நடத்துநர்கள் இல்லை; சோதனைகள் உண்டு



ஏப்ரல் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை. முட்டாள் தனமாக ஏமாந்து விடக் கூடாது என்று நினைத்து எங்கும் கிளம்ப வில்லை. அடுத்த நாள் திங்கட்கிழமை ஊர் சுற்றிப் பார்க்கலாம் எனத் தோன்றியது. எங்கே போவது என்ற திட்டம் எதுவும் இல்லை. வீட்டிற்கு அருகில் இருக்கும் அல் –அலோயோனிக்கோவ் நிறுத்தத்தில் டிராம் ஏறி விலோஷ்னோவாவில் இறங்கி மெட்ரோ ரயிலில் செல்லலாம் என நினைத்துக் கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர் ஏறி விட்டார். சோதனை செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் விலோனோவ்ஸ்காவில் இறங்கவில்லை.
 
தொடர்ந்து பயணம் செய்து ரகோவிக்‌ஷாவில் இறங்கிக் கொள்வது என ஒரு திட்டம் உருவானது. அங்கு இருக்கும் சிட்டி வங்கிக் கிளையில் பணம் எடுத்துக் கொண்டு, வழக்கமாக டாலரைப் போலந்துப் பணமான ஜுலாட்டியாக மாற்றும் இண்ட்ராகோர்ட் போய் வருவது என ஒரு இலக்கும் உருவானது.மனம் திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும்போதே பரிசோதகரிடம் சிக்கிக் கொண்ட மூன்றுபேர்களைக் கண்கள் கவனித்தன. மூன்றுபேரில் இரண்டு பேர் நீண்ட கால அட்டையைக் காட்டினார்கள். ஆனால் உரிய நேரத்தில் நீட்டிக்கப் படவில்லை என்பதைப் பரிசோதகர் சுட்டிக்காட்டித் தண்டத்தொகைக்கான ரசீதை நீட்டினார். ரசீதை வாங்கிக் கொண்டு ஒருவர் பணத்தைக் கொடுத்தார். இன்னொருவரிடம் பணம் இல்லை போலும். கைவசம் இருந்த வேறொரு அடையாள அட்டையை எடுத்துக் காட்டினார். அது அவரது குடும்ப அட்டையா? வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கிய அடையாள அட்டையா என்பது தெரியவில்லை. அதில் இருந்த எண்ணையும் ரசீதில் குறித்துக் கொண்டு ரசீதின் ஒரு பிரதியை அவரிடம் கொடுத்தார் சோதனையாளர். அந்த இருவரிடமும் சோதனை செய்ய வந்தவர் பேசவே இல்லை. இவர்களும் அவரிடம் தவறை மறைக்க நினைத்தோ, மன்னிப்புக் கேட்டோ பேசவும் இல்லை. வாக்குவாதமே இல்லாமல் பரிசோதகரும் பயணிகளும் சாந்தமாக நகரும் காட்சிகளைத் தமிழ்நாட்டில் காண முடியாது. குறைந்த பட்சம் நடத்துநராவது பயணியைத் திட்டாமல் விட மாட்டார். இல்லையென்றால் பயணி பரிசோதகரிடம் “ இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க” என்று கெஞ்சவாவது செய்வார். இங்கு எதுவுமே நடக்கவில்லை. பணம் கட்டாதவர் குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தைக் கட்டியாக வேண்டும். இல்லையென்றால் தண்டத்தொகை கூடுதலாகி விடும். அரசின் வலையத்திற்குள் வரும்போது சிக்கலாகி விடுமாம்.
 




