கற்பித்தல் என்னும் அலைக்கழிப்பு


மொழி எழுத்தில் வாழ்கிறதா? பேச்சில் வாழ்கிறதா? எனக் கேட்டால் மொழியியலாளர்கள் பேச்சு மொழிதான் ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. பேச்சு மொழி இல்லாமல் எழுத்து மொழியாக மட்டும் ஒரு மொழி நீண்டகாலம் உயிருடன் இருக்க முடியாது என்கிறார்கள். ஆனால் நமது அரசுகளும் அதற்கு ஆலோசனை சொல்லும் அறிஞர்களும் பேச்சு மொழியைப் பற்றிக் கவலைப்படாமல் எழுத்து மொழியில் சிதைவு ஏற்படக் கூடாது எனக் கவனத்தோடு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள். 
பாண்டிச்சேரியைப் புதுச்சேரி என அம்மாநில அரசு மாற்றிப் பத்து ஆண்டுகள் ஓடி விட்டன. எல்லா இடங்களிலும் புதுச்சேரி என்றே எழுதப்படுகின்றன. விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் பெரும்பாலான பேருந்துகளிலும் புதுச்சேரி என எழுதப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் நடத்துநர்களின் அழைப்பு என்னவோ இன்னும் பாண்டிச்சேரி தான். பாண்டிச்சேரியைச் சுருக்கிப் ‘ பாண்டி…, பாண்டி… , பாண்டி..’ எனத் தாள லயத்துடன் அழைப்பார்கள். பாண்டிச்சேரியைப் பாண்டி எனச் சுருக்கியபோல புதுச்சேரியை எப்படிச் சுருக்கிச் சொல்வது எனக் கண்டுபிடிக்கவில்லை.

பாண்டி-நேர்வழி என அழைக்கும் பேருந்தில் சென்றால் சீக்கிரம் போகலாம். இல்லையென்றால் புதுச்சேரி மாநிலத்தில் பல கிராமங்களையும் பார்த்துக் கொண்டு செல்ல நேரிடலாம். அப்படிச் செல்லும் பேருந்துகள் கூடுதலாக முக்கால் மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். அவசரம் இல்லாத போது நான் நேர்வழி செல்லும் பேருந்துகளைத் தவிர்ப்பது உண்டு.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஒருநாள் அதிகாலை. புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கு அழைக்கப்பட்டுச் சொற்பொழிவுக்காகப் போக,விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வந்து பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது கைக் கடிகாரத்தைப் பார்த்தேன். அதிகாலை 5.10 . நகரப் பேருந்து ஒன்று நின்று கிளம்பியது. அதிலிருந்து இரண்டு பெண் பிள்ளைகள் இறங்கிச் சாலையைக் கடப்பதற்காகக் காத்து நின்றார்கள். இருவருமே ஒரு பள்ளியின் சீருடையில் இருந்தார்கள். முதுகில் புத்தகங்கள் அடங்கிய பை. கையில் பிளாஸ்டிக் நாரினால் பின்னப்பட்ட கூடை. அதில் இருப்பன உணவு கொண்டு செல்லும் டப்பாக்கள். அதிகாலையில் எந்தப் பள்ளிக்குச் செல்வார்கள் என்ற சந்தேகம் எல்லாம் எனக்கு வரவில்லை. இருந்தாலும் கேட்டு வைக்கலாம் என நினைத்து ‘ எந்தப் பள்ளிக் கூடம் ?’ எனக் கேட்டேன். கொஞ்சம் மிரட்சியுடன் அவர்கள் பயிலும் பள்ளியின் பெயரைச் சொன்னார்கள். ” எந்த வகுப்பில் படிக்கிறீர்கள்?” என்ற எனது அடுத்த கேள்விக்குப் ‘ பத்தாம் வகுப்பு’ என அதே மிரட்சி மாறாமல் சொன்னார்கள்.


