சாபம்:புகழ்பெற்ற கவிதையிலிருந்து உருவாக்கப்பெற்ற நாடகம்.


              

மேடைத் தளம் இரண்டு மரப்படிகள் நடுவில் ஒரு செவ்வக மேடை..
அதற்குள் உயரமான கூம்பு ஒன்று நிறுத்தப்பட்டு கப்பலின் குறியீட்டுத்
தோற்றம் உண்டாக்கப்பட வேண்டும்.


இந்த நாடகத்தை மேடையில் நிகழ்த்த மொத்தம் ஒன்பது நடிகர்கள் தேவை
. அவர்களில் ஒருவர் பெண்ணாக இருந்தால் நல்லது
.அந்தப் பெண்ணுக்கு ஆல்பட் ரோஸ் என்ற பறவையின் பாத்திரத்தை வழங்கலாம்
 (1.).கடல்பயணத்தின்  விருப்பமுள்ள  அவள் வயதான கிழவன்
 (2) ஒரு இளைஞனும் இருக்கிறான்
 (3.) இவர்களோடு  சக பயணிகளாக நான்கு பேர்  (4-7)
 (8) சாவும்
 (9) ச்மாதான சக வாழ்வும் 
கூடப் பாத்திரங்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாடகம் தொடங்கும்போது கப்பல் புயலில் சிக்கியதான நிலை. மணல் தூவி, அதனை உரசுதல், தண்ணீரை அலம்புதல், தரையைப் பெருக்குதல், சொம்பினைத் தட்டி ஒலி எழுப்புதல் போன்றவற்றால் கடலின் நிலையை உருவாக்கலாம்.
இரண்டு நபர்கள் பனையோலைகளின் உதவியால் கடலில் புயல் வீசும் நிலையை உருவாக்கலாம். பனையோலைகளை வீசுதல், தரையில் அடித்தல், உரசுதல் ஆகியன அவர்களின் செயல்கள். அந்த சப்தங்கள் குறையும்போது ஆல்பட்ரோஸ் கடலின் பரப்பில் வருகிறது.
ஆல்பட்ரோஸ்
நான் தான் ஆல்பட்ரோஸ். ஆல்பட்ரோஸ் என்னும் கடல்பறவை.
பிறந்தது முதலே இந்தக் கடலை அறிவேன்.
கோபங்கொண்ட கடவுளர்கள் மூச்சு விடும் போதும்,
மூச்சை இழுக்கும்போதும் கடல் புயலாக மாறி விடும்.
என் தாய் இருந்தபோது இது எதற்கும் கவலைப் பட மாட்டேன்
தனது சிறகுகளால் பொத்தி பொத்திப் புயல் வரும்பொழுது என்னைப் பாதுகாப்பாள்
அவள் இறந்து விட்டாள்
இன்னும் எனது இறக்கைகள் முதிர்ச்சியடையவில்லை.
தனியாக இந்தப் புயலை எதிர்த்துப் போரிடுவது என்னால் முடியாது
எனது இருப்பிடத்தை தேடியாக வேண்டும்
உதவு.. கடவுளே.. எனக்கு உதவு..
ஆம்.. மேகம் சூழ்ந்த புயலின் சுழிப்பில் தெளிவற்று ஒரு பாய்மரம் தெரிகிறது
நான் அங்கே போவேன்.. நான் அங்கே போவேன்
பேயுருக்களின் பாடல்
நிறைவேறாத ஆசைகள் நமக்குண்டு
எண்ண முடியாத காலங்களாய் நெருப்பைப் போல எரிந்து கொண்டிருக்கிறோம்..
வரலாற்றின் பக்கங்களில் நமது பெருமூச்சுக்களே நிரம்பியுள்ளன.
கொலைவெறியின் ரத்தத்துளிகளில் நமது பிறப்பு.
சிவப்பேறிய கோபவிழிகளில் நமது ஜனிப்பு
நமது இதயங்களில் பழி தீர்க்கும் கொலைப்புயல்.

சமூகக் கோட்பாடுகளும் மதங்களும் கூட நம்மை உண்டாக்குகின்றன.
நமது பயணம் காலந்தோறும் தொடர்கிறது.
இன்றிலிருந்து நாளைக்கு
இந்த வருடத்திலிருந்து அடுத்த வருடத்திற்கு
இந்த நூற்றாண்டிலிருந்து அடுத்த நூற்றாண்டிற்கு
நமது கண்களின் இமைப்பில் பயணம் தொடர்கிறது

நாங்கள் இங்கே இருக்கிறோம்; அங்கேயும் இருப்போம்
புதிய மனிதர்களின் இதயங்களில் நாம் புதிதாகக் குடியேறுவோம்
உங்களிடையேயும் நாங்கள் இருப்போம்
எல்லா இடங்களிலும் நாங்கள் இருப்போம்
நீங்கள் எங்களை நம்பவில்லை என்றால் அதோ அந்த வயதான கடற்பயணியைக் கவனியுங்கள்.
அவன் தனது கதையைச் சொல்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறான்.
அந்த மனிதனுக்குத் தெரியும்.
நாங்கள் எவ்வளவு உண்மையானவர்கள் என்று…
அவன் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறிவிட்டதென்று..
கவனியுங்கள்.. கவனித்துப் பாருங்கள்.. பாருங்கள் .. கவனத்துடன்

[அந்த பேயுருக்கள் மறைகின்றன]
கடல் பயணி
நான் ஒரு கடல் பயணி.
இளம்பிராயத்திலிருந்தே நானொரு கடல் பயணி
ஒரு வீரயுகப் பாடலின் கம்பீரம் போன்ற கடல் அலைகளின் ஒலியும்,
இரைச்சலும் எனக்கு ரொம்பவும் பிடித்தமானவை.
ஆனால் இப்பொழுது ஒரு பெரிய சாபத்தைச் சுமந்தவளாய் அந்திமக் காலத்தில் நிற்கிறேன்…
நீண்ட நாட்களுக்கு முன்பு நான் ஒரு கதைசொல்லியாகவும் –கடல்பயணியாகவும் இருந்தேன்.
