தூரம் அதிகம்; நேரம் குறைவு

தஞ்சையின் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிய போது நேரம் காலை 6.35. நெல்லையில் நேற்றிரவு கிளம்பிய நேரம் 11.35. ஏழுமணி நேரப் பயணத்தில் வந்து சேர்ந்தாகி விட்டது. இத்தனைக்கும் ஒரே பேருந்தில் பயணம் செய்யவில்லை. இடையில் மதுரையில் இறங்கி முக்கால் மணி நேரம் காத்திருந்து அங்கிருந்து கிளம்பும் இன்னொரு அரசுப்பேருந்ததைப் பிடித்துத்தான் வந்தேன்.
சரியாகச் சொல்வதானால் மொத்தப் பயண நேரம் 6 மணி நேரம் 20 நிமிடங்கள். நான்கு வருடத்திற்கு முன்பு இதே போல் திருநெல்வேலி யிலிருந்து தஞ்சைக்கு இரவு 11.30-க்குப் பயணத்தைத் தொடங்கினேன். மறுநாள் காலை 8.30 -க்குத் தஞ்சையை அடைந்தேன். அப்போது பயணநேரம் 9 மணி.

இந்த முறை இரண்டரை மணிநேரம் முன்னதாக வந்து சேர்ந்து விட்டேன். வேகமாக வந்ததற்கு ஓட்டுநர் மட்டுமே காரணமல்ல; போடப் பட்டுள்ள நான்குவழிச் சாலைகளும் பாலங்களும்கூடக் காரணம்தான். நாம் செல்லும் வாகனம் அதிவேகமாகப் போகும் போது நமது மனம் அச்சவுணர்வுக்குள் தள்ளப்படும் அதே நேரத்தில் வேகம் தரும் குதூகலத்தை விரும்பவே செய்கிறது. போனவுடன் முடிக்க வேண்டிய வேலைகள் இல்லையென்ற போதிலும் விரைவான பயணத்தை நமது மனம் விரும்பவே செய்கிறது. ஆபத்தின்றி வேகமாக பயணம் முடியும் நிலையில் அதற்குக் காரணமான ஓட்டுநரை மகிழ்ச்சியுடன் பாராட்டவும் செய்கிறது.

இந்தப் பயணம் பூண்டி புட்பம் கல்லூரியில் நடக்கும் படைப்பாக்கப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்கான பயணம். அந்தக் கல்லூரியின் அழைப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னணியில் முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. தனக்கெதிரான கருத்தியலை உருவாக்கும் சக்திகளை ஆளும் வர்க்கம் பிரக்ஞையின்றி தானே உற்பத்தி செய்து வளர்த்தெடுக்கும் என்பது மார்க்சிய இயங்கியலில் ஒரு முக்கியமான கூற்று. அந்தக் க்கூற்றை மெய்ப்பிப்பது போல விளங்கும் ஒருகல்லூரி எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். தஞ்சை மாவட்டத்தின் பழம் பெரும் பண்ணையார் குடும்பங்களுள் ஒன்றான வாண்டையார் குடும்பம் 56 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கல்லூரி. இப்போது தன்னாட்சிக் கல்லூரியாக விளங்குகிறது

 தஞ்சைக் கிராமப்புற உழைப்பாளிகளை அடிமைப் படுத்திய குடும்பங்களுள் ஒன்றாக வாண்டையார் குடும்பத்தை அண்மைக் கால வரலாறுகளும் செய்திகளும் சித்திரித்துள்ளதை நான் அறிவேன். அந்தக் குடும்பம் தொடங் கிய இக்கல்லூரி தான் அந்தப் பகுதி ஏழை எளிய மாணவர்களுக்கு- ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்குக் கல்வியை வழங்கி வருகிறது. ஐரோப்பிய மாதிரியில் அமைந்துள்ள நமது பாடத்திட்டங்களும் கற்பிக்கும் முறைமையும் முழுமையாக இல்லையென்றாலும் ஓரளவேனும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கவே செய்துள்ளது. இதை அறிந்தவர்களாக இருந்த போதிலும் சேவை மனப்பான்மையின் தேவை என்னும் நெருக்கடி காரணமாகவும், கல்வி நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் புகழ் மற்றும் லாபம் காரணமாகவும் பெரும்பணக்காரர்களான பண்ணையார்களும் வியாபாரிகளும் கல்வி நிறுவனங்களைத் தொடங்கவே செய்கின்றனர். தொடங்கியபோது இருக்கும் சேவை மனப்பான்மை பின்னர் மாறிப்போவது சூழலின் விளைவு. இந்தியாவில் நடக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் வரலாற்றின் பின்னணியில் செயல்பட்ட காரணங்களை ஒருவர் ஆய்வு செய்து சொல்லலாம்.

