தமிழில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள்- முன்னும் பின்னும்

தமிழில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு பல்வேறு திசை வழிகளில் சென்று கொண்டிருக்கிறது.நாட்டார் வழக்காற்றியலைப் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள் உள்ளிட்ட வாய்மொழி மரபு (Oral Tradition) எனவும், சடங்கு சார்ந்த, பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த கூத்து, ஆட்டமரபுகள் அடங்கிய கலைகள் (Folk Arts) எனவும், சமய நம்பிக்கையோடு, பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள், அவை சார்ந்த நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், ஊர்ப்பெயர், மக்கட்பெயர் உள்ளிட்ட பண்பாட்டுக் கோலங்கள் (Customs and Manners) எனவும் பகுத்துக் கொண்டு ஆய்வுகள் நடைபெறுகின்றன.
முறைப்படுத்து வதற்காகவும், ஆய்வு முறைகளுக்காகவும், இப்படிப் பிரிக்கப்பட்டாலும் நாட்டார் வழக்காற்றியல் அனைத்திற்கும் பொதுவான கூறு ஒன்று உண்டு. நிலம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்ட மக்களின் வாழ்க்கை முறைகளிலிருந்து பிரிக்க முடியாதவை இவ்வழக்காறுகள் என்பதுவே அப்பொதுக்கூறு.1871 இல் வெளிவந்த தென்னிந்திய நாட்டுப்புறப்பாடல்கள் (The Folksongs of South India) என்ற நூலின் ஆசிரியரான சார்லஸ் கோவரிடமிருந்து (Charles Gover) தொடங்கும் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு 1960 களின் இறுதிவாக்கில் கேரளப்பல்கலைக் கழகத்தில் கே.பி.எஸ்.ஹமீதும். பி.ஆர்.சுப்பிரமணியனும் முறையே தங்களது எம்.லிட்., பிஎச்.டி., பட்டங்களுக்காக ஆய்வு செய்யத் தொடங்கியது வரை பல்வேறு துறைசார்ந்தவர்களின் கவனத்துக்குரியதாகவே இருந்துள்ளது. [P.R,Subramanian- Folklore of South India-Tamil Nadu (The Structure of Morning songs and Lullaby)- Kerala-Ph.D,1969 & K.P.S.Hameed –Folklore in Tamil Nadu (Nanjil Nadu)-M.Litt.1961 ] அயல் நாட்டினரான பெர்சி மார்க்யூன், எட்கர் தர்ஸ்டன், ஹென்றி வொயிட்ஹெட், இ.ஜே. ராபின்ஸன், ஜான் லாசரஸ், பவுல் ஸ்கவுல்ச் முதலானவர்களும், நடேச சாஸ்திரி, கி.வ.ஜகந்நாதன், மு.அருணாசலம், அன்னகாமு, அ.மு.பரமசிவானந்தம், தமிழண்ணல், நா.வானமாமலை முதலான தமிழர்களும் தமிழ் நாட்டார் வழக்காற்றியலோடு ஏதாவதொரு வகையில் தொடர்பு கொண்டவர்களாக இருந்தனர். இவர்களில் கல்வித்துறை சார்ந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. 

இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தமிழ்நாட்டார் வழக்காற்றியலோடு பிற துறையினரைத் தொடர்புபடுத்திச் சொல்ல முடியாத அளவுக்குக் கல்வித்துறை ஆய்வாளர்கள் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் தமிழியல் துறை சார்ந்தவர்கள் முழுமையும் நாட்டார் வழக்காற்றியலைக் கைப்பற்றியுள்ளனர். பல்கலைக் கழகத் தமிழியல் துறையினரும் அவை சார்ந்த ஆய்வு நிலைக் கல்லூரித் தமிழ்த்துறையினரும் முழுமூச்சோடு ஈடுபட்டுள்ளனர். தமிழகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் எம்.பில்., பிஎச்.டி., பட்டங்களுக்குப் பதிவு செய்து கொண்டோர்களின் தலைப்புகளைத் தொகுத்துப் பார்க்கும்போது நாட்டார் வழக்காற்றியலின் அகலமான வளர்ச்சி விளங்கும். எண்பதுகளிலும், தொண்ணூறுகளின் தொடக்க ஆண்டுகளிலும் தமிழியல் துறை ஆய்வேடுகளில் மூன்றில் ஒரு பங்கு ஆய்வேடுகள் நாட்டார் வழக்காற்றியல் சார்ந்தனவாகவே இருந்தன. குறிப்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளை வேகப்படுத்தி எண்ணிக்கையை அதிகமாக்கியுள்ளது. [1982-83 ஆம் கல்வி ஆண்டில் எம்பில் ஆய்வாளர்கள் அனைவரும் ஊர்ப் பெயராய்வு செய்யப்பணிக்கப்பட்டனர்.அதனையடுத்த ஆண்டுகளில் குலச் சடங்குகள், சிறுதெய்வங்கள், நம்பிக்கைகள் எனத்திட்டமிட்டு நாட்டுப்புறவியலில் இறங்கியது. 1982 -1987 ஏப்ரல் வரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முழு நேர பிஎச்.டி. பட்ட ஆய்வுக்காகப் பதிவு செய்தவர்கள் 16 பேர். அதில் நாட்டார் வழக்காற்றியலை ஆய்வுக்களனாகக் கொண்டவர்கள் 7 பேர்] இவ்வெண்ணிக்கைப் பெருக்கத்திற்குப் பட்டம் பெற வேண்டிய தேவையும் அவசரமும் காரணங்களாக உள்ளன. அதற்கேற்ற ஆய்வுக்களனாக நாட்டார் வழக்காற்றியல் மாறிக் கொள்ளும் –மாற்றிக் கொள்ளும் இயல்பினதாகக் கருதப்படுகிறது.

ஆய்வாளர்கள் பெறவிரும்பும் பட்டங்களுக்குத் தரப்படும் கால அளவுக்கேற்ப ஆய்வு எல்லையை, ஆய்வுப் பொருளை, ஆய்வு நோக்கத்தைச் சுருக்கிக் கொள்ளவும், விரித்துக் கொள்ளவும் வசதியுடையதாக நாட்டார் வழக்காற்றியலைக் கருதுகின்றனர் எனத் தோன்றுகிறது. அத்தோடு,‘பிள்ளையார் அச்சில் பிள்ளையார் பிடிப்பது போல’ எளிதான வழிமுறைக்கு இது களனாகவும் கருதப்படுகிறது. ஒரு மாவட்டத்தின் ஊர், பெயர்கள் முழுவதும் பிஎச்.டி., பட்டத்திற்கு ஆய்வு செய்யப்பட்டு விட்ட நிலையில் அம்மாவட்டத்திற்குள் அடங்கிய வட்டாரங்களை ஆய்வுக் களனாகக் கொள்வதும், குலச்சடங்குகள், நம்பிக்கைகள் பற்றிய ஆய்வேடுகளில் பின்பற்றப்பட்டுள்ள ஆய்வு முறைகளும் மேற்கூறிய கருத்தை வெளிப்படுத்துகின்றன.

தமிழகம் முழுவதும் சிறு தெய்வ வழிபாடுகள் பெரும்பான்மையும் மாற்றமின்றி இருக்கும் நிலையில் மாவட்டங்கள், வட்டங்கள் வாரியாக ஆய்வு செய்வதும், பழமொழிகளின் பொதுவான இயல்புகளைத் தொடக்க நிலை ஆய்வுகளே வெளிப்படுத்தியபின் அதனையும் ‘பூகோள ரீதியாக’ப் பிரித்து ஆய்வு செய்வதும் அத்தகைய போக்குகளே. நாட்டார் வழக்காற்றியலின் அனைத்துப் பிரிவுகளிலும் இத்தகைய ஆய்வுகளே தொடர்ந்து செய்யப்படுகின்றன. என்றாலும், இதுவரை நடந்து வந்துள்ள ஆய்வுகள் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் குறித்த ஒட்டுமொத்த மதிப்பீட்டினைத் தந்துள்ளன. அத்தோடு ஆய்வாளர்களிடம் நாட்டார் வழக்காற்றியல் குறித்துக் காணப்படும் இருவித மனநிலைகளையும் வெளிப்படுத்தியுள்ளன.

