தமிழச்சியின் கவி உலகம்


அவரவர்க்கான மழைத்துளிகளும் 
அவரவர்க்கான கவிதைகளும்.

                                                                                                              முன்னுரை
கல்லூரி ஒன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியராகவும், அரங்கவியல் செயல் பாட்டாளருமாக அறியப் பட்டிருந்த கவி தமிழச்சியின் முதல் தொகுதியான   எஞ்சோட்டுப் பெண் பெறாத கவனத்தை அவரது இரண்டாவது தொகுதியான வனப்பேச்சி பெற்றுள்ளது. மித்ர ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸின் தயாரிப்பான எஞ்சோட்டுப் பெண் மிகுந்த கவனத்துடன் அதிகப் பணச் செலவிலும் தயாரித்து வெளியிடப் பட்ட  கவிதைத் தொகுப்புகளுள் ஒன்று. நூலாக்கத்தில் முதல் தொகுப்பிற்குச் செலுத்திய கவனத்தில் பாதி தான் வனப்பேச்சிக்கு இருந்திருக்கும். என்றாலும் முதல் தொகுதியை விடவும் இரண்டாவது தொகுதி கூடுதலான விமரிசன மேடைகளையும் வாசகக் கவனத்தையும் மதிப்புரைகளையும் பெற்றது.

இதற்கான காரணங்களுள் ஒன்றாகக் கவி தமிழச்சி, தமிழச்சி தங்கபாண்டியனாக மாறி வெகுமக்கள் அரசியல் தளத்திற்குள் நுழைந்தது என ஒரு காரணத்தைச் சொல்லலாம். அப்படிச் சொல்லி  அவரது கவிதைகள் பொருட்படுத்தத் தக்க கவிதைகள் அல்ல என்று ஒதுக்கித் தள்ளப்படும் வாய்ப்புகளுண்டு.. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் வெகுமக்கள் அரசியல் நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டு தேர்தல் அரசியலுக்குள் நுழைந்து விட்டதால் தான் தமிழச்சியின் வனப்பேச்சி கவனிக்கப் படுகிறது என்றால் கவி சல்மாவின் கவிதைகளும், கவி கனிமொழியின் கவிதைகளும் இதே அளவுக்கு விமரிசன மேடைகளையும், வாசகக் கவனத்தையும் சந்தித்திருக்க வேண்டும். ஒப்பீட்டளவில் தமிழச்சியின் வனப் பேச்சிக்குக் கிடைத்த கவனம் சல்மாவின் கவிதைகளுக்கோ, கனிமொழியின் கவிதைகளுக்கோ கூடக் கிடைத்ததில்லை. இதைப் புள்ளி விவரங்களோடு நிரூபிக்க முடியாது என்றாலும் அதுதான் உண்மை. 
தனது உயிர்மைப் பதிப்பகத்தின் வெளியீடுகளுக்கு சிறப்பான வெளியீட்டு விழாக்களை ஏற்பாடு செய்யும்   கவிஞர் மனுஷ்ய புத்திரன்வனப்பேச்சி தொகுப்பின்  வெளியீட்டு விழாவிற்குச் செய்த விழா ஏற்பாடுகள்  சிறப்பானவை. தனது சொந்தக் கவிதைத் தொகுப்புகளுக்குக் கூட அத்தகைய வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்க மாட்டார். அரசியலிலும் இலக்கியத்திலும் குறைவற்ற ஆர்வத்தைக் காட்டி வரும் பிரபலங்களும் இலக்கியவாதிகளும் ஒன்றாக மேடையேறி விமரிசனம் செய்தும் பாராட்டியும் வெளியிட்ட அந்த விழா, கவிதைத் தொகுப்பு ஒன்றிற்கு அதுவரை கிடைக்காத கவனத்தை ஏற்படுத்தித் தந்தது. அதனால் தான் வனப் பேச்சி தொகுப்பிற்குச்  சிறப்பான கவனம் கிடைத்துள்ளது என்று ஒருவர் நினைக்கலாம். அதில் ஓரளவு உண்மை கூட இருக்கலாம். ஆனால் அது மட்டுமே கவிதைத் தொகுப்பொன்றை வாசகர்களின் கவனத்திற்குரியதாகவும், விமரிசகர்களின் மதிப்பீட்டிற்குரியதாகவும் ஆக்கி விட முடியும் என்று சொல்ல முடியாது.பொதுத்தளத்தில் அதிகம் கவனம் பெறுவதற்கு வெளிப்படையான  காரணங்கள் இருப்பது போலவே மறைமுகமான காரணங்களும் இருக்கக் கூடும். வெளிப்படையான காரணங்களை கவிதையியல் சார்ந்து விளக்க முடியும்; ஆனால் மறைமுகக் காரணங்களுக்கு அனைவரும் ஏற்கத்தக்க விளக்கங்களை ஆய்வாளர்களால் தர இயலாது.
ஏற்பும் விலக்கமும்
ஒரு கவி அல்லது ஒரு கவிதைத் தொகுப்பு வாசகக் கவனத்தைப் பெறுவதற்கும் விமரிசனக் கருத்துக்களை  உருவாக்குவதற்கும் கவிதையியல் சார்ந்து சில காரணங்களைச் சொல்லலாம்.
·                   தனது காலகட்டத்தின் தேவைகளைக் கவிதைகள் தரும் அனுபவங்கள் சார்ந்தோ கருத்தியல் ரீதியாகவோ நிறைவு செய்யும் போது கவனிக்கப்படுதலும் பாராட்டப்படுதலும் நடக்கும். இது இயல்பாக நடக்கக் கூடியது. 
·                   சமூக மற்றும் பண்பாட்டு வெளிகளில் நிலவும் தடைகளை - சூழலில் இருக்கும் போதாமையை-சுட்டிக் காட்டிப் புதுத் தடத்தில் நுழையும் கவியின் கவிதைகளும்  கவனத்திற்குரியதாக ஆவது சாத்தியம் தான்.
·                   ஒரு கவி எழுதிய கவிதைகள், எழுதப்பட்ட மொழிக்குப் புதிய எல்லைகளும், புதிய வெளிகளும் உருவாகும் வாய்ப்புகள் ஏற்பட்டாலும் கவனிக்கப்படுவது நடந்து விடும். உண்டாக்கும் புதுத்தடத்தை அது புதுத் தடம் என்பதற்காக ஏற்றுக் கொள்வதிலும் கூட வேறுபாடுகள் உண்டு.
·                   தீவிரமான இலக்கிய வாசகன் எனத் தன்னைக் கருதிக் கொள்பவர்கள் புதுமைகள் என்பதற்காக அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள்;அல்லது ஏற்பதாகப் பாவனையாவது செய்வார்கள். ஆனால் பொதுப்புத்தியால் இயக்கப்படும் வாசகமனம் புதுமை என்பதற்காக எல்லாவற்றையும் ஏற்பதில்லை. ஏற்கெனவே நம்பும் கருத்தியலோடு பெரும் விலகலை முன் வைக்கும் புதுமையைப் பொதுப்புத்தி ஏற்பதற்குப் பெரும் தயக்கத்தை வெளிப்படுத்தும். இதற்குத் தமிழ்க் கவிதை வரலாற்றில் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். ஆனால் ஏற்கெனவே நிலவும் கருத்தியலில் தேவையான மாற்றங்களை முன் வைக்கும் புதுமையை ஏற்பதற்குத் தயங்குவதே இல்லை.
அப்படியான தேடல்களுக்குள் உள்நுழைந்து தமிழச்சியின் கவிதைகளை நிலை நிறுத்தும் பணியில் இக்கட்டுரை இறங்கப் போவதில்லை. அதற்கு மாறாக அவரது கவிதைகள் வாசிப்பவருக்கு எந்தவிதமான உலகத்தை அல்லது கருத்தியலை தருகிறது என்பதையும், அக்கருத்தியல் ஏற்கெனவே இருக்கும் பொதுத்தளத்துடன் இணைந்து நிற்கும் உறவுடையனவா? அல்லது விலகிச் செல்லும் தன்மையுடையனவா? என்பதைச் சுட்டிக் காட்டுவதை முதன்மை நோக்கமாகக் கொள்கிறது. தொடர்ந்து விலகல் இருக்கின்றன என்றால், எவ்வகையான விலகல்கள் ? என்பனவற்றைச் சுட்டிக் காட்டுவதோடு, அதன் வழி அவர்களின் வாசிப்பு அனுபவத்தில் நிகழும் மாற்றங்கள் எத்தகையன? என்பதையும் விவாதிக்க முயல்கிறது. 
கவிதைகள் பற்றிக் கவியின் கூற்று
தனது கவிதைகள் யாருக்கானவை என்பதில் தொடக்கக் காலக் கவிக்குத் தெளிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால், கவிதையின் வடிவமும் இலக்குகளும் தீர்மானமாகி விட்டால் அக்கவிதைகளின் வாசகர்களும் தீர்மானமாகி விடுவார்கள். இவ்விரண்டில் எது முதலில் நடக்கிறது என்பதைச் சரியாகக் கணிப்பதும் கூட இயலாது. வாசகர்கள் யார் எனத் தீர்மானிப்பதால் கவிதையின் வடிவமும் உள்ளடக்கமும் தீர்மானமாகிறதா? வடிவமும் உள்ளடக்கமும் இவை தான் என முடிவு செய்யப்பட்ட பின் இலக்கு வாசகர்கள் உறுதி செய்யப் படுகிறார்களா எனச் சரியாகச் சொல்ல இயலாது. தனது சமகால மனிதர்களுக்காக எழுதவில்லை; வரப்போகும் சந்ததிக்காக எழுதுகிறேன் என நம்பும் படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றி வாசகனும் கவலைப் படுவதில்லை;விமரிசகனும் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், தனது படைப்புகள் தன்  சமகாலத்தில் வாழும் வாசகனுக்கானவை என நம்பும் படைப்பாளி அவை வாசகர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டிய தாக்கம் அல்லது கருத்தியல் விளைவுகள் எவை எனச் சொல்ல ஆசைப்படுவதுண்டு. அதனைத் தனது நூலின் முன்னுரையிலோ, தனிப் பேச்சிலோ, நேர்காணலிலோ வெளிப்படுத்தி விடுகிறார்கள். பரவலான கவனம் கிடைத்த பின்பு தான் இத்தகைய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் கவிகள் அதுவரை காத்திருப்பதில்லை.தங்களின் வெளிப்பாட்டு வடிவமான கவிதை வடிவிலேயே அதைச் சொல்லி விடுவதுண்டு. இயக்கமாகச் செயல்படும் வாய்ப்புகள் கொண்ட கவிஞர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கவிதையின் நோக்கம் பற்றிக் கூறாமல் தங்கள் இயக்கத்தின் நோக்கத்தையே தங்களின் நோக்கமாக வரித்துக் கொள்வதுண்டு. பூமிப் பந்தை புரட்டிப் போடும் நெம்புகோல் கவிதைகளை வானம்பாடிகள் எழுதப் போவதாக அறிவித்தது போல, தங்களுக்குள் முணுமுணுத்த எழுத்துப் பாணி கவிதைகளிலிருந்து விலகிய வல்லினக் கவிதைகளை எழுதப் போவதாகக் கசடதபறக் குழிவினர் சொன்னதெல்லாம் தமிழ்க் கவிதை வரலாற்றில் பழைய வரலாறுகள் அல்ல.
கவி தமிழச்சி, தமிழ் நாட்டின் 75 கால வரலாற்றைப் பாதித்த மாபெரும் அரசியல், சமூக இயக்கமொன்றின் வாரிசு என இப்போது தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறார். தர்க்க அறிவை முதன்மைப் படுத்தி எல்லாவற்றையும் விளக்க நினைத்த திராவிட இயக்கத்தின் கலை இலக்கியக் கொள்கைகளோடு முழுமையான உடன்பாடு அவருக்கு உண்டா?  எனக் கேட்டால் அவரது பதில் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை. புதிய செவ்வியல் பாணியில் செயல் பட்ட பாரதிதாசனின் வாரிசாகவோ, அவரது கவிதைகள் கவனம் செலுத்திய பகுத்தறிவு வாதம்,  காதல், மொழிப்பற்று, தமிழ்த்தேசியம், பார்ப்பண எதிர்ப்பு என்ற தடத்தில் பயணம் செய்யும் தொடர்ச்சியாகவோ தன்னைக் காட்டிக் கொள்ளும் விருப்பம் அவருக்குள் இருக்கிறதா? என்று தேடினால், முடிவுகள் வேறு விதமாக இருக்கக்கூடும்.
அதே நேரத்தில் திராவிட இயக்க அரசியல் குடும்பம் ஒன்றின் வாரிசாக எப்போதும் கருதும் தன்னிலை தான் அவரது கவிமனம் என்பதைப் பல கவிதைகள் சொல்கின்றன. தனி மனுஷியாகத் ’தன்னை வெளிப்படுத்திக் கொள்ள ஏற்ற வடிவம் கவிதை’ என முடிவு செய்து செயல்படத் தொடங்கிய பின்  முதல் தொகுப்பிலேயே அந்தத் தன்னிலையை உறுதி செய்துள்ளார். அதே வேளை தனக்கான தனி அடையாளத்தை  தனது சமகாலத் தேவையோடு பொருந்திப் போகக்கூடிய ஓரடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற விருப்பமும் அவரது கவிதைகளில் வெளிப்படுகிறது. அந்தத் தனி அடையாளத்தின் வழியாகவே தனது கவிதைகள் கவனிக்கப்பட வேண்டும் என்ற ஆசையையும் கூடத் தனது கவிதைகளில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

