கிய காரணமாக இருந்தது என்றாலும், அவனுக்கு ஏற்கெனவே அறிமுகமான சித்து என அழைக்கப்படும் சித்தரஞ்சனும், பாப்பாவும் இயல்பாக வினையாற்றுகிறார்கள் என்பதைக் கதையை வாசிப்பவர்கள் யாரும் உணர முடியும்.

“ரெண்டு நாளைக்கு முன்னால் வருகிற ஆளா?.. ”சித்து கேட்டான். “காஷுவல் லீவ் ஜாஸ்தி யில்லை. அநேகமாக ஆயிப் போச்சு இல்லாட்டி வந்திருப்பேன்.”
“இதையெல்லாம் பெயரா பேசுது.காஷியர் தான் பேசுது.”
“என்ன செய்ய?”
“அவன் நேத்தியிலேர்ந்தே முனங்கிக் கிட்டிருக்கான். உன்னைக் காணோம்னு” கைக்குட்டை இப்போது முக்கோணமான பட்டையாக மணிக்கட்டில் சுற்றியிருந்தது.
“எது கல்யாண வீடு? இதோ தெரியுதே இதா? இல்லை கடைசிக்குப் போகணுமா?”
“இதுதா, இதுதான், போறயா, வந்திர்றேன்”
“ மாப்பிள்ளை பொண்ணையெல்லாம் எங்கே?” இன்னும் சரியான கல்யாணத்திற்குத்தான் வந்திருக்கிறோமா என்று சந்தேகம்.
கோயிலுக்குப் போயிருக்காங்க. அங்கே வச்சு சாமிக்கு முன்னால் தாலி கட்டி இங்கே கூட்டிக் கிட்டு வராங்க. பந்தி பலகாரத்துக்கு வசதியா அமர்த்திப் போட்டிருக்கு”
கொஞ்சம் வெளியே வந்தான். நடையில் ஒரு அவசரம். காலுக்கு முன்னால் கண் வெளியே பாய்ந்தது. ஒருத்தி வேகமாக வந்து கொண்டிருந்தாள். பாப்பாதான். சுளீர் என்று இவனுக்குச் சொடுக்கியது. ’ஆர்த்தி.. ஆர்த்தி’ என்று சொல்லிக் கொண்டு வந்தாள்.
“சட்டை கசங்காமல் நிக்கிதே, பாயசம் சாப்பிட்டுப் போகலாம்னு வந்திருக்கா இது?” கையில் வெற்றிலை பாக்கு அடுக்கின ட்ரே ஒன்றைக் கொடுத்து, எல்லோரையும் உபசரிக்கச் சொன்ன பாப்பாவை மறுக்க முடியவில்லை.
“காஷியர் வெளியே நிக்கலாமா? ஒரு சேரைப் போட்டு இருக்கட்டும்” பாப்பா ஒரு புது நோட்டையும், பேனாவையும் கொடுத்தாள். கையில் பெரிய பிளாஸ்டிக் டப்பா ஒன்று இருந்தது. இன்னொரு நாற்காலியில் விபூதி மரவையும், வெற்றிலை பாக்கு வைத்த சின்னத் தாம்பாளமும் இருந்தது. நோட்டில் மஞ்சளில் பெரிய பிள்ளையார் சுழி.

தாக்க வருபவர்கள் போல நாலைந்து பேர் அடைசலாய் வந்தார்கள். ‘அவசரப்படாதீங்க. இருங்க, இருங்க’ அவனுக்கு எரிச்சல் வர ஆரம்பித்து விட்டது. பாங்கிற்குப் போனதும் வருகிற எரிச்சல்( ரூபா கொடுக்கிறதில் அவசரப்பட்டால் நடக்காது உங்களுக்கும் கஷ்டம். எனக்கும் கஷ்டம்).
விபூதி பூசினார்கள். பெயரைச் சொன்னார்கள். பெயரைச் சொன்னபிறகு பெயர் சரியாக எழுதப் படுகிறதா என்று நிச்சயப்படுத்திக் கொண்டார்கள்.( பணம் கட்டியாச்சுண்ணா போயிக்கிட்டே இருங்க. அடுத்த ஆள் கட்டட்டும். அடுத்த ஆள் கட்டட்டும். அனாவசியமா கவுண்டர் முன்னால் வட்டம் போடாதீங்க)
“ மாப்பிள்ளை பெண்ணுக்கு காஷியர் கலர் சப்ளை பண்ணக் கூடாதா?” பாப்பா கேட்டுக் கொண்டே குனிந்து ஜடைபில்லை, கொண்டைத் திருகு எல்லாம் கனத்து அமுக்கின ஜடையைத் தூக்கிப் பெண்ணின் கழுத்தடி வியர்வையை ஒற்றினாள். குனியும் போது பாப்பாவின் வயிறு ஜமுக்காளம் சுருங்கினது மாதிரி மடங்கியது. இவன் கூட்டலைச் சரி பார்த்து விட வேண்டும் என்று நினைத்தான்.

யாரும் வரவில்லை. வருவார்களா என்று தெரியவில்லை. பணமும் கையுமாக வெறுமனே எங்கேயும் போக முடியாமல் உட்கார்ந்து இருப்பது கஷ்டமாக இருந்தது( ஒரு மணிக்கு மேல்தான் முகூர்த்தம் வச்சிருக்கா? சீக்கிரம் வந்து பணத்தைக் கட்டினா என்ன? வழக்கமா வர்ற பார்ட்டியெல்லாம் இப்படிச் செய்தீங்கண்ணா எப்படி?)
ஒரு தடவை மீண்டும் கூட்டி, கையில் இருக்கிற பணமும் வரவு வைத்திருக்கிற பணமும் பொருந்துகிறதா என்று பார்த்துக் கொண்டான். பிறகு நிம்மதியாய்க் கொஞ்சம் வெளியில் நின்று விட்டு வரலாம். அடுத்த வீட்டுப் பணம், அடுத்த வீட்டுக் கணக்கு. சரியாக இருக்க வேண்டும்.
அவன் குனிந்து நோட்டின் கடைசிப் பக்கத்தைத் திருப்பி, ரூபாய் பத்தில் இவ்வளவு, ஐந்தில் இவ்வளவு என்று எதிர் எதிரே பெருக்கி மொத்தமாய்க் கூட்டிவிட்டு, நோட்டில் வரவு வைத்ததையும் பார்த்தான்.
முகம் விழுந்தது..

யாருக்காவது அதிகம் எழுதியிருப்போமா? சில்லரை கேட்கையில் யாருக்காவது ஜாஸ்தி போயிருக்குமோ? மூணு மூணு ரூபாயாக எழுதியவர்களில் யாராவது கை மறதியாக் குறைத்துக் கொடுத்து விட்டார்களா? எப்படி ரெண்டு ரூபாய் குறையும்” ( “ என்னம்மா எதாவது டிபரன்ஸா..” ரெண்டு ரூவா ஷார்ட்” டோட்டல் பாத்தாச்சா? பாத்தாச்சு.. கழுதையைத் தூக்கிப் போடு. சாப்பிட்டுட்டு வந்து பாத்துக் கிடலாம். ஓ. எம்.எஸ். ட்டேலி ஆயிட்டுதா?” ) இருப்பது கலியாண வீடா, பாங்கா?)
ஒரு சிகரெட் இருந்தால் கொடு. வெளியில் கொஞ்ச நேரம் நிற்கிறேன்” என்று வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்