சரஸ்வதி சம்மான் விருது பெற்ற பேரா.அ.அ. மணவாளன் அவர்களை முன் வைத்து சில கேள்விகள்

விமரிசனமும் விருதும் கவனிக்கப்படுதலின் அடையாளங்கள். கவனிக்கப்படுதலை எதிர்பார்த்து உயிரினங்கள் ஏங்கி நிற்கின்றன. முள் கொடுக்கு களில் உரசி விலகிச் சென்ற வண்டுகளுக்காகவே பூக்கின்றன ரோஜாச்செடிகள் என்பது ஒரு கவிதை வரி.பச்சை இலைகளோடு இருக்கும் தாவரங்கள் பூப்பதன் மூலம் கவனம் பெறுகின்றன. காய்ப்பதும் பழுப்பதும் தன்னைப் பிறவற்றிற்குத் தருதலின் வெளிப்பாடுகள். இயற்கையின் எல்லா இருப்புகளும் இச்சுழற்சியிலிருந்து விலகி விடுவதில்லை. மனித உயிரிகள் உள்பட . 

மொழியைக் கருவியாக்கித் தன் இருப்பை உணர்த்துபவை மனித உயிரிகள். தன் இருப்பை வெளிப்படுத்தும் நிலையில் மொழியின் சாத்தியங்களை விரிக்கும்போது கலையின் பிறப்பு நிகழ்கிறது. கலையின் உருவம் என்பது புதிர்களின் தொகுதி. புதிர்களை உருவாக்குவதும்; புதிர்களை அவிழ்ப்பதும் கலைசார் வேலைகள். தகவல் தொடர்புக் குரியதாகக் கருதப்படும் எழுத்து மொழியைக் கவிதை மொழியாக, கதை மொழியாக நாடக மொழியாக மாற்றுவதன் மூலம் எழுத்தாளன் தனது அடையாளத்தை உருவாக்குகிறான். மொழியின் கூறுகள் வார்த்தைகளாக மட்டுமே இருப்பதாக நினைத்து விட வேண்டியதில்லை. மௌனங் களாகவும் ஒலிகளாகவும் இசைக் கலைஞனிடம் இருக்கும் மொழிக்கூறு கோடுகளாகவும் வண்ணங் களாகவும் ஓவியக்கலைஞனிடம் பரிமாணம் பெறுகிறது. நிலையிருப்பாகவும் அசைவுகளாகவும் நிகழ்த்துக் கலைஞனிடம் வடிவம் கொள்ளும் அவையே, பிம்பங்களாக மாற்றப்பட்டு திரைப்படக் கலைஞனால் மறு உயிர்ப்பு செய்யப்படுகின்றன. 
எழுத்தாளனுக்கு மட்டும் மொழியும் அதன் கூறுகளும் கருவியாக இருப்பதாக நினைக்க வேண்டியதில்லை. விமரிசகனுக்கும் மொழியும் மொழியின் கூறுகளுமே கருவிகளாக இருக்கின்றன. மொழியின் சாத்தியப் பாடுகளால் உருவாகும் பிரதியின் புதிர்களை அதன் தோற்றப் பாதையில் பயணம் செய்தும், உருவாக்கப்படும் முடிச்சுகளை அடையாளப்படுத்தியும், முடிச்சை அவிழ்ப்பதற்காக ஒரு நுனியைத் தொட்டும், அதனைச் சுருட்டிச் சுருட்டி வெவ்வேறு நுனிகளுக்குப் பயணிப்பது பற்றியும் விமரிசனம் பேசுகிறது. மொழியைப் பயன்படுத்தி பிரதிகளுக்குள் புதிர்களை உருவாக்குவது ஒருவித அனுபவம் என்றால் அப்புதிர்களை அவிழ்த்துப் பார்ப்பது இன்னொருவித அனுபவமாக இருக்கிறது. அந்த வகையில் விமரிசனம் கலையாகவே இருக்கிறது. 
தமிழில் படைப்பாளிகள் மட்டுமே எழுத்தாளர்களாக மதிக்கப்படுகின்றனர். விமரிசனம் மற்றும் ஆய்வுகள் எழுத்தாக நினைக்கப்படுவதில்லை. விமரிசன எழுத்தும் ஆய்வு எழுத்தும் இரண்டாம் நிலைப்பட்ட எழுத்தாக நினைக்கப்படுகின்றன. அதிலும் ஒரு ஆய்வாளரோ, ஒரு விமரிசகரோ விருது வழங்கிக் கவனிக்கப்பட்டால் எழுத்தாளர்கள் காட்டும் அக்கறையின்மையும், முகச்சுளிப்பும் அருவருப்பானவையாக இருக்கின்றன. ஆனால் படைப்பைச் செழுமைப் படுத்தும் சிந்தனைப் பள்ளிகளை உருவாக்கித் தந்த ஐரோப்பிய நாடுகள் இதிலிருந்து விலகி நிற்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற வாழ்க்கை முறைகளையும், அவற்றின் பாதிப்பால் உண்டாகும் கலை இலக்கியப் படைப்புகளின் தன்மைகளையும் தேவைகளையும், எதிர்நிலைப்பாடுகளையும் அடையாளப்படுத்திக் காண்பிப்பவர்கள் படைப்பாளிகளாக இருக்கவில்லை. கல்வித்துறைப் பேராசிரியர்களாகவும் விமரிசகர்களாகவுமே இருக்கிறார்கள். 