முன்றாவது நபர் ஏதோ சொல்ல முயன்றார். அப்போது திரும்பிப் பார்த்தேன். தான் போலந்துக்காரன் இல்லை என்றும், தன்னிடம் ஒரு பயணச்சீட்டு இருப்பதாகவும் எடுத்துக் காட்டினார் அந்தப் பயணி. ஆசியக் கண்டத்துக்கான முக அமைப்பும் தோலின் நிறமும் இருந்தது. இந்தியராக இருக்கக் கூடும் என நினைத்து அருகில் போனேன். போனபோது சோதனையாளர் அவரை அடுத்த நிறுத்தத்தில் இறக்கியதோடு தானும் இறங்கினார். நானும் கூடவே இறங்கி விட்டேன். அவருக்கு என்ன நேரும் என்ற அச்சமும் ஆர்வமும் என்னை இறங்கச் செய்தது. இறங்கியவுடன் அவரது நாட்டுக் குடியுரிமைப் புத்தகம் மற்றும் கடவுச் சீட்டைக் கேட்டார் பரிசோதகர்; அவரும் எடுத்துக்காட்டினார் பக்கத்தில் போகவில்லை; கொஞ்சம் தூரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

பயணி சொன்னது சரிதான். அவரிடம் ஒரு பயணச்சீட்டு இருந்தது. அதன் மதிப்பு 03.60 போலந்து ஜுலாட்டி. அதை வைத்திருப்பவர் தொடர்ந்து 40 நிமிடம் பயணம் செய்யலாம். நம்மூரில் பயணச் சீட்டு வாங்கி விட்டால் வேலை முடிந்து விடுவது போல் அங்கு சீட்டை வாங்கிக் கையில் வைத்திருந்தால் போதாது. டிராம் அல்லது பேருந்தில் ஏறியவுடன் அங்கிருக்கும் மின்னணு எந்திரத்திற்குள் சொருகிப் பயண நேரத்தை அச்சிட்டுக் கொள்ள வேண்டும். அச்சிட்டுக் கொள்வதிலிருந்து தான் பயண நேரம் ஆரம்பமாகிறது. அதைச் செய்யாமல் கையில் வைத்துக் கொண்டிருந்தது அவர் தப்பு. பரிசோதகர் பயணி சொன்ன விளக்கங்களைப் புரிந்து கொண்டவராகக் காட்டிக் கொள்ளவில்லை. தண்டத்தொகையைக் கட்டும்படி வலியுறுத்தினார். தன் வசம் அவ்வளவு ஜுலாட்டி இல்லை அமெரிக்க டாலர் தான் இருக்கிறது எனப் பயணி சொன்ன போது, “ போலீஸை அழைக்கிறேன்; அவர்களிடம் பேசிக்கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டுப் போனை எடுத்தார் பரிசோதகர். நான் இடையில் புகுந்தேன். அவருக்குப் பதிலாக நான் அந்தப் பணத்தைக் கட்டுகிறேன் எனச் சொன்னபோது பரிசோதகர் என்னைத் திரும்பிப் பார்த்தார். ஒரு வெளிநாட்டுக்காரருக்கு இன்னொரு வெளிநாட்டுக்காரர் உதவுகிறார் என்பதைப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தார். குறைந்த அளவு தண்டத்தொகையான 110 ஜுலாட்டிக்கான ரசீதை நீட்டினார். ”டாலரைக் கொடுங்கள்; ஜுலாட்டி தருகிறேன்” என நான் அந்தப் பயணியிடம் சொன்னபோது தன் வசம் இருந்த அமெரிக்க டாலர்களைக் காட்டினார். 50 டாலர்களைப் பெற்றுக் கொண்டு 160 ஜுலாட்டியைத் தந்தேன். அதிலிருந்து தண்டத்தொகையைக் கட்டி விட்டு என்னிடம் சிநேகபாவத்தோடு திரும்பித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரது முழுப் பெயரும் நினைவில் வைத்துக் கொள்ளவதாக இல்லை. கடைசியில் முகம்மது என முடிந்தது. பாகிஸ்தானிலிருந்து மூன்று நாட்களுக்கு முன்புதான் வார்சா வந்தேன் என்றார். இங்கு வேலை பார்க்க முடியும் என ஒருவர் வரச்சொன்னதின் பேரில் வந்திருப்பதாகவும், இந்த நாட்டின் பயண முறைகளும் விதிகளும் இன்னும் முழுமையாகப் பிடிபடவில்லை என்றும் சொல்லி விட்டு உரிய நேரத்தில் உதவியதற்கு ’நன்றி’ என ஆங்கிலத்தில் சொன்னார். என் பெயர் ராமசாமி எனச் சொல்லி விட்டு, இந்தியாவிலிருந்து வந்து வார்சா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக இருக்கிறேன் எனச் சொன்ன போது அவரது முகத்தில் வெளிப்பட்ட உணர்வுகளின் அர்த்தத்தைச் சரியாக எழுத முடியவில்லை. ஒரு இந்தியனிடம் உதவி பெறுவதாக ஆகி விட்டதே என நினைத்தாரா? பக்கத்து நாட்டுப் பாசம் உதவியது எனக் கருதினாரா? என ஊகிக்க முடியவில்லை.


’தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு’ எனச் சொல்லி இறக்கி விடவோ, விசிலை அடித்து விட்டு ’ரைட் போகலாம்’ என உத்தரவு கொடுக்கவோ நடத்துநர்கள் இங்கு இல்லை. ”டிக்கெட், டிக்கெட்” எனக் கேட்டுக் கொண்டே அலையும் கண்டக்டர்களைப் பேருந்தில் தேடினால் கிடைக்க மாட்டார். பேருந்து, டிராம், மெட்ரோ, விமானம் என அதற்குமே நடத்துநர்கள் இருப்பதில்லை. நமக்குத் தேவையான பயணச்சீட்டுகளை நாம் மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளலாம். பயணச்சீட்டுகள் தூரம் சார்ந்த மதிப்புடையவை அல்ல. காலம் சார்ந்த மதிப்பு கொண்ட பயணச்சீட்டுகள் தான் புழக்கத்தில் உள்ளன. அரசுதான் பொதுப் போக்குவரத்தை நடத்துகின்றது. போலந்தில் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதும் பொதுப்போக்குவரத்து சிறப்பாகப் பேணப்படுவதாக ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்த நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

போலந்து பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய கால அளவு கொண்ட பயணச்சீட்டுகளை ஒவ்வொரு நிறுத்தத்திலும் இருக்கும் அங்கீகாரம் பெற்ற கடைகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். 2.60 ஜுலாட்டிக்கு பயணச்சீட்டு வாங்கினால் 20 நிமிடங்கள் பயணம் செய்யலாம்.3.60 க்கு வாங்கினால் 40 நிமிடங்கள். 5.20 க்கு வாங்கினால் ஒரு மணி நேரம் போகலாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் இரண்டு மூன்று பேருந்துகளில் மாறிக் கூடப் போகலாம். பேருந்து, டிராம், மெட்ரோ என மாறிமாறிக் கூடப் பயணம் செய்யலாம். தனித்தனியாக சீட்டு வாங்க வேண்டியதில்லை. 5.20 க்கு பயணச்சீட்டு வாங்கியவர் ஒரே வண்டியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாகக் கூடப் பயணம் செய்யலாம். இரண்டு எல்லைக்கும் இடையேயுள்ள தூரத்தை அந்த வண்டி ஒன்றரை மணி நேரத்தில் கடக்கும் என்றாலும் ஒரு மணி நேரத்திற்கான சீட்டை வாங்கிக் கொண்டால் போதும். இதைவிட ஒருநாள் முழுவதும் பயணம் செய்ய 12 ஜுலாட்டியில் ஒரு பயணச்சீட்டு வாங்கிக் கொண்டால் சீட்டு வாங்கிய தேதியில் இரவு 23.59 மணி வரை பயணம் செய்யலாம். 12 ஜுலாட்டிக்குப் பதிலாக 24 ஜுலாட்டியில் ஒரு சீட்டு வாங்கினால் தொடர்ச்சியாக மூன்று நாளுக்கு வார்சா நகரத்தில் பயணம் செய்து கொண்டே இருக்கலாம். வார்சா நகரம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மையமான நகரப்பகுதி பகுதி- 1, சுற்றுப்புற நகரமும் கிராமங்களும் அடங்கியது பகுதி -2. இரண்டு பகுதியிலும் பயணம் செய்யக் கட்டண விகிதங்கள் வேறு விதமாக அமைந்துள்ளது. 12, 24 ஜுலாட்டிகளுக்குப் பதிலாக முறையே 16,32 என வாங்கிக் கொண்டால் வார்சா முழுவதும் பயணம் செய்யலாம்.



