மொழிக் கல்வியும் மொழிவழிக் கல்வியும்


தமிழக அரசு அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழி வகுப்புகளை இந்த ஆண்டு
முதல் அறிமுகப்படுத்தப் போகிறது என்ற அறிவிப்பை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? என்று குழப்பமாக இருக்கிறது.
இன்றைய உலகமயச் சூழலில் தாய்மொழிவழிக் கல்வியை மட்டும் வலியுறுத்தும் தைரியம் எனக்கு இல்லை. அப்படி வலியுறுத்துபவர்களுக்கு கிடைக்கக் கூடிய பட்டங்கள் பலவாக இருக்கும் என்பதும் எனக்கு தெரியும். நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத பிற்போக்குவாதி; மொழி வெறியன்; கிணற்றுத்தவளை என்பதான தூற்றல் வார்த்தைகளால் அர்ச்சனைகள் கிடைக்கலாம்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்கலைக்கழகங்களில் மட்டுமே பணியாற்றிய நான் பள்ளிக் கல்வியைப் பற்றி நேரடியாகப் பேசும் தகுதி இருக்கிறதா? என்பதையும் எனக்குள் நானே கேட்டுக் கொள்கிறேன். ஆங்கிலவழிக் கல்வி மீது அளவிட முடியாத மோகம் கொண்டலையும் பெற்றோர்களே அரசுகளின் திட்டமிடலுக்கு நெருக்கடிகள் உருவாக்குகிறார் என்று தோன்றுகிறது. அந்த மோகத்தைக் கவனத்தில் கொள்ளும் நமது அரசாங்கங்களுக்கும், அதற்கான கல்விமுறையைத் திட்டமிட்டுக் கொடுக்கும் வல்லுநர்களும் தொடர்ந்து தவறிழைத்துக் கொண்டே இருக்கின்றனர். இங்கே நமது உயர்கல்வியில் இருக்கும் மொழிப்பிரச்சினையை முதலில் சொல்லி விடுகிறேன். பிறகு பள்ளிக் கல்வியைப் பற்றிப் பேசலாம்.

தமிழ் நாட்டில் பள்ளிக் கல்விக்குப் பிந்திய பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு போன்ற உயர்பட்டங்கள் பெரும்பாலும் ஆங்கிலவழிப் பாடங்களாகவே உள்ளன. ஒரு சில கல்லூரிகளில் அதுவும் அரசுக் கல்லூரிகளில் மட்டுமே தமிழ் வழிக்கல்வியாகக் கலையியல் பட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன. பட்டமேற்படிப்புக் கல்வி என்பது ஏறத்தாழ தொண்ணூறு சதவீதம் ஆங்கில வழிக்கல்வி தான். மாணவர்களுக்குத் தரப்படும் சான்றிதழ்களில் படிப்பு மொழி என்ற இடத்தில் ஆங்கில வழி எனக் குறிக்கப்படுவதையே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் தேர்வு எழுதும் முறை ஆங்கில வழியாக இருப்பதில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.

தமிழகப் பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் பட்ட வகுப்பு பயிலும் மாணவர்களில் பாதிப் பேர் தமிழில் தான் தேர்வுகளை எழுதுகிறார்கள். ஆங்கில வழிக் கல்வி பயிலும் முதுநிலைப் பட்ட வகுப்புத் தாள்கள் கூடத் தமிழில் தான் எழுதப்படுகின்றன. சமூக அறிவியல் பாடங்களான வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், மானுடவியல், தொடர்பியல், வணிகவியல், போன்ற  பாடங்களைத் தமிழில் எழுதும் நிலை கால் நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. இப்போது கலைப் பாடங்கள் மட்டுமல்ல அறிவியல் பாடங்களும் கூடத் தமிழில் தான் எழுதப்படுகின்றன. தங்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் ஆங்கில வழிக் கல்வி எனக் குறிக்கப்படுவதை விரும்பும் மாணாக்கர்கள் தேர்வுகளைத் தமிழில் எழுதும் நிலை தான் இருக்கிறது என்பது ஒருவித நகைமுரண் தான் என்றாலும் உண்மை நிலை அதுதான். ஒட்டு மொத்த வினாக்களுக்கும் முழுமையாகத் தமிழில் எழுதினால் கூடப் பரவாயில்லை. ஒரே கேள்வியில் பாதி ஆங்கிலமும் பாதி தமிழும் கலந்த மொழி நடையில் இருக்கிறது என்பதைப் பல ஆசிரியர்கள் வேதனையுடன் பேசிக் கொள்வதை தேர்வுத் தாள் திருத்தும் பணியின்போது நானே கேட்டிருக்கிறேன். ஒரே வாக்கியத்திலேயே கூடப் பாதித் தமிழும் பாதி ஆங்கிலமும் கலந்து எழுதும் நிலை இருக்கிறது.