எனது பயணம் ஒரு ராத்திரியைப் போல நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஊர் விட்டு ஊருக்கு… நாடு விட்டு நாட்டுக்கு…
கண்டம் விட்டு கண்டத்திற்கு என..
எதற்காக இந்தப் பயணம்.
எல்லாம் என் கதையைக்  கேட்கக் கூடிய ஒரு மனிதனைத் தேடித்தான்
என் கதையை ஒருவனிடம் சொல்வதன் மூலம் என்னுடைய இறக்க முடியாத அந்தப் பாரத்தை இறக்கி விடத்தான்.
சிறைக் கைதியைப் போன்ற என் வாழ்க்கைச் சுமையிலிருந்து விடுபடத்தான்

அந்த நாள் எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது.
நாங்கள் பயணம் புறப்பட்ட அந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள்…
ஓ.. நானும் எனது வயது வந்த அந்த நண்பர்களும் கடலின் பரப்பில் என்ன செய்தோம் தெரியுமா?         


[ ஒளி குறைந்து திரும்பும்போது ஐந்து பேர் நுழைகின்றனர்]
நபர் 1
இதுதான் நமது கப்பல்.. ஆ..ஆ.. எவ்வளவு அழகாய் இருக்கிறது. ஒரு பெரிய கடல் மீன் போல. அது என்னை ஏற்றிச் செல்லத் தயாராக உள்ளது. இதன் உதவியால் கடலின் நடுவே செல்வோம். அதன் வயிற்றில் அமர்ந்து பயணத்தைத் தொடர்வோம்.. ஹா.. ஹா..
நபர் 2
கடைசியாக எனது கனவு நிறைவேறப் போகிறது. எனக்கு இந்தக் கடலைப் பிடிக்கும். வானத்தையும் பிடிக்கும். புரிந்து கொள்ள முடியாத மர்மங்களோடு எல்லையற்ற பரப்பை நான் விரும்புகிறவனாக இருந்திருக்கிறேன். இந்தக் கடலுக்குள் இதுவரை யாரும் சென்றிருக்க மாட்டார்கள். அங்கே செல்வது அவ்வளவு சுலபம் அல்ல… கஷ்டப்படாமல் லாபம் கிடைக்காது என்பது எல்லாருக்கும் தெரிந்தது தானே..
நபர் 3
என்னுடைய சமன்பாடுகளும் ஆசைகளும் மிக எளிமையானவை. நான் என்றும் கவிஞன் அல்ல. எனக்கு அதிகாரம் வேண்டும். இங்கே வந்ததே அதற்குத் தான்… இந்தப் பயணம் என்னைப் பணக்காரனாகவும் அதிகாரம் நிரம்பியவனாகவும் ஆக்கும் என்பது உண்மை. கடலில் ஏராளமான செல்வம் உள்ளது என்பதை வரலாறு எனக்குச் சொல்லி இருக்கிறது.
நபர் 4
என பயணம் முடிந்த பின்பு நிறைவேறாத எனது ஆசைகள் பலவற்றை நிறைவேற்றுவேன். இந்த உலகத்தில் ஏராளமான கொண்டாட்டங்கள் உள்ளன. நல்ல உணவு, மது, மங்கையென.. ஓ .. கடவுளே.. வாழ்க்கை முழுமையாக மாறிப் போகும். எல்லாவற்றையும் – களியாட்டங்களையும் கொண்டாட்டங்களையும் இதுவரை கற்பனையில் மட்டுமே கண்டு வந்தேன். இப்போது அதன் வாசம் என் அருகில் வந்து விட்டது.  [ ஐந்தாம் நபரை பார்த்து ] ஏ.. இவன் ஏன் நம்மோடு வருகிறான்.
நபர் 5
நானே சொல்லி விடுகிறேன். என் நண்பர்களோடு இருப்பது எனக்கு பிடிக்கும். நீங்கள் பயணம் செய்வதாக முடிவு செய்த போது, நான் என்ன செய்வது என்று யோசித்தேன். நான் உங்களோடு வரவில்லை என்றால், தனியாக இருக்க வேண்டும். தனிமை எனக்குப் பயம் ஆனது. நான் தனிமையை வெறுப்பவன். தனிமை எனக்குப் பயத்தையே தரும்… [ இருள் .. ஒளி கிழவன் மீது வருகிறது]
கடல் பயணி
ஓ! இதுதான் விதி.. எவரும் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள முடிவதில்லை. நான் தனிமையாகப் பயணப்பட்டேன். ஆனால் அப்புறம் அந்தத் தனிமையே எனது நண்பனாகி விட்டது. கடல் வாழ்வில் உண்டான தனிமையே என் வாழ்வாகி விட்டது….  இது ஒரு கல்யாண வீடு. யாரோ ஒருத்தர் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போகிறார். அவரது சந்தோசத்தையே நான் விரும்புகிறேன்…..  முடிந்து போன என் வாழ்க்கையைச் சொல்லித் துன்புறுத்தப் போவதில்லை…..  ஆனால் அந்தக் கல்யாண வீட்டில் ஒரு விருந்தாளியைப் பார்த்தேன்….  கள்ளங்கபடமற்ற முகம். எதையும் கேட்கும் ஆர்வம் அவரிடம் இருந்தது….  அவன் தான் என்னுடைய கதையைக் கேட்பதற்குப் பொருத்தமான ஆள்.. அவனைப் பிடித்து எனது கதையைச் சொல்ல வேண்டும். அதன் மூலம் எனது வஞ்சகம் நிறைந்த, பாவம் சூழ்ந்த எனது வாழ்க்கையை விடுதலை ஆக்க வேண்டும். அதோ அவன் வருகிறான்.. [ அவனை நெருங்கி] தம்பி… நீதான்.. தயவுசெய்து.. இங்கே பார்.. நீதான்.. நீதான்.. நான் தேடிய ஆள்.. தயவு செய்து..
