அறிவுசார் மண்டலம் என்னும் கனவு.




நெருக்கடிகள் எப்போதும் நினைப்புகளையும் கனவுகளையும் தான் குறி
வைக்கின்றன. சென்னை கொட்டிவாக்கம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை ஒருமுறை பார்த்து விட்டு வார்சா வர வேண்டும் என்பது நினைப்புகளில் ஒன்று. அந்த நினைப்பு புதிதாகத் தோன்றிய ஒன்றல்ல; அதன் வயது மூன்று. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அப்படியொரு நினைப்புத் தோன்றக்காரணம் எனது புத்தக ஆசையோ! படிக்கும் விருப்பமோ அல்ல. அரசின் செயல்பாடு தான் காரணம். அப்படியொரு நம்பிக்கையை ஏற்படுத்திய அரசுச் செயல்பாடு வேறொன்றும் அதற்கு முன்பு ஏற்பட்டதில்லை.  

கிளம்புவதற்கு முன்பு சென்னையில் தங்கியிருந்த மூன்று நாட்களில் ஒருநாள் அதன் வழியாகப் போன போது வார்சாவிலிருந்து திரும்பி வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றொரு தற்காலிகக் காரணத்தை உருவாக்கிக் கொண்டேன்.  மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய அந்த நினைப்பும் கிளம்பும் போது உருவாக்கிக் கொண்ட தற்காலிகக் காரணமும் கரைந்து கொண்டிருக்கின்றன. இரண்டு ஆண்டுகள் கழித்துத் திரும்பவும் சென்னைக்குப் போகும் போது அண்ணா நூலகம் எந்த இடத்தில்? எப்படி இருக்கும்? என்பதை யார் உறுதியாகச் சொல்ல முடியும்?
நிர்வாகம் சார்ந்த சட்டங்களுக்குள் நுழைந்து நீதிமன்றம் இடத்தை மாற்றக் கூடாது எனத் தடை போட்டு நிறுத்தக் கூடும். ஆனால் அதை உருவாக்க நினைத்தவர்கள் மனதில் இருந்த கனவுகளுக்கும் நோக்கங்களுக்கும் ஏற்ப அந்த நூலகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்குமா? அப்படியான எண்ணங்கள் நீதிமன்றங்களுக்கு எப்படி உருவாகும்? நீதிமன்றங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அதிகாரங்களும் தீர்ப்புகளும் உத்தரவுகளும் தான்.  மொழி, இலக்கியம், கலை மற்றும் பண்பாடு சார்ந்த அடையாளங்கள், கல்வி முறை போன்றன சட்டங் களுக்கும் தீர்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட சங்கதிகள் என்பதை நமது அதிகார வர்க்கம் உணரப் போவதில்லை; நீதிமன்றங்களும் உணர விரும்பு வதில்லை. எல்லா வகையான முடிவுகளை எடுக்கும் அதிகாரங்களும் இருப்பதாக அதிகாரிகள் நம்புகிறார்கள்; அம்முடிவுகளை மாற்றித் தீர்ப்பளிக்கும் சாத்தியங்கள் இருப்பதாக நீதிமன்றங்களும் நம்புகின்றன. யாருக்கும் எல்லைகளே இல்லை போலும். 
என்னுடைய முனைவர் பட்டத்திற்கானத் தரவுகளைத் தேடிக் கூட சென்னையிலிருக்கும் எந்த நூலகத்திற்கும் போனவனில்லை. நாயக்கர் கால இலக்கியங்கள் பற்றி ஆய்வு செய்ததால் என்னுடைய ஆய்வுக்கான மூல நூல்கள் மதுரையிலேயே அதிகம் இருந்தன. மதுரைப் பல்கலைக்கழக நூலகத்தைத் தவிர நான் அதிகமாகப் பயன்படுத்திய நூலகங்கள் பாண்டித்துரைத் தேவரின் செந்தமிழ்க் கல்லூரி நூலகமும், மதுரை திருநகரில் இருந்த புலவர் இளங்குமரனின் சொந்த நூலகமும் தான். தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்திலும், தமிழ்ப் பல்கலைக் கழக நூலகத்திலும் சிலவாரங்களைக் கழித்திருக்கிறேன். நூல்களை எடுத்துப் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைப் பார்க்கவும், பயன்படுத்தவும் வேண்டும் என்ற ஆவல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தோன்றக் காரணமாக இருந்தது அந்தக் குழுவினரின் நம்பிக்கையூட்டும் பேச்சுக்களே.

