ஆடிய காலும் பாடிய வாயும்


லீணா மணிமேகலையை நோக்கிச் சுட்டு விரலை நீட்டிய கண்ணனைக் காணாமல் போகச் செய்யும் விதமாக ஜெயமோகன் வீசிய அம்புகள் நாலாபக்கமும் பாய்ந்து கொண்டிருந்த போது கை பரபரப்புடன் அரித்தது.
ஆனால் இங்கு வார்சா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் நடக்கும் காலம். நம்மூர் போலத் தாளை மாணவர்கள் பக்கம் வைத்து விட்டுக் கண்காணிப்பு வேலை செய்ய முடியாது. பாதி எழுத்துத் தேர்வு; பாதி செய்முறைத் தேர்வு என்பதால் மாணவிகளைத் தமிழ் பேசச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே பின் வாங்கி விட்டேன்.


பின் வாங்க இது மட்டுமே காரணமல்ல. ஜெயமோகன் சொல்வது போல அந்நிய நிதிகள் நம் நாட்டு ஆய்வுகளைக் கட்டமைக்கின்றன எனச் சொன்னவுடனேயே அவர் ஆதரிக்கிற எல்லாவற்றையும் நானும் ஆதரிக்கிறேன் என்பதாகப் பாவனை செய்து கொண்டு கிடைக்கப் போகும் அர்ச்சனைகளும் பட்டங்களும் கூடப் பின்வாங்கலின் காரணங்களாக இருந்தன. போலீஸ் நடத்தும் என்கவுண்டர் கொலைகள் ஒருவிதத்தில் தவிர்க்க முடியாதவை எனவும், இலங்கைக்குச் சென்ற இந்திய ராணுவம் அமைதிப்படையாகத் தான் இருந்தது; வன்முறையில் – குறிப்பாகப் பாலியல் வல்லுறவுகளில் ஈடுபடவில்லை என்றெல்லாம் எழுதும் ஜெயமோகனின் அணியின் தளபதியாக என்னை நிறுத்திக் கட்டங்கட்டுதல் நடக்கும் என்பதை நானறிவேன். ஆனால் நான் இப்போது பதிவேற்றும் கருத்துகள் எதுவும் இப்போது எழுதியவை அல்ல. 1988,1998,2008 எனப் பத்தாண்டு இடைவெளிகளில் திரும்பத்திரும்பச் சொன்னவை.


குறிப்பாகப் பல்கலைக்கழக ஆய்வுகளை மையப்படுத்திப் பேசும் எனது கட்டுரைகள் ஜெயமோகன் முன் வைக்கும் ஒரு கருத்தோடு உடன் பட்டு நிற்கின்றன. நிதியுதவிகள் ஆய்வாளனின் நோக்கத்தைத் தீர்மானிக்கின்றன; நிதி மூலதனங்களை ஆய்வுகளுக்கு வழங்குபவர்களுக்கு அரசியல், வியாபார நோக்கங்கள் இருக்கின்றன என்பதுதான் அந்தக் கருத்து. அந்நோக்கங்கள், விளைவுகளாக ஆகும் போது சமூக இருப்பில் சலனங்கள் ஏற்படுகின்றன; அச்சலனங்களில் நேர்மறை விளைவுகளைவிட எதிர்மறை விளைவுகள் அதிகமாக இருந்துள்ளன என்று இப்போதும் நம்புகிறேன்.
இந்த நம்பிக்கையோடு இன்னொரு நம்பிக்கையும் எனக் கிருக்கிறது. ”ஆய்வு செய்ய வேண்டும்; கலைப்பணியில் ஈடுபட வேண்டும் என நினைக்கும் ஒருவர் அல்லது ஒரு குழு உள்நாட்டு / அயல் நாட்டு நிதி உதவிகளைப் பெறாமல் சுத்த சுயம்புவான ஆய்வு செய்தேன் எனச் சொல்லிக் கொள்ளவோ! நாடகத்தயாரிப்பை உருவாக்கினோம் என உத்தரவாதம் தருவதோ! சாத்தியமில்லை என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.


1980 களின் தொடக்கத்தில் கோயம்புத்தூரில் நடந்த படிகள்- இலக்கு கூட்டத்தில் தன்னார்வக் குழுக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு நடத்தப்படும் கூட்டத்தில் நிஜநாடக இயக்கம் நாடகம் நடத்தலாமா? என்ற விவாதம் தொடங்கி தொண்ணூறுகளில் நடத்திய நாடகவிழாக்களுக்கு முதலாளிகளிடம் நிதியுதவிகள் பெறலாமா? எனப் பேசிச் சமரசம் அடைந்த கதைகள் இப்போதும் காதுவழியே காற்றாய்க் கிளம்பிப் போகின்றன.


