நகரும் நதிக்கரையில் நடந்தபடி…

நதிக்கரையோரக் கிராம வாழ்வாயினும் நகர வாழ்வாயினும் நீரோடும் நீருக்குள் சுழலும் நினைவுகளோடும் பின்னிப் பிணைந்ததாகவே இருக்கக்கூடும். கவி கலாப்ரியாவின் மறைந்து திரியும் நீரோடை என்னும் கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும்போது நீரின் சிலிர்ப்பைத் தவிர்த்து நினைவின் சுளிப்பைத் தொடரும் பயணமாக மாறிவிட்டதை உணர்ந்தேன். பயணங்கள் எப்போதும் பாதத்தின் நகர்வில் சாத்தியமாகக் கூடியவை. அசையாப் பாதங்கள் அலையா மனதின் உறைவிடம்.
தாமிரபரணி- முதல் பார்வையிலேயே எனக்குள் எதிர்மறையாகப் பதிந்த நதி. பழைமையின் அடையாளங்களோடு அடர்ந்திருந்த நெல்லையையும் புதுமையின் வாசனை பூசிக்கொண்ட பாளையங்கோட்டையையும் இணைக்கும் சுலோசன முதலியார் பாலத்திற்கு அடியில் தாமிரபரணி நகர்ந்து கொண்டிருந்ததையே முதலில் பார்த்தேன். அதற்கு முன் வைகையையும் காவிரியையும் நீரின்றி விரியும் மணற்பரப்பாகவும் குதித்தோடும் அலைப் பரப்பாகவும் பார்த்து நின்றவன். தாமிரபரணியை இப்படி இரண்டு விதமாகவும் பார்க்கவே இல்லை.

“மேற்குத்தொடர்ச்சி மலையில் பெருமழை; அணைகளில் நீர் மட்டம் உயர்வு; பாசனத்திற்கு திறப்பு” எனச் செய்தித்தாள்களில் செய்தி வாசிக்கும் நாட்களிலும் நதி நகர்ந்து கொண்டே தான் இருந்தது. 17 ஆண்டுகளாக நெல்லையில் வசிக்கும் நான் தாமிரபரணியின் சுழிப்பையும் விரைவையும் பார்க்க விரும்பிக் காரையாறு, சேர்வலாறு அணைகளின் நீர்ப்பெருக்கைப் பிரித்து அனுப்பும் கீழணைக்குப் போய்க் குதித்துக் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். சீவலப்பேரிக்குப் போகும்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் நதியில் நீந்திக்குளிப்பதும் உண்டு.

மறைந்து திரியும் நீரோடையாக எப்போதும் தோன்றும் தாமிரபரணியும் நெல்லை மாவட்டத்து நிலமும் நீர்நிலைகளும் நெருங்கி வந்து விலகிச் செல்லும் மக்களும் எனது நினைவு நீரோடைக்குள் நகர்ந்து கொண்டிருப்பவர்களாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். வேறு வழியில்லை. எனது பயணத்தின் தொடக்கம் அப்படி. மலையடிவாரச் சிறுகிராமம் ஒன்றிலிருந்து நீளும் எனது வேர் எப்போதும் மணலூற்றுகளைத் தேடி அலைவதாகவே இருந்திருக்கிறது. பதியப்பெற்ற வெளியில் வேர்பிடிக்காமல் தவித்துக்கொண்டும், அந்நியனாகக் கருதி அலைந்து கொண்டும் இருக்க நேர்கிறது. ஒரு கட்டத்தில் அலைவு தவிப்பாக மாறிவிடும் நெருக்கடியைச் சந்திக்கிறது.

மனித வாழ்க்கைக்கான இருப்பையும் நகர்வையும் பற்றிய நியதிகளைத் நதிக்கரை நாகரிகம் என்னும் செழிப்பிலிருந்து கவிதையாக்கம் என்னும் வண்டல் பரப்பிற்குள் இழுத்துச் செல்கிறார் கவி கலாப்ரியா. தன்னுள்ளும் தன் காலத்தில் கவிதை செய்யும் கவிகளுக்குள்ளும் மறைந்து நெளியும் நீரோடைகள் இருக்கின்றனவா என்ற தேடலின் விளைச்சல்களை விவரிக்கின்றன இந்தக் கட்டுரைகள்.

