வெண்பனி போனது; வசந்தமே வருக; வருக வசந்தமே!!




தூரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அந்த நதிக்கு எனது வாழ்த்துகள்
கண்டத்தின் வரைபடத்தைப் பார்.
குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனவே அவை என்ன?
என்னவெல்லாம் நிரந்தரமானவை ; எவை நிலைத்திருக்கப் போகின்றன
நதிகளையும் மலைகளையும் தவிர வேறெவற்றைச் சொல்ல முடியும்
மனித ஞாபகங்களையும் விட மூத்தவை அவற்றின் நினைவுகள்
ரொம்பவும் உண்மையானவை; மறைந்து ஓடும் ஆழ்மனச் சுழல்கள்
பேசிப்பேசித் தீர்த்துக் கொள்ளும் அல்லது மௌனச் சுழலாய் நகர்ந்து போகும்
வயது முதிர்ந்த லாவா நதியே
பல வருடங்களுக்குப் பின் திரும்பவும்
உன்னை வாழ்த்துகிறேன்
நீ கடந்து வந்த வசந்தத்தின் நிறமாலைகளும்
இலையுதிர்காலத்துச் சருகுகளும் எத்தனை எத்தனை
நீ பார்த்துக் கடந்த பாரம்பரியம் மாறாக் குடில்களும்
நெடிதுயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளும்
உனக்குப் பாதை ஒதுக்கும் கண்ணாடி மாளிகைகளும்
கான்கிரீட் வனங்களும்
வயது முதிர்ந்த நதியே
எனது வருகைக்காக அக்டோபர் மாதத்துச்
சூரியனை எடுத்துக் கொண்டு வா .
கலைந்த ஆடைகளோடு தூங்கி விழிக்கும்
உன்னை காண வேண்டும்
மரங்களும் புதர்களும் உன் தழுவல்களுக்காகக்
கரையோரங்களில் காத்து நிற்கின்றன
ஏற்றப்பட்ட தீப ஒளியில் மிரளும்
அமைதி கூடிய உன் முகத்தைப் பார்த்தபடி
உன் உடலில் கலந்து நெளியும்
நீல நரம்புகளை நாடி பிடித்துப் பார்க்க வேண்டும்.


உனது பயணத்தின் திசைவழிகள் எப்படிப் பட்டவை
வளமாக்கும் வயல் பரப்புகள்
முலையூட்டும் தாயின் கவனிப்போடும் பரிவோடும்
பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் ஓடிக் கொண்டிருக்கிறாய்
ஒவ்வொரு பிரதேசத்திற்குள்ளும் உனக்கொரு பெயர்
சமவெளிகளிலும் காடுமேடுகளிலும் –
விதம் விதமான மனிதர்களைச் சந்திக்கிறாய்
உழைத்துக் களைத்து வரும் அன்றாடக் காய்ச்சிகளின்
வியர்வையோடும்
அவர்கள் உருட்டி விடும் கள் குடுவைகளோடும்
எப்போதாவது ஆடும் ஆட்டமே நீதான்
நதியே நீதான் அவர்களுக்கு நளினத்தை வழங்கினாய்
நீ தந்த பாடலையே அவர்கள் திரும்பப் பாடுகிறார்கள்
நீதான் அவர்களின் இசை ஆசான்
போற்றிப் பாடலாய் இணையும் தேவாலயத்தில் கூட்டிசையும் கூட நீதான்
மதுக்குடுவைகளின் மோதலில் கிளம்பும் உற்சாக ஒலியும் கூட நீதான்


இந்த வரிகளைத் தனியொருவன் பாட, கூடி நின்ற கூட்டம் அவனோடு சேர்ந்து பாடிய காட்சியை நான் 2013 மே மாதம் ஒன்றின் மாலையில் பார்த்தேன். ஜனாதிபதி மாளிகையைத் தாண்டி நிற்கும் அரண்மனைக்கு முன்னால் இருந்த பூங்காவில் பாடக் கேட்டான். இந்தப் பாடல் வசந்தத்தை வரவேற்கும் விதமாகப் பாடப்பட்டது.


