திருப்பிக் கொடு

வட்டங்களும் சிலுவைகளும் -பத்துக் குறுநாடகங்களின் தொகுப்பு என்னும் எனது நூலில் உள்ள இந்நாடகம் நமது பள்ளிக் கல்வியின் மீதான கோபத்தை  அங்கதமாகச் சொல்ல முயன்ற நாடகம். ஜெர்மனியில் எழுதப்பட்ட இந்நாடகத்தை நான் தழுவல் செய்த ஆண்டு 1996 எனவே அந்தக் காலம் சார்ந்த நிகழ்வுகளும் எண்ணங்களும் இடம் பெற்றுள்ளது . 
நான் செயல் பட்ட கூட்டுக்குரல் நாடகக் குழுவிற்காக இந்நாடகத்தைத் தழுவி எழுதினேன் என்றாலும், அதன் பின் தமிழ்நாட்டில் கல்வி மீது அக்கறை கொண்ட பல நாடகக் குழுவினரும் மேடையேற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எனது மாணவரும் திரைப்பட நடிகருமான சண்முகராஜாவின் நிகழ் நாடகக் குழு முந்நூறு மேடைகளில் நிகழ்த்தியுள்ளது


காட்சி: 1
[பள்ளியின் அழைப்பு மணியின் பின்னணியில் பாடலின் ஒவ்வொரு வரியையும் ஒருவன் பாட மற்றவர்கள் பார்வையாளர்களின் உள்ளிருந்து சொல்லியபடியே மேடையில் வரிசை யாகத் தோன்றுகிறார்கள்]
பாடல்:
ஒளி படைத்த கண்ணினாய் வா வாவா..
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா..
களிபடைத்த மொழியினாய் வா வா வா..
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா..
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா..
சிறுமை கொண்டு பொங்குவாய் வா வா வா..
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா..
ஏறுபோல் நடையினாய்  வா வா வா..
வா வா வா..       வா வா வா..        வா வா வா..
[ பாடலின் முடிவில் நடுவில் நிற்கும் நபருக்குக் கீழ்படியும் மாணவர்களாக மற்றவர்கள்]
ஸ்கூல்   அட்டென்சன்.. ...
ஸ்டாண்டர்டீஸ்..  ... ...
அட்டென்சன்...
கொடியேற்றுகிறான் :          
ஸ்கூல் ஃபிளாக் ஸல்யூட்..
             நேஷனல் ஆன்தெம்..
மற்றவர்கள்:  ஜயஹே ஜயஹே ஜய ஜய ஜயஹே..
அவன்:             ஸ்கூல் அபௌட்டெர்ன்
                         டிஸ்பெர்ஷ்டு
                         [ வட்டம் கலைந்து வகுப்புகள் தொடங்குகின்றன]
கணிதம்           : எல்லாரும் எழுதியாச்சா.. ம் நான் சொல்லச் சொல்லத் திருப்பிச் சொல்லுங்க..
மாணவர்கள்   : சரிங்க  சார்.. [ சொல்லச் சொல்ல, திரும்பச் சொல்கின்றனர்]
கணிதம்           : ஓரொன்          ஒன்னு...
                           ஈரோன்           இரண்டு..
                           மூவோன்        மூணு...
மாணவர்கள்   :  சார்
கணிதம்           : ம். ( சமாளித்து) எனக்குத் தெரியும்.
                         மூவோன்       மூணு
                         நாலோன்       நாலு
                         லாலல்லா..     லாலல்லா.. லா
லாலல்லா..     லாலல்லா.. லா
லாலல்லா..     லாலல்லா.. லா
                         ஒன்பதோன்   ஒன்பது
                         பத்தோன்       பத்து.
நடுவில் நின்ற நடிகர்- தலைமையாசிரியர்- நாற்காலியில் தூங்குகிறார்.
மணி அடிக்க வகுப்பு மாற்றம்.
சரித்திரம்         : [அவர் சொல்ல மாணவர்கள் திரும்பச் சொல்கிறார்கள்]
இந்தியா ஒரு துணைக்கண்டம். இதில் பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும்
இனத்தைச் சேர்ந்தவர்களும் பண்பாட்டைப் பின்பற்றுகிறவர்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். .. எப்படி வாழ்கின்றனர்.. ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
மாணவர்கள்    :எப்படி வாழ்கின்றனர்.. ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
சரித்திரம்          :மரமண்டைகள் எதைத் திருப்பிச் சொல்லனும்னு தெரிய வேண்டாமா? எல்லாத்தையும் அப்படியே திருப்பிச் சொல்லுங்க. கொஞ்சம் யோசிங்க.. புத்தியப் பயன்படுத்துங்க.
ஒரு மாணவன்: ஆமாங்க சார்.. அதெப்படி ஒற்றுமையாக வாழ்கின்றனர். [ இடையில் ஒருவன்
எழுந்து, மூத்திரம் போவதைக் குறிக்கும் ஒற்றை விரலைக் காண்பிக்கிறான்]
சரித்திரம்          : ஆமா ஒற்றுமையா.. ஒன்னா வாழ்கின்றனர்.
அதே மாணவன்: அதில்லீங்க சார் இது வேறு ஒன்னு சார். ஒன்னுக்குப் போகணும் சார்[
ஆசிரியர் தலையில் அடித்துக் கொள்கிறார்]
இன்னொருவன்: நான் கேட்கிறேன் சார். எப்படி ஒத்துமையா இருக்காங்க சார்.
ஆசிரியர்          : அப்படித்தான். ஒற்றுமையில் வேற்றுமை. இல்லை..இல்லை. வேற்றுமையில்
    ஒற்றுமை.
இன்னொருவன்: அதான் சார் எப்படின்னு கேட்டேன்.
ஆசிரியர்          : ம்.. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே.. இந்தியாவின் தனிச் சிறப்பு.   
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதில் பெருமை கொள்வோம். புரிஞ்சுதா..?
இன்னொருவன்: புரியலயே சார். தினமும் சமயச்சண்டையும் சாதிச்சண்டையும்
நடந்துகிட்டே தானே இருக்கு..
ஆசிரியர்                    : அதில்லாமில்லை; ஒற்றுமையில் வேற்றுமை. அதான் நமது கொள்கை. நீங்கல்லாம் புரிஞ்சுக்கணும். புரிஞ்சுதா.
மாணவர்கள்              :புரிஞ்சுது சார்.
ஆசிரியர்        : என்ன புரிஞ்சுது
மாணவர்கள்  : மாணவர்களோட கேள்விக்கு உங்ககிட்ட பதில் இல்லன்னு புரிஞ்சுது
சார்.
ஆசிரியர்          : அதிகப் பிரசங்கித்தனம் பண்ணாதீங்க. பண்ணினா வகுப்ப விட்டு
வெளியே அனுப்புடுவன்.
[அப்போது மணி அடிக்கிறது. ஆசிரியர் வெளியேறுகிறார். இன்னொரு ஆசிரியர் அறிவியல்- உள்ளே வருகிறார்].