உண்மையில் அந்தக் குழு சந்திக்க வந்தது பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த முனைவர் இரா.தி. சபாபதிமோகனையும் நூலகரையும் தான். தமிழியல் துறையின் தலைவராக இருந்ததோடு அந்த நேரத்தில் பல்கலைக் கழக நூலகத்தின் பொறுப்பு அலுவலராகவும் நான் இருந்தேன். தனிப்பட்ட நிலையிலும் எழுத்துகளோடும் நூல்களோடும் தொடர்புடையவன் என்பது துணைவேந்தருக்குத் தெரியும். தன்னிடம் வந்த குழுவின் உறுப்பினர்களை, வழக்கமான உபசரிப்புக்குப் பின் என்னைப் பார்க்கும்படி சொன்னதோடு, கைபேசியில் அழைத்து அந்தக் குழுவின் வருகையை என்னிடமும் சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

வந்த குழுவில் ஏழெட்டு பேர் இருந்தார்கள். நூலகத்துறை சார்ந்த அதிகாரிகளும், நூலகர்களும், புத்தகப் பிரியர்களும் கொண்டதாக அந்தக் குழு இருந்தது. வந்தவுடன் பல்கலைக்கழக நூலகத்தைப் பார்க்க வேண்டும் என்றார்கள். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகம் அவ்வளவு பெரிய நூலகம் அல்ல என்றாலும் அழைத்துப் போய் சுற்றிக் காட்டி விட்டு அவர்களோடு ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. நான் படித்த மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்திலும், முன்பு பணியாற்றிய புதுச்சேரிப் பல்கலைக் கழகத்திலும் மிகப்பெரிய நூலகங்கள் இருப்பதாகச் சொன்னேன். அவற்றின் வடிவமைப்புகளும் கூடப் பயன்பாட்டுக்கு ஏற்றவை என்று சொன்னேன். பாண்டிச்சேரியைப் பார்த்து விட்டோம். மதுரைக்கு நாளைக்குப் போவோம் என்றார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை.

தமிழ்நாட்டின் முக்கியமான நூலகங்களுக்கெல்லாம் போய்ப் பார்த்து நூலகர்களைச் சந்தித்துப் பேசப் போவதாகவும், எத்தகைய நூல்கள் தமிழ்நாட்டிற்குத் தேவை என்பதைக் கணக்கில் எடுத்து அறிக்கை தர இருப்பதாகவும் சொன்னார்கள். அரசுத்துறை நூலகங்கள் அல்லாமல் தனியார் நூலகங்களும் பார்க்க வேண்டிய பட்டியலில் இருந்தது. இந்திய அளவிலும், உலக அளவிலும் கூட முக்கியமான நூலகங்களுக்குப் போய்ப் பார்த்து வர குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார்கள். வந்த அந்தக் குழுவில் ஒரு தமிழ்ப் பேராசிரியரும் இருந்தார். அவரது பெயர் ந.பிச்சமுத்து. அதிகம் பேசவும் எழுதவும் மாட்டார். ஆனால் அதிகம் வாசிக்கக் கூடியவர். இலக்கியத் திறனாய்வு பற்றி கல்விப் புலத்திற்கான அடிப்படை நூல் அவரது முக்கியமான பங்களிப்பு. பட்டப் படிப்பு மாணவர்களுக்கேற்ற நூல். அவரைத் தேடிப்பிடித்து அந்தக் குழுவில் இடம் பெறச் செய்திருந்ததும் எனது நம்பிக்கையைக் கூடுதலாக்கியிருந்தது