இந்தப் பாடலை எழுதியவள் ஜூலியா ஹாட்விக் என்னும் பெண் கவி. அவளைப் போன்ற பெண்கவிகளும் ஆண்கவிகளும் வசந்தத்தை வரவேற்றுப் பாடிய கவிதைகளும் பாடல்களும் போல்ஸ்கி மொழியில் ஏராளமாய் இருக்கின்றன. போலந்து நாட்டுக் கவிகள் மட்டுமல்ல; ஐரோப்பியக் கவிகள் ஒவ்வொருவருமே வசந்தத்தை வரவேற்று ஓரிரு கவிதையாவது பாடாமல் இருக்க மாட்டார்கள் என்றும் என் மாணவிகள் சொன்னார்கள்.

லில்லிப்பூக்கள் துளிர்விட்டுள்ளன; வசந்தமே வருக
துளிப் மலர்கள் வந்துவிட்டன; வசந்தம் வந்துவிட்டது.
எனக் கொண்டாடிய போலந்துப் பெண்களையும் ஆண்களையும் பார்த்தபோது தமிழ்நாட்டில் எனது சொந்தக் கிராமத்தில் கொண்டாடிய பொங்கல் தினம் ஞாபகம் வந்தது. பொங்கல் கொண்டாட்டத்தின்போது இந்த மங்கலச் சொல்லைக் கேட்டிருக்கிறேன். நீங்களும் கேட்டிருக்கக் கூடும். எனது சின்ன வயதில் கேட்ட அந்த வரிகள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன.
********************************
பொங்கலோ பொங்கல் !பால்பானை பொங்கல் !!
பட்டி பழுக! பாரதம் படிக்க!!
மூதேவி போக! சீதேவி வர!!
பொங்கலோ பொங்கல் ! பொங்கலோ பொங்கல்!!
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கொண்டுவரப்படும் ஆடுமாடு கோழி என அனைத்தும் மந்தையில் வந்து வரிசை கட்டி நிற்கும். அவையெல்லாம் அன்று காலையில் கண்மாயில் குளிப்பாட்டப்பட்டு கொம்புகளுக்கு வண்ணம் பூசிக் கொண்ட கன்றுகளும் காலிகளூம் தான். வீடுகளில் பொங்கலிட்டுப் படைத்தபின்பு ஊர்ப்பொதுவில் அவைகளுக்கான படையலுக்காக வந்து நிற்கும் காட்சி மறக்க முடியாத காட்சிகள். இப்போது மாடுகளூம் இல்லை; மனிதர்களின் கொண்டாட்டத்தில் அந்த மங்கலச் சொற்களையும் காணோம்
ஐரோப்பிய நாடுகள் மொழி, தேச எல்லை, பொருளாதாரக்கட்டமைப்பு, அரசியல் நடவடிக்கைகள் எனப் பலவற்றில் பிரிந்து கிடந்தாலும் சிலவற்றில் இன்னும் ஒத்துப் போகும் மனநிலையோடுதான் இருக்கிறார்கள். பெரும்பாலானவைக் கிறித்தவ நாடுகள் என்ற போதிலும் உட்பிரிவுகளாலான பிளவுகளும் இருக்கவே செய்கின்றன. இவையெல்லாம் மனிதர்கள் உண்டாக்கிக் கொண்டவை. மனிதர்களின் உருவாக்கம் தாண்டி இயற்கையின் கொடையால் அவை ஒற்றை தேசம்போலவே நிற்கின்றன. இயற்கை உருவாக்கித் தரும் இரண்டு சங்கதிக்காக மொத்த ஐரோப்பாவும் காத்து நிற்பதையும் ஒத்துப் போவதையும் நான் அங்கிருந்த இரண்டு ஆண்டுகளிலும் நேரடியாகக் கண்டேன். அவ்விரண்டில் ஒன்று டிசம்பர் மாதப் பனிக்குள் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ்: இன்னொன்று வசந்தத்தை வரவேற்கும் உன்னதப்பாடல்கள்.

