மரணத்தை எதிர்கொள்ளும் சாகசப் பயணம்

மனிதர்களின் பயணங்களுக்குப் பின்னால் வெறும் கொண்டாட்ட மனநிலை மட்டுமே இருப்பதில்லை. திகைத்து நிற்கும் சாகசங்களும் தேவைப்படுகின்றன. தூக்கம் வராமல் போனதற்கு அந்த சாகசப் பயணமே காரணம் என்று தோன்றியது. நடை பயணங்களாலும்சரி, வாகனப் பயணங்களானாலும்சரி அதன் முடிவில் உடல் ஓய்வை எதிர்பார்க்கவே செய்கிறது.
நீண்ட பயணங்களுக்குப் பின் கிடைக்கும் ஓய்வும் தூக்கமும் பயணங்களை அசைபோடுவதற்கான வாய்ப்புகளாகி விடும் சாத்தியங்கள் கொண்டவை.

காலையில் கிளம்பி மாலையில் வீடு திரும்பி விடும் குறும்பயணங்களுக்குப் பின்னால் அசை போடுவதற்கு ஒன்றும் இருப்பதில்லை. அதிலும் ஏற்கெனவே சென்று வந்திருந்த இடங்களுக்கே திரும்பவும் போகும்போது நினைத்துப் பார்த்துக் கொள்ள என்ன இருக்க முடியும்?. இந்தப் பயணத்தை வெறும் குறும்பயணமாக இல்லாமல் சாகசப் பயணமாக ஆக்கிக் கொண்டதால் அச்சமும் திகிலும் சேர்ந்து இரவின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டன.

மேற்குத் தொடர்ச்சி மலையின் கிளைகளை இணைக்கும் பாபநாசம், சேர்வலாறு, காரையாறு அணைகளுக்கு ஐந்து தடவைக்கு மேல் போயிருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் பகலில்; இந்த முறை போனது இரவில். அரைநிலா வெளிச்சத்தில். சிறுத்தைகளும், மான்களும், காட்டுப் பன்றிகளும், யானைக்கூட்டங்களும் வசிக்கும் முண்டன் துறை-களக்காடு வனச்சரகத்திற்குள் இரவுப் பயணம் சாதாரண மனிதர்களுக்கு ஒரு சாகசப் பயணம்தான்.

இன்பச் சுற்றுலாவோ பக்திச் சுற்றுலாவோ ஒரே நாளில் முடியும் குறும்பயண வாய்ப்புகள் நெல்லைவாசிகளுக்கு அதிகம். வைணவர்கள் என்றால் நவதிருப்பதிகள்; சைவர்களென்றால் தாமிரபரணிக்கரைச் சிவன் கோயில்கள் என ஒரே நாளில் சென்று வர முடியும். இசுலாமியர்கள் என்றால் காயல்பட்டினம், ஏர்வாடி, உவரி எனப் பள்ளிவாசல்கள் நிரம்பிய ஊர்கள் இருக்கவே இருக்கின்றன. கிறித்தவர்களுக்கும் மாதாகோயில்களும் தேவாலயங்களும் இருநூறாண்டுப் பழைமையோடு நிற்கவே செய்கின்றன.

திருநெல்வேலியிலிருந்து காலையில் கிளம்பி முன்னிரவில் வீடு திரும்பும் இன்பச் சுற்றுலா இடங்கள் நிறைய உண்டு. அய்யன் திருவள்ளுவனும், அம்மன் குமரியும், ஆன்மீகவாதி விவேகானந்தரும் ஒருசேர நினைவுக்கு வரும் கன்னியாகுமரியே இரண்டு மணிநேரப் பயணம் தான். அதிகாலையில் நெல்லைக்கு வந்து செல்லும் கன்னியாகுமரி விரைவு வண்டியில் ஏறினால் சூரிய உதயம் பார்க்க குமரிமுனைக்குப் போய்விடலாம். தெற்கே இரண்டு மணிநேரப் பயண தூரத்தில் குமரிக்கடல் இருப்பது போல மேற்குத்தொடர்ச்சி மலைக்கூடுகளில் தென்மலை இருக்கிறது. செங்கோட்டையைத் தாண்டியவுடன் கேரள எல்லையாக நின்று வரவேற்கும் தென்மலையில் காலை தொடங்கி முன்னிரவு வரை இருந்து, இசை நீரூற்றுக் காட்சியையும் பார்த்துவிட்டு இரவில் நெல்லை திரும்பி விடலாம். பகலில் படகுப் போக்குவரத்து, தாவரவியல் பூங்கா, தொங்குபாலம், சிற்பக்காட்சிகள் எனப் பார்ப்பதற்கு நிறைய உண்டு

