வாவெல் கோட்டை: இரண்டாவது உலக அதிசயம்.



நாற்பது வயதுக்கு மேற்பட்ட போலந்துக்காரர்களின் மனதில் வார்சாவை விட க்ராக்கோவின் பெருமைகளும் காட்சிகளும் நிரம்பி வழிவதை அவர்களிடம் பேசும்போது உணரலாம். போலந்தின் வரலாறு, பண்பாடு, நிலவியல் அறிந்த நிகழ்காலத்து இளம்பெண்களும் பையன்களும் கூட க்ரோக்கோவைப் பற்றிய நினைவுகளில் மூழ்குவதைப் பார்த்திருக்கிறேன். என்னிடம் பயிலும் மாணவிகள் போலந்தில் பார்க்க வேண்டிய நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தை அந்த நகரத்திற்கே வழங்கினார்கள். முன்பு க்ராக்கோ தலைநகராக இருந்துள்ளது என்பதோடு இப்போதும் அந்நகரம் போலந்து நாட்டின் பண்பாட்டு நகரமாகக் கருதப்படுகிறது. ஏராளமான அருங்காட்சியகங்கள் (32 என ஒருவர் சொன்னார்) அந்நகரத்தில் உள்ளன. வார்சா பல்கலைக்கழகத்தை விடவும் க்ராக்கோவில் இருக்கும் ஜெக்லோனியன் பல்கலைக்கழகம் பழையது. இறையியல், தத்துவம், அறிவுத்தோற்றவியல் சார்ந்த பாடங்களைப் படிப்பதற்காக அய்ரோப்பிய நகரங்கள் பலவற்றிலிருந்து மாணாக்கர்கள் முன்பும் வந்திருக்கிறார்கள்:இப்போதும் வருகிறார்கள்.


போலந்திலிருந்து வாடிகன் நகரின் தலைவராக- போப்பாண்டவராகத் தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது ஜான் பால் இங்கு பட்டம் பெற்றவர்.. போலந்தின் பெரு நகரங்கள் ஒவ்வொன்றையும் தொட்டுச் செல்லும் விஸ்வா ஆற்றின் கரையில் இருக்கும் க்ராக்கோ உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் போது க்ராக்கோ நகரத்தை மட்டும் விட்டுவிடும்படி ஹிட்லர் சொன்னதாகச் செவிவழிச் செய்தி உலவுகிறது. போலந்தைப் பார்க்க வந்திருக்கும் மகள் சிநேகலதாவுக்கும் பேரன் நந்தாவுக்கும் அந்நகரத்தைக் காட்டி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்காகத் திட்டமிட்டுக் கிளம்பினோம். மார்ச் 30, வெள்ளி இரவு கிளம்பி, ஏப்ரல் 2 வரை அங்குத் தங்கியிருந்தும் எதையுமே பார்க்காமல் திரும்பினோம். மழையும் பனிப்பொழிவும் எல்லாத் திட்டமிடலையும் குலைத்துப் போட்டு விட்டன. மகள் சிநேகா நாடு திரும்புவதற்குள் க்ராக்கோவிற்குத் திரும்பவும் வரவேண்டும் என முடிவு செய்துவிட்டுப் போன காரிலேயே திரும்பி விட்டோம்.வரும்போது விழுந்த பனியின் தூறலும் வெண்படுகையும் மட்டுமே ஒரே ஆறுதல். 