                        அறிவியல்      : ஸ்டேண்டப் ஃபார் ப்ரேயர்... ஓ..மைகாட்..
                        மாணவர்கள்  : ம்ம்..ஹ்..ம்.(அதே தொனியில்)
                                                ப்ளஸ் அவர் ஸ்கூல்.. பார் மோர் மணி..
                                                வீ வாண்ட் மணி பார் செர்வீஸ்.. ஆமென்..
                                                (ஆசிரியர் உட்காருகிறார்)
அறிவியல்   : குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று பரிணாமவியல் அறிஞர் டார்வின் கூறுகிறார் ( ஒருவனிடம்) மனிதன் எப்படித் தோன்றினான்.
அவன்             : மனிதனைக் கடவுள் படைத்தார்.
                        அறிவியல்      : யார் சொன்னது?
                        அவன்             : ஆர்.ஐ. கிளாஸ்ல சொன்னாங்க டீச்சர்..
                        அறிவியல்      : அது உண்மை. இது சயின்ஸ்.. ஆர்.ஐ. டெஸ்டில கேட்டா அப்படி
எழுதணும்..அறிவியல் டெஸ்டில கேட்டா இப்படி எழுது. எது எதுக்கு எப்படி எழுதணும்னு புரிஞ்சுக்க. பின்னால உதவும் புரிஞ்சுதா..?
இன்னொருவன்: என்னங்க டீச்சர் மாத்தி மாத்திச் சொல்றீங்க..
அறிவியல்      : ஏய் கேள்வி கேட்கிறத நிறுத்த மாட்டே.. அதான் மூணு வருஷமா.
ஒரே வகுப்பில உட்கார்ந்திருக்கே.. கேள்வி கேட்காம பாஸ் பண்ற வழியப் பாரு.. சரியா..
மாணவன்: சரிங்க டீச்சர்..
                                                [ அப்போது மணி அடிக்கிறது}
தலைமையாசிரியர்: கிளாஸஸ் ஓவர்..எக்ஸாமினஷேசன்ஸ் ஸ்டார்..
[மாணவர்கள் அங்கும் இங்கும் நடந்து படிக்கிறார்கள். நெஞ்சில் குத்தி மனப்பாடம் செய்கிறார்கள். தேர்வுக் கூடத்தில் அமர்கிறார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் வர , ஒவ்வொருவரிடமும் வந்து வாந்தி எடுக்கிறார்கள். அதைப் பிடிக்கும் ஆசிரியர்கள் பெருமிதம் கொண்டு வெளியேறுகிறார்கள். நுகர்ந்து பார்த்து மகிழ்ச்சியை வெளிப் படுத்துகிறார்கள்].
காட்சி: 2
தலைமை                    :(மணி அடித்து) எக்ஸாம்ஸ் ஓவர்.. ( நாற்காலியில் உட்கார்ந்து) ஏ..ப்யூன்.
அந்தப் பைலை எடுத்து வச்சிட்டு.. தண்ணி எடுத்துட்டு வா..
(வெளியே ஓரிடத்தில் தூங்குகிறான் .தலைமையாசிரியரும் தூங்குகிறார். மாறிமாறி குறட்டை ஒலி வருகிறது. இடையில் ஒருவந் நந்தகோபால்- கொஞ்சம் வயசானவன் வருகிறான்)
ப்யூன்                          : யோவ்.. யார்நீ.. தொறந்த வீட்டில நாய் நுழையறமாதிரி நுழையுற..
நந்தகோபால்                        : நான் தலைமையாசிரியரைப் பார்க்கணும்.
ப்யூன்                          : அதெல்லாம் முடியாது.
நந்தகோபால்                        : நான் பார்க்கணும்..
ப்யூன்                          : பார்க்க முடியாது.
நந்தகோபால்                        : கட்டாயம் பார்க்கணும்.
ப்யூன்                          : கட்டாயம் பார்க்கணுமா.. அப்ப நம்மளெக் கவனி..
நந்தகோபால்                        :(அவனைச் சுற்றி வந்து கவனிக்கிறான்)
ப்யூன்                          : யோவ் அந்தக் கவனிப்பு இல்ல..(பையைத் தொட்டுக் காட்டி இங்கெ கவனி)
நந்தகோபால்            : (ப்யூன் பையைக் கவனிக்கிறான்)
ப்யூன்                          : யோவ்.. பெரிய மாங்காய் மடையனா இருக்கிறயே.. ஓம் பையக் கவனியா..
நந்தகோபால்                        :  ஆமா. நான் மாங்கா மடையன் தான். எல்லோரும் அப்படித்தான்
சொல்றாங்க. அதனால் எங்கிட்ட பணம் இல்ல. அதெ வாங்கத்தான் வந்திருக்கேன்.
ப்யூன்                          : சரியான சாவு கிராக்கி.. சரி..சரி..  போ..ஏய்.. நில்லு..    நான் போய் முதல்ல சொல்லிட்டு வாறேன்..
[உள்ளே போகிறான். தலைமையாசிரியர் தூங்கிக் கொண்டிருக்கிறார். ப்யூன் சில தடவை கூப்பிடுகிறான். கடைசியாகப் பெருஞ்சத்தத்துடன்]     சார்...
தலைமை                    : யே.. யே.. ஏண்டா கத்துறே..
ப்யூன்                          : ஒருத்தர் உங்களப் பார்க்க வந்திருக்கார்..
தலைமை                    : பார்வையாளர் நேரம்னு ஒண்ணு இருக்கில்ல.. இப்போ எதுக்கு வர்றாரு..
அப்போ வரச்சொல்லு.. ஏய் இன்ஸ்பெக்டர் ஒண்ணுமில்லையே ..
சரி..சரி..போய் வரச் சொல்லு.. (திரும்பவும் தூங்கிவிடுகிறார்)
நந்தகோபால்                        : ( உள்ளே வந்து) ஸார்..ஸா... ர்.. ஸ்ஸ்ஸார்
தலைமை                    : டே.. போடா.. போய் வரச்சொல்லுடா.
நந்தகோபால்                        : ஸார், நான் வந்துட்டேன் ஸார். நான் வந்து நந்த கோபால்..
தலைமை                    : யார் நந்தகோபால்.. உங்க பையனா..? எந்த வகுப்பில படிக்கிறான்.
நந்தகோபால்            : இல்லீங்க ..நான் தான் பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி இங்கே படிச்சேன். பைலை எடுத்துப் பார்த்தா தெரியும்..
தலைமை                    :ஓ..ஓல்டுஸ்டூடண்டா..எதாவது காண்டாக்ட் சர்டிபிகேட் ஏதாவது வேணுமா?
நந்தகோபால்            : இல்லங்க சார். அதெல்லாம் அப்பவே வாங்கிட்டேன். அதையெல்லாம் திருப்பிக் கொடுத்துட்டு..
