தமிழ்ச்சினிமா அரசியலான கதை


”கோயில் வேண்டாம் என்று சொல்லவில்லை; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக் கூடாது என்று தான் சொல்கிறேன்” எனப் பராசக்தியில் குணசேகரனை (சிவாஜி) ஆவேச வசனம் பேச வைத்தததின் மூலம், தமிழக அரசியலோடு நேரடித் தொடர்பு கொண்டது தமிழ்ச் சினிமா. அந்தவகையில் முதற்காரணம் மு.கருணாநிதிதான். அன்று முதல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் பயன்படும் வெற்றிகரமான ஆயுதமாகத் தமிழ்ச் சினிமா தமிழக அரசியலின் இணையாகவே கருதப்படுகிறது.

திரைப்படத்திற்குக் கதை வசனம் எழுதிய சி.என். அண்ணாதுரையும், மு.கருணாநிதியும் தமிழ்நாட்டின் முதல்வர்களாக ஆனதற்கு முழுமையான காரணமாகத் தமிழ்ச் சினிமா மட்டுமே இருந்தது எனச் சொல்லமுடியாது. ஆனால் எம்.ஜி.ராமச் சந்திரனும் ஜெ.ஜெயலலிதாவும் அரசியல் ஆளுமைகளாக மக்கள் மனதில் பதிந்து போவதற்குத் திரைப்படங்கள்தான் முழுமையாகப் பங்களிப்பு செய்தன. புறநிலையில் அரசியல் சக்தியாக ஒருவரை முன்னிறுத்தும்போது அனைத்துத் தரப்பு மனிதர்களிடமும் அந்த நபரையும் அவரது கொள்கைகளாகச் சில வசனங்களையும் பாடல்வரிகளையும் கொண்டுபோய்ச்சேர்ப்பதில் வெகுமக்கள் சினிமா தமிழ்நாட்டில் ஆற்றிய வினை அபரிமிதமானது. நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் என எம்ஜி ராமச்சந்திரன் வாயசைத்த பாடல்களின் வரிகள் அவரது அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு வெவ்வேறு அர்த்தத் தளங்களுக்குள் கொண்டு போய் நிறுத்தித் தமிழகத்தின் தலைமகனாக- தவப்புதல்வனாக மாற்றியது என்பது தான் தமிழகத்தின் கடந்த கால வரலாறு. அந்த வரலாற்றின் தொடர்ச்சியாகவே தங்கத் தாரகைகளும், கறுப்பு எம்ஜியார்களும் தமிழக அரசியல் பரப்பிற்குள் களம் கண்டுள்ளார்கள். ”நான் ஒரு தடவை சொன்னா, 100 தடவை சொன்ன மாதிரி” என்ற குத்து வசனத்தை ரஜினி (சூப்பர் ஸ்டார்) தான் நடிக்கும் படத்தில் சேர்க்கும்படி சொல்வதும், ’நான் ஒரு முடிவு எடுத்திட்டா அத நானே நினைச்சாலும் மாத்த முடியாதுன்னு’ விஜய (இளைய தளபதி) பேசுவதும் எதிர்கால அரசியல் கனவுகளின் வெளிப்பாடாகக் கருதப்படுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

சமூக வளர்ச்சியில் அக்கறையும் தமிழ் மக்களின் பொருளாதார வாழ்நிலையில் மாற்றத்தையும் முன்வைத்த அரசியலுக்கு மாற்றாகப் புனைவுசார்ந்த கொள்கைகள் மற்றும் கற்பனையான நம்பிக்கைகளை முன்னிறுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தவர்களுக்குக் கைகொடுத்த ஊடகம் திரைப்படங்கள். தமிழ்நாட்டில் அதனைப் , புதிய கண்டுபிடிப்பாகக்கூடக் கருதவில்லை.. பாரம்பரியமான நிகழ்த்துக்கலை வடிவங்களான கூத்துகள், ஆட்டங்கள், பாடல்கள் வழியாகத் தனது பிரசாரத்தை வெற்றிகரமாக நடத்திப் பாமர மக்களைத் தன் வசப்படுத்திய சமூக நிறுவனம் சமயம். இந்தியச் சமயநெறிக்கும் அதன் இருப்புக்கும் காரணமாக இருந்தவை அந்த ஊடகங்கள். அந்த வழிமுறையின் நீட்சியாகவே அரசியல் பேசிய திரைப்படங்களின் வெற்றி அமைந்தது..
நடிகர்களை மையப்படுத்தி வெற்றி பெற்ற அரசியலின் கருவியாகத் திரைப்படத்தை ஆக்கிய போக்கிற்கு எதிராகச் சில திரைப்படங்கள் – இயக்குநரை மையப்படுத்திய திரைப்படங்கள்- அந்தப் போக்கை விமரிசனம் செய்யும் படங்களாகவும் வெளிவந்தன என்பதையும் இங்கே சுட்டிக் காட்டலாம். பிம்ப அரசியலின் போலித்தனத்திற்குப் பலியாகும் ’என் உயிர்த்தோழனை”ப் பாரதிராஜாவின் ஒரே அரசியல் படம் எனச் சொல்லலாம்.