கவிதைக் கலையைப் பற்றிப் பேசுபவர்களும் கவிஞர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய மரபும் படைப்பாளியின் தனித்துவமும் என்ற டி.எஸ். எலியட்டின் கட்டுரை ஆகச்சிறந்த ஆய்வுக் கட்டுரை. அப்படியொரு ஆய்வுக்கட்டுரையைத் தமிழில் எந்தவொரு கவிஞனும் எழுதிக் காட்டியதில்லை. உம்பர்ட்டோ ஈகோ ஒரே நேரத்தில் புனைகதை எழுத்தாளராகவும், விமரிசகராகவும் இருக்கிறார். அவரைப்போல ஒரு புனைகதைப் படைப்பாளி தமிழில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதில்லை. இப்படியெல்லாம் வெளிப்பட வேண்டும் என்றால் வாசிக்க வேண்டும். தன் காலத்தில் எழுதப்படும் எழுத்துகளையும் கடந்த காலத்தில் எழுதப்பட்ட எழுத்துகளையும் வாசித்தாக வேண்டும். அந்த வாசிப்பு இலக்கிய வாசிப்பாக இருக்க வேண்டும். தமிழ் இலக்கியத்தை எப்படி வாசிக்க வேண்டும் என்பதான ஒரு பொது முறை இங்கு உருவாக்கப்படவில்லை என்பதும் பெருங்குறையாக இருக்கிறது. 

