எழுத்துக்குத் தடை என்னும் பேதமை: மாதொருபாகனை முன்வைத்து



பெருமாள் முருகனின் மாதொரு பாகனை அப்போது  வாசித்திருக்க வில்லை. மாதொருபாகன் (2010) மட்டுமல்ல; 2011-2013 ஆண்டுகளில் வந்த பல நூல்களைப் படிக்கவில்லை. நான் போலந்து நாட்டு வார்ஷா பல்கலைக்கழகம் போனது ஒரு காரணம். இங்கே வந்த பிறகு இப்போது புதிதுபுதிதாக வந்து கொண்டிருக்கும் நாவல்களையே படிக்க நேரம் கிடைக்கவில்லை. அந்த 2 ஆண்டுப் பாக்கி அப்படியே தான் இருக்கப்போகிறது. பெருமாள் முருகனின் மாதொரு பாகனை வாசிக்காமல் விட்டதற்குப் பெரிதாக வருத்தமில்லை. ஆனால் அவரின் நிழல்முற்றம் (1993) நாவலை வாசிக்காமல் இருந்ததற்காக வருத்தப்பட்டதுண்டு.

வார்சாவில் நானிருந்தபோது இந்தியவியல் துறையின் தமிழ் விரிவுரையாளர் முனைவர் யாசெக் வோஸ்னியாக் கையில் ஒரு போல்ஷ்கி மொழிப் புத்தகம் இருந்தது. அதை என்னிடம் காட்டி இந்த நாவலை வாசித்திருக்கிறீர்களா? என்று கேட்டார். எப்போதும் யாசெக் கிண்டலாகவே பேசக் கூடியவர். இப்போதும் கிண்டல் செய்கிறார் என்றே நினைத்துச் சிரித்தேன். பக்கத்தில் நின்றிருந்த மாணவி கஸ்யா, அது தமிழ்க் கதை என்றாள். “அப்படியா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.

பெருமாள் முருகனின் நிழல் முற்றம் போல்ஷ்கி மொழியில் வெளியாகி இருந்ததைத் துறை நூலகத்தில் வைப்பதற்காக வாங்கி வந்திருந்தார். படித்துவிட்டுத் துறை நூலகத்தில் சேர்த்துவிடுவேன் என்றார். ஐரோப்பியப் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அது சாத்தியம். இந்திய ஆசிரியர்கள் இந்தியப் பல்கலைக்கழகத்தில் அப்படிச் செய்ய முடியாது. புத்தம் புதிதாக நூலகக் கணக்கில் சேர்க்க வேண்டும். அப்புறம் அங்கிருந்து எடுத்துப் படிக்கலாம்.துறை நூலகத்திற்கான புத்தகங்கள் வாங்கும் பொறுப்பு வந்த பிறகு சொந்தப் பணத்தில் நூல்கள் வாங்குவது குறைந்துவிட்டது.

யாசெக் கையிலிருந்த புத்தகத்தைக் காட்டி இதைப் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு பெருமாள் முருகனின் இந்த நாவல் மட்டும் தான் வாசிக்கவில்லை. ஏறுவெயில்(1991), கூளமாதாரி(2000), கங்கணம்(2007) முதலான நாவல்களையும் திருச்செங்கோடு சிறுகதைத்தொகுப்பையும் முழுமையாக வாசித்திருக்கிறேன் என்று சொன்னேன். அவர் நம்பவில்லையோ என்று சந்தேகம் தோன்றியதால் பெருமாள் முருகனின் கல்வித் துறை ஆர்வங்கள், புனைவல்லா எழுத்துகள், அகராதித் தொகுப்பு எனப் பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தேன். காலச்சுவடுவில் அவரும் ஆசிரியர் குழு உறுப்பினர் என்ற தகவல்களையெல்லாம் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த யாசெக் இதையெல்லாம் மாணவிகளுக்கும் சொல்லுங்கள் என்றபோது பக்கத்தில் இருந்த கஸ்யா ஏன் சிரித்தாள் எனத் தெரியவில்லை. யாசெக் வோஸ்னியாக் நான் பணியாற்றிய வார்ஷா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர். ஜெயகாந்தன் சிறுகதைகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற போலந்துக்காரர்.