தலித் நாடகங்கள் தயாரித்து மேடையேற்றிய காலங்களில் மதுரை இறையியல் கல்லூரியின் மைதானத்தில் கணிசமான தொகையை வாங்கிக் கொண்டு உள்ளம் புளகாங்கிதம் அடைந்த நாட்களும், தன்னார்வக் குழுக்களின் அழைப்பை ஏற்றுப் பயிற்சிகள் வழங்கி முடித்த பின்பு தரப்பட்ட பணப்பையைத் திறந்து கூடப் பார்க்காமல் வாங்கிக் கொண்டு வாகனமேறிய நினைவுகளும் புன்சிரிப்பாக மாறி நகர்கின்றன. அரசாங்கச் சம்பளப்பட்டியலில் கையொப்பம் போட்டுச் சம்பளம் வாங்கியது அல்லாமல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தொண்டு செய்யாத நிறுவனங்கள் எனப் பலவற்றிலும் கையொப்பம் போடாமல் காசு வாங்கிய பின் புரட்சி வெகுதூரம் விலகிப் போய் தூர நின்று சிரிக்கிறது. ஆம் நான் இப்போது நடுத்தர வர்க்கப் பூர்ஷ்வாவாக ஆகிப் போனேன். அப்படி ஆகாதவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் புரட்சியால் இரட்சிக்கப்படுவார்கள்

எனக்கு இப்படி நம்பிக்கை இருப்பது போல ஜெயமோகனுக்கு ஒரு நம்பிக்கை இருப்பதாக நான் நினைக்கிறேன். ஐரோப்பிய ஜனநாயகத்தைப் பின்பற்றாமல் இந்திய ஞானமரபையும் இந்துத்துவ வாழ்க்கை முறைகளையும் கொண்டு புதிதான ஜனநாயக முறையொன்றைக் கட்டி எழுப்ப முடியும் என்பது அந்த நம்பிக்கை. இந்திய மொழிகளில் இருக்கும் கலை இலக்கியச் செல்வங்களை விட்டுவிடாமல் அதிலிருந்து பெறப்படும் அறிவு நம்மை மீட்டெடுக்கும் என்று கருத்துக்களை முன் வைக்கிறார். அக்கருத்துக்களை முன் வைத்து அவரது நண்பர்களோடு உரையாட முயல்கிறார். அம்முயற்சியின் போது எதிரிகளைச் சுட்டிக் காட்டவும் தயாராகின்றார். உரையாடல்களில் உணர்ச்சி வேகம் காட்டுவதற்காக எதிரிகளின் சதிச் செயலை அம்பலப் படுத்துவதும் நீண்ட நாட்களாக நடப்பதுதானே. ’அம்பலப் படுத்தி வென்றெடுப்பது’ என்பது இடதுசாரிகளுக்கு மட்டும் உரிமையான காப்புரிமைச் செயல்பாடு என நினைக்கவில்லை தமிழில் நடக்கும் பெரும்பாலான உரையாடல்கள் நண்பர்களோடும்,தோழர்களோடும், தொண்டர்களோடும் நடக்கிற உரையாடல்கள் தானே.. பன்மைத்துவம் பேசிக் கொண்டே இங்கே எதிரிகளைச் சுட்டிக்காட்டும் வேலை நடந்ததை நான் நிறைய வாசித்திருக்கிறேன். அவரும் அப்படித் தான் செய்கிறார். அவரது நம்பிக்கை மோதல் அற்ற சமாதானத்துக்குக் கொண்டு போவதற்குப் பதிலாக வன்முறையை விரும்பும் சமூகத்தைக் கொண்டு வந்து சேர்த்து விடும் என்பதைப் பலரும் சொல்கிறார்கள். ஆனால் இக்கருத்துக்களையெல்லாம் தாண்டி இந்திய அரசியலும் வாழ்க்கை முறையும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. அறிவுஜீவிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் இடமில்லாத பரப்பாக ஆகும் நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அப்போது ஜெயமோகன் தான் மட்டும் தப்பிவிட முடியும் என நம்பலாம். நம்பிக்கையைக் கேள்வி கேட்க நான் தயாரில்லை
 
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது,,,,எழுதிப் போட்ட கை சும்மா இருக்காமல் வலைத்தளங்களில் ஏற்றிப் பார்க்கிறது. அவை எழுதப்பட்ட காலத்தில் வாசிக்கப்படவில்லை என்பதால் இப்போதாவது வாசிக்கப்படும் என்ற நப்பாசை தான்.
இந்த ஆட்டங்களும் பாட்டுகளும் நீண்ட காலத்துக்கு முன்பு ஆடியவை; பாடியவை.
விரும்புபவர்கள் பார்க்கலாம்; கேட்கலாம்..
 
சுகமான சுமைகள்: http://ramasamywritings.blogspot.com/2009/07/blog-post_08.html
நகரும் நாட்டுப் புறங்கள்: http://ramasamywritings.blogspot.com/2012/02/blog-post_24.
வந்தார்கள்; வென்றார்கள்; செல்லவில்லை
http://ramasamywritings.blogspot.com/2012/07/blog-post_8037.html
தமிழில் நாட்டுப்புறவியல் ஆய்வுகள்: முன்னும் பின்னும்
http://ramasamywritings.blogspot.com/2012/07/blog-post_03.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்