இந்த நூலகம், ஆசியாவிலேயே மிகப்பெரிய- முக்கியமான நூலகமாக அமைய வேண்டும் என்பது அரசுத் தலைவரின் விருப்பமாம். 1982 –இல் சிங்களர்களால் சிதைக்கப்பட்ட யாழ் நூலகத்தின் இழப்பை ஈடு செய்யும் விதமாக உலகத் தமிழர்களுக்கான ஒரு நூலகத்தை அமைக்க வேண்டும் என்று நினைப்பு- அத்தகையதொரு கனவு- நூலகத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு இருக்கிறது என்றும் அவர்கள் சொன்ன போது மனம் ஏற்றுக் கொள்ளச் சொன்னது. அப்போதைய அமைச்சர்களில் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட்ட அமைச்சர்களில் அவரது பெயர் எப்போதும் முதலில் இருந்தது என்பதை நானறிவேன். அரசு கொண்டுவர இருந்த சமச்சீர்க் கல்வித் திட்டத்தின் மீது எனக்கு விமரிசனங்கள் இருந்த போதும், அதை உருவாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏனோ தானோ அல்ல என்ற நம்பிக்கையை உண்டாக்கியிருந்தது. வாசிப்பின் அடையாளங்களாக இருந்த திமுக தலைவர்களின் பெயர்களைத் தாங்கிய தங்கம் தென்னரசு கனவுகள் காணக் கூடியவர் என்பதை நானறிவேன். அவரது சகோதரி தமிழச்சி என்கிற சுமதிக்குள் இருக்கும் கனவும் நினைப்பும் கூட அவரது தந்தை தங்கபாண்டியனின் வேரில் துளிர்த்தது என்பதை அவரோடு பேசிய சந்திப்புகள் உணர்த்தியிருக்கின்றன.  தங்கம் தென்னரசுவின் கனவு பலித்தால் தமிழர்களுக்கு நல்லது எனச் சொன்னேன்.