என்னிடம் இருப்பது மூன்று மாதத்திற்கான அனுமதி ச்சீட்டு. 220 ஜுலாட்டி கொடுத்து நான் வாங்கி யிருக்கும் அட்டையை எடுத்துக் கொண்டு வார்சா பகுதி-1 இல் எங்கு வேண்டு மானாலும் போகலாம். பேருந்து, டிராம், மெட்ரோ ரயில் என மாறிமாறிப் பயணம் செய்யலாம். கையில் எப்போதும் அந்த அட்டையை வைத்திருக்க வேண்டும். பரிசோதகர்கள் எப்போது வேண்டுமானாலும் ஏறுவார்கள் அவர் வைத்திருக்கும் மின்னணு எந்திரத்தில் பயணிகள் வசம் உள்ள பயணச்சீட்டை வைத்தால் சப்தம் எழுப்பும். பயன்பாட்டில் இருக்கக் கூடிய சீட்டுக்குத் தான் சப்தம் வரும். காலம் முடிந்துபோன சீட்டுகளின் மீது அந்த எந்திரம் சப்தம் எழுப்பாது. சப்தம் எழுப்பும் சீட்டுதான் செல்லுபடியாகும் பயணச்சீட்டு. ஏற்கெனவே வண்டியில் இருக்கும் பெட்டி வடிவ எந்திரத்திற்குள் பயணிகள் சீட்டைச் செருகினால் அதன் மதிப்புக் காலத்தை அச்சிட்டுத் தந்து விடும். அதில் அச்சாகும் காலத்தைத் தாண்டி ஒரு நிமிடம் பயணம் செய்தாலும் அச்சத்தோடு தான் பயணம் செய்ய வேண்டும். பரிசோதகர் ஏறினால் தண்டம் கட்டுவதிலிருந்து தப்ப முடியாது. நான் வைத்திருக்கும் மூன்று மாத அட்டையைப் போலவே மாதாந்திரப் பயணச்சீட்டு அட்டையையும் ஒருவர் வாங்கிக் கொள்ளலாம். அதன் விலை 90 ஜுவாலாட்டி.


மாதாந்திரக் கட்டண அட்டை, மூன்று மாதக் கட்டண அட்டை தான் இங்கே பெரும்பாலோர் வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது வாங்குபவர்கள் மிகவும் குறைவு தான். தினசரி வெளியில் கிளம்பும் வாய்ப்பு இல்லாதவர்கள் மட்டுமே தற்காலிகப் பயணச்சீட்டு வாங்கிப் பயணம் செய்கிறார்கள். வேலைக்காகவோ, கல்வி நிலையங்களுக்கோ செல்லா தவர்கள் மிகவும் குறைவு. நீண்டகாலப் பயண அட்டை வழங்கும் மையங்கள் குறைவான இடங்களில் தான் இருக்கின்றன. மூன்று முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்களில் இருப்பதாகச் சொன்னார்கள். முதல் தடவை வாங்கி விட்டால் அப்புறம் ஒவ்வொரு முறையும் அங்கு போக வேண்டியதில்லை. அலைபேசிகளுக்குக் கூடுதல் பணம் செலுத்தி நீட்டித்துக் கொள்வது போல முகவர்களிடம் பணம் கட்டி நீட்டித்துக் கொள்ளலாம். வார்சாவின் மையமான நிறுத்தங்களில் தானியங்கிப் பயணச்சீட்டுகள் வழங்கும் கருவிகளை அண்மையில் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