சாரல் வீசும் ஜூன், ஜூலை மாதங்களில் திருநெல்வேலியிலிருந்து காலையில் கிளம்பி குற்றாலத்திற்குச் சென்று பேரருவி, தேனருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, பழைய குற்றால அருவி என ஒவ்வொன்றாகக் குளித்து விட்டு மாலையில் வீடு திரும்புவது போலவே மாஞ்சோலைக்கும் கூட சிறுபயணங்களை மேற்கொள்ள முடியும். காலையில் கிளம்பும் அரசுப் பேருந்தில் ஏறி மாஞ்சோலையில் இறங்கி அடுத்தடுத்து வரும் பேருந்துகளில் நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி, குதிரைவெட்டி என ஒவ்வொரு தேயிலைத் தோட்டங்களையும் பார்த்துக் கொண்டே கோதையாறு அணைக் கட்டு வழியாகக் கடைசிப் பேருந்து பிடித்து நெல்லை வந்து சேர்ந்து விடலாம். மாஞ்சோலையில் தேயிலை பயிரிடலாம் எனக் கண்டுபிடித்த வெள்ளைக்காரர்கள் கோல்ப் விளையாடிக் களித்த அந்த மைதானத்தில் விளையாடுவது போலப் பாவனை செய்து படம் பிடித்துக் கொள்ளலாம்.வரும்போது மணிமுத்தாறு அருவியில் சிறுகுளியலும் போடலாம்.

அரசுப் பேருந்தில் தனியாளாகப் போனால் மாஞ்சோலைக்குப் போய்வர எந்த அனுமதியும் வாங்க வேண்டியதில்லை. உங்கள் சொந்த வாகனத்தில் செல்வதாகவோ, தனியார் வாகனத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு போவதாக இருந்தால் வனத்துறையிடம் அனுமதி வாங்கியாக வேண்டும். அது இருந்தால் தான் பர்மா-மும்பை வணிகக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களுக்குள் நீங்கள் பயணம் செய்ய முடியும். கொடைக்கானல், ஊட்டி என பணம் பிடுங்கும் மலை வாசஸ்தலங்களை விடவும் கூடுதல் ரம்மியத்தோடும், குளிருமல்லாத வெயிலுமல்லாத தட்ப வெப்பத்தோடும் இருக்கும் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களுக்குள் போய்வரும் அனுபவம் தனியானது. பக்கத்திலிருக்கும் திருநெல்வேலிக்காரர்களில் எத்தனை பேர் அந்த பச்சைப் பசுங்கொழுந்துகளைக் கண்களால் தடவிப் பார்க்க ஆசைப்பட்டிருப்பார்கள்; போய்வர வேண்டும் என விரும்பியிருப்பார்கள் எனத் தெரியவில்லை.

இந்த இடங்களுக்கெல்லாம் பல தடவை குறும்பயணங்களாகப் போய்வந்திருக்கும் நான் இந்த முறை பாபநாசம் காட்டுக்குள் சாகசப் பயணத்திற்குத் தயாரானேன். வாகனத்தில் அதிக சக்தியுடன் கூடிய விளக்குகளைப் பொருத்திக் கொண்டு காட்டு விலங்குகளை அசையாமல் நிறுத்திப் பார்க்கும் ஆசையை மூட்டிய நண்பர் வேண்டுகோளுக்குச் சரியென்று சொல்லி விட்டேன். சக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சத்தில் காட்டு மிருகங்கள் அசையும் வழியறியாமல் திகைத்து நிற்பதைக் காணலாம் என்று சொன்னதைக் கேட்டுக் கிளம்பி விட்டேன். அதற்கான அனுமதியையும் ஏற்பாடுகளையும் அந்த நண்பரே செய்து விட்டு என்னைக் காட்டுக்குள் முன்னிரவு ஒன்பது மணிக்கு மேல் அழைத்துச் சென்றார்.