தமிழ் இலக்கியம் படித்துவிட்டு நவீன இலக்கிய வெளியில் பலவிதமான வேலைகள் செய்யும் பேராசிரியர் என்ற வகையில் பெருமாள் முருகனின் பங்களிப்புகள் முக்கியமானவை. புனைவல்லாத எழுத்துகள், புனைவெழுத்துகள், பதிப்புகள், தொகுப்புகள், திரட்டுகள், அகராதிகள் எனப் பல தளங்களில் வேலை செய்பவர். கல்வித்துறை சார்ந்தும், கல்வித்துறை சாராமலும் சம அளவு பங்களிப்பு செய்துள்ளார். இப்படியான வேலைகளைச் செய்வதற்கு அவரது கல்லூரிப் பணி பலவிதங்களில் உதவக் கூடியது. பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றியிருந்தால் இது சாத்தியிருக்குமா? என்று தெரியவில்லை. பல்கலைக்கழக வெளி உண்டாக்கும் அதிகார மனநிலையிலிருந்து தப்பிக்கும் பொறுமை அவருக்கு ஒருவேளை இருக்கலாம்.

பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் எனக்கு அவருக்கிருக்குமளவுக்குப் பொறுமையும் நிதானமும் இல்லையென்றே நினைக்கிறேன். எடுத்துச் செய்யும் வேலையில் காத்திரமான பங்களிப்பைச் செய்துவிட வேண்டும் என நினைக்கும் அந்த மனநிலை எனக்கு இல்லை என்பதை நானறிவேன். எனக்கு அந்தப் பொறுமையும் நிதானமும் இல்லை என்பதை ஐரோப்பாவுக்குப் போனபின்பு தான் உணர்ந்தேன். அந்த மனநிலை இல்லாததால் தான் கவிதைகள், கதை, நாடகம் என எழுதத் தொடங்கிய நான் கண்டதையும் எழுதிக் கழுதையாகிவிட்டேன் என்ற உண்மை இப்போது புரிகிறது.

போதனை, ஆய்வு போன்றவற்றிற்குப் பழக்கப்படும் பேராசிரியர்களின் மனநிலை அமைப்பு, படைப்புத் தளத்தில் செயல்படும் நிலைக்குத் தகவமைப்புக் கொள்வதில் ஒரு சிக்கலைச் சந்திக்கிறது. பாத்திரங்களின் தன்னிலையிலிருந்து விலக்கி வைத்து ஒதுங்கிக் கொள்ளும் இயல்பு கொண்டதாகவே வெளிப்படுகிறது. போதனைத் தன்மை அதன் எளிய வடிவம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால் டாக்டர். மு. வ. வின் நாவல்களை வாசித்திருந்தால் உங்களுக்குப் புரியவரலாம். இந்தப் புனைவுக்கொள்கையே திராவிட இயக்கப் புனைவாளர்களிடமும் வெளிப்பட்டது. அகிலன், நா. பார்த்தசாரதி மாதிரியான கதைக்காரர்கள் கொஞ்சம் விலகித் தாங்கள் நம்பிய கருத்துக்களைத் தாங்கிய பாத்திரங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்பவர்களாக எழுதிக் காட்டிப் போதனை செய்தவர்கள் என்பதையும் நினைத்துக் கொள்ளுங்கள். இயங்கியல் பின்புலம் என்ற வேறுபாடு தவிர பெரிய அளவுக்கு முற்போக்கு நாவல்களும் அந்த வரிசையில் சேரக் கூடியன தான்.

அந்த மன அமைப்பை நவீனத்துவம் சார்ந்த புனைவெழுத்துக்குரிய மன அமைப்பு எனச் சொல்ல முடியாது. பெருமாள் முருகனின் நாவல்கள் இந்த அம்சத்தைக் குறைத்துக் கொண்டு, தனிமனித மனநிலையின் எண்ண ஓட்டங்களைக் கூடுதலாக்குவதன் மூலம் வித்தியாசம் காட்டுகின்றன. அதே நேரத்தில் வரலாறு மற்றும் தொல்மன விருப்பம் என்பதை ஆதாரமாக்கிக் கொண்டு, விவரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு உண்மைத்தன்மையை உண்டாக்கப்பார்க்கின்றன. நுட்பமான விவரணைகளின் வழியுருவாகும் சித்திரங்களும் அவருக்கு உதவுகின்றன.

