பூங்குழலியும் மதியழகனும் - கவிதை வாசிப்பு 1 :



கவியின்பம் அல்லது இலக்கிய இன்பம் என்ற தலைப்புகளில் நான் மாணவனாக இருந்த காலத்தில் எனக்குக் கிடைத்ததுபோல இப்போதைய மாணாக்கர்களுக்கு - இப்போது எழுதப்படும் இலக்கியங்கள் பற்றி எடுத்துச் சொல்லும் எழுத்துக்கள் இல்லை. இலக்கியம் பற்றி எழுதப்படுவன எல்லாமும் விமரிசனங்களாக - விமரிசனங்கள் என்ற பெயரில் போற்றுவது, தூற்றுவது, தள்ளி வைப்பது, கூட்டம் சேர்ப்பது, இருட்டடிப்பு செய்வது, வெளிச்சம் போட்டுக் காட்டுவது எனத் தொடர்ந்து நடக்கிறது. நடப்பது நடக்கட்டும். நடப்பது நன்றாக நடக்கவில்லை என்பது மட்டும் புரிகிறது

நேற்று வந்த மார்ச் மாத அம்ருதாவை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  முதல் புரட்டலில் வாசிக்க நினைப்பவை அதில் வரும் கவிதைகள். அதிகம் போனால் இரண்டு மூன்று பேருடைய கவிதைகள் இடம் பெற்றிருக்கும். முதல் வாசிப்பில் பிடித்துப் போனால் திரும்பவும் வாசிப்பேன். ஏற்கெனவே அறியப்பட்ட கவிஞரின் அறியப்பட்ட சொல்முறையாக இருந்தால் சலிப்போடு விட்டுவிலகி விடுவேன். புதிய கவியாகவும் புதிய சொல்முறையாகவும் இருந்தால் இன்னும் சில தடவைகள் வாசிக்கலாம் என்று தோன்றும். பூங்குழலி கவிதைகள் என்று தலைப்பிட்டு 64- 65 ஆம் பக்கங்களில் கவிதைகள் அச்சாகி இருக்கின்றன. இந்தக் கவிதையை எழுதிய பூங்குழலியின் படமும் இடம் பெற்றிருக்கின்றது. அண்மையில் மலேசியா போனபோது அந்தப் பெண்ணைப் பார்த்தது உடனே நினைவுக்கு வந்தது. கவிதைகளை வாசிக்க இதுபோதும். இப்போது பூங்குழலியின் கவிதைகள்

1

பதியன்களில் வாழும் பால் மரக் கன்றுகள்

பால்ய நினைவுகளை

மீட்டுத் தரக்கூடும்

காலம் தவறா உரமும்

கடிபடா கண்காணிப்புமாக

மிச்சமிருக்கும் வாழ்விற்கான

ஊக்கமருந்து ஏற்றப்படுகிறது.

பதியன்கள் நிலங்களில் நடப்பட்டபோது

விடுதலையும்

அடுத்த கட்ட போராட்டத்தையும் சேர்த்தே

அளித்த பெருந்தவம்

ஏழாண்டுகள் கழிந்து பள்ளிச் செல்லும்

பருவம் நமக்கு

பால் தரும் பருவம் மரத்திற்கு

காயப்படுவது கடமையின்

ஒரு பகுதி

நாள்கள் நொறுங்கி நகரத் தொடங்கும்

காலம் மீதேறி பயணிக்கும்

வடுக்கள் வயதைக் கூட்ட

வாழும் காலம் குறைய

கழித்தெடுக்கப்படும்போது

எஞ்சி நிற்பது எது?

2.

பல ஆண்டுகளாக
நானும் வளர்ந்திருக்கிறேன்
உன்னைப்போலவே
உன்னோடு உண்டுகளித்து நீ உறவாடிய நட்பு
என் வேர்களில் உயிர்த்திருக்கிறது
நீ என்னையும்
நான் உன்னையும் வாழ்வித்திருப்பது
சொற்களில் புதைக்கப்பட்டிருக்கிறது
இலைகள் உதிரத் தொடங்கும்
தருணம்
உன் நரம்பேறிய விரல்கள்
வடுக்களை தடவிப் பார்த்து
ஓரிரு கண்ணீர் துளிகளை உதிர்த்து
என் பாலை உண்டு நீயும்
உன் இரத்தம் உண்டு நானும்
காலம் தின்று கரைத்த
நம் வாழ்வு

3.

பற்றி எரியும் பால் மரங்கள்
இலைகளை உதிர்க்கிறது
ஒரே தொனியில் கேட்கும்
அதன் விதைகள்
வெடித்து விழும் சத்தம்
உக்கிரமாகி காதைக் கிழிக்கிறது
இப்போது வடுக்களில் பாலுக்கு
பதில் இரத்தம் அமிலம் நஞ்சு
கூலியாய் வந்ததாய் மீண்டும் மீண்டும்
சொல்வதில்
இப்போது எந்தக் கேள்வியும் இல்லை
எந்தப் போராட்டமும் இல்லை
என்னிடம் மீந்திருப்பது ஒரு பழைய வெட்டுக் கத்தி
வன்முறைகளில் பீறிட்டு தெரிக்கிறது பால்மர இரத்தம்
மீண்டும் வரலாறு எரிந்து விழுகிறது


4.

