விடியல் சிவா :நினைவுக்குறிப்புகள்..


எனது முதல் பதிப்பாளர்
=========================
நேர்க்காட்சியில் விடியல் சிவஞானத்தைக் கடைசியாக பார்த்தது 2011 மதுரை புத்தகக் காட்சியில். போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்திற்கு வரப் போகப் போகிறேன் என்ற தகவல் அப்போதே தெரிந்திருந்தது. சொன்னேன். சொன்னவுடன் ”அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தோழர் து.மூர்த்தி ஏற்கெனவே வார்சாவுக்குப் போய்ப் பணியாற்றியவர். அவரது தொலைபேசி எண் இருக்கிறது: உங்களுக்கு அறிமுகம் உண்டா?. தொடர்பு கொண்டு பேசிக் கொள்ளுங்கள் என்று சொன்னார். பேரா. து.மூர்த்தியை
எனக்கே அறிமுகம் என்பதோடு, வார்சாவிற்குப் போய் வந்த பெரும்பாலான பேராசிரியர்களோடு எனக்குத் தொடர்பு உண்டு என்று தெரிவித்தேன். ”ரொம்ப மகிழ்ச்சி, என்று சொன்ன அடுத்த கணத்திலேயே ’உங்க மேல’ எனக்கு இரண்டு காரணங்களுக்காகக் கோபம் ராம்ஸ்” என்றார்.  பாண்டிச்சேரியில் சந்தித்துப் பழகிய காலங்களில் என்னைத் ‘தோழர்’ என்று தான் அழைத்துக் கொண்டிருந்தார். எப்போது முதல் ராம்ஸ் என்று கூப்பிட ஆரம்பித்தார் என்பது நினைவில் இல்லை. கோயம்புத்தூரில் பொறியியல் படித்த என் மகளுக்கு உள்ளூர் பாதுகாவலராகப் பெயரையும் முகவரியையும் கொடுத்த காலத்திற்கு முன்பே தோழர் என்பதை விட்டுவிட்டு ’ராம்ஸ்’  என்று தான் சொல்லத் தொடங்கியிருந்தார். பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில் தினசரி சந்திக்கும் எங்களின் (நான், ரவிக்குமார், கண்ணன்.எம்) உரையாடல்களில் அன்றாடம் இடம் பெற்ற போது சிவஞானம் ‘சிவா’வாக மாறியது போல எனது பெயரை அவர் சுருக்கிக் கொண்டார்.
முதன் முதலில் சிவாவை நான் சந்தித்தது 20 வருடங்களுக்கு முன்னால் புதுச்சேரியில். அப்போது அதன் பெயர் பாண்டிச்சேரி. 1990 களின் தொடக்கத்தில் மாற்றுச்சிந்தனைகள், கூட்டு விவாதங்கள், கலகக் குரல்கள் எனப் பலவற்றைத் தமிழ்ப் பரப்புக்குள் பாண்டிச்சேரி நகர்த்திக் கொண்டிருந்த நேரம். நிறப்பிரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்த பொ.வேலுசாமியும், அ.மார்க்ஸும் தஞ்சாவூரில் இருந்தாலும், அதன் செயல்பாடுகளையும் இயக்கத்தையும் ஒருங்கிணைத்த ரவிக்குமார் பாண்டிச்சேரியில் இருந்தார். நிறப்பிரிகையின் பணிகளை ஒருங்கிணைத் ததின் தொடர்ச்சியாகவே அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி எழுந்த தலித் எழுச்சியின் பல பணிகளையும் ஒருங்கிணைத்தார். நான் ஆசிரியராக இருந்த புதுவைப் பல்கலைக்கழக  நிகழ்கலைப்பள்ளியும் அதன் அளவில் அந்த அலையில் மிதந்த தெப்பமாக இருந்தது எழுச்சிப் பாடல்களைப் பாடிட கே.ஏ. குணசேகரனையும், நாடகங்களை மேடை யேற்ற என்னையும் ரவிக்குமார் அணுகும்போது மறுக்காமல் பங்கேற்கும் மனநிலையோடு இருந்தோம்.