நமது சமூகம் வீடு, பள்ளி, அலுவலகம் போன்ற தனிப்பட்ட வெளிகளைத் தாண்டிப் பொது வெளியில் அந்நிய ஆடவனிடம் பேசக் கூடாது எனத் தடை விதித்திருக்கிறது என்பது அவர்களின் மிரட்சியில் வெளிப்பட்டது. அதுவும் அதிகாலை 5.15 மணி வாக்கில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் ஒரு ஆடவனின் கேள்விக்குப் பதில் சொல்ல நேரிடும் என அவர்கள் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். கையில் உணவுப் பை, முதுகில் புத்தகச் சுமை எனப் பள்ளிக்கூட மாணவிகளுக்கான அடையாளத்துடன் இருக்கும் தங்களிடம் ஏன் இந்த மனிதன் இப்படியான கேள்விகளைக் கேட்கிறான் என அம்மாணவிகள் நினைத்திருக்கக் கூடும்.

அவர்கள் அந்த நேரத்தில் பள்ளிக்கூடம் செல்லவில்லை, தனிப் பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார்கள் என்பது நான் அறிந்தது தான். இவர்களின் தனிப்பயிற்சிப் பயணம் பத்தாம் வகுப்பில் ஆரம்பித்து மேல்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கி ஏதாவது ஒரு தொழிற்கல்வியில் சேர்வது வரை தொடரும் என்பதும் அனைவரும் அறிந்ததும்கூட.

விழுப்புரத்தில் நான் கண்ட இந்தக் காட்சி அந்த ஊருக்கு மட்டும் உரியதல்ல. திருநெல்வேலியில் நான் காலையில் 5.45 -க்குக் காலைநடைக்காகச் செல்லும் போது எனக்குத் தெரிந்த கல்லூரி ஆசிரியர் சமீபகாலமாக என்னோடு சேர்ந்து கொள்கிறார். தனது இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு என்னோடு நடக்கிறார். அவருடைய வீடு எனது வீடு இருக்கும் பகுதியில் இல்லை என்பதும் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது என்பதும் நானறிவேன். அப்புறம் ஏன் இங்கே ஏன் வந்து நடக்க வேண்டும்?.

அவரது மகள் இந்த ஆண்டு +1 படிக்கிறாள். அதில் கணக்குப் பாடம் முக்கியம். அதற்குத் தனிப் பயிற்சி தரும் திறமையுள்ள ஆசிரியர் இந்தப் பகுதியில் இருக்கிறாராம். எனவே மகளைக் காலையில் 5.30 -க்குத் தனிப் பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டு ஒரு மணிநேரம் நடப்பார். தனிப் பயிற்சி முடிந்தபின் இயல்பியல் பாடத்திற்காக அவரது வீட்டருகில் உள்ள இன்னொரு ஆசிரியரிடம் கொண்டு போய் விட்டுவிட்டு வீட்டிற்குப் போய் விடுவாராம். ஒரு மணிநேரத்தில் குளித்து உடைமாற்றிக் கொண்டு திரும்பவும் வந்து மகளை அழைத்துச் செல்வாராம். அவரது மகளோ அதிகாலையில் குளித்துப் பள்ளிச் சீருடையில் தான் தனிப் பயிற்சிக்கு வருகிறாள் என்ற குறிப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அவள் படிக்கும் பள்ளி திருநெல்வேலியில் சிறந்த பள்ளிகளில் ஒன்று எனப் பெயர் வாங்கிய பள்ளி. காலையில் இரண்டு மணி நேரம் தனிப் பயிற்சி முடித்துப் பள்ளிக்குப் போனால் அங்கு வழக்கமான வகுப்புகளோடு சிறப்பு வகுப்புகள் நடத்துவார்களாம். திரும்பவும் மாலையில் இரண்டு பாடங்களுக்குத் தனிப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளாராம். வாரத்திற்கு மூன்று மணி நேரம் வீதம் ஒவ்வொரு பாடத்திற்கும் 12 மணி நேரம் அவள் தனிப் பயிற்சிக்காகப் பயணம் செய்கிறாள். அவளுக்காக அவரும் அலைஅலையாய் அலைகிறார் என்பதும் உண்மைதான்.