ஐரோப்பிய நாடுகள் குளிர்காலத்தைத் தாண்டி விட்டது என்பதின் அடையாளம் அது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த மலர் -தேவமலர்- ஐரோப்பாவின் ஏதாவது ஒரு இடத்தில் பூக்கும்; அந்த இடம் அந்த ஆண்டில் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்ற நம்பிக்கை ஐரோப்பியர்களிடம் இருக்கிறது. நான் போன முதல் ஆண்டில் 2012 இல் நான்கு நாட்களுக்கு முன்பாகவே வசந்த காலத்தின் அறிகுறி வந்து விட்டதாகப் பேசிக் கொண்டார்கள். இந்தமுறை அந்த முதல் மலர் ஸ்பெயின் நாட்டின் ஒரு கிராமத்தின் மரத்தில் தெரிந்ததாக மாணவிகள் சொன்னபோது முதலில் எனக்குப் புரியவில்லை.

ஐரோப்பா பல்வேறு நாடுகளாகப் பிளவுண்டு கிடந்தாலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், வார இறுதிப் பயணங்கள், தனிமனித சுதந்திரம், தன் காலில் நிற்கும் இளையதலைமுறையை உருவாக்குதல் என்பதோடு வசந்த காலத்தை வரவேற்றல், பனிக்காலத்தை எதிர்கொள்ளல் போன்றக் காலமாற்றத்தைக் கையாளுதலில் எல்லாம் ஒற்றை மனத்தோடு தான் இருக்கிறார்கள் என்பது புரிந்தது.


வசந்தத்தின் வருகையை - தேவமலர் பூக்கும் அற்புதக் கணத்தை நான் ஏற்கெனவே க.நா.சு.வின் மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். நோபெல் பரிசு பெற்ற முதல் பெண்மணியான செல்மா லாகர்லவ்வின் தேவமலர் குறுநாவலில் வசந்தத்தின் வருகை ஒருவித மயக்கத்தோடு எழுதப்பெற்றிருக்கும். மொழிபெயர்ப்பிலேயே வசந்தத்தை நுகர முடிந்ததாக இருந்தது அந்தக் குறு நாவலின் பகுதி. செல்மா லாகர்லெவ் வருணித்த வசந்த காலக் காட்சிகளை இரண்டு ஆண்டுகள் நேரடியாகக் காணும் வாய்ப்புக் கிடைத்தது மறக்கக் கூடிய ஒன்றல்ல.


நான் ஐரோப்பாவுக்கு வந்த அக்டோபர் தொடக்கத்தில் கால வேறுபாடு அவ்வளவாகத் தோன்றவில்லை. இரவும் பகலும் ஓரளவு சமமாக இருந்தது. ஆனால் அக்டோபர் கடைசியில் இரவு அதிகமாகத் தொடங்கியது. டிசம்பர் மாதமெல்லாம் மாலை 03,30 க்கெல்லாம் இருட்டத் தொடங்கி காலை 07.30 வரை இருளாகவே இருந்தது. மாலை 04.30 –க்கு வகுப்பை முடித்து வீட்டுக்கு வரும்போது 05.30 ஆகி விடும். ஆனால் நடுராத்திரியில் வீடு திரும்புவது போலத் தோன்றும். அங்கிருந்து தொடங்கும் பனிக்காலம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது பனியால் மூடிப் படுதாவை விரித்துவிடுகிறது. உறைந்து கிடைக்கும் பனியில் தான் கொண்டாட்டத்தீர்க்கிறார்கள்.