தலைமை                    : என்னாது..?
நந்தகோபால்                        : திருப்பிக் கொடுத்துட்டு பணத்தெ வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்.
தலைமை                    : பணமா? என்ன பணம்?
நந்தகோபால்                        : அதான் சார். நான் படிக்கிறப்ப கட்டின ட்யூசன் பீஸ்.. ஸ்பெஷல் பீஸ்
எல்லாத்தையும்
தலைமை                    : கட்டின பணத்தையெல்லாம் திரும்பக் கொடுக்கிற பழக்கம் இல்லையே..
நந்தகோபால்                        : அட என்னாங்க சார் நீங்க.. நான் ஒரு பணக்கார வீட்டுப் பையனா இருந்தா
ஏன் சார் கேட்கப் போறேன். நான் சாதாரண கிளார்க் வீட்டுப் பையன்றதான் எனக்குப் பணம் தேவைப்படுது
தலைமை                    : நீங்க சொல்றது ஒண்ணும் புரியலையே..
நந்தகோபால்                        : இந்த ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்த எல்லாத்தையும் புரிஞ்சுக் கிட்டுப்
போயும் ஒண்ணும் பிரயோஜனம் இல்ல. நான் கட்டின பணம் எனக்கு வேணும்.இதில புரியாம போறதுக்கு என்ன இருக்கு.
தலைமை                    : சரி.. புரிகிறதாவே வைத்துக் கொள்வோம். அப்படித் திருப்பிக்
கேட்கிறதுக்குக் காரணம் வேணுமே..?
நந்தகோபால்            : காரணமா..? நான் கட்டின பணத்தோட மதிப்புக்கு நான் ஒண்ணும் இங்க கத்துக்கல. நீங்க கொடுத்த சர்டிபிகேட் என்னைப் படிச்சவன்னு சொல்லுது. ஆனா..  உண்மையிலேயே ஒண்ணும் கத்துக்கல. என்னோட வாழ்க்கையை எப்படி அமைக்கணும்னு இந்தப் பள்ளிக்கூடம் சொல்லித் தரல. அதனாலே என் பணம் எனக்கு வேணும்.
தலைமை                    : இங்க பாருங்க நந்தகோபால். நீங்க சொல்ற எதுவுமே எனக்குப் புரியல.
இதெப் போல எங்கேயும் நான் கேள்விப்பட்டதே இல்ல. உங்க பேச்சு புரியாத புதிராத்தான் இருக்கு
நந்தகோபால்                        : இதெப் போயி புரியாத புதிருன்னு சொல்றீங்களே.. என் வாழ்க்கையே
எனக்குப் புரியாத புதிரா இருந்துச்சு. என் வாழ்க்கையில எனக்குத் தோன்றின உருப்படியான யோசனை இதுதான்.
தலைமை                    :நந்தகோபால் .. நீங்க உண்மையாத்தான் கேக்கிறீங்களா.. இல்ல விளையாட்டுக்கு( சொல்லிக் கொண்டே அவனை நெருங்கிக் கிச்சுக் கிச்சு மூட்டிச் சிரிக்க வைக்கப் பார்க்கிறார்) 
நந்தகோபால்                        : (சற்றுக் கோபத்துடன்) மன்னிக்க வேண்டும் . சார் இப்படியெல்லாம் நீங்க
என்னை எமாற்ற முயற்சி செய்யக் கூடாது. ஏற்கெனவே நான் ஏமாற்றப் பட்டேன் என்பதை இப்போது தான் உணர்ந்திருக்கிறேன்.  என் வாழ்க்கையில இன்னைக்குப் போல  என்னைக்கும் சீரியஸா இருந்தது இல்ல. என்னோட செயல் சரியில்லைன்னா சொல்லிடுங்க. நான் நேரா மேலிடத்தப் பார்த்துச் சொல்லிக்கிறேன். என்கிட்ட பணத்தெ வாங்கிட்டு ஏமாத்திட்டாங்க ஒண்ணுமே கத்துத் தரலன்னு புகார் எழுதிக் கொடுக்கிறேன்.
தலைமை                    : (அவரும் கோபமாகி) நீயென்ன பைத்தியமா... ( கோபத்திலிருந்து விலகி) ஹி..ஹி.. மிஸ்டர் நந்தகோபால்.. நீங்க அமைதியா வெளியே போங்க. உங்க பிரச்சினையைப் பற்றிச் சிந்திக்க எனக்கு அவகாசம் வேண்டும்.
நந்தகோபால்                        : இப்படியெல்லாம் சொல்லி என்னை அனுப்பிவிட முடியாது. எல்லாக்
கணக்கும் தீர்க்கப்பட்டாலொழிய நான் வெளியே போகமாட்டேன். சீட்டுக் கம்பெனியிலே பணம் கெடைக்கும்ன்ற விஷயம் கூட எனக்குத் தெரியல.
தலைமை                    :நம்மெ சைடு பிசினஸ் இவனுக்கு எப்படித் தெரிஞ்சுது.
நந்தகோபால்                        : எல்லாரும் என்னை உதவாக்கரைன்னு சொல்றாங்க..
தலைமை                    : யாரப்படி சொன்னது? நீங்க எதுவும் செய்ய லாயக்கற்றவர்ன்னு எப்படி முடிவு செஞ்சீங்க..
நந்தகோபால்            : நானே முடிவு செய்யல. எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறாங்க.. கிடைச்ச வேலையக் கூடக் காப்பாத்திக்கத் தெரியல. இப்பக் கூடப் பரீட்சை வைச்சுச் சோதிச்சுப் பார்க்கலாம். ஆசிரியர்கள எல்லாம் கூப்பிட்டுக் கேளுங்க. அவங்கள்லாம் சொல்லிடுவாங்க. நான் ஒரு உதவாக்கரை.. மாங்கா மடையன்னு..
தலைமை        : என்னது இன்னொரு தடவை பரீட்சையா? பரீட்சை நடத்துறது எவ்வளவு கஷ்டமான வேலை தெரியுமா? ம்.. ( மெதுவா) பரீட்சை எழுதுறது கூடக் கஷ்டம் தான்.
நந்தகோபால்            : அது எனக்கும் தெரியும். நான் முட்டாள் என்பதை உறுதி செய்யணும். அதுக்காகத் திரும்பவும் தேர்வு எழுதத் தயாராக இருக்கேன்.
தலைமை        : இந்த மாதிரி கேள்விப்பட்டதே இல்ல. என்னுடைய 27 வருச சர்வீஸ்ல இந்தமாதிரி நிலைமை வந்ததேயில்ல. சரி.. நீ வெளியே காத்திரு. ஆசிரியர்களை அழைத்து ஸ்டாப் மீட்டிங் போட்டுப் பேசி ஒரு முடிவு சொல்றேன். அதுவரை காத்திரு.
நந்தகோபால்            : சரி ஆலோசனை செய்யுங்கள். ஆனால் முடிவு சீக்கிரம் தெரிய வேண்டும். நேரத்தை வீணடிக்க என்னால் முடியாது.
