வார்சாவிற்கு வந்து விட்டேன்.



என்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக அறிமுகப் படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டியதில்லை என்றாலும் அதுதான் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக ஆக்கியிருக்கிறது.புதுவைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்கலைப்பள்ளி தொடங்கப் பட்டபோது(1989) அதன் முதல் விரிவுரையாளராக தேர்வு செய்யப்பட்ட நான், 1997 இல்  திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறை தொடங்கப்பட்ட போது அத்துறைக்காகத் தேர்வு செய்யப்பட்ட முதல் ஆசிரியர். 
வழக்கமான பல்கலைக்கழக ஆசிரியப் பணியோடு தமிழில் வரும் தீவிர இதழ்களில் சமகால இலக்கியம், கலை, பண்பாட்டு நிகழ்வுகள் மற்றுமல்லாது அரசியல் நிகழ்வுகளையும் விமரிசனம் செய்பவனாக- வெகுமக்கள் மனநிலை சார்ந்து கருத்துக்களை முன் வைத்து விவாதிப்பவனாக அறியப்பட்டுள்ளேன். மாணவப் பருவம் தொடங்கி இலக்கியப் பத்திரிகைகளோடு தொடர்பு கொண்டு எழுதி வருகிறேன். பட்டப்படிப்புக் காலத்தில் அசோகமித்திரன் பொறுப்பில் வந்த கணையாழியில் கவிதைகள் எழுதியிருக்கிறேன். அதே காலகட்டத்தில் ஆனந்த விகடன் பொன்விழாவை ஒட்டி மாணவர் பக்கம் வெளியிட்ட போது அதிலும் கவிதைகள் எழுதினேன். கவிதையில் தொடங்கிய நான் பின்னர் முழுமையாகக் கட்டுரை ஆசிரியனாக மாறிப்போனதில் பின்னணியில் காரணங்கள் பல உண்டு. கல்வித்துறை சார்ந்து இலக்கியம் கற்பவர்கள் படைப்பாளிகளாக ஆவதை விடக் கட்டுரையாளராக ஆவது எளிமையானது என்பது என்னளவில் உண்மை. வார்சாவிற்குக் கிளம்புவதற்கு முன்பு என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இதோ… நான் சொன்ன பதில்கள் பலருக்கும் தெரிய வேண்டியது என்பதால் இங்கே பதிவு செய்கிறேன்.இந்தியாவைத் தாண்டி பல நாடுகளில் தமிழ்த்துறைகளும் தமிழ் இருக்கைகளும் இருக்கிறது என்றாலும் போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகம் மட்டும் தமிழ்நாட்டிலிருந்து பேராசிரியர்களை அழைப்பது ஏன்?
வார்சா பல்கலைக்கழகம் அழைப்பதில்லை. இந்திய அரசாங்கம் தான் அங்கு செயல்படும் தென்னாசியவியல் துறையில் பணியாற்றுவதற்காகப் பண்பாட்டுப் பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழ் பேராசிரியர்களை அனுப்புகிறது. உலகின் பல நாடுகளில் இந்தியவியல் துறைகள் செயல்படுகின்றன.
இந்தியாவைத் தாண்டி தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தங்கள் நாட்டுத் தமிழர்களுக்காகத் தமிழ்த்துறைகளை நடத்துகின்றன. இவையல்லாமல் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மன், ருஷ்யா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, மொரீசியஸ், சுவீடன் போன்ற நாடுகளில் இருக்கும் பல்கலைக்கழகங்களிலும் தென்னாசியவியல் துறைகளின் ஒரு பகுதியாகத் தமிழ் மொழியும், இலக்கியங்களும் கற்றுத் தரப்படுகின்றன. அங்கெல்லாம் முழு நேரத்தமிழ்ப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள தன்மை உள்ளது. பெரும்பாலும் அங்கு பணியாற்றும் பேராசிரியர்களின் தொடர்பு வழியாகவே அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் நேரிடையாகத் தேர்வு செய்கின்றன. ஆனால் போலந்து வார்சா பல்கலைக்கழகம் மட்டும் வித்தியாசமாக இருக்கிறது நிரந்தரமான பேராசிரியர் என்பதற்குப் பதிலாக வருகை தரு பேராசிரியர்களை அனுப்பும் பொறுப்பை இந்திய அரசிடன் விட்டுள்ளது. இந்திய அரசின் கலை-பண்பாட்டு அமைச்சகம் இங்குள்ள பேராசிரியர்களின் விவரங்களைப் பெற்று அவர்களிலிருந்து ஒருவரை- இதுவரை செய்துள்ள பணிகள்,பங்களிப்புகள், வெளியீடுகள் ஆகியவற்றின் மீதான மதிப்பீட்டின் மேல் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.  முதலில் இரண்டாண்டு கால ஒப்பந்தத்தில் போனபின்பு  மேலும் கால நீட்டிப்புப் பெற்று அங்கு பணியாற்றும் வாய்ப்பையும் வழங்குகிறது.
எனக்கு முன்னாள் போன பலரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே அங்கு தங்கி இருந்து விட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.  ஆனால் நான் ரெண்டு ஆண்டுகளில் திரும்பி விடுவது என்ற முடிவோடுதான் கிளம்புறேன். 2011 செப்டம்பர் கடைசியில் கிளம்பி 2013 இல் திரும்பி விடுவேன். தமிழ்நாட்டு அரசியலையும் தமிழ்ச் சினிமாவையும் ரொம்ப நாள் பிரிஞ்சிருக்க முடியாது. ஐரோப்பிய நகரங்களையும் மனிதர்களையும் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது என்றாலும், தமிழ்நாட்டுக் கிராமங்களினூடாகப் பஸ்ஸில் போய் வருவதில் இருக்கிற மகிழ்ச்சியை ரொம்ப நாள் இழக்க முடியாது. அதல்லாமல் முப்பது வருடங்களாக நான் பார்த்த- பங்கேற்ற இலக்கியச் சண்டைகள், கருத்தரங்க மோதல்கள், அணிச்சேர்க்கைகள் இல்லாமல் அமைதியாகக் காலம் கழிப்பது தண்டனைக் காலமாக இருக்குமோ என்ற பயமும் இருக்கிறது.