அவரது எழுத்துகளைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு, மாறிக் கொண்டிருக்கும் இலக்கியப் போக்கிற்கேற்பத் தனது எழுத்தின் அமைப்புக்குள் கதைகளை உருவாக்கிக் காட்டுபவர் அவர் என்பது புரிய வரலாம். அவரது சொந்த வாழ்க்கைக்கும் நம்பும் கருத்தியலுக்கும் அவரது எழுத்துகளுக்கும் நேரடித்தொடர்பு எதனையும் ஒரு விமரிசகன் சுட்டிக் காட்டிவிட முடியாது. மொத்தமாக வாசிக்கும்போது இதுதான் பெருமாள் முருகனின் எழுத்தடையாளம் அல்லது கருத்தியல் நிலைபாடு என்று சொல்வதற்குத் திணற வேண்டிய நெருக்கடியை உருவாக்கக் கூடியவர். நவீனத்துவம் சார்ந்து இதைப் படைப்பின் பலவீனம் என்றும் தட்டையான எழுத்துக்குரியவர் என்று விமரிசனம் செய்யக்கூடும். ஆனால் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும்போது இவரது எழுத்துகளே அதிகக் கவனம் பெறும் என்பது சுவையான முரணிலை. இந்தப் பின்னணியில் தான் அவரது மூன்று நாவல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதின் பின்னணியைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் இந்தியமொழி மற்றும் இந்திய இலக்கியங்களைக் கற்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் இந்திய நவீனத்துவத்திற்குள் செயல்படும் இந்தியவியல் கூறுகளையே அதிகம் எதிர்பார்க்கின்றனர். அதிலிருந்து விலகிய – தனிமனிதவிடுதலையை முன்னிறுத்தும் முழுமையான நவீனத்துவத்தை எதிர்பார்ப்பதில்லை. சாதி மற்றும் மத அடிப்படைவாதிகளால் சர்ச்சையாக்கப்பட்டிருக்கும் மாதொரு பாகனின் மையம் ஐரோப்பியர்கள் விரும்பக்கூடிய முக்கியமானதொரு இந்தியவியல் கூறு. மனித இயலாமையைக் கடவுளின் பெயரால் நிகழ்த்திக் காட்டும் சாகசத்தை ஐரோப்பிய நவீன அறிவு எப்போதும் ஒத்துக் கொள்ளாது. ஆனால் நம்பிக்கைசார்ந்த இந்திய மரபுமனம் கேள்விகள் அற்று ஏற்றுக் கொள்ளும்.

புத்தொளிக்கால அறிவு உருவாக்கிய சிந்தனையின் பேரால் பலவற்றை ஏற்றுக் கொள்ளவும் சகித்துக் கொள்ளவும் முடியாமல் போன நவீனத்துவ மனிதர்களாக அலையும் ஐரோப்பியர்கள், ஏதாவதொன்றின் பெயரால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளவும் சகித்துக் கொள்ளவும் முடிகிற இந்தியர்களைக் கொஞ்சம் பொறாமையோடும் விநோதத்தோடும் பார்க்கிறார்கள். மாறிவிட்ட குடும்ப அமைப்பின் சிக்கலால் தவிக்கும் ஐரோப்பியர்களுக்கு இந்திய சமூக நிறுவனங்கள் பெரும் புதிர்களாகவே இருக்கின்றன. எக்காரணம் கொண்டும் பிரிந்துவிடக் கூடாது என நினைக்கும் இந்திய மனிதர்களுக்கு ஆதரவாக இருக்கும் நம்பிக்கைகளும் அமைப்புகளும் உண்டாக்கும் அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றன. மாதொரு பாகன் அதற்கொரு உதாரணமென்றால், அடிமையாக இருக்கிறோம் என்பதை உணராமல் சகித்துக்கொண்டு சாதியமைப்பை ஏற்றுக் கொள்ளும் கூளமாதாரி இன்னொரு உதாரணம். இந்த நிலைபாட்டில் நின்று பார்க்கும்போது பெருமாள் முருகனின் எழுத்துகள் இந்தியவியலைப் பரப்பும் எழுத்துகள் என்றே கருத வேண்டிய எழுத்துகள்; இந்துத்துவத்தைப் பரப்பும் எழுத்துகள் அல்ல.