காட்சி: 3
[தலைமையாசிரியருடன் நான்கு ஆசிரியர்கள்- சரித்திரம்,அறிவியல், புவியியல், கணிதம் -ஆகியோர் உட்கார்ந்திருக்கிறார்கள்]
தலைமை        : மதிப்பிற்குரிய நண்பர்களே! இதுவரை நாம் சந்தித்திராத ஒரு விசித்திரமான
பிரச்சினை நமக்கு வந்துள்ளது. கொஞ்ச நேரத்துக்கு முன்பு நந்தகோபால் என்கிற பழைய மாணவன் என்னை சந்தித்தான் [ தொடர்ந்து வார்த்தைகளற்ற ஒலிரூபப் பேச்சு]

கணிதம்          : சார்.. ... கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன்..
தலைமை        : அவனுக்கு அவன் கட்டிய பணமெல்லாம் திரும்பக் கொடுக்கணுமாம்.
அனைவரும்   : அதெப்படி?
தலைமை        : ஆமாம்.. அவன் கேட்கிறான்.
கணிதம்          : ஏன்? ஏன்? .. திருப்பித் தரணும்..
தலைமை        : நாமெ கத்துக் கொடுத்த படிப்பினால் அவனுக்குப் பிரயோசனமே இல்லையாம். இருந்த வேலையும் போயிடுச்சாம்.. அவனுக்கு மூளையில எதுவும் இல்லையாம்.
அறிவியல்: இது லா ஆப் கன்சர்வேஷன் ஆப் எனர்ஜி படி இந்தப் பிரச்சினை ( ஒலிரூபப் பேச்சு)
தலைமை: ஐயோ இருக்கிற குழப்பத்தில .. நீ வேறெயா.. உட்காரும்மா..
சரித்திரம்: மனித நாகரிக வரலாற்றில் இதைப் போல நடந்ததற்குச் சான்றுகள் எதுவும் இல்லை.
கணிதம் : என்னோட சந்தேகம் என்னன்னா? அவன் தனது பீஸைத் தனி வட்டியுடன் கேட்பானா?
கூட்டு வட்டி போட்டுக் கேட்பானா..? என்பதுதான்.
தலைமை: எனக்கு வட்டி வாங்கித் தானே பழக்கம். கொடுத்துப் பழக்கம் இல்லையே.. அந்த ஆளு
வெளியில உட்கார்ந்துக்கிட்டிருக்கான். சீக்கிரம் ஒரு முடிவு சொல்லுங்க.. ப்ளீஸ்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. அவனுக்கு எப்படியாவது ஒரு பரீட்சை வைச்சு அதில அவனே பாஸ் பண்ண வைக்கனும்..
புவியியல்: சார் உண்மையில நாமெ வைக்கிற பரீட்சையில பெயில் ஆவது என்பது அவனைப்
பொறுத்தவரைக்கும் வெற்றி. இன்னிக்கி இவனுக்கு காசை திருப்பிக் கொடுத்தா நாளைக்கே இரண்டு பேரு வருவான். அடுத்த நாள் நாலுபேரு வருவான். நாலு எட்டாகும். அப்புறம் ஒரு நாள் ஸ்கூல் வாசல்ல மனுஷத் தலைகளாத் தெரியும். அப்புறம் நம்ம கம்பெனி திவாலு தான்.
தலைமை: ஐயையோ.. எதாவது உருப்படியான யோசனை
சரித்திரம்: அந்த மாணவனின் தலைவிதியைத் தீர்மானிப்பது யார்?
தலைமை: அதான்யா.. யார்ன்னு சொல்லுங்க..
கணிதம்: உங்க எல்லோருக்கும் சம்மதம்னா.. நானே அந்தப் பொறுப்பை எடுத்துக்கிறேன்.
அவனோட கணக்க நானே முடிச்சுடுறேன்.
தலைமை: யோவ்.. கணக்கு.. எதாவது எசகு பிசகா ஆகிடப் போகுது. அப்புறம் பேப்பர்காரன் நார்
நாரா நம்மளக் கிழிச்சிடுவான்யா..
கணிதம்: நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. எல்லாத்தையும் நான் கவனிச்சுக்கிறேன்.
தலைமை: சரி.. சரி.. அப்பப் பரீட்சையை ஆரம்பிச்சுடலாமா.. வாட்ச்மேன்.. வாட்ச்மேன்.. ( அவன் உள்ளே வர) போ... போய் அந்த ஆள வரச்சொல்லு..

காட்சி: 4.

தலைமை        : வாங்க நந்தகோபால்.. வாங்க ..ம்.. உங்க முயற்சி முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால் ‘முயன்றால் முடியாதது எதுவும் இல்லை’ என்ற ஆன்றோர் வாக்கைச் சிக்கெனப் பிடித்துக் கொண்ட உங்களை நாங்கள் பாராட்டவே செய்கிறோம். நான் மட்டுமல்ல ஆசிரியர்கள்  அனைவருமே பாராட்டுகின்றனர். உங்கள் முயற்சியினால் நமது பள்ளியில் ஒரு புதிய  அத்தியாயம் தொடங்கும் பொன்னாளாக இந்நாள் மாறப் போகிறது. நமது பள்ளியின் வரலாற்றில் மட்டுமல்ல. கல்வித்துறை வரலாற்றிலேயே  இந்நாள் ஒரு  பொன்னாள் தான். அந்த அத்தியாயத்தை எழுதும் வாய்ப்பைத் தந்த உங்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் நிலையை நம்முடைய ஆசிரியர்களிடம் சொன்னேன். அதிலுள்ள நியாயங்களை அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். முறைப்படி எழுத்துத் தேர்வுகளை நடத்தாலாம் என்றாலும் உங்களுடைய அவசரம் கருதி எல்லாத் தேர்வுகளையும் வாய்மொழித் தேர்வாக இங்கே நடத்தப் போகிறோம். தேர்வுகளைத் தொடங்கலாமா..?  நீங்கள் தயார் தானே? . முதலில்
இங்கே இருக்கும் ஆசிரியர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
இவர் தான் வரலாற்று ஆசிரியர் வரதராசன் . வரலாற்றுப் பாடத்தைப் பயிற்சியோடு நடத்துபவர். நம் பள்ளியில் இருக்கும் மரங்கள் அனைத்தும் அவர்  அசோகரைப் பாடமாக நடத்தும் போது வைத்த மரங்கள் தான். குப்தர் காலத்தைப் பொற்காலம் என்று சொல்லால் கூறிப்பாடம் நடத்தமாட்டார். பொன்னாலான கலம் ஒன்றைக் கொண்டு அதற்குக் கால் நீட்டிக் காட்டிப் பாடம் நடந்தும் வல்லவர். [ஆசிரியர் தனது திறமையைக் காட்டும் விதமாக முன் வந்து சாகசங்கள் செய்துவிட்டுப் போய் அமர வேண்டும்]
இவர் அறிவியல் ஆசிரியை சுல்தானா பர்வீன்.சுறுசுறுப்பும் வேகமும் கொண்டவர். நியூட்டனின் மூன்றாவது விதியிலிருந்து முதல் விதிக்குத் தாவக் கூடியவர். இரண்டு பனை மரங்களுக்கு இடையே உறிகட்டித் தொங்கவிட்டு ஊசல் விதியைப் பாடம் நடத்திய திறமைக்காக நல்லாசிரியர் விருது பெற்றவர்.  [ தலைக்கு மேலே முதுகோடு சேர்த்துக் கட்டிய ஊசல் ஒன்று ஆடிக் கொண்டிருக்கிறது]
