அன்பரே! தாங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.


கோயில்களுக்குப் போவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பதைத் தெரிந்து கொண்ட எனது உறவினர்கள் பலமுறை என்னை அழைத்திருக்கிறார்கள். அவர்களின் அழைப்பை நிராகரிக்க ஏதாவது ஒரு காரணமும் வேலையும் இருந்து கொண்டே இருந்தது. அவற்றைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டு ஏற்றுக் கொண்டிருந்தால் அவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கலாம். அந்த வாய்ப்பை நான் அவர்களுக்குத் தரவே இல்லை.
உறவினர்களின் அழைப்பை மட்டும் அல்ல; திருவேங்கடவனின் அழைப்பையே இரண்டுமுறை நிராகரித்திருக்கிறேன்.

நான் வேலை தேடும் காலத்தில் வேங்கடவன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணி காலியாக இருக்கிறது என விண்ணப்பம் செய்தேன்; நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டேன்; ஆனால் போகவில்லை. அப்படிப் போகாமல் இருந்ததற்கான காரணத்தைச் சொன்னால் எல்லோரும் சிரிக்கக் கூடும். மற்றவர்கள் சிரிப்பார்கள் என்பதைக் கூட விட்டு விடலாம். அந்தக் காரணத்தை நினைத்துக் கொண்டால் எனக்கே இப்போது சிரிப்பு வருகிறது. படிக்கிற காலத்தில் அதிதீவிர நாத்திகன் என என்னை நினைத்துக் கொண்டவன். நாத்திகம் பேசும் ஒருவன் கடவுள் பெயரில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவது சரியாக இருக்குமா? என மனச்சாட்சி கேட்க, அதற்கு மதிப்பளித்து அந்த நேர்காணலுக்குப் போகாமல் விட்டுவிட்டேன்.

இன்னொருமுறை ஒரு மாநாடு. தமிழ் ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் தங்கள் புலைமையை வெளிப்படுத்த நடத்தப்படும் அந்த மாநாடு திருப்பதியில் நடந்தது. நான் கட்டுரை அனுப்பியிருந்தேன்; பயணப்படியுடன் கூடிய அழைப்பும் வந்தது; அப்போதும் போகவில்லை.

உண்மையில் அந்தப் பல்கலைக்கழகம் திருவேங்கடவனைப் பெயரில் மட்டும் தான் வைத்திருக்கிறது. திருப்பதி தேவஸ்தானம் தனது உண்டியல் பணத்தில் எல்லாம் நடத்தவில்லை; ஆந்திர அரசாங்கம் தான் நடத்துகிறது. ஆந்திர அரசும், மைய அரசின் பல்கலைக்கழக மானியக்குழுவும் சேர்ந்துதான் சம்பளம் தருகின்றன. அதனால் திருப்பதி வேங்கடவனின் பவனியெல்லாம் பல்கலைக்கழக வளாகத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. இப்போது யோசித்துப் பார்த்தால், பெயரை விடவும் திருப்பதி பாலாஜி எனது நாத்திகத்தைச் சூறையாடி ஆத்திகனாக்கி விடுவானோ என்ற பயந்துதான் அங்கே போவதைத் தவிர்த்தேன் என்று தோன்றுகிறது. ஆம் அதுதான் உண்மைக் காரணமாக இருந்தது. ஆம் உண்மைகள் ஒன்றாக இருப்பதில்லை தான். உண்மை எதுவானால் என்ன? இருந்து விட்டுப் போகட்டும். அப்போது நான் ஊகித்துக் கொண்ட காரணம் மடத்தனமானது என்பது மட்டும் இப்போது புரிகிறது.