கானுயிர்களுக்குள் தான் எத்தனை வகைகள்?. தனது இருப்பைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கும் சில்வண்டுகள் தொடங்கி அசைந்து வரும் பாறையென நடந்து போகும் யானைகள் வரை முண்டன் துறை- களக்காடு வனச் சரகத்தில் உலாவுகின்றன. இந்தியக் காடுகளில் இருக்கும் சிறுத்தைப்புலிகளில் கணிசமான எண்ணிக்கை இருப்பதாகக் காட்டிலாகா அவ்வப்போது தரும் தகவல்கள் செய்தித்தாள்களில் வரும். நாங்கள் சென்ற வாகனம் காட்டுக்குள் நுழைந்த பத்து நிமிடத்திற்குள் இரண்டு மிளாக்கள் நின்றிருப்பதைப் பார்க்க முடிந்தது. குதிரை உயரத்திற்கு வளர்ந்திருந்த அந்த மிளாக்கள் விளக்கு வெளிச்சத்தில் அசையாமல் நின்றன. மிருகங்களின் மின்னும் கண்களைப் பொன்னுக்கு உவமையாகச் சொல்வது அவற்றின் கண்களை அவமதிப்பதாகும்.

தொடர்ந்து வாகனம் நகர்ந்து கொண்டே இருந்தது. குரங்குகளும் கீரிகளும் இரவிலும் மனிதத் தொல்லையைத் தாங்க முடியவில்லையே என்று நினைத்தபடியே ஓடிக்கொண்டிருந்தன. மலைமேல் இருக்கும் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்லும் சாலையில் போகலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த போது யானைப் பிளிறலா? பன்றி உறுமலா என்று கணிக்க முடியாத பெருஞ்சத்தம் கேட்டது. தூரத்திலிருந்து வருகிறது என்றால் யானைச் சத்தம்; பக்கத்தில் இருந்தால் பன்றியின் உறுமல் என்று விளக்கிக் கொண்டிருந்தார் அழைத்துச் சென்ற நண்பர். பன்றியில் கேளல் என்னும் வகையினம் இந்தக் காட்டுக்குள் அதிகம் என்றார். அவர் இரவிலும் பகலிலும் காட்டுப் பயணங்களை விரும்பி மேற்கொள்பவர். சத்தங்களை வைத்து என்ன மிருகம் அருகில் இருக்கிறது என்பதைச் சொல்லுவார்.

மிளாக்களும் மான்களும் சாலையோரங்களில் நின்று வேடிக்கை காட்டின. இரவில் கானுயிர்களைக் காணும் ஆசையோடு வரும் மனிதர்களை ஏமாற்றாத மிருகங்கள் மான்களும் முயல்களும் மட்டும் தான் போலும். நம்மை மகிழ்விக்கலாம் என வரும் அவற்றைத் தான் மனிதர்கள் சுலபமாக அடித்துச் சாப்பிட்டு விடுகிறார்கள். எப்போதாவது தென்படும் புலியின் கறியைத் தின்னும் ஆசை ஏன் மனிதனுக்கு வருவதில்லை? ஆம். வலியவர்கள் உண்கிறார்கள்; சாதுவானவர்கள் எப்போதும் எங்கும் இரையாகத்தான் வேண்டும் போலும். மனித நியதியைப் போல விலங்கு நியதிகளும் இருக்கக் கூடும்.