இங்கே அமர்ந்திருப்பவர் புவியியல் ஆசிரியர் புண்ணியமூர்த்தி. புவி வெப்பம் அடைவதற்கு அறிவியல் ஆசிரியர்களே காரணம் என்னும் தீர்மானமான முடிவோடு இருப்பவர். அறிவியல் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால் புதிய புதிய கண்டு பிடிப்புகளும் உற்பத்திகளும் நடக்கின்றன. அதனால் வளிமண்டலம் மாசு அடைகிறது. சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகளை நிறுத்த வேண்டும்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகளை நிறுத்த வேண்டும் என்றால் அறிவியல் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை நிறுத்த வேண்டும். அறிவியல் பாடத்தை நிறுத்தி விட்டு அறிவியல் ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்றொரு புதிய கோட்பாட்டைக் கண்டு பிடித்து ஆய்வுக் கட்டுரையெல்லாம் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையை நோபல் பரிசுக் கமிட்டி பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு அதற்குப் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம். [ அறிவியல் ஆசிரியரோடு சட்டையைப் பிடித்துச் சண்டையிடத் தயாராக இருக்கிறார். தலைமையாசிரியர் உள்ளே புகுந்து விலக்கி விட்டு]
மிஸ்டர் நந்தகோபால் இந்த மூன்று பேரையும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஏனென்றால் இவர்கள் இதே பள்ளியில் கடந்த முப்பது ஆண்டுகளாகக் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். நானும் தான்.  ஆனால் இந்த இளைஞரை- யங் அண்டு எனர்ஜடிக் ஹேண்டசம் பெல்லோவை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (கொஞ்சம் யோசிப்பது போலப் பாவனை செய்து விட்டு.. ) நீங்கள் எந்த ஆண்டு முடித்து விட்டு வெளியேறினீர்கள்.
நந்தகோபால்            : போன நூற்றாண்டில் ..
தலைமை        : (பதற்றத்துடன்) என்ன சொல்கிறீர்கள் நந்தகோபால்.. போன நூற்றாண்டா.. ? நம் பள்ளிக்கூடம் ஆரம்பித்தே ஐம்பது ஆண்டுகள் கூட ஆகவில்லையே. இப்போது தானே பொன்விழா நிதி திரட்டிக் கொண்டிருக்கிறோம். அடுத்தாண்டு அமைச்சர் பெருமகனாரைக் கூப்பிட்டு வெகுவிமரிசனையாகக் கொண்டாடப் போகிறோம். நமது பள்ளியின் முன்னால் மாணவர்களுக்கும் அழைப்பு அனுப்புவோம். நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.
நந்தகோபால்            : நிச்சயம் கலந்து கொள்ள மாட்டேன். ஒங்க பேக்குத் தனமும் பணத்தாசையும் இன்னும் மாறவே இல்லையே. நான் இந்தப் பள்ளியில் ஒன்னுமே கத்துக்கிடல. உலகத்தில எப்படி வாழ்றதுங்கிற கல்வியெ இந்த நிறுவனம் எனக்குச் சொல்லித் தரல. அதனால இந்தப் பள்ளியோட முன்னாள் மாணவன் என்கிற தகுதியெ இன்னையோட விட்டுடனும்கிற முடிவோட தானே நானே வந்திருக்கேன். அதெ விட்டுட்டு முன்னாள் மாணவர் நிதின்னு சொல்லி ஏங்கிட்ட பணம் வாங்க முயற்சி பண்ணாதீங்க. நிச்சயமா ஏங்கிட்ட வாங்க முடியாது. நான் பணத்தெ வாங்க வந்திருக்கேன். கொடுக்க வரல..
தலைமை        : ஆமா.. ஆமா.. நீங்க கொடுக்க வரல.. வாங்க வந்திருக்கீங்க.. ரொம்பச் சரி. ஆசிரியர் அறிமுகத்தை முடித்துவிட்டுத் தேர்வை தொடங்கி விடலாம். ஆனால் ஒரு கண்டிசன். நாங்கள் மறு தேர்வு நடத்த வேண்டும் என்றால் நீங்கள் தேர்வுக் கட்டணம் கட்ட வேண்டும்.
நந்தகோபால்: எவ்வளவு என்று சொல்லுங்கள்.. நான் வாங்கப் போகும் பணத்தில் கழித்துக் கொள்ளலாம்.
தலைமை        : இல்லை நந்தகோபால் ..தேர்வுக் கட்டணம் வெறும் அறுநூறு ரூபாய். நீங்கள் அதைப் பணமாகக் கட்ட வேண்டும். நாங்கள் உங்களுக்குத் தர வேண்டியிருந்தால் செக் போட்டுத் தருவோம். நமது பள்ளியின் நடைமுறை அது தானே.
நந்தகோபால்: சரி பணத்தை இதோ இங்கே வைக்கிறேன். தேர்வை நடத்தி விட்டு செக் எழுதிக் கொடுத்து விட்டு நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். [ ரூபாய் அறுநூறை அங்கே வைக்கிறார்]
தலைமை        : கணக்கு அதை எண்ணிப் பாருங்கள்.
கணிதம்          : [ எண்ணிப் பார்க்கிறார். வெற்றி என்பதைச் சுட்டும் விதமாக பெருவிரலைத் தூக்கிக் காட்டுகிறார்.
தலைமை        [ உயர்த்திய  அந்த விரலைப் பிடித்து எழுப்பிக் கொண்டு வந்து] இவர் தான் நமது பள்ளியின் கணித ஆசிரியர். இவரை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. பித்தகோரஸ் தேற்றம் மட்டுமல்ல, பித்துக்குளி முருகதாஸ் பாடல்களும் அவருக்கு அத்துபடி.  அவர் தான் நீங்கள் கவனமாகப் பதில் சொல்ல வேண்டிய நபர். ஆரம்பிக்கலாமா.. நீங்கள் தயார் தானே..
தலைமை        : இன்று தமிழ் ஆசிரியரும் விளையாட்டு ஆசிரியரும் மெடிகல் லீவில் இருக்கிறார்கள். ஆங்கில ஆசிரியர் ஏய்ன் லீவில் இருக்கிறார். அவர்களுக்கும் சேர்த்தே நாங்கள் தேர்வு நடத்தப் போகிறோம். தயாராக இருங்கள்.
