ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே : எழுத்ததிகாரம் தொலைக்கும் எழுத்து


எல்லாச் சிக்கல்களுக்கும் காரணமாக இருப்பது அதிகாரத்தின் மீதான பற்றும், அதை அடைவதற்கான முயற்சிகளும்  என்பது அரசியல் சொல்லாடல் என்பதாகக் குறுக்கப்பட்டிருக்கிறது. அதிகாரம் செலுத்துதல் என்பது மற்றவர்களைத் தன்பால் ஈர்த்தலில் தொடங்குகிறது. அடுத்தகட்டம் அவர்களின் நிலையைக் குலைத்துத் தன் நிலையை நிறுவி அதன்படி செயல் படத் தூண்டுதலில் முடிகிறது.
அப்படி முடியும் தருணங்கள் செயல்வடிவ மாற்றத்தை அடையும்போது ஏற்றுக் கொண்ட மனித உயிரி அதிகாரத்துக்குக் கட்டுப் பட்ட உயிரியாகவும், ஏற்றுக் கொண்ட ஒன்றை ஏற்கெனவே வைத்திருந்த உயிரி அல்லது உருவாக்கி அனுப்பிய உயிரி அதிகார மையமாகவும் ஆகி விடுகிறது. அதிகாரத்தை உருவாக்குதல், கட்டமைத்தல், நிலைபெறச் செய்தல் என்பன தொடர்வினைகள் மட்டுமல்ல; உடனடி வினைகளாகவும் கூட இருக்கின்றன.

அதிகாரத்தின் வெளிப்பாட்டைப் பற்றிய ஆய்வுகளும் கருத்துக்களும் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய மனிதவியல் ஆய்வுகளின் முக்கியப் பொருள். குறிப்பாக இரண்டு உலகப்போரின் பின் விளைவுகளைச் சந்தித்த ஐரோப்பிய நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இவ்வகை ஆய்வுகள் அதிகம் நடைபெற்றன. பேரலகு நிலையில் (MACRO LEVEL) அரசியல் அதிகாரம் நோக்கிய செயல்பாடுகளின் பரப்புகளாகவும் கண்ணிகளாகவும் உணர்ந்து பேசிய அவ்வகை ஆய்வுகள்,  கொஞ்சம் கொஞ்சமாக நுண்ணியல் நிலை (MICRO LEVEL)  க்குள் நகர்ந்து அரசியல் தளத்தைப் பற்றிய பேச்சைக் கைவிட்டு மொழியியல் தளத்தின் பேச்சுக்களாக மாற்றின. ஒரு தன்னிலை உருவாக்கும் மொழியின் கூறுகளுக்குள் செயல்படும் அதிகாரத்துவக் கட்டமைப்பு பற்றிய விரிவான ஆய்வுகள் இப்போது நம்முன் விரிந்துள்ளன. மொழியின் கூறுகளின் உச்சபட்ச வெளிப்பாடு இலக்கியப் பிரதியாக இருப்பதால் அதிகாரம் குறித்த கேள்விகள் இலக்கியத் திறனாய்வுக்குள்ளும் விரிந்துள்ளன.

மரபுத் தமிழ் இலக்கணம் பேசிய கூற்றுமுறை அல்லது மொழிதல் வினை போன்றவற்றில்  கூற்றை நிகழ்த்தும் உயிரி எந்த இடத்தில் இருந்து அவ்வினையைச் செயல்படுத்துகிறது என்பதையெல்லாம் அதிகாரத்துவக் கட்டமைப்போடு இணைத்துக் கட்டமைப்பு மொழியில் பேசியது. இன்று மொழியில் ஆய்வுகள் வெற்று விளக்கமுறை ஆய்வுகளாக இல்லாமல், அறிவுத் தோற்றவியல், தத்துவம், தகவல் தொடர்பியல், மேலாண்மையியல் என நகர்ந்து அரசியல் அதிகாரத்தோடு இவற்றுக்குள்ள உறவைப் பேசும் தொடர்ச்சிகளாக மாறி விட்டன. அந்த மாற்றத்தின் பின்னணியிலேயே இலக்கியத்திறனாய்வு, ’கடவுளின் இடத்திலிருந்து பேசும் ஆசிரியத்துவம்’ ’ஆசிரிய மரணம்’, ‘வாசகனின் பிரதி’ என்பதான கலைச்சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துகிறது.