விட்டுச் சென்ற சேறாகவும்
விரும்பித் தாவும் குழந்தையாகவும்
ஒவ்வொருவருக்கும்
ஒரு துளி மழை. [அவரவர் மழை]
என மழையைப் பற்றிய படிமமாகவும் அனுபவமாகவும் எழுதிய அதே தொனியில்,
நல்லவேளை வழிதவறிப் போய்விட்டது
என் கவிதை,
உடைகளற்ற குழந்தைமையென  (என் கவிதை)
என்பதாகத் தனது கவிதைகள் பற்றிய வரிகளைத் தருகிறார் கவி தமிழச்சி. இந்த வரிகள், உடைகளற்ற குழந்தைமையின் அறியாமையைத் தனது கவிதையின் இயல்புகளாகச் சொல்லி மகிழ்ச்சி அடையும்  அவரது மனத்தைக் காட்டுகின்றன. நவீனத் தமிழ்க் கவிதைக்குள்-குறிப்பாகப் பெண்மொழி சார்ந்து எழுதப்படும் கவிதைகளின் பரப்புக்குள் தன்னுடைய கவிதைகளை வைத்து வாசித்து ஒதுக்காமல் வேறு ஒரு தளத்தில் நிறுத்தி வாசித்து தனது கவிதைகள் ஏற்கப்பட்டுள்ளன என்பதில் கிடைத்த மகிழ்ச்சி என அதைப் புரிந்து கொள்ளலாம். அப்படியான மகிழ்ச்சியை அடையும் தமிழச்சியாகிய பெண்  தன் பால் அடையாளத்தைத் துறந்து தூய கவி அடையாளத்தை மட்டுமே வெளிப் படுத்தியிருக்கிறாரா என்பதைக் கண்டறிவதும், அவ்வாறிருந்தால் அக்கவிதைகள் சமகாலத் தமிழ் வாழ்வுக்குரியதாக எவ்வாறு இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பி விவாதிப்பதும் வாசகனுக்கு அல்லது விமரிசகனுக்கு முன் உள்ள சவால். அதையும் இக்கட்டுரையில் செய்து பார்க்கலாம்.
நவீன, பின் நவீன, பெண்ணிய அடையாளங்களுக்குள் வைத்துப் பேச முடியாதவை என்பதற்காகத் தனது கவிதைகளின் இருப்பை ஆடைகளற்ற குழந்தைமையின் அறியாமையோடு (innocence) தொடர்பு படுத்தி ‘‘நல்லவேளை.. வழி தவறி விட்டன ‘‘  என ஆச்சரியமும் சந்தோசமும் கொள்வது அவரது வாழ்நிலை சார்ந்த  விருப்பமாக இருக்கலாம். ஆனால் அப்படி இருந்து விட முடியாது என்பது காலத்தின் கட்டாயம். பின் காலனிய இந்தியாவில் நகர் சார்ந்த வாழ்க்கையில் வாழ நேர்ந்த பெண் ஒருவரின் பிரதிக்குள் இத்தகைய அடையாளங்கள் இல்லாமல் இருக்க முடியும் என நினைப்பது ஆச்சரியமான ஒன்று. அத்துடன் நவீன வாழ்நிலையின்¢ பொருளாதார உறவுகளையும் அது தரும் சுகங்களையும் சிக்கல்களையும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்ட ஒரு நடுத்தர வர்க்க அல்லது உயர் நடுத்தரவர்க்க நகர வாழ்க்கைக்குள் இருப்பவர்கள் அவ்வாறு நினைப்பது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் தப்பித்தல் வழியும் கூட.
தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண் (57) வனப்பேச்சி(57) ஆகிய இரண்டு தொகுப்பிலும் உள்ள நூற்றுப் பத்துக்கும்¢  மேற்பட்ட மொத்தக் கவிதைகளையும் ஒருசேர வாசிக்கும் போது அக்கவிதைகளில் வெளிப்படும் கவியின் குரலை மூன்று நிலைப்பட்ட குரலாகப் பிரித்துக் காட்டத் தோன்றுகிறது (பின்னிணைப்பில் காண்க).
தீவிரமான வாசகனோ அல்லது விமரிசகனோ பொருட்படுத்தி விவாதிக்க வேண்டியதில்லை எனத் தன்னை விலக்கிக் கொள்ளும் அஞ்சலிக் கவிதைகள் முதல் வகை.
அவரது தொகுதிகளுக்கு முன்னுரை எழுதியவர்களும், மதிப்புரை எழுதுபவர்களும் அவரை அடையாளப் படுத்திக் காட்டும் கிராமீய மனம் கமழும் கவிதைகள் இரண்டாவது வகையானவை.
அந்த அடையாளத்தை விடவும் வாழும் காலச் சூழல் தரும் நெருக்கடியில் எழுதப்பட்ட பெண் அடையாளக் கவிதைகள் மூன்றாவது வகை.
இம்மூவகைக் கவிதைகளில் மூன்றாவது வகைக் கவிதைகளே அதிகமாக உள்ளன. தான் ஒரு பெண்ணாக இருப்பதின் காரணமாகப் பேணுகின்ற மௌனங்கள், சந்திக்கின்ற சிக்கல்கள், தடைகள், விட்டுக் கொடுத்தல்கள் பற்றிய அங்கலாய்ப்புகளொடு அவற்றின்¢ தொடர்ச்சியாக முன் வைக்கும் சில தீர்மானங்களும் என அக்கவிதைகளில் வெளிப்பாடுகள் உள்ளன. இந்தக் குரலின் தொனியும் பின்னணிக் காரணங்களும் விரிவாகப் பேச வேண்டியவை. இந்தக் கவிதைகள் தமிழில் தீவிரமாகப் பெண்ணியம் பேசும்  கவிஞர்களாக அறியப்பட்டவர்களிடமிருந்து தமிழச்சியை  விலக்கிக் காட்டுவதோடு, தமிழ்ப் பொதுப் புத்திக்கு ஏற்புடைய பெண் குரலின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. இந்த விலக்கலும் அடையாளப் படுத்துதலும், கவனிக்கத்தக்க கவியாக வலம் வர உதவியாக இருக்கக் கூடுமா? என்பதையும் பின்னர் விவாதிக்கலாம். அதற்கு முன்பாக முதல் இரண்டு வகைக் கவிதைகளையும் விவாதிக்கலாம்.
ஒதுக்கத்தக்க அஞ்சலிக் கவிதைகள்
அவரே அடிக்குறிப்பிட்டு இது மரண அஞ்சலிக் கவிதை எனக் காட்டியுள்ள கவிதைகள் மொத்தம் ஒன்பது. குறைந்த எண்ணிக்கையில் உள்ள இக்கவிதைகளை அஞ்சலிக் கவிதை என்னும் வடிவத்திற்காகவே பொருட்படுத்த வேண்டியதில்லை எனப் பலர் கருதுவதுபோலச் சொல்லி ஒதுக்கவில்லை. தமிழச்சியின் பிற வகைக் கவிதைகளில் இருக்கும் பங்கேற்புத் தன்மை இவ்வகைக் கவிதைகளில் கொஞ்சமும் இல்லை என்பதனாலேயே  பொருட்படுத்தத் தக்கதாக இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. அஞ்சலி செலுத்த தமிழச்சி தேர்வு செய்யும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தமிழ்ப் பொதுப்புத்தி கவனப் படுத்தி மனத்தளவில் துயரம் கொள்ளும் நிகழ்வுகளாகவே உள்ளன. முதல் வாசிப்பில் கவியின் ஆதரவுக் குரல், தமிழ் நாட்டின் பேரரசியல் போக்கில் எவ்வகைப் பட்டதாக இருக்கிறது என்பதைக் காட்டப்  பயன்படும் என்பதைத் தாண்டி, அதன் கேள்விகளும் வேதனைகளும். நிகழ்வின் வெளிப்பாடாகவும், நினைவு நாளைப் பற்றிய  வரலாற்றுச் செய்தியாகவும் மட்டுமே உள்ளன. இவ்வகைக் கவிதைகள் வெகுமக்கள் இதழில் கவிதை வடிவில் எழுதப் படும் செய்திக் குறிப்புகள் என்ற நிலையையே கொண்டுள்ளன. நடந்த நிகழ்வுகளைப் பற்றிய உணர்வு பூர்வமான தகவல் என்பதைத் தாண்டி மறுவாசிப்பின் போது எவ்வகை உணர்வையும் இக்கவிதைகள் எழுப்புவதில்லை. முதல் வாசிப்புக்கு மட்டுமே உரிய ஒன்றைப் பொருட்படுத்தத் தக்க கவிதை அல்ல என்பதை விமரிசகன் சொல்ல வேண்டியதில்லை; தீவிரமான வாசிப்பு மனமே அப்படித்தான் நம்புகிறது.
ஒரு நிகழ்வை நினைவூட்டும் அஞ்சலிக் கவிதை, அந்நிகழ்வினால் பாதிப்பை உண்டாக்கியவர்களுக்கும் பாதிக்கப் பட்டவர்களுக்கும் தரக்கூடிய உணர்வு சார்ந்து முக்கியத்துவம் பெறக்கூடும். பாதிக்கப் பட்டோரின் தன்னிலையிலிருந்தும் பாதிப்பு உண்டாக்கியோரின் தன்னிலையிலிருந்தும் வாசிக்கும் போது அக்கவிதை தொடர்விளைவுகளை உண்டாக்கிக் கொண்டே இருக்கும். அப்படிப் பட்ட கவிதைகள் பலவற்றை சுட்டிக் காட்டலாம். ஓர் உதாரணம்:
கொழுந்து விட்டு எரிந்த உயிர்கள் சாம்பலாச்சுங்க - அங்கே
வளர்ந்து வந்த பயிர்களுக்கு உரமுமாச்சுங்க.
கொள்ளைக்காரக் கூட்டம் நீதிமன்றம் வந்ததுங்க - அங்கே
வழங்கப்பட்ட நியாயங்கள்.. நியாயங்கள்
1968 இல் 42 பேர் எரித்துக் கொல்லப்பட்ட கீழவெண்மணி நிகழ்வை ஞாபகப்படுத்தும் பரிணாமனின் இக்கவிதை வாசிக்கப்படும் போது கீழ்வெண்மணியை மட்டும் நினைவுபடுத்தும் தகவல் கவிதையாக இருப்பதில்லை. தொடர்ந்து நடக்கும் சாதிய/ வர்க்க வேறுபாட்டில்- பாதிப்புக்குள்ளாவோரின் குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்பதை மறுத்து விட முடியாது. ஆனால் இப்படியான அனுபவத்தைத் தரும் குரலாக இல்லாமல் தமிழச்சியின்¢ அஞ்சலிக் கவிதைகள் நடக்கும் நிகழ்வுகளில் அவரை வெளியே நின்று பார்த்து அனுதாபத்தை வெளிப்படுத்தும் ஒருவராக மட்டுமே காட்டுகின்றன. மூன்று பெண்கள்- வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் தீயில் எரிக்கப்பட்டார்கள் என்பதற்காக மூன்று முறை தீ எனத் தலைப்பிட்டுள்ள கவிதையின்   கடைசி வரிகள்  இவை.
இத்தனைக்கும் மேலாய்
இணையற்ற மனித
உயிர்கள் மூன்று 
என
எல்லாம் இருந்தது.
அந்தப் பேருந்தினுள்
ஒரு
பெட்ரோல் குண்டு
மரணமாய் விழும் வரை. ( தீ.. தீ.. தீ )                                                  
இன்னொரு அஞ்சலிக் கவிதை கும்பகோணத்தில் குழந்தைகள் தீயில் கருகியதை நினைவு படுத்தும் கவிதை. அக்கவிதையின் கடைசி வரிகளை வாசித்துப் பாருங்கள்.
                     அக்கினியும், காற்றும் கைகோர்த்து
அவனையும், அவளையும் அதுவாய் மாற்ற
                     அரற்றிப் போகின்றது சூரியன்.
                     அமாவாசை என்றொரு அற்புதம்,
எனக்கும் அமைந்திருந்தால்
இன்றைக்கொரு நாள்
                     எழும்பாமல் விட்டிருப்பேன் நான் [அனற்பொழுது]
[பிற அஞ்சலிக் கவிதைகளின் வரிகள் பின்னால் தரப்பட்டுள்ளன படித்துப் பார்த்தால் இங்கு சொல்லப்பட்ட பார்வையாளத் தன்மை வெளிப்பாடு புரிய வரலாம்.]
                                                                                           கிராமத்து நினைவுகள்
தனது தொகுப்புகளுக்கு எஞ்சோட்டுப் பெண், வனப்பேச்சி எனக் கிராமம் சார்ந்த நினைவுகளைத் தூண்டும்  தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து வைத்ததன் மூலமும், கிராமம் சார்ந்த தமிழ்க் கவிதை முன்னோடியான பழமலய்யிடம் தனது முதல் தொகுப்புக்கு முன்னுரை வாங்கியதன் மூலமும் தனது கவிதை அடையாளமாகத் தமிழச்சி முன் வைக்க விரும்பியது மண்சார் கவி அடையாளம் தான் என்பது புரிகிறது. ஆனால் இரண்டு தொகுப்புகளிலும் சேர்த்து 30 கவிதைகளுக்கும் குறைவாகவே  கிராமிய வெளியைக் கொண்ட கவிதைகள் உள்ளன.
அவற்றைத் தனியாகத் தொகுத்து வைத்து வாசிக்கும் போது, தமிழச்சியின் கிராமத்து நினைவுகளும் அங்கு சந்தித்த மனிதர்களும் பரப்பளவில் விரிவானவையாகவோ, கிராம சமூகத்தின் அனைத்து வகையான உறவுகளையும், இயங்குநிலைகளையும் புரிந்து கொள்ளும்படியான வாய்ப்புக்களைக் கொண்டவையாகவோ  இல்லை என்பதை முதல் வாசிப்பிலேயே அறிந்து கொள்ள முடிகிறது. நிலவுடைமையும், கிராமீய வாழ்வைத் தீர்மானிக்கும் அதிகாரமும் குவிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் செல்லப் பெண் ஒருத்தியின் வீடு தேடி வந்த அனுபவங்களே அவரது கிராமத்து நினைவுகள். அப்பத்தா, பிறந்த வீட்டுக் கோடி, என் சோட்டுப் பெண், சேத்தூர் சித்தப்பா,முடியனூர்க் கிழவி, கொத்தனார் பாக்கியம், வெடிவாலு கருப்பையா,குழந்தைவேலு ஆசாரி எனக் கவிதைகளின் தலைப்புகளாக மாறியுள்ள இந்தப் பாத்திரங்களைத் தனது வீட்டின் முற்றத்திலிருந்தும் திண்ணையிலிருந்தும் மாடத்திலிருந்தும் பார்த்துப் பேசிச் சிநேகம் கொண்ட நினைவுகளையே தமிழச்சி தனது கவிதைகளில் அசை போடுகின்றார். இவர்களது அன்பு மட்டுமல்ல, கிராமத்துத் திருவிழாக்களும், பறவைகளும், விலங்குகளும், வெக்கையும், தண்ணீரும் என அனைத்தும் ஒரு பார்வையாளப் பதிவுகளாகவே கவிதைகளில் தங்கியுள்ளன. அவரது கவிதைகள் எழுதிக் காட்டும் சில சித்திரங்களைக் காணலாம்.
விருதுநகர் பொருட்காட்சிக்கு
குதிரை ராட்டினமும் மிட்டாய்க் கடிகாரமும்
ஓலைப்பெட்டித் தீம்பண்டமும் மட்டுமே.  ----
கலர் லைட்டுகளும், ராட்சச ராட்டினமும்
பலூன் அப்பளங்களுமாகப்
பொருட்காட்சி விழுங்கியது அவளை (தீனி)