அவரது கனவு மட்டுமல்ல;எனது ஆசையும் கூட இப்போது நிறைவேறாது என்றே தோன்றுகிறது. நூலகம் புதிதாக அமையப் போகும் அறிவுசார் மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்படும் என்ற அறிவிப்பு கனவுகளையும் ஆசைகளையும் சிதைக்கும் முன்னோட்டம் அல்லாமல் வேறென்ன?. சிதைக்கப்பட்ட நம்பிக்கை முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்பதில் கொஞ்சம் ஆறுதலும் அடைகிறேன். நூலகத்தை விடவும் அறிவுசார் மண்டலம் கூடுதல் நம்பிக்கை தானே. ஒத்தையா? ரெட்டையா? வகையான விளையாட்டுகளை மட்டுமே ஆடும் தமிழகத்தைப் பற்றி நினைக்கும்போது இப்படியான நம்பிக்கைகளைத் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நம்பிக்கைகள் சிதையும்போது சிதைவிலிருந்தே இன்னொரு நம்பிக்கையை உருவாக்கிக் கொள்வது மனப்பிறழ்வு ஏற்படாமல் வாழ்வதற்கான வழிவகையென எங்கோ படித்த ஞாபகம். தொடர்ந்து உயிர்வாழ அறிவுசார் மண்டலத்தைப் புதிய நம்பிக்கையாகப் பற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. தி.மு.க. x அ.இ.அதிமுக எனக் கைமாற்றித் தரப்படும் சூழலும், இதைவிடவும் கூடுதல் இருட்டைக் கொண்டு வரும் மேகமே நல்ல மழையைத் தரப் போகிறது என்ற நம்பிக்கையும் நிலவும் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் அதிரடி விளையாட்டுகளைக் கண்டு ரசிக்கப் பழகிக் கொள்ளவில்லை என்றால் பைத்தியக்கார விடுதிக்குத் தான் போக வேண்டியதிருக்கும். ஜெ.ஜெயலலிதாவின் ஐந்தாண்டு ஆட்சிக்குள் அறிவுசார் மண்டலம் உருவாகி விடும் என்று நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. அவரது அமைச்சரவையில் தங்கம் தென்னரசு போலப் பொறுப்புணர்ந்து செயல்படும் அமைச்சர்கள் ஒருவரும் இல்லை யென்றாலும் நம்பிக்கைகளைத் தளரவிடுவது உடல் நலத்திற்குக் கேடு என்பதால் மறதியைக் கைக்கொள்வதே உய்வதற்கான வழி என்றும் சொல்லி வைக்கிறேன்.
*********                           *********                            *********                              ********* 
அரசு அமைக்கப் போகும் அறிவுசார் மண்டலத்திற்கான முன் மாதிரிகளைப் பார்க்க உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் குழுக்களை அனுப்பும் யோசனை அரசுக்கு இருக்கக் கூடும்; இருக்க வேண்டும்.  இல்லையென்றாலும் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். தீர்மானத்துக்கு முன்போ பின்போ அனுப்பும் குழுவில் ஒன்றை மத்தியப் பிரதேசத்தின் போபால் நகருக்கு அனுப்பி அங்கிருக்கும் பாரத் கலாச்சார மையத்தைப் பார்வையிடச் சொல்லலாம். அதே குழுவே கர்நாடகத்தில் உள்ள விஞ்ஞானி வெங்கடேஸ்வரய்யா அறிவியல் தொழில் நுட்ப வளாகத்தையும் பார்த்துவிட்டுத் திரும்பலாம்.
வெளிநாடுகள் சிலவற்றிற்கும் குழுக்கள் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும் குழுக்களில் ஒன்றைக் கட்டாயம் போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவுக்கும் அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வரும் குழுவோடு நானும் சேர்ந்து அவர்கள் பார்க்க வேண்டிய அனைத்தையும் சுற்றிக் காட்டத் தயாராக இருக்கிறேன். என்னோடு இன்னொரு போலந்து நாட்டுத் தமிழ்ப் பேராசிரியரும் இருக்கிறார். ஜெயகாந்தன் பற்றி முனைவர் பட்டத்தை முடித்துள்ளார். போலிஷ், ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளும் அவருக்கு அத்துபடி. எங்களிடம் தமிழ் பயிலும் மாணவ மாணவிகள் பத்துபேர் இருக்கிறார்கள். அவர்களையும் கூட அழைத்துக் கொள்ளலாம். இந்தியவியல் துறையில் இந்தி, வங்காளம், பஞ்சாபி என இந்திய மொழிகள் தெரிந்த போலிஷ் ஆசிரியர்களும் மாணவர்களும் கூட இருக்கிறார்கள். அவர்களோடு பேசிக் கொண்டிருப்பது இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வை அந்தக் குழுவிற்குக் கட்டாயம் உண்டு பண்ணும். அப்படியொரு உணர்வை உண்டாக்குவது தானே அறிவுசார் மண்டலத்தின் முதல் வேலையாக இருக்க முடியும்?
போலந்து நாட்டு அறிவுசார் மண்டலத்தைத் தேடி வேறு எங்கும் போக வேண்டியதில்லை. வார்சா பல்கலைக் கழகமே ஓர் அறிவுமண்டலம் தான். இந்தியாவில் இருக்கும் எல்லாப் பல்கலைக்கழகங்களையும் விட வயதில் மூத்தது. 1816 இல் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் ஐரோப்பாவில் இருக்கும் பல்கலைக் கழகங்களில் பெருமைமிகுந்தது என்பதை உலகத்தில் எந்தப் பல்கலைக் கழகத்திலும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பாதி கூட (38,230,000) இல்லாத போலந்தின் முதன்மைப் பல்கலைக்கழகம் வார்சா தான். கலையியல், சமூகவியல், அறிவியல் என எல்லாப் புலங்களிலும் சேர்த்து 49 முக்கியத்துறைகளில், 100 க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் இருக்கின்றன.56,550 மாணாக்கர்கள் (2850 முனைவர் பட்ட ஆய்வாளர்களும் இதில் அடக்கம்) படிக்கும் இப்பல்கலைக் கழகத்தில் ஆசிரியப் பணி செய்பவர்கள் எண்ணிக்கை 3250. பேராசிரியர்கள் மட்டும் 840. எல்லாப் பாடங்களும் போலிஷ் மொழியில் தான் கற்றுத்தரப்படுகின்றன. தேவை கருதி சில பாடங்களை ஆங்கிலம் வழியாகவும் படிக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழிக்கல்வியை உள்ளடக்கியுள்ள தென்ஆசியவியல் புலத்திற் குள்ளேயே இந்தியவியல், ஜப்பானியவியல், தென்கிழக்காசியவியல் (சீனம், கொரியா, வியட்நாம், மலேசியா, மியான்மார், தாய்லாந்து) அரேபியவியல் (துருக்கி, ஆப்கானிஸ்தான், சிரியா, பாகிஸ்தான்) படிப்புகளில் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாறு பற்றிய பாடங்கள் கற்றுத் தாப்படுகின்றன. மொழிக்கல்வியை வெறும் மொழிக்கல்வியாகப் பார்க்காமல் கலை, இலக்கியம், மெய்யியல், வரலாறு, பண்பாடு பற்றிய கல்வியின் பகுதியாகக் கற்றுத் தருகிறார்கள். எல்லாத் துறைகளுக்குமான பொது நூலகம் விரிந்து பரந்து கிடக்க, ஒவ்வொரு துறையும் தங்களுக்கான சிறப்பு நூல்களை வாங்கி அடுக்கி வைத்திருக்கும் துறை நூலகங்களும் இருக்கின்றன. இந்தியவியல் துறையில் இருக்கும் இந்தியாவைப் பற்றிய நூல்கள் பலவற்றை நான் இங்கு வந்து தான் பார்க்கிறேன். பழையதும் புதியனவுமாக நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மர அடுக்குகள் ஒவ்வொரு வகுப்பறையின் மதில்களாக இருக்கின்றன. தேவைப்பட்டால் நகர்த்திக் கொண்டு பெரிய அறைகளாக அவற்றை மாற்றிக் கொள்ளும் வசதியோடு இயங்குகின்றன. இவற்றையெல்லாம் அறிவுசார் மண்டலத்தை அமைக்கப் போகும் குழு பார்க்க வேண்டும்.  
ஒரு மாதிரிப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான குழுதானே இதைப் பார்க்க வேண்டும் என அதிகாரிகள் சொல்லக் கூடும். நம்மூர் அறிவு ஜீவிகளில் பலரும் அப்படித்தான் சொல்வார்கள். ஆம் அவர்கள் அப்படிச் சொல்லும்படி தான் பழக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் தனித்தனியாகப் பிரித்துப் பிரித்துப் பார்த்துப் புரிந்து கொள்ளும் அறிதல் முறைக்குள் வளர்ந்தால் அப்படித்தானே நினைக்கத் தோன்றும். ஒதுக்கி ஒதுக்கி வைத்து விட்டு எனக்கானதைத் தேடும் புலப்பாட்டு முறையில் வளர்ந்த நாம் அப்படிச் சிந்திப்பதை உடனடியாக விட்டுவிட முடியாது. நானும் கூட அப்படித்தான் இரண்டு மாதத்திற்கு முன்பு நினைத்துக் கொண்டிருந்தேன்.
வார்சா பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டதை இலவச இணைப்பாக வைத்துக் கொண்டு பக்கத்திலேயே இருக்கும் போலந்து கலாசார மாளிகை, பண்பாட்டு வேர்களின் ஆதார மையம், நவீன ஓவியம் மற்றும் கலைக் கூடம்,  தியாகிகளின் நினைவகம், அதன் அருகில் இருக்கும் மரங்கள் அடர்ந்த பூங்கா என ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே போகலாம். ஒவ்வொன்றுக்குள்ளும் அவைசார்ந்த நூல்கள் கொண்ட நூலகங்கள்  இருக்கின்றன. நான் சொல்லும் எல்லாமும் வார்சா பல்கலைக்கழக வாசலிலிருந்து கால்மணி நேரத்திற்குள் நடந்து நடந்து பார்த்து விடும் தூரத்தில் தான் இருக்கின்றன.