முதல் மனநிலை: நாட்டார் வழக்காற்றியல் நம் பழைமையின் சின்னங்கள்; பண்பாட்டின் வெளிப்பாடுகள்; அவை அழிந்து போவது தமிழரின் சொத்து பறி போவது போலானது. எனவே அவற்றைத் தேடிப்பிடித்து, பாதுகாத்து வைக்க வேண்டியது ஆய்வாளர்களின் கடமை. அதை முறையாகச் செய்தாலே போதுமானது என நினைக்கும் மனநிலை. இது பெரும்பான்மையுமான மனநிலை.

இரண்டாவது மனநிலை: நாட்டார் வழக்காற்றியலைப் பழைமையின் சின்னங்களாக, பண்பாட்டின் வெளிப்பாடுகளாகவே இரண்டாவது வகை மனநிலையினரும் கருதுகின்றனர் ஒரு வேறுபாட்டுடன். இவர்கள் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதைவிடவும், ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்பதையே முக்கியமாக நினைக்கின்றனர். அதன் மூலம் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையினைப் புரிந்து கொள்ள வேண்டும்; மாறிவிட்ட நம் வாழ்க்கை முறையின் வேறுபாடுகளை ஒத்துப் பார்க்க வேண்டும். மாற்றத்திற்கான காரணிகள் எதுவெனக் காண வேண்டும்; அதிலிருந்து நாம் மேலும் முன் செல்ல உத்வேகம் கொள்ள வேண்டும் என்பதிலேயே அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இதற்காகவே இவ்வாய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதில்லாமல் பழைமையின் மீது கொண்ட காதலினால் ஆய்வு மேற்கொள்ளுதல் என்பது அவசியமற்றது என்கின்றனர். இதனை நாட்டுப்புறவியல் ஆய்வுகளுக்கு மட்டும் உரியதாக அவர்கள் கருதவில்லை. இலக்கியம் உள்ளிட்ட அனைத்துக் கலைத்துறைகளுக்கும் பொருந்துவது எனக் கருதுகின்றனர்.
தமிழ்மொழி, தமிழ் இலக்கிய ஆய்வுகளைவிடவும் சமூகவியல் ஆய்வோடு நெருங்கிய தொடர்புடைய நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு, தமிழியல் ஆய்வுகளுள் ஒன்றாகக் கருதப்படுவதும், ஆய்வாளர்களிடம் காணப்படும் இருவிதமான மனநிலைகளில் முதலாவது போக்கு கல்வித்துறையில் பெரும்பான்மையாக இருப்பதுவும் ஏதோ ஒரு தற்செயலான நிகழ்வன்று. முதலாம் உலக நாடுகளின் தலைமை நாடான அமெரிக்காவில் மானிடவியலின் ஒரு பிரிவாக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பல்கலைக்கழகங்கள் தம் நாட்டின் நாட்டார் வழக்காற்றியலையும், மூன்றாம் உலக நாடுகளின் நாட்டார் வழக்காற்றியலையும் ஆய்வு செய்தன. இதற்கு அந்நாட்டு ஆய்வாளர் களின் ‘ தெரிந்து கொள்ளும் ஆர்வம்’ காரணமாகச் சொல்லப் படுவதுண்டு. ஆனால் அதைவிடவும் வேறொரு காரணம் இருந்தது. அது அமெரிக்க அரசின் புதுக்காலனியக் கொள்கை (Neo- Colonialism) .

மூன்றாம் உலகநாடுகளைத் தனது புதுக் காலனிகளாக மாற்ற நினைத்த அமெரிக்கா, அவற்றின் கலாச்சார அமைப்புகளைப் புரிந்து கொள்ள முயற்சித்தது. அதன் பகுதியாகப் பல்கலைக்கழகங்களில் மூன்றாம் உலக நாடுகள் பற்றிய படிப்புகளுக்கும், ஆய்வுகளுக்கும், ஊக்கமும், ஆதரவும் அளித்தது. வெளிநாட்டு வணிகத்தில் ஈடுபட்ட அமெரிக்க வணிகக் கம்பெனிகளும் இவ்வாய்வுகளுக்குப் பண உதவி செய்தன; செய்கின்றன. போர்டு நிதி நிறுவனம், ராக்பெல்லர் நிதி நிறுவனம் போன்றன அவற்றில் முக்கியமானவை.

