திறந்தே கிடக்கும் பின்வாசல்கள்


சொந்த வீட்டுக் கனவு இல்லாத மனிதர்கள் இருக்க மாட்டார்கள். அதிலும் கனவுகளை நிறைவேற்றிப் பார்க்கும் வாய்ப்புள்ள நடுத்தரவர்க்க மனிதர்களுக்கு சொந்த வீட்டுக் கனவு நிறைவேறத்தக்க கனவு என்பதிலும் ஐயமில்லை. சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றும் போது முன்வாசல் வைத்துக் கட்டுவதோடு இன்னொரு வாசலையும் வைத்துக் கட்டுகிறார்கள்; அந்த வாசல் வீட்டின் முன்வாசலுக்கு நேரெதிராகப் பின்புறம் இருக்க வேண்டும் எனப் பார்த்துக் கொள்கிறார்கள். இதனை நம்பிக்கை சார்ந்தது என்று சொல்வதா?தேவை சார்ந்தது சொல்வதா? என்று விளக்குவதா எனத் தெரியவில்லை.

நம்பிக்கை சார்ந்து வீட்டில் பின்வாசல் வைப்பது அல்லது வீட்டுப் பணியாட்களை உள்ளே அனுமதிப்பதற்காக அதனை உருவாக்குவது போன்றன பெரிய பிரச்சினைகள் அல்ல. இவையெல்லாம் வெகுவேகமாக வந்து கொண்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக் கலாசாரத்தால் அடித்துச் செல்லும் தன்மை கொண்டவை. அப்போது முன்வாசல்-பின்வாசல் எனப் புழங்கிக் கொண்டிருக்கும் பழக்க வழக்கங்களும், பணியாள்- எஜமானி என்ற பேதங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு படிநிலை வேறுபாடுகள் இல்லாமல் ஆகி விடும். எனவே வீட்டைப் பற்றியும் வீட்டின் பின்வாசல்கள் பற்றியும் இங்கேயே நிறுத்திக் கொள்ளலாம். நாட்டைப் பற்றியும், நாட்டில் நடைமுறையில் இருக்கும் ஜனநாயகம் என்னும் மிகப் பெரிய அமைப்பின் முன் வாசல்கள் மற்றும் பின்வாசல்கள் பற்றியும் நமது கவனங்களைக் குவிப்போம்.

ஜனநாயகம் உருவாக்கித் தரும் பணிகளும் சலுகைகளும் நாலாபக்கமும் வெளியேறி அதன் கீழ் இருக்கும் அனைத்து மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும். போய்ச் சேருவதில் சிறுசிறு தாமதங்கள் இருக்கலாமே தவிர போய்ச் சேரவிடாமல் தடுக்கும் தடைகள் ஏற்பட்டு விடக் கூடாது. சமவெளியில் ஓடும் நதியைப் போலச் சீராக ஓடும்படி ஜனநாயக அமைப்பு உருவாகி விட்டால் அதன் நோக்கமும் பலன்களும் செம்மையான சமூகத்தை உருவாக்கி விடும் என நமது ஜனநாயக சிற்பிகள் கனவு கண்டார்கள். குறிப்பாக இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு இத்தகைய எண்ணங்கள் இருந்தன என்பதை இன்று நாம் திரும்பவும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. அவரையே தேசத்தின் பின்னடைவுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டப்படும் இந்த நேரத்தில் அவரை நினைத்துக்கொள்வது வேண்டாத வேலை என்று கூடப்பலரும் நினைக்கலாம். ஆனால் பொதுத்துறை நிறுவனங்களை விற்றும் குத்தகைக்கு விட்டும் கொள்முதல் வேலையைச் செய்யும் அரசாக இப்போதைய அரசு இருக்கும் நிலையில் அவரது நினைவு வருவது தவிர்க்கமுடியாத ஒன்று.

ஜனநாயகம் அதன் சரியான அர்த்தத்தில் செயல்படும் வாய்ப்புகள் தனியார் துறையில் இருப்பதில்லை என்பதாலேயே நேரு பொதுத்துறையின் ஆதரவாளராக இருந்தார். அதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதோடு வேலைகள் தடையின்றி நடக்கவும் ஏற்பாடுகள் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். ஜனநாயக அமைப்பு நாலாபக்கமும் திறப்பு கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும் என அவர் நினைத்தது அதன் பலன்கள் நாலாபக்கமும் போக வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. பலனை அனுபவிப்பவர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் அந்த வாசல்களைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்து ஜனநாயகம் சரியாகச் செயல்படுகிறதா? எனப் பார்த்துக் கொள்ளவும் வேண்டும் எனக் கருதினார்.

அரசுத்துறைகளிலும் பொதுத் துறைகளிலும் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்பும் கண்காணிப்பும் இருக்கும்படி அமைப்புகள் உருவாக்கப்பட்ட பின்னணி இதுதான். பொதுத்துறைகளில் இருக்கும் நிர்வாக அமைப்புகளில் அதன் பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இடம் பெறும் வாய்ப்பு மட்டுமல்ல; பொது மக்களின் பிரதிகள் பங்கேற்கும் ஏற்பாடுகள் உள்ளன. தமிழ்நாட்டில் இயங்கும் போக்குவரத்துக் கழகங்களும் உயர்கல்வி அமைப்புக்களான பல்கலைக் கழகங்களும் இத்தகைய அமைப்புகள் கொண்ட பொதுத்துறை அமைப்புகளுக்குச் சிறந்த உதாரணங்கள்.