ஜெக்லோனியப் பல்கலைக்கழக அரங்கம் 

திரும்பவும் க்ராக்கோவிற்குத் திட்டமிட்ட போது காரும் வேண்டாம்; ரயிலும் வேண்டாம். பேருந்தில் போகலாம் என முடிவு செய்தோம். மேதினம், போலந்து அரசியல் சட்டநாள் உள்ளடக்கிய விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்வது என முடிவு செய்து ஏப்ரல் 28 சனி பகலில் கிளம்பி பிற்பகலில் க்ராக்கோ போய்ச் சேர்ந்தோம்.போலந்துக்கு வந்தபின் இதுதான் முதல் நீண்ட நேரப் பேருந்துப் பயணம். போல்ஸ்கிபுஸ்.காம் என்ற பெயரில் பேருந்துகளை இயக்கும் அந்த நிறுவனத்தின் சொகுசுப் பேருந்துகள் நான் தங்கியிருக்கும் சிம்கோவிச்சிற்கு அருகிலிருக்கும் விலானோவ்ஸ்காவிலிருந்து தான் கிளம்புகின்றன. போலந்தின் பக்கத்து நாடுகளான செக்கோஸ்லோவ்கியா, ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், லித்வேனியா நாடுகளின் தலைநகர்களை நோக்கிச் செல்லும் பேருந்துகள் போலந்தின் முக்கிய நகரங்களின் வழியாகச் செல்கின்றன. தட்பவெப்பக் கட்டுப்பாட்டு, கழிப்பறை, இணையதளப் பார்வைக்குப் பயன்படும் கம்பியில்லா இணையத் தொடர்பு (wi-fy)வசதியுடன் அந்தப் பேருந்துகள் வசதியாகவே இருக்கின்றன. அவசரத்தேவைக்கு அதிகக் கட்டணம் என்ற விதியின்படி கட்டணமுறை பின்பற்றப்படுவதால் நாம் நம் வசதிப்படி தெரிவு செய்து கொள்ளலாம். ஒரே தூரத்துக்கு ஒரு பேருந்தில் ஒரே கட்டண விகிதம் என்று பழகிய இந்திய மனநிலைக்கு அது புதுமை. வாரக்கடைசி நாட்களுக்கு ஒருவிதக் கட்டணம் என்றால், வார நாட்களுக்கு வேறுவிதமான கட்டணங்கள். அதிகாலைக்கு ஒரு கட்டணம்; பிற்பகலுக்கு ஒரு கட்டணம் என மாறுதலுடன் கூடியது. இணையதளத்தில் தான் நாம் பயணச்சீட்டு பெற வேண்டும். பேருந்து கிளம்புவதற்குக் கால்மணி நேரம் முன்பு இருந்தால் போதும், பயணிகளின் சுமையை அடுக்கி அடையாளச்சீட்டு தருதல், பயணச்சீட்டு சரிபார்த்தல் என்ற வேலைகளை முடித்துவிட்டு ஓட்டுநரே வண்டியைக் கிளப்பி விடுகிறார். நடத்துநர் என ஒருவர் இல்லை. 

யுஸ்தினும் நானும் 

க்ராக்கோவை அடைந்த முதல் நாள் எங்கும் போகவில்லை. ஜெக்லோனியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியரான ராஜ கோபாலின் வீட்டில் ஓய்வு எடுத்து விட்டு அடுத்த நாள் சுற்றிப் பார்ப்பது என்பது திட்டம். முதல் நாள் எங்களோடு அப்பல்கலைக்கழக அருங்காட்சியகக் காப்பாளர் ஜுஸ்டனும், அடுத்த இரண்டு நாட்களுக்கு ராஜகோபாலின் மாணவி எமிலியா மாதவியும் எங்களோடு வருவதற்கு ஒத்துக் கொண்டிருப்பதாக ராஜகோபால் சொன்னார். 



பல்கலைக்கழகப் பூங்கா 

ஜுஸ்டன் பேரா.நாச்சிமுத்துவிடம் வார்சாவில் தமிழ்ப் படித்தவர். எமிலியா மாதவி 35 ஆண்டுகளுக்கு முன்பு போலந்துக்குப் போய் ஆனா என்றவொரு பெண்ணை மணந்து போலந்திலேயே தங்கி விட்ட ஜெகநாதன் என்னும் நாகப்பட்டணத்துக்காரரின் மகள். (மூன்று பெண் பிள்ளைகள், ஆண் பிள்ளையொன்றாகப் பெற்று இந்திய போலந்து இணைப்பாக வாழும் அவர் ஒவ்வொரு பிள்ளைக்கும் மாதவி, ஊர்மிளா, சாவித்திரி, மாதவன் என இந்தியப் பெயரைப் பாதியாகவும் போலிஷ் பெயரை இன்னொரு பாதியாகவும் வைத்திருக்கிறார். ஜெகநாதனைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது; ஆனால் தேவையில்லை; வேண்டாம் என அவர் அன்போடு மறுத்துவிட்டார். ஆகவே சொல்லாமல் விட்டு விடுவதே நாகரிகம் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்) 