இவ்வகையான நிதி நிறுவனங்களின் உதவிகளைப் பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களே மூன்றாம் உலக நாடுகளின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு முறையியலை (Research Methodology) வகுத்துக் கொடுத்தன. அம்முறையியல் பழைமையானவற்றைத் தேடவும், பாதுகாக்கவும் பெருமைப் படவும் தூண்டின. அதே நேரத்தில் அமெரிக்க அறிவாளிகளுக்கும், மூன்றாம் உலக நாடுகளின் சமூக அமைப்பைப் புரிந்து கொள்ளவும் உதவின. அதன்வழி அந்நாடுகளின் கலாச்சாரப் புதையல்களைக் காப்பவர்களாகக் காட்டிக் கொள்ளவும் முயன்றன. பழைமையை நினைவூட்டுவதன் மூலம் அம்மக்களைப் பழைமையின் மீது பிடிப்புக் கொண்டவர்களாக மாற்ற இவ்வாய்வுகள் உதவும் என நம்பினர். இந்நோக்கத்தை நிறைவேற்றவே அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தெற்காசிய நாடுகள் துறை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் துறை, லத்தீன் அமெரிக்க நாடுகள் துறை, ஆப்பிரிக்க நாடுகள் துறை முதலியன ஏற்படுத்தப்பட்டன. அத்துறைகள் இப்படிப்புகளுக்கெனத் தனியான இதழ் களையும் (Journals) வெளியிட்டன. அந்தத் துறைகளும், இதழ்களும் மூன்றாம் உலக நாடுகளின் நாட்டார் வழக்காற்றியலுக்கு – ஆய்வாளர் களுக்குக் கற்றுத் தந்த முறையியல் தேடுவது, தொகுப்பது என்பதோடு பகுப்பாய்வு செய்வது என்பதையும் வலியுறுத்தியது. இப்பகுப்பாய்வின் மூலம் வகைப்படுத்துவதிலும், உட்பிரிவுகளைக் கண்டறிவதும் மட்டுமே முடிந்தது.

இந்த இடத்தில் முன் நிகழ்வு ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மேலே குறிப்பிட்ட ஆய்வுகளில் புதுக்காலனியவாதிகளின் நலன்கள் உட்பொதிந்திருந்தன என்றால், முந்திய நிகழ்வில் காலனியவாதிகளின் நலன்கள் உட்பொதிந்து கிடந்தன. இதன் ஆரம்ப கர்த்தாவாக கால்டுவெல் பாதிரியைச் சொல்லலாம். 1856 இல் வெளிவந்த திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (Comparative Grammar of Dravidian Languages) என்ற நூல் காலனியவாதிகளின் நலனில் அக்கறை கொண்டதாக வெளிவந்தது. இதே நோக்கத்தோடுதான் எட்கர் தர்ஸ்டன், கில்பர்ட் ஸ்லேட்டர் போன்றோரின் ஆய்வுகளும் இருந்தன எனக் கொள்வதில் தவறொன்றும் இல்லை. இவ்வாய்வுகளைப் பற்றிக் கூறும்பொழுது, “ தமிழிலக்கிய இலக்கண ஆய்வுகளுக்கு இனம், மொழி, சாதி, பிரதேசம் என்பன முக்கியமான கருத்துக் கூறுகளாயமைந்தன” என்று கூறிவிட்டு, “ இந்தியாவிலே தமது ஆட்சியை வலுப்படுத்தி வந்த ஏகாதிபத்தியவாதிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கடைப்பிடித்த பிரித்தாளும் சூழ்ச்சியும், ஆரிய- திராவிடப் பிரச்சினை உருவாகவும் பூதாகரமான வடிவம் பெறவும் ஏதுவாயமைந்தது” என்று அந்த ஆய்வுகளின் விளைவுகளையும் எடுத்துக்காட்டுவார் கலாநிதி க.கைலாசபதி. இவ்விளைவுகளின் தொடர்ச்சியாகவே பெ.சுந்தரம்பிள்ளை, பண்டிதர் சவுரிராய பிள்ளை, சுவாமி வேதாசலம் பிள்ளை ( மறைமலையடிகள்), கே.என்.சிவராஜபிள்ளை, வெ.ப.சுப்பிரமணிய முதலியார், தா. பொன்னம்பலம் பிள்ளை, பி.டி.சீனிவாச ஐயங்கார், கா.சுப்பிரமணிய பிள்ளை, ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை, ஜே.எம். நல்லசாமிப் பிள்ளை முதலிய முந்திய தலைமுறைத் தமிழ் ஆர்வலர்களையும், ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, கா.அப்பாதுரை, தேவநேயப் பாவாணர், சி.இலக்குவனார், மு.வரதராசனார் முதலிய பிந்திய தலைமுறை எழுத்தாளர்களின் ஆய்வுகளையும், கணக்கில் கொள்ள வேண்டும் எனக் கைலாசபதி எடுத்துக்காட்டியுள்ளார். ( கோ.கேசவனின் மண்ணும் மனித உறவுகளும் என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில்) இது நிற்க.


