ஒச்சாயி: பெயரில் என்னதான் இல்லை?


“ரோஜா, ரோஜாவாக இருக்கிறது ” இந்த தொடர் சேக்ஸ்பியரின் ஒரு நாடகத்தில் இருக்கும் வாக்கியம். ஆனால் அதைத் தனது கவிதையின் தலைப்பாக மாற்றிக் கவிதை ஒன்றை எழுதியவன் கவி ஜெற்ரூட் ஸ்டெயின் என்று படித்த ஞாபகம். “என்ன பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜா தான்;ஏனென்றால் ரோஜா ரோஜாவாகவே இருக்கிறது ” என்று முடியும் அந்தக் கவிதை எப்போது ரோஜாப்பூக்களைப் பார்த்தாலும் நினைவுக்கு வந்து விடும். ஒற்றை ரோஜாவைச் சொருகிக் கொண்டு முன்னே நடந்து செல்லும் பெண்களின் கூந்தல் அசைவைப் பார்க்கிற போது பல்வேறு வண்ணங்களில் விரிந்து நிற்கும் ரோஜாத் தோட்டங்களும், அவற்றின் இதழ் விரிப்பும், பனி படர்ந்த இலைகளும் புல்வெளிகளும், கொஞ்சம் கை தவறினால் கீறிப்பார்த்து ரத்தப் பலி கொள்ளக் காத்திருக்கும் முட்களும் நினைவுக்கு வருவதோடு அந்தக் கவிதையும் நினைவுக்கு வந்து விடும். என்றாலும் வார்த்தைகளை அடுக்கிச் சொன்னதன் மூலம் நினைவில் தங்கிக் கொண்டது. ரோஜாவின் அழகே இந்தக் கவிதையால் வந்தது தானோ என்று கூட நினைப்பதுண்டு.

ரோஜாவைப் பார்க்காமலேயே அந்தக் கவிதை இப்போது நினைவுக்கு வரக் காரணம் இந்தப் பெயர் தான். ஒச்சாயி என்ற அந்தப் பெயர், கடந்த பத்து நாட்களாக ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படத்தின் பெயராகத் தமிழக மக்களுக்கு அறிமுகமாக உள்ள அந்தப் பெயர், திரைப்படங்களுக்குப் பெயரிடல், அதற்கு அரசாங்கம் வரி விலக்கு அளித்தல் என்ற நிகழ்வுகளின் பின் இருக்கும் கருத்தோட்டங்களை விவாதப் பொருளாக ஆக்கி விட்டது.

பொதுவாக மனிதர்கள் தங்களின் கண்டுபிடிப்புக்கும், தங்களின் உருவாக்கத்துக்கும் பெயரிட நினைக்கும் போது பெரும்பாலும் தங்களின் மரபுக்குள்ளான தேடலில் – தொன்ம காலத்து மரபுக்குள் இறங்குகிறார்கள். இப்படித்தேடுவது கீழைத்தேய மரபு என்றோ, மேற்கத்திய மரபில் இல்லை என்றோ சொல்ல முடியாது. எல்லா வகையான மரபுகளிலும் இருப்பதாக மானுடவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் நவீனத்துவ வாழ்க்கை மரபுக்குள் நுழைந்து விட்டதாக நினைப்பவர்கள் தொன்மம் சார்ந்த மரபுக்குள் நுழையாமல் நவீன மரபை உருவாக்கியவர்களின் பெயர்களில் அல்லது நிகழ்வுகளில் இருந்து தொடங்க நினைப்பார்கள்.

மனிதர்களுக்குப் பெயரிடப்படும் முறைகளையும், அதன் பின்னுள்ள நோக்கங்களையும் கடந்த ஒரு நூற்றாண்டுக் கால அளவுக்குத் தொகுத்துக் கொண்டு ஆய்வு செய்தாலே போதும். அதில் கிடைக்கக் கூடிய முடிவுகள் இந்த நூற்றாண்டில் இந்திய சமூகம் அல்லது தமிழ்ச் சமூகம் அடைந்துள்ள மாற்றங்களின் வெளிப்பாடுகளைச் சுலபமாகச் சொல்லி விடும். அல்லது வெவ்வேறு அடையாளங்கள் கொண்ட மனிதக் குழுக்கள் வாழும் ஒரு வட்டாரத்தை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்தால் அவ்வட்டாரத்தில் வாழும் மக்களின் நம்பிக்கைகளின் பரிமாணங்கள் பல புரிபடக்கூடும்.

