பூமணி! நீண்ட நாள் வாசகனின் இந்த வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுங்கள்


1960- களுக்குப் பின்பு எழுதத் தொடங்கிக் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களாக அறியப்படும் பலரும் அவர்களின் முதல் நாவலின் வழியாகவே திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.பூமணியும் அதற்கு விலக்கில்லை அவரது முதல் நாவலான பிறகுவோடு சேர்த்தே அடையாளம் காணப்படுகிறார். வட்டாரம் சார்ந்த எழுத்தாளர்களாக அறியப்படும் பலரும் அத்தகைய அடையாளம் பெறாமல் தப்பிக்க முடியாது. ஆனால் ’முதல் படைப்பே முதன்மையான படைப்பு’ என்ற மனோபாவம் விமரிசன அடிப்படைகள் அற்று உருவாக்கப்படும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் எனக்கில்லை.

முதல் நாவல் மீதான மோகத்திற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். முதன் முதலாக எழுதிக் காண்பிக்கும் வெளியும் மனிதர்களும் அதுவரை எழுத்தில் பதிவாகாமல் இருப்பது முதன்மையான காரணம்.கவனிக்கப்படாத மனிதர்களைக் கவனிக்கப்படாத மொழியில் எழுதிக் காட்டிய புதுமையை ஒருமுறை தானே தர முடியும். புதுப்புது மனிதர்களை வெவ்வேறு கால கட்டங்களில் நிறுத்திக்காட்டுவதன் மூலம் புதுப்புது படைப்புகளைத் தர முடியும். அதற்காகப் புதுப்பிரதேசம் ஒன்றிற்குள் நுழைந்து புதுவகை மொழி அடையாளத்தை உருவாக்கும் போது அவனது வட்டாரம்சார்ந்த அடையாளம் காணாமல் போய்விடும். அப்போது அவன் பொதுத்தள எழுத்தாளன் என்னும் அடையாளத்துக்குள் வந்து சேர்ந்து விடுவான். அப்படி ஆகாமல் அந்த வட்டாரவெளி, வட்டாரமொழி, வட்டாரப் பிரச்சினை எனத் தன்னை இருத்திக் கொண்டவர் பூமணி. பிறகு பூமணி ,இனி அவருக்கு சாகித்ய அகாடெமி விருதைப் பெற்றுத் தந்துள்ள அஞ்ஞாடி வழியாக அஞ்ஞாடி பூமணி என அறியப்படக் கூடும்.