செம்மொழி நிறுவனம் நடத்தும் சிலப்பதிகாரப் பயிலரங்கில் பயிற்றுநராகக் கலந்து கொண்டு பயிற்சியளிக்க வேண்டும் எனக்கேட்டுக் கடிதம் வந்தபோது திருப்பதிக்குச் செல்வது என முடிவு செய்தேன். ஆம் இந்தமுறை வாய்ப்பைத் தவற விடப்போவதில்லை. இப்படியொரு முடிவை எடுக்கும்படி தூண்டியது பாலாஜியின் சக்தி என உறவினர் ஒருவர் சொன்னார். இளங்கோவடிகளின் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமும், அதன் நாயகியான கண்ணகியின் சக்தியும் தான் என்னை திருப்பதிக்கு அழைத்தது எனச் சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இதுவும் உண்மைதான்; அதுவும் உண்மைதான். ஆம் உண்மைகள் பலவாக இருக்கின்றன.
சென்னை வரை முன்பதிவு செய்த ரயிலில் போய் இறங்கினேன். காலையில் அந்த ரயில் சென்னையில் இறக்கி விட்டது. திருப்பதிக்குச் செல்லும் ரயிலின் புறப்படும் நேரம் மாலையில் தான்.  முன்பதிவில்லாத ரயில் பெட்டியில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி மெயில் கிளம்பிய போது மாலை 4.30. திருப்பதி சந்திப்புக்கு அந்த ரயில் போய்ச் சேரும்போது இரவு 8.25. தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி ஆந்திரத்தின் எல்லைக்குள் நுழையும்போது வித்தியாசம் ரயில் நிலையங்களின் பெயர்ப்பலகைகளில் மட்டுமே தெரியவில்லை. செம்மண் புழுதியும் அழுக்குப் படிந்த கட்டிடங்களுமாக ஆந்திராவின் சிறுநகரங்கள் இன்னும் பழைய நிலையில் தான் இருக்கின்றன. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகத் தமிழ்நாட்டுக்கிராமங்களும், சிறுநகரங்களும் அடைந்து வரும் மாற்றங்களை ஆந்திரத்தில் காணமுடியவில்லை.

திடீரென்று அந்தச் சந்தேகம் வந்து பையைத் திறந்து பார்த்தேன். நான் நினைத்து சரிதான். பல்கலைக்கழகத்திலிருந்து அனுப்பிய கடிதத்தை நான் எடுத்து வரவில்லை. அதில் தான் நான் தங்க வேண்டிய விடுதியின் பெயரும், அதன் முகவரியும் இருக்கிறது. அந்தக் கடிதத்தை எடுத்து வைக்க மறந்து விட்டேன். கடிதத்தைக் கட்டாயம் உடன் கொண்டு போக வேண்டும் என்பதில்லை. ஆனால் கையில் இருந்தால் ஒரு தெம்பு உண்டு. ஆனாலும் அச்சம் எதுவுமில்லை. கையில் அலைபேசி இருக்கும் போது ஏன் கவலைப்பட வேண்டும். பயிலரங்க ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொண்டேன். அவர் நான் போக வேண்டிய விருந்தினர் இல்ல முகவரியைச் சொல்லி விட்டு, அங்கு என்னைக் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளவரின் அலைபேசி எண்ணைக் குறுந்தகவலாக அனுப்பி வைக்கிறேன் என்றார். அவரது ஏற்பாடுகள் மகிழ்ச்சியாக இருந்தது.

திருப்பதி ரயில் சந்திப்பில் இறங்கி வாசலை நோக்கி வந்தேன். கூட்டம் கூட்டமாக மக்கள் அலையும் மனிதத்தலைகளில் பலர் மொட்டையடித்திருந்தார்கள். திருப்பதி மொட்டை பற்றிய வழக்கு மொழிகளும் சொலவடைகளும் நினைவுக்கு வந்தன. மொழிக்கிடங்கு பண்பாட்டு அசைவுகளோடு தான் இயங்குகின்றன என்பதும் நினைவில் வந்து போயின. வாசலை நெருங்க நெருங்க மனசு கொஞ்சம் திக்திக்கென்றது. ஆட்டோக்காரரிடம் எந்தமொழியில் பேசுவது என்பது தான் அந்தப் பதற்றத்தின் பின்னணி. தமிழ் தெரியாத ஆட்டோக்காரரிடம் தமிழில் பேசுவது என்னைக் காட்டிக் கொடுத்து ஏமாற்றத் தூண்டலாம். ஆங்கிலத்தில் பேசுவது அராஜகம். தெலுங்கில் பேச எனக்குச் சரியாக வராது.

