கடந்த காலத்திற்குள் பதுங்கி இருக்கிறது இந்தியவியல்


பல்கலைக்கழக நுழைவு வாயில்
போலந்து வந்த மூன்றாவது நாளில் நான் பணியாற்றும் இந்தியவியல் துறையின் தலைவர் பேரா.டேனுடா ஸ்டாசிக் கொடுத்த அழைப்பிதழ் தமிழ்நாட்டு நினைவுகளைக் கொண்டு வந்து சேர்த்தது. பாண்டிச் சேரி பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பொறுப்பேற்று நண்பர் குணசேகரன் தலைமையில் ஏற்பாடு செய்த அரங்கியலாளர் சந்திப்பு தொடங்கி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடத்திய தலித் எழுத்தாளர் சொற்பொழிவு வரிசை, செவ்வியல் கவிதைகளோடு நவீன கவிகளை உறவாட வைத்த பத்துநாள் பயிலரங்கு வரை ஒவ்வொன்றும் வந்து போய்க் கொண்டே இருந்தன.

நினைத்துப் பார்த்தால் ஓர் இலக்கிய மாணவனாகவும் ஆசிரியனாகவும் நான் பங்கேற்ற கருத்தரங்குகளின் எண்ணிக்கை சில நூறுகளைத் தாண்டும். பல்கலைக்கழக ஆசிரியனாகக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் மட்டும் ஒரு நூறு கட்டுரைகள் வாசித்ததாக எனது தகவல் குறிப்பு சொல்கிறது. அவைகளை விடவும் இலக்கிய அமைப்புகள், பத்திரிகைகள் நடத்திய கருத்தரங்குகளில் தான் நான் அதிகம் பங்கேற்றிருப்பேன். கல்வி நிறுவனங்கள் சார்ந்து நடக்கும் கருத்தரங்கு களிலும் மாநாடுகளிலும் நான் கலந்து கொள்வது பற்றி என் மனைவிக்கு அதிக வருத்தம் இருந்ததில்லை. இலக்கியக் கூட்டங்கள், நாடகப் பட்டறைகள், நாடக அரங்கேற்றம்  என்று சொல்லி வார இறுதிநாட்களில் வீடு தங்காமல் தமிழ்நாட்டின் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் அலைவதில் எனக்கிருந்த ஆசை மனைவிக்கு விருப்பமானதல்ல. சொல்லித் திருத்தி விட முடியாது என்பதால் சகித்துக் கொண்ட பொறுமைக்கு இந்த இரண்டு ஆண்டுகள் சின்ன இடைவெளி. போலந்தில் இருக்கும் காலங்களில் அதிகம் வீடு தங்குவேன் என்பதில் மகிழ்ச்சி.

பேராசிரியர் கொடுத்த கருத்தரங்க அழைப்பிதழ் போலிஷ் மொழியில் அச்சிடப் பட்டிருந்தது. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இந்தியப் பண்பாடு, சமூகம் பற்றிய ஆய்வுகள் என்னும் பொதுத் தலைப்பில் நடைபெற்ற அம்மாநாடு நான் இருக்கும் வார்சா பல்கலைக்கழகத்தில் நடந்தாலும், அதை நடத்தியது CEENI என்னும் அமைப்பு. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் இந்தியவியல் துறைகள் சேர்ந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளன. அதன் ஐந்தாவது மாநாடு இது. அக்டோபர் 27,28,29 தேதிகளில் முதல் இரண்டு நாட்களில் கட்டுரை வாசிப்பதாகவும் மூன்றாம் நாள் அமைப்பு சார்ந்த திட்டமிடலும் என மாநாடு திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தியவியல் துறையின் வாசல்
வாசிக்கப் பட்ட கட்டுரைகளில் ஐந்தில் மூன்று பங்குக் கட்டுரைகள் இந்தியாவின் கடந்த காலத்திற்குள் பயணம் செய்தன.இந்தியா என்பதும், இந்தியவியல் என்பதும் மரபான சமய அறிவாகவே கருதப்படுகிறது. சமயவியல் சார்ந்த தத்துவம், மந்திரவாதிகள், தந்திரக் கருத்துகள், ஆன்மீகத் தேடல்கள், சாமியார்கள், தெய்வங்கள் என்பதாகவே உணரப்படுகிறது. யதார்த்த உலகத்தை இந்தியர்கள் இவற்றோடும் இவை சார்ந்த சடங்குகளில் பங்கேற்பதன் வழியாகவும் விலகி நிற்பதன் மூலமாகவும் கடக்கிறார்கள் என ஐரோப்பிய இந்தியவியல் ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள். அதனால் இந்தியவியலின் முக்கியக் கவனம் சமஸ்கிருதத்தையும் அதன் வழியாகக் கட்டமைக்கப் பட்ட பண்பாட்டு நடவடிக்கைகளையும் மையமிட்டுச் சுழல்கின்றன; இல்லையென்றால் வழிபாட்டு முறைகளுக்குள் இருக்கும் புரியாப்புதிர்களுக்குள் நுழைந்து கொள்கின்றன. ஏற்கெனவே நடந்த மாநாடுகளின் தொகுப்புகளைப் பார்த்த போது இந்த எண்ணமே எனக்குள் உருவாகியது. அதே நேரத்தில் இந்தியவியலில் இந்த மனோபாவம் கொஞ்சம் மாறத் தொடங்கியிருப்பதையும் இந்தக் கருத்தரங்கம் எனக்கு உணர்த்தியது.