அதிகாரம் ஒருவனிடம் சேரும் முறை எல்லாக் காலத்திலும் ஒன்று போல் இருந்ததில்லை. உடல் வலுவும் கருவிகளை உருவாக்குதல் மற்றும் கையாளும் திறனும், அவ்விரண்டையும் ஒருசேரப் பெற்றவர்களின் கூட்டத்தைக் கையாளும் நுட்பமும் தெரிந்தவர்கள் அதிகாரம் கொண்டவர்கள் என்ற கருத்தின் பின் விளைவாகத்தான் அரசு அமைப்பின் தோற்றம் இருந்தது. அரசு அமைப்பின் தோற்றக் கருத்துநிலையை அதன் பக்கத்திலேயே இருந்த மத நிறுவனங்கள் அங்கதத்தோடு கேலி செய்து சிரித்த வரலாறு உலக வரலாறு மட்டுமல்ல. அரசு நிறுவனத்தை மத நிறுவனங்கள் உருவாக்கி வளர்த்தெடுத்துக் காத்து நின்றனவா? மத நிறுவனங்களை உருவாக்க, அரசு நிறுவனங்கள் காரணமாக இருந்தனவா? எனப் பிரித்துச் சொல்ல முடியாதபடி பின்னிப் பிணைந்த வரலாற்றைப் பல்லவர்காலம் தொடங்கி, பாளையக்காரர்கள் காலம் வரை - இடைக்கால, பின்னிடைக்கால வரலாறுகளில் பார்க்க முடியும். நிகழ்கால மக்களாட்சியும் பெருங்கூட்டத்தைத் தன் வசப்படுத்தும் நபர்களையே அதிகாரம் கொண்டவர்களாக ஏற்கிறது. கூட்டம் கூட்டும் செயல்பாட்டுக்குப் பின்னணியில் ஒருவன் வெளிப்படுத்தும் திறனை அறிவின் பரிமாணம் என்ற விளக்கம் தரப்படுகிறது.  ஒரு நபருக்கு இருக்கும் மொழித்திறன் அறிவை வெளிப்படுத்தும் கருவியாக நம்பப்படுகிறது. அறிவு அற்றம் காக்கும் கருவி என்று சொன்ன திருவள்ளுவர் கூட அறிவின் அதிக பட்சச் சாத்தியத்தைப் பேசியவர் தான்.
அதிகாரத்தை உருவாக்குவதில் அறிவின் பங்கு மாறிக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி மாற்றுவதற்குத் தேவையான அறிவை அல்லது திறமையைத் தரும் கருவியாக மொழி இருக்கிறது.  பேச்சாகவும் எழுத்தாகவும் வெளிப்படும்.  மொழித்திறன் ஒற்றைப் பரிமாணத்தில் இயங்குவதில்லை. வெவ்வேறு திசைகளில். ஒருவரின் அதிகாரத்தை வலுப் படுத்துவதற்கான கருவியாகப் பேச்சுக்கலை வளர்ச்சி அடைகிறது. ஆனால் எழுத்துக் கலை அதன் எதிர்த்திசையில் பயணம் செய்வதையே கலைநுட்பமாகக் கருதுகிறது. எழுதுகிறவன் பனுவலுக்குள் வெளிப்படையாகத் துருத்திக் கொண்டு நிற்கும் எழுத்துவகை அல்லது எழுத்துமுறை தேர்ந்த எழுத்துக்கலையாகக் கருதப்படாமல் ஒதுக்கப்படுகிறது. வாசகனிடம் நேரடியாகப் பேசும் அல்லது ஆலோசனைகள் வழங்கும் எழுத்துக்கள் போதனைகளாகக் கருதப்படுவதோடு இலக்கியப்பனுவல் என்ற தகுதியற்றதாகவே கருதப்படுகிறது. ஆனால் பேச்சில் அதன் சொந்தக்காரனின் நேரடித் தோற்றம் முக்கிய ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிகாரத்தைக் குலைக்கும் நடவடிக்கைகளிலும், அழிக்கும் எத்தணிப்பிலும் எழுத்து பயணம் செய்கிறது.எழுத்தின் வழி அதிகாரம் உருவாகி விடக்கூடாது என்பதே நவீன எழுத்தின் அடையாளம்.