ஐரோப்பிய நாடொன்றில் சில ஆண்டுகள் இருப்பது நல்ல அனுபவமாகத் தானே இருக்கும்.?
பல்கலைக்கழக வேலையே சரியாக இருக்குமா?
போலந்துக்குப் போவதை நான் ரொம்பவும் விரும்பிச் செய்யப் போகிறேன். வார்சா பல்கலைக்கழகத்தோடு நெருக்கமான உறவு இருப்பதாகவே என் மனம் சொல்கிறது. அதை ”செண்டிமெண்டல் அட்டாச்மெண்ட்”னு கூடச் சொல்லலாம். நான் ஆய்வை முடிக்கும் போது அவசரமாக என்னுடைய ஆய்வேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு என்னுடைய ஆசிரியர் தி.சு.நடராசன் வார்சா போனார். போய்விட்டு வந்த அவர் சொன்ன நிகழ்ச்சிகள் இன்னும் நினைவில் இருக்கின்றன.. அவருக்கு முன்னாள் வார்சாவில் பணியாற்றிவிட்டு வந்த இந்திரா பார்த்தசாரதி, புதுச்சேரியில் நாடகத்துறையில் பணியாற்றும்போதும் அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதைக் கேட்டிருக்கிறேன். இவர்கள் இல்லாமல் என்னோடு நட்போடு பழகிய – முன் மாதிரிப் பேராசிரியர்களாக நான் நினைக்கும் இராம. சுந்தரம், தமிழவன், கி.நாச்சிமுத்து, நசீம்தீன், து.மூர்த்தி போன்றவர்கள் எல்லாம் போய்விட்டு வந்த இடம் வார்சா பல்கலைக்கழகம். அவர்கள் வரிசையில் நானும் போகிறேன் என்ற நினைப்பே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் ஒன்று .
வார்சாப் பல்கலைக்கழகத்தில்  என்னுடைய வேலை எளிமையானது. மாணவர்களுக்கு மொழி கற்பிக்கும் வேலை. இது நமது ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் வேலை தான். ஆனால் கற்றுக் கொள்ளப்போகும் மாணவர்கள் போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டும் தான் பிரச்சினை. முடிந்தவரை மொழியைக் கற்பிப்பதோடு, அந்த மொழியைக் கற்றுக் கொள்ளவும், சமகாலத்தமிழ் போலந்து இலக்கியப் போக்குகளுக்கான உறவுகளைத் தொடரவும் முயற்சி செய்யலாம் என நினைத்துள்ளேன். ஆனால் போலிஷ் மொழி எளிமையாகக் கற்றுக் கொள்ளக்கூடியதல்ல என்றே சொல்கிறார்கள். இப்போது அங்கிருக்கும் பாலசுப்பிரமணியம் மொழியியல் துறையைச் சேர்ந்தவர். மொழிபெயர்ப்புகள் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர். சாருநிவேதிதாவின் கதைகள் மலையாளத்திற்குப் போவதற்குக் காரணமாக இருந்தவர். அவரே போலிஷ் மொழியைக் கற்றுக் கொள்ள முடியவில்லை என்று சொல்கிறார்.  நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஊர் சுற்றுவேன். போலந்து மட்டுமல்ல; ஐரோப்பாவை ஒரு ரவுண்டு முடிச்சுறனும்.
இ.பா.வும் தமிழவனும் போலந்தை மையமாக வைத்து நாவல் எழுதியது போல
போலந்தில் இருக்கும் காலத்தில் முடிக்க வேண்டும் என்று திட்டம் ஏதாவது ..
நான் போலந்து போகப் போகிறேன் என்பதைக் கேள்விப் பட்ட பலரும் இதைத் தான் சொல்கிறார்கள். எல்லாரிடமும் சொல்வது இதுதான். நிச்சயம் நாவல் எழுத மாட்டேன். நாவல் எழுத நினைப்பது ஆயுள் தண்டனைக் கைதியாக மாறுவது என்பது எனக்குத் தெரியும். அது மட்டுமல்ல; யேசுவின் தோழர்கள் எழுதுவதற்கு முன்னாடியே இந்திரா பார்த்தசாரதி அறியப்பட்ட அரசியல் நாவல்களை எழுதியவர்; வார்ஷாவில் ஒரு கடவுளுக்கு முன்னாடியே நேர்கோடற்ற கதைசொல்லலில் மூன்று நாவல்களை எழுதியவர் தமிழவன். தமிழ் நாட்டிலிருக்கும் போதே அந்தத் தண்டனையை விரும்பி ஏற்று கொண்டவர்கள் அவர்கள். போலந்துக்குப் போனதினால் தான் அது நிகழ்ந்தது எனச் சொல்வதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.  
போலந்தில் இன்னமும் அரங்கக் கலையும் சினிமாவும் உயிர்ப்போடு இருப்பதாக அறிகிறேன். இவையிரண்டும் எனக்குப் பிடித்தமான சங்கதிகள். முடிந்தவரை நாடகங்கள் பார்ப்பதும் சினிமாப் பார்ப்பதும் அவற்றைப் பற்றி எழுதுவது நிகழும் என நினைக்கிறேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்