நூறில் ஒன்று: அரசியல் பேசத் தொடங்கிய ஊடகங்கள்


உயிர்மையின் 100 வது இதழுக்காக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அனுப்பிய பதில். அச்சில் எப்படி வந்திருக்கிறது என்பதை நான் பார்க்கவில்லை.
என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி:
தமிழ் ஊடகங்கள் அரசியல் மயமானதன் விளைவுகள் என்ன?
1990-களின் தொடக்கத்தில் தமிழ்ச் சிந்தனைப் போக்கின் திசைவழியைத் தீர்மானம் செய்த தலைமைக்கோள் நிறப்பிரிகை. பலதளச் சிந்தனையின் தோற்றக் கருவி போல நிறப்பிரிகை தன்னைக் காட்டிக் கொண்டாலும் அரசியலை ஆணையில் வைப்போம் என்னும் இடதுசாரிக் கருத்தியல் தான் அதன் தாரக மந்திரம். அந்த மந்திரத்தை மறைமுகக் கோட்பாடாக வைத்துக் கொண்டு அதே காலகட்டத்தில் நிறப்பிரிகையைச் சுற்றி வரத் தொடங்கின சில துணைக்கோள்கள்.. நிறப்பிரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்த ரவிக்குமார், அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியோரின் ஈர்ப்பு விசைக்குள் நின்று தான் அவை சுற்றி வந்தன. ஊடகம் என்றொரு துணைக்கோளை எனது  வீட்டு முகவரியிலிருந்து நாங்கள் ஏவி விட்டோம். நான்கு முறை ஏவிய அந்தத் துணைக்கோள் சில அரசியல் என்னும் மைய விசையை விலகாமல் சில துணை விளைவுகளை உண்டாக்கி விட்டுக் காணாமல் போனது இருபது வருடத்திற்கு முந்திய கதை.
இந்திய ஊடகங்கள் அரசியல் பேசத் தொடங்கியதன் பின்னணிக் காரணங்களில் முதலிடத்தை உலகமயம் என்னும் பொருளாதாரச் சொல்லாடலுக்குத் தருவதா? ’எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பிய விதியைக் கொஞ்சம் மாற்றி ”எல்லாச் சொல்லின் பொருளும் இடுகுறித் தன்மையுடையன”எனச் சொன்ன பின் அமைப்பியல் சொல்லாடலுக்குத் தருவதா? எனக் கேட்டால் இரண்டையும் முன் மொழிந்த  தகவல் தொடர்பு வலைப் பின்னலுக்கே முதலிடத்தைத் தரலாம் எனச் சொல்வேன். உலகமயம் தனது பொருளாதார நகர்வுகளைப் பின்னங்கால்களில் வைத்துக் கொண்டு தகவல் தொடர்பின் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது என்பதை விளக்கிக் காட்ட முனைந்த போது ஊடகங்களைப் பற்றிய பேச்சும், ஊடகங்களின் பேச்சும் அரசியல் பேச்சாக ஆகிப் போயின.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பைப் பார்ப்பதற்காக கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு கைகாட்டி வழியனுப்பிய இந்திய நடுத்தர வர்க்கம், பெருநகரங்களில் ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ அலைவரிசைகளின் மூலம் நுகர்வுக் கலாச்சாரத்தின் மெல்லிதழ்களால் வருடப் பெற்றதைச் சுகம் எனக் கருதித் தழுவிக் கொண்டன. அரசாங்கம் தொடங்கிய மெட்ரோ அலைவரிசைகள் ஓராண்டிற்குள் ஒடுங்கிப் போக பன்னாட்டு ஊடக முதலாளி முர்டாக் ஆயிரம் தலை வாங்கும் அபூர்வ சிந்தாமணியாய் தனது ஊடக வலைப்பின்னலை இந்தியாவிற்குள் இறக்கி அனுப்பினார். அப்போது எங்கள் ஊடகம் இதழில் விண்ணிலிருந்து தேவன் இறங்கி வருகிறான் என்றொரு கட்டுரை எழுதியது இப்போது நினைவுக்கு வருகிறது.
இருபது ஆண்டுகளுக்குப் பின்பு நிலைமை முற்றிலும் மாறிப் போய் விட்டது. இந்தியப் பெருமுதலாளிகளே பன்னாட்டு ஊடகத் தொழிலைக் கைப்பற்றி, இந்திய மனத்தோடு- தமிழ்த் தன்னிலையோடு- உலக மக்களாக வாழப் பழக்கிக் கொண்டிருக்கிறார்கள். போலந்தில் வாழும் புதுக்கோட்டைப் பெண்மணியும், ஆஸ்திரேலியாவில் இருக்கும் நாகர்கோவில்காரரும், திருமதி செல்வத்தையும், முந்தானை முடிச்சையும் பார்த்து இந்தியப் பெண் தன்னிலைக்குள் தங்களைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். இளம்பெண்களும் யுவன்களும் மானாகவும் மயிலாகவும் ஆடிக் காட்டும் நடனத்தில் மெய் மறக்கிறார்கள். இல்லையென்றால் ” குற்றம். நடந்து என்ன?” என்பதைக் கேட்டுவிட்டுத் தொலைபேசியில் விவாதிக்கிறார்கள்.
காட்சி ஊடகம் மட்டுமல்லாமல் அச்சு ஊடகங்களும், ஒலிவழி ஊடகங்களும் பெருங்கருவிகளின் உதவியோடு எல்லா வற்றிலும் அலையும் தன்மையைக் கொண்டுவந்து விட்டன.இந்த மாற்றம் இயல்பாகவே தீவிரத் தன்மைக்கெதிரானவை. நாளொன்றுக்கு மூன்று தடவை சாப்பிடும் ஒருவனுக்கு உணவுப் பட்டியல் ஒன்றைத் தயாரித்து வழங்கலாம். ஆனால் 24 மணிநேரமும் சாப்பிடுவேன் எனச் சொல்பவனுக்கு எந்த உணவு வகைகளைப் பரிந்துரை செய்ய முடியும்? எதையாவது தான் முன்னே வைக்க வேண்டும். அப்படித்தான் நமது ஊடகங்கள் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஊதிப் பெருக்கித் தந்து கொண்டே இருக்கின்றன.
ஒரு விகடனுக்குப் பதிலாக ஐந்தாறு விகடன்கள். ஒரு குமுதம் வந்த நிறுவனத்திலிருந்து ஏழு நாளைக்கு ஏழு குமுதங்கள், முன்னொட்டோடும் பின்னொட்டோடும். சன் குழுமத்திலிருந்து காட்சி, அச்சு, ஒலி எனப் பல வரவுகள். இப்படி வரும்  அவை ஒவ்வொன்றிலும் எதுவும் இல்லையென்று நீங்கள் நினைத்தால் எதுவும் இல்லை. எல்லா வற்றிலும் ஏதோ இருக் கிறது என நினைத்தால் எல்லாம் இருக்கிறது. எல்லாம் இருப்பதில் அரசியலும் இருக்கிறது. அன்றாடச் சிக்கல்களும் இருக்கின்றன. எல்லா வற்றையும் கவனம் செலுத்தாமல் நகர்ந்து செல்லும்படி தூண்டும் அரசியல் தான் இன்றைய ஊடகங்களின் ஆழமான அரசியல். அதையெல்லாம் பேசும்போது ஊடகம் பற்றிய பேச்சு அரசியல் பேச்சாக இருக்கிறது. பொழுது போக்கின் அரசியலைப் பேச விரும்பினால் பொழுதுபோக்கின் கருவிகளான ஊடகங்களைத் தானே நாம் கவனித்தாக வேண்டும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்