நவீன இந்திய இலக்கியம் பற்றிய அமர்வுகளாக இரண்டு அமர்வுகள் இருந்தன. தமிழ் மற்றும் இந்தி மொழி சார்ந்த அமர்வுகள் என அவற்றைச் சொல்லலாம். இரண்டாவது அமர்வு இந்தி சார்ந்தது பெண்களின் எழுத்து சார்ந்து பேசிய கட்டுரைகளைக் கொண்டிருந்த அந்த அமர்வில் வாசிக்கப்பட்ட  கட்டுரைகள்  இந்தி இலக்கியத்தை மையப்படுத்தி இருந்தாலும் எந்த இந்திய மொழி இலக்கியத்திற்கும் உரியன  என்றே சொல்வேன் . பெண்ணின் அலைவு மனம், தன் வரலாற்றைப் பேசும் பெண் மனம் எனப் பெண்ணெழுத்தின் மையங்களை இரண்டு கட்டுரைகள் முன் வைத்தன. அந்தக் கட்டுரைகளின் முறையியல் தமிழ் ஆய்வுகள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டியன. பேராசிரியர் டேனுடாவின் கட்டுரை, அலையும் மனங்கள் ”பொதுவாக வலியைச் சுமந்து நிற்பனதான்; ஆனால் அந்த வலி பொதுவான வலி அல்ல; தனிநபர் சார்ந்த வலியும் வேதனையும் மட்டுமே” என்பதைக் குறிப்பிட்டுப் பேசியது என்றால், அவரது மாணவியின் கட்டுரை, ’பெண் எனும் அடையாளத்தோடு தன்னைப் பொதுவெளியில் முன் வைக்கும்’ இந்திமொழியில் எழுதப்பட்ட பெண்களின் தன் வரலாறுகள் பற்றிய முதல்நிலைத் தகவல்களை முன் வைத்தது.பாமாவின் இரண்டு புதினங்கள் தவிர்த்து தமிழில் இவ்வகைத் தன் வரலாறுகள் எழுதப்படாததன் காரணத்தை மையப்படுத்திப் பேச  வாய்ப்புகள் உண்டு. தமிழ்நாட்டுத் தமிழியல்  ஆய்வுகள் இவ்வாறெல்லாம் செய்யாமல் ’பாமாவின் நாவல்கள் – ஓர் ஆய்வு’ என்ற தலைப்பைத் தான் தேர்ந்தெடுக்கும் என்பதையும் நானறிவேன்.

கருத்தரங்கம் நடந்த கட்டிடம்
தமிழ்நாட்டோடு தொடர்புடைய ஐந்து கட்டுரைகள் இருந்தன என்றாலும் கடைசி அமர்வில் தமிழ் இலக்கியம் பற்றி இரண்டு கட்டுரைகள் வாசிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்ட வேண்டும். சமகாலத் தமிழிலக்கியத்தின் முக்கிய போக்கான தலித் எழுத்துகள் பற்றி செக் நாட்டுப் பேராசிரியர் கட்டுரை வாசித்தார். வார்சா பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் யாசெக் திருமங்கையாழ்வாரின் திருமடல் களின் மையநோக்கத்தை விளக்கிக் காட்டினார். கிறிஸ்தவ ஆசிரமங்கள் பற்றிய இன்னொரு கட்டுரையும் தமிழ்நாடு, கேரள எல்லைகளுக்குள் நின்றே பேசியது.
உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கும் இந்தியவியல் துறைகளில் கற்றுத்தரப்படும் இந்தியவியல் கல்வியை இந்தியாவில் கற்பிக்கப்படும் இலக்கியவியல் கல்வியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது முக்கியமான வேறுபாடு ஒன்று இருப்பதை உணரலாம்.  நமது பல்கலைக்கழகங்கள் வெறும் மொழி இலக்கியத்துறைகளாக மட்டுமே இருக்கின்றன. ஆனால் இந்தியவியல் துறைகள் இந்தியாவின் மொழிகள், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு என அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்தியர்கள் அல்லாதவர்களுக்கு இந்தியாவை அறிமுகப்படுத்தும் வேலையைச் செய்கின்றன, அதனால் அவை ஆழமான விவாதங்களுக்குள் செல்வதில்லை. அறிமுக நிலையையே மேற்கோள்கின்றன. அதே நேரத்தில் இந்த அறிமுகங்கள், நமது ஊரில் அச்சில் வார்த்தெடுக்கப்படும் செங்கல் வார்ப்புகள் போல இல்லாமல் தனித்தன்மையைக் கொண்டிருக்கின்றன. தங்கள் தேசத்து  அறிவாளிகளுக்கு இந்தியாவை எவ்வாறு அறிமுகம் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து செய்யப்படும் அறிமுகங்கள் அவை. எடுத்துக்காட்டாக இங்கே வாசிக்கப்பட்ட தலித் இலக்கியம் பற்றிய கட்டுரையைச் சொல்வேன். இருபது வருடத்திற்கு முன்பு – தலித் இலக்கியம் உருவான போது பேசப்பட்ட விசயங்களே அந்தக் கட்டுரையின் சாரமாக இருந்தது. சாரத்தை அறிமுகம் செய்யும் அந்தக் கட்டுரை அதன் ஊடாக தமிழ் தலித் இலக்கியப் பரப்பின் குறுக்குவெட்டைத் திறந்து காட்டியது.

மாநாட்டின் அழைப்பிதழ் போலிஷ் மொழியில் இருந்தாலும் பெயர்கள், தலைப்பு ஆகியன ஆங்கிலத்தில் அச்சிடப் பட்டிருந்தன. இங்கு எல்லாமும் போலிஷ் தான். ஆங்கிலம் மிகக் குறைந்த அளவில் தான் தொடர்பு மொழியாக இருக்கிறது. இந்தியவியல் துறையின் தொடர்பு மொழி கூட போலிஷ் தான். தமிழ்நாட்டில் நடக்கும் கல்வித்துறை மாநாடுகளைப் போன்றதல்ல என்பதை அந்த அழைப்பிதழே காட்டியது. தொடக்கவிழாவிற்கும் நிறைவு விழாவிற்கும் அரைமணிநேரம் தான். தொடக்கவிழாவில் போலந்து நாட்டிற்கான இந்தியத்தூதர் வந்து சிறப்புரையாக ஆறுநிமிடம் பேசினார். அவர் பெயர்கூட அழைப்பிதழில் இடம்பெறவில்லை. பல்கலைக்கழக அதிகாரிகளின் பெயர்களும் இல்லை. வரவேற்பு, திறப்பு, நன்றி உரைகள் எல்லாம் சேர்த்து பதினேழு நிமிடங்கள். 25 நிமிடங்களில் தொடக்க விழா முடிய நேரடியாகக் கட்டுரைகளுக்குள் நுழைந்து விட்டது.