ஆனால் மாதொருபாகனை முன் வைத்து அவரது எழுத்துகளைத் தடை செய்யவேண்டும் எனச் சொல்பவர்களுக்கு இந்துத்துவமும் தெரிந்தமாதிரி தெரியவில்லை; இந்தியவியலும் தெரியவில்லை. தனது விரித்துப் பேசும் தர்க்கங்களின் வழியே அதிகாரத்துக்கு வந்துள்ள இந்துத்துவ மையத்தைக் காப்பாற்றும் வாதங்களை முன் வைக்கும் எழுத்தாளர் ஜெயமோகனும் கூட இரண்டையும் ஒன்றாகவே முன் நிறுத்தப்பார்க்கிறார். பரசமயங்களை யெல்லாம் தனது பிரிவுகளாக மாற்றி உள்ளிழுத்து இந்து சமயத்தின் அறுசமயப்பிரிவுகளாகக் காட்டும் இந்துத்துவ ஒற்றை மரபை இந்தியத் துணைக்கண்டம் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. மைய நீரோட்டமாகவும், துணைப்போக்காகவும் வழிபாட்டு முறைகளும், தத்துவ மரபாகவும் கிளைகள் எப்போதும் இயங்கிக்கொண்டே தான் இருந்தன. அதுதான் இந்தியவியல். ஆனால் நிகழ்காலத்தில் இந்தியா என்னும் ஒற்றை தேச அடையாளத்தை உருவாக்க நினைக்கும் அரசியல் சக்திகள் இந்தியவியலைப் பலிகடாவாக ஆக்க நினைக்கின்றன. சகிப்புத் தன்மையையும் ஏற்புத்தன்மையையும் மன அமைப்பாகக் கொண்ட இந்தியவியலை – இந்திய ஞான மரபை முன்னிறுத்தாமல், ஒற்றை அடையாளத்திற்குள் எல்லாவற்றையும் இணைத்துக் காணாமல் ஆக்கிவிடும் இந்துத்துவத்தை இந்தத் தேசத்தின் சாராம்சமாகக் காட்டவும் கட்டமைக்கவும் பார்க்கின்றன.
பெருமாள் முருகனின் விலகி நிற்கும் மன அமைப்பே இப்போது எதிர்ப்பாளர்களின் கோபத்திற்குக் காரணமாக ஆகியிருக்கிறது எனத் தோன்றுகிறது. படைப்புக்கான காலஉருவாக்கத்திலும் மையப் பாத்திரங்களிலும் புனைவுத் தன்மையை உருவாக்கும் பெருமாள் முருகன் கதைக்களனை- புனைவு வெளியாக மாற்றாமல் உண்மைவெளியாகத் தரும்போது உண்டாகும் பிரச்சினைகளே எதிர்ப்பாளர்களின் கோபத்தைத் தூண்டியிருக்கின்றன. மாதொரு பாகனின் மையம் உருவாக்கியிருக்கும் விமரிசனங்களிலிருந்தும் சர்ச்சைகளிலிருந்தும் இதைப் புரிந்துகொள்ள முடியும். முகநூலில் அவரது திரியில் தொடர்ந்த வாதங்களையும் எதிர்வாதங்களையும் பொறுமையாக வாசித்தபோது இது தெளிவாகவே புரிந்தது. கடவுளர்களை மையமிட்டு உருவாக்கப்பட்ட கதைகளைப் பெரியார் ஈ. வெ. ராமசாமி அணுகியதைப் போன்றதொரு அணுகுமுறையைப் பெருமாள் முருகனின் விவரிப்பில் வாசிக்க நேர்ந்தவர்களுக்கு இயல்பாகவே எதிர்ப்பு உண்டாகக் கூடும். குறிப்பான வெளியில் – திருச்செங்கோடு என்னும் தங்களது ஊரின் பரப்பில் இருக்கும் கடவுளையும் அதன் விழாவையும் சடங்கு நிகழ்வையும் எழுதும்போது இந்தக் கோபம் கூடுதலாகியிருக்கிறது. அந்தக் கோபம் ஓரளவு நியாயமானது என்றாலும், ஈ. வெ.ரா. வின் அணுகுமுறை பொதுநிலைப்பட்ட விமரிசன நோக்கம் கொண்டது என்பதையும் பெருமாள் முருகனின் அணுகுமுறை தொன்ம நிகழ்வைப் புனைவாக்கி ஆச்சரியப்படும் நோக்கம் கொண்டது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். கோபப்படும் எதிர்ப்பாளர்களுக்கு இருக்கும் அதே ஊர்ப்பற்றும் ஆச்சரியமும் பெருமாள் முருகனிடம் எதிர்நிலையில் பயணம் செய்துள்ளது என்ற வேறுபாட்டையும் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் பற்றும் ஆச்சரியமுமே அவரை எழுதத்தூண்டியுள்ளது