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் பேசும் ஆங்கிலம் கலந்த தமிழ்ப் பேச்சு நடை உயர்கல்வி கற்கும் மாணவர்களின் தேர்வுத்தாள்களின் மொழி நடையாகவும் இருக்கிறது.  என்றாலும் எந்தப் பல்கலைக் கழகமும் அதன் எதிர் மறை விளைவுகளைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்; தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர் தமிழில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என வலியுறுத்தும் விதிகள் இங்கு நடைமுறையில் இல்லை; இருந்தாலும் கறாராகப் பின்பற்றப்படுவதில்லை. கறாராகப் பின்பற்றினால் மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் என்பது முன் வைக்கப்படும் வாதமாக இருக்கிறது.

தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் என்பது ஒருவிதத்தில் உண்மை தான். அதிகப்படியான சதவீதத்தில் தேர்ச்சி பெற்று வெளியேறாத நிலையில் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடாது என்ற அக்கறை புரிந்து கொள்ளக் கூடியதே. அந்த எண்ணிக்கைப் பெருக்கம் சமூகத்தில் பிணக்குகளை உருவாக்கும் என்பதும் கூட உண்மை தான். ஆனால் தேர்ச்சி பெற்று வாங்கிய படிப்பின் சாரத்தை எந்த ஒரு மொழியிலும் வெளிப்படுத்த இயலாத மாணவராக அவர்கள் வெளியேறுகிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அப்படி வெளியேறி வேலை தேடி அலையும் பட்டதாரிகளாலும் சமூகப் பிணக்குகள் உருவாகாது எனச் சொல்ல முடியுமா.? நிகழ்கால இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளில் இதுதானே தலையான பிரச்சினை.

ஆங்கில வழியில் பாடங்களைப் படிக்கும் ஒரு மாணவர் பள்ளிக் கல்வியில் பன்னிரண்டு ஆண்டுகள் தாய் மொழியையும் ஒரு பாடமாகவும் படிக்கிறார். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் அவர்கள் நினைக்கிற ஒரு விசயத்தை அல்லது கற்ற அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களைத் தமிழில் சொல்லவோ அல்லது எழுதவோ இயலாதவராகவே  வெளியேறுகிறார்கள். இதே நிலை தான் தமிழ் வழிக் கல்வி கற்கும் மாணாக்கர்களிடமும் இருக்கிறது.பாடங்கள் அனைத்தையும் தமிழ் வழியில் படிக்கும் அவர்கள் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் பன்னிரண்டு ஆண்டுகள் படித்த பின்பும் அந்த மொழியைத் தொடர்பு மொழியாகக் கூடப் பயன் படுத்த முடியாத நிலைதான் இருக்கிறது.