மூன்றாம் உலக நாடுகளின் நாட்டார் வழக்காற்றியலுக்குப் பகுப்பாய்வு முறையைச் சிபாரிசு செய்த அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படித்த பணியாற்றிய அனுபவம் உடையவர்கள் பேராசிரியர்கள் வ.அய்.சுப்பிர மணியனும், பேரா. முத்துச்சண்முகனும் [.வ.அய். சுப்பிரமணியன் -1956 இல் அமெரிக்கா சென்று இந்தியானா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., பட்டம் பெற்றவர். முதல் நாட்டார் வழக்காற்றியல் டாக்டர் பட்ட ஆய்வுக்குக் கேரளப் பல்கலைக்கழகத்தில் வழி செய்தவர். முத்துச் சண்முகன் –சிறப்பு நிலைப் பேராசிரியராக இருமுறை அமெரிக்கா சென்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியலை விருப்பப்பாடமாக ஆக்கக்காரணமானவர்] முறையே கேரள, மதுரைப் பல்கலைக்கழகங்களில் தமிழியல் துறையில் தலைவர்களாக இருந்த இவர்களிருவருமே தமிழ் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்தனர் என்பது வரலாற்றுண்மை. இந்த வரலாற்றுண்மை தெரியும்பொழுதே முன்னர் குறிப்பிட்ட ‘ தற்செயல் நிகழ்வன்று’ என்ற சொற்றொடரின் உண்மை புரியும்.

தமிழ் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் சிறுபான்மையினதாகக் காணப்படும் இரண்டாவது மனநிலையினரின் முன்னோடியாகக் கல்வித்துறை சாராத பேராசிரியர் நா.வானமாமலையைக் குறிப்பிடலாம். தமிழக மாவட்டங்களில் பலவற்றிலிருந்தும் பாடல்களையும் கதைப்பாடல்களையும் தொகுத்துப் பதிப்பித்துள்ள நா.வா.வின் ஆய்வுப்பணி நாட்டார் வழக்காற்றியலில் குறிப்பிடப் படவேண்டிய ஒன்று. இவரின் ஆய்வு முறையியலைப் பின்பற்றி ஆய்வு செய்த கல்வித்துறை ஆய்வாளர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமானதே. ஆ.சிவசுப்பிரமணியன், ஆறு.இராமநாதன் முதலான சிலரைக் குறிப்பிடலாம்.

நாட்டார் வழக்காற்றியலின் பிறதுறைகளில் அதிகம் தொழிற்பட்ட பகுப்பாய்வு முறை நாட்டார் கலை வடிவங்களான கூத்து, ஆட்ட மரபுகள் பற்றிய ஆய்வுகளில் அதிகம் தொழிற்படவில்லை. முழுமையாக இல்லாவிட்டாலும் நாட்டார் கலைகள் பற்றிய ஆய்வில் முன்னர்க் குறிப்பிட்ட சிறுபான்மை மனநிலையே பெரும்பான்மையினதாக இருக்கிறது. கலைகள் பற்றிய ஆய்வு செய்தவர்களில் பெரும்பாலோர் பகுப்பாய்வு என்பதை மீறி, அதன் பயன்பாடு – நிகழ்காலச் சமூகத்திற்குரியது தானா? எனச் சிந்தித்துள்ளனர். மு.இராமசுவாமி, (தமிழகத்தில் தோற் பாவை நிழற்கூத்து) அ.அறிவுநம்பி ( தமிழகத்தில் தெருக்கூத்து) முதலான பிஎச்.டி. பட்ட ஆய்வாளர்களேயன்றி, எம்.பில்., பட்டத்திற்கு ஆட்டங்களை ஆய்வுப்பொருளாகக் கொண்டவர்களில் சிலருங்கூட அதன் பயன்பாடு, தோற்றம், மக்கள் தொடர்பு என்பன பற்றிச் சிந்தித்துள்ளனர்.