பல்கலைக்கழகங்கள், போக்குவரத்துக்கழகங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவற்றில் பணி வாய்ப்புப் பெற முறையான தேர்வுமுறைகள் அல்லது வேலைவாய்ப்பகங்களில் பதிவு மூப்பு மற்றும் நேர்காணல்கள் என முயல்வது முன்வாசல்கள் வழியாக வரும் பயணம். அப்படி நடப்பதே ஜனநாயக நடைமுறை. ஆனால் இத்தகைய வழிமுறைகள் ஒரு சில நேரங்களில் மட்டுமே நடைமுறையில் இருக்கின்றன. பல நேரங்களில் நேரடி நியமனங்கள் என்னும் வழிமுறைகளே பயன்பாட்டில் உள்ளன.

கண்காணிப்பும் பங்கேற்பும் கொண்ட பொதுத்துறைகளின் பணிகள் பாதித்து விடக்கூடாது என்பதற்காக அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நபர்களுக்குச் சில தனி உரிமைகளையும் ஜனநாயக அமைப்பு தந்துள்ளது. போர், மோசமான பொருளியல் நெருக்கடி போன்றவற்றில் தேசம் இருப்பதாகக் கருதினால் அந்தக் காலத்தை அவசரநிலைக் காலம் என அறிவிப்பு செய்து அதிகாரத்தைத் தனிநபர்கள் கையில் கொடுக்கும் வாய்ப்பைக் குடியரசுத் தலைவர் வைத்திருப்பது போலப் பொதுத்துறையின் தலைவர்களுக்கும் சில சிறப்பு உரிமைகள் உள்ளன.

நிறுவனத்தின் நன்மை மற்றும் அன்றாடப் பணிகள் சரியாக நடைபெறும் பொருட்டுத் தன்னிச்சைப்படி முடிவு எடுத்து அவசரக் காரியங்களை முடித்துக் கொள்ளலாம்; பின்னர் நிர்வாக அமைப்புகளிடம் அனுமதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதே அந்தச் சிறப்புச் சலுகைகள். இந்தச் சிறப்புச் சலுகைகள் நடைமுறையில் பயன்படுத்தப்படும் போக்கைப் பார்த்தால் இத்தகைய உரிமைகள் வழங்கப்பட்டது நன்மைக்கா? தீமைகளை உருவாக்கும் நோக்கத்திற்கா எனக் கேட்கத் தோன்றுகிறது.

நேருவின் மகள் இந்திரா காந்தி, 1975 சிறப்புச் சலுகையை எதிர்மறையாகப் பயன்படுத்தி முன் உதாரணம் காட்டியது போல எல்லாப் பொதுத்துறை நிறுவனத்தலைவர்களும் எதிர்மறையாகவே பயன்படுத்துகின்றனர். மைய அரசில் ஏற்பட்ட அந்தத் தவறைச் சரி செய்ய அமரர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்றொரு மனிதர் அப்போது இருந்தார். ஆனால் இன்று எல்லா நிறுவனங்களிலும் அத்தகைய மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.

அவசரநிலை கருதி நேரடி நியமனங்களைப் பொதுத்துறையின் தலைவர் செய்து கொள்ளலாம் என வழங்கப்பட்ட சலுகை முழுக்க முழுக்க பின்வாசல் நுழைவுக்கான வாய்ப்பாக மாறி விட்டன. அதிகாரத்திற்கு வரும் கட்சிகள் தங்கள் கட்சிக்காரர்களைத் திருப்திப் படுத்தும் நோக்கில் நேரடி நியமனங்களைச் செய்து பணி இடங்களை அரசியல் களங்களாக ஆக்கி விட்டன. அதன் விளைவு இன்று அனைத்துப் பொதுத்துறைகளும் முடங்கிப் போகும் ஆபத்தில் உள்ளன. போக்குவரத்துக் கழகங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன; கூட்டுறவு அமைப்புக்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன; கல்வி நிறுவனங்கள் தரமான கல்வியை வழங்குவதற்குப் பதிலாக வியாபார நிறுவனங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. இவ்வமைப்புக்களின் தேவைகளுக்குப் பணியாளர்களை நியமனம் செய்யாமல் கட்சிப்பொறுப்பாளர்களின் பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என நினைத்து ஒவ்வொரு நிர்வாகத் தலைமையும் நேரடி நியமனங்களைத் தொடர்ந்ததின் விளைவாக இன்று அவ்வமைப்புகள் வேலை தெரிந்த பணியாளர்கள் பற்றாக்குறையில் உள்ளன.