இந்தப் பிரச்சினை வெறும் மொழிப்பிரச்சினை என்ற எல்லையைத் தாண்டி தரமான கல்வியைத் தரமுடியாமல் தவிக்கும் நமது கல்விமுறையின் தலையாய பிரச்சினையாகக் கவனிக்கப்பட வேண்டும். பாடங்களைப் பயிலும் மொழி எதுவாக இருக்கிறதோ அதுவே தேர்வுகள் எழுதும் மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதைப் பயிற்று மொழிப் பிரச்சினையாகப் பார்க்காமல், மொழிக்கல்வியின் பிரச்சினையாகவும் கவனிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன்று பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு பட்ட வகுப்பிற்கும் மூன்று பாடத்திட்டக் குழுக்கள் பாடங்களைத் தயார் செய்கின்றன.

பகுதி -I தமிழ் பாடத்திட்டக்குழு, பகுதி -II ஆங்கிலமொழிப் பாடத்திட்டக் குழு, அப்பட்டத்தின் முதன்மைப் பாடத்திட்டக்குழு என்பன தான் அவை. இம்மூன்று குழுக்களும் கூடும் நாட்களும் வேறு வேறு; பாடங்களைத் திட்டமிடும் நோக்கங்களும் வேறு வேறு. வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு நோக்கங்களுடன் கூடித் தயாரிக்கப் படும் பாடத்திட்டங்கள் வேறு வேறு வகையான பாதையில் தான் செல்லும். அதற்குப் பதிலாக இம்மூன்று குழுக்களும் இணைந்து ஒற்றை நோக்கத்துடன் பாடத்திட்டத்தைத் தயாரித்தால் அடைய வேண்டிய இலக்கைச் சுலபமாக அடையும் வாய்ப்புக்கள் உண்டு.

மொழிக்கல்வியில்  ஆங்கிலேயர்கள் முன் வைத்த நோக்கங்களே இன்னும் நோக்கங்களாக உள்ளன. ஒரு பட்டப்படிப்பை முடிக்கும் இந்தியன், ஆங்கில  மொழியைப் பயன்பாட்டு மொழியாகக் கற்பதோடு  ஆங்கில இலக்கியத்தின் சிறப்பான பகுதிகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அதன் வழியாக ஆங்கிலேயர்களின் மேலான பண்பாட்டை அறிந்து கொள்வான். அறிந்து கொண்ட நிலையில்  இந்தியர்கள் அவர்களின் ஆதிக்கத்தை ஒத்துக் கொள்வார்கள் ; எதிர் மனநிலைக்குச் செல்ல மாட்டார்கள் என்பது மறைமுக நோக்கமாக இருந்தது.

அந்த மறைமுக நோக்கத்தை நமது கல்வி முறை இன்றும் ஒத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் தொடர்பு மொழியாக வேண்டும் என்பதில் இன்று மாற்றுக் கருத்துக் கூற முடியாது; ஆனால் ஷேக்ஸ்பியரும் மில்டனும் தேவை என்று சொன்னால் அதை அபத்தம் என்று தான் சொல்ல வேண்டும். ஆங்கில இலக்கியத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்காத ஒரு மாணவர் உலக இலக்கியத்தைக் கற்க விரும்பினால் அவர் நாட வேண்டியது நூலகங்களாகத் தான் இருக்க வேண்டும்; வகுப்பறைகளாக இருக்க வேண்டியதில்லை.