இவருடைய அலைச்சல் பெரியதல்ல என்று சொல்லும் அளவுக்கு பலபேரை உங்களுக்கு நான் நினைவூட்ட முடியும். ஒரேயொரு உதாரணம். தனது பிள்ளைகளின் கல்விக்காகத் தங்களின் வாழ்க்கையையும் நலன்களையும் அர்ப்பணித்துத் தியாகம் செய்த கல்லூரி ஆசிரியர்களின் கதை இது. கணவனும் மனைவியும் வேறுவேறு கல்லூரிகளில் ஆசிரியர்கள். இவர்களுடைய ஆசையைப் பேராசை என்று நான் சொல்ல மாட்டேன். நிறைவேற்றத் தக்க ஆசையைப் பேராசை என்று எப்படிச் சொல்வது? அவரை அவரது பெற்றோர்கள் டாக்டராக ஆக்க வேண்டும் என ஆசைப்பட்டார்களாம். மயிரிழையில் தப்பிப் போய்விட்டதால் இப்போது உயிரி- தொழில் நுட்பத்தில் ஆய்வுகள் செய்து ’முனைவர்’ என்னும் டாக்டர் பட்டம் பெற்றுத் தனது ஆசையை ஓரளவு தீர்த்துக் கொண்டு விட்டார். ஆனால் அவரது மனைவிக்கு இன்னும் முனைவர் பட்டம் கிடைக்கவில்லை; அவர் அதற்கு முயற்சிக்கவே இல்லை. தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் டாக்டர் ஆக்குவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோள் என முடிவு செய்து அதற்காகத் தனது உடல் , பொருள், ஆவி அனைத்தையும் தரத் தயாராகி விட்டார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய அந்த தியாக வாழ்க்கை இன்னும் தொடர்கிறது.

மூத்த மகனுக்காக நாமக்கல் பகுதியில் இருக்கும் சிறப்புப் பள்ளி ஒன்றில் நன்கொடை கொடுத்து இடம் பிடித்தார்கள். ஆனால் அங்கிருக்கும் விடுதியில் சேர்க்க மனம் விரும்பவில்லை. நேரடிக் கண்காணிப்பில் தனது பிள்ளை இருக்க வேண்டும் என்பதால் அங்கேயே ஒரு வீட்டை வாடகை எடுத்துத் தங்குவது என முடிவு செய்தார்கள். முதல் ஆண்டு அம்மா நீண்ட விடுப்பு எடுத்துப் பையனுடன் தங்கினார். இரண்டாம் ஆண்டு அதே போல் அப்பா நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு பையனுடன் தங்கினார். பக்கத்திலிருந்து பார்த்துப் பார்த்துப் பையனைப் படிக்க வைத்தனர்.. பையன் அவர்களை ஏமாற்றவில்லை. டாக்டராவதற்குத் தேவையான மதிப்பெண்களைப் பெற்று அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேர்ந்து விட்டான்.

இரண்டாவது பிள்ளையான மகளுக்காக அடுத்த தியாக வாழ்க்கையை இந்த ஆண்டு தொடங்கி விட்டனர். இவர்களிடம் பாடம் படிப்பதற்காகக் காத்திருக்கும் மாணவர்கள் மீது எந்தக் கரிசனமும் இல்லாமல் இப்படி நீண்ட விடுப்பு எடுக்கலாமா ? என்று கேட்டால் நம்முடைய அமைப்பு தரும் சலுகையைத் தானே அவர்கள் பயன் படுத்தினார்கள் என்பது பதிலாகக் கிடைக்கும். கடமையைச் செய்வதற்கு மாதச் சம்பளமாக முக்கால் லட்சம் வரை தரும் அதே நிறுவன விதிகள் தான் நீண்ட விடுப்பில் செல்வதற்கும் உரிமைகளை வழங்கியுள்ளன.
சிறு நகரங்கள், பெரும் நகரங்கள் எனத் தமிழகத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் தனிப்பயிற்சி மையங்களும், தனிப்பயிற்சி ஆசிரியர்களும் இப்போது கிராமங்களிலும் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படித் தோன்றுவதைக் கல்வியாளர்களும் சமூக நல அக்கறையாளர்களும் நோய்க்கூறு என்று சுட்டிக் காட்ட மாட்டார்கள். அதற்குப் பதிலாக ”பக்க விளைவு” எனச் சுட்டிக் காட்டவே செய்வார்கள்.