பாண்டிச்சேரியிலிருக்கும் தாவரவியல் பூங்காவையொத்த ஒரு பூங்காவின் முடிவில் தான் போரில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கான மண்டபம் இருக்கிறது. குறிப்பிட்ட போர் என்பதாக இல்லாமல் - வரலாற்றின் நெடுகிலும்- உள்நாட்டு வெளிநாட்டுப் போர்களில் – வீர மரணம் அடைந்தவர்களுக்கான நினைவுச் சின்னம் அது. அந்தச் சின்னத்தின் அருகில் தீபம் எரிந்து கொண்டே இருக்கிறது. துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் எந்நேரமும் காவல் இருக்கிறார்கள். அதன் முன்னே மிகப் பரந்த மைதானம் விரிந்து பரவிக் கிடக்கிறது. குறிப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கொரு முறை ராணுவ வீரர்கள் அணிவகுத்து வந்து கைமாற்றுகின்றனர். மாறுதல் நடப்பதைப் பார்க்க  ஒவ்வொரு நாள் மாலையிலும் பள்ளிக் கூடப் பிள்ளைகள் வந்து குழுமுகிறார்கள். பார்த்து விட்டுப் பூங்காவில் விளையாடியபின் ஆசிரியையைகள் பின்னால் நடந்து போகும் வரிசையைப் பார்ப்பதை அழகா? அறிவா? என்று சொல்லத் தெரியவில்லை. 