நிறப்பிரிகை நடத்திய கூட்டுவிவாதங்களில் பங்கேற்க சிவஞானம் வந்தாரா என்பது எனக்கு நினைவில் இல்லை. நானே ஒன்றிரண்டு கூட்டு விவாதங்களில் தான் கலந்து கொண்டேன். ஆனால் தலித் விவாதங்களின் முதல் கூட்டம் தொடங்கிப் பின் நிகழ்ந்த பெரும்பாலான செயல்பாடுகளில் நாங்கள் இருந்தோம் தொடக்கத்தில் நிறப்பிரிகையில் நடந்த விவாதங்கள், எழுதப்பட்ட கட்டுரைகள் ஆகியவற்றை வெளியிடும் நோக்கத்திற்காகவே விடியல் பதிப்பகம் தொடங்கப்பட்டது போல அதன் வெளியீடுகள் இருந்தன. ரவிக்குமார், அ.மார்க்ஸ் ஆகியோரின் கட்டுரைகள் தனி நூல்களாகவும், கூட்டு விவாதங்கள் தொகுப்பு: நிறப்பிரிகை என்பதாகவும் வெளிவந்தன. இதழிலேயே பலராலும் வாசிக்கப் பட்ட அந்த எழுத்துக்கள் நூலாக வந்தால் விற்பனையாகாது என்பதையெல்லாம் சிவா நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. விடியல் பதிப்பகம் நூல்களைப் பதிப்பித்துக் கொண்டிருக்கும்போதே தலித்தியம் தொடர்பான சிந்தனைகள், தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் போன்றவற்றை வெளியிடுவதற்காக விளிம்பு டிரஸ்ட் ஒன்று தொடங்கப்பட்டது. அதன் வழியாக வெளியிடப்பெற்ற நூல்களை விற்பனை செய்யும் பொறுப்பையும் சிவாதான் மேற்கொண்டிருந்தார். 

விடியல், விளிம்பு நூல்களைக் கட்டி எடுத்துக் கொண்டு தலித் அரசியல் மாநாடுகள், கலை விழாக்கள், கருத்தரங்குகள் நடக்கும் பாண்டிச்சேரிக்கு மட்டுமல்லாமல் நெய்வேலி, கடலூர், மதுரை, தஞ்சாவூர் என எல்லா ஊருக்கும் வந்து விடுவார். புத்தகங்கள் விற்பனையில் இருந்தாலும் மேடை நிகழ்வுகளையும் கவனித்துக் கொண்டே இருப்பார். கூட்டம் முடிந்து கோவைக்குத் திரும்பப் பேருந்து நிலையத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது கறாரான விமரிசனங்களை முன் வைப்பார். எழுச்சி பெற்றுக் கொண்டிருந்த  தலித் அரசியல் சாதி அரசியலாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்ற விமரிசனத்தை அப்போதே வெளிப்படுத்தினார். தலித் கலைவிழாக்களில் மேடையேற்றப்பட்ட நாடகக் காட்சிகளைச் செழுமையாக்கும் உண்மை நிகழ்வுகள் சிலவற்றை விவரிப்பார். அப்படித்தான் அவரோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வுகளின் போது விற்கப்படும் அச்சுப் பிரதிகளை வாங்க வந்த கண்ணன். எம். சிவாவோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதும் அந்தக் காலகட்டத்தில் தான்.
கடைசியாக இரண்டு மூன்று முறை கோவை வந்தபோது சந்திக்காமல் தொலைபேசியில் பேசிவிட்டுத் திரும்பியதற்குத் தான் முதல் கோபம் என்றார். அந்தக் கோபத்தைப் பெரிதாக நினைக்காமல் ஒதுக்கி விடலாம் என்றும் தள்ளி விட்டார். ஆனால்  என்னுடைய நாயக்கர் கால இலக்கியங்கள் பற்றிய ஆய்வேட்டை விடியல் பதிப்பகத்துக்குத் தராமல் உயிர்மை பதிப்பகத்திற்குத் தந்ததற்காக அதிகம் வருத்தப்பட்டார். வருத்தத்திற்குக் காரணம் “அந்த நூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டிருந்தால் இன்னும் கூடுதல் கவனம் பெற்றிருக்கும்” என்பதுதான் என்றும் சொன்னார். அவர் சொன்னது மிகச் சரியானது. தமிழ்நாட்டில் வாசகர்களின் வாசிப்பை வெளியிடும் பதிப்பகத்தின் அடையாளம் தீர்மானிக்கிறது என்பதை மறுத்து விட முடியாது. உயிர்மை வெளியிட்டதால் எனது ஆய்வு நூல் சென்று சேர வேண்டிய வாசகர்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பதை இப்போது நானும் உணர்கிறேன். வரலாற்றுப்பொருள்முதல் வாதத்தையும் இயங்கியலையும் உள்வாங்கிய சமூகவியல் அணுகுமுறையைப் பின்பற்றைய ஆய்வு நூலை ஒரு இடதுசாரிச் சார்பு கொண்ட பதிப்பகம் தான் வெளியிட வேண்டும் என தமிழ்நாட்டு வாசிப்பாளர்கள் நினைக்கிறார்கள். வேறு வகையான பதிப்பாளர்கள் அத்தகைய நூலை வெளியிட மாட்டார்கள் எனவும் நம்புகிறார்கள். இப்படியான நம்பிக்கையைக் காப்பாற்றுவதில் விடியல் சிவா கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதை விடியல் பதிப்பகம் வெளியிட்ட நூல்களை வாசித்தவர்கள் அறிவார்கள்.