அந்தியில் அடைபட நடக்கின்றன மயில்கள்
வாலிபத்தின் கனவொன்றைத் துய்த்த ரகசியமுடன்
பிரிந்தோம் நாம்.
அசைபோடுகின்றன கிடை ஆடுகள் 
அங்கே இப்போதும். (கிடை)

காய்ந்த இலந்தைக் கொட்டைகளென
இந்தக் கரிசலின் வெக்கை
என் கனவுகளைத் தீய்க்குமுன்
வந்தென்னைப் பெயர்த்து,
காட்டாமணக்கும், நொச்சியும்
மணக்கும்,
நீர் கசியும் வரப்பில்
சறுக்கிப் போன நம் பால்யத்தின்
தடங்கள் நடுவே
பதித்து விட்டுப் போ. (பதியம்)

‘அடி ஆத்தா பாத்து நாளாச்சுல்ல
பக்குன்னு இளச்சுட்டீக தாயி’
என எதேச்சையாகத் தென்படும் ஊர்க்காரரின் 
எதார்த்தமான வாஞ்சையில் உயிர்ப்பிக்கிறோம் (உயிர்ப்பு)

இளம்பிராயத்தில் எனக்காய்
எப்பொழுது கேட்டாலும்
கொடுக்காப்புளி பறித்து வரும்
குருவாச்சியின் தலையிலிருந்த
வேப்ப எண்ணெய் எனக்கு 
என்றுமே குமட்டியதில்லை என. (முரண்)

உள்ளங்கை அளவு ஊருணி தான் தற்சமயம். ---
கரிசலின் மழை கண்ணீர் தானென்று. (வேப்பம் பூ கோடை)

நகரத்தில் தொலைந்த என்னை
நடு இரவு உறக்கத்தில்
சிரிக்க வைத்து
மீண்டும் கண்டெடுக்கும்
சிறுவயதில் நான் சேகரித்த 
தீப்பெட்டிப் பொன்வண்டாய்
என் பிறந்த ஊர் நினைவு. (தீப்பெட்டிப் பொன்வண்டு)
செம்மண் புழுதிப் பொடிசுகள்
கம்மங்கூழ்
கூடக் கடைந்தெடுத்த மோர்
பனைநுங்கு பதனித்தண்ணீர்
சின்ன வயிற்றொடு
மேயும் சிவப்பி
பொன் வண்டு
அடையும் மஞ்சணத்தி
என் பெயர் எழுதிப் பார்த்த 
நெட்டிலிங்கம் (ஏக்கம்)

சாராயம் போட்டிருந்தால்
அப்பா அறியாமல்
பூனைநடையாய் வந்து
கோழிக்குழம்பு ருசிக்கும்
சேத்தூர் சித்தப்பா எப்போதும்
எனக்குக் கனகாம்பரமும்
கலர்ப் பூந்தியும் வாங்கி வருவார்..
வயக்காட்டு வரப்புத் தகராறில் 
வலது காலில் விழுந்த வெட்டில்
சற்று
விந்தி நடந்து வந்தாலும்
நெய் போட்டு வளர்த்த
மீசை நிமிர்ந்தேயிருக்கும்
வாய்தா கேட்டு
டவுனுக்கு வந்ததாகச் சும்மாவேணும் சொல்லி (சேத்தூர் சித்தப்பா)