அகக்கவிதைகளையும் புறக்கவிதைகளையும் ஆய்வு செய்து புலமை பெற்றதாக நம்பும் ஒருவருக்கு தன்கால மொழியில் நம் காலப் பாடுகளைப் பேசும் யவனிகா ஸ்ரீராமின் கவிதை வாசிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. வெள்ளிவீதியின் தாபங்களையும் கோபங்களையும் விதந்தோதும் ஒருவருக்கு குட்டிரேவதியின் மெய்ப்பாடுகளும் சொல்முறைகளும் விளங்காமல் போவதின் காரணங்கள் தெரியவில்லை. வாசிக்க வேண்டும் என்ற ஆசையும் தேவையும் இல்லாததாலேயே ஒதுக்கப்படுவதாக நினைப்பதில் தவறு இருக்க முடியாது. இலக்கியத்துறை ஆசிரியர்களும் மாணவர்களும் அப்படியான ஆசைகளையும் தேவைகளையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனச் சொல்வது போலவே தன்னைப் படைப்பாளிகளாகக் கருதும் ஒவ்வொருவரும் மரபின் ஊடாகப் பயணம் செய்யும் ஆசைகளையும் தேவைகளையும் உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது வடவேங்கடத்தின் பக்கத்தில் காணியாண்ட அதியமானை நண்பனாகக் கொண்டிருந்த ஔவை நாஞ்சில் வள்ளுவனிடம் பேச நாகர்கோவிலையும் தாண்டியிருக்கிறாள். மின்மினிப்பூச்சிகள் நிரம்பிய தீப்பெட்டிகளோடு ரயில்பெட்டியிலேறியும் பேருந்துகளில் நகர்ந்தும் அலையும் கோணங்கியின் முன்னோடியாக நினைக்கத் தக்கவள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆலயங்கள் தோறும் உழவாரப் பணிகள் செய்த நாயன்மார்களும் ஆழ்வார்களும் செயலாளிகளாகவும் படைப்பாளிகளாகவும் கருதிக் கொள்ளும் அமைப்பு சார்ந்த எழுத்தாளர்களுக்கு மாதிரிகளாக இருக்கக்கூடியவர்கள் என்பதும் நிச்சயம். நோக்கங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் வழிமுறைகளும் சொல்முறைகளும் அறிந்து கொள்ள வேண்டியவை என்பதை மறுத்து விட முடியாது. கவி காளமேகத்தின் அங்கதமும் இரட்டைப்புலவர்களின் எள்ளலும் நிகழ்கால வன்முறை அமைப்புகளை நோக்கிப் பேசும் வலிமையைத் தராமல் போய்விடாது. கணியன் பூங்குன்றன் தொடங்கி சித்தர்கள் வழியாக நீளும் மரபு பலமாக இல்லை; பலவீனத்தைத் தருகிறது எனச் சொல்ல முடியுமா? பல பரிமாணங்கள் கொண்ட பாத்திரங்களை உருவாக்க நினைக்கும் புனைகதைக்காரர் ஸ்பானிய எழுத்துக்கும் பிரெஞ்சுக்கதை மாதிரியையும் தேடுவதுபோல கண்ணகியையும் மேகலையையும் எழுதிக் காட்டிய இளங்கோவையும் மேகலையையும் வாசிப்பது அவசியம் என நினைக்காமல் தடுப்பது எது? இப்படிப் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கலாம். 
அளிக்கப்படும் பயிற்சிகளின் வழியே கற்றுக் கொள்ளும் கல்வித்துறை சார்ந்த இலக்கிய மாணாக்கர்கள் சமகாலப் படைப்புகளைப் பிரக்ஞைப் பூர்வமாக ஒதுக்குகிறார்கள் எனச் சொல்ல முடியாது. ஆனால் படைப்பாளிகளும், சமகாலப் படைப்புகளின் வாசகர்களும் தன்னுணர்வுடன் மரபிலக்கியத்தைப் புறக்கணிக்கிறார்கள். அவை வாசிக்கப்பட வேண்டியவை அல்ல என்றே நினைக்கிறார்கள். மரபிலக்கியத்தை மட்டுமல்ல; மரபிலக்கியம் பற்றிய விமரிசனங்களையும் ஆய்வுகளையும் கூடத் தேவையற்றவை என்றே நினைக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் இந்தப் போக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் மரபின் தனித்துவம் அறிந்திராத க.நா.சுப்ரமண்யம் கூட அவருக்கான மரபிலக்கியத்தொடர்ச்சியைத் தமிழில் சுட்டிக் காட்டவே செய்தார். வடமொழி இலக்கியக் கோட்பாடு சார்ந்த மரபு அது. அவரை முன்னோடிக் கருத்தியலாளராக நினைப்பவர்கள் அவர் பட்டியலிட்ட தமிழ்ப் பிரதிகளை ஆங்கிலம் வழியாக வாசித்துப் புளகாங்கிதம் அடைந்தார்கள். 1990 கள் வரை நிலவிய இந்தப் போக்கும் இப்போது காணாமல் போய்விட்டது. இன்று பிறரது படைப்புகளை வாசிப்பது கூடத் தேவையற்றது என நினைக்கும் எழுத்தாளர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழின் ஆகச் சிறந்த நாவல்களையோ, சிறுகதைகளையோ வாசித்துத் தனக்கான மரபை அறிந்து கொள்ளவும் தனது தனித்தன்மையை அதன் வழி உருவாக்கிக் கொள்ளவும் ஆசையற்றவர்களாகவே இருக்கிறார்கள். இலக்கியம்சார் கல்விப் புலத்திலும் படைப்புத்தளத்திலும் விதிவிலக்குகள் இருப்பதை நான் மறந்து விடவில்லை. 
தான் செயல்படும் மொழியின் மரபிலக்கிய வாசிப்பின் வழியாகவே தனது தனித்தன்மையைக் கண்டடையவும் நிலை நிறுத்தவும் முடியும் என்பதற்கு உலக இலக்கியத்திலிருந்து மட்டுமல்ல; தமிழிலிருந்தே உதாரணங்களை தர முடியும். ஐம்பதாண்டுக்கும் மேற்பட்ட நிலை நிற்றலுக்கு ஜெயகாந்தனும் இந்திராபார்த்தசாரதியும் உதாரணங்கள் என்றால், கால் நூற்றாண்டு உதாரணமாக ஜெயமோகனை இருக்கிறார். இரண்டாயிர வருடப் பழமை கொண்ட தமிழ் இலக்கியப் பரப்பில் மட்டுமல்லாமல் இந்தியப் பரப்பிலும் தங்களுக்கான மரபுக் கண்ணியைத் தேடிக் கண்டுபிடித்து அதன் நீட்சியாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் கூட அப்படியான அலைதலில் தான் இன்னும் பயணம் செய்கிறார். 
தனது எழுத்துகளைப் பற்றி விமரிசனக் கட்டுரை எழுதப்பட வேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு நிகழ்காலப் படைப்பாளி, அந்த விமரிசகன் எழுதும் வேறு கட்டுரைகளைக் கண்ணால் பார்த்ததாகக் கூடக் காட்டிக் கொள்வதில்லை. என்னுடைய அனுபவம் மட்டுமல்ல இது. நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகப்படியான நூல்களுக்கு விமரிசனக் குறிப்புகள் எழுதிய ந.முருகேச பாண்டியனின் ஆதங்கமும் கூட.. நிகழ்காலப் படைப்புகளைப் பற்றிய விமரிசனங்களில் கூடத் தேர்வு செய்து வாசிக்கும் இலக்கியவாதிகளின் – இலக்கிய வாசகர்களின் இலக்கியப் பரப்பு மிகமிகக் குறுகியது என்பதைப் பலரது பேட்டிகளும் உரைகளும் நேர்ப்பேச்சுகளும் உறுதி செய்துள்ளன. அந்தப் போக்கின் அப்பட்டமான வெளிப்பாடாக இந்த ஆண்டு சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்பட்டபோது முகநூலில் நான் வாசித்த ஒரு நிலைக்குறிப்பும், அதன் மேல் எழுதப்பட்ட மேல்குறிப்புகளும் வெளிச்சமிட்டுக் காட்டின.. நிலைக்குறிப்பை எழுதியவர் எனது நண்பரும் உயிர்மை பத்திரிகையின் ஆசிரியரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன். அவர் எழுதிய குறிப்பை மட்டும் தருகிறேன். வாசித்துப் பாருங்கள்: 
இந்தியாவிலேயே அதிகமான பரிசுத்தொகை கொண்ட உயர் இலக்கிய விருது பிர்லா பவுண்டேஷன் வழங்கும் ‘சரஸ்வதி சம்மான்.’ ஏழரை இலட்சம் ரூபாய். ஒரு மொழியின் ஆகச் சிறந்த இலக்கியப் பங்களிப்புச் செய்தவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.. இதற்குமுன்பு தமிழில் இந்த விருதை வாங்கிய ஒரே எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. இன்று என்னை சந்தித்த எனது நெருங்கி நண்பர் ‘ இந்த ஆண்டு சரஸ்வதி சம்மான் தமிழுக்கு அறிவிக்கப்பட்ட்டிருப்பது உனக்குத் தெரியுமா’ என்றார். திரு திருவென்று விழித்தேன். ’ சரி யாருக்கு கிடைதிருக்கிறது என்று தெரியுமா?’ என்றார். தெரியவில்லை. என்றேன். ‘ மணவாளன் என்பவருக்கு கிடைதிருக்கிறது…அவர் யார் என்று தெரியுமா” என்று கேட்டார். எனக்கு 44 வயசில் 28 வருஷ லிடரரி சர்வீஸ். விஜய் டிவில் வரும் சூர்யா ப்ரோக்ராமில் 15 இலட்சம் ரூபாய் வரை பதில் தெரியும் எனக்கு. இது தெரியாமல் அவமானத்தில் துடித்துப் போய்விட்டேன். நண்பர் சிரித்துகொண்டே சொன்னார்’..’ கவலைப்படாதே..எனக்கும் தெரியாது..ஒரு வாரமாய் கடுமையாக துப்பறிந்து கண்டு பிடித்தேன்..அவர் ஒரு ரிட்டையரு ஃப்ரொபஸர்..ராமாயணம் பற்றிய எழுதிய ஏதோ கம்பேரடிவ் ஸ்டடிக்கு கோடுதிரூக்காங்களாம்’ 
தனது கவனத்துக்கு வரும் ஒவ்வொரு தகவலையும் முன் வைத்து உடனடியாக நிலைக்குறிப்பு எழுதி விடும் அவசரத்தில் எழுதப்பட்டதுதான் என்றாலும் (விஜய் டி.வி யில் வரும் சூர்யா ப்ரோக்ராமில் 15 லட்சம் வரை பதில் தெரியும் என்பதை அவசரத்தில் தானே அளவுகோலாக வைக்க முடியும்) இந்த நிலைக்குறிப்பும் அதற்கு எழுதப்பட்ட மேல் குறிப்புகளும் சமகாலப் படைப்பாளிகளிடம் காணப்படும் மனப்போக்கின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. அவை தனித்தன்மைகளை அடையாளம் கண்டு கொள்ளத்தவறும் மந்தைத்தனம். 