இளைஞன்
யார் நீ.. என் நண்பனின் திருமணத்திற்கு வந்த என்னைப் பிடித்து.. உன் போன்ற கிழடுகளோடு பேச எனக்கு நேரமில்லை. விருப்பம் இல்லை… ம்.. உனக்கு என்ன வேண்டும்? நீ பிச்சைக்காரன் தானே! இந்தா (பணம் தந்து) எடுத்துக் கொள்..  போய் விடு.
கடல் பயணி
நான் ஒன்றும் பிச்சைக்காரனல்ல… நீ கொஞ்சம் விவரம் தெரியாத ஆள்.. ஆனால் ஆர்வமான இளைஞன் என்பது எனக்குத் தெரியும். இனிய உன் நண்பன் என்று கூறினாய். நண்பன். யார் உன்னுடைய நண்பன்.. நீ மட்டும் தான். இன்று நீ நண்பர்களாக நினைப்பவர்கள், நாளையே உனது பகைவர்களாக ஆகி விடுவார்கள். மனித உறவு கடலில் வீசப்படும் வலையைப் போன்றது. உறவுகளின் பொய்மையில் மயங்கி விடாதே. அது மட்டுமல்ல. நட்பு என்பது இன்றில்லா விட்டால் நாளைக்குக் கிடைக்கலாம். நாளை இல்லா விட்டால்.. மறு நாள்.. இல்லையென்றால் அடுத்த மாதம்.. அடுத்த வருடம்.. ஆனால் நான் இருப்பதோ இன்று மட்டும் தான். இந்தக் கணத்தில் தான். என்னை இன்று உதறி விட்டால், ஒரு வேகம் நிரம்பிய கப்பல் பயணத்தின் கதையை இழந்து விடுவாய். அந்தக் கப்பல் ரத்தப்புயலில் சிக்கிய கப்பல். புதிய புதிய சுழற்சிகளில் அலைப்புண்டு சொந்த நிலம் நிரம்பிய கப்பல்… இளைஞனே! என்னைக் கவனி. என் கதையை கேள்.
இளைஞன்
(முதியவனை நெருங்கி கதை கேட்கும் பாவனையில்) சரி.. நீ யார்.. உன் கதை தான் என்ன..? உனது பிரகாசிக்கும் கண்களும் வரி நிரம்பிய முகமும் ஏதோ புதிய புதிய செய்திகளைச் சொல்ல விரும்புவதாக உணர்கிறேன். நான் தயாராக இருக்கிறேன். சொல்…
கடல் பயணி
நான் ஒரு வயதான கடல் பயணி. நானும் எனது நண்பர்களுமாய், வாழ்க்கையை முழுதும் உணராத அந்தப் பருவத்தில் எங்கள் கடல் பயணத் தொடங்கினோம். திரைக் கடலோடியும் திரவியம் தேட வேண்டும் என்ற ஆசை தான். ‘ கடல் பயணம்’ பற்றி யார் முதலில் சொன்னார்கள் என்பது நினைவில்லை. எவரோ ஒருத்தர் முன் மொழிந்த போது நாங்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டோம். ஏனென்றால் சாகசம் செய்வதிலும், புதியவைகளை அறிந்து கொள்வதிலும் எங்களுக்கு ஆர்வம் இருந்தது. உன்னைப் போல இளைஞர்களுக்கும் அது தானே ஆர்வம்.
ஒரு ரம்மியமான மாலைப் பொழுதில் குதூகலமான மனத்தோடு எங்கள் பயணம் தொடங்கியது. மலைகளின் அடியில் .. கோபுரங்களின் அடியில்.. கலங்கரை விளக்கங்களின் அடியில்.. ஆழத்தில்… இந்த சூரியன் தினமும் கிழக்கே ஒரு மாவீரனைப் போல கிளம்பி, மாலையில் ஒரு வெற்றி பெற்ற தளபதி ஓய்வெடுக்கச் செல்வது போல மேற்கில் மறைகிறான்… இது தானே மிகப்பெரிய வட்டம். நான் பார்த்ததிலேயே இதுதான் மிகப்பெரிய அறைவட்டம்…  இந்த அரைவட்டம் கடலுக்கடியில் முழுமை அடைகிறது என்றே நினைத்துக் கொள்கிறேன். இப்படியாக எங்கள் நாட்கள் நகர்ந்தன.
ஆனால் ஒரு நாள் .. மிகப் பெரிய அலையின் சிறகால் எங்கள் கப்பல் தள்ளப்பட்டது. வெடித்துச் சிதறிய புயலும் அலையும் எழும்பி கடல் மேல் கவிழ்ந்தன. அலைதலும் குதித்தலுமாக.. இரைச்சலும் ஓலமும் நெருங்க.. நீண்ட தூரம் தள்ளப் பட்டோம். தெற்கே.. தென்கோடிக்கு.. பைத்தியக்காரத்தனமாய்..
புயல் ஓய்ந்தது.. ஆனால்.. பனியும் புகை மூட்டமும் சூழ்ந்து கொண்டன. சில்லிடும் குளிர்.. மேலே பார்த்தால் பாய் மரம் மட்டும் தெரிகிறது. மிகக் குறுகிய நேரத்தில், எல்லாம் பனிக்கட்டிகளாகி விட்டன. எங்கு பார்த்தாலும் பனிக்கட்டி.. இங்கும் பனிக்கட்டி. அங்கும் பனிக்கட்டி.. கப்பலும் பனிக்கட்டியால் நிரம்பியது. எங்களைச் சுற்றிப் பனிக்கட்டி.. அப்பொழுதுதான் அந்தப் பறவையை- ஆல்பட் ரோஸைப் பார்த்தோம்.  அதுவும் எங்களைப் பார்த்தது. எங்களை ஆசிர்வதிக்க வந்த கடவுளைப் போல நாங்கள் உணர்ந்தோம். இரண்டு நாள் வெயிலுக்குப் பின் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கின. எங்கள் உணவை அதற்குக் கொடுத்து அதனோடு விளையாடினோம். எங்கள் பயணம் புத்துணர்ச்சியோடு மீண்டும் தொடங்கியது. எங்கள் பயணம் புதிய மாற்றங்களோடு இருந்தது.