நாட்டார் கலைகள் பற்றிய ஆய்வாளர்களுக்கு இச்சிந்தனை தோன்றியது கூட ஒரு நிர்ப்பந்தத்தின் விளைவே. பாடல்கள், கதைகள், விடுகதைகள், பழமொழிகள், கதைப்பாடல்கள் முதலியன பாதுகாப்பதற்கு எளிதானவை. பதிவு நாடாக்களில் பதிவு செய்து வைத்து விடலாம். நம்பிக்கைகள், சடங்குகள் முதலானவற்றைக் கேட்டு, பார்த்து எழுதி வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஆட்டங்களும் கூத்துக்களும் அத்தகையன அல்ல. குறிப்பிட்ட சமூகத்தினரின் வழிபாட்டோடு வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்வனவாகவும் இருந்தவை. சிலருக்கு முழுநேரத் தொழிலாக விளங்கியவை. இந்நிலையில் அக்கலை வடிவங்களைப் பாதுகாப்பது என்ற முயற்சி, அதனைக் கொண்டுள்ள மனிதர்களைக் காப்பது என்பதிலே முடியும். அது ஆய்வாளன் என்ற தனிநபரால் ஆகக் கூடிய காரியமன்று. பெரும் நிறுவனங்களையும் குறிப்பாக அரசையும் பொறுத்தது.

சமூக அமைப்பும் அதனைத் தீர்மானிக்கின்ற உற்பத்தி முறையும் மாறி வருகின்ற நிலையில் அரசே முனைந்தால் கூடக் கலை வடிவங்களைக் காப்பது என்ற முயற்சி இயலாத ஒன்றே. மக்களின் பொழுதுபோக்கு முறைகளும், அம்சங்களும் மாறிவிட்ட நிலையில் ஆட்டமும், கூத்தும் இருந்த இடத்தில் திரைப்படமும், தொலைக்காட்சியும் வந்துவிட்ட நிலையில் பழைய கலைவடிவங்களின் சிதைவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் தான் கலைகள் பற்றிய ஆய்வாளர்கள் பாதுகாப்பது, பகுப்பாய்வு செய்வது என்பதை விட்டுவிட்டு அதன் வடிவத்தைப் புரிந்து கொள்ள முயன்றனர் எனலாம். நவீன நாடகம், திரைப்பட வடிவங்களில் பழைய மரபுக்கலைகளின் உத்திகளைப் பயன்படுத்த முனைகின்றனர். அதற்கான திசைவழியிலேயே கலைகள் குறித்த ஆய்வு செல்ல முடியும்; செல்ல வேண்டும்.


அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் ஆய்வு முறையியலை விட்டு வேறுதடம் பிரிந்து கலைகள் பற்றிய ஆய்வுகளையும், பகுப்பாய்வுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இல்லாமல் இல்லை. தனியொரு ஆய்வாளனால் கலைகளைப் பாதுகாப்பது இயலாது என்பதை மனதில் கொண்டு, அப்பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள சில நிறுவனங்கள் முன் வந்துள்ளன. தெருக்கூத்தின் மரபுகளைப் புரிந்து கொண்டு, நவீன நாடகத்தில் பயன்படுத்தும் வழிகள் சிந்தித்தவர் ந.முத்துசாமி. கல்வித்துறை சாராத இவர் சார்ந்துள்ள கூத்துப்பட்டறை என்னும் நவீன நாடகக் குழுவிற்கு ஃபோர்டு நிதி நிறுவனம் உதவி செய்தது. தென்னாற்காடு, வட ஆற்காடு மாவட்டக் கலைஞர்களை ஆதரிக்கவும் பாதுகாக்கவும் கோடுலாண்டு என்ற நிறுவனம் முன் வந்தது. இதன் சார்பில் கூத்து பற்றி ஆய்வு செய்த சிலரின் நிபுணத்துவத்துவ உதவியோடு கூத்து விழாக்கள் நடைபெற்றன. சில குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவைகளைப் பாதுகாக்க கோடுலாண்டு முயற்சி எடுத்து வருகிறது.(என்றும் வாழும் தெருக்கூத்து என்றொரு நூல் கோடுலாண்டு வெளியீடாக வந்துள்ளது)