அ.அ.மணவாளன் தமிழ்ப் பேராசிரியர்கள் என்ற மந்தைக் குள்ளிருந்து தனித்துப் பயணம் செய்தவர் என்பதை நமது இலக்கியப் பத்திரிகைகளும் இலக்கியவாதிகளும் அறியாமல் இருக்கிறார்கள் என்பதை வருத்ததோடு சொல்லத் தோன்று கிறது.. சங்க இலக்கியப் பாடல் களையோ, காப்பியக் கதைகளில் முக்கியமான பாடல்களையோ, குறள் பாக்களையோ மனப்பாடம் செய்து மேடைகளில் முழங்கிக் காசு பண்ணும் ’தமிழ்ப் பேராசிரியர்’ அடையாளத்தை அ.அ.மணவாளன் மீது பொருத்தி விட முடியாது. அவரது முதல் அடையாளம் அரிஸ்டாடிலின் கவிதை இயலைத் தமிழில் மொழி பெயர்த்தது. அரிஸ்டாடிலின் கவிதைக் கோட்பாட்டுக்கு ஈடாகக் கவிதையியலைப் பேசும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலக இலக்கியப் பரப்புக்குள் தமிழின் வீச்சைத் தள்ளி விட்டவரும் அவர்தான். தொல்காப்பியப் பொருளதிகாரமும் சங்கப் புறப்பாடல்களும் அகப்பாடல்களும் தமிழர்களின் போர் வாழ்க்கையையும் காதல் வாழ்க்கையையும் படம் பிடித்து வைத்துள்ள தகவல் களஞ்சியங்கள் என்ற பெரும்போக்குக்கு மாறாக தொல்காப்பியப் பொருளதிகாரத்தை இலக்கியக் கோட்பாட்டு நூலாகவும், சங்கக் கவிதைகளுக்குள் செவ்வியல் இலக்கியக் கோட்பாட்டுத் தன்மைகள் மிஞ்சி இருக்கின்றன என்பதையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியவர். 

இலக்கிய ஒப்பாய்வு : சங்க இலக்கியம் ,என்னும் ஒரு நூலை வாசித்தாலே அவரது தனிப்பாதையும் புலமையும் புலப்படக்கூடும். அந்த வரிசையில் எழுதப்பட்ட இன்னொரு ஆய்வு நூல் இராமகாதையும் இராமாயணங்களும் (தென்னக ஆய்வு மையம், 2006-579 வெளியீடு).என்பது. பாலி, சமஸ்கிருதம், ப்ராக்ருதம், திபெத்தியன், தமிழ், ஜப்பானிய மொழி, தெலுங்கு, அஸ்ஸாமி, பழைய ஜாவா மொழி, தாய், காஷ்மீரி உள்ளிட்ட உலகமொழிகள் பலவற்றில் கிடைக்கும் 48 இராமாயணப் பிரதிகளைத் தொகுத்து ஒப்பீடு செய்து எழுதப்பட்ட நூல். 