தன்னைப் பாதித்து உலுக்கிய ஒன்றில் பங்கேற்ற மனத்தை இக்கவிதைகளில் வாசிக்க முடியவில்லை. அதற்கு மாறாக அந்த நிகழ்வுகள் அல்லது மனிதர்கள் பற்றிய தனது நினைவுகளையே பதிவு செய்கிறார். அந்தப் பதிவுகளும் எட்ட நின்று பார்த்த பார்வையாளர் பதிவுகளாகவே உள்ளன. தானே பங்கேற்ற மனநிலையை எழுத முயன்றிருந்தால் அவை இவ்வளவு ஆதர்சமாகவும் நினைத்து நினைத்து ஏங்கத் தக்கதாகவும் இருக்க முடியாது என்பதுதான் இந்திய/ தமிழகக் கிராமங்களின் யதார்த்தம். வன்முறையான சாதி ஆதிக்கத்தின் மேல் கட்டியெழுப்பப்பட்ட இந்தியக் கிராமங்கள், படைப்பாளியின் தேர்வுக்குரியதாக ஆகும் போது அங்கு நிலவும் பொருளாதாரம் மற்றும் வெளி சார்ந்து நுட்பமாக வெளிப்படும் ஆதிக்க உணர்வும் முரண்பாடுகளும், விடை காண முடியாதபடித் தவிப்புக்குள்ளாக்கும் அழுத்தங்களும் தான் முன் நிற்குமே ஒழிய சின்னச் சின்ன  ஆசைகளும் ஆச்சரியங்களும் அல்ல.
எஞ்சோட்டுப் பெண் தொகுப்பில் அதிகமாக உள்ள இவ்வகை நினைவுகளோடு ஒத்ததான நினைவுகள் வனப்பேச்சி தொகுப்பில் குறைவாகவே உள்ளன. அத்தொகுப்பில் உள்ள எச்சம், வெக்கை, பகிர்வு, உயிர்ப்பு,காம்பு, இது வேறு வெயில் முதலான கவிதைகளை வாசித்துப் பார்த்தால் இப்படிக் கூறுவதின் அர்த்தம் விளங்கும். விலகிப் போய்விட்ட கிராமிய இழப்பும் அதைத் திரும்பவும் அடைய முடியாது என்ற நினைப்பில் எழும் துயரமுமே இத்தகைய கவிதைகளை எழுதத் தூண்டியிருக்கும் என்பது உண்மை. நினைவின் சோகத்தை மட்டுமே தனது தொடர்ச்சியான வெளிப்பாடாக ஆக்கிக் கொள்ளாமல்  வனப் பேச்சி தொகுப்பில் குறிப்பான ஒரு மாற்றத்திற்குள் பயணம் செய்திருக்கிறார் கவி தமிழச்சி. இம்மாற்றத்தை  மொழியினைப் புதுப்பித்துக் கொள்ளும் உத்வேகம்  என்பதாகச் சுட்டிக் காட்டிப் பதிவு செய்யும் மனுஷ்ய புத்திரன் (பதிப்புரை) தமிழச்சியின் கவிநிலையில் ஏற்பட்டுள்ள வேறு வகையான மாற்றங்களைக் கவனிக்கத் தவறி இருக்கிறார் என்று கூடச் சொல்லலாம். கிராமத்தை விட்டு வெளியேறி படர்க்கை நிலைப் பார்வையாளராக மாறி விட்ட தன்னை நிகழ்கால இருப்பின் நியாயங்களை உணர்ந்த ஒரு தன்னிலையாகச் சில கவிதைகளில் மாற்றி வெளிப் படுத்தியிருக்கிறார். இதனைச் சுட்டிக் காட்டுவது அவரது பயணத்தைச் சரியாக அடையாளப்படுத்துவதாகக் கூட அமையலாம்.  இதற்கு இரண்டாவது தொகுப்பின் தலைப்புக் கவிதையான   வனப் பேச்சியே நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. 
சுருண்டிருக்கும் சர்ப்பமென
அவசரம் புதைந்திருக்கும்
இந்நகரத்தின் எந்த வீட்டில்
குழந்தைக்கான ஒரு தூளிச் சேலையும்
வயது முதிர்ந்தவளுக்கான சுருக்குப் பையும் இருக்கிறதோ
அங்குதான் விருந்தினளாக வருவேன்
என்ற அடம் வனப்பேச்சிக்கு.
இறுக்கிக் கட்டின இடுப்புத்
தடத்தினைத் தடவியவாறு
சாப்பாட்டு மேசையில் அமரக்கூடாது;
கறுத்த கெண்டைக்காலினை ஆட்டாது
அடுத்தவரோடு பேசவேண்டும் என
ஏகப்பட்ட முஸ்தீபுகளுடன் நான்
அழைத்துச் சென்ற அந்த வீட்டின் முன்
திண்ணையில்லை
வெற்றிலை எச்சிலை
எப்படித்துப்ப என்ற
பிலாக்கணத்துடன் திரும்புகையில் 
வாசல் கூர்க்கா மட்டுமே
பிடித்திருந்ததாகச் சொன்னாள்
பீடிக்காகவும்
காவலுக்காகவும்.(வனப்பேச்சி)
நகர வாழ்வின் நியதிகளோடு முரண்படும் கவி, கிராமிய நடைமுறைகளைப் புரிந்து கொண்டவராகவும், அந்நடைமுறைகளின் தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வுகளின் பால் ஈர்ப்புக் கொண்டவராகவும் காட்டிக் கொள்கிறார். அதன் வழியாகக் கிராமியப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றத்தின் காரணங்களைக் கூடப் புரிந்து கொள்ள முயலும் மனநிலைக்கு வந்து சேர்கிறார். நகர வாழ்வு சார்ந்து உருவாக்கும் சொல்லாடல்கள் கிராமிய வாழ்வின் தேவைகளை ஈடுகட்டும் வழிகளை அடையாளப்படுத்தாத சொல்லாடல்கள் என்பதை மறைமுகமாகச் சொல்லும் இந்த எளிய கவிதை அவருள் செயல் படும் தமிழ்க் கிராமம் சார்ந்த தொல் மனம் ஒன்று இன்னமும் தங்கியிருக்கிறது என்பதைச் சொல்ல முயல்வதைக் காண முடிகிறது.
ஒப்பந்த வெட்டுக்கு
ஒட்டுமொத்தமாய் பலியான சீமக் கருவேல மரங்களில் இதுவரை
அடைந்திருந்த மயிலெல்லாம் இனி
எங்கு போய் அடையுமோ -
என் கவலை எனக்கு.
அடுத்த வெட்டுக்காவது 
அடிவயிறு தள்ளாம இந்த
அஞ்சாவது ஆம்பளப் புள்ளயாய்ப்
பெறக்கணுமே பேச்சியாத்தா
நிறைசூலியாய்க் கருத்த கால் வீங்க,
கருவேல் முட்களை வெட்டிக்
குமிக்கும் ஆனிச்சிக்கோ
அவள் பாடு அவளுக்கு.
சமச்சீரற்ற
தராசுத் தட்டின் முள்ளாய்க்
கவலையற்றுக் காலம்! (முள்)
கிராமம் தனக்குள் ஏற்படுத்தி இருந்த அன்பு, பாசம், அந்நியோன்யம், எதிர்பார்ப்பின்மை என்பதைச் சொல்லும் இன்னொரு கவிதையையும் வாசித்துப் பார்க்கலாம்.
இன்னதென்று யூகிக்க  இயலாத முகபாவங்கள்
இவற்றிடையே கர்வமிழந்து,
தயங்கிக் கையேந்துகிறது
இந்த நகரின் அடுக்கு மாடியில்
நிகழ்ந்துவிட்ட மரணம்.
இந்தத் தொட்டிச் செடிகளின்
சூட்சுமம் இன்னமும் பிடிபடுவதாயில்லை ( சாகஸம்)