*******************
இயல்புவாத எழுத்தின் ஆகச்சிறந்த தமிழ் அடையாளமாக பூமணியின் பிறகு நாவல் தான் வந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பிந்திய மாற்றங்கள், சமூகத்தின் அடித்தள மக்களுக்குநினைப்பாகக் கூடப் போய்ச் சேரவில்லை என்ற காத்திரமான அரசியல் விமரிசனத்தை-பெருங்கோபத்தை- ஆவேசமற்ற மொழியில் எழுதிக்காட்டிய சாதனை பூமணியின் பிறகு நாவல்.ஆனால் நான் பிறகைக் காட்டிலும், வெக்கை நாவலையே அவரது முக்கியமான நாவலாகக்கருதுகிறேன். அப்படிக் கருதுவதற்கு இலக்கியம் பற்றிய எனது நிலைபாடு மட்டுமே காரணம்அல்ல; எழுத்தின் நோக்கம் மற்றும் வெளிப்பாட்டு முறை குறித்த பொதுவான பார்வையும் காரணமாக இருக்கிறது. நான் இளங்கலைப் பட்டப்படிப்பில் கல்லூரியின் முதல் மாணவனாகத் தேர்வுபெற்றபோது எனது ஆசிரியர் வாங்கித்தந்த 3 புத்தகங்களில் இவரது ரீதியும் இருந்தது. அது அவரது முதல் தொகுதி. முதல் அச்சு நூல். அப்போது முதலே அவரை நான் வாசித்து வருகிறேன். அரசோ, தனியாரோ விருதுகள் வழங்குவதற்கான பரிந்துரைகளை என்னிடம் கேட்கும்போதெல்லாம் பூமணியைப்பற்றிய பரிந்துரைக் குறிப்புகளை அனுப்பிக் கொண்டே இருந்தேன் என்பதைப் பூமணி அறிவார். ஆனால் அவரை தலித் எழுத்தின் முன்னோடி எனக் குறிப்பிட்டு எழுதியபோது - தமிழினி மாநாட்டில் வாசித்த கட்டுரையில் - கோபத்தோடு என்னைக் கடிந்துகொண்டார்.
*******************
கோயில்பட்டிக்குப் பக்கத்திலிருக்கும் ஆண்டிபட்டி என்னும் சிறுகிராமத்தில் பிறந்து சென்னையில் கூட்டுறவுத் துறையில் உயர் பதவி வரை வகித்த பூமணி கரிசல் இலக்கியம் என்னும் வகைப்பாட்டில் கி.ராஜநாராயணனுக்கு அடுத்து முக்கியமாகச் சொல்ல வேண்டிய சிறுகதை மற்றும் நாவலாசிரியர். அவரது பிறகு, வெக்கை, நைவேத்யம் போன்ற தொடக்ககால நாவல்களுக்காகவும் ரீதி என்ற சிறுகதைக்காகவும் அதிகம் கவனிக்கப் பட்டவர். நொறுங்கல்கள், வயிறுகள் என சிறுகதைத் தொகுதிகளையும், வரப்புகள், வாய்க்கால் போன்ற நாவல்களையும் எழுதியவர். தீப்பெட்டித் தொழிலில் ஈடுபடுபவர்களை மையப்படுத்தி கருவேலம்பூக்கள் என்றொரு திரைப்படத்தையும் எடுத்தவர். அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக எலேய் வந்தது. நீண்ட உழைப்பைச் செலுத்தி, ஆவணங்களைச் சேகரித்து எழுதிய நாவல் அஞ்ஞாடி. தனது பணி ஓய்வுக்குப் பின் அஞ்ஞாடி நாவலை மனதில் வைத்துக் கொண்டு பூமணி தமிழ்நாட்டின் ஆவணக்காப்பகங்களுக்கும் காவல்துறைக் குறிப்பேடுகளுக்குமாக அலைந்ததை நான் அறிவேன். அவரது வெக்கை நாவலை திரைக்கதையாக ஆக்க முடியும் எனச் சொன்னபோது ‘ செய்யுங்களேன் ராமசாமி’ என்று சொல்லியவர். *******************
மனிதர்களின் அறிவு சார்ந்த விழிப்புணர்வினூடாக சமூகத்தில்நடக்கும் மாற்றங்களையும், முரண்பாடுகளையும் எழுதிக் காட்டுவதே நவீன எழுத்தின்முக்கியப் போக்காக இருக்க முடியும். தனக்குள் இருக்கும் எதிர்வுகளாலும், தன்னைச்சூழ்ந்துள்ள சமூகத்திலுள்ள முரண்களாலுமே மனிதன் தன்னை உணர்கிறான்; தன்னைச்சூழ்ந்துள்ள மனிதர்களை உணர்கிறான். தன்னை அறிய உதவுவதே எழுத்தின் –வாசிப்பின் வேலைஎன்பதற்குள் தன்னைச் சுற்றியுள்ள சூழலை ஒதுக்கி விட முடியாது. தான் எழுதும் எழுத்துக்குள்தனது இருப்பைக் கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல், தான் உருவாக்கும் பாத்திரங்களின்இயல்பான மொழிக் கூறுகளை மட்டுமே தருவதே பூமணியின் எழுத்து முறை. அதனை வாசிப்பதுகவனமாகத் தொகுக்கப் பட்ட ஆவணப் படத்தைப் பார்க்கும் அனுபவத்தை தரக்கூடியது. அவரதுநாவல்களின் காட்சி அடுக்குகள் வெளியையும் காலத்தையும் மாற்றும் நாடக உத்தியின்வழியாகவே மாறுகின்றன.  காலத்தை அதிகமும்குழப்பாமல் நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்குள் போய் விட்டுநிகழ்காலத்திற்குத் திரும்பி விடும் ஒற்றை வளைவுகளே அவரது எழுத்தில் உள்ளன. அதனால்தான் அவரது நாவல்கள் எளிய கதை சொல்முறை கொண்டதாகத் தோன்றுகின்றன. அவரது விவரிப்புமுறையை வாசித்துக் கொண்டே போகும்போது கதை நிகழும் களனின் அனைத்துப் பரப்பும் கண்முன் விரிவதோடு, பாத்திரங்களின் இருப்பும் அசைவும் கூட அதனதன் அளவில்எழுதப்பட்டுள்ளன என்பதை முதல் வாசிப்பிலேயே புரிந்து கொள்ள முடியும். 
*******************
இந்தத் தன்மை அவரது முதல்நாவலான ’பிறகு’வில் காணப்படுவதைக் காட்டிலும் ’வெக்கை’யில் கச்சிதமாகவெளிப் பட்டுள்ளது. மொழிநடை சார்ந்த கச்சிதத் தன்மையை உருவாக்க அவருக்குப்பயன்படும் முக்கியமான மொழிக் கூறாக இருப்பன உரையாடல் களே. இதுவும் நாடகஇலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்றுதான். குறிப்பிட்ட சூழலில் இருக்கும் இரண்டுஅல்லது இரண்டுக்கு மேற்பட்ட பாத்திரங்கள் ஒன்றோடொன்று பேசிக் கொள்வதை கதைசொல்லியின் இடையீடின்றி எழுதிக் காட்டியதில் தமிழ்ப் புனைகதை ஆசிரியர்களில்பூமணியே மிக முக்கியமானவர். அவரது பல சிறுகதைகள் கதைசொல்லும் நபரே இல்லாமல்,வெறும் உரையாடல்கள் வழியாக நகர்ந்து முடிந்து போவதாக அமைந்துள்ளன. சிறுகதைகளில்பாத்திரங்களின் முரண்பாட்டை வெளிப்படுத்த உதவும் உரையாடல் வடிவம் மொழிசார்ந்தகச்சிதத் தன்மையைத் தாண்டி கதை நிகழும் கால எல்லையை உணர்த்தும் விதமாக நகர்த்தப்பட்டுள்ளதை வெக்கை நாவலை வாசிக்கும்போது உணர முடியும். 

*******************
கிராமப்புறக் கோயில் சார்ந்து வாழ்ந்த பிராமணக் குடும்பத்தின் சிதைவைச் சித்திரித்து எழுத்திய நைவேத்தியம் வெளிவந்த காலத்தில் முரண்பாடான விமரிசனங்களை எதிர்கொண்ட நாவல். ஆனால் பின்னர் வந்த வரப்புகளும் வாய்க்காலும் நாவல் என்னும் வடிவத்தையும் அது எழுப்ப வேண்டிய விவாதங்களையும் எழுப்பாத கதைகள்.. அண்மையில் அவருக்கு எஸ். ஆர். எம், அறக்கட்டளை விருது, விஷ்ணுபுரம் விருது போன்ற தனியார் விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது தொலைபேசியில் வாழ்த்துச் சொன்னேன். இப்போது 2014 க்கான சாகித்ய  அகாடெமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  • பூமணி நீண்ட நாள் வாசகனின் இந்த வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்