பொருள் முதல்வாத அடிப்படையிலான இயங்கியல் மற்றும் செயல்பாடு களுக்கான நூல்களை நேரடி எழுத்தாகவும் மொழி பெயர்ப்பு நூல்களாகவும் வெளியிடும் முக்கியமான பதிப்பகமாக விடியல் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற பொது நோக்கத்திலிருந்து எப்போதும் விலகாதவர் சிவா. இடதுசாரி அரசியல் சார்ந்த சிந்தனைகளின் மீது விமரிசனங்களை முன் வைக்கும் மேற்கத்திய நூல்களையும், இந்தியச் சூழலுக்கேற்ப உள்வாங்க வேண்டிய அரசியல் கருத்துகள் கொண்ட நூல்களையும் படைப்பிலக்கியங்களையும் வெளியிடும் பதிப்பகமாக அதனை மாற்றினார். மேற்கத்திய நாடுகளில் பதிப்பகங்கள் செயல் படுவதுபோல பதிப்பகத்திற்கென ஆசிரியர் குழுவை உருவாக்கிக் கொண்டு புதிய எழுத்துக்களைத் தேர்வு செய்தல், மதிப்பீட்டு அறிக்கை வாங்குதல், அறிக்கையை எழுத்தாளர்களின் பார்வைக்கு அனுப்பித் திருத்தங்கள், மாற்றங்கள் கோருதல் எனத் திட்டவட்டமான தொழில்முறை நெறிகளை அவர் பின்பற்றியதில்லை என்றாலும், அவரது நம்பிக்கை சார்ந்த நெறிமுறை ஒன்றை எப்போதும் பின்பற்றிக் கொண்டே இருந்தார். அவரது ’நம்பிக்கை’யின் அடிப்படையில் நண்பர்களைத் தேர்வு செய்து கொண்டு அவர்களின் பரிந்துரைகள், வழிகாட்டுதல்களின் பேரில் வெளியிட வேண்டிய நூல்கள், செய்ய வேண்டிய மொழிபெயர்ப்புகள், தொகுப்புகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டுக் கொண்டு செயல்பட்டவர் சிவஞானம். பரிந்துரைகளை வெறும் வாய் வார்த்தைகளாகச் சொன்னால் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், பரிந்துரை செய்யப்படும் நூல்களின் தமிழகத்தேவை, அது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து அவர் எழுப்பும் கேள்விகளுக்கும் பரிந்துரையாளர் பதில் சொல்லியாக வேண்டும். அந்தப் பதில்களில் அவருக்கு ஏற்படும் திருப்தியே ஒரு நூலை வெளியிடுவதற்கான ஏற்பினை உறுதி செய்யும். அவரது நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பட்டியலின் பெயர் வரிசையையும், நண்பர்களாக இருந்த கால வரிசை யையும் சிவா எழுதி வைத்து விட்டுப் போயிருந்தால் விடியல் பதிப்பகம் கால் நூற்றாண்டுக் காலத்தில் செய்த பயணத்தின் வரைபடத்தையும் நாம் வரைந்து தர முடியும். எதையும் எழுதி வைத்துக் கொள்ளாத சிவா இந்தக் குறிப்பை விட்டு விட்டுப் போயிருப்பார் என எதிர்பார்க்க முடியாது. விடியல் பதிப்பகத்தின் தொடக்க காலத்தில் அவரின் நம்பிக்கைக்குரிய நண்பர்களாக இருந்தவர்களோடு தொடர்பே இல்லாமல் இருந்தார் என்பதை அவரோடு உரையாடும்போது வெளிப்பட்ட வருத்தங்கள் காட்டிக் கொடுத்ததுண்டு. நம்பிக்கைக்குரிய நண்பர்களின் பட்டியல் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும் என்பதும் இயங்கியலின் பகுதி என்பதைப் புரிந்து கொண்டால் விடியல் சிவாவின் பயணத்தையும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.