ராமனைக் கடவுள் என்று நிறுவும் நோக்கமும் இராமாயணத்தைப் புனித நூல் எனக் காட்டி, அதில் மாற்றங்களை அனுமதிக்காத அடிப்படைவாதமும் மைய நீரோட்டச் சிந்தனையாக ஆக்கப்படும் காலகட்டத்தில் ராமாயணத்தை இலக்கியப் பிரதியாக மட்டும் கருதி, அது, தேசங்களுக்கும் காலங்களுக்கும் பண்பாட்டுச் சூழலுக்கும் ஏற்ப மாற்றம் பெற்ற பிரதி எனக் காட்டியுள்ள ஆய்வு நூல். கல்வித்துறை ஆய்வுகளுக்கு முன்மாதிரியாகச் செய்யப்பட்ட ஆய்வு இந்த ஆய்வு நூலுக்கும் அதன் பின் இருந்த புலமைக்கும் தான் கே.கே.பிர்லா பௌண்டேஷன் நிறுவனம் 2011 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருதை வழங்கியுள்ளது. இவ்விரு ஆய்வு நூல்கள் அல்லாமல் உலகத்தமிழ் இலக்கிய வரலாறு- கி.பி 901 முதல் கி.பி.1300 வரை (2006), இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள் (1994) என்ற இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார். சாகித்திய அகாடெமிக்காகத் தமிழ்ப் பக்தி இலக்கியம்(2004) என்னும் பெருந்தொகை நூல் ஒன்றைத் தொகுத்து அவற்றை வாசிப்பதற்கான முன்னுரையையும் வழங்கியிருக்கிறார் அவரது ஆழ்ந்தகன்ற இலக்கியப்புலமைக்கு இவையெல்லாம் சான்றாக இருப்பன.. அத்தோடு ஆண்டாளின் கவித்துவத்தை விவரித்து அவளது வாழ்க்கை வரலாற்றையும் தமிழில் எழுதியவர் அ.அ.மணவாளன். சாகித்திய அகாடெமி வெளியிடும் இலக்கியச் சிற்பிகள் வரிசையில் வரும் ரவீந்திரநாத் தாகூர், போதனர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தும் தந்துள்ளார். தவம் எனக் கதை இலக்கிய முயற்சியில் ஈடுபட்டதோடு மகாபாரதக் கதைகளைச் சிறுவர்களுக்கானதாக எழுதியும் தந்துள்ளார், நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிடும் ’உங்கள் நூலகம்’ பத்திரிகையின் சிறப்பாசிரியராகக் கூட இருக்கிறார். இப்படி விரியும் பேரா. மணவாளனின் பங்களிப்பை தமிழ் இலக்கியத்திற்குச் செய்த பங்களிப்பாகக் கருதாமல் நவீனத் தமிழ்ப் படைப்புலகம் புறங்கையால் ஒதுக்கி விட்டுப் போகப்பார்ப்பதை ஆரோக்கியமான போக்காகக் கருத முடியாது. தமிழ்க் கவிதையியலைப் பேசுவதையே வாழ்க்கையின் பகுதியாகச் செய்து கொண்டிருக்கும் பேரா.அ.அ.மணவாளனைத் தெரியாமல் இருப்பது மணவாளனின் தவறு அல்ல. நிகழ்காலத் தமிழ்ச் சூழலின் பெரும்பிழை. இந்தத் தவறு திருத்தப்பட வேண்டிய ஒன்று. மரபுப் புலமைக்குள் தனித்துவத்தைப் பேணுபவர்களை அடையாளப்படுத்துவதன் மூலமே மரபு இலக்கியத்தையும் நவின இலக்கியத்தையும் சந்திக்க வைக்க முடியும். இல்லையென்றால் இரண்டும் எங்கும் சந்தித்துக் கொள்ளாத இணைகோடுகளாகவே நீண்டு கொண்டிருக்கும். 


பின்குறிப்பாக ஒரு வேண்டுகோள் 
சரஸ்வதி சம்மான் விருதுபெற்ற அ.அ.மணவாளனைத் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வழங்கப்பட்ட கபிலன் விருதுக்கும் தேர்வு செய்து பொன்னாடை போர்த்திக் கௌரவம் செய்ததோடு ஒரு லட்சம் ரூபாயையும் 8 கிராம் தங்கப் பதக்கத்தையும் கொடுத்துள்ளது. தாமதமாகக் கண்டு கொள்ளப்பட்ட அ.அ. மணவாளனை விருது வழங்கிக் கௌரவிப்பதோடு விட்டு விடக்கூடாது என்பது எனது வேண்டுகோள். தமிழ்நாட்டில் செயல்படும் தமிழ் ஆய்வு நிறுவனங்களின் போக்கையும் ஆய்வுத் திறத்தையும் மாற்றிக் கட்டமைப்பதற்கு அவரது ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் இந்த அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தானுண்டு தன் ஆய்வுகளுண்டு என எப்போதும் ஒதுங்கிக் கொள்ளும் பேரா.அ.அ.மணவாளன் அதற்காக அரசின் ஆலோசனை மையத்திற்குள் நுழைந்து வெளியேறினால் கூட நல்லதுதான். அரசும் பேராசிரியரும் முயல்வார்களாக. 
==================================================================== 
நன்றி: அம்ருதா/ மே / 2012
==================================
புலமையின் உச்சம்