நந்தகோபால்            : ரொம்பவும் தயாராக இருக்கிறேன்.. தேர்வுகளைச் சந்திக்க ஆசையோடு இருக்கிறேன். எனது ஆசிரியர்கள் நடத்தும் தேர்வுகள் என்னும் கோமாளித்தனத்தை எதிர்கொள்ள மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்.
வரலாறு         : மிஸ்டர் நந்தகோபால்.. உட்காரலாமே..
நந்தகோபால்            : அதெல்லாம் உட்கார முடியாது. உட்காராட்டி என்ன கொறஞ்சா போயிடும். என்னால நிக்க முடியும். நிக்கிறேன்.
கணிதம்          : ரெஸ்பெக்டட்  தலைமையாசிரியர் அவர்களே! குறித்துக் கொள்ளுங்கள். மிஸ்டர் நந்தகோபாலின் மேனர்ஸ்க்கு எக்ஸ்லெண்ட். ஆசிரியர்கள் முன்பு மாணவர்கள் உட்காரக் கூடாது என்ற நம் பள்ளியின் விதிமுறைகளை அப்படியே கடைப் பிடிக்கிறார் . எனவே , மேனர்ஸ் எக்ஸ்லெண்ட் என்று மதிப்பளிக்கப் பரிந்துரை செய்கிறேன்.         
தலைமை        : ஓ. பரீட்சை ஆரம்பிச்சிடுச்சுல்ல.. யெஸ்..யெஸ்.. ‘ மேனர்ஸ் எக்ஸ்லென்ட்’
                        [ ஒரு பெரிய போர்டில் அதை எழுதுகிறார்]
அறிவியல்      : சார்.. அதுமட்டுமல்ல. இவர் நின்று கொண்டே பதில் சொல்ல ஆயத்தமாக இருக்கிறார். அது அவருடைய உடல் வலிமையைக் காட்டுகிறது. அவரது  ‘ பிசிகல் கல்சர்’ எக்ஸ்லெண்ட் சார். ( தேடிப் பார்த்து) பி.டி. மாஸ்டர் இல்லாததால் அவர் சார்பில் மாணவர் நந்தகோபாலுக்கு விளையாட்டு மற்றும் உடல் தகுதிக்கு எக்ஸ்லெண்ட் கொடுக்கப் பரிந்துரை செய்கிறேன்.
தலைமை        : ஆமா.. ஆமா. நீங்களே பண்ணலாம்.. பிசிகல் கல்சர் எக்ஸ்லெண்ட்..
நந்தகோபால்            : [கொஞ்சம் தாழ்ந்த குரலில்] இவர்கள் நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்கள். இனி ஏமாறக் கூடாது. (சப்தமாக) இனிமே ஏமாற மாட்டேன். ரொம்ப ஜாக்கிரதையா இருப்பேன். என் காதுகளைக் கூர்மையாகத் தீட்டி வச்சிருக்கேன்.
புவியியல்       : தலைமை ஆசிரியர் அவர்களே! மாணவர் நந்தகோபால். மிகுந்த கவனத்தோடு இருக்கிறார். அதனால் அவருக்கு அலெர்ட்னஸ் எக்ஸ்லெண்ட் கொடுக்கலாம்  எனப் பர்ந்துரை செய்கிறேன்.
அனைவரும்   : ( சேர்ந்து ஒரே குரலில்) அலெர்ட்னஸ் எக்ஸ்லெண்ட்.
நந்தகோபால்            :( மொத்தக் குரல்களையும் அடக்கும் விதமாக) சைலண்ட். என் கேரக்டரை எடை போட்டது போதும்.. சப்ஜெக்ட்ல கேள்விகளைக் கேளுங்கள்.
அறிவியல்      : சார். விடாமுயற்சி..பரீட்சையை எதிர்கொள்கிறதில இருக்கிற அக்கறையும் விடா முயற்சியும் ஆச்சரியம் ஊட்டும் விதமாக உள்ளது என்பது மட்டுமல்ல. ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறது. எனவே ஆம்பிஷன் ஆல்ஷோ எக்ஸ்லெண்ட் கொடுக்கலாம் சார். கொடுத்துடுங்க சார்
நந்தகோபால்            : ( திகைத்து நிற்கிறார்)
அனைவரும்   : வவ்வவ்வே.. ஆம்பிஷன் ஆல்ஷோ எக்ஸ்லெண்ட் ( ராகத்துடன் சொல்லி கொண்டே அவரைச் சுற்றி வருகின்றனர்)
தலைமை        : ( கொஞ்சம் பதற்றத்துடன்) யோவ்.. சரித்திரம்..கேள்விகளைக் கேளுமய்யா..
வரலாறு         : ( எழுந்துவர, மற்றவர்கள் சுலபமான கேள்வியைக் கேட்கும்படி பாவனை செய்கின்றனர்)
                        மிஸ்டர் நந்தகோபால். நாங்கேட்கப் போற கேள்விக்குப் பதில் சொல்லுங்க பார்ப்போம். அயோத்தியைப் பற்றி ஐந்து பக்கக் கட்டுரை வரைக.( ஆசிரியர்கள் பக்கம் திரும்பி) எப்படி?
தலைமை        : போச்சுடா.. யோவ்.. நாமெ நடத்துறது வாய்மொழித் தேர்வய்யா.. அதில எப்படிய்யா கட்டுரை வரைவான்.
வரலாறு         : அதெல்லாம் எனக்குத் தெரியாது. வரலாற்றெ மாத்த முடியாது.
நந்தகோபால்            : (முறைப்புடன்) அயோத்தியாவது மண்ணாவது .. ராமன் ஆண்டா எனக்கென்ன? ராவணன் ஆண்டா எனக்கென்ன?
வரலாறு         : (ஒரு பதிலும் சொல்லவில்லையே என்ற திகைப்புடன்) சொல்லுங்க நந்தகோபால்..
நந்தகோபால்            : இன்னும் என்ன சொல்ல.. அதான் சொன்னேனே.. ராமன் ஆண்டா எனக்கென்ன? ராவணன் ஆண்டா எனக்கென்ன?
கணிதம்          : சரியான பதில்.. மாணவர் வரலாற்றை நிகழ்காலத்தோடு பொருத்திப் பார்த்துப் பதில் சொல்லியிருக்கிறார். ராமனுக்கு அந்தக் காலத்தில எதிரி ராவணன். இந்தக் காலத்தில எதிரி பாபர். இதைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ள மாணவர் அயோத்தியை முதலில் ராமர் ஆண்டார் என்பதையும் பின்னர் பாபர் ஆண்டார் என்பதையும் ரத்தினச் சுருக்கமாக, ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்ன? என்று சொல்லியிருக்கிறார். அத்தோடு இப்போது அங்கே மசூதி இடிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாகி விட்டது என்பதையும் உணர்த்தி விட்டார். இப்படிக் கச்சிதமாகப் பதில் சொல்லும் மாணவருக்குக் கணித ஆசிரியர்கள் நூறு சதம் மதிப்பெண்கள் வழங்குவோம். வரலாற்று ஆசிரியரும் அதையே பின்பற்றலாம் என நினைக்கிறேன்.