கிராமத்து நினைவுகளை இழந்து போன சொர்க்கமாக (Nostalgia ) நினைத்து உருகும் கவியின் குரலை இவற்றில் கேட்க முடிகிறது. இந்தக் குரலில் விலகிப் போன உறவுகளையும் திரும்பக் கிடைக்காத அன்பையும் தேடும் தூக்கலான உணர்வுகள் வெளிப்படையாக உள்ளன. இந்த வெளிப்பாடுகள் தமிழச்சியின் கவிதைகளுக்கு மட்டும் உரியன அல்ல. பின் காலனிய நாடுகளின் கவிகள் பலரிடம் வெளிப்படும் அரசியல் அடையாளம் அது. நுட்பமாகத் தமிழச்சியின் கவிதைகளைப் பகுப்பாய்வு செய்தால் அவரது கவிதைகளுக்குள், கிராமத்து நினைவுகளை அசைபோடும் ஓர் உயர் நடுத்தர வர்க்கத்து நகரவாசியின் குரல் தொடர்ந்து வெளிப்படுவதையும் கேட்க முடியும். இதன் மறுதலையாக நகரத்து வாழ்க்கையில் ஒட்டாது வாழும்-வாழ நேர்ந்து விட்ட அவலத்தின் முணுமுணுப்புகளும் மனித நேய வெளிப்பாடுகளும் இருப்பதையும் சுட்டிக் காட்ட முடியும். இந்தியப் பாரம்பரியக் குடும்ப உறவுகளின் மீதான விமரிசனமற்ற ஈடுபாடுகளைக் கொண்ட அந்த குரலை  கிராமத்து நினைவுகளை அசை போடும் மனம் எனக் குறுக்கிப் பார்ப்பதை விடப் பின் காலனியக் கவிக்குரல் எனக் கண்டறிந்து பேசுவதே பொருத்தமுடையது. தமிழ்க் கவிதைகளுக்குத் தமிழ் எல்லைகளைத் தாண்டிய  இந்திய மற்றும் உலக அடையாளத்தை உருவாக்கி விமரிசனம் செய்யாமல் போனதில் ஏற்பட்ட இழப்புகளை இனியும் தொடர வேண்டியதில்லை. 
                       பெண் தன்னிலை வெளிப்பாடு
கவிதைக்குள் செயல்படும் உரையாடல் வடிவம் அந்தக் கவிதையின் எடுத்துரைப்பாளரின் தன்னிலையை அடையாளப்படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கிறது என்பது கவிதை இயலின் அரிச்சுவடி,‘அம்ம வாழி தோழி!’ என விளித்துப் பேசுவதன் மூலம், அக்கவிதையின் கேட்குநர் இடத்தில் தோழி நிற்கிறாள். கிளத்துநரின் இடத்தில் அகத்திணை மாந்தர்களில் யாராவது ஒருவர் இருப்பர். அவ்விருவரிடையே சொல்லப்படும் உரிப்பொருள் வழியாகச் சொல்பவரின் தன்னிலை உருவாகும். இந்த அடிப்படை வடிவமே அகக் கவிதையின் எளிய வடிவம். ஒரு கவிதையில் கிளத்துநராக அதாவது சொல்பவராக இருப்பவரின் அடையாளமும் குரலுமே தன்னிலையை உருவாக்குகிறது. கிளத்துநருக்கும்(Narrator) கேட்குநருக்கும் (Receiver) இடையே பரிமாறப்படும் உணர்வுகளும் கருத்துகளும் தான் உலகக் கவிதையின் வகைகளாகவும் வரலாறாகவும் ஆகி இருக்கிறது. தமிழ்க் கவிதையின் வரலாறும் இதற்கு விலக்கல்ல.
தமிழச்சியின் இரண்டு கவிதைத் தொகுப்பிலும் கிளத்துநரின் இடத்தில் பெண்ணே அதிகம் நிற்கிறாள். அவரது எல்லா வகைக்கவிதைகளும் ஒரு விதத்தில் தமிழச்சியாகிய பெண்ணின் குரல் தான். ஆகவே அவரது கவிதைகள் பெண் கவிதைகள் எனச் சொல்லி விட முடியாது. அதற்கு மாறாகக் கிளத்துநரின் இடத்தில் தானே நின்று கொண்டு அல்லது பெண் ஒருத்தியை நிறுத்தி வைத்து,  கேட்குநரின் இடத்தில் ஓர் ஆணை கணவனாக, தந்தையாக, மகனாக, சகோதரனாக , காதலனாக, கடந்து செல்லும் ஒரு பொது மனிதனாக இருக்கும் ஆணை நிறுத்தி அவனிடம் பேசும் நிலையிலேயே அக்கவிதைப் பாலடையாளம் கொள்ளும். கேட்குநரின் இடத்தில் இருக்கும் ஆண் என்னும் எதிர்பாலுடன் குறிப்பாக ஆணாக மட்டும் உணரும் ஆணிடம் பேசும் போது மட்டும் தான் பெண் கவிதை உருவாகும். அப்படி உருவாகும் பெண் கவிதைக்குள் பெண்ணின் தன்னிலை ஆண் தன்னிலையோடு முரண்படும் நிலையில் அக்கவிதை பெண்ணியக் கவிதையாக மாறி விடும். பெண், ஆணுடன் முரண்படப் பல காரணங்கள் இருக்கின்றன.
இந்த உலகம் ஆண்களுக்கானதாக இருக்கிறது என நம்பும் அல்லது உணரும் ஒரு பெண் அவனோடு எல்லாவிதத்திலும் முரண்படத்தான் செய்வாள். அம்முரண்பாடு அவனிடத்தில் தன்னை வெளிப் படுத்துவதில் ஆரம்பித்து, தனக்கானவற்றைக் கோரிப் பெறுவது என்பதாக நகரும். பின்னர் அவனுக்குச் சமமானவளாகக் காட்டுவது என முடிவு செய்யும். அது சாத்தியப் படாத நிலையில், தானே தனித்து இயங்க முடியும் எனத் தீவிரங் கொள்ளும். பேசத் தொடங்கியிருக்கும் பெண்களின் குரலில், பெண்ணியத்தின் வெளிப்பாட்டில் இத்தகைய வேறுபாடுகளைக் காணமுடிகிறது. இந்த வேறுபாடுகளே பெண்ணியத்தின் வகைகளாக அறியப்படுகின்றன. இதைச் சரியாகப் புரிந்து கொண்டவர் கவி தமிழச்சி என்பதை அவரது கவிதை ஒன்றில் வெளிப்படுத்துவதிலிருந்து உணர முடிகிறது. திமிர்ப்பு என்பது அந்தக் கவிதையின் தலைப்பு:
கவனமாக எழுதப்பட
வேண்டியவை
என்றொரு கனமான
முன்னுரையுடன்
கடிதங்கள் ஆதியிலிருந்தே
அறிமுகப்படுத்தப்படுகின்றன.
வரையறைகளுக்குட்பட்டு
நம்மை அறிவிப்பதும்
அடுத்தவரை விளிப்பதும்
அதன் அரிச்சுவடி
விதிகளாய்ப் போதிக்கப்படுகின்றது.
ஏற்றுக் கொள்ளப்படுதலுக்கான
யத்தனமோ
நிராகரிக்கப்படுதலின்
பயமோ அற்று
சூல் கரையும் மழை போன்று
அதனை அனுப்புதல்
அசாத்தியமே
என்பன அக்கவிதையின் வரிகள். தமிழச்சியின் கவிதைத் தொகுப்புக்குள் பெண்ணைக் கிளத்துநரின் இடத்தில் நிறுத்தி ஆணைக் கேட்குநராக ஆக்கிப் பெண்ணின் குரலைப் பதிவு செய்யும் பெண் கவிதைகளாகவும், பெண்ணியக் கவிதைகளாகவும் 47 கவிதைகள் உள்ளன. விதை நெல்,ஆறாம் புலன், இருண்மை, மீறுதல், பூனை இரவு, விடு, ஆதி, வெற்றிடம், சீழ், ஆழ்கை, தீராதவள், ஏவாளின் துளி, இருப்பு, இம்சை, வெயிற்பனி, விழல் நீர், ரேகை, தன்மையின் முன்னிலை, இன்மையின் திரி, நிர்வாணம், போல், வனமுத்தம், நிகழ், வடு, அவரவர்மழை, ஆகச்சிறந்த தற்கொலை எனத் தலைப்பிட்டு எழுதப்பெற்றுள்ள கவிதைகள் வெளிப்படையாக ஆணிடம் பேசும் பெண் குரலைப் பதிவு செய்துள்ளன.
பதில்கள் அவசியமற்ற 
கேள்விகளையே
என் ஒவ்வொரு பிறந்த நாளிற்கும்
பரிசளிக்கின்றாய்.
உனக்கென்று கொடுப்பதற்கு
என்ன இருக்கிறது.
பதில்கள் வலியுறுத்தாத
கேள்வியின்
பதில்களைத் தவிர.[கரிப்பு -26]
எனக் கேட்கும் இப்பெண் ஆண் தன்னை பொருட்படுத்தவில்லை என்பதை அவனிடமே சொல்லிப் பார்க்கிறாள். இதிலிருந்து நகர்ந்து,
பகிரப்படாத தேசத்தின்
துயரென்னைத் தின்கிறது.
தனக்குத்தானே கட்டிக் கொண்ட
கைகளின் தனிமை போல.[அற்றல்-28]