நன்கொடை, அதிரடி வசூல் என்பதை எப்போதும் முக்கிய நோக்கமாகக் கொள்ளாத கருணை முகத்தை ஒருபுறமும், கட்டுப் பாட்டையும் அச்ச உணர்வையும் எப்போதும் உணரச் செய்யும் பண்ணையார்த்தனத்தின் இறுக்கத்தை இன்னொருபுறமும் கொண்டிருக்கும் நிறுவனங்களின் சமகால உதாரணம் பூண்டி புட்பம் கல்லூரி. 6500 மாணாக்கர்கள் கல்வி பயில் வதற்கான வகுப்பறைகளுடன், பரந்து விரிந்த காவேரிப் படுகையில் உயர்ந்து வளர்ந்த மரங்களோடும் குப்பைகளில்லாத வளாகத்தோடும் இருக்கும் அக்கல்லூரிக்குள் ஒழுக்கம் உயர்வானதாக நினைவூட்டப் படுகிறது. ஆசிரியர்களுக்கும் உடைக்கட்டுப்பாடு இருக்கிறது. மார்ச் மாத வெயிலிலும் உடல் முழுவதையும் மறைக்கும் வட்டக்கழுத்துக் கோட்டு களுடனும்,கால் மறையும் காலனிகளுடனும் ஆசிரியர்கள் வலம் வருகின்றனர். மரபின் அடிப்படையிலான ஒழுக்கத்தை முன்னிறுத்தும் அந்தக் கல்லூரியின் தமிழ்த்துறையில் இத்தகைய பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர் என்ற செய்தி திரும்பவும் மார்க்சின் இயங்கியலை நினைவுபடுத்தியதால் அழைப்பை ஏற்றுப் பயணம் செய்தேன்.

வழக்கமாக மாணாக்கர்களைச் சந்திக்கும் துறை ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களுக்கு விடுதலையை வழங்கி படைப்பாளி களோடு உறவாடும் விதத்தில் ஐந்து நாட்களை ஒதுக்கிக் கொடுத்து, படைப்பாக்கப் பயிற்சிப் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்காலக் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம் என ஒவ்வொரு இலக்கிய வகை குறித்தும் விவாதிக்க இரண்டு படைப்பாளிகள் என மொத்தம் பத்துப்பேரை அழைத் திருந்தது. இப்படியான சந்திப்புகளை அதிகமும் தன்னாட்சிக் கல்லூரிகளே செய்கின்றன. படிக்கும் காலத்தில் கட்டுப்பாடுகளை விமரிசனம் செய்யும் படைப்பாளிகளை ஒரு மாணாக்கர் சந்திப்பது என்பதும், அவரோடு விவாதம் செய்வது என்பதும் உடனடிப் பலனைத் தரவல்லது எனச் சொல்ல முடியாது. ஆனால் அந்தச் சந்திப்பின் பலனை யாராவது ஒருவர் பின்னாளில் நிச்சயம் பயன்படுத்தவே செய்வார் என்பது எனது அனுபவம். நானே அதற்கு ஓர் உதாரணம்.
பூண்டி புட்பம் கல்லூரியைப் போலவே நான் பயின்ற அமெரிக்கன் கல்லூரியும் ஒரு தன்னாட்சிக் கல்லூரி. புட்பம் கல்லூரியை நிலமானிய அமைப்பின் உதாரணமாகச் சொல்லலாமென்றால், நான் பயின்ற காலத்து அமெரிக்கன் கல்லூரியை தாராளமய முதலாளியத்தின் சரியான அடையாளமாகச் சொல்லலாம். மதுரையில் செயல்பட்ட கல்லூரிகளில் நவீன உலகத்துச் சிந்தனைகள் அனைத்தும் வந்து சேரும் வளாகமாக அக்கல்லூரி இருந்தது.இப்போது அதன் நிர்வாகத்திற்குள் நடக்கும் அதிகாரப் போட்டிகளும் குளறுபடிகளையும் பார்க்கும் போது முதலாளியத் திற்கெதிராக பழைய நிலமானிய மதிப்பீடுகள் அதனைக் கைப்பற்ற முயல்கிறதோ என்று வருத்தமாக இருக்கிறது.

