டர்ட்டி பிக்சர்ஸ் :ஆண்நோக்குப் பார்வையின் இன்னொரு வடிவம்


சில்க் ஸ்மிதா, தமிழ்ச் சினிமாவில் பிம்பமாக அலைந்து கொண்டிருந்தபோது அவளது உடல் ஒரு திறந்த புத்தகம் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. சில்க்கின் தற்கொலை அவளது வாழ்க்கையை திறந்த புத்தகமாக மாற்றி விட்டது. திறந்த புத்தகங்களை யார் யார் எப்படி வாசிக்கிறார்கள் என்பது அவரவர் வாசிப்பு முறை சார்ந்தது மட்டுமல்ல; மன அமைப்பு சார்ந்ததும் கூட. தமிழ்ச் சினிமாவைப் பார்த்தும் ரசித்தும் விமரிசித்தும் விளக்கியும் வளர்ந்து கொண்டிருக்கும் நான் ஆகக் கூடிய முறை பார்த்த ஒரு சினிமாப் பாடல் காட்சி எதுவெனக் கேட்டால் சிலுக் நடித்த பாடல் காட்சி என்றே சொல்வேன்
.
மூன்றாம் பிறை படத்தில் இடம் பெற்றிருந்த

சுரைக்கொடியின் வேகம் கொண்ட கரங்கள், பூசனிப்பூக்களின் மடல் திறப்பென விரியும் இதழ்கள், நள்ளிரவுக் குளிரில் உறுமும் புறவின் முனகல் என வெளிவரும் மூச்சிரைப்பு, அசைவைத் தடுத்து விடும் பார்வையெனத் தனது உடலைத் தனது கட்டுக்குள் வைத்து ஆண்நோக்குக்கு அளப்பரிய தீனியை வழங்கியவள் ஸ்மிதா. இனியும் எனது உடலைத் திறந்து காட்ட முடியாது என மூடிக் கொண்டு மரணித்தபோது, அந்த உடலுக்குள் இருந்த மனதின் சுழிப்புகளைத் திறந்த புத்தகமாய்ப் பலரும் எழுதிப் பார்த்தார்கள். வெகுமக்கள் சினிமாவின் விரோதிகளாய்க் காட்டிக் கொண்ட கலைப்பிரியர்கள் எல்லாம் கூட ஸ்மிதாவின் நினைவுகளில் மூழ்கி எழுந்தார்கள். மனதை எழுதுவதாக நினைத்துக் கொண்டு அவரது உடலை நினைவுபடுத்துபவர்களாகவே மிஞ்சினார்கள். அதுதான் ஆண்களுக்குச் சாத்தியம் போலும். அந்தச் சாத்தியத்தின் இன்னொரு வடிவம் தான் இப்போது வந்துள்ள கறைபடிந்த படங்கள்.
வக்கிரமாகவே யோசித்துப் பழக்கப்பட்ட ஆண்களின் பார்வைக்குக் காட்சி வடிவம் கொடுத்த ஸ்மிதாவின் உடலைப் படங்களின் கறையாக-டர்ட்டி பிக்சர்ஸாகச் சொல்ல முடிந்ததில் வெளிப்படுவதும் ஆண்நோக்கு அன்றி வேறில்லை. ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதையாக முன் வைக்கப்படும் இந்தச் சினிமாவில் சில்க்கின் பாத்திரத்தை ஏற்றிருக்கும் வித்யாபாலன் சிறப்பாக நடித்திருக்கிறார் எனச் சொல்வது பாராட்டுக்குறிப்பல்ல. இந்திய சமூகத்தில் ஆண்களின் மனம் எத்தகையதாக இருக்கிறது என்று கண்டுபிடித்தவள் சில்க் ஸ்மிதா. தனது கண்டுபிடிப்பை அனைவருக்கும் உணர்த்த தனது உடலைக் கருவியாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றவள். அதுதான் சில்க்கின் மன அமைப்பு. டர்ட்டி பிக்சர்ஸில் வித்யாபாலன் சில்க்கின் இந்த மன அமைப்பை உள்வாங்கி வெளிப்படுத்தியிருப்பதை நடிப்பின் உச்சம் எனச் சொல்ல வேண்டும்