தனது இயலாமையைச் சொல்கிற குரலை இக்கவிதையில் நாம் கேட்கலாம். அதனையும் தாண்டி அவளது எரிச்சலைச் சொல்லும் ஒரு கவிதையாக,
அசைவற்றிருக்கும் பச்சோந்தியின்
தயார் நிலையிலிருக்கிறது மனம்.
அடுத்த கணத்திற்கான ஒரு
 உலர்ந்த உரையாடலுக்கும்,
 செயற்கை வியப்பிற்குமான
புருவத்தூக்கலுக்கும்
கசப்பு மறைத்த குறுஞ்சிரிப்பின்
பாரம் குறைக்க
வேண்டியதாயிருக்கிறது.
வியர்வையுடன் கூடியதொரு அணைப்பும்,
முகஞ்சுழிக்கின்றதொரு சுடு சொல்லும் [மாற்று .31]
விரிகிறது. ஆனால்
கடற்கரை மணலைத் தட்டி உதிர்க்கின்ற
அலட்சியத்துடனோ,
சாலை விபத்தொன்றைப்
புறக்கணிக்கின்ற பொறுப்பின்மையுடனோ
இனியும் என்னை அணுக விரும்பும்
உனக்கு ஒரு வார்த்தை.
சுவடுகளைப் பின்பற்றச் சொல்லும்
உன் சொற்களுக்கு
என் மௌனம் மிக வன்முறையானது.
ஒரு மலையுச்சியின் குரலைப் புறந்தள்ளும்
பள்ளத்தாக்கின் மௌனம் போல
அது உன் ஒற்றைச் சொல்லை
மொழிபெயர்க்கும் அடிபட்ட மிருகத்தின்
வன்மத்துடன்,
என் பகலிரவைத் தீர்மானிக்கின்ற
உன் திசைமானியின்
ஈர்ப்புவிசை என்
ஆதித்தாயிடமே என்கிற ஆதாரமாய் ஒருநாள்
நீ வருவாய்
அப்பொழுது கேட்பேன்
எல்லாவற்றையும் முடிவு செய்கின்ற
உன் ஆட்காட்டி விரலை
ஏகலைவன் காணிக்கையாய்.[சுயம்பு]
என்று விரியும் கவிதையில் வெளிப்படுவது பழிவாங்கும் மனநிலை.ஆதிக்கத்தை எப்படியாவது நிலை நிறுத்தி விடத் துடிக்கும் ஆண்களைப் பழிவாங்கும் மனநிலைக் கவனத்துடன் வெளிப்படுத்தும் இத்தகைய கவிதைகள் வனப்பேச்சி தொகுப்பில் தான் இடம்பெற்றுள்ளன. பெண்ணியக்குரலாக இல்லாமல்  பெண் தன்னிலையை வெளிப்படுத்தும் கவிதைகள் மட்டுமே எஞ்சோட்டுப் பெண் தொகுப்பில் இடம் பிடித்துள்ளன.
இருக்கை முழுதும்
கால்பரப்பியபடி
சம்பந்தமில்லாதொரு
பாவனையுடன்
சொகுசாய்க் கணவன் புத்தகத்தில்
முகம் புதைத்திருக்க
புதைத்துக் கொண்டிருந்த
வெண்சுருட்டை விட்டெறிந்து
எதுக்களித்துத் தெறித்த
கைக்குழந்தையின் பால் வாந்தியினை
முகஞ்சுளிக்காமல்
துடைத்துக் கொண்டு
இருகம்பிகள் இணைத்துத் தொட்டில் கட்ட
புடவை நுனி பிடித்தும்
தூங்கும் குழந்தையில்
இடிபடாமல்
தன் முழங்கால் குறுக்கியும்
இங்கு அமர்ந்தால்
இன்னும் நன்றாகப்
பார்க்கலாம் நிலாவை என்று
இங்கிதமுடன் தன் இடமும்
விட்டுக் கொடுத்த
அவனை
வெறும் இரயில் சிநேகிதம் என்றெப்படி மறக்க? – [இடம்.எ.சோ.46-47 ]
என்று கேட்கும் பெண் குரல், கணவனிடம் கிடைக்காத ஒன்றே பெண்ணுக்கு இன்னொருவனிடம் நட்புக் கொள்ளச் செய்யும் சூழலை உருவாக்குகிறது எனச் சுட்டிக் காட்டுகிறது. குடும்ப அமைப்புக்குள் பெண்ணின் இருப்பு நிலையை ஆழமாகவும், அதே நேரத்தில் எளிமையான வார்த்தைகள் வழியாகவும் சொல்லும் இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்.
கதவுகளையும்
திரைச்சீலைகளையும் தாண்டி
சுவர்களில் முதுகு தேய்த்து
சன்னல் கம்பிகளில் தயங்கியபடி
மிதியடிகளில் நிதானித்து
இறுக மூடிய குழாய்களின்
இடைவெளிகளில் கசிந்து
குளியலறைத் தண்ணீருடன்
வெளியேறுகிறது.
நிறுத்தப்பட்டிருந்த
மின்விசிறியின் வியர்வையுடன்
பூட்டியிருந்த அறைக்குள்
மூச்சடைத்திருந்தது காற்று
இக்கவிதைக்குத் தமிழச்சி தந்துள்ள தலைப்பு : விடுதலை. இதே உணர்வை சொல்லாக் கதை என்னும் கவிதையின்,‘வீட்டின் நிலைப்படியே கதவினைத் தீர்மானிக்கிறது’ என்ற படிமம் தீவிரமாகவே சொல்கிறது. இந்தப் படிமத்தின் தொடர்ச்சியாகப் பின்வரும் வரிகளை வாசிக்கும்போது பெண்ணின் இருப்பைத் தமிழச்சியின் கவிதைகள் பதிவு செய்யும் விதத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
நேசமுடன் பிரிகின்ற
கரங்களைச் சற்று
ஆதுரத்துடன்
பற்றியிருக்கின்ற
கதவிற்கு அதிகாரம்
இருப்பதில்லை
திறந்திருக்கும்பொழுது
தீர்மானங்களின்றியும்
மூடப்பட்டிருக்கையில்
மௌனமாயும்
அனுமதிக்கப்படாதனவற்றிற்குத்
தாள்ப்பாளிட்டும்
இருக்குமாறு கதவுகள்
அறிவுறுத்தப்படுகின்றன.
ஆயினும்
அவை
இல்லத்திற்கு மிக
இன்றியமையாதவை
இக்கவிதையின் தலைப்பு: பேசாத மொழி. வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு மட்டுமல்ல; வீடு அவளது விருப்பங்கள் பலவற்றிற்கும் இறுக்கத்தையே உண்டாக்கிடும் விதமாக உள்ளது என்பதைப் பின்வரும் கவிதையில் காணலாம்.
மூச்சுத் திணறும்
தொட்டிச் செடிகளைச்
சூரிய வெயில்
படர்ந்திருக்கும்
படிக்கட்டுகளில்
வைத்துவிட்டு
நீ வந்தால்
நாம்
இறுக்கமின்றிப் பேசலாம்.(இறுக்கம்)
குடும்பம் இறுக்கமானதாகவும், பெண்ணிற்கான வெளியைத் தர மறுப்பதாக இருந்தாலும், அப்படி இருப்பதற்கு ஆணின் இருப்பே காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்த குரலாக இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் குரலோடு சேர்த்துப் பெண்ணுக்கு ஆணின் அருகிருப்பும், ஆணுக்குப் பெண்ணின் சிநேகமும், உடல் பரிசங்களுமான உயிரியல் வேட்கையின் தவிர்க்க முடியாமைச் சொல்லும்.
ஆரவாரமற்ற வீரியமுடன்
என்னருகே நீ அமர்ந்ததை
அனுமானித்த அத்தனைப் புலன்களும்
கோர்த்துக் கூம்பின
பின்
கூர்த்து விழித்தன
உன் தொடுதலுக்காய் ..
உன் கரத்தின் வன் நடுக்கம்
வசீகரிக்கும் முன்பே
காற்றில் பதிந்து வந்த
உன் மென் மூச்சு
ஊதிக் கலைத்தது.
என் முதல் அடுக்கை
பொன்னுருக்கும்
கொல்லனின் கவனத்தோடும்
கடைவாயில்
குழலூதும் இடையனின்
கிறங்கலுடனும்..
அடுத்தடுத்த இதழ்
அவிழ்கின்ற
அற்புதத்தை
முழுதும் நிகழ்த்துமுன்
நீ முற்றிலும் மாயமானாய்
தண்டுறுஞ்சிய தண்ணீராய். [உயிர்ச்சுவை ]