இதற்குப் பதிலாகப் பெயர் என்பது மனிதர்களுக்கு இருக்கும் பல அடையாளங்களில் ஓரடையாளம் தானே தவிர அதுவே எல்லாமுமாக ஆகி விடாது என வாதம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள் பெயரில் என்ன இருக்கிறது? என அலட்சியமாகக் கேட்கவும் கூடும். அப்படிச் சொல்பவர்களைப் பெயரிடுதலில் இருக்கும் பண்பாட்டு அம்சங்களையும், எப்படித் தன் வாரிசு இருக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோரின் ஆசைகளையும் அறியாதவர்கள் எனச் சொல்லி விடலாம். அது மட்டுமல்லாமல் இப்படிப் பட்டவர்கள் மனித வாழ்க்கையைக் கணிதம் போல நினைத்துக் கடந்து செல்ல நினைப்பவர்கள் என்று கூடச் சொல்லலாம்.

கணக்குப் பாடம் தான் எல்லாவற்றையும் பொத்தாம் பொதுவாக எக்ஸ்(X) அல்லது ஒய் (Y) என வைத்துக் கொள்வோம் எனத் தொடங்கி விளக்கிக் காட்ட முயற்சி செய்யும். ஆனால் மனிதர்களும் மனிதர்களின் வாழ்க்கையும் கணக்கின் சூத்திரங்களுக்குள் அடங்கி விடும் வகையறாக்கள் அல்ல. பல்வேறு முடிச்சுக்களாலும், சிக்கல்களாலும் பின்னப்பட்டவை. அச்சிக்கல்களில் சில நிகழ்காலத்தால் உருவாக்கப்படுபவை; இன்னும்சில சிக்கல்கள் வரலாற்றால் உருவாக்கப்பட்டவை. நிலவியலும் நம்பிக்கைகளும் கூடப் பல நேரங்களில் சிக்கல்களை உருவாக்கிக் கொண்டே தான் இருக்கும். இந்தக் காரணங்களால் தான் மனித வாழ்க்கையை ஒவ்வொரு தத்துவமும், தத்துவத்தைப் புறந்தள்ளும் இலக்கியங்களும் வெவ்வேறு விதமாக விளக்கிக் காட்ட முயற்சிக்கின்றன.

ஆசைத்தம்பி என்ற அறிமுக இயக்குநர் தனது கதைக்கான திரைக்கதையை உருவாக்கிப், படப்பிடிப்பை முடித்து விட்டுத் திரையரங்கிற்குக் கொண்டு வரும் போது அப்படத்தின் அடையாளமாக ’ஒச்சாயி’ என்பதை வைத்து அனுப்பியுள்ளார். அந்தப் படத்திற்கு இந்தப் பெயர் பொருத்தமான பெயர் தானா? என்று சொல்ல வேண்டும் என்றாலும், திரையரங்குகளைத் தேடி வந்து படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களின் புரிதலுக்கும், அதன் வழியாக அதன் இயக்குநர் ஆசைத்தம்பி முன் வைக்க விரும்பிய திரைப்படக் கலை சார்ந்த அழகியல் உணர்வு அல்லது அப்படத்தின் வழியாகச் சொல்ல நினைத்த வாழ்க்கை அனுபவம், அறம்சார் கேள்விகள், இலட்சியங்கள் எனப் பலவற்றைப் பேச வேண்டும் என்றாலும் ஒருவர் படத்தைப் பார்த்தாக வேண்டும். இந்தப் பெயர் அல்லது அடையாளம் மூலம் தனது கலைக்கோட்பாடு இதுதான் எனச் சொல்ல விரும்புகிறார் ஆசைத்தம்பி என விமரிசனக் கருத்தைச் சொல்ல வேண்டும் என்றாலும் படத்தைப் பார்த்தாக வேண்டும். நான் படத்தைப் பார்க்கவில்லை. திருநெல்வேலியில் அந்தப் படம் எந்தத் திரையரங்கிலும் காட்டப்படவில்லை; எனக்கு அதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.