இலக்கியத்தின் வரலாற்றுப் பாதையில் திருக்குறள் தோன்றிய காலத்தில் அதற்கான மதிப்பு உண்டே ஒழிய, இன்று அதைப் போல் எழுதப்படும் ஒரு பனுவலுக்கு இடம் இல்லை. முன்னிலைக் கூற்று எழுத்துமுறை முற்றிலுமாக இலக்கிய வெளியிலிருந்து ஒதுங்கிப் போய்விட்டது. கடவுளின் பார்வையில் சொல்லப்படும் படர்க்கைக் கூற்று எழுத்து முறையே சமகாலத்தை எழுதும் நோக்கத்திற்கு ஏற்றது என நம்பப்படுவதின் பின்னணியில் அதிகாரம் அழிக்கும் நோக்கம் இருப்பதை இலக்கியவியல் உறுதி செய்துள்ளது. தன்னையொத்த பெருங்கூட்டத்தின் பிரதிநிதியாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு – விளிம்புநிலைப் பாத்திரங்களாகத் தன்னை எழுதும் தன்னிலைக் கூற்றுமுறையில் ஒருவிதமான அதிகாரம் உருவாக்கப்படுவது உண்மைதான். ஆனால் அந்த அதிகாரம் குவித்து வைக்கப்பட்ட பேரதிகாரத்திற்கு எதிரான மாற்று அதிகார உருவாக்கம் என்பதைத் தலித் மற்றும் பெண் எழுத்துக்களை வாசிக்கும்போது உணரலாம். 

எழுத்தின் அதிகார உருவாக்கம் மற்றும் அழித்தல் சார்ந்த இந்தப் பேச்சின் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டிய தமிழ்ப் புனைகதைப் பிரதிகள் பல உண்டு. கா.சி. வேங்கடரமணி, மு.வரதராஜன், நா.பார்த்தசாரதி போன்றவர்களின் புனைகதைகள் வெவ்வேறு பாதைகளில் அதிகாரத்தை உருவாக்கும் எழுத்துக்களாகப் பயணம் செய்வதை உணரலாம். அவர்களின் பிரதிகளின் பாத்திரங்கள் வழியாக ஆசிரியனின் அதிகாரத்துவம் உருவாக்கப்படும். இடதுசாரி எழுத்துக் களிலும் இந்த அம்சங்கள் கூடுதலாகும்போதுதான் நவீன எழுத்தாக வெளிப்படாமல் ஒதுங்கி நிற்கின்றன. அதிகாரத்தை உருவாக்காமல் அதனைக் கேள்விக்குள்ளாக்கும் எழுத்துக்களின் வகைமாதிரிகளாக அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, நகுலன் போன்றவர்களின் சில இயல்பியல்வாதப் பிரதிகளைச் சுட்டிக்காட்டலாம்.  ஆனால் ஜி.நாகராஜனின் புனைகதைகள் அதன் எதிர்த்திசையில் அதிகாரத்தைச் சீர்குலைக்கும் பாணியைக் கொண்டிருக்கின்றன என்பதைச் சிறப்பாகச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
ஜி நாகராஜனின் ஒட்டுமொத்தப் பிரதிகளும் அத்தகைய கூறுகளையே கொண்டிருக்கின்றன என்று கூற முடியா விட்டலும், அவரது முக்கியப்படைப்புகளான குறத்தி முடுக்கும் நாளை மற்றுமொரு நாளேயும் இயல்புவாதத்தின் உச்சபட்ச நோக்கமான அதிகார அழிப்பைச் செய்யும் எழுத்துவகை என உறுதியாகச் சொல்லலாம்.. ஒரு மனிதனின் ஒரு நாள் நிகழ்வுகளின் தொகுப்பாக அவரது நாளை மற்றும் ஒரு நாளே நாவல் ஆக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒரு நாள் ஒருவனது வாழ்முறையின் குறுக்குவெட்டுத்தோற்றம் என்பதை வாசிக்கும் ஒவ்வொருவரும் சுலபமாக உணர முடியும். அவ்வாறு உணர்த்துகிறவர் – கதைசொல்லி – யார் என்பதும்  அதன்  இடம் எது என்பதும் உணர்த்தப்படாமல் எழுதப்பட்ட முறையே அந்நாவலின் சிறப்பு. சொல்பவனின் இடத்தை வாசிப்பவர்கள் உணராத வண்ணம் எழுதியுள்ள ஜி.நாகராஜன், மொத்தக் கதையையும் சொல்லி முடித்துவிட்டுக் கடைசியாக ஒரு பத்தியை எழுதியுள்ளார்.