இதே அணுகுமுறையைத் தான் தமிழ் மொழியைப் பயிற்றுவிப்பதிலும் பின்பற்ற வேண்டும். ஆங்கில வழியாகவோ, தமிழ் வழியாகவோ தான் கற்ற கருத்துகளை- செய்திகளை- தமிழ் வழியாகப் பேசவும், எழுதவும் கூடியவராக மாற்றும் விதத்தில் தமிழ் மொழிக்கல்வி அமைய வேண்டும். அவர்களுக்குச் சங்க இலக்கியத்தின் சில பகுதிகளையும் சிலப்பதிகாரத்தின் ஒரு காதையையும் தேவாரப் பதிகங்கள் சிலவற்றையும் கற்றுத் தருவதால் தமிழ் இலக்கிய ஆர்வம் எதுவும் வந்து விடாது. மொழிக் கல்வியை முழுமையாகக் கற்பிக்கும் நிலையில் - மாணாக்கர்களின் முதன்மைப் பாடங்களோடு தொடர்புடைய மொழிப் பாடங்களாகக் கற்பிக்கும் போது தான் இவற்றின் முழுப் பயனும் மாணாக்கர்களுக்குப் போய்ச் சேரும். அப்படியில்லாத மொழிப்பாடக் கல்வி தொடர்ந்து விழலுக்கு இறைக்கும் நீர்தான். பள்ளிக்கல்வியிலும் ஆங்கிலவழிப் பாடங்களை அறிமுகப்படுத்தும் இந்த உத்தரவுக்குப் பின் உயர்கல்வி சந்தித்துக் கொண்டிருக்கும் அந்தச் சிக்கலை பள்ளிக் கல்வியும் சந்திக்கப் போகிறது.

மொழிக்கல்வியை மேம்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் மாற்றங்கள் செய்வதைப் பற்றிச் சிந்திக்காத நமது அரசுகளும், அவற்றுக்கு ஆலோசனை சொல்லும் வல்லுநர்களும் கற்பிக்கும் மொழிவழியை (MEDIUM OF INSTRUCTION) மாற்றிப் பார்க்கிறார்கள். இந்த இடத்தில் நான் இப்போது இருக்கும் போலந்து அனுபவங்களைச் சொல்ல விரும்புகிறேன். போலந்து நாட்டில் பாலர் படிப்பு முதல் பல்கலைக்கழகப் படிப்பு வரை அதன் அலுவல் மொழியான போல்ஸ்கியில் தான் இருக்கிறது. ஆங்கில வழிப் படிப்பு என்பது பெருநகரங்களில் இருக்கும் சர்வதேசப் பள்ளி(INTERNATIONAL SCHOOL)களில் மட்டுமே இருக்கின்றன. பலநாடுகளிலிருந்து இங்கே வேலை பார்க்கும் மனிதர்களுக்கானவை அவை. அவற்றில் சேர பெரும்பணம் செலவழிக்க வேண்டும்.  போலந்துப் பெற்றோர்கள் அவற்றில் சேர்த்துப் படிக்க வைக்கும் விருப்பம் உடையவர்களாகவும் இல்லை; வசதியுடையவர் களாகவும் இல்லை.

நான் வேலை பார்க்கும் இந்தியவியல் துறை மாணாக்கர்களின் கற்கும் மொழி என்பது போல்ஸ்கி தான். போல்ஸ்கி வழியாகவே தமிழ் இலக்கணத்தைக் கற்கிறார்கள். அதைக் கற்பிக்கத் தமிழும் போல்ஸ்கியும் நன்கு அறிந்து சொந்த நாட்டுப் பேராசிரியர்களைப் பல்கலைக்கழகம் உருவாக்கிப் பணியைக் கொடுத்திருக்கிறது. வருகைதரு பேராசிரியராக வந்துள்ள நான் அவர்களுக்குத் தமிழில் எப்படிப் பேசுவது என்பதற்கான பயிற்சியையே அளிக்கிறேன். இப்படித்தான்  சமஸ்கிருதத்துறையும் இந்தித்துறையும் இருக்கிறது. அவர்களின் மொழி வழியே முதலில் உலக மொழிகளின் இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். அந்தந்த நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் இலக்கிய வரலாற்றையும் போல்ஸ்கியின் வழியாகவே அனைவரும் படிக்கிறார்கள். அதன் பிறகு அந்தந்த மொழியையும் அவற்றில் உள்ள இலக்கியங்களையும் ஆழமாகப் படிக்கவும் ஆய்வுகள் செய்யவும் விரும்பினால் அந்தந்த நாடுகளுக்கு அரசாங்கச் செலவில் போய்ப் படித்து விட்டு வருகிறார்கள். இது போல்ஸ்கியில் கற்பிக்கும் போலந்து நாட்டு அனுபவம் மட்டுமல்ல. ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றிலும் இதுதான் நடைமுறை. அந்தந்த நாட்டு மொழிகளில் தான் பள்ளிக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை இருக்கிறது.