வாசலில் தெரிந்த அந்தப் பதாகை எனது பதற்றத்தை அடியோடு போக்கி விட்டது. அந்தப் பதாகையைத் தாங்கியவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்று உறுதியாக நம்பினேன். நெருங்கிப் போய்ச் சிரித்தேன். அவர்களிடத்தில் பல்கலைக்கழகம் நடத்தும் பயிலரங்கிற்கு வல்லுநராக அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று சொன்ன போது ’ரொம்ப மகிழ்ச்சி’  ஆங்கிலத்தில் சொல்லி கைகுலுக்கி வழி நடத்தினார் ஒருவர். தமிழ் படிக்கும் மாணவர் என்றாலும் ஆந்திராவில் நல்ல ஆங்கிலம் பேசுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர் காட்டிய வாகனத்தில் அமர்ந்து கொண்டேன். அவர்கள் பிடித்திருந்த பதாகையில் இருந்த ஆங்கில வாசகத்தை, “அன்பரே! தாங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்” என மொழி பெயர்த்துக் கொண்டேன்.

எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் இதுபோல வருபவர்களுக்கு வழிகாட்டுவதற்காகப் பதாகைகளோடு பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் நிற்பார்கள். வருகின்ற பேராசிரியர்களோடு உரையாடி நட்பை உருவாக்கிக் கொள்வார்கள். அந்தப் பழக்கம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் சில சமயங்களில் பயன்படும் என்பதால் ஆய்வாளர்கள் மிகுந்த மரியாதையோடு கவனித்து அழைத்துச் செல்வார்கள்.  நான் அமர்ந்திருந்த இருக்கையில் இன்னும் இருவர் வந்து அமர்ந்தவுடன் வண்டி புறப்பட்டுச் சென்று பத்தாவது நிமிடத்தில் ஒரு நட்சத்திர விடுதியின் முன்னால் நின்றது. முன்னாள் இருந்த மாணவர்கள் கதவைத் திறக்க மற்ற இருவரும் இறங்கி விட்டனர். நானும் இறங்க வேண்டும் என்பது போல அவர்கள் பார்த்த போதுதான் நான் அவர்களிடம் தமிழில் கேட்டேன். அவர்களுக்குத் தமிழ் தெரிந்திருக்கவில்லை.
அந்த ஆய்வு மாணவர்கள் உயிரி தொழில் நுட்பத்துறை நடத்தும் கருத்தரங்க வல்லுநர்களை அழைக்கவே ரயில் சந்திப்பிற்கு வந்ததாகவும், அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடமே இந்த நட்சத்திரவிடுதி என்றும் சொல்லிவிட்டு, பல்கலைக்கழக விருந்தினர் விடுதி எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என்றும் சொன்னார்கள். இங்கிருந்து நீங்கள் ஆட்டோவில் செல்லலாம் என்றனர். இரவு உணவை அங்கே முடித்து விட்டு  ஆட்டோவில் ஏறிப் போனேன். ஆட்டோவிலிருந்து இறங்கி விருந்தினர் இல்லத்தின் வாசலைத் தட்டியபோது இரவு பத்துமணி.