இந்திய நேரத்திற்கும் போலந்து நேரத்திற்கும் பனிக்காலத்தில் நாலரை மணிநேர வித்தியாசம் என்றால் வசந்தகாலம் தொடங்கி ஏழு மாதங்களுக்கு மூன்றரை மணி நேரம் தான் வேறுபாடு. அத்தோடு அங்கே பகல் நேரம் கூடுதல். மார்ச் முதல் வாரத்திலேயே பகல் வெளிச்சம் அதிகமாகி விடும். காலை 5 மணிக்கெல்லாம் கிழக்கு வெள்ளையாகி விடுகிறது. மாலையில் 7 மணிவரை வெளிச்சம் இருக்கிறது. இது கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி ஏப்ரல் கடைசியில் உச்சத்தைத் தொடும். 16 மணி நேரம் சூரியனைப் பார்க்கலாமாம். சூரியனின் வெளிச்சம் மட்டும் தான் வெள்ளையாக இருக்கிறது. வெளியில் போனால் அதே குளிர் தான். காலையில் 2 டிகிரியில் தொடங்கி மாலைக்குள் எப்போதாவது ஒரு மணி நேரம் 15 முதல் 17 டிகிரியைத் தொட்டு விட்டுத் திரும்பவும் இறங்கத் தொடங்கி விடுகிறது. வெறும் ஸ்வொட்டரோடு வெளியில் கிளம்பி எங்காவது போய் வரலாம் என்று கிளம்பினால் திடீரென்று அரைமணி நேர இடைவெளிக்குள் 10 டிகிரி குறைந்து விடுகிறது. குளிர்காலத்தில் போலந்துக்காரர்கள் குளிரை அண்ட விடாமல் தடுக்கும் ஜாக்கெட்டுகளைக் கைவசம் வைத்துக் கொண்டே வெளியே கிளம்புகிறார்கள். பத்து நிமிடத்தில் போய்த்திரும்பும் வேலையாக இருந்தால் கூட கவச உடைகள் இல்லாமல் வெளியே கிளம்புவதில்லை. குளிர் உடலுக்குள் ஏறும் பகுதிகளானப் பாதங்கள், கழுத்துகள், காதுகள் ஆகியனவற்றை மூடி விடுவது மிக முக்கியம். அதனால் முக்கியமான கவச உடைகள் என அவர்கள் நினைப்பது ஸாக்ஸுடன் கூடிய ஷூக்கள், கழுத்தைச் சுற்றி மறைக்க உதவும் மப்ளர்கள், காதுகளை மூடிவிட உதவும் கருவிகளையும் தான். இந்த வருடம் அதிகபட்சக் குளிராக – 24 டிகிரியில் தெருவெங்கும் உறைபனி கிடந்ததைப் பார்த்தேன். போலந்தின் குறுக்காகவும் வார்சா நகரத்தின் ஓரத்திலும் ஓடும் விஸ்துலா ஆறு பனிப்பாறை போலக் கிடந்தது. வசந்த காலத்தைத் தொடர்ந்து வரப்போகும் கோடையில் அதிகபட்ச வெப்பமாக + 20 வரை போகலாம் எனச் சொன்னார்கள்.


அக்டோபர் ஒரு மணிநேரத்தைக் கூட்டி ஒரு நாளைக்கு 25 மணிநேரம் என ஆக்குவதாக இருந்தாலும் சரி, மார்ச் மாதம் ஒரு மணி நேரத்தைக் குறைந்து 23 மணி நேரம் என மாற்றுவதாக இருந்தாலும்சரி, அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருக்கும்படி வைத்திருக்கிறார்கள். அந்த மாதங்களின் கடைசி சனிக்கிழமை நள்ளிரவில் தான் இந்த மாற்றங்களைச் செய்கிறார்கள். சீக்கிரம் எழுந்துகொண்டாலும்சரி, தாமதமாக விழித்துக் கொண்டாலும்சரி அந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாகத் தான் இருக்கும். அதைக் காரணமாக்கிச் செய்யும் வேலையிலிருந்து தப்பிக்க முடியாது. திங்கட்கிழமை வருவதற்குள் எல்லாம் சகஜமான நிலைக்கு வந்து விடும்.