20 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட நிறப்பிரிகை இதழின் ஆசிரியர்கள் தனித்தனியாக ஆனதற்குக் கருத்து வேறுபாடுகள் காரணமா? செயல்பாட்டுத் தளங்களைத் தேர்வு செய்தது காரணமா? ஒவ்வொரு வருக்குள்ளும் இருந்த தன்முனைப்பு வெளிப்பட்டது காரணமா? என அவர்களிடம் ஒருவரும் கேட்டதுமில்லை கேட்டிருந்தால் உரிய பதில் கிடைக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. அப்படியொரு மர்ம முடிச்சின் காரணம் தான்   விடியல் சிவாவையும் விலகிக் கொள்ளச் செய்திருக்க வேண்டும். நிறப்பிரிகையின் நிழலிலிருந்து விலகிய பின்னர் விடியலின் வெளியீடுகள் மொழிபெயர்ப்பு அடையாளத்தைத் தாங்கியனவாக மாறின. தமிழகப் பரப்பைக் கடந்து தலித் இலக்கிய மொழிபெயர்ப்புகள், இந்தியச் சமய, தத்துவ நூல்களின் சமூகப் பாத்திரங்கள் பற்றிய நூல்கள் மூலம் இந்தியப் பரப்பையும், போராட்ட வரலாறு, தத்துவச் சிக்கல்கள், வரலாற்றைக் கடத்தும் நாயகர்களின் எழுத்துகள், பேச்சுகள், செயல்பாடுகள் பற்றிய நூல்கள் (மாசேதுங், டிராட்ஸ்கி, சேகுவோரா, பிடல், பனான், பாப்லோ நெருடா, யுவான் ரூல்போ, பெட்ரோ ப்ரோமா, வால்டர் பென்சமின் ) வழியாக சர்வதேசப் பரப்பையும் தனதாக்கிக் கொண்டன. இந்த அடையாளத்தை உருவாக்குவதற்குச் சிவா தமிழ்நாட்டு நண்பர்களை மட்டுமல்லாது இலங்கையிலிருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் நம்பிக்கைக்குரிய நண்பர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டுதான் உருவாக்கினார். இந்த இடத்தில் பாண்டிச்சேரியிலுள்ள பிரெஞ்சு இந்தியவியல் நிறுவனத்தின் பங்களிப்பும் அதில் தற்கால இலக்கியத்திற்குப் பொறுப்பு வகிக்கும் கண்ணன். எம். மின் பங்களிப்பும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.
மார்க்சிய- லெனினிய இயக்கங்களில் களப்பணியாளராகச் செயல்பட்ட சிவாவுக்கு, வர்க்கப் புரட்சி பேசிய மார்க்சை, இந்தியச் சமூகத்தை விமரிசனம் செய்த பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனைகளோடு இணைத்து விவாதிக்கும் நூல்கள் வர வேண்டும் என்ற விருப்பும் எப்போதும் இருந்தது. அந்தப் புரிதலின் அடிப்படையில் தான் எஸ்.வி.ராஜதுரையின் ஆய்வுநூல்களைக் கணதியான வெளியீடுகளாகக் கொண்டு வந்தார். நிகழ்கால உலகமயச் சூழலில் வைத்து ஆய்வு செய்த எஸ்.வி.ஆரின் எழுத்துகள் விடியல் பதிப்பகம் வழியாகவே அதிகக் கவனத்தைப் பெற்றது இலங்கையில் நடந்த யுத்தத்தின் நேரடிச் சாட்சிப் பிரதிகளை வெளியிடுவதில் விடியல் அதிகம் கவனம் செலுத்தவில்லை என்றாலும், அங்கு நடந்த போராட்டங்களுக்கும் யுத்தத்திற்கும் வலுச்சேர்க்கும் வகையிலான யுத்தகாலப் பிரதிகளை மொழிபெயர்ப்புகளாக வெளியிட்டுப் பெரும்பங்காற்றியது. புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்த எழுத்தாளர்களின் தனி நூல்களையும், தொகுப்புகளையும்  தமிழ்நாட்டில் அச்சிடவும், விற்பனை செய்யவும் சிவா காரணமாக இருந்தார். அதன் காரணமாக உலகம் முழுக்கப்பரவியுள்ள ஈழத்தமிழர்களின் நண்பராக இருந்தார். விடியல் பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூல்களின்  வாசகர்கள் எண்ணிக்கைத் தமிழகத்தை விடவும் ஈழத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் அதிகம் என்பதை எழுத்துப் பூர்வமாக அவர் சொன்னதில்லை. ஆனால் அதுதான் உண்மை. அந்தக் காரணத்திற்காகவே இந்திய அரசின் கண்காணிப்பு வலையத்திற்குள் அவர் இருக்க நேர்ந்தது.