நினைவுச் சின்னத்தின் இடதுபுறம் நடந்தால் நவீனக் கலைகளுக்கான பேரரங்கத்திற்குள் நுழைந்து விடலாம். ஏதாவது ஒரு நாட்டு கலைசார் குழு வந்து தங்களின் சிற்பம், ஓவியம், நடனம் போன்றவற்றைக் காட்சிப் படுத்துவதும் கலைத்துப் போடுவதுமாக இருப்பார்கள். அரசாங்கம் கட்டித் தந்துள்ள அரங்கம் மிகக் குறைந்த வாடகைக்குக் கிடைக்கிறது. நான் போன நேரத்தில் இந்தியாவின் நவீனக் கலைஞர்களும் ஓவியர்களும் முகாமிட்டிருந்தார்கள். இப்போது பிரேசிலிலிருந்து ஒரு குழு வந்திருக்கிறது. வெவ்வேறு தேசங்களின் கலைப்பொருட்களைப் பார்வைக்கு வைப்பதற்கான அடிப்படைத் தளங்கள் இருக்கின்றன. அவற்றை இடம் மாற்றி அந்தந்த நாட்டின் காட்சிப் படுத்தலுக்கேற்பப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதன் எதிரில் தான் போலந்துப் பண்பாட்டு ஆவணக்காப்பகம் இருக்கிறது. எத்தினிக் ம்யூசியம் ஆப் போலந்து என ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள காப்பகத்தில் நாட்டின் தொழில், ஆடை, விழா, உணவு, சமய நம்பிக்கைகள், விளையாட்டுகள், என ஒவ்வொன்றின் அடையாளமும் வட்டார வேறுபாட்டோடும், கால வரிசைப்படியும் பாதுகாக்கப்பட்டுள்ளன. என்னென்ன வகையானவை இருந்தன என்பதோடு இப்போது என்னவெல்லாம் இருக்கின்றன என்பதும் உணர்த்தப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்டுள்ள ஆடை வகைகளும் வண்ணங்களும் போலந்து நாட்டுப் பண்பாட்டு வேறுபாடுகளைச் சொல்கின்றன, தலைநகரை விட்டு வெளியேறித் தூரத்தில் இருக்கும் கிராமங்களுக்குச் செல்லாதவர்களுக்கும் கூடக் கிராமத்தின் அடையாளம்- அறிவாகப் பாதுகாக்கப்படுகின்றன.