மாதொரு பாகனை மையமிட்டு பெருமாள் முருகனை எதிர்ப்பவர்களுக்கு வரலாற்றை- இலக்கியத்தில் ஏற்கப்பட்ட சகிப்பின் வரலாற்றைக் கொஞ்சம் நினைவூட்டலாம் என நினைக்கிறேன்:

ராமாயணம் என்னும் பேரிலக்கியம் எப்போதாவது அரசாங்கத்தின் ஆதரவு இலக்கியமாக இருந்ததா? என்று கேட்டால் இலக்கிய வரலாறு சரியாகத் தெரிந்தவர்கள் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். வால்மீகி எழுதிய ராமனின் கதையை வடமொழியிலிருந்து தமிழில் தழுவியெழுதினார் கம்பர் என இலக்கிய வரலாறு கூறினாலும், கவி கம்பனின் இலக்கிய ஆளுமையால் புதுக் காப்பியமாக-பேரிலக்கியமாகக் கம்பனின் இராமாயணம் திகழ்கிறது என்பதை அதை வாசிப்பவர்களும் வாசிக்கக் கேட்பவர்களும் உணரக் கூடும். தமிழில் மட்டுமல்ல; ராமனின் கதையை மலையாளத்தில் எழுதிய எழுத்தச்சனாக இருந்தாலும் சரி, ராமசரித மானஸாக எழுதிய துளசிதாசனும் சரி அதை ஒரு மூல இலக்கியமாகவே ஆக்கியிருக்கிறார்கள். எழுத்தில் வந்த ராமனின் கதைகள் மட்டுமல்ல; வாய்மொழி வழக்காறுகளில், அரங்கியல் பிரதிகளில் என எதிலுமே ராமனின் கதை தழுவலாக இல்லாமல் மூலப் பிரதியாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ராமனை எதிர்க் கதாநாயகனாக்கி ராவணனை நாயகனாக ஆக்கிக் காட்ட முயன்ற புலவர் குழந்தையின் இராவண காவியமே ஒரு வாசகனுக்குக் காவியத்தின் சுவையைத் தரவல்லதாகவே இருக்கிறது.

ஒட்டு மொத்த இந்தியாவிலும் ராமாயணம் எப்போதும் அரசாங்க இலக்கியமாக இருந்ததில்லை என்றே தோன்றுகிறது. அது எழுதப் பட்ட காலம் தொடங்கியே தமிழ் நாட்டை ஆள்பவர்களின் ஆதரவைப் பெற்றதாக இல்லை. சைவ ஆதரவு அரசாங்கமாக இருந்த சோழப் பேரரசு காலத்தில்– குலோத்துங்க சோழனின் காலத்தில் வாழ்ந்த கவி கம்பனை ஆதரித்தவர் வள்ளல் சடையப்பர். அவரது ஆதரவில் எழுதப்பட்ட ராமாயணம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று மக்கள் மனதில் பதிந்த இலக்கியமாக ஆகி விட்டது. ஆனால் குலோத்துங்கனின் ஆதரவு பெற்ற ஒட்டக்கூத்தரின் படைப்புகளோ இலக்கிய வரலாற்றில் வாசிக்கப் படாத இலக்கியப் பிரதிகளாக நின்று போய்விட்டன.