நிரூபித்தல்களும்
நிச்சயங்களுமான தருணங்களும்
இல்லாத கனவொன்றைச்
சேமிக்கும் கூடொன்றை
என் பால்யத்தின்
மனக்கிளையில்
பொதிந்திருந்தேன்.
நிழலற்ற வெயிற்பொழுதிற்காய்
வந்த உன் கைகளில்
நைந்திருந்த அதன் மிச்சங்களைப் பார்த்துக்
கிளைகளை வெட்டிக் கொண்டது
என் சிறு மரம்
என்பதான கவிதைகள் எழுதிக் காட்டும் சித்திரங்களும் பெண்ணின் தன்னிலை ஆணால் அர்த்தப்படும் விதத்தை ஒத்துக் கொண்ட வெளிப்பாடுகளாக உள்ளன என்பதை உணரலாம். பெண்ணாக உணர்தல், பெண்ணின் இருப்பை உறுதி செய்தல், பெண்ணின் மௌனத்திற்கு அர்த்தம் சொல்லல் என விரியும் பெண் தமிழச்சியின் பெண் அடையாளக்கவிதைகள், தமிழில் தங்களைப் பெண்ணியக் கவிகளாகக் காட்டிக் கொள்ளும் பலரிடமிருந்து வேறுபட்ட தொனியில் இருப்பதை அக்கவிதைகளுக்குள் பெண் தன்னிலை உருவாக்கங்களே உணர்த்துகின்றன.
மற்றவர்கள் எல்லாம் தங்கள் கவிதைகளுக்குள் பெண்களுக்கு எதிராக நிறுத்தப்படும் ஆண்களை, பெண் உடல் மேல் ஆதிக்கம் செய்யும் தன்னிலைகளாக நிறுத்த அதிக அக்கறைகள் எடுத்துக் கொண்டுள்ளனர். ஆண்களின் கவனத்திற்குரியதாகவும், பரவலுக்குரியதாகவும், மேய்ச்சல் நிலமாகவும் இருக்கும் உடலை- உடலின் மொழியைப் பயன்படுத்துவதின் மூலமே பெண்ணியக் கவிதை காத்திரமாக வெளிப்படும் என நம்புகின்றனர். ஆனால் தமிழச்சியின் கவிதைகள் அத்தகைய அக்கறைகளுக்குள் நுழையாமல் பெண் என்பவள் உடலால் மட்டும் ஆனவள் அல்ல; அவள் ஆணைப்போலவே மனத்தாலும் ஆனவள் என நம்புகின்றன. எனவே உடல் மொழி மட்டுமே பெண்ணியக் கவிதைகளின் வெளிப்பாட்டு வடிவம் என்ற பார்வையை ஒதுக்கி விட்டுப் பொதுவான கவிதை மொழியையே தனது வெளிப்பாட்டு வடிவமாகக் கொள்கிறது. பெண்ணின் மனத்தை-ஆசைகளை-நிலைபாட்டைச் சொல்ல அப்பொது மொழியே போதுமானது என நம்புகிறது. அந்த நம்பிக்கையைப் பலவீனம் எனத் தீவிரமான பெண்ணிய நிலைபாட்டாளர்கள் சொல்லக் கூடும். ஆனால் அந்தப் பொது மொழியே அவரைப் பலரும் கவனிக்கத்தக்க கவியாக ஆக்கி இருக்கிறது. தீவிர நிலைப்பாடு எடுக்காத பெண்நிலை வாதிகளும் அக்கவிதைக்குள் நுழைந்து வாசிப்பதோடு அவை தரும் அனுபவங்களையும் கருத்தியலையும் விவாதிக்கவும் வாய்ப்பளிக்கிறது எனச் சொல்லலாம்.       
==== ============================ ===================================
  அஞ்சலிக் கவிதைகள்;
1.             செஞ்சோலை (இலங்கை, யாழ்ப்பாணத்துச் செஞ்சோலையில் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட  நிகழ்வின் மீதான நினைவுக்கவிதை)
2.             அணற்பொழுது  [தீப்பிடித்தபோது வெளியே வர முடியாமல் பள்ளிக் குழந்தைகள் கூட்டமாய் தீயில் வெந்த விபத்து விபத்து நடந்த இடம் : கும்பகோணத்தில்]
3.             தஸ்ல¦மாவிற்கு [வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா மீது அடிப்படை வாத இசுலாமியர்கள் வன்முறையில் ஈடுபட்டுத் தாக்கிய நிகழ்வைக் கண்டு எழுதியது நிகழ்வு நடந்த இடம் : ஹைடிராபாத்] 
4.             அல்ஜனாபியின் ஆறாவது விரல் [ஈராக்கில் 14 வயதுச் சிறுமியை ஐந்து பேர் சிதைத்து வன்புணர்ச்சி]
5.             ஆழிசூழ் அவலம் [இலங்கை, அனுராதபுரத்தில் உடைகளை அகற்றி நிர்வாணமாக ஏற்றிச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகள் நினைவாக]
6.             அந்தரம் [மின்கம்பத்தில் ஏறிய பொழுது மின்சாரம் தாக்கி இறந்த ஊழியர் ஒருவரது புகைப்படத்தை அடியொற்றி]
7.             மாடத்திக்கு [மாடத்தி-ஊனமுற்ற தாயுடனும், சகோதரியுடனும் இருக்கின்ற ஒரு சலவைத் தொழிலாளிப் பெண்]  
8.             பதிலிருக்கா..? [குழந்தைப் பருவத்தை நிலை நிறுத்தும் இயக்கம் - ஜூனியர் விகடன் செய்தி.]
9.             .தீ.. தீ.. தீ.. (அ இ அதிமுகவின் பொதுச்செயலர் ஜெ.ஜெயலலிதாவிற்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதைக் கண்டித்த அக்கட்சியினர் நடத்திய வன்முறையில் 3 மாணவிகள் பேருந்தோடு எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வின் நினைவாக இடம் தர்மபுரி)  [ஒன்பது அஞ்சலிக் கவிதைகளில் முதல் ஏழு கவிதைகளும் இரண்டாவது தொகுப்பான வனப்பேச்சியில் இடம் பெற்றுள்ளன. கடைசி இரண்டும் எஞ்சோட்டுப் பெண் தொகுப்பில் உள்ளன]