ஆல்பட்ரோஸ்
ஓ.. என்ன குளிர்.. என்னுடைய சிறகுகள் உறைந்து விட்டன. இனியும் என்னால் பறக்க முடியாது. அந்தக் கப்பலின் அருகில் வந்து விட்டேன். இந்தச் சூழ்நிலையில் தான் என் அம்மா இல்லாதது குறித்து வருத்தமடைகிறேன். அவளது இறைக்கைகளால் என்னைப் பொத்திப் பாதுகாப்பாள். பல தடவை இத்தகைய புயல்களையும் மோசமான தட்பவெப்ப நிலையையும் அவளது அரவணைப்பில் கடந்து வந்துள்ளேன். அவள் ஒரு முறை சொன்னாள் “ குழந்தையே மனிதர்களிடம் மட்டும் நெருங்கி விடாதே”
ஏனென்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குத் தங்க ஒரு இடம் வேண்டும். அதல்லாமல் இவர்களும் நல்லவர்களாகவும் அன்பானவர்களாகவும் என்னோடு விளையாடுபவர்களாகவும் உள்ளனர்.
நபர் 1
பாருங்கள்.. அந்த ஆல்பட்ரோஸ் நம்மைத் தொடர்ந்து வருகிறது. நம்மோடு உறவு கொண்டு விட்டது. அதனாலேயே நான் கடவுளை நம்புகிறேன். மனித வாழ்க்கையில் பிரச்சினைகள் தோன்றிய வண்ணமே உள்ளன. ஆனால் அதன் துயரத்தில் ஆழ்ந்து விட்டால் வாழ்க்கையை வாழ முடியாது. எதாவது சில விஷயங்கள் உங்கள் வாழ்க்கையை அர்த்தமாக்கும்.
நபர் 2
ஏ.. நிறுத்து.. உன்னுடைய தத்துவ விசாரத்தை.. எனக்கு ஒரு விசயம் ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் நாம் வாழ்வா? சாவா? என்று இருந்த போது இந்தப் பறவை நம்மிடம் வந்து சேர்ந்தது.. உறவும் கொண்டது. இப்பொழுது அந்த நெருக்கடியோ தீர்ந்து விட்டது. அந்த உறவும் அவசியம் இல்லாமல் போய்விட்டது. பார்ப்பதற்கு அழகான ஒரு பறவை என்பதற்கு மேலாக எதுவும் இல்லை.
நபர் 3
என்னுடைய யோசனைகள் மிகவும் எளிமையானவை. தாழப் பறந்து நமது பாய் மரத்தில் உட்காரும் அப்பறவையைப் பாருங்கள். நல்ல கொழுகொழு என்று சதையுடன்.. கழுத்தில் எவ்வளவு தடிமனான தோல்.. நிச்சயம் சுவையான கறிதான். அதைச் சமைத்து வறுத்து சிவப்பு ஒயினோடு கலந்து உண்டால் … அந்த விருந்தே விருந்துதான்..
நபர் 4
உனக்கு மட்டும் தான் இந்த மாதிரி யோசனைகள் வருகின்றன. இதற்காகவே உன்னை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. காய்ந்துபோன மாட்டிறைச்சியையும் காய்களையும் தின்று தின்று சலித்து விட்டது. இந்தப் பறவையின் இறைச்சி மிகச் சிறந்த விருந்தாக அமைவது நிச்சயம். ஆனால் அதைக் கொல்வது யார்? ( அனைவரும் நபர் 5 இனைச் சூழ்ந்து கொண்டு)
நபர் 1
நாம் அந்த அரிய வாய்ப்பை – புனிதப் பணியை ஒதுங்கி நிற்கும் நம் கவிஞருக்கு அளிப்போம். அதனைக் கொல்லும் குரூரத்தில் அவருக்கு ஒரு புதிய கவிதை கிடைக்கக் கூடும் ( பறவையோடு விளையாடிக் கொண்டிருந்தவர் திடுக்கிட்டுத் திரும்பி)
நபர் 5
என்ன? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
நபர் 4
நீதான் அந்த அதிர்ஷ்டசாலி.. அந்தப் பறவையை நமக்கு விருந்தாக்குவது என்று முடிவு செய்து விட்டோம். அதைச் செய்யப் போவது நீதான்.
நபர் 5
 ஓ.. கடவுளே! நீங்கள் என்ன பைத்தியமா? நானா..? என்னால் முடியாது. . தயவு செய்து .. தயவுசெய்து…
நபர் 1
நீயொன்றும் கவலைப் படாதே. கடவுள் எல்லாவற்றையும் மனிதர்களுக்காகவே படைத்துள்ளார். உண்மையில் கடவுள் மனிதர்கள் பக்கம் தான். நீ ஒரு மனிதன் தானே.. கவலை வேண்டாம்.. காலங்கடத்தாதே. கடத்தினால்.. அது மறைந்து விடும்.
நபர் 5
பறவையைக் கொல்ல வேண்டாம். நான் சொல்வதையும் மீறிக் கொல்வதானால் நீங்களே அதைச் செய்யுங்கள்..  என்னைக் கொல்லும்படி வற்புறுத்த வேண்டாம். என்னால் முடியாது. தயவு செய்து ..  என்னை விட்டு விடுங்கள்..
நபர் 3
எங்கள் வேண்டுகோளை நீ மறுக்க முடியாது. நீதான் அந்தப் பறவையைக் கொல்ல வேண்டும்.                  ( முடியாது.. என்பதற்காகத் தலையசைக்க அவர்கள் ஒருவர் பின் ஒருவராக)
அந்த வில்லையும் அம்பையும் எடு. பறவையைக் கொல்..