சொந்த ஊரையே உலகமாகவும், சொந்த சாதி மனிதர்களையே மனிதர்களாகவும் கருதும் இறுக்கமும், குறுகிய மனவெளிகளாலும் நிரம்பித் தழும்பிய இந்திய சமூகத்தை மாற்றுவதற்கு முதலில் தேவை ஜனநாயக பூர்வமான கல்வி எனச் சொல்லி அதனைத் தர முயன்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், சுதந்திர இந்தியாவின் தொடக்ககாலக் கொள்கை வகுப்பாளர்களும் கண்ட கல்விக் கனவுகள் இன்று வீங்கிப் பெருத்துக் கொண்டிருக்கிறது. நோயைத் தீர்க்கும் மருந்து என நினைத்த கல்வியை மூர்க்கத்துடனும் ஆவலோடும் அள்ளிப் பருகிக் கொண்டிருக்கும் இந்தியாவின் நடுத்தர வர்க்கம் அதனால் ஏற்படப் போகும் பக்க விளைவுகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் பயணம் செய்து கொண்டிருக்கிறது.

தனது வாரிசுகளுக்கும் தனது குடும்பத்திற்கும் மட்டுமே ஆட்சி அதிகாரமும் அது தரும் சலுகைகளும் என அரசியல்வாதிகள் முடிவு கட்டி இந்திய அரசியலைப் பாழ்படுத்திக் கொண்டிருப்பது போல இந்திய நடுத்தர வர்க்கம் கல்வியும், அதனால் கிடைக்கும் சலுகைகளும், சொகுசான வாழ்க்கையும் தனக்குக் கிடைத்ததைவிடப் பலமடங்கு கூடுதலாகத் தனது வாரிசுகளுக்குக் கிடைக்க வேண்டும் என்ற முன் யோசனையுடன் கல்வி மீது அலுப்பும் சலிப்பும் தோன்றும் அளவுக்குப் பற்றுக் கொண்டு அலைகிறது. ஆங்கிலத்தில் அப்சஸ்ஸன் (obsession) என்றொரு வார்த்தை உண்டு. எதாவது ஒன்று நமது மனக்கண் முன் வந்து நின்று கொண்டு நம்மை அலைக்கழிப்பு செய்யும் மனநிலையைக் குறிப்பதற்கான சொல் அது. இன்று இந்திய நடுத்தர வர்க்கம் பள்ளியிறுதி வகுப்பில் பெறும் மதிப்பெண் வைத்திருக்கும் குறியை அந்த அலைக்கழிப்பு என்ற வார்த்தையால் தான் சுட்ட வேண்டும்.

தேர்வில் தேறவே மாட்டார்கள் எனக் கருதி ஒரு மாணவனையோ, மாணவியையோ தனிப் பயிற்சி எடுத்துக் கொள்ளச் சொன்ன காலத்தைச் சேர்ந்தவன் நான். ஆனால் இப்போது அத்தகைய மாணாக்கர்களுக்கான தனிப்பயிற்சிகளே கிடையாது. அவர்கள் தேர்வில் தேறவில்லை என்றால் அவர்களின் பெற்றோர்கள் கவலைப்படுவார்களா? அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் வருத்தம் கொள்வார்களா? என்ற கேள்விகளும் வருத்தங்களும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

போட்டி.. போட்டி... படிக்கும் ஆர்வம் இல்லாத மாணாக்கர்கள் பள்ளியை விட்டு நின்று போவது பற்றி இந்த அரசும் சமூகமும் கவலைப்படப் போவதில்லை என்றே தோன்றுகிறது. அதற்குப் பதிலாகத் தொண்ணூறு சதவீதம் மதிப்பெண்கள் வாங்கும் மாணாக்கர்கள் எத்தனை பேர் எனப் புள்ளிவிவரங்களை வெளியிட்டு உற்சாகம் காட்டும் தேர்வுத்துறை, ஊடகங்கள், அரசு, பொதுச்சமூகம் என நாம் மாறிக் கொண்டிருக்கிறோம். இந்தப் போக்கு நோய்க்கு மருந்து தேடும் நோக்கம் கொண்டதல்ல; பக்க விளைவுகள் உண்டாக்கும் என்று தெரியாமல் மருந்தை உணவாகக் கருதும் மனநிலை .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்