இந்தக் கட்டுரைகளின் தொனியோடும் விளக்கமுறைகளோடும் இலக்கியக் கல்வியின் கற்பித்தல் முறை அமைய வேண்டும் என நினைக்கும் ஒரு பேராசிரியன் நான். அந்த ஆசையை முழுவதும் நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் குறையை உணர்ந்தவனும் கூட. நீண்ட நெடிய தமிழ்க் கவிதைப் பரப்பிற்குள் தன்னிலையை உருவாக்கித் தன்னை உரைத்தல் என்னும் நினைவோடை – நீரோடை – ஓடி வந்து தான் கவி கலாப்ரியாவாகப் பிரவாகம் கொள்கிறது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கணியன் பூங்குன்றனின் தீர்மானமான தொனியே ஆத்மநாமாக, மனுஷ்யபுத்திரனாக மாறியது என்று நினைப்பது அதன் மறுதலையான எண்ணம். அகமாகவும் புறமாகவும் வகைப்படுத்தப்பட்டு அதற்குள்ளும் புணர்தல் கவிதைகளையும் ஊடல் கவிதைகளையும் பிரிதல் கவிதைகளையும் இருத்தல் கவிதைகளையும், இரங்கல் கவிதைகளையும் கைக்கிளைக் கவிதைகளையும் பெருந்திணைக் கவிதைகளையும் எழுதிக் குவித்த தன்னிலைகளால் நிரம்பியது தமிழ்க் கவிதையின் தொடக்கப் பெருமிதம். அந்தப் பெருமிதத்தின் மறுதலையே நிரை கவர நடத்திய வெட்சிப் போர்க் கவிதைகளும், மண்ணாசை காரணமாக நடத்திய வஞ்சிப் போர் பற்றிய கவிதைகளும், கோட்டைகளைக் கைப்பற்றுவதற்கும் காப்பதற்கும் நடத்தப்பெற்ற உழைஞைப் போர்க் கவிதைகளும், பேரரசுக் கனவுகளோடு நடத்தப்பெற்ற தும்பைப் போர்க் கவிதைகளும், ஒருமுறை கிடைத்த வெற்றியினைச் சுவைத்தபின் தொடர்ச்சியாக ஏறும் வெற்றியின் வெறியால் தூண்டப்பட்டு நிகழ்த்தப்பெறும் வாகைப்போர்க் கவிதைகளும், வெற்றியே வாழ்க்கை; வெற்றி பெற்றவனே கொண்டாடப் படக்கூடியவன் என நம்பிப் பாடப்பெற்ற பாடாண் திணைக்கவிதைகளும், பலப்பல விதமான விருப்பங்களாலும் ஆசைகளாலும் நடக்கும் போட்டிகளாலும் போர்களாலும் கிடைக்கும் வாழ்க்கையின் நிலையாமை பற்றிய காஞ்சிக் கவிதைகளாலும் நிரம்பியது அந்த மறுதலை. செவ்வியல் பெருமிதங்களின் நீட்சியே நீதிக்கவிதைகளாக ஒரு கோட்டையும் பக்திக் கவிதைகளாக இன்னொரு கோட்டையும் நீட்டித்தன. அந்தக் கோடுகளின் கிளைகளைத் தொன்னாற்றாறு வகைப் பிரபந்தங்களில் தேட முடியும்; தனிப்பாடல் திரட்டில் தேடிக் காட்ட முடியும். என்ற நம்பிக்கையும் எனக்குண்டு. என்னுடைய நம்பிக்கையை உள்வாங்கிய பேராசிரியர்களை -விரிவுரையாளர்களை- ஆய்வாளர்களை - நான் உழலும் கல்வித் துறையில் சந்திக்க முடியவில்லை. அப்படிச் சந்திக்க முடியாமல் போன பல நேரங்களில் நான் நாடுவது திறனாய்வாளர்களை-விமரிசகர்களை- படைப்பாளிகளை. எனது பல்கலைக்கழகத்தில் எனது மாணாக்கர்களோடு உரையாடுவதற்காகப் பல தடவை கவி கலாப்ரியாவை நாடியிருக்கிறேன்.