ராமாயணக் காப்பியத்தின் பாட்டுடைத்தலைவனான இராமனின் பாத்திர வார்ப்பும், அப்பாத்திரம் திருமாலின் அவதாரம் எனக் கவி கட்டி எழுப்பியுள்ள திறனும், அவ்வாறு கட்டி எழுப்புதற்குப் பயன்படுத்தியுள்ள கிளைக்கதைகளும், காப்பிய போக்கில் இருக்கும் திருப்பங்களும், அதன் வழியாக உருவாக்கப்படும் உணர்ச்சிகளும், உணர்ச்சி மோதல்களும் என ராமாயணம் அதன் இலக்கிய நயத்திற்காகவும், நுதலும் பொருளுக்காகவும் எப்போதும் பெருங்கூட்டத் தினரைக் கவரும் இலக்கியமாக இருந்துள்ளது. ராமனின் பால் ஈர்ப்பும் பக்தியும் கொண்டவர்கள் இராமாயணத்தை வாசித்தார்கள் என்பதைத் தாண்டி ராமன் மீது பக்தி அற்றவர்களும் காப்பிய நயத்திற்காக வாசித்தார்கள் என்றே சொல்லலாம்.

ராமபக்தி, காப்பிய ஈடுபாடு என்பதைத் தாண்டி ராமாயணம் இருபதாம் நூற்றாண்டில் தீவிரமாக வாசிக்கப்பட்ட இலக்கியம் என்பதும் உண்மை. ராமன் என்னும் கடவுள் தன்மையை, பிம்ப உருவாக்கத்தை எதிர்க்க வேண்டும்; அதன் வழியாக உண்டாக்கப்படும் மூட நம்பிக்கைகளிலிருந்து படித்தவர்களையும் பாமர மக்களையும் மீட்க வேண்டும் என நம்பிய திராவிட இயக்கத்தவர்களும் பகுத்தறிவாளர்களும் அதிகமாக வாசித்த காப்பியம் ராமாயணம் என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான சி.என். அண்ணாதுரையின் எழுத்துக்களை வாசிப்பவர்கள் உணரக்கூடும். கம்பரசம், தீப்பரவட்டும் போன்ற நூல்களை எழுதிய அண்ணா இராமாயணத்திற்கு எதிர்நிலைப் பாட்டை எடுத்தவர். ஆனால் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தை வாசிக்கும் போது ஒரு கருத்தியலை எதிர்ப்பதற்காக அதனைப் பேசும்- அந்தக் கருத்தியலை முன் வைக்கும் ஒரு நூலை எவ்வளவு ஆழமாகப் படிக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை உணரலாம். அதனை ஒரு நாடகம் என்பதை விடவும் மிகச் சிறந்த திறனாய்வு நூல் என்று சொல்லுமளவுக்கு ராமாயணத்தை மீளாய்வு செய்துள்ளது அந்த நூல்.

ராமாயணத்தை எதிர்நிலைப்பாட்டோடு விமரிசனம் செய்த திராவிட இயக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக அன்றைய காலகட்டத்து அறிஞர்களான நாவலர் சோமசுந்தரபாரதியார், அ.ச.ஞானசம்பந்தன், மக்கள் தலைவர் ப.ஜீவானந்தம், எஸ்.ஆர்.கே. என அழைக்கப்பட்ட எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எழுதிய ராமாயண நூல்களும், மேடைப்பேச்சுக்களும் இராமனை மையப்படுத்தி எழுதப்பட்ட/பேசப்பட்ட கொடைகள். அறிவின் பாற்பட்ட ராமாயண ஆதரவு மற்றும் எதிர்ப்புக் கருத்துக்கள் கொண்ட இருவகை நூல்களுமே எப்போதும் வாசிக்கத் தக்கன; விவாதிக்கத் தக்கன. ஆனால் இன்று இராமனின் பேரால் நடத்தப் படும் செயல்கள் எத்தைகையன என்று யோசித்தால் மிகுந்த வருத்தம் தரக்கூடியனவாக உள்ளன.