( நால்வரும் 2,3,1,4 மாறிமாறிச் சொல்கின்றனர்)
நபர் 5
(கதறலாகக் கெஞ்சியபடி) வேண்டாம். பறவையைக் கொல்ல வேண்டாம். அப்படிப் பார்க்க வேண்டாம். எனக்குப் பயமாக இருக்கிறது. சரி. நான் செய்கிறேன். நானே கொல்கிறேன். ( வில்லையும் அம்பையும் எடுத்துப் பறவையைக் குறி பார்க்கிறான்)
ஆல்பட் ரோஸ்
எவ்வளவு நல்ல இதயம் அவர்களுக்கு. என்னோடு தொடர்ந்து விளையாடினார்கள்.  நல்ல உணவையும் கொடுத்தார்கள். ஆனால் பனி விலகத் தொடங்கியதும் தங்கள் பயணத்தைத் தொடர்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.  என்னை யாரும் கவனிக்க வில்லையே. அதோ.. அந்த ஒரு மனிதன் மட்டும் என்னோடு விளையாடுவதில் ஆர்வம் காட்டுகிறான். அவன் மிகவும் அன்பானவன். அவனுக்காகவே நான் இவர்களோடு பறந்து போவேன். அவனது கையில் இருப்பது என்ன?  நல்ல அழகிய பொம்மை போல. அவன் எனக்குத் தர விரும்புகிறானோ.?
ம்,,, ம்ம்.. அந்தப் பொம்மை என்னைக் கொன்று விட்டதோ. என்னால் பறக்க முடியவில்லையே. அந்த அன்பான இளைஞன் என்னைக் கொல்வான் என நம்ப முடியவில்லை. ம்ம்.. அம்மா மனிதர்களின் அருகில் போகாதே என்றது ஏனென்று புரிகிறது. அவர்கள் அன்பாகவும் இருக்கிறார்கள்; கொலையும் செய்கிறார்கள்.
கடல் பயணி
அந்தக் கோரமான செயலை நான் செய்ய நேர்ந்தது. அந்த வில்லையும் அம்பையும் எடுத்து அந்த ஆல்பட்ரோஸைக் கொன்றேன்.. ஓ..கடவுளே.. ஒரு பேரிடியாக என் மீது விழுந்திருக்கக் கூடாதா..? அந்தக் கொலை பாதகச் செயலைச் செய்யாமல் தடுக்கப்பட்டிருப்பேனே.. ஏன்.. ஏன்,, ஏன்..
இளைஞன்
கடல் பயணியே.. அப்படியெல்லாம் நினைக்காதே.. இந்த மாதிரி தவறுகளை எல்லோரும் தான் செய்கிறார்கள். உன்னையே நீ வெறுக்காதே..
கடல் பயணி
இல்லை.. என் இளைய நண்பனே. நீ சொல்வது போல அவ்வளவு சாதாரண செயல் அல்ல. நான் சொன்னது கதையின் முடிவு அல்ல. ஆரம்பம்.. தான்.. அதற்குப் பின்பு தான் மோசமானவை எல்லாம் அந்தக் கடலின் பரப்பில் நிகழ்ந்தன
இளைஞன்
 இவ்வளவு யோசிக்கும் நீங்கள் உங்கள் நண்பர்களின் வேண்டுகோளை மறுத்திருக்கலாமே.. அதைச் செய்ததிலிருந்தே அவர்கள் உங்கள் எதிரிகளாக மாறிவிட்டார்கள் தானே.



கடல் பயணி
இந்தக் கேள்வியை மட்டும் கேட்க வேண்டாம். இளைஞனே .. இந்த வினா என் மனதில் ஆயிரம் தடவை தோன்றியது. ஆனால் நானே எனது மனதில் இருந்த வஞ்சக நிலையில் அதை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டேன்.
இளைஞன்
இல்லை.. இல்லை.. இல்லை.. நீ அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.
கடல் பயணி
ஆம்.. ஆம்.. ஆம்.. நான் ஒரு வஞ்சகன். என் வஞ்சகச் செயலுக்கு எனது ஆயுள் முழுவதும் விலை தந்தே ஆக வேண்டும். சரி.. அதை விடு. என் கதையைக் கேள். அந்த ஆல்பர்ட் ரோஸைக் கொன்ற பிறகு சில காலம் நன்றாக இருந்தது சீதோஷ்ண நிலை.  நீண்ட நாட்களுக்கு அப்படியே தொடர்ந்தது. ஆனால் கப்பலைத் தொடர்ந்து வரவும், கடல் பயணிகளோடு விளையாடவும் ஆல்பட்ரோஸ் இல்லை. ஒரு கட்டத்தில் எல்லோருமே அதை உணர்ந்தார்கள்.. அவர்கள் சொன்னார்கள்
நால்வரும்
 ஆல்பட்ரோஸைக் கொன்றது சரியல்ல. மிக மோசமான செயல். மென்மையான கடல் காற்றைக் கொண்டு வந்து சேர்த்தது அந்தப் பறவை தான். எங்கள் முடிவை நீ மறுத்திருக்கலாம். ஏன் அதை நீ கொன்றாய்.
கடல் பயணி
ஒரு ராத்திரி கழிந்தது. மறுநாள் சூரியன் சிவப்பாகவும் இல்லாமல், மங்கலாகவும் இல்லாமல், புதியதொரு நிறத்தில் கிழக்கே வந்தது. கடவுளின் தலையைப் போல.. சூரியன் வானத்தின் பரப்பில் மெல்லிய காற்றையும் வெண் மேகங்களையும் கொண்டு வந்த பொழுது மனம் மாறிய எனது நண்பர்கள் சொன்னார்கள்
நால்வரும்
அந்தப் பறவையைக் கொன்றது சரி தான். நம்மிடம் புகையையும் பனியையும் கொண்டு வந்து சேர்த்தது அந்தப் பறவைதான். நீ சரியான செயலையே செய்துள்ளாய்.  கவலைப்படாதே.
கடல் பயணி
மெல்லிய கடல்காற்று வீசியது. வெண்மையான கடல் மேகங்களும் நகர்ந்தன. எங்கும் அமைதி. அமைதியை நாங்கள் உணர்ந்தோம்.
அந்த அமைதியான கடல் பகுதிக்குள் நுழைந்த மனிதர்களில் நாங்கள் தான் முதலாவது கூட்டமாக இருப்போம். அந்த அற்புதமான சீதோஷ்ணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. எங்களின்… அந்தச் சாயல் கூட இல்லாமல் போய்விட்டது. நாங்கள் செய்த அந்தக் கொலைப் பழியால், கடலில் வெகுதூரத்திற்குச் சென்று விட்டோம்.