மதுரை இறையியல் கல்லூரி, தகவல் தொடர்புத்துறை என்னும் படிப்பில் நாட்டார் கலைகளை முக்கிய பாடமாக வைத்துள்ளது. நாட்டார் வழக்காற்றியலே இன்றைய இந்தியச் சூழலில் சரியான மாற்று வடிவம் என்கிறது[இந்நிறுவனத்தைச் சார்ந்த தியாபலஸ் அப்பாவு என்பவர் (Folklore for Change) என்றொரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார்].

 பாளையங்கோட்டையிலுள்ள சேவியர் கல்லூரி நாட்டார் வழக்காற்றியலை முதுகலைப் பாடமாக ஆக்கியுள்ளது. அதிலும் நாட்டார் கலைகள் முக்கிய பாடங்கள், நாட்டார் கலைகள் பற்றிய ஆய்வில் சிறப்பான ஈடுபாடு காட்டும் இந்நிறுவனங்கள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளிடமிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பண உதவி பெறுகின்றன என்பது வெளிப்படை. இப்பண உதவிகள் கலைகள் பற்றிய ஆய்வு முறையியலை மாற்றம் செய்யவும் கூடும். ஆனாலும், அம்மாற்றங்கள் முழுமையாகச் சாத்தியமானதல்ல. வாழ்க்கை முறைகள் மாறிவிட்ட நிலையில் அக்கலை வடிவங்களைப் பார்வைப் பொருட்கள் (showcase articles) என்ற அளவிலேயே பாதுகாக்க முடியும். கூத்துப் பட்டறையின் பராமரிப்பில் தெருக்கூத்து இத்தகைய தன்மையை அடைந்து விட்டது எனலாம். உயர்மட்ட மக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் கூத்துக் காட்சிகள் ஏற்பாடு செய்தல் என்ற நிலையிலேயே செயல்பட முடிந்துள்ளது. பரந்து பட்ட மக்களுக்கான கலைவடிவமாக இருந்த கூத்து, குறிப்பிட்ட மட்டத்தினரின் (Elite) கலைவடிவமாக மாற்றம் பெற்று வருகிறது. இன்றைய சூழலில் இதுவே நிகழும். இந்நிலையில் சுயமான ஆய்வாளனும், பல்கலைக்கழகங்களும் நாட்டார் வழக்காற்றியலுக்கு ஆற்ற வேண்டிய பங்கு நிரம்பவுண்டு. பகுப்பாய்வு என்னும் முறையியலை விலக்கிவிட்டு, புதிய முறையியலைக் கைக்கொள்ள வேண்டும். பழைய கலாசாரத்தின் மரபுகளின் தன்மைகளை உணர்வது என்ற அளவில் அதனை ஆய்வு செய்ய வேண்டும். நாட்டார் வழக்காறுகள் தோன்றிய கால இடப் பின்னணிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் வழிப் புதிய சமூகத்தில் – மக்கள் வாழ்க்கை முறைக்கு அவற்றின் பயன்பாடு பற்றிச் சிந்திக்க வேண்டும். இயலுமானால் பயன்படுத்தலாம். இல்லையென்றால் விட்டு விடுவதில் தவறொன்றும் இல்லை.
=================================================================================
இக்கட்டுரையில் பலரின் பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்வது குற்றம் சுமத்துவதற்காகவோ, பாராட்டுவதற்காகவோ அன்று. ஆய்வு வரலாற்றில் முக்கிய கட்டங்களை நகர்த்தியவர்கள் என்பதற்காக மட்டுமே ஆராய்ச்சி: 1988 ====================================================================

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்