சிவாவின் விடியல் பதிப்பகம் தான் என்னுடைய நூலொன்றை வெளியிட்ட முதல் பதிப்பகம். நான் எழுதிய  இரண்டு நாடகங்களையும் அரங்கியல் பற்றிய ஐந்து கட்டுரைகளையும் கொண்ட ஒத்திகையை (1998) வெளியிட்ட அதே ஆண்டிலேயே பின்னை நவீனத்துவம்: கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும் என்ற தொகுப்பு நூலையும் விடியல் பதிப்பகம் வெளியிட்டது. இந்நூல் பல காரணங்களுக்காக முக்கியமானது. உதிரி உதிரியாகப் பேசப்பட்ட பின்நவீனத்துவத்தைப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பேசுபொருளாக ஆக்குவது எனத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு அது. கருத்தரங்கில் கட்டுரை வாசிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள் கட்டுரைகளோடு வர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியதோடு, நூலாக்கும் பொறுப்பை விடியல் பதிப்பகம் ஏற்றுக் கொள்ளும் என்ற குறிப்பையும் தந்தோம்.  பல்கலைக்கழக வெளியீடாக வந்தால் வாசகத் தளத்திற்குச் செல்லாது என்பதால் பல்கலைக்கழகத்தின் அனுமதியோடு விடியல் சிவாவிடம் கொடுத்தேன். சிவா வெளியிட உள்ளார் எனத் தெரிந்ததும் கட்டுரையாளர்கள் ஒவ்வொருவரும் திரும்பவும் கட்டுரையைச் சரி செய்து கொடுத்தார்கள். தனியார் பதிப்பகம் வெளியிட்ட பல்கலைக்கழகக் கருத்தரங்க வெளியீடு என்ற வகைப்பாட்டில் அதுதான் முதல் நூல். அந்த நூலைத் திரும்பவும் மறுபதிப்புக் கொண்டு வர வேண்டும் என்பதையும் எனது கடைசிச் சந்திப்பில் சொன்னார். சிவா இல்லாத நிலையில் இனி அச்சாகும் வாய்ப்பில்லை என்ற வருத்தம் முன்னே நிற்கிறது.

விடியல் பதிப்பகத்தில் எனது ஒத்திகை அச்சிடப்படுவதற்கு முன்பே நாயக்கர்கள் காலம் பற்றிய ஆய்வேட்டை அச்சிடத் தயாராக இருந்தார் சிவா. நான் தான்ஆய்வேட்டு வடிவத்தில் வெளியிட விருப்பமில்லை; பொதுவாசகர்களுக்கேற்பச் சில மாற்றங்களைச் செய்து தருகிறேன்என்று சொல்லித் தள்ளிப் போட்டேன். அப்படித் தள்ளிப்போட்டது பத்தாண்டுகளையும் தாண்டிப் போய்விட்டது. மாற்றி எழுதப்பட்டபோது விடியல் பதிப்பகத்தின் கவனங்கள் முழுமையாக மொழி பெயர்ப்பு நூல்களாக மாறியிருந்ததால் அவரைத் தொடர்பு கொள்ளாமல் விட்டு விட்டேன். அந்தக் காரணத்தை நான் சொன்ன போதுராம்ஸ் நீங்க எனக்கு ஒரு வார்த்தை சொல்லியிருக்கணும்; தமிழ்நாட்டு வரலாற்றுக்குப் பயன்படும் ஆய்வு நூல் என்பதால் அதை விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கும்என்றார். “ சொல்லாமல் விட்டது தவறுஎன வருத்தம் தெரிவித்தேன். போலந்திலிருந்து வரும்போது விடியல் பதிப்பகத்தில் வெளியிடுவதற்கான ஒரு நூலோடு வருவேன் எனச் சொல்லி இருந்தேன். ஆனால் அதை வாசித்துப் பார்த்துக் கேள்வி கேட்டு விட்டுச் சிரிக்கும் சிவாவைப் பார்க்க முடியாது. ஆனாலும் தமிழ் அறிவுப்பரப்புக்குள் புதியபுதிய நுரைகளோடு வந்த வெள்ளப்பெருக்கு வற்றி விடாமல் காக்கும் பொறுப்பை அவர் தொடங்கி வைத்த விடியல் பதிப்பக நண்பர்களிடம் விட்டுச் சென்றிருக்கிறார் என்றே நினைக்கிறேன். அவர்களின் பயணத்தில் பங்கேற்பாளனாகவும் வாசகனாகவும் பங்கேற்கத் தயாராகவே இருக்கிறேன். அதுதான் அவருக்கு செலுத்தக் கூடிய அஞ்சலியாக இருக்க முடியும். 
 நன்றி: அம்ருதா,செப்டெம்பர்,2012

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்