இந்த கால வேறுபாடு ஐரோப்பா முழுவதும் ஒன்றுபோல இருக்கிறது எனச் சொல்ல முடியாது. கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகள் ஒருவிதமாகவும் ஐக்கிய அரசுகளான ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து போன்றன ஒரு மணி நேரத்தைக் குறைவாகவும், பின்லாந்து போன்ற வடதுருவ ஐரோப்பிய நாடுகள் ஒரு மணிநேரம் கூடுதலாகவும் கணக்கிட்டுக் கொள்கின்றன. போலந்தில் காலை ஒன்பது மணி என்றால் இங்கிலாந்தில் பத்துமணியாக இருக்கும்; பின்லாந்தில் எட்டுமணி. உலகம் முழுவதும் காலக் கணக்குக் காரணமாக இருப்பன பூமிப்பந்தின் மேல் கீழாக ஓடுவதாக நம்பப்படும் கற்பனைக்கோடுகளான பூமத்திய ரேகைகளும் தீர்க்க ரேகைகளும் தான். கிரின்வீச் வழியாகச் செல்லும் தீர்க்கரேகையை பூஜ்யம் எனக் கணக்கிட்டு இந்தியாவின் நேரம் கிரின்வீச் நேரத்திலிருந்து ஐந்தரை மணிநேரம் வேறுபடும் எனப் பூகோள வகுப்பில் படித்தது இப்போது நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு தீர்க்கரேகைக்கும் இடையேயுள்ள தூரத்தைக் கடக்கச் சூரியன் எடுத்துக்கொள்ளும் நேரம் 4 நிமிடம். கிரீன்வீச்சிலிருந்து 40 டிகிரிக்குள் இருக்கும் ஐரோப்பிய நாடுகளுள் தங்கள் வசதிப்படி இரண்டு மணி நேர இடைவெளியைப் பேணுகின்றன. அதே கணக்கைப் பேணுவதாக இருந்தால் இந்தியத் துணைக்கண்டத்திலும் நாம் இரண்டு மணி நேர இடைவெளியைப் பேணுவதாக இருக்க வேண்டும். ஏனென்றால் குஜராத்தின் கட்ச் வளைகுடாவின் விளிம்பில் தான் 60 டிகிரி தீர்க்கரேகையும் வடகிழக்கு மாகாணத்தின் எல்லைக்கிராமங்கள் வழியாக 100 டிகிரி தீர்க்கரேகையும் செல்வதாக உலகவரைபடம் சொல்கிறது. ஆனால் நாம் இந்தியாவின் மையத்தில் நாக்பூர் வழியாக ஓடுவதாக நம்பும் 80 டிகிரி தீர்க்கரேகையை வைத்து இந்திய முழுமைக்கும் நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம். இந்திய ஒருமைப் பாட்டுக்காக எதனையெல்லாம் இந்தியர்கள் விட்டுக் கொடுக்கிறார்கள் என நினைக்கும்போது மயிர்க் கூச்செரியத்தான் செய்கிறது.

வசந்தம் வரும்போது எல்லாம் மாறிவிடும். அது ஈஸ்டர் கொண்டாட்டத்தின் முன் அறிவிப்பாக வருகிறது ஈஸ்டர் கொண்டாட்டம் முடிந்த பின்பு பூங்காக்களும் வனங்களும் மனிதர்களால் நிரம்பி வழியும். வார்சாவின் மையத்தில் இருக்கும் லெய்சென்ச்கி பூங்காவையும் கபாட்டி வனத்தையும் ஒரே நாளில் பார்த்து விட முடியாது. அடர்ந்த காடு போலவும் மென்மையான மலர்க் காட்சிகளோடும் மேமாதத்தில் மாறிவிடும் அவை தான் ஜனவரி, பிப்ரவரியில் இலையற்ற விறகுக்கம்புகள் போல நிற்கும் மரங்களால் வளர்ந்து நிற்கும்.


வசந்தம் வந்துவிட்டால் வாரக்கடைசிகளில் குடும்பத்தோடு போய் வனத்திற்குள் தங்கிச் சமைத்துக் கொண்டிருப்பார்கள். வார்சா பல்கலைக்கழக வளாகமே ஒரு பெரும்பூங்காதான். அதற்குப் போகும் பாதையில் தான் ராயல் பூங்காவும், தேசிய நினைவுச் சின்னத்தோடு கூடிய மலர்த்தோட்டமும் இருக்கிறது.ஒவ்வொரு நாளும் மரங்களின் வண்ணம் மாறிக் கொண்டே இருக்கும். வசந்தம் முடிந்து கோடை வந்துவிட்டால் ஆடைகளைந்து விடுவார்கள். ஆற்றங்கரைகளிலும் பூங்காக்களிலும் சூரியக்குளியலைத் தேடிக் கிளம்பிவிடுவார்கள். கால மாற்றத்தோடு வாழ்க்கை மாற்றத்தை இணைத்துக் கொண்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள் ஐரோப்பியர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்