 கல்லூரிக் கல்வியின் போதும், பல்கலைக்கழகக் கல்வியின் போதும் நான் சந்தித்த படைப்பாளிகள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்புகள் எனது மதிப்புமிக்க ஆசிரியர்கள் ஏற்படுத்திய தாக்கத்துக்குச் சற்றும் குறையாதவை. ஒருமுறை நேர்ச்சந்திப்பு செய்யும் படைப்பாளியை அவரது படைப்புகளின் வழியாகத் தொடரும்போது அவரது நிலைபாடுகளும் படைப்புமுறையும் சிந்தனைப் போக்கும் மாணக்கருக்குள் மெல்லமெல்ல இறங்கித் தங்கிவிடும். அங்கிருந்து தான் அந்த மாணாக்கனும் படைப்பாளி யாக மாற்றம் அடைவான். படைப்பாக்கப் பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழாவில் இந்த அம்சங்களையெல்லாம் விளக்கிச் சொல்லிவிட்டு முக்கியமாக நான் பேச நினைத்தது உலகமயமாகி விட்ட இந்தியச் சூழலில் படைப்பாக்கச் செயல்பாடுகள் கவனம் கொள்ள வேண்டிய மையப் புள்ளிகள் என்பன பற்றித்தான். எனது பயணத்தின் போது அது பற்றிச் சிந்தித்தபடியே போயிருந்தேன்.
பாரதியும் பாரதிக்குப் பின்னுமான சமகாலத்தமிழ் இலக்கியம் வெவ்வேறு காலகட்டங்களில் கவனப் படுத்தும் படைப்பு மையங்களில் பெண்களும் உழைப்பாளிகளும் முக்கியக் கவனம் பெற்று வருகின்றனர். அதே போல் இந்திய மனிதர்கள் உலவும் வெளிகளும் வெவ்வேறு விதமாகப் பதிவு பெற்று வருகின்றன.ஆங்கிலேயர்களின் வருகையால் இந்திய மனிதர் களின் மேற்பரப்பு மனிதர்களிடம் மேற்கத்தியக் கல்வி, வாழ்க்கைமுறை, சிந்தனை ஏற்படுத்திய தாக்கத்தையே 19 ஆம் நூற்றாண்டில் உதயம் கொண்ட நவீனத்தமிழ் இலக்கியம் இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை பேசியது. ஆங்கிலேயர்களின் வருகையை எதிர்மனநிலையில் நின்று பார்த்தவர்களின் குரல்களும் ஆதரவாகப் பார்த்தவர்களின் குரலுமே காலனிய கால இலக்கியத்தின் குரல்கள்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் –பின் காலனிய காலகட்டத்தில் அந்தக் குரல்கள் வேறுவடிவம் பெற்றன. தொழில் மயமாகும் இந்தியாவில் இந்தியக் கிராமங்களும், கிராமத்தின் மனிதர்களும் என்ன ஆவார்கள் என்ற அக்கறையை இலக்கிய வடிவங்கள் ஒவ்வொன்றிலும் காண முடிகிறது எனச் சொல்லி விட்டு, இருபத்தோராம் நூற்றாண்டு இலக்கியம் உலக மயமாகும் இந்தியச் சூழலை விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது எனச் சொன்னேன்.இதன் தாக்கத்தை நகரங்களில் வாழ்பவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள்; உள்ளிழுக்கப்படுகிறார்கள் என்பதையும் கிராமத் தவர்கள் எவ்வாறு விலகிச் செல்கிறார்கள் என்றும் சொல்லி விட்டு விவாதம் நடத்தினோம். பலவிதமான கேள்விகளுக்கு நான் சொன்ன பதில் பலருக்கு உடன்பாடில்லாமல் இருந்தது. எல்லோரையும் ஏற்றுக் கொள்ள வைக்கக் கூடிய பேச்சு ஆபத்தானது என்பதை எப்பொதும் நம்புபவன் நான் என்பதால் வருத்தம் கொள்ள எதுவுமில்லை. கூட்டத்தில் இருந்த ஒருவர் கடைசியாக கேட்டார். தமிழகம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாகப் போடப்பட்டுள்ள நான்குவழிச்சாலைகள் வரமா? சாபமா? என்பது அவரின் கேள்வி.