தொன்மக்கதைகளின் கட்டமைப்பில் நிகழ்கால மனிதர்களின் முரண்பாடுகளைப் பேசும் மணிரத்னத்தின் இரண்டு தமிழ்த் திரைப்படங்கள் நேரடியாகத் தமிழக அரசியலை விமரிசனம் செய்தன. திராவிட இயக்க அரசியல் தலைவர்கள் அரசியல் சார்ந்த பொது வெளியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைப் பேசும் நபர் களாகவும், கற்பு, தியாகம், நேர்மை, வீரம், மனிதாபிமானம் போன்றவற்றை மக்களுக்கு வலியுறுத்தும் தலைவர்களாகவும் தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் குடும்பம் சார்ந்த தனிமனித வெளியில் –சொந்த வாழ்க்கையில் இவை அனைத்தையும் கைவிட்ட பொய்யான வாழ்க்கையை வாழ்கிறார்கள் எனப் பேசியது அவரது “இருவர்” படம். இடைநிலைச் சாதிகளிலிருந்தும், அடித்தட்டுச் சாதிகளிலிருந்தும் வந்து அரசியல் களத்தை வன்முறைக் களமாகவும், நேர்மையற்ற வெளியாகவும் மாற்றி விட்டனர்; அதனைச் சீர்படுத்த படித்த - உயர் வகுப்பு- இளைஞர் களும் யுவதிகளும் அரசியலுக்குள் வரவேண்டும் எனத் தனது “ ஆயுத எழுத்து” படத்தில் சொன்னார். ஆனால் அவை இரண்டையும் சமகால அரசியல் விமரிசனப் படங்கள் என முன் வைக்கும் தைரியம் அவருக்கு இல்லாததால் இரண்டு படங்களுமே பார்வையாளர்களுக்கு எந்த அர்த்தத்தில் போய்ச் சேர வேண்டுமோ அந்த அர்த்தத்தில் போய்ச் சேராமல் திரை அரங்கை விட்டு வெளியேறின.

அவரது ரோஜா, பம்பாய், உயிரே, குரு போன்ற படங்களும் கூட அரசியல் சினிமாக்கள் தான். அவை சமகால இந்திய அரசியல் பின்னணியில் எடுக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட படங்கள். அப்படியான விமரிசனத்தையும் விவாதத்தையும் சமகாலத் தமிழக அரசியல் சார்ந்து இருவர் மற்றும் ஆயுத எழுத்து வழியாக எழுப்பியிருக்க முடியும்; ஆனால் மணிரத்னத்திற்கே அந்த விருப்பம் அந்த நேரத்தில் இருக்கவில்லை என்பதும் உண்மையாக இருக்கலாம். இவையல்லாமல் எல்லைப் புறத்தில் தொல்லை தரும் தீவிரவாதிகளை வேட்டையாடும் அர்ஜுன், விஜய்காந்த், சரத்குமார் படங்களையும், சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் கொட்டமடிக்கும் அரசியல் குண்டர்களையும் அவர்களோடு கூட்டு வைத்திருக்கும் ரவுடிக் கும்பலையும் போட்டுத்தள்ளும் விஜய் (மதுர, திருப்பாச்சி, சிவகாசி) விக்ரம்( தூள்,சாமி, அருள்) சூர்யா( ஆறு, சிங்கம்) அஜித் ( திருப்பதி, ரெட்) தனுஷ், சிம்பு, கார்த்தி போன்றவர்களின் படங்களும் கூடப் பின்னாளில் அரசியல் சினிமாவாக நினைக்கப்படலாம். அப்படியான காலங்களும் வரக்கூடும். ஏனென்றால் தமிழக அரசியலையும் தமிழ்ச் சினிமாவையும் எப்படிப் பிரித்துப் பேச முடியும்?

கருத்துகள்

Jeevanandam. S. இவ்வாறு கூறியுள்ளார்…
//......திரைப்பட ஊடகம், புதிய கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது. பாரம்பரியமான நிகழ்த்துக்கலை வடிவங்களான கூத்துகள், ஆட்டங்கள், பாடல்கள் வழியாகத் தனது பிரசாரத்தை வெற்றிகரமாக நடத்திப் பாமர மக்களைத் தன் வசப்படுத்திய இந்தியச் சமயநெறிக்கும் அதன் இருப்புக்கும் காரணமான வழிமுறையின் நீட்சிதான் அரசியல் பேசிய திரைப்படங்களின் வெற்றி.//

Sir, I accepted the above mentioned statements. Can you further explain that statement?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்