புலிகள் சரணாலயம் என்று வழியெங்கும் பலகைகள் வைக்கப்பட்டிருந்தாலும் புலிகளில் ஒன்றை நேரில் பார்க்கும் ஆசையை மனம் விரும்பியும் விரும்பாமலும் இயங்கியது. புலியை நேரில் பார்த்து அதைப் படம் பிடித்துவிட்டால் நமது சாகசம் நிறைவேறிய திருப்தி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். “உங்களுக்கு யோகமிருந்தால் சிறுத்தையைப் பார்த்து விடலாம்” என்றார். சிறுத்தைகள் எப்போதும் தரையில் இருக்காது; மரங்களின் கிளைகளில் இலைகளோடு இலையாகப் படுத்துக் கிடக்கும்; விளக்குகளின் வெளிச்சம் கண்ணுக்கு நேராக அடிக்கப்பட்டால் அசையாமல் கிடக்கும்; பக்கவாட்டில் வெளிச்சம் பட்டால் பாய்ந்து வரவும் வாய்ப்புண்டு என்று சொன்னபோது புதுவகைப் பூவொன்றின் வாசம் போல நாசியுணர்ந்தது; நாமறியாத மிருகவாசனையோ என்று மனம் பீதியுற்றது. சிறுத்தை வராமல் இருப்பதே எனது யோகம் என்று உள் மனம் நினைத்துக் கொண்டது. மின்மினிப்பூச்சிகளோடு சாரல் மழை போட்டி போட்டது; காட்டின் மணமும் மண்ணின் மணமும் சேர்ந்து எங்கள் வாகனத்தை அடிவாரத்தை நோக்கித் திருப்பி விட்டன.

இரண்டு மணிநேரம் காட்டுக்குள் இருந்துவிட்டு அடிவாரத்தில் இருந்த தங்கும் விடுதிக்கு வந்தபோது காடு கூடவே வருவது போல இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியில் கானுயிர்களைக் காட்டும் அனிமல் பிளானட் அலைவரிசையில் கண் நின்றது.கூட்டணிக் காட்சிகள் மாறியிருக்கிறதா? என அறியும் ஆசையில் செய்தி அலைவரிசைக்குத் தாவிவிட்டு அணைத்துவிட்டேன். தூக்கம் வராமல் கண் காட்டின் இருட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தது.
தாவி ஓடிய முயலோடு மனமும் தாவி ஓடியது. நல்லவேளை சிறுத்தையைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என நினைத்துக் கொண்டே சிறுத்தை ஒன்றைப் பார்த்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என மனமும் யோசித்தது. மரணத்தை அண்மையில் சந்திக்கும் காட்சியாக இருந்திருக்குமோ என அச்சம் வந்து விலகியது. ஆம் மரணம் தானே அச்சத்தின் அடித்தளம்.

அடுத்த நாள் காலையில் கண்விழித்தபோது தொலைக்காட்சியில் அந்தச் செய்தி ஓடிக்கொண்டே இருந்தது. ஜப்பானில் சுனாமி. இந்தியாவிற்கு ஆபத்தில்லை. எழுந்து உயரும் கடலின் சக்தி பல ஆயிரம் சிறுத்தைகளின் வீரியம் கொண்டது என்பது அப்போது புரிந்தது. பின்னங்கால்களை நீருக்குள் உதைத்து முன்கால்களால் அறைந்து அறைந்து மனிதத் தயாரிப்புகளை நொறுக்கிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தது கடல் நீர். உயர்ந்து நின்ற கட்டடங்களும் கப்பல்களும் கார்களும் நீரில் மிதக்கும் பந்தாக அசைந்து போய்க் கொண்டே இருந்தன.

ஆறு வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் ஏற்பட்ட சுனாமியால் உறைந்த முகங்களைச் சில மாதங்கள் கழித்து கடலூரிலும் நாகப்பட்டினத்திலும் இறைச்ச குளத்திலும் போய் பார்த்தபோது அதன் கொடூரத்தை வார்த்தைகளாக மாற்றிச் சொன்ன நபர்கள் நினைவுக்கு வந்தார்கள். மனிதர்கள் விரும்பும் சாகசப் பயணங்களைப் போல இயற்கையும் அவ்வப்போது சாகசப் பயணங்களை விரும்பும் போலும். இயற்கையின் உச்சபட்சச் சாகசப் பயணம் சுனாமியாக இருக்குமோ?

சுனாமி இயற்கை மேற்கொள்ளும் ஒருநாள் பயணம்







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்