பல்கலைக்கழகத்திற்குள் ஒரு பூங்கா 

முதல் நாள் எங்கள் க்ராக்கோவலம் பக்துலா அரங்க நிறுத்தத்தில் ஆரம்பித்தது. பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகக் காப்பாளர் யுஸ்தின் வழிகாட்ட பூங்காவின் வழியே பல்கலைக்கழகக் கட்டடங்கள் - நூலகம், பட்டமளிப்பு மண்டபம், தேவாலயம், பல்வேறு துறைகள் அமைந்திருக்கும் தெருக்கள் என ஒரு பெரும் நடை நடந்து வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வாவல் கோட்டையை நெருங்கியபோது மதியமாகி விட்டது. 

வாவெல் கோட்டை வாசல் 





கோட்டையின் உள் தோட்டங்கள் 

வாவல் கோட்டை உலக அதிசயங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது கோட்டை யின் உள்ளே இருக்கும் வனங்கள், கட்டிட வராந்தாக்கள், சிலைகள், போன்றவற்றைப் பார்க்கவும் படங்கள் எடுத்துக் கொள்ளவும் அனுமதியோ நுழைவுக் கட்டணமோ இல்லை. ஆனால் கோட்டைக்குள் இருக்கும் அருங் காட்சியகங்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் போய் வர நுழைவுக் கட்டணமும் நேரமும் உண்டு. அங்கிருக்கும் பொருட்களைப் படம் எடுக்க முடியாது. விலைமதிப்பில்லாத பொருட்கள் அடுக்கி வைத்திருப்பது ஒரு காரணம். ஆடைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள். இருக்கைகள், இருப்பிடங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் என ஒவ்வொன்றும் இன்றைய மதிப்பில் பல ஆயிரம் கோடிகள் மதிப்புக்கொண்டவைகளாக இருக்கின்றன. 

கோட்டையின் வெளிப்புறத்தோற்றம் 


சுரங்கப் பாதைக்குள் நந்தா 


சுரங்கப் பாதைக்குப் போகும் பாதை 

வரலாற்றையும் அழகியலையும் பதிந்து வைத்திருக்கும் அருங் காட்சியகங்கள் பலவிதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக ஒரே நுழைவுச் சீட்டைத் தந்தாலும் ஒவ்வொரு மண்டபத்துக்குள்ளும் நாம் போவதற்கான நேரம் குறித்துக் கொடுத்து விடுகிறார்கள். அந்தந்த நேரத்தில் அவர்கள் உள்ளே போக வேண்டும். நாம் நுழையும் நேரத்தில் இருக்க வேண்டியவர்கள் மட்டுமே அந்த மண்டபத்திற்குள் இருப்பார்கள். பாதுகாப்பைக் கருதிச் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டில் ஒரே இடத்தில் கூட்டம் அதிகமாகி விடுவதைத் தவிர்க்கும் நோக்கமும் இருக்கிறது ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பார்வை யாளர்களை அனுமதிக்கிறார்கள். படிக்கட்டுகள் வழியாக நுழைந்து சுரங்கப் பாதை வழியாக வெளியேறி விஸ்துலா ஆற்றின் கரையில் சூரியக் குளியல் செய்து கொண்டிருக்கும் குடும்பங்களையும் இணைகளையும் பார்த்தபடி நடந்து முடித்தபோது பிற்பகல் நாலு மணியாகி விட்டது. போலந்தின் பண்பாட்டுத் தலைநகரமான க்ராக்கோவில் முதல் பார்த்த படங்களைப் பாருங்கள். இரண்டாவது நாள் காட்சிகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்:

கருத்துகள்

மணிவானதி இவ்வாறு கூறியுள்ளார்…
போலந்தை பற்றிய அறிய செய்திகள். அந்த நாட்டிற்குச் சென்று வந்ததுபோன்ற ஒர் உணர்வை இக்கட்டுரையின் மூலம் நான் உணர்கிறேன். மேலும் அந் நாட்டுப் புகைப்படங்கள் அருமை.
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.
நந்தினி மருதம் இவ்வாறு கூறியுள்ளார்…
அழகாகவும் சுவையாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.
தொடர்ந்து பதிவுகள் எழுதுக
நாங்களும் போலந்து நாட்டிற்குச்
சென்று வந்தது போல மகிழ்ந்துகொள்வோம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்