புனைவுப் பாத்திரம் ஒன்றிற்குப் பொருந்திப் போவதை விட வரலாற்றுப் பாத்திரத்தில் பொருந்தி நிற்பது நடிப்புக்கலைஞர்கள் முன்னுள்ள பெரிய சவாலாகும். நிகழ்கால மனிதர்கள் அறிந்த அண்மைக்கால வரலாற்றுப் பாத்திரத்தை ஏற்று நடிப்பது கத்தி முனையில் நடப்பது போன்றது. காந்தியாக நடித்த அட்டன்பரோவையும், அம்பேத்கராக நடித்த மம்முட்டியையும், பெரியாராகவும் மணியம்மையாகவும் நடித்த சத்யராஜ்- குஷ்பு ஆகியோரின் பொருத்தப்பாடுகளையும் நினைத்துக் கொண்டால் நான் சொல்வது புரிய வரலாம். அந்தக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்களுக்கு இல்லாத பெரிய சவால் சில்க்காக நடிக்கும் வித்யாபாலன் முன் இருந்தது. காந்தி, அம்பேத்கர், பெரியார் அல்லது பகத்சிங் போன்றவர்கள் பார்வையாளர்களின் மனதில் நல்லவர்களாக- மதிக்கத்தக்கவர்களாக இருப்பவர்கள். அவர்களின் பாத்திரங்களை ஏற்று நடிப்பதில் பெரிய சவால் எதுவும் ஏற்பட்டு விடாது.
சில்க் ஸ்மிதா பாத்திரம் அத்தகையதல்ல. பார்வையாளப் பொதுமனத்திற்குள் நேர்மறையாகப் பதிந்துள்ளதைவிட எதிர்மறையாகவே அதிகம் பதிந்து வைக்கப்பட்டுள்ளவர் சில்க். அத்தோடு காந்தி, அம்பேத்கர், பெரியார் போன்ற பாத்திரங்களோடு உலவும் மற்ற பாத்திரங்களும் வரலாற்றில் அறியப்பட்ட பாத்திரங்களாகவே இருப்பர். ஆனால் சில்க்கைச் சுற்றி வரும் எந்தப் பாத்திரமும் ஒற்றை நபரோடு பொருந்தி விடாமல் கவனமாகப் புனைவுகளாக ஆக்கப் படவேண்டியவை; ஆக்கப்பட்டிருப்பவை. நஸ்ருதீன் ஷா ஏற்றுள்ள நாயக நடிகர் பாத்திரத்தை சில்க்குடன் நடனம் ஆடிய சிவகுமாராகவோ, ரஜினிகாந்தாகவோ, கமல்ஹாசனாகவோ, விஜய்காந்தாகவோ, சத்யராஜாகவோ சுருக்கி விட முடியாது. இயக்குநர்களாகவும், தயாரிப்பாளராகவும் வரும் பாத்திரங்களும் அப்படிப்பட்டவை தான். தமிழ்ச் சினிமா உலகத்தில் உலவிய- உலவும் பலரின் குறியீடுகள் அவர்கள். ஆனால் சில்க் மட்டும் உண்மை. உண்மையை உண்மை என்று நம்பும்படி நடித்துக் காட்ட வேண்டிய வேலையை ஏற்கும் தைரியம் ஒருவருக்கு வேண்டும். ஏனென்றால் இத்தகைய பாத்திரத்தை ஏற்று நடித்தபின் திரையுலகம் அந்த நடிகையை எப்படிப் பார்க்கும் என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. எல்லாவற்றையும் அறிந்தே சில்க் என்னும் அந்த உண்மையை- வெறும் உடல் சார்ந்த உண்மை மட்டுமல்ல; உள்ளம் சார்ந்த உண்மையும் என்று நடித்துக் காட்டியிருக்கிறார் வித்யா.