வேளாண்மைக் கருவிகள், நெசவுக்கான தளவாடங்கள், மண்பானை வலையங்கள், சந்தைகள், நாணயங்கள், எனக் காட்சிப்படுத்தத் தமிழ்நாட்டிலும் நிறைய இருந்தன; இருக்கின்றன. இந்தத் தருணத்தை விட்டு விட்டால், கிராமத்து வளசல்களும் குலுக்கைகளும் திரிகைகளும் ஏர்களும் தார்க்குச்சியும் கட்டுத்தறியும், கொட்டங்களும், மணிக்கொச்சமும், பண்ட பாத்திரங்களும் காணாமல் போய்விடும். வேட்டியும் சேலையும் கல்யாணத்துக்கு மட்டுமான ஆடையாக ஆகும் காலம் வெகுதொலைவில் இல்லை. மின்சாரம் இல்லாத போது விசிறிக் கொள்ள இருந்த பனைமர விசிறிகளை இப்போது காணோம். பள்ளு இலக்கியங்களில் பட்டியலிடப்படும் நெல்வகைகளை அடையாளம் கண்டு பிடிக்கக் கூடிய ஒரு விவசாயியைக் கூட நாம் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. பசுமைப்புரட்சியும் வெண்மைப் புரட்சியும் உண்டாக்கிய எதிர்மறை விளைவுகள் நமது அறிவை அழித்தது என்பதைச் சொல்ல வேண்டும் என்றால், எல்லாவற்றையும் -காணாமல் போய்க் கொண்டிருப்பவையெல்லாம் தமிழர்களின் அறிவு என்ற கண்ணோட்டத்தில் தேடிச் சேர்க்கும் பொறுப்பை உடனே செய்ய வேண்டும். அதுவே அறிவுசார் மண்டலத்தின் முக்கியப் பங்காக மாறிவிடும். நூல்களில் மட்டுமே அறிவு தங்கியிருக்கிறது என்பதை முதலில் மாற்ற வேண்டும். அந்த மாற்றமே விளிம்புநிலை மனிதர்களை நோக்கிய பார்வையை நமக்கு உண்டாக்கி விடும்.

போலந்து நாட்டின் அறிவுத் தளத்திற்கு உயரிய பங்களிப்பைச் செய்துள்ள வார்சா பல்கலைக்கழக வளாகம் தான் இங்கு நடந்த அரசியல் பண்பாட்டு நடவடிக்கை களின் களமாக இருந்தது. கம்யூனிச அரசு உருவானதற்கான விதைகளும் இங்குதான் போடப்பட்டதாம். லெக் வாவெ(லெ)சாவின் சாலிடாரிட்டி இயக்கத்தின் முயற்சியால் 1989 இல் கம்யூனிச அரசு அகற்றப்பட்டு ஜனநாயகத்திற்கு மாறிய நடவடிக்கையின் சிதறல்களும் இந்தப் பல்கலைக்கழக வளாகத்தோடு தொடர்பு கொண்டிருக்கின்றன. இப்போது இங்கே எந்தவித அரசியல் நடவடிக்கைகளையும் காணோம். அமைதியாக அறிவுப் பரவல் நடந்து கொண்டிருக்கிறது. என்றாலும் மாணவப் பிரதிகள் பங்கேற்கும் தேர்தலும், நிர்வாக அமைப்பும் செயல்படவே செய்கின்றன.