தங்களின் முதல் வாரிசுக்குக் குலதெய்வத்தின் பெயரை வைக்கும் மரபில் வந்த இயக்குநர் ஆசைத்தம்பி தனது இயக்கத்தில் வெளிவரும் முதல் சினிமாவுக்கும் தன் குல தெய்வமான பெயரை- ஒச்சாயி என்ற பெயரை வைக்க விரும்பியுள்ளார். இதனால் படம் மரபான வாழ்க்கையின் மீது பிடிமானம் கொண்டதாக இருக்கக் கூடும் என ஓரளவுக்கு யூகிக்கலாம். ஆனால் பல நேரங்களில் தமிழ்ப் பட இயக்குநர்கள் ஏமாற்றவே செய்வார்கள். படத்தின் தலைப்புக்கும் எடுக்கப்படும் கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் படம் இயக்குவதுதான் அவர்களின் வெளிப்பாடுகள்.

பண்பாட்டு நடவடிக்கைகளில் ஊடகங்கள் செலுத்தும் தாக்கம் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கும் நான், அந்தத் திரைப்படம் குறித்துக் கலையியல் சார்ந்தோ, பார்வையாளர்களிடம் அப்படம் உண்டாக்கும் பண்பாட்டு நடவடிக்கைகள் குறித்தோ, அடையாளத் தேடுதல் குறித்தோ, அதன் வழியாக இயக்குநரும் படத்தயாரிப்பாளரும் அடையப் போகும் வியாபாரம் சார்ந்த பயன் மதிப்பு குறித்தோ விவாதிக்காமல், அதன் பெயர் சார்ந்து நடக்கும் சூடான விவாதத்தில் கருத்துச் சொல்ல நேர்ந்ததைப் பெருமையாக நினைக்கவில்லை. இதை நமது சூழலின் அபத்தம் என்றே நினைக்கிறேன். அதை விட அபத்தம் என்னவென்றால் அத்தகைய விவாதம் ஒன்று நடப்பதற்குத் தமிழக அரசின் செயல்பாடு காரணமாக இருக்கிறது என்பது தான். அவற்றையெல்லாம் ஆய்வாளர்களிடம் விட்டு விடுவோம். இப்போது ஒச்சாயிக்கு வருவோம்.

வரிச்சலுகையைப் பெறும் வாய்ப்பை இந்த “ ஒச்சாயி” என்ற படத்தின் தலைப்புச் சொல் தடுக்கிறது எனச் சொன்ன அரசாங்கக் குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இலக்கியம், மொழி சார்ந்த வல்லுநர்கள் இடம் பெறாத அதிகாரிகள் குழு ஒச்சாயி என்ற சொல்லைத் தமிழ்ச் சொல் இல்லை எனச் சொல்லி இருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஏனென்றால் அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அரசாங்கக் கையேடுகளிலும் பொது நீரோட்டப் பத்திரிகைகளிலும் பெருவழக்காக இருக்கும் எழுத்து மொழி சார்ந்த சொற்கள் மட்டும் தான்.

எழுத்து மொழி சார்ந்து எவ்வளவு சொற்கள் இருக்கிறதோ அதற்கிணையாகத் தமிழ் மொழியில் பேச்சு மொழி சார்ந்த சொற்கள் இருக்கின்றன என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் வசம் இருக்கும் அரசு நிறுவனங்களால் உருவாக்கப் பட்ட அகராதிகளிலும் பேச்சு மொழி சார்ந்த வட்டாரச் சொற்கள் இடம் பெற்றிருக்காது. ஏனென்றால் அரசு நிறுவனங்களும் , மைய நீரோட்டக் கருத்தியலாளர்களும் வட்டார மொழியைத் தமிழின் அழகாகப் பார்ப்பதற்குப் பதிலாக அசுத்தமாகப் பார்க்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் பலவற்றை நாம் கூற முடியும்.

இந்த அரசுகளுக்கு ஆலோசனை சொல்லும் தமிழ் அறிஞர்களின் பார்வை எப்போதும் பேச்சு மொழிக்கும் படைப்பியல் எழுத்துக்களுக்கும் எதிரான மனோபாவம் கொண்டவை என்பதை ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டியதில்லை. எழுத்துமொழி சார்ந்த அறிஞர்கள் பெறும் அங்கீகாரத்தைப் பேச்சு மொழி சார்ந்த எழுத்தாளர்களும் விமரிசகர்களும் பெறுவதில்லை. வட்டார மொழியில் எழுதும் இலக்கியவாதிகள் ஒருசில நேரங்களில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் அவர்களின் படைப்புக்களுக்கான அங்கீகாரம் என்பதாக இல்லாமல் பரிந்துரைக்கப்படும் நபர்களின் சாதுரியம் என்பதாகவே இதுவரை வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அல்லது படைப்பாளி ஒருவருக்குத் தரும் அங்கீகாரம் நிகழ்கால அரசியலுக்கு- தேர்தல் அரசியலுக்குப் பயன்படும் என்ற காரணம் பின்னணியில் இருக்கிறது.