ஒரு சிகரெட்டு புகைக்க எண்ணிக் கந்தன் சட்டைப் பையைத் துளாவினான். பை வள்ளிசாகக் காலியாக இருந்தது. படுத்தபடியே இரண்டு கைகளாலும் தரையைத் துளாவினான். கைகளுக்கு எதுவும் சிக்கவில்லை. சற்று எழுந்து நேர் எதிராகப் பார்த்தான். லாக்கப் அறையின் கம்பிகள் கண்களுக்குத் தென்பட்டன. ‘லாக்கப் அறையை ஒட்டியிருந்த சுவரின் மேல் விளிம்பில் சிறிது ஒளி அரைகுறைத் தூக்கத்தில் இருந்தது. யாரோ குறட்டை விடும் சத்தம் கேட்டது. தான் போலீஸ் ஜீப்பில் ஏறிய நேரத்திலிருந்து ’லாக்கப்’ புக்குள் அனுப்பப்பட்டது வரை நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக நினைவுக்குக் கொண்டுவரக் கந்தான் முயன்றான்
இந்தப் பத்தியில் கந்தனின் ஒரு நாள் நிகழ்வுகளையும் நினைவுகளையும் முற்ற முழுதாகச் சொல்பவன் ஒரு மூன்றாம் மனிதன் என்பதாக வாசிப்பவர்கள் நம்புவார்கள். அந்த மூன்றாவது மனிதன் கந்தனின் மனப் போக்கையும் நடவடிக்கைகளையும் முற்ற முழுதாக அறிந்தவன். அந்த இடத்தை இலக்கணம் படர்க்கை இடம் எனச் சொல்லும். இலக்கியத்திறனாய்வு எல்லாம் அறிந்த சக்தியின் (கடவுளின்) இடம் எனச் சொல்கிறது.
படர்க்கை நிலையில் நகரும் கந்தனின் ஒருநாள் நிகழ்வுகளோடு, ஒவ்வொரு இடம் சார்ந்து அவனது நினைவுகளும் வந்து போய்க் கொண்டே இருக்கின்றன. அவன் சந்தித்த பலதரப்பட்ட ஆண்களும் பெண்களும் கூடவே வந்து போகிறார்கள். காலையில் எழுந்தது முதலே மதுவின் தேவையையும் பெண்ணுடலின் அருகிருப்பையும் சுமந்து கொண்டே நகர்கிறான் கந்தன். அவ்விரு தேவைகளுக்காகவே வாழ்பவன் போலக் காட்டப்படும் கந்தனின் வேலையைத் திருவாளத்தான் வேலை எனப் பெயரிட்டுச் சொல்லும் ஜி.நாகராஜன் உடல் வலியும், இடத்திற்கேற்பப் பேசுவதில் சாமர்த்தியத்தை வெளிப்படுத்தும் புத்திசாலித்தனமும் அவனது தன்னிலை உருவாக்கமாகக் காட்டுகிறார்.
மரபான சமூக நிறுவனங்களான குடும்பம், சாதி, சமயம், வாழிடம்,என அனைத்தின் விதிகளும் பின்பற்ற வேண்டிய விதிகள் என்ற நினைப்பு கூடாத இல்லாதவன் கந்தன். மரபான நிறிவனங்களை மட்டுமல்ல, புதிதாகத் தோன்றி வலுப்பெற்றுக் கொண்டிருக்கும் சட்டவிதிகள் சார்ந்த போலீஸ், நீதித்துறை, கல்வித்துறை, போக்குவரத்து போன்ற நிறுவனங்களின் விதிகளுக்கும் உடன்படாத – பின்பற்ற வேண்டும் என நினைக்காத மனிதனாக வாசகர்கள் முன் நகர்கிறான் கந்தன்.   குறிப்பாக ஆண்- பெண் உறவு சார்ந்து நமது சமூகம் கொண்டிருக்கும் இறுக்கமான உறவுகளின் கட்டு திட்டங்கள் அவனுக்குத் தெரியுமா? என்ற கேள்வியை வாசக மனம் எழுப்பி கொண்டே வாசிக்கும் தன்மையை உருவாக்கியதில் தான் ஜி.நாகராஜனின் பிரதியுருவாக்கம் தனித்துவம் கொண்டதாக இருக்கிறது.