ஒரு மனிதனின் தன்னுடைய செயல்பாட்டிற்காகப் பெருமை கொள்ளவும் முடியும். செய்து முடித்த பின்பு இப்படிச் செய்து விட்டோமே என்று குற்ற வுணர்வுடன் சிறுமைக்குள்ளாகவும் முடியும். உங்கள் செயல்பாடு பெருமைக்குரியதா? சிறுமைக்குரியதா? என்பதை மற்றவர்கள் உணர்த்துவதை விட நாம் உணர்வதில் தான் தன்னிலையின் அடுத்த கட்டப் பயணம் இருக்கிறது. ராமாயணத்தை மையப்படுத்தி எனக்கு ஒரே நேரத்தில் பெருமிதமும் குற்றவுணர்வும் உண்டான நிகழ்வு ஒன்று உண்டு. பாண்டிச்சேரி கம்பன் கழகத்தில் ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு முன்னாள் அந்த நாடகத்தை அரங்கேற்றினேன். தமிழின் மிக முக்கியமான புனைகதை ஆசிரியரும் மனித நேயமும் முற்போக்குப் பார்வைகளையும் கொண்ட பாத்திரங்களையும் படைப்பவராக வலம் வரும் பிரபஞ்சன் எழுதிய மிகச்சிறிய நாடகம் அது. ராமாயணத்தின் கிளைக்கதைகளுள் இடம் பெறும் அகலிகையை மையப் பாத்திரமாக்கி, இப்போதைய பெண்ணின் பிரதிநிதியாக அவளை மேடையில் கொண்டு வந்து நிறுத்தும் நாடகம். நாடகத்தின் உச்ச நிலையில் அல்லது நிறைவுக் காட்சியில் ராமனின் கால் பட்டு கல்லாக இருந்து உயிர் பெறும் அகல்யாவை ராமனுடன் வரும் விசுவாமித்திரர் ‘தீர்க்க சுமங்கலி பவ’ என வாழ்த்துவார். அப்படி வாழ்த்தியவுடன் அகல்யா கேட்கும் வசனமாக பிரபஞ்சன் எழுதிய வரி இது: ‘யாரோடு? இந்திரனோடா? கௌதமனோடா?’ அகல்யாவின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் விசுவாமித்திரன் திகைத்து நிற்க, அவனோட வந்த ராம லக்குவர்களும் திகைத்து நிற்பார்கள். தனது கேள்விக்கு மூவரிடமிருந்தும் பதில் இல்லை என்ற நிலையில் திரும்பவும் அகல்யா நகைப்புத் தோன்றும் புன்முறுவலுடன் கல்லான நிலையைக் காட்டி நாடகத்தை முடித்து இருந்தோம். நாடகம் முடிந்த போது பாண்டிச்சேரி கம்பன் கழகத்தில் நிரம்பி யிருந்த இரண்டாயிரம் பேரும் கரவொலி எழுப்பிப் பாராட்டினார்கள். ஆனால் என்னிடம் நாடகம் போட வேண்டும் எனக் கேட்டு முன் பணம் தந்த கம்பன் விழா ஏற்பாட்டாளருக்கு அந்த நாடக நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.என்றாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் கம்பன் கழகம் புதுமைக்கும் வழி வகுக்கும் எனப் பேசிச் சால்வையை அணிவித்து விட்டுப் பின்னர் தனியாகத் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். நாங்கள் காண்பிக்க விரும்பும் ராமன் கடவுள்; எல்லாக் கேள்விகளுக்கும் அவனிடம் பதில் உண்டு; ஆனால் உங்கள் நாடகம் அவனைத் திகைத்து நிற்கும் ஒரு மனிதனாகக் காட்டி விட்டது எனச் சொன்னார். பார்வையாளர்கள் ரசித்தார்களே எனக் கேட்ட போது கும்பல் எல்லாவற்றையும் ரசிக்கத்தான் செய்யும். ஆனால் அந்தக் கும்பலுக்கு எதனைத் தருவது என்பதை இதுவரை நாங்களே முடிவு செய்தோம். ஆனால் இந்த நாடகத்தின் மூலம் அதை மாற்றி விட்டீர்கள். வருத்தத்தான்; ஆனால் வாழ்த்துகிறேன் என்றார்.