பேச்சுமொழியின் வீரியம், தீவிர இலக்கியம், நவீன கவிதையின் இயங்குதளம் எனச் செயல்பட்ட கவிகளும் படைப்பாளிகளும் சமீபகாலத்தில் மைய நீரோட்ட அரசியல்வாதிகளாக மாறியிருக்கிறார்கள் என்றாலும், அவர்களின் பாடுகள் இலக்கியவாதி அடையாளத்தை அழித்துக் கொண்டு முழுவீச்சான அரசியல்வாதிகளாக மாறுவது எப்படி? என்பதில் தான் மையம் கொண்டுள்ளது. நண்டு தின்னும் ஊருக்குள் புகுந்து நடுப்பங்கைக் கேட்கும் மனநிலை. அவர்கள் அநேகமாக முன்னாள் இலக்கியவாதிகளாக மாறி இந்நாள் அரசியல்வாதிகளாக விரைவில் ஆகி விடுவார்கள் என்றே தோன்றுகிறது. இந்நாள் அரசியல்வாதிகளாக ஆன பின்பு கலை, கலாச்சாரம் சார்ந்த கவலைகள் காணாமல் போய் தேர்தல் அரசியலின் துருப்புச் சீட்டாக மட்டுமே மொழி, கலை, பண்பாடு போன்றன மாறிப் போகும் என்பதுதான் வரலாறு. திராவிட இயக்கத்தின் கடந்த கால வரலாறு இதைத்தானே காட்டுகிறது.

ஒச்சாயி என்ற சொல் தமிழ் மொழியில் உள்ள பல்வேறு வட்டார வழக்குச் சொல்லைப் போல ஒரு வட்டாரத்தில் இருக்கும் பெயர்ச் சொல். தங்களின் குல தெய்வப்பெயரைத் தங்களின் குடும்பத்து முதல் வாரிசுக்குத் தவறாமல் வைத்துப் பெருமைப் படுத்தும் பழைமையான பண்பாட்டு மரபைப் பின்பற்றும் ஒரு கூட்டத்தின் அடையாளமாக இருக்கும் சொல் அது. ஒச்சம்மன் என்ற அந்தத் தெய்வத்தின் பெயரைத் தாங்கிய ஆண்கள் ஒச்சாண்டி, ஒச்சாண்டித்தேவர் என்பதாகவும், பெண்கள் ஒச்சாயி, ஒச்சாத்தாள் என்பதாகவும் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம் வட்டங்களில் இருக்கும் கிராமங்களில்- குறிப்பாகக் கள்ளர் சாதிக்குழுவினர் வாழும் தெருக்களில் இன்னும் திரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கள்ளர்கள் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பூர்வ தமிழ்க் குடிகள் என்பதும், அவர்கள் வைக்கும் மரபுப் பெயர்கள் பூர்வீகத் தமிழ்ச் சொற்கள் என்பதும் சமுதாய மொழியியல் ஆய்வாளர்களால் ஆய்வு செய்து சொல்ல வேண்டிய ஒன்று என்று நமது அரசாங்கக் கோப்புகள் சொல்கின்றன என்பதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.

அரசாங்கம் அங்கீகரித்த – அரசாங்க நிறுவனங்கள் வெளியிட்ட நிறுவனங்கள் வெளியிட்ட அகராதிகளில் இருக்கும் சொற்கள் மட்டுமே தமிழ்ச் சொற்கள் எனக் கருதுவதும் தவறானது; அதில் இல்லாதது தமிழ்ச் சொல்லே அல்ல என ஒதுக்குவதும் பிழையானதே. ஏனென்றால் பல பத்தாண்டுகளாகத் தமிழில் அரசு நிறுவனங்கள் சொல்லகராதி தயாரிக்கும் வேலையைச் செய்யவில்லை. செய்தாலும் பிழையான கருத்தியலோடு தான் தொடங்குகிறார்கள். தொடங்கி நிறுத்தி விடுகிறார்கள்.

எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த் துறைகள் இருக்கின்றன; இவையல்லாமல் தமிழுக்கு என ஒரு பல்கலைக்கழகமும், தமிழாய்வுக்கு என உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் இருக்கின்றன. இப்போது செம்மொழி மாநாடும் முடிந்து விட்டது. மத்திய அரசின் உதவியில் செம்மொழி நிறுவனமும் சில நூறு கோடி ரூபாய்களைத் தமிழ் வளர்ச்சிக்குச் செலவிட வந்துள்ளது. தமிழக அரசும் மதுரையில் செம்மொழி உலகத்தொல்காப்பியப் பேரவையை ஒரு நூறு கோடி ரூபாயில் தொடங்குவதாக அறிவிப்புச் செய்துள்ளது. ஆனால் இவை எதிலும் உருப்படியான திட்டங்கள் இல்லை. இவையெல்லாவற்றையும் ஒன்றிணைத்துத் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியப் பரவலுக்கும் பணியாற்றும் நபர்களும் இல்லை; வாய்ப்புகளும் இல்லை. அதற்குப் பதிலாக ஒவ்வொரு வட்டாரத்துக்கும் உரிய வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்து வெளியிட்டுள்ள படைப்பாளிகளின் பங்களிப்பால் உருவாகியுள்ள வட்டார வழக்குச் சொல்லகராதிகள் தமிழ் மொழியின் அழகுணர்ச்சியின் பரிமாணங்களை வெளிக்கொண்டு வரும் வேலையைச் செய்துள்ளன. கி.ராஜநாராயணன் தொடங்கி வைத்த வட்டார வழக்குச் சொல்லகராதி தயாரிக்கும் பணியைப் பெருமாள் முருகன், கண்மணி குணசேகரன் போன்ற படைப்பாளிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒருவரிடம் கேட்டிருந்தால் கூட ஒச்சாயி தமிழ்ச் சொல்லா? இல்லையா? என்பதை உறுதி செய்திருப்பார்கள். ஒரு சொல் எந்த வட்டாரத்தில் வழங்குகிறதோ அதைத் தெரிந்து கொண்டு அதன் பண்பாட்டு வேர்களை நாடிச் சென்று நிச்சயம் அதன் மூலச் சொல்லையும் திரிபுகளையும் கண்டு பிடித்து விட முடியும். இதை எதையும் செய்யாமல் ஒரு அரசாங்கக் கோப்பு ஒச்சாயி என்ற பெண்பால் பெயரைத் தமிழ் வெளியில் இருந்து தூக்கி எறிய முயன்றிருக்கிறது.

இந்த நேரத்தில் வேறு சில கேள்விகளையும் கேட்டு வைக்கலாம். பதில்களையும் தேடிப் பார்க்கலாம்.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்கும் கட்சிகளும் அரசுகளும் திரைப்படங்களை என்னவாக நினைக்கின்றன? கலையாகவா? தொழிலாகவா? பண்டமாகவா? என்று கேட்டால் பண்டமாகத் தான் கருதுகின்றன என்பதை உறுதியாகச் சொல்லி விடலாம். ஏனென்றால் அதற்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி பண்டங்களுக்கு விதிக்கப்படும் ஒரு வரியைப் போன்றது என்பதை அவை மறுப்பதில்லை. கேளிக்கைப் பொருட்களான பொம்மைகள், பலூன்கள், போன்றவற்றிற்கு வரிச்சலுகை அளிக்காத அரசுகள் ஏன் திரைப் படங்களுக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லி வரிச்சலுகை அளிக்க விரும்புகின்றன அது ஏன் என நீங்கள் கேட்கக் கூடும். ஆம் அவை திரைப்படத்தை முழுமையாகப் பண்டம் என நினைப்பதும் இல்லை.

அரசுக்கும் அரசுகளின் கொள்கைகளைத் திட்டமிடுபவர்களுக்கும் திரைப்படங்களை முழுமையாகப் பண்டம் என்றோ, தொழில் என்றோ சொல்லி விடும் துணிச்சல் கிடையாது. அதன் பல்வேறு கூறுகள் இவற்றுக்குள் அடங்காது என்பதால், சினிமா ஒரு கலை வடிவம் என்ற பேச்சுக்குள் நுழைந்து கொள்ள முடிகிறது. கலைவடிவங்களும் கலைகளும், கலைஞர்களும் அரசாங்கங்களாலும், அரசுத்துறை நிறுவனங்களாலும், புரவலர்களாலும் பாதுகாக்கப்பட வேண்டியவை என்ற கருத்துப் பல நூற்றாண்டுகளாக இருப்பது தானே?