கவிதை பற்றி- குறிப்பாகத் தமிழ்க்கவிதை பற்றி விரிவாகப் பேசும் இந்தக் கட்டுரைத் தொகுப்புக்குள் எனது அழைப்பை ஏற்று எங்கள் துறையில் எம் மாணாக்கர்களோடு பேசிய பேச்சுகள், உரைகள், உரையாடல்கள், முன் வைப்புகள் இருக்கின்றன. இவைகளை நான் நேரடியாகக் கேட்டவன். இவையல்லாமல் மற்ற கட்டுரைகளை வாசித்து வாசித்து வியப்படைபவன். நிகழ்காலக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலரிடம் இல்லாத ஒரு குணம்- ஒரு பண்பு இவரிடம் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தன்காலப் படைப்பாளிகளைக் கொண்டாடும் – பாராட்டும் – முன் வைக்கும் அந்தப்பண்பை முழுமையாக இந்த நூலில் காண்கிறேன். 

சமகாலக் கவிஞர்களுக்குள் மறைந்து மிதக்கும் முன்னோடிகளின் சாயலை எடுத்துரைக்கும் விதமாக அவர்களைக் கொண்டாடுகிறார் கவி கலாப்ரியா. பசுவய்யா, சுகுமாரன், ஞானக்கூத்தன், வண்ணதாசன், ஆத்மாநாம், தேவதேவன், தேவதச்சன், புவியரசு, சிற்பி எனத் தன் சமகாலக் கவிஞர்களைப் பற்றிப் பேசுவதோடு, அடுத்த தலைமுறைக் கவிஞர்களான சங்கரராமசுப்பிரமணியன், என்.டி.ராஜ்குமார், யவனிகா ஸ்ரீராம், கனிமொழி, மனுஷ்யபுத்திரன், தமிழச்சி, முகுந்த் நாகராஜன், இளங்கோ கிருஷ்ணன், சல்மா, குட்டி ரேவதி என ஒவ்வொருவரையும் தேடித் தேடிக் கண்டுபிடித்து வாசித்துக் காட்டியுள்ளார். இப்படியான வாசிப்புக்காட்டல் இலக்கியக் கல்விக்குள் தொடர்ந்து நடக்க வேண்டிய ஒன்று. அது நடக்கவில்லை என்பதை நானறிவேன். ஆசிரியர்களால் சாத்தியமாகாத அதனை நிறைவேற்ற இவரைப் போன்ற ஒருவரை ஒவ்வொரு கல்லூரியும் பல்கலைக்கழகமும் வருடத்தில் ஒருவாரம் வந்து தங்கியிருங்கள்; மாணாக்கர்களோடு பேசிக் கொண்டிருங்கள்; நம் மரபை இயல்பாக எடுத்துச் சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொள்ள வேண்டும் என நினைப்பதுண்டு. அது நடக்காமல் காலம் கடந்து கொண்டே இருக்கிறது.

அதற்குப் பதிலாக இப்போது இந்த நூலை எனது கல்விப்புலத்தினர் வாசிக்க வேண்டியது எனப் பரிந்துரை செய்கிறேன். இப்படிச் சொல்வதால் மற்றவர்கள் வாசிக்க வேண்டியது அல்ல என நான் சொல்வதாகக் கருத வேண்டியதில்லை. தமிழ்க் கவிதைக்குள் ஒரு நீரோடை மறைந்து நகர்ந்து கொண்டிருக்கிறது என நம்புபவர்கள் அதன் தடத்தைப் பிடித்து நடக்க இந்த நூலை வாசித்து ரசிக்கலாம். அந்த நம்பிக்கை இல்லாதவர்கள் இதை வாசித்து முடிக்கும்போது அந்த நம்பிக்கையைச் சிக்கெனப் பற்றிக் கொள்வார்கள்.
பேராசிரியர்கள் செய்யத் தவறும் வேலையைச் சிறப்பாகச் செய்துள்ள கவி கலாப்ரியாவுக்கு, எனக்குள் இருக்கும் குற்றவுணர்வை நீக்கிக் கொள்ளும் விதமாக நன்றி தெரிவிக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்