தனது உடலை மற்றவர்களுக்குத் தருவதின் மூலம் தன் வாழ்க்கையை நடத்தும் மீனாவைத் திருமணம் செய்து கொண்ட கந்தன், அபலைப் பெண்ணுக்கு வாழ்வு அளிக்கிறோம் என்ற நினைப்பில் அந்த ஏற்பாட்டைச் செய்தவனல்ல. அவளைப் பார்த்தபோது அவனுக்குள் தோன்றிய உணர்வைக் காதல் உணர்வு என்றுதான் நம்பினான். ஆனால் திருமணம் செய்து கொள்ளும்போது நல்ல ஏற்பாடாக இருக்கும் என்ற நினைப்பில் செய்து கொள்கிறான். செய்து கொண்ட பின்னும் அவளது முந்தைய வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கும் மனம் கொண்டவன்; தனது விருப்பத்திற்காக மீனாவின் உடலுக்காக மட்டுமே காத்திருப்பவன் அல்ல. மது அருந்த வேண்டும் என நினைக்கும்போது சாராயக்கடையில் சாராயம், விறகுக்கடையில் ஜிஞ்சர், மேல்நாட்டு மது எனத் திட்டமில்லாமல் குடிப்பது போல பெண்களுடனான உறவிலும் கூடத் திட்ட மில்லாதபோலவே வாழ்பவன். அதே நேரத்தில் இருக்கும் அமைப்பிற்குள் தான் தானும் வாழ்கிற பிரக்ஞை கொண்டவன் கந்தன். ஒரு பெண்ணோடு ஏற்படுத்திக் கொள்ளும் திருமண உறவு ஒரு ஏற்பாடாக இருக்க முடியும் என்றால், அவளிடமிருந்து பிரிந்து விடக்கூடியதும் இன்னொரு ஏற்பாடாக இருக்கக் கூடும் என்றே அவன் நம்புகிறான். முதல் ஏற்பாடு இரண்டு பேருக்கும் உண்டாக்கிய இன்பம் துன்பம் போலவே இரண்டாவது ஏற்படும் இன்பத்தையும் துன்பத்தையும் தரவல்லதாகவே இருக்க முடியும் என்பதாக அவன் மனம் நம்புகிறது.
ஜி.நாகராஜன் உருவாக்கியுள்ள கந்தனின் மனம் எதையாவது உறுதியாக நம்புகிறது என்று சொல்வது கூடச் சரியான கூற்றாக இருக்காது. திட்டமிட்ட வாழ்க்கை முறை ஒன்று இருப்பதாக நம்பும் அமைப்புக்குட்பட்ட மனிதர்களின் நம்பிக்கைகளின் மீது தீவிரமாகத் தாக்குதல் தொடுக்கும் நாளை மற்றும் ஒருநாளே உருவாக்கித் தரும் உலகம் நியதிகளற்ற உலகம் என்றும் சொல்ல முடியாது. கந்தன், மீனாவைத் தனது உடமையாக்கிக் கொண்டதில் இருப்பதைப் போன்றதொரு நியதியே சுப்பையா செட்டியார் ஐரின் என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணுடன் இரவில் மட்டும் வாழ்வதற்காக ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தில் ஒரு நியதி இருக்கிறது. எல்லாவிதமான தரகு வேலைகளையும் செய்யும் அந்தோனிசாமியிடம் தொழில் சார்ந்த நியதிகள் இருப்பதுபோலத் தனது பிள்ளைகளை வளர்த்துக் குடும்பங்களை உருவாக்கித் தருவதிலும் நியதிகள் இருக்கவே செய்கின்றன. மீனாவை தொழிலுக்கு அனுப்பி விட்டுப் பக்கத்துவீட்டில் இருக்கும் மூக்கனின் பெண்டாட்டியான ராக்காயி என்ற மோகனாவைப் புணர்வதிலும் ஏதோ ஒரு காரணம் இருக்கவே செய்கிறது. மனிதர்கள் தங்களின் எல்லாவிதமான