சினிமா மோகத்தில் குடும்ப வாழ்க்கைக்குள் நுழையாமல் சென்னையை நோக்கி ஓடி வந்த ஒரு யுவதியின் கதையாகச் சொல்லப்படும்
இந்தியத் தத்துவங்களும், அவற்றைத் தோற்றுவிப்பதற்குப் பின்னணிக்காரணங்களாக இருக்கும் இந்திய மதங்களும் பல விதத்தில் வேறுபட்டனவாக இருந்த போதிலும் மனித உடல் பற்றிய பார்வையில் –அதிலும் பெண் உடல் பற்றிய பார்வையில்- ஒத்த கருத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உடல் அழுக்கானது; அதனை முதன்மைப் படுத்திச் செய்யும் வினைகள் பாவங்களையே கொண்டு வந்து சேர்க்கும் என்பதே அந்தக் கருத்து. அதிலும் பெண் உடல் எப்போதும் ஆசையின் இருப்பிடம். அது தருவதாக நம்பும் இன்பம் பாவங்களின் தோற்றக்களன் என்பதும் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒன்று.  இந்த நம்பிக்கையின் எதிர்நிலையாக மனம் நிறுத்தப்படும். மனத்தின் வினைகள் – அதாவது புத்தியின் வினைகள் பாவங்களுக்கு எதிரானவை. புண்ணியங் களையும் பெருமைகளையும் கொண்டு வந்து சேர்ப்பவை எனச் சொல்லாடல்கள் உருவாக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டவை.
டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் உருவாக்கப்பட்டுள்ள உடல் x மனம் என்ற எதிர்வைக் கண்டுபிடிக்க பெருங்கவனம் எல்லாம் தேவையில்லை. சில்க் பாத்திரம் உடலின் குறியீடு என்றால், வணிகப் படங்களுக்கு மாற்றாகத் திரைப்பட விழாக்களுக்காகப் படம் எடுக்கும் இயக்குநர் மனத்தின் குறியீடு.கலைப்பட இயக்குநர் பாத்திரம் தொடர்ந்து சில்க் மீது செலுத்தும் பார்வையும், வணிக சினிமாவிற்கு எதிராக வைக்கும் விமரிசனமும் படத்திற்குள் உருவாக்கப்பட்டுள்ள காத்திரமான எதிர்வுகள். அதன் வழியே  பார்வையாளர்களுக்கு வாழ்க்கை முறைகளையும், நெறிமுறைகளையும் கற்றுத் தருவதற்குப் பயன்பட வேண்டிய சினிமாவிற்குள் சில்க் ஸ்மிதாவின் இருப்பும், அவளது உடலால் உருவாக்கப்பட்ட பிம்பங்களும் அழுக்கின் சாயல் கொண்டவை எனவும், அதன் வழிப் பார்வையாளர்களின் மனதில் கறைகளே படிய வைக்கப்பட்டன எனவும் படம் முழுக்கச் சொல்லப்படுகின்றன. அத்தோடு புத்தியைத் தள்ளி வைத்து விட்டு உடலையே கருவியாக நம்பிப் பயன்படுத்து பவர்களும் கொண்டாடுபவர்களும் முழு வாழ்க்கையை வாழ முடியாது என்ற மறைமுக எச்சரிக்கையையும் இந்தப் படம் முன் வைத்துள்ளது.
உடலின் பயணம், அறிவின் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டுத் தன்னை மையப்படுத்தி உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கக் கூடியது. தன்னைக் கொண்டாடும் நிலையை வெற்றியாகக் கொண்டாடும் உடல், தான் ஒதுக்கப்படும் போது தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் உடலின் இருப்பையே கேள்விக்குரியதாக ஆக்கி விடும். அந்நிலை உண்டாகும்போது ஒதுக்கும் உடலின் மீது வன்முறையைச் செலுத்துவது ஆண் உடலின் நிலைபாடு.ஆனால் பெண் உடல் தன் உடலின் மீதே சுயவன்முறையை மேற்கொண்டு சிதைத்துக்கொள்ளும் அல்லது அழித்துக் கொள்ளும். சிலுக்கின் தற்கொலை சுய அழிவின் வெளிப்பாடு எனப் பேசுகிறது டர்ட்டி பிக்சர்ஸ். 
குறிப்பிட்ட கால கட்டத்தில் கொண்டாடப்பட்ட சில்க் ஸ்மிதாவின் உடலும் உடல்சார்ந்த வாழ்க்கையும் நிகழ்கால மனிதர்களுக்கு எச்சரிக்கைக்குரிய பாடமாக – படமாக – ஆகியுள்ளது. இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது யானைகளுக்கு மட்டுமல்ல சில்க் ஸ்மிதாவுக்கும் பொருந்தி நிற்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்