திடீரென்று கடல்காற்று நின்று விட்டது. பயணமும் தடைபட்டது. எல்லோருக்கும் ஒரே வருத்தம். ஒருத்தரோடு ஒருத்தர் பேசவும் இல்லை. கடல் அமைதியான போது பேசாமல் இருப்பது தாங்க முடியாத ஒன்று. அந்த அமைதியைக் குலைக்கவாவது நாங்கள் பேசியிருக்க வேண்டும்
ஒவ்வொரு நாளும் அதே சீதோஷ்ண நிலையில் நாங்கள் துன்பப்பட்டோம். வெப்பமும் தகிப்பும் நிறைந்த வானம், எங்கள் தலையின் அருகிலிருந்து, ரத்தச் சூரியன், வெப்ப மழை பொழிந்தான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாளும் மூச்சு விட முடியாமல், நகரவும் முடியாமல் எங்கள் நாட்கள்  நகர்ந்தன. எங்கள் கப்பல் ஏறத்தாழ நின்று விட்டது. எல்லாமே இறந்து போன ஒன்றாக,,. கப்பல், கடல், சீதோஷ்ணநிலை, உலகம் எல்லாம்,… நான் சாவின் பிரதேசத்தில் இருப்பதாகவே உணர்ந்தேன். ஓவியக் கடலில் ஓவியமாகி விட்டது. எங்கள் கப்பல். அதற்குப் பின்பு எதிர்பாராத புயல்கள் பல ஏற்படத் தொடங்கின.

      [ தீயொடு கூடிய நடனம். கடல் பயணியான கதைசொல்லியைச் சுற்றி ஆடுகின்றனர். முடிவில்   
       உறங்குகின்றனர். மகிழ்ச்சியான உறக்கமாக இல்லை. தூக்கத்திலும் அதே நினைப்பு.. ஒரு      
             மனிதனின் கனவில் பேயுரு தோன்றி..]
பேயுரு
நன்றாகத் தூங்குங்கள். ஆனால் உங்கள் விதி முடிவாகி விட்டது. நீங்கள் பனியில் சிக்கி மீண்ட நாளிலிருந்தே உங்கள் கப்பலின் அடியில் கைக்கெட்டும் தூரத்தில் முடிவு வந்து விட்டது. முடிவு நெருங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் உங்களின் நண்பனாக ஆகி விடுவேன்.

நபர் 3
(பயந்து சத்தத்துடன் எழுந்து) ஓ.. கடவுளே.. என்னிடம் வராதே.. (மற்றவர்களும் எழுந்து விடுகின்றனர்) என்னைத் தொடாதே..
நபர் 2
ஏ,,ஏ.. என் சப்தம் போடுகிறாய். என்ன என்ன நடந்தது.
நபர் 3
கனவு எவ்வளவு கோரமான கனவு. ஒரு குரூரமான உருவம், கப்பலின் உச்சியில் வந்து என்னிடம் சொன்னது…” நாம் பனியில் சிக்கி ஆல்பட் ரோஸைப் பார்த்ததிலிருந்தே அது நம்மைப் பின் தொடர்கிறதாம். நம்முடைய தலைவிதி அதன் கையில் இருக்கிறதாம். அதன் சகாக்களின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறதாம்
நபர் 2
அப்படியா.. ஓ.. கடவுளே..
நபர் 5
என்ன?.. என்ன? நடந்தது?
நபர்1
அதோ.. அந்தக் கடல் நீரைக் கவனியுங்கள்.. மந்திரவாதி வீசும் எண்ணெயைப் போல பச்சையாகவும் நீலமாகவும் வெள்ளையாகவும் எரிவதைப் பாருங்கள். ( நால்வரும் 5 ஆம் நபரைச் சுற்றி நின்று பார்த்து)
நபர் 2
அவன் அந்தப் பறவையைக் கொன்றான். அன்றிலிருந்தே துன்பமும் வந்து சேர்ந்தது,
மற்றவர்கள்
ஆம்.. ஆம்.. நீதான் பறவையைக் கொன்றாய்..
நபர் 5
நீங்கள் சொன்னீர்கள். நான் செய்தேன்.
நபர் 2
அதனால் என்ன? கடலில் குதியென்று நாங்கள் சொல்லியிருந்தால் குதித்திருப்பாயா?
நபர் 3
அவன் தான் இந்தத் துயரங்களுக்குக் காரணம். அவனது குற்றத்திற்காக நாம் பொறுப்பேற்க முடியாது.
குழு
ஆம் அவன் தான் எல்லா அழிவிற்கும் காரணம்.
கடல் பயணி
என்ன மோசமான நாள் அது. அவர்கள் மிருகங்களைவிடவும் சுயநலமானவர்கள் என்று உணர்ந்தேன். எனக்கெதிராக அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். மனிதர்களின் சுயநலம் பற்றி அதற்குப் பின் ஆயிரம் தடவைக்கு மேல் எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். மனிதர்கள் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள். தங்கள் சொந்த நலனுக்காக எதையும் செய்கிறார்கள்; யாரையும் பகைத்துக் கொள்வார்கள்; யாரையும் உதறிவிடுவார்கள்
என்னுடைய நண்பர்கள் எல்லாச் சாபத்தையும் என் கழுத்தில் விட்டார்கள்.
நால்வரும்
”நீதான் ஆல்பட்ரோஸைக் கொன்றாய்; உன்னையே அந்தச் சாபம் சேரும்” (ஒவ்வொருவரும் இதைச் சொல்லி கழுத்தில் கயிறொன்றை வீசி விடுகிறார்கள். அவை ஐந்தாம் நபர் கழுத்தில் விழுந்து கொள்கின்றன. அவன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றான்)
கடல் பயணி
நாங்கள் அந்த வெப்ப நாட்களைக் கழித்து விட்டோம். நாக்கெல்லாம் வறண்டு, கண்கள் புழுங்கியதாய், அந்தக் கோடை.. நான் மேற்கே பார்த்த போது, சிலவற்றைக் கவனித்தேன்.