   
கிராமிய அடையாளக்கவிதைகள்
எஞ்சோட்டுப் பெண்

வனப்பேச்சி

1.             அப்பத்தா,
2.             பிறந்த வீட்டுக் கோடி,
3.             என் சோட்டுப் பெண்,
4.             சேத்தூர் சித்தப்பா,
5.             முடியனூர்க் கிழவி,
6.             கொத்தனார் பாக்கியம்,
7.             வெடிவாலு கருப்பையா,
8.             குழந்தைவேலு ஆசாரி,
9.             பொய்த்தலும் ஆதலும்,
10.         தீப்பெட்டிப் பொன்வண்டு,
11.         ஏக்கம்,
12.         பொழப்பு,
13.         அழுகை,
14.         பொங்கல்,
15.         கச்சம்மா பொங்கல்

1.                         வேப்பம் பூ
2.                         கோடை
3.                         கிடை
4.                         தீனி
5.                         முரண்
6.                         பதியம்
7.                         வனப்பேச்சி
8.                         எச்சம்
9.                         சாகஸம்,
10.                     வெக்கை,
11.                     பகிர்வு,
12.                     உயிர்ப்பு
13.                     காம்பு,
14.                     இது வேறு வெயில்,
15.                     முள்.




 பெண்ணுணர்வுக் கவிதைகள்

எஞ்சோட்டுப் பெண்

வனப்பேச்சி


1.             இடம்,
2.             தோல்வி,
3.             திமிர்ப்பு,
4.             விடுதலை,
5.             சுயமுகம்,
6.             சொல்லாக்கவிதை,
7.             நான் ( என்கிற ) காவிரி,
8.             இறுக்கம்,
9.             தடம்,
10.         வருகை,
11.         சமன்,
12.         பேசாத மொழி,
13.         அசையா ஊஞ்சல்,
14.         கைதி,
15.         முகவரி இல்லாக் கடிதம்,
16.         தொடங்குதல்,
17.         உயிர்ச்சுவை



1.      கரிப்பு
2.      அற்றல்,
3.      மாற்று,
4.      விதை நெல்,
5.      ஆறாம் புலன்,
6.      இருண்மை,
7.      மீறுதல்,
8.      பூனை இரவு,
9.      விடு
10.    ஆதி
11.    வெற்றிடம்,
12.    சீழ்,
13.    ஆழ்கை,
14.    தீராதவள்,
15.    ஏவாளின் துளி,
16.    இருப்பு,
17.    இம்சை,
18.    வெயிற்பனி,
19.    விழல் நீர்,
20.    ரேகை,
21.    தன்மையின் முன்னிலை,
22.    இன்மையின் திரி,
23.    நிர்வாணம்,
24.    போல்..,
25.    வனமுத்தம்,
26.    நிகழ்,
27.    வடு,
28.    அவரவர்மழை.
29.    ஆகச்சிறந்த தற்கொலை
30.    அலைவு






எஞ்சோட்டுப் பெண் தொகுதியில் உள்ளவை
=================================================================
தொகுப்பு வெளியீட்டு விவரம்
எஞ்சோட்டுப் பெண், தமிழச்சி, மித்ர ஆர்ட்ஸ்& கிரியேஷன்ஸ்,சென்னை, 24/ 176 பக்கங்களில் 57
கவிதைகளும் புகைப்படங்களும்.
வனப்பேச்சி - கவி தமிழச்சி தங்கப்பாண்டியன்உயிர்மை, சென்னை. 2007/120 பக்கங்களில் 57 கவிதைகள்

 ================ ==================== ================== ===========

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்