வகுப்பறையில் உள்ள படங்கள்
மொத்தம் ஐந்து அமர்வுகள் 15 கட்டுரைகள். கட்டுரைக்கு 30 நிமிடங்கள். வாசிக்க 20; விவாதங் களுக்கு 10. எந்தக் கட்டுரையாளரும் எல்லை தாண்டவில்லை. தேநீருக்கு அரைமணிநேரம், மதிய இரவு உணவுகளுக்கு இரண்டு மணிநேரங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கட்டுரையாளர்களோடு கேள்வி, சண்டை, நிலைநிறுத்தல் என உரையாட விரும்பியவர்களுக்கு அவ்வளவு நேரம் தேவைதான். பானம், உணவு, பேச்சு என விரியும் அந்த நேரங்களில் தான் கருத்தரங்கம் களை கட்டுகிறது. நட்புகள் உருவாகின்றன. செக் குடியரசைச் சேர்ந்த டாக்டர் பாவெல், திரு.ழ்னெக் ஸ்டெப்லும் நண்பர்களாக மாறினார்கள். போலந்து நாட்டு ஆடம் மிக்கிவிச் பல்கலைக்கழகத்து டாக்டர் மோனிகா ப்ரோவர்சிக் தோழியானார். ருமேனியா, பல்கேரியா, ஹங்கேரி, குரோசியா, லிதுவேனியா எனப் பலநாட்டு இந்தியவியலாளர்களோடு கைகுலுக்கிக் கொண்டேன். போலந்து நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகத்துப் பேராசிரியர்களும் எனது பெயரை ஒன்றிரண்டு தடவை உச்சரிக்கும்படியாக வாய்ப்புகள் உருவானது. தமிழ்த் தலித் இலக்கியங்கள் பற்றி நான் சொன்ன தகவல்கள் அவர்களுக்குத் தேவையாக இருந்தது. கூகை பற்றியும் செடல் பற்றியும் பேசிய அளவிற்குத் திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடலையும் பெரிய திருமடலையும் பற்றிப் பேசும் நுட்பம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இத்தனைக்கும் அவை இரண்டும் முதுகலையில் பாடமாக இருந்தது. மாணவப்பருவத்துக் கற்பனாவாதப் பகுத்தறிவு அவற்றை இடது கையால் ஒதுக்கி வைத்தது எவ்வளவு அபத்தம் என்பது இப்போது தோன்றியது. திராவிட இயக்கங்கள் தடை செய்யாமல் இருந்திருந்தால் இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ எனது இலக்கிய அறிவுக்காக நான் படித்திருக்கக் கூடும். படித்திருந்தால் காளிதாசனையும் வேதங்களையும் கூட நான் அவர்களோடு விவாதித்திருக்க முடியும். காலம் கடந்து போய்விட்டது. கடந்து போய்விட்ட காலத்திற்குள் தான் இந்தியவியலின் புதிர்கள் பொதிந்து கிடைக்கின்றன. நிகழ்கால ஐரோப்பிய வெளிச்சத்தினூடாக அதைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் இந்தியவியல் ஆய்வாளர்கள். இந்த அழைப்பிதழைப் படித்துப் பாருங்கள். அவர்களின் பாதை தெரியக் கூடும்.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இந்தியப் பண்பாடு, சமூகம் பற்றிய ஆய்வுகள்
தொடக்கவிழா : 15.00-15.30
முதல் அமர்வில் 15.30 – 17.00, 3 கட்டுரைகள்.
·          சிலை எடுப்பு (Pratistha Ceremony-Instalation of an idol), பேரா.மர்ழென்னா செர்னிக் ட்ரொட்சொவிக், ஜோக்லியன் பல்கலைக்கழகம், கிராக்கொவ், போலந்து,
·          மகாபாரதம் 5 ஆம் பர்வம் பற்றிச் சில குறிப்புகள் (Some remarks about the 5th the book of Mahaabhaaratha), பேரா.ஜோனா சச்சா, வ்ரோக்லவ் பல்கலைக்கழகம், போலந்து,
·          ஜோதிடம், ஆன்மீகம், தியானம் ஆகியனவற்றிற்கிடையேயுள்ள உறவுகள் (On the relation between Astrology, Divination and Healing in Indian Society ), பேரா. ஆட்ரியஸ் பெய்னோரியஸ், வில்னியஸ் பல்கலைக்கழகம், லிதுவேனியா
வகுப்பறையில் உள்ள படங்கள்
 இரண்டாம் அமர்வில் ( 17.30-19.00) 3 கட்டுரைகள்
·          உஷா பிரியம்வதாவின் இந்தி புனைகதைகளில் இந்திய அலைவு மனம் (Indian Diaspora in Usaa Priyamvadhaa’s Fiction), பேரா.டேனுடா ஸ்டாசிக், வார்சா பல்கலைக்கழகம், போலந்து
·          பொதுவெளியில் என்னைச் சொல்ல.. :இந்திப் பெண் எழுத்தாளர்களின் தன்வரலாறுகள் பற்றிய பகுப்பாய்வு முயற்சி (Intimate me in the Public Sphere.. An attempt  at Analsis of Autobiographies by Hindi Women Writers) டாக்டர் மோனிகா ப்ரோவர்சிக், ஆடம் மிக்கிவிச் பல்கலைக்கழகம், போஷ்னான், போலந்து
·          இந்தித் தொடரியலில் கூட்டுவாக்கிய அமைப்பும் சிக்கல்களும், (Ergative Construction and the Complexity of Hindi Syntax) டாக்டர். சபினா போபர்டன், புசாரெஸ்ட் பல்கலைக்கழகம், ருமேனியா.