தலைமை        : பின்பற்றலாமே.. யோவ்.. கொடுத்திருய்யா..
புவியியல்       : அப்படியெல்லாம் விட்டுக் கொடுக்கக் கூடாது. ராமர் அயோத்தியில் தான் பிறந்தார்.எனவே ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டியே தீர வேண்டும். கட்டியே தீருவோம்.
வரலாறு         : நானூறு ஆண்டுகளாக அயோத்தியில் மசூதி இருந்தது என்பதற்கு வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களும் சான்றுகளும் உள்ளன.
புவியியல்       : வரலாற்றுச் சான்றுகள் இருக்கலாம். ஆனால் இது மக்களோட நம்பிக்கைகளோடு  தொடர்புடையது. எனவே கோயில் கட்டியே ஆக வேண்டும். இதை அரசாங்கமும் தடுக்க முடியாது; கோர்ட்டும் தடுக்க முடியாது. வேண்டுமென்றால் அரசியல் சட்டத்தையே மாற்றுவோம்.
வரலாறு         : மசூதிதான் இருந்தது.
புவியியல்       : கோயில்தான் இருந்தது.
வரலாறு         : மசூதி
புவியியல்       : கோயில் ( சண்டை தொடர.. அவர்களை விலக்கிய)
கணிதம்          : மதிப்பிற்குரிய தலைமையாசிரியர் அவர்களே! இங்கே தேர்வு நடக்கிறது; அதை நீங்கள் தான் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். யார் எந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்று வழி நடத்திட வேண்டுகிறேன்.
தலைமை        : ஆமாம். ஆமாம்.. தேர்வு நடக்கிறது. நான்.. நாந்தான். நடத்துறேன். யோவ்.. சரித்திரம் மார்க் கொடுத்துரலாமா..?
வரலாறு         : கொடுத்துடலாம். கொடுத்துடலாம். எக்ஸ்
அனைவரும்   : எக்ஸ்லெண்ட்..
தலைமை        : வரலாற்றுத் தேர்வு வெற்றிகரமாக முடிந்து விட்டது. அதில் மாணவர் நந்தகோபால் நூற்றுக்கு நூறு வாங்கியுள்ளார். அடுத்து.. அறிவியல் தேர்வு..
நந்தகோபால்            : ( தனக்குள் ) இவர்கள் எதோ தந்திரம் செய்கிறார்கள். இன்னும் உஷாராக இருக்க வேண்டும்
அறிவியல்      : ஆமாம் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். என்னுடைய கேள்வியைச் சரியாகப் புரிந்து கொண்டு பதில் சொல்லுங்கள் மிஸ்டர் நந்தகோபால்.. நீங்கள் மாதாகோயில் கடிகாரத்தைத் தூரத்திலிருந்து பார்க்கும்போது சிறியதாகத் தெரிகிறது. அருகில் வந்தால், பெரியதாகி விடுகிறது. இதற்குக் காரணம் பொருட்களின் மாயத்தோற்றம்- ஆப்டிகல் இல்லூசன் என்பது உங்களுக்குத் தெரியுமா..?
அனைவரும்   : போச்சுடா.. சொதப்பிட்டாரு.. காரியத்தெக் கெடுத்திட்டாரே..
அறிவியல்      : நந்தகோபால் நீங்கள் இதைச்  ‘சாய்ஸில்’ வைத்துக்கொள்ளலாம். இந்தக் கேள்விக்குக் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும். மனித உடம்பில் மூளை எங்கே உள்ளது. ம்.. சொல்லுங்கள்.
நந்தகோபால்            : ( திருதிருவென முழிக்கிறான். அப்படியே தலையைச் சொரிகிறான்)
அறிவியல்      : ( கையைத் தட்டி) சரியாகச் சொன்னீர்கள்.
நந்தகோபால்            : நான் பதிலே சொல்லவில்லையே..
அறிவியல்      : சரியான பதில் கிடைத்து விட்டது. அறிவியல் தேர்வு என்பது செய்முறையோடு கூடியது. அதை சரியாகப் புரிந்து கொண்ட நந்தகோபால் செய்தே காட்டிவிட்டார். மூளை எங்கே உள்ளது என்ற என் கேள்விக்கான பதிலை வாயால் சொல்லாமல் தொட்டே காட்டிவிட்டார். எனவே அறிவியல் தேர்வில் பிராக்டிகலுக்கும் சேர்த்து ‘எக்ஸ்லெண்ட் ’தர விரும்புகிறேன்.
தலைமை        : தரலாமே..
அனைவரும்   : எக்ஸ்லெண்ட்.
தலைமை        : அறிவியல் தேர்வு முடிந்து விட்டது. இப்போது புவியியல் தேர்வு தொடங்குகிறது.
புவியியல்       : திருவாளர் நந்தகோபால் அவர்களே. கேள்வியைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். நான் ஒரு முறை தான் சொல்வேன். தலைநகரின் பெயரையே தன்னுடைய பெயராகக் கொண்ட பாண்டிச்சேரி மாநிலத்தின் தலைநகர் எது?
நந்தகோபால்            : என்ன இது முட்டாள்தனமான கேள்வி. கேள்வியிலேயே பதில் இருக்கிறதே.
புவியியல்       : அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குத் தேவை பதில் மட்டும் தான்.
நந்தகோபால்            : புதுமையாகக் கேள்வி கேக்குறோம்னு நெனப்போ?
நந்தகோபால்            : ‘புதுமை’ சரியான பதில். புவியியலில் அற்புதமான ஞானம் இருக்கிறது. பாண்டிச்சேரிக்கு இன்னொரு பெயர் புதுச்சேரி. அதனைச் சுருக்கமாகப் ‘ புதுவை’ எனச் சொல்வதுண்டு. தமிழ் இலக்கணத்தில் ‘வை’ என்பது ‘மை’ எனத் திரியும் என விதி இருக்கிறது. இதையெல்லாம் தெரிந்துள்ள நந்தகோபால் ‘புதுமை’ எனப் பதில் சொல்லி இருக்கிறார். எனவே முழு மதிப்பெண் தரலாம் எனப் பரிந்துரைக்கிறேன்.
தலைமை        : தரலாம். தமிழ் அய்யா வராததால் அதற்கும் சேர்த்தே மதிப்பெண் வழங்கி விடலாம். 
                        புவியியல் எக்ஸ்லெண்ட்; தமிழிலும் எக்ஸ்லெண்ட்..
அனைவரும்.  : ஆமாம் . எக்ஸ்லெண்ட்.. எக்ஸ்லெண்ட்..