நான்குவழிச்சாலைகள் பயன்படுத்துபவர்களுக்கு வரம்; பார்த்து நிற்பவர் களுக்கு சாபம் என்று ஒருவரியில் பதில் சொன்னபோது பலருக்கும் புரியவில்லை. திரும்பவும் எனது நேற்றைய பயணத்தைச் சொன்னேன். நீண்ட தூரப் பயணங்களுக்கு இரண்டு மணி நேரம் எனக்கு மிச்சம். அதனால் எனக்கு இது நேற்றைக்கு வரம். ஆனால் இருபது கிலோமீட்டர் தூரம் மட்டுமே பயணம் செய்யும் கிராமத்துக்காரர்களுக்கும் சைக்கிளில் செல்வோருக்கும், மாட்டு வண்டிக்காரர்களுக்கும் அது ஒரு சாபம். சாலையின் ஒரு பக்கம் கிராமத்திலிருந்து எதிர்ப்பக்கம் இருக்கும் கிராமத்துக்குச் செல்ல ஆறு கிலோமீட்டர் சுற்றிக் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு இந்தச் சாலைகள் அச்சமூட்டும் பிசாசுகள். பிசாசுகள் சாபங்களைத் தானே கொண்டு வந்து சேர்க்கும்.
நான்குவழிச்சாலைகள் வழியாக நீண்ட தூர நகரங்களின் தூரங்கள் கூடியிருக்கின்றன. ஆனால் வேகம் அதிகரித்ததன் மூலம் நேரம் மிச்சமாகி இருக்கிறது. நெல்லைக்கும் சென்னைக்குமான பயண தூரம் 75 கி.மீட்டர் கூடியிருக்கிறது. ஆனால் நேரம் முன்பெல்லாம் 14 மணிநேரம்; இப்போது 9 மணிநேரம்தான். இடைநில்லாப் பேருந்துகளில் செல்லுபவர்கள் 9 மணி நேரத்தில் செல்கிறார்கள் என்றால் சொகுசுக்கார்களை வைத்திருக்கும் மேல்தட்டு மனிதர்கள் 6 மணிநேரத்தில் சென்னையைச் சென்றடை கிறார்கள். நேரத்தைக் கணக்கிட்டுப் பணமாக்கும் வசதி படைத்த மனிதர் களுக்கு நான்கு வழிச் சாலைகளும் ஆறுவழிச் சாலைகளும் மேம்பாலங் களும் பெரும் வரங்கள். மற்றவர்களுக்கு அவை ஏறிக்கடக்க முடியாத சாபங்கள் என்ற போது பார்வையாளர்களுக்குக் கொஞ்சம் புரிந்தது.
இந்தக் கேள்வி இலக்கியப்படைப்போடு தொடர்புடைய கேள்வியா? என்று நான் திருப்பிக் கேட்டேன். எல்லோரும் இல்லை என்றார்கள். உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என்பன பயன்படுத்துபவர்களுக்கு வரம்; விலகி நிற்பவர்களுக்கும் விலக்கப்பட்டவர்களுக்கும் சாபம் என்பதை விளக்குவதற்காக இன்னொரு பயிலரங்கை ஏற்பாடு செய்ய வேண்டும். அதனைப் புரிந்து கொள்ள வேண்டியது படைப்பாளிகளுக்குத் தேவையில்லாமல் போகுமா என்ன?
========================================================================






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்