பரதநாட்டியம் ஆடியவர்களையும் தளிச்சேரிப் பெண்களையும், பாராட்டிப் பாடிய புலவர்களையும் மானியங்கள் கொடுத்துக் காத்த பரம்பரை ஆட்சிகள் விதந்தோதப் படுவதுதானே நிகழ்காலம். அக்கால மன்னர்கள் போல இக்காலக் கலையான திரைப்படக்கலையை நமது அரசுகள் காக்க நினைக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் எல்லா வகையான சினிமாவையும் ஆதரித்து விடக் கூடாது என்பதும் அதன் உள்கிடையாக இருக்கிறது. பரப்பிய வாதக் கருத்துக்களை ஆதரிக்கும் கலைஞர்களையும், பாராட்டும் நபர்களையும், வெவ்வேறு காரணங்களுக்காக வேண்டப் பட்டவர்களையும் சலுகைகள் காட்டித் தக்க வைக்க நினைப்பது பரப்பியவாதத்தைக் கொள்கைகளையாகவும் கோட்பாடுகளாகவும் நம்புகிற அரசுகள், கட்சிகளின் நிலைபாடு. இதற்கேற்ப எளிமையான ஒரு காரணத்தை முன் வைத்து அரசின் சலுகைகளை அவர்களுக்கு வழங்கிக் கொண்டே இருக்கவும் விரும்புகின்றன..

தமிழ், தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பாடுபடுதல் என்னும் நோக்கங்கள் தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுக்காலத்தில் செல்வாக்குக் குறையாத ஆயுதமாக இருக்கின்றன. ஆனால் இவை பரப்பியல் வாத அடிப்படையிலேயே பயன்படுகின்றன என்பதும் உண்மை. தமிழை வலுவான ஆயுதமாகக் கருதும் நிகழ்கால அரசு தமிழில் பெயர் வைத்தாலே வரிச்சலுகை வழங்கப்படும் என்று சொல்வதை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் அது அபத்தமான அரசாணை; அதன் காரணமாகத் தமிழ் மொழிக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்பதை அனைவரும் அறிவார்கள். அரசும் அறியும்; அதன் சலுகையைப் பெற விரும்பிப் பெயர் வைக்கும் திரைப்படக் காரர்களும் அறிவார்கள்.

தமிழில் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு , தமிழ் வாழ்விற்கும், தமிழ் அடையாளங்களுக்கும் பொருந்தாத பல படங்கள் வரிச்சலுகைக்குரியனவாக வரிசையில் நின்று வாங்கிக் கொண்டிருக்கின்றன என்பதைத் தமிழ் மக்கள் மட்டும் தான் அறியாமல் இருக்கிறார்கள். எதிர்க்கட்சியினருக்கும் இது தெரியும்.

ஒச்சாயி என்ற பெயர் சார்ந்து என்னிடம் கருத்துக் கேட்டால் இந்த நடைமுறையை உடனே நிறுத்துங்கள் என்பதே எனது வேண்டுகோளாக இருக்கும். மக்கள் பணத்தை ஏன் வியாபாரிகளுக்கு வரிச்சலுகையாக வழங்க வேண்டும் என்று எதிர்நிலைப் பாட்டில் பேசுவதே ஒவ்வொரு படைப்பாளியின் வேலையாகவும் இருக்க முடியும். தமிழ்த் திரையுலகமும் சின்னத்திரையில் செயல்படும் கூட்டங்களும் கலையுணர்வை மறந்து வியாபார மனத்திற்குள் அலைந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் எல்லா அரசுகளையும் அண்டிச் சலுகைகள் பெற்றுக் கொள்ளவே விரும்புகிறார்கள். அரசியல் கட்சிகளும் இவர்களின் ஊதிப் பெருக்கப் படும் பிம்பங்களைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியும் என்றே நம்புகின்றன. இல்லையென்றால் இங்கே ஆறுமாதத்திற்கு ஒரு முறை ஒரு நடிகன் கட்சி மாறிக் காலில் விழுந்துப் படத்தை வெளியிட்டுக் கொள்வானா? அப்படிச் செய்பவர்கள் கலைஞர்கள் என்ற சொல்லுக்குரிய அர்த்தத்தைத் தரக்கூடியவர்கள் தானா?

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
very good.Best critic.I may contact latter. ...VIVEK NEYVELI
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
படித்தேன்.கருத்துக்கள் அருமை.வணக்கம்...விவேக் நெய்வேலி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்