தலைமை        : மதிப்பிற்குரிய மாணவர் தொடர்ந்து சிறப்பாகவே செய்கிறார். அவரது திறமை நன்கு பளிச்சிடுகிறது. கடைசியாக கணிதத் தேர்வையும் சிறப்பாகச் செய்ய வாழ்த்துகிறேன். ம்ம்.. கணக்கு.. வேலையெ ஆரம்பிங்க.. இல்லை. இல்லே. தேர்வை ஆரம்பிங்க..
கணிதம்          : நந்தகோபால்.. நான் நடத்தும் தேர்வை அவ்வளவு வேடிக்கையாக நினைக்க வேண்டாம். நான் இப்போது உங்களிடன் இரண்டு கேள்விகள் கேட்பேன். ஒன்று எளிமையானது; இன்னொன்று கடினமானது.
நந்தகோபால்            : ஒன்று எளிமை; இன்னொன்று கடினம். கணக்குப் பாடம் நடத்த எந்த வாத்தியார் வந்தாலும் இதே தானா? ஆள் தான் மாறி இருக்கு; பாடம் ஒண்ணும் மாறினா மாறித் தெரியல.
கணிதம்          : அப்படியெல்லாம் பேசக்கூடாது. நான் ரொம்ப ஸ்டிரிக்டானவன். இந்தப் பள்ளிக்கூடம் ரொம்பத் தரமானது. ம். முதல் கேள்வி . இந்தியா இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக வங்கியிடம் வாங்கும் கடனை எக்ஸ் என வைத்துக் கொள். இதற்கு ஆண்டுதோறும் கட்ட வேண்டிய வட்டியை ஒய் எனக் கொள். அப்படியானால் , ஐந்தாண்டுகளுக்குப் பின்னால் இந்தியாவின் கடன் தொகை எவ்வளவு?
தலைமை        : யோவ் .. கணக்கு. இதுதான் நீ என்ன காப்பாத்திற லட்சணமா?
நந்தகோபால்            : இடையூறு செய்யாதீர்கள். தயவு செய்து கேள்வியைத் திரும்பச் சொல்ல முடியுமா?
கணிதம்          : சொல்ல முடியாது. உனது கவனத்தை வேறு எங்கேயும் செலுத்தியிருக்கக் கூடாது. உனக்குப் பதில் தெரியுமா? தெரியாதா?
நந்தகோபால்            : ஏறத்தாழத் தெரியும்.. இதோ சொல்கிறேன்.2508 கோடி ரூபாய். சரியான பதில் தானே.
கணிதம்          : இல்லை.. தவறான பதில். சரியான பதில் 2509 கோடி ( தலைமையாசிரியரிடம் திரும்பி)  இவரைப் பாஸ் போட முடியாது. கணிதத்தில் நந்தகோபாலைப் பெயிலாக்கும்படி வேண்டுகிறேன்.
நந்தகோபால்            : அதுதான் எனக்கு வேண்டும். பெயிலாவதுதான் எனது விருப்பம். என் பணம் எனக்குக் கிடைக்குமா.?
தலைமை        : கணக்கு காரியத்தைக் கெடுத்திட்டயே..
கணிதம்          : என்னை மன்னிக்க வேண்டும். இந்தப் பள்ளியின் பெருமையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னுடையது. தவறான பதில் சொன்ன ஒருவருக்கு கணிதத்தில் பாஸ் போட முடியாது. அவருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடலாம்.
                        [ நந்தகோபால் தலைமையாசிரியரைப் பிடித்து உலுக்க, ஆசிரியர்கள் நந்தகோபாலைப் பிடித்து இழுக்கின்றனர்]
கணிதம்          : மிஸ்டர் நந்தகோபால்.. உங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அந்தத் தொகை எவ்வளவு.
நந்தகோபால்            : இதோ ஒரு நிமிடத்தில் எனக்குச் சேர வேண்டிய பணம் எவ்வளவு என்று சொல்கிறேன். ( மனத்திற்குள் கணக்குப் போட்டு) எனக்குச் சேர வேண்டிய தொகை ரூபாய் 16901.
கணிதம்          : சரியான தொகை தானே.
நந்தகோபால்            : சரியான தொகை தான்.
கணிதம்          : தனி வட்டி போட்டீர்களா.? கூட்டு வட்டியா?
நந்தகோபால்            : கூட்டு வட்டி தான். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அசலுடன் சேர்த்து வட்டி கணக்கிட்டுள்ளேன். மிகச் சரியான தொகை. ஒரு ஆண்டுக்கு 2000 ரூபாய். மூன்று வருஷத்திற்கு ஆறாயிரம் ட்யூசன் பீஸ். ஸ்பெஷல் பீஸ் ஒரு 5000 ரூபாய். லேப் பீஸ், பாஸ் பீஸ், பெயில் பீஸ், டான்ஸ் பீஸ், கேம்ஸ் பீஸ் எல்லாம் சேர்த்து 13000 ரூபாய். வட்டி 3901ரூபாய். ஆக மொத்தம் ரூபாய் 16901. மிகச் சரியான தொகை இது.
கணிதம்          : ஆம் மிகச் சரியான தொகைதான்.
நந்தகோபால்            : இந்தப் பணத்தை எப்பொழுது தருவீர்கள். பணமாகவா? செக்காகவா?
கணிதம்          : அதுதான் கிடையாது. நீ கணிதத்தில் பாஸாகி விட்டாய். என்னுடைய இரண்டாவது கேள்விக்குச் சரியான விடையைச் சொல்லி விட்டீர்கள். அதுவும் கஷ்டமான கேள்விக்கு.
நந்தகோபால்            : என்ன.. என்ன கேள்வி. என்னிடம் நீங்கள் கேட்கவே இல்லையே..
கணிதம்          : உனக்குச் சேர வேண்டிய தொகை எவ்வளவு என்பதுதான் எனது இரண்டாவது கஷ்டமான கேள்வி.
நந்தகோபால்            : ( தலையில் கையை வைத்து உட்காருகிறான்)
கணிதம்          : தலைமையாசிரியர் அவர்களே! நந்தகோபால் எனது இரண்டு கேள்விகளில் ஒன்றுக்குச் சரியான பதிலையும், இன்னொன்றுக்குச் சற்றுப் பிழையான பதிலையும் தந்துள்ளார். எனவே அவருக்குக் கணிதத்தில் எக்ஸ்லெண்ட் தரமுடியாது. பர்ஸ்ட் கிளாஸ் தரலாம்.
தலைமை        : ஏன் தர முடியாது. என்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்திக் கணிதத்திலும் ‘எக்ஸ்லெண்ட்’ தருகிறேன்.
[ நந்தகோபால் கோபமாக முன்னேற , ஆசிரியர்கள் அனைவரும் அவரை நெருங்கி ‘எக்ஸ்லெண்ட்’ என்ற கோஷத்துடன் அவனைத்தள்ளி முதுகில் குத்துகின்றனர்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்