நேரடி நியமனங்களுக்கான வாய்ப்புக்கள் இருப்பதாலேயே இன்று ஒவ்வொரு சாதியும், சாதிக்கட்சிகளின் தலைமையும் தங்களுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், நீதிபதிகள், அரசுச் செயலர் பதவிகள், பொதுத்துறை நிர்வாக மேலாளர்கள் பொறுப்புகள் வேண்டும் எனக் கேட்கின்றன. அதனையும் இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றன. இப்படி வழங்குவது மேம்போக்காகப் பார்த்தால் ஜனநாயகப் பரவல் போலத் தோன்றலாம். ஆனால் ஆழமாக யோசித்தால் எதிர்மறை விளைவுகளுக்கான முன் முயற்சிகள் என்பது புரியவரலாம். நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கலுக்காகப் பின்வாசல்களின் கதவுகள் திறந்தே இருப்பதால் அதனை முற்றாக ஒழித்து விடும் வாய்ப்பையும் அரசியல் கட்சிகள் உருவாக்காது.

இத்தகைய தவறுகளைக் கண்காணித்துக் களைய வேண்டிய தொழிற்சங்கங்களும் அவற்றின் தலைமைகளும் கண்காணிப்பைக் கைவிட்டுவிட்டு அதிகாரத்தில் தங்களுக்கான பங்கைப் பெறுவதில் முனைப்புக் காட்டுகின்றன. கண்காணிப்பு, தவறுகளுக்கெதிரான போராட்டம், சமச்சீரற்ற நிர்வாக முறையைக் களைவதற்கான ஆலோசனைகளை வழங்குதல் என்பதோடு, தங்கள் உறுப்பினர்களுக்குச் சமூகத்தின் இருப்பு மற்றும் முரண் பற்றிய கல்வியைப் போதித்தல் என்பதிலிருந்து தொழிற்சங்கங்களின் தலைமைகள் விலகிப் போய்விட்டன.

தொழிற் சங்கங்கள் முகத்தை மாற்றிக் கொண்டு தங்கள் இருப்புக்காக அதிகாரத்தில் பங்கு பெற முனைவதைச் சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி எனச் சித்திரிக்கும் முயற்சிகளும் உள்ளன. யோசித்துப் பார்த்தால் அப்பிரச்சினைகள் சங்கம் என்னும் அமைப்பின் பிரச்சினைகள் அல்ல; அதனைத் தலைமையேற்று நடத்தும் தனிநபர்களின் பிரச்சினை என்பது புரிய வரலாம். தலைமைக்கு வந்தவர்கள் தலைவர்களாகவே இருக்க வேண்டும் என்ற ஜனநாயக நெறிக்கெதிரான வழி முறையில் செல்லும் போது ஏற்படும் சிக்கல்கள் இவை என்பதை அதன் உறுப்பினர்கள் புரிந்து கொள்ளலாம்.

அதிகார மையத்திடமிருந்து உரிமைகளைக் கோருவதற்குப் பதிலாக, மையத்தைப் பயன்படுத்தித் தங்கள் அமைப்பு சார்ந்தவர்களுக்கு எவ்வளவு சலுகைகளைப் பெற முடியும் என்பதிலேயே குறியாக இருக்கின்றன. அத்தோடு சங்கத்தின் உறுப்பினர்களும் திறந்து கிடக்கும் பின்வாசல்களைப் பயன்படுத்தலாம் என நினைக்கும் போது கண்காணிப்பு காணாமல் போய் விடும் என்பதை உணர வேண்டும். கண்காணிப்பைக் கைவிட்டால் அதிகாரத்தரகர்களாகச் சங்கத் தலைவர்கள் மாறிப்போவதை எப்படித் தடுக்க முடியும்?அப்படி மாறும் தலைவர்கள் சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே பேசுபவர்களாக இருப்பார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர்களின் சொந்த முன்னேற்றம் என்பதோடு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், சாதிக்காரர்கள், மதத்தினர் என அந்த நோக்கம் விரிவடையும் போது நேர்மையான சங்கத்தலைவனின் மரணம் நடந்து விடுகிறது என்பதை உணர வேண்டும்.

அதிகாரத்தின் சலுகைகளை – அதிகாரத்தில் பங்கைப் பெறுதல் என்ற அந்தக் குறி இப்போது மேலும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அமைப்பைப் பயன்படுத்துவது என்பதிலிருந்து அமைப்பின் தலைவர்களோடு மறைமுகமான உடன்படிக்கைகள் செய்து கொண்டு அதிகார மையங்களாகவே ஆகிவிடத் துடிக்கின்றன தொழிற்சங்கங்கள். அதிகாரத்தை இல்லாமல் ஆக்கும் அமைப்பாகக் கருதப்பட்ட தொழிற்சங்கங்கள் அதிகார மையங்களாக ஆகும் விதத்தைப் பின் நவீனத்தெளிவு என நம்புவதா? குழப்பம் எனப் புரிந்து கொள்வதா? எனத் தெரியவில்லை.


கருத்துகள்

குட்டி மணி இவ்வாறு கூறியுள்ளார்…
ARASIYAL WAATHIKAL KOTTAM ADANKA WENDUM, THAWARAANA WALIKAL MOODAPADA WENDUM, WAALKA JANANAAYAKAM.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்