ஒரு பெண்ணிய நாடகத்தை- அதற்கு எதிரான மனநிலை கொண்ட பார்வையாளர்களின் முன்னால் நடத்திக் கைதட்டல் வாங்கிய பெருமிதம் அந்தப் பெரியவர் – கம்பன் கழகச் செயலர் புலவர் அருணகிரியின் பெருந்தன்மைக்கு முன்னால், எதிராளியின் கருத்தை- கலைப் பார்வையை- முன் வைக்கும் திறனை மதிக்கும் நேர்மைக்கு முன்னால் நான் கொஞ்சம் சிறுத்துத் தான் போனேன். எனது செயலில் நான் நேர்மையோடு இருக்கிறேன் எனப் பெருமிதம் கொள்ளும் அதே நேரத்தில் புலவர் அருணகிரியும் அவ்வாறே இருந்தார் என்பதை அறிவார்த்தமாக யோசித்த போது எனது பெருமிதம் குற்றவுணர்வுக்குள்ளானதை இப்போதும் மறுக்க முடியாது. வென்றிலன் என்ற போதும் என்ற கம்பனது வரிக்கு உதாரணமாக அருணகிரி நின்றார் என்பது புரிந்தது. இந்தப் பெருங்குணத்தை நிகழ்கால இந்துத்துவக் கோஷ்டிகளிடம் எதிர்பார்க்க முடியாதுதான்.

அகல்யா நாடகத்தை- நாடகத்தின் அந்த முடிவைப் பார்வையாளர்கள் முன்னால் வெறும் வசனங்களாகச் சொல்லியிருந்தால் அந்தக் கரவொலி கிடைத்திருக்காது என்பதை நான் அறிவேன். அகலிகையும் இந்திரனும் முன்பிருந்தே காதலர்கள்; கௌதமன் தான் இடையில் புருஷன் என்ற அதிகாரத்துவப் பதவியில் வந்து அவளை வதைத்தவன் என்பதாகப் பிரபஞ்சன் உருவாக்கியிருந்த நாடக நிகழ்வின் வசனங்கள் பெண்ணின் மன உணர்வை மட்டும் உடலின் மொழியையும் பேசவல்லனவாகவே எழுதப்பட்ட பிரதி. காதலும் காமமும் எனப் பிரிக்க முடியாத கவிதை வரிகளை எனது நடிகர்களான மனு ஜோஷும் உஷா ரகுராமனும் தங்கள் உடல் மொழியால் பலவிதமான காட்சித் தளங்களுக்குள் கொண்டு போனார்கள்; பார்த்துக் கொண்டிருந்த பெருங்கூட்டத்தைக் கட்டிப் போட்ட அந்த நடன அசைவுகளும், உடலின் கோடுகளும், வீணை இசையின் ஆலாபனைகளும் சேர்ந்து அகலிகையின் நிலையை-கண்டு கொள்ளாத கணவனால் புறக்கணிக்கப் படும் பெண்ணின் – நிகழ்காலப் பெண்ணின் ஏக்கமாக மாற்றிக் கட்டமைத்துக் காட்டிய போது பார்வையாளர்களின் மனம் திளைத்துப் போய் கைதட்டி நின்றது. ஆனால் அந்த நாடகம் பின்னர் ஒரு பல்கலைக்கழகத்தில்- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படிக்கக் கூடிய நாடகமாக இல்லை என மாணவர்களாலும், நடத்தக் கூடிய நாடகமாக இல்லை என ஆசிரியர்களாலும் எதிர்க்கப்பட்டது. அதுவும் அந்த எதிர்ப்பை முன்னெடுத்தவர்கள் இடதுசாரிக் கட்சி ஒன்றின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் பெருமன்றம் என்பதை அறிந்த போது மனம் அடைந்த வேதனை சொல்ல முடியாத ஒன்று.

பெருமாள் முருகனின் மாதொருபாகனைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைப்பவர்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை – சகிப்பையும் ஏற்பையும் அடையாளமாகக் கொண்ட இந்திய வாழ்வியல் பண்பாட்டைச் சிதைக்கப்பார்க்கின்றன. இது பெருமாள் முருகனுக்கோ, அவரது எழுத்துக்கோ விடப்படும் சவால் அல்ல; இந்திய அறிவுத் தோற்றவியலுக்கும் சிந்தனை முறைக்கும் விடப்படும் சவால்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்