பல்கலைக்கழக வாசலுக்கு வந்து போகும் பேருந்தில் ஏறினால் ஐந்தாவது நிமிடத்தில் போலந்து நாட்டின் கலாச்சார மாளிகை என்னும் ஊசிக்கோபுரம் நிற்கும் இடத்தில் இறங்கி விடலாம். ஹிட்லரின் நாஜிப்படைகள் ரஷ்யாவிற்குள் வராமல் தடுத்ததில் போலந்து மக்கள் ஆற்றிய தீரத்துக்காக சோவியத் அதிபர் ஜோசப் ஸ்டாலின் கட்டிக் கொடுத்த பிரமாண்டமான அன்பளிப்பு அந்தக் கட்டிடம் . வார்சா நகரத்துக்கே நேரம் காட்டும் நோக்கம் கொண்டது போல பெரிய கடிகாரங்களோடு உயர்ந்து நிற்கும் அக்கட்டிடத்தைச் சுற்றி நாடக அரங்குகளும் திரையரங்குகளும் அறிவியல் தொழில்நுட்பக் காட்சிக் கூடங்களும் இருக்கின்றன. சர்வதேசத் திரைப்பட விழாக்களையும் நாடகவிழாக்களையும் நடத்துவதற்கு வசதியாக கூடங்கள் வரிசையாக இருக்கின்றன. விவாதங்களை அரங்கேற்றும் பேச்சு மேடைகளும் இருக்கின்றன. போலந்து நாட்டின் பண்பாட்டு நடவடிக்கைகளைச் சொல்லும் அறிவிக்கைகளும் சுவரொட்டிகளும் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கின்றன. நிரந்தரமான காட்சிக் கூடங்களும் நூலகமும் கொண்டதாக நிமிர்ந்து நிற்கும் அதைப் போலந்து நாட்டவர்கள் தேசியப் பெருமிதமாக நினைக்கிறார்கள். அதற்கு முன்னால் சுட்டிக் குழந்தைகள் விளையாட சிறார் விளையாட்டுப்பூங்காவும் இருக்கிறது.

போலந்து நாட்டுக் குடிமக்கள் இப்போது ஸ்டாலினை விரும்பவில்லை யென்றாலும் அவரது கொடையான கலாசார மாளிகையை அடையாளம் சிதைக்காமல் காத்து வருகிறார்கள். என்னிடம் படிக்கும் மாணவி ஒருத்தியிடம் கேட்டேன். கம்யூனிசத் திற்கெதிராக நடந்த போராட்டத்தின் போது ஸ்டாலின் தந்த இந்தக் கட்டிடத்தைச் சிதைக்கும் முயற்சி நடக்கவில்லையா? என்பதுதான் எனது கேள்வி.  “ஏன் சிதைக்க வேண்டும்? அவரது பையிலிருந்து செலவழித்தா கட்டினார். போலந்து மக்களும் சோவியத் மக்களும் உழைத்த பணத்திலிருந்து தானே அந்தக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்தார். மக்கள் பயன்பாட்டுக்கு விடுவதுதானே சரியாக இருக்கும்”  என்பது அவளது பதிலாக இருந்தது.

அவளது மனம் ஐரோப்பிய மனம். அப்படித்தான் சொல்லும். நாம் ஒதுக்குவதன் மூலமும் ஒதுங்குவதன் மூலமும் புனிதத்தைக் காக்கும் இந்தியப் பாரம்பரியத்தில் வந்தவர்கள். அவள் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஐரோப்பாவை எல்லாவற்றிற்கும் பின்பற்ற வேண்டுமா.என்ன?. அந்தக் கட்டிடத்தை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பி விடலாம். நமது பாரம்பரியம் புதிய வரலாறு படைக்கும் பாரம்பரியம். அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை அறிவுசார் மண்டலத்திற்கு மாற்றிப் புதிய வரலாறு படைப்பதை நமது லட்சியமாகக் கொள்ளலாம். கொட்டிவாக்கத்தில் உலகத்தரத்தில் ஒரு குழந்தைகள் மருத்துவ மையம். நுங்கம்பாக்கத்தில் மூன்று லோகமும் காணாத அறிவுசார் மண்டலம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அல்ல. மூன்று மாங்காய். மூணாவதாக விழுவது மாங்காயா? தேங்காயா? என்பதல்ல முக்கியம். வரலாற்றை அழித்தெழுவதுதான் முக்கியம்.
-------------------------------------------------------------------------------
நன்றி : உயிர்மை, ஜனவரி, 2012

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்