“ஹே.. மேற்கே பாருங்கள்.. அதோ கடலில் எதோ தெரிகின்றது. நம்மை நோக்கி வருகின்றது.
நபர் 1
சிறு புள்ளியாக.. பாய்மர உச்சியாக.. நம்மை நெருங்கி பக்கத்தில்.. பக்கத்தில் ஒரு கடல் ஆவியைப் போல புரண்டெழுந்து வருகிறதே.. இடமாகவும் வலமாகவும்.. மேலும் கீழுமாக.. அசைந்து.. ஆர்ப்பரிப்புடன்..
நபர் 2
இது என்ன கனவு. (கையைக் கடித்து ரத்தத்தைச் சுவைத்துப் பார்த்து விட்டு) இல்லை இது பொய்யல்ல.. உண்மை தான். கப்பல்.. அது ஒரு கப்பல்..
நபர் 3
நீதான் ஒரு பெரிய தேவன். நீயொரு தேவன்.
கடல் பயணி
பாருங்கள்.. பாருங்கள்.. அதற்குப் பின் அது நகரவில்லை. ரொம்பவும் மாயமானதாய் தோன்றுகிறது. கடலில் காற்றும் இல்லை. சீதோஷ்ணமும் மாறவில்லை. அலையும் காற்றும் இன்றி கப்பல் அசையுமா..?
நபர் 4
நம் விதி நம்மோடு விளையாடுகிறது. அது கப்பல் அல்ல. மேலைக்காற்று. சூரிய ஒளியோடு சேர்ந்து ஒளிச்சுடரை உண்டாக்கியிருக்கிறது. இப்பொழுது பாருங்கள் ஒன்றுமே இல்லை. சூரியன் கடலுக்கடியில் சென்று மறைகிறான். ஆனால் இது காற்றின் செயலல்ல என்றே நம்புகிறேன். ராத்திரி வந்து எல்லோரும் தூங்கும் வேளையில் ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணுமாக இருவர் இந்தக் கப்பலின் குறுக்கே மிதந்து போனதைக் கண்டேன். அவர்களில் ஒருத்தி வாழ்வு. இன்னொருத்தி சாவு. தாயம் உருட்டி விளையாண்டபடியே பேசிக் கொண்டே போனார்கள்
சாவு
ஏற்கெனவே அவர்கள் அந்தக் காரியத்தைச் செய்து விட்டார்கள். நான் சாவு. அவர்களை எடுத்துச் செல்வதற்காக வந்துள்ளேன்.
வாழ்வு
நீயேன் இவ்வளவு அவசரமாக வந்தாய்? அவர்கள் அனைவரும் இளைய வயதினர். அவர்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டேன்.
சாவு
இங்கே பார்.. என் வேலையில் நீ குறுக்கிடுவது சரியல்ல.. சாவு என்பது வயதைப் பொறுத்தது அல்ல. அது ரொம்பவும் சிக்கலான கணிப்பு..
வாழ்வு
சரி..நாம் தாயம் உருட்டி விளையாடுவோம். வெல்லும் நபர் யாரோ அவரது முடிவே செயல்படுத்தப்படும். (அவர்கள் தாயம் விளையாடுகின்றனர்)
சாவு
ஹ..ஹா.. விளையாட்டு முடிந்தது. நானே ஜெயித்தேன். நான் ஜெயித்து விட்டேன்.
கதைசொல்லி
அவர்கள் எல்லோருமே விழித்து அந்த விளையாட்டைப் பயந்த கண்களோடு பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனிக்கவில்லை. எங்கள் ரத்தம் உறிஞ்சப்படுவதை உணர்ந்தோம். நட்சத்திரங்கள் மங்கலாகத் தெரிந்தன. இரவு கடினமாக இருந்தது. கப்பலில் இருந்து துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன. நிலவு செவ்விருந்தாகக் காட்சி அளித்தது.
வேகமாக நடந்தது. அது வெகு வேகமாக நடந்தது.. பெரிய சத்தத்துடன் விழுந்தார்கள். செத்தார்கள்..  ரொம்பவும் .. வேகமாக அவர்களிடமிருந்து உயிர் பிரியும் அடையாளமோ கேவலோ கூட இல்லை. ஒவ்வொருவராக விழுந்தார்கள். ஆன்மாவும் ரத்தமும் உடலை விட்டுப் பிரிந்தது. என் வில்லிலிருந்து கிளம்பிப் போன அம்பைப் போன என்னை விட்டு விலகிப் போனார்கள் அவர்கள். 
நான் பயப்படுகிறேன்.
இளைஞன்
கடல் பயணியே.. நான் பயப்படுகிறேன். ஒரு பறவையைக் கொன்றது ஒரு சாதாரண விசயம் என்றே முதலில் நினைத்தேன். ஆனால் விதி .. மிகச் சாதாரண ஒன்றின் காரணமாகக் கூடத் தன் விளையாட்டை மூர்க்கமாக நடத்தும் என்று புரிந்து கொண்டேன். நான் பயப்படுகிறேன்.                கடல் பயணியே நான் பயப்படுகிறேன். உங்கள் .. முடிவளர்ந்த கைகளையும் கடல் மண்ணால் திரிக்கப்பட்ட கயிறைப் போல புடைத்துக் கொண்டிருக்கும் உனது நரம்புகளையும் பார்த்து.. ஒளிரும் உனது கண்களையும் கண்டு பயமாக இருக்கிறது. உனது கதை பெரியதொரு பாரம்.


கடல் பயணி
பயப்பட வேண்டாம். கல்யாண விருந்தாளியே பயப்பட வேண்டாம்.. இந்த உடல் இன்னும் விழவில்லை.