செயல்பாடுகளுக்கும் காரணங்களைக் கண்டுபிடித்து உறுதி செய்து விட்டால் போதும். உறுதி செய்யப்பட்ட காரணங்கள் சமூகத்தின் நியதிகளாக மாறிப்போகின்றன. மோசடிகளாகவும், ஏமாற்றுகளாகவும், ஒழுக்க மீறல்களாகவும், பொருந்தாத நடவடிக்கை களாகவும் இருக்கும் மனிதர்களின் செயல்பாடுகள் காரணங்களோடு நிறைவேற்றப்படும்போது நியதிகளாக மாறிப் போகின்றன என்பதைப் பாத்திரங்கள் நடத்தும் உரையாடல்கள் வழியாகவும் ஜி.நாகராஜன் வெளிப்படுத்துகிறார்.  அரசியல் மீது நம்பிக்கை, அரசியல் இயக்கங்களின் செயல்பாடுகளில் இணைத்துக் கொள்ளுதல், ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும் தியாகம் செய்வதாகச் சொல்வதில் இருக்கும் சுயநலம் எனப் பல கீற்றுகளை விதைத்துக் காட்டியுள்ள நாகராஜன்,  தனது படைப்புக்குள் காட்டும் வாழ்தல் முறையைத் தனது படைப்பு வடிவமாகவும், சொல்முறையாகவும் ஆக்கியிருக்கிறார். நாளை மற்றும் ஒரு நாளே நாவலை வாசிக்கும் ஒரு வாசகர், அதில் இடம் பெறும் கதாபாத்திரங்களின் எதிர்கால இருப்புகளைக் கற்பனை செய்து விட முடியாது. பல பாத்திரங்களின் கதைகள் சொல்லப்பட்டு வளர்த்தெடுக்கப்படவில்லை. மையப்பாத்திரமான கந்தனின் நடவடிக்கைகளிலும் கூடக் காரண காரிய நியதிகளைப் பொருத்தி விட முடியாது.
நடுத்தரவர்க்க மற்றும் உயர் நடுத்தர வர்க்க வாழ்நிலைக்குள் இருப்பவர்கள் சொத்து சேகரிப்பு, வசதியான வாழ்க்கை, அழகான குடும்பம், பரம்பரையை உருவாக்கி நிலைபெறச் செய்தல் எனப் பலவற்றிற்கும் முன் முயற்சிகளோடு திட்டமிடல்களைச் செய்யும் மனிதர்களாக இருக்கின்றனர்.  நாளையைப் பற்றி – நாளைகளாகத் தொடரப் போகும் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி- தீவிரமான நம்பிக்கைகளையும் கொண்டுள்ளனர்.ஆனால் அந்த நம்பிக்கைகள் எவ்வளவு அபத்தமானவை என்பதை ஜி.நாகராஜனின் நாளை மற்றும் ஒரு நாளே சுலபமாக உணர வைக்கிறது, மனிதர்கள் கொண்டிருக்கும் எதிர்காலக் கனவுகள் மீதான விமரிசனம் என்பதைவிட, மனிதர்கள் ஒவ்வொருவரும் இந்தக் கணத்தில் வாழும் முறைகளுக்குப் பின்னுள்ள ஒழுங்கின்மையைச் சொல்லும் நாவலாகவே படுகிறது.  இந்த நாவலை வாசிக்கும் ஒருவர் கந்தனைப் போலவே அதுவரையிலான அவரது வாழ்க்கையை ஒருநாள் நிகழ்வாக நினைத்துப் பார்க்கும் தருணத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். அப்படி முடிந்தால் நாளை மட்டுமல்ல; இன்றே கூடச் சுமையற்ற ஒன்றாக மாறிப்போகும் வாய்ப்பு உண்டு. அல்லது பெருஞ்சுமையாக மாறி அழுத்தவும் செய்யலாம்.
================================== நன்றி/ தீராநதி, ஏப்ரல், 2012

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்