விருந்தினர் விடுதியின் பொறுப்பாளர் தெலுங்கில் பேச, நான் தமிழில் பேச சிக்கல் ஆரம்பமாகி விட்டது. என்னை அழைத்த தமிழ்ப் பேராசிரியருக்கு அலைபேசியில் முயற்சி செய்த போது தெலுங்கில் பேசியது. அநேகமாக அதன் உரிமையாளர் எந்தப் பதிலும் சொல்லத் தயாரில்லை என்பதைத்தான் தெலுங்கில் சொல்வதாகப் புரிந்து கொண்டேன். ஒரு முறை இருமுறை அல்ல; பல முறை அதே பதில் தான் கிடைத்தது. நாத்திகனான நம்மைப் பாலாஜி சோதிக்கிறான் என்று நினைக்கத் தூண்டியது மனம். விடுதியில் அறை இல்லை என்றால் திரும்பவும் நகரத்திற்குள் சென்று தங்கும் விடுதிகளில் அறை தேட வேண்டும். எரிச்சலாக இருந்தது. அழைத்தவர் நன்றாக ஏற்பாடு செய்திருக்கிறார் என்று சொன்ன மனம் அவரது கவனக்குறைவு பற்றி எடுத்துச் சொல்லியது. அவர் யாராவது ஒருவரை ரயில்வே நிலையத்திற்கு அனுப்பியிருக்கலாமே என்று நினைக்கத் தூண்டியது.
பல்கலைக்கழகத்தில் வேறு விருந்தினர் விடுதி ஏதேனும் உண்டா எனத் திரும்பவும் கேட்டேன். இல்லை; இது ஒன்று தான் பல்கலைக்கழக விருந்தினர் விடுதி என்று பதில் சொல்லி விட்டுத் தமிழ்த்துறைக்கு ஒதுக்கப்பட்ட நான்கு அறையிலும் நாலுபேர் இருப்பதாகச் சொன்னார். எல்லா அறைகளிலும் ஆட்கள் இருப்பதாகச் சொன்னார். என்னை அழைத்தவரைத் திரும்பவும் அலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். அந்த அலைபேசி அணைத்து வைக்கப்பட்டுவிட்டது என்பதை ஆங்கிலத்தில் சொன்னபோது புரிந்து கொண்டேன்.

கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல என்பார்களே அதுதான் அப்போதைய நிலைமை. நாளைக்காலையில் பயிலரங்கில் பயிற்சி அளித்து விட்டு சிறப்பு வரிசையில் பணம் கட்டிப்  பார்த்து விடுவது என்ற திட்டம் தப்பி விடும் போல் தோன்றியது.  ”விரைந்து முடிவு எடு; பேருந்து நிலையத்திற்குப் போ; பேருந்தைப் பிடித்துச் சென்னைக்குத் திரும்பு”  என மனம் விரைவுபடுத்தியது. ஆனால் உடல் அசைய மறுத்தது. வாசலைப் பார்த்து நின்ற போது அந்த நாலுபேரும் வந்தார்கள். அந்த நான்கு பேரில் ஒருவரை ஏற்கெனவே தெரியும். இரண்டு முறை வெவ்வேறு கருத்தரங்குகளில் சந்தித்திருக்கிறேன்; பேசியிருக்கிறேன்; ஆனால் பெயர் தெரியாது.

பெயர் தெரியாவிட்டால் என்ன? பாலாஜி என்று வைத்துக் கொள்வோம். மனிதனின் தவிப்பைப் புரிந்து கொண்டு உதவ வருபவன் தானே இறைவன்.

சார் வணக்கம்! என்னை ஞாபகமிருக்கா? என்று சொல்லிக் கையை நீட்டினார். அவர் நீட்டிய கைகளை இறுகப் பற்றினேன்.  பெயரைச் சொல்லாமல் நீங்க என்று இழுத்தேன். ” சித்தார்த்தன்” திருச்சூரில் ஒரு நாடகவிழாவில் சந்தித்தோம். அவரது தமிழில் மலையாளம் கலந்திருந்தது. சித்தார்த்தன் திருமாலின் எந்த அவதாரப் பெயர் என மனம் நினைத்துப் பார்க்க முயற்சி செய்யவில்லை.

திருப்பதியிலிருந்து திருமலைக்குப் பொய் அடைந்த வியப்புகளை இன்னொரு முறை பேசலாம்.

கருத்துகள்

மதுரை சரவணன் இவ்வாறு கூறியுள்ளார்…
arumaiyaana vivarippu.. naaththikam aaththikaththai venrathu mikka makilchchi.. peyaril kkuuta ungkal veruppu viyappai kaattukirathu... vaalththukkal

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்