நம் நாட்டில் நிலை இதற்கு நேர் எதிரானது. ஆங்கில மொழி ஆசிரியருக்கு தமிழ் இலக்கணம் தெரியாது. தமிழ் இலக்கணம் கற்பிக்கும் ஆசிரியருக்கு ஆங்கில இலக்கணம் தெரியாது. மொழி கற்பிப்பதில் எல்லா மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி நமக்கு அறிமுகம் இல்லை. அதனைக் கற்றால் ஒருவர் எத்தனை மொழியையும் கற்றுக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. அதன் பிறகு அதில் பேசவும் எழுதவும் வேண்டுமென்றால் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஐரோப்பிய அரசுகளும் பல்கலைக்கழகங்களும் உலகில் எந்த மொழியில் எழுதப்படும் புதிய விசயத்தையும் உடனடியாக அவர்கள் மொழிக்குக் கொண்டு வரும் வேலையைச் செய்வதில் அதிகக் கவனம் செலுத்துகின்றன. அப்படிச் செய்யவில்லை என்றால் தங்கள் நாட்டு மாணாக்கர்கள் உலக ஓட்டத்திலிருந்து விலகி விடும் ஆபத்து உண்டு என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கிறது. வார்சா பல்கலைக்கழகத்தைச் சுற்றி நான்கைந்து புத்தகக் கடைகள் இருக்கின்றன. அவை இங்கிருக்கும் முக்கியமான புத்தகக் கடைகள். அவற்றில் இருக்கும் புத்தகங்களில் தொண்ணூறு சதவீதப் புத்தகங்கள் போல்ஸ்கி மொழியில் தான் இருக்கின்றன. ஆங்கிலத்தில் இருப்பன ஆங்கில இலக்கியம் சார்ந்தவை மட்டும் தான். லத்தீன் அமெரிக்கப் படைப்பாளியையோ, ஆப்பிரிக்க எழுத்தாளரையோ ஆங்கிலம் வழி அவர்கள் படிப்பதில்லை. தங்கள் தாய்மொழி வழியாகவே படிக்கிறார்கள். உலகப் பொருளாதாரம், அறிவியல், அழகியல், தத்துவம், கோட்பாடு என எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தைக் கற்பதில்லை. ஏனென்றால் எல்லாமே போல்ஸ்கியின் கிடைக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் பல்வேறு மொழிகளைப் போல ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே. ஆம் ஒரு மொழி மட்டுமே.

ஆனால் இந்தியர்களுக்கு ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமாக இன்னும் இல்லையே. நம்மை ஆண்டவர்களின் திறமையையும் நுட்பத்தையும் தக்க வைத்திருக்கும் அறிவாக இருக்கிறது. அதிலும் தமிழர்களுக்கு ஆங்கிலம் அதை விடவும் கூடுதலான வஸ்து. உலக அறிவையும் இலக்கியங் களையும் தன் வழியாகத் தரமுடியாமல் தவிக்கும் தமிழை – தமிழின் பெயராலேயே ஆட்சியைப் பிடித்து விட்டு தமிழில் எல்லாவற்றையும் கொண்டு வருவதற்கான  முயற்சிகளைச் செய்யாத அரசுகள் தொடரும் தமிழ்நாட்டில்  தமிழிலேயே படியுங்கள் என்று சொல்லவும், தமிழ்வழியே மட்டும் கல்வி இருக்க வேண்டும் என்று சொல்லவும் துணிச்சல் இல்லை.

கருத்துகள்

காயத்ரி-மொழிபெயர்ப்பாளர் இவ்வாறு கூறியுள்ளார்…
கண்டிப்பாக நீங்கள் சொல்வது சரிதான் அய்யா.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்