தமிழ் மொழி, செவ்வியல் மொழி (செம்மொழி என்னும் சொல் பொருத்தமான சொல் அல்ல) என்னும் உயர் தகுதியைப் பெறுவதற்குக் காரணமாக இருப்பன பாட்டும் தொகையுமாக இருக்கும் சங்க இலக்கியங்களே. காலப் பழைமையோடு குறிப்பிட்ட இலக்கியக் கொள்கை அடிப்படையிலான வரையறைக்குள் இருப்பதும் அதன் சிறப்புக்கள். இவ்விரு முக்கியக் காரணங்கள் தான் அவ்விலக்கியங்களைச் செவ்வியல் இலக்கியங்கள் எனவும், அவ்விலக்கியங்கள் எழுதப்பட்ட தமிழ் மொழியைச் செவ்வியல் மொழி எனவும்
உலக இலக்கியச் சொல்லாடல்களுக்குள் நுழைத்துள்ளன. பாட்டும் தொகையுமாக அறியப்படும் இக்கவிதைகளைச் சங்க இலக்கியங்கள் எனத் தமிழில் எழுதப்பட்டுள்ள இலக்கிய வரலாற்று நூல்கள் அழைத்தாலும் அப்படிப் பட்ட பெயர் ஒன்றைச் சங்க இலக்கியங்களாக அறியப்படும் பனுவல்களிலோ, அவற்றைத் தொகுத்தவர்களின் குறிப்புகளிலோ காண முடியவில்லை.
ஒரு காலகட்டத்தில் இருந்ததாக நம்பப்படும் இலக்கியம் சார்ந்த பேரமைப்பு ஒன்றின் மூலம் (சங்கம்) அழைக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழகத்தில் எப்போது தோன்றியது என்பதும், அதன் பின்னணியில் இருந்த ஆகப் பெரிய சக்தி எது என்பதும் இன்னும் விளக்கம் பெறாத ரகசியங்களில் ஒன்று. ‘சங்க’த்தோடு சேர்த்து இலக்கியம் மற்றும் அல்லாமல் அரசியல் வரலாறுகளும், சமுதாய நிகழ்வுகளும், பண்பாட்டு அடையாளக் குறிப்புகளும் கூட இன்றளவும் அவ்வாறே குறிக்கப்பட்டே வருகின்றன. அதன் மீதான ஐயங்களை எழுப்பி ஆய்வு செய்யும் போக்குகள் தமிழில் அதிகம் நிகழவில்லை. சங்க இலக்கியங்கள் என்ற சொல்லாட்சி கேள்விக்கப்பாற்பட்ட சொல்லாட்சியாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இச்சொல்லாட்சியின் மீது விமரிசனங்களை வைத்துள்ள ஆ.வேலுப்பிள்ளை, க. கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்ற ஈழத்துத் தமிழ் அறிஞர்களும் கூட அதற்கு மாற்றான ஒரு சொல்லாட்சியை உருவாக்கிப் பொருத்தமாக விளக்கிக் காட்டாத நிலையில் சங்க இலக்கியங்கள் என்ற சொல்லாட்சியே இன்றளவும் தொடர்கின்றது. அதன் பின்னணியில் அதிகாரம் சார்ந்த பேரியக்கங்களின் இலக்கியக் கோட்பாட்டுப் பார்வைகளும் நம்பிக்கைகளும் இருக்கின்றன என்பதும் இன்னோர் உண்மை.
தமிழின் ஆதி இலக்கியங்களான சங்க இலக்கியங்களை வாசிக்கும் அல்லது ஆய்வு செய்யும் மாணவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் ஆகியோரின் நோக்கங்களைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால் இரண்டு முக்கியமான போக்குகளைக் கண்டறிய முடியும். சங்க இலக்கியங்கள் அன்றைய காலகட்டத்துப் பண்பாட்டு ஆவணங்கள் எனப் பேசும் போக்கு அவ்விருவகைப் போக்குகளில் ஒன்று. இப்போக்கு தான் தமிழின் பெரும்பான்மை போக்கு.அத்துடன் அதிகார அமைப்புகளின் ஆதரவு பெற்ற மைய நீரோட்டப் போக்கு கூட. பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலனியாட்சியாளர்களாலும், அவர்களின் சார்பாகப் பேசிய மொழி அறிஞர்களாலும் உருவாக்கப்பட்ட மொழிசார் அரசியலின் தொடர்ச்சியாகப் பின் காலனிய காலகட்டத்தில் அவ்வரசியல் உச்சநிலையை எட்டியது. இருபதாம் நூற்றாண்டில் மொழி சார்ந்த கருத்தியல்களையும் நம்பிக்கைகளையும் உருவாக்கி அரசியல் இயக்கங்களைக் கட்டி எழுப்பியதன் தொடர்ச்சியாக இலக்கியக் கோட்பாடுகள் முழுமையும் பயன்பாட்டுவாத நோக்கம் கொண்டனவாக மாற்றம் பெற்றன. இப்போக்கு முதலில் திராவிட இயக்கத்தவர்களாலும், பின்னர் பொதுவுடைமை இயக்கத்தவர்களாலும் உருவாக்கி வளர்க்கப்பெற்றது. எதிரும் புதிருமாக இவ்விரண்டு இயக்கங்களும் இலக்கியங்களை ஆய்வு செய்து முடிவுகளை முன் வைத்தன என்றாலும் அவை இரண்டும் பின்பற்றிய வாசிப்புக் கோட்பாடுகளும், திறனாய்வு முறைகளும் வெவ்வேறானவை அல்ல. அதிலும் குறிப்பாகச் சங்க இலக்கியங்களை ஆய்வு செய்து திராவிட இயக்க அறிவாளிகளும், அதன் ஆதரவுப் புலமையாளர்களும் அக்காலகட்டத்தைப் பொற்காலக் கருத்தியலுடன் இணைத்துப் பேசிய போது, அதனை மறுத்துப் பேச விரும்பிய பொதுவுடைமை இயக்கத்தின் அறிவாளிகளும் ஆதரவுப் புலமையாளர்களும் வர்க்க வேறுபாடுகள் நிரம்பிய காலகட்டம் என்னும் கருத்தியலுடன் இணைத்தனர். முடிவுகளை முதலில் தீர்மானித்துக் கொண்ட இருசாராருக்கும் பயன்படும் தகவல்களையும் நிகழ்வுகளையும் தங்களின் பனுவலாக்கத்தில் பொதிந்து வைத்திருந்தார்கள் என்பதுதான் பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் கவிதைகள் எழுதியுள்ளவர்களின் சிறப்புகள். அக்கவிதைகள் “ எந்தவித வேறுபாடுகளும் அற்ற பொற்கால வெளிப்பாடுகளே சங்க இலக்கியங்கள் ” எனச் சொன்னவர்களுக்கும், “இல்லை, இல்லை! பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய வர்க்கச் சமுதாயத்தின் பிரதிபலிப்பே சங்க இலக்கியங்கள்” எனச் சொல்ல விரும்பியவர்களுக்கும் அதே பிரதிகள் ஆதாரங்களாக இருந்தன என்பதைச் சிறப்புக் கூறாகத் தானே மதிப்பீடு செய்ய வேண்டும்.