பரிசோதனையில் மாட்டிய பாகிஸ்தான்காரர் நன்றி சொல்லி விட்டுப் போன பின்பு அடுத்த வண்டியில் ஏறி மூன்றாவது நிறுத்தத்தில் இருக்கும் ரகோவிக்‌ஷாவை அடைவதற்குள் இன்னொரு பரிசோதகர் ஏறி விட்டார். அவரை நான் வேடிக்கை பார்க்காமல் ரகோவிக்‌ஷாவில் இறங்கி விட்டேன். பணம் எடுத்துக் கொண்டு அரைமணி நேர இடைவெளியில் இண்ட்ரகோர்ட் செல்லும் 35 ஆம் எண் டிராமில் ஏறிப் பத்து நிமிடத்தில் இன்னொரு பரிசோதகர் ஏறித் தண்டத்தொகைக்கான ரசீதைக் கிழிக்க ஆரம்பித்து விட்டார். இன்று ஏன் இப்படிச் சோதனை நடக்கிறது என மனம் கேட்டது. கடந்த ஆறுமாதத்தில் இப்படிச் சோதனையாளர்கள் வந்ததில்லை. இரண்டு மணி நேரத்திற்குள் மூன்று சோதனைகள் நடந்து விட்டன. இண்ட்ரகோட் போய்விட்டு வேறு மார்க்கத்தில் ஐரோப்பாவிலேயே இரண்டாவது பெரிய பேரங்காடியான ஆர்க்கேடியாவில் இறங்கிக் கொண்டேன்.


அதிகமான கார்கள் தான் சாலைகளில் செல்கின்றன. கார்களில் இரண்டு அல்லது மூன்று பேர் பயணம் செய்கிறார்கள். போலந்தில் கணவனும் மனைவியும் வேலை பார்ப்பவர்களாகவே இருப்பதால் முதலில் அவர்கள் வாங்குவது கார்களைத் தான். எங்கு பார்த்தாலும் கார்களின் வரிசைதான் இருக்கின்றன. சாலைகளில் கார் நிறுத்த இடம் கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல. அதே போல் அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் அருகில் கார் நிறுத்தங்களுக்கான வெளிகள் விரிந்து கிடக்கின்றன. அரசின் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் வயது முதிந்தவர்களும் மாணாக்கர்களும் எனச் சொல்லலாம். முதியவர்களுக்கும் மாணாக்கர் களுக்கும் சலுகை விலைக் கட்டணங்கள் இருக்கின்றன. இந்தியாவோடு ஒப்பீடு செய்தால் பயணக் கட்டணம் அதிகம் என்றுதான் தோன்றுகிறது. பயணக் கட்டணம் மட்டுமல்ல; தண்டத்தொகையும் மிக அதிகமாகவே இருக்கிறது.

நகரப் போக்குவரத்துக் கட்டண முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை நகரத்துக்கு வெளியே செல்லும் போக்குவரத்து வாகனங்கள். ஒவ்வொரு நாளும் கட்டண விகிதங்கள் மாறுபடும். வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் ஒருவிதமாகவும் மற்ற நாட்களில் வேறுவிதமாகவும் கட்டணங்கள் உள்ளன. ஒரே நாளில் கூட நாம் பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கும் நேரத்திற்கேற்பக் கட்டண விகிதங்கள் மாறும். காலையிலும் மாலையிலும் கட்டணங்கள் அதிகம். பகல் நேரங்களில் குறைவு. பயணிகள் முன் பதிவு செய்து சீட்டுகளை வாங்கிக் கொள்ள வேண்டும். வாகனங்களில் நடத்துநர் இருக்க மாட்டார். ஆனால் நீண்ட தூரம் செல்லும் ரயில் ஏறி விட்டு பயணச்சீட்டு வாங்கிக் கொள்ளலாம். இடம் இருந்தால் உட்காரலாம். இல்லையென்றால் நின்றபடி பயணம் செய்ய வேண்டும். குறைவான பயணிகளே பயணம் செய்யும் போலந்தில் பொதுப் போக்குவரத்து லாபமாக இருக்கும்போது கூட்டம் கூட்டமாக அலைமோதும் பயணிகள் நிரம்பிய தமிழகப் போக்குவரத்து வாகனங்கள் நஷ்டத்தில் இயங்கக் காரணம் தெரியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்