மூன்றாமர்வில் 3 கட்டுரைகள்.(09.00-10.30)
·          வேதத்தில் சாதாரண அமைப்புகளும் எளிய வினை வினைகளும் (Light verb Construction vs Simple verb in Vedic), டாக்டர் மேத் இத்செஸ் இயோட்வோஸ் பல்கலைக்கழகம், புடாபெஸ்ட், ஹங்கேரி
·          மோனத்தின் ஆழத்தில் அறிவின் தோற்றம் : வேதங்களில் தொன்வியல், சடங்கியல், சமயம் தத்துவக் கருத்துக்கள் (Knowledge born in the depths of Absolute Silence : Mythology,Rituals,Religious and Philosophical ideals in the Vedas) பேரா. மிலனாப்ரோடெய்வா, சோபியா பல்கலைக்கழகம், பல்கேரியா.
·          ரிக் வேதத்தில் பொது மற்றும் இருண்மைக் கருத்தியல்களின் கட்டமைப்பு : அம்ஹாஸ் கருத்தியலின் அடிப்படையில் (How the General and Abstract concepts were construed in the Rigveda- based on the examples of the concept aMhas) பேரா.ஜோனா ஜுர்விக்‌ஷ், வார்சா பல்கலைக்கழகம், போலந்து
நான்காமர்வில்  3 கட்டுரைகள்.( 11.00-12.30)
·          பண்டைய இந்திய இலக்கியங்கள் மற்றும் சமூகப் பண்பாட்டு வரலாற்றில் பனுவல் அடுக்குகள் பற்றிய பகுப்பாய்வு (Historical Analysis of Textual layers in Ancient Indian Literature and Indian Cultural and Social History) டாக்டர் இவான் ஆந்திரினாய்க், ஜக்ரப் பல்கலைக்கழகம், குரோசியா,
·          காளிதாசனின் ரகுவம்சத்தில் ரகுவின் திக்விசயத்தின் வழியாக அரசு என்னும் பெரும் கருத்தியல் உருவாக்கம் (The Conceptual Metephors for the State in the Mahaakaavya and the Description of Raghu’s Digvijaya in Kalidaasa’s “Raghuvamsaa”) டாக்டர். அன்னா திரிங்கோவ்ஸ்கா, வார்சா பல்கலைக்கழகம், போலந்து
·          புராணங்களை வலைத்தளத்தில் ஏற்றுதல்: மத்தியகாலத் தொடக்கத்துக்கு வட இந்தியக் கோயில்களின் கட்டிடக் கலையின் பனுவல் வரலாற்றில் அண்மைக் கண்டுபிடிப்புகள் (Bringing Puraanaas to the site. Recent Explorations on the Textual History of Early Medieval North Indian Temple Architecture) பேரா.வல்தஸ் ஜஸ்குனாஸ், வில்னியஸ் பல்கலைக்கழகம், லிதுவேனியா
ஐந்தாம் அமர்வில் 3 கட்டுரைகள் (17.00-18.30)
·          திருமங்கையாழ்வாரின் மடல்களில் விஷ்ணுவின் பிம்பங்கள் (The Image of Vishnu in Tirumankaiyaalvaar’s Matal Poems)  டாக்டர் யாசெக் வஸ்னியக், வார்சா பல்கலைக்கழகம், போலந்து
·          .இலக்கியம் தலித் அடையாளத்தைப் பலப்படுத்தும் ஒரு வழி (Literature – a way of Strengthening Dalit Literature)டாக்டர் பவல் ஹன்ஸ், ஓரியண்டல் நிறுவனம், அறிவியல் கல்விக்கழகம், செக் குடியரசு.
  • இந்தியக் கிறிஸ்தவ ஆசிரமங்கள்: இரு உலகங்களை இணைக்கும் பாலங்கள்? (Christian Ashrams  in India: A bridge between the two world?) திரு.ழ்னெக் ஸ்டெப்ல் , சார்லஸ் பல்கலைக்கழகம், பிரேக், செக் குடியரசு.
ஆசிரியர் அறை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்