உலக இலக்கியப் பார்வையோடு தங்களை இணைத்துக் கொண்டு தமிழின் சங்க இலக்கியங்களை ஆய்வுக் களமாகக் கருதும் ஆய்வாளர்களால் முன்னெடுக்கும் ஆய்வைப்போக்கை இரண்டாவது போக்கு எனச் சுட்டிக் காட்டலாம். தொடக்க நிலையில் இத்தகைய ஆய்வுகளே கல்விப்புல ஆய்வாளர்களில் சிலரால் (மு.வ.,தமிழண்ணல், கு.கோதண்டபாணிப் பிள்ளை) முன்னெடுக்கப்பட்டன என்றாலும், தங்களின் வழித் தோன்றல்களை அவர்கள் உருவாக்காமல் போனது மட்டுமல்லாமல் பெரும்பான்மை போக்கோடு தங்களை ஐக்கியமாக்கி அடையாளப் படுத்திக் கொண்டதால், அப்போக்கு இன்று கைவிடப் பட்ட ஆய்வு முறையாகத் தோற்ற மளிக்கிறது. ஆனால் அதுவே வளர்த்தெடுக்கப்பட வேண்டிய போக்கு எனச் சொல்வதில் எனக்குப் பின் யோசனையே கிடையாது. அப்படியான முயற்சிகளைப் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்ட உருவாக்கங்களில் ஈடுபடும் வல்லுநர்கள் உடனடியாக முன் எடுக்க வேண்டும் எனக் கூறவும் விரும்புகிறேன். அப்படிச் செய்யவில்லையென்றால், சங்க இலக்கியங்களை அதன் செவ்வியல் தன்மையோடு வாசிக்கவும், விவாதிக்கவும் வல்ல மாணவத் தலைமுறைகள் உருவாகாமல் தடுத்த குற்றத்தைச் செய்தவர்களாக ஆகிவிடுவார்கள்
கல்விப்புல ஆய்வுகளில் விரும்பப்படாத போக்காகவும், கல்விப்புலமல்லாத சொல்லாடல்களின் மரபு பற்றிய எதிர்மறைப் பார்வையோடும் அரைகுறைப் புரிதலோடும் கைவிடப்பட்ட ஒன்றாக இருக்கும் இத்திறனாய்வு முறை இன்னும் மறைந்து விடவில்லை என்பதை உணர்த்தும் விதமாக அமைந்த கட்டுரைகளின் தொகுப்பொன்றை அண்மையில் வாசித்து முடித்தேன். இலக்கிய ஒப்பாய்வு: சங்க இலக்கியம் என்னும் தலைப்பில் பேராசிரியர் அ.அ.மணவாளன் எழுதிய அக்கட்டுரைகளில் சிலவற்றை ஏற்கெனவே வெவ்வேறு தொகுப்புகளில் வாசித்திருக்கிறேன் என்றாலும் இப்போது முழுத்தொகுப்பாக வாசிக்கும் வாய்ப்பை நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் ஏற்படுத்தித் தந்துள்ளது. அத்தொகுப்பில்
1. பனம்பாரனாரின் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம்
2. தொல்காப்பியமும் அரிஸ்டாடிலின் கவிதையியலும்
3. சங்க இலக்கியக் கொள்கைகள்
4. அகப்பொருள் மரபும் திருக்குறள் காமத்துப்பாலும்
5. அகப்பொருள் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம்
6. அகப்பொருள் மரபுகளும் பக்தி இலக்கியங்களும்
7. அகப்பொருள் மரபுகளும் சிற்றிலக்கியங்களும்
8. சங்க இலக்கிய உவமைகளில் கற்பனை
9. சங்க இலக்கியத்தில் கைக்கிளைப் பாடல்கள்
10. வடமொழி இதிகாசப் பொருண்மைக்குச் சங்க இலக்கியத்தின் நன்கொடை
11. சங்க இலக்கிய உரைகள் - சில ஐயங்கள்
12. சங்க இலக்கியத்தின் மொழி பெயர்ப்பின் பங்கு
13. சங்க இலக்கியமும் காதா சப்த சதியும்
எனத்தலைப்பிட்ட 13 கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகள் திறனாய்வின் அடிப்படைச் செயல்பாடுகளான ரசனையைத் தூண்டுதல், பனுவல்களின் கட்டமைப்பு முறையைப் பகுப்பாய்வு செய்தல், இலக்கிய வரலாற்றில்(உள்ளூர் இலக்கிய வரலாற்றில் அல்ல; தேசிய மற்றும் உலக இலக்கிய வரலாற்றில்) சங்க இலக்கியங்களின் இடத்தை உறுதி செய்தல் என்ற மூன்று கூறுகளையும் முக்கியமானதாகக் கருதியுள்ளன என்பதை முக்கியமானதாக நினைக்கிறேன். காத்திரமான இலக்கியப் பனுவல்களைக் கொண்டிருக்கும் மொழிகளின் பொதுக்குணத்தோடு சங்க இலக்கியங்கள் எவ்வெவ்வகையில் பொருந்திப் போகின்றன என்பதைப் பேசும் கட்டுரைகளோடு சங்க இலக்கிய மரபு, பின் வந்த தமிழ் இலக்கிய மரபில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் விரிவாகப் பேசும் கட்டுரைகள் இத்தொகுப்பின் பாதியாக உள்ளன. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் ஆய்வாளர்கள் மட்டுமே படிக்க வேண்டிய கட்டுரைகள் அல்ல. தமிழ் மொழியைத் தனது வெளிப்பாட்டுச் சாதனமாகவும், தனது தன்னிலையை உருவாக்கிய கருத்தியல் சாதனமாகவும் நினைக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியவை எனக் கூறுவேன். பேராசிரியர் அ.அ. மணவாளரின் புலமைக்கு வணக்கங்கள்.