தனியாக.. தனியாக.. தன்னந் தனியாகப் பறந்த , மிகப் பரந்த கடலின் பரப்பில் தனியாக.. என் மீது இறக்கம் காட்டவே இல்லை கடவுள்.  எனது ஆன்மாவின் துடிப்புக்கு நிவாரணியே வரவில்லை. என் இனிய நண்பர்கள்.. எனது குழந்தைப் பிராயத்திலிருந்தே என்னோடு இருந்த நண்பர்கள்.. எனது பெரும்பாலான நேரத்தை அவர்களோடு தான் கழித்திருப்பேன். அவர்கள் எல்லோரும் இறந்து போய் விட்டார்கள். நான் மட்டும் இந்த உலகத்திற்குப் பாரமாக, ஒரு கொடிய விளக்கைப் போல ஆயிரக்கணக்கான கோரப் படைப்புகளில் ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறேன்,
என் கண்கள் வெகுதூரம் பார்க்கின்றன. நம்பிக்கை தரும் விதமாக எதுவுமே தெரியவில்லை. கப்பலின் தளத்தில் எனது நண்பர்களின் வானத்தை நோக்கி பிரார்த்தனை செய்ய முயன்றேன்… முடியவில்லை.. பிரார்த்தனை செய்ய முடியவில்லை. மனப்பாரத்தோடு.. ஈரமற்ற, வஞ்சகம் நிறைந்த இதயத்தின் குறுகுறுப்பையும் மீறி பிரார்த்தனை சாத்தியமே இல்லை. அதிகமான பயம் கூட.. எனது மூச்சுக் காற்று வெளியேற மறுத்தது; நகரவும் முடியவில்லை. எல்லா பாரமும் என் மீது இருப்பதாக உணர்ந்தேன். ஆகாயம், கடல், எனது இறந்து போன என் நண்பர்கள் என எல்லாப் பாரமும் என்னை அழுத்தியது. இறந்து போன என் நண்பர்கள் பாக்கியவான்கள் என்று அவர்கள் மீது எனக்குப் பொறாமை கூட. அவர்களின் கண்களைப் பார்த்தேன். அவை மற்றும் உயிரோடு… செத்துப் போனவர்களின் அசையும் கண்களைப் பார்ப்பதைவிடக் கொடுமையான சாபம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
ஏழு இரவு.. ஏழு பகல் அந்தச் சாபத்தோடு, அந்தப் புயலின் போது எங்களின் உணவையும் குடிநீரையும் கூட இழந்தோம். இப்பொழுது பசியோடும் தாகத்தோடும், கடலின் பரப்பில் பிணங்களின் அசையும் கண்களைச் சந்திக்கும் சாபம்.
தண்ணீர்.. தண்ணீர்.. எல்லா இடத்திலும் தண்ணீர். ஆனால் ஒரு துளியும் நாவை நனைக்காது. வானத்தில் நகரும் நிலவோடு இரவு நட்சத்திரங்களும் நகர்ந்து கொண்டிருந்தன. அவற்றின் கதிர்கள், வெப்பக் கடலில் பட்டுத் தெறித்தது ரொம்பவும் அழகாக இருந்தது. ஆனால் கப்பலின் அருகில், அதன் நிழலிலேயே கடல் நீர் செம்பிழப்பாய் இருந்தது. கப்பலின் நிழலைத் தாண்டி கடல் நீரை கவனித்தேன்.. நீர் குழம்பி, ஒளியுடன் கூடிய வெந்நிறமாய்த் தளும்பியது. தளும்பும் கடல் அலையின் நிறம் மேலும் கூடி வெவ்வேறு வண்ணங்களில் பளிச்சிட்டன.
ஓ.! அவற்றின் அழகை எப்படி என்னால் சொல்ல முடியும். சவங்களோடு ஏழு நாட்களைக் கடந்து பின்பு உயிரினங்களைப் பார்த்தேன். என் வாழ்நாளில் எத்தனையோ அழகான பொருட்களைப் பார்த்தேன். ஆனால் அந்தக் கடல் சுழிப்பின் வண்ணக் கோலங்கள் தான் மிகவும் அழகானவை என்பேன்..
ஓ! மகிழ்ச்சியான உயிரினங்கள்!
அவற்றின் அழகைச் சொல்ல
வார்த்தைகளே இல்லை.
அதைப் பார்த்தபின்பு வாழ்வதின் அர்த்தம் எனக்குப் புரிந்தது. அந்த உணர்வில் எனது இதயம் அன்பை நிறைத்துக் கொண்டது. நிச்சயமாக, கடவுள் என்னைக் காத்து விட்டார். என் மீது இரக்கம் கொண்டிருக்கிறார். கப்பலைச் சுற்றி நெளியும் அந்த வண்ணக் கோலத்தில்- அலையில் மற்ற எல்லாவற்றையும் மறந்து போனேன். அவற்றைப் பார்த்தபடியே கடவுளிடம் அன்பாகப் பிரார்த்தனை செய்தேன். உடனடியாக எனது கழுத்து விடுதலை அடைவதாக உணர்ந்தேன்.
இறந்து போன ஆல்பட் ரோஸின் இறகால்… எனது இனிய நண்பர்கள் சூட்டிய அந்த மாலை.. கடலில் விழுந்து, வழிகாட்டியாய் மூழ்கியது.
                            

எஸ்.டி. கோலரிட்ஜ் எழுதிய ‘தி ரைம்ஸ் ஆப் ஏன்சியண்ட் மெரினர்’ என்ற      
           கவிதையின் உணர்வும் அதில் உள்ள கதைக்கூறுமே இந்த நாடகத்தின்   
          கட்டமைப்பாக மாறியிருக்கிறது. இந்தக் கவிதையை நாடகமாக ஆக்க   
        வேண்டும் என்ற நோக்கத்துடன் அறிமுகப்படுத்தி விவாதத்தில் ஈடுபட்டவர்  
       ஷெஷ்துர் ரஹ்மான். வங்கதேசத்தில் இருந்து வந்து என்னிடம் ஆய்வு   
    மாணவராகச் சேர்ந்தார். பின்னர் திருநெல்வேலிக்குப் போனபின்பு பேரா.  
      கே.ஏ.குணசேகரனிடம் ஆய்வை முடித்தார். இந்த நாடகத்தை மேடையேற்ற 
      விரும்புபவர்கள் எனது இணைய முகவரிக்குத் தகவல் அனுப்பி முன் அனுமதி பெற 
           வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்