இலக்கிய ஒப்பாய்வு: சங்க இலக்கியம்
டாக்டர் அ.அ.மணவாளன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை -98
பக்.254. விலை.ரூ.120
============================================================= 
சாகித்ய அகாதெமி தமிழுக்குச் செய்த பணிகளில் இந்தத் தொகுப்பைக் கொண்டு வந்ததை முதன்மைப் பணியெனச் சொல்வேன். தமிழ்ப் பக்தி இயக்கம்/இலக்கியம் இருபெரும் போக்குகள் கொண்டது. கடவுள், அதன் வடிவம்,மனிதனுக்குக் கடவுளின் தேவை. இதன் மறுதலையாகக் கடவுளுக்கு மனிதர்களின் தேவை, தேவையை நிறைவேற்றிக் கொள்ள இருமுனைகளில் இருக்கும் ஆத்மாக்களும் மேற்கொள்ளும் முயற்சிகளும் உத்திகளும் சொல்லாடலாக அலையும் தளம் பக்தியின் தளம்.

இத்தளத்தை வைணவமாகவும் சைவமாகவும் பிரிப்பது புரிந்து கொள்ள நினைப்பதின் எளிய வெளிப்பாடு மட்டும்தான். பொருள்தேடும் வாழ்க்கை தரும்நெருக்கடியிலிருந்து தப்பித்து விடமுடியும் ;தப்பிக்க வேண்டும் என்பதைக் கவனமாகக் கொள்ளும் மனிதர்கள் உருவாக்குவது பக்தி என்னும் அரூபம்.பொருள் நிராகரிப்பு பக்தி கவிதைகளில் வெளிப்பட்டாலும், காதலையும் காமத்தையும் கடவுளிடமிருந்து எளிதாகப் பெற நினைப்பதைத் தமிழ்ப் பக்திக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.

அகமரபின் நீட்சியாகத் தமிழ்ப் பக்திக் கவிதைகளை வாசித்து அதன் அழகியலைப் பேசும் தமிழாய்வு மரபு வளர்த்தெடுக்கப்படவேண்டிய ஒன்று. அதனை இந்நூலில் கோடிட்டுக் காட்டியுள்ளார் பேரா.அ.அ.மணவாளன்.அவர் எழுதியுள்ள முன்னுரையை ஆங்கிலத்தில் எழுதி, தொகுப்பிலுள்ள கவிதைகளில் பாதியை மொழிபெயர்த்து தந்தாலே தமிழ்க்கவிதை மரபின் குறிப்பிட்ட காலப்பகுதி உலக இலக்கியத்தின் -முன் பகுதியாகிவிடும். முக்கியமான காலப்பகுதி துலக்கும் பெறும். 
கல்விப்புலத்தினர்கூட அதிகம் கவனிக்காமல் கைவிட்ட பக்தி கவிதைகளை வாசிக்க இத்தொகுப்பு உதவும். தேடிப் படித்துப் பார்க்கலாம்.

கருத்துகள்

முனைவர் மு.இளங்கோவன் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். பேராசிரியர் அ.அ.மணவாளன் அவர்களைப் போற்றி எழுதியுள்ள தங்கள் பதிவு கண்டு மகிழ்கின்றேன். அடக்கமாகவும், எளிமையாகவும் இருந்து அரிய தமிழ்ப்பணிகளைச் செய்துவரும் அ.அ.மணவாளன் அவர்களைத் தங்கள் வழியில் நானும் போற்றுகின்றேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் ஆய்வு மாணவனாக இருந்தபொழுது ஓர் இரவு எங்களுடன் அவர் கல்வியார்வம் பற்றி உரையாடிய நினைவு வந்துபோகின்றது.

மு.இளங்கோவன், புதுச்சேரி,இந்தியா
அ.ராமசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
மு.இளங்கோவன் அவர்களே. இது போற்றிக் கட்டுரை அல்ல. தனித்துவமான வேலைகளைச் செய்பவர்களைக் கவனிக்கத் தவறும் நமது நிகழ்காலம் பற்றிய வருத்தம். போற்றித் தன்மை கொண்டமொழி என்னிடம் இருந்தால் அதற்காக வருத்தப் படுவேன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்