வேர் தின்ற மரங்கள்
தார் சாலைகளாய்
வழுக்கிக் கொண்டு ஓடினாலும்
மர வேர்களில் கால் சிக்கி
காயம்பட்ட நினைவுமட்டும்
வந்துவிட்டு போகிறது
ஒரு நொடிப் பொழுதேனும்...

5.

ரப்பர் மரம் என்பது
வெறும் மரமென மட்டும்
அறியப்படும்போது
காட்சியகங்களில் தொங்கிக் கொண்டிருக்கும்
புகைப்படங்கள்
உங்கள் நினைவலைகளில் ஒரு புள்ளியை
உருவாக்கலாம்

பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும்
இரப்பர் மரம்
வரலாற்று சம்பவத்தை
நினைவுபடுத்தலாம்
தேர்வுகளுக்கு கேள்வியாகக் கூட கேட்கப்படலாம்

இரப்பர் மரம் என்பது
மரம் மட்டுமல்ல
அதன் மண்ணுக்குள்
புதையுண்ட
என் தாத்தன்
என் அப்பன்
அவர்களுடைய வாழ்வும்



6.

வியர்வையும் இரத்தமும் சேர்த்துப்
கரைத்து ஊற்றிய உயிரும்
காடாய் வளர்ந்து
இரப்பர் தோட்டங்களாயின
வர்ததகமானது பணமானது
நாடானது
நூற்றாண்டுகளானாலும்
கூலியாய் வந்ததாய் மீண்டும் மீண்டும்
குத்தப்படும் முத்திரை
இப்போது எந்தக் கேள்வியும் இல்லை
எந்தப் போராட்டமும் இல்லை
முணகல்கள் இல்லை
என்னிடம் மீந்திருப்பது ஒரு பழைய வெட்டுக்கத்தி
ரப்பர் பாலின் ஈரவாடையோடு
-------------------------------------------------------------------
பூங்குழலியின் 6 கவிதைகள் என நினைத்து வாசிக்கத் தொடங்கினால் ஒவ்வொன்றும் முதலொன்றின் தொடர்ச்சி என்பது போல நீண்டுகொண்டே போயின. ஆறையும் வாசித்தால் ஒவ்வொன்றும் வேறல்ல; ஒன்றே என்று தோன்றியது. பூங்குழலியின் கவிதைகள் எனத் தலைப்பிடாமல், கவிதைக்குள் இருக்கும் உரிப்பொருளாக - ரப்பர் தோட்டங்களை இழந்த மலேசியத் தமிழர்களின் மனதை - இழப்பின் துயரத்தை - திரும்பப் பெற நினைக்கும் ஆசையை - அதற்கான போராட்ட முறையை அறியாத தவிப்பையென ஏதாவது ஒரு நிலையைத் தலைப்பாக்கியிருந்தால் கவிதையை ரசிக்கவும் ஈடுபாடுகொள்ளவும் உதவியாக அமைந்திருக்கும். தொடக்க நிலையில் கவிதைக்குள் இருக்கும் சொல்லி -கூற்றாளர்- (Narrator) எனத் தெரியாமல் வாசிக்கும்போது கவிதையை பிடிபடாமல் திகைக்கச் செய்கிறது. கொஞ்சம் தாக்குப் பிடித்து வாசித்துவிட்டால் உண்டாக்கும் வெளியும் உணர்வுகளும் நிதானமாக யோசிக்கச் செய்வனவாக இருக்கின்றன. வாசகருக்கு உதவாத வகையில் தலைப்பிடாமல் வெளியிட்டது அம்ருதாவின் ஆசிரியரா? கவிஞரா? எனத் தெரியவில்லை. சரி . அது போகட்டும்.
வாழ்விட வெளியின் இழப்பு தரும் துயரமே நிகழ்கால இலக்கியத்தின் முக்கியப் பாடுபொருளாக இருக்கிறது என நிலவியல் பண்பாட்டாளர்கள் சொல்கிறார்கள். இடம்பெயர்வதாகவும், புலம்பெயர்வதாகவும் ஆகிவிட்ட நம்கால வாழ்க்கையை எழுதும் இலக்கியம் வெளிகளோடு - வீடு,காடு, தோட்டம், துரவு, கிராமம், அதன் நீர்நிலைகள், மனிதர்கள், காதல் நினைவுகள் என இழந்துபோனவற்றையே பதிவு செய்கின்றன. அதிலும் கவிகள் இதில் கை தேர்ந்தவர்கள்.
பூங்குழலி என்னும் இந்தச் சின்னப்பெண்ணும் முதிர்ந்த கவியாக இழப்பின் துயரத்தைப் பதிவு செய்துள்ளாள். பால்மரக்காடாக நான் நினைத்துக் கொண்டிருந்த மலேசியாவின் ரப்பர் தோட்டங்கள் செம்பனைகளாக மாறிய காட்சிகளை தரையிலோடிய பேருந்திலும், வானத்தில் பறந்த விமானத்திலும் சென்ற போது  பார்த்துக் கொண்டே வந்தேன். அந்தக் காட்சிகளைப் பூங்குழலியின் கவிதைகள் திரும்பவும் நினைவுக்குக் கொண்டு வந்துவிட்டன. நம் நினைவுகளைத் திருப்பிக் கொண்டுவந்து திளைக்கச் செய்வது அல்லது அழச்செய்வது இலக்கியம் தரும் இன்பமாக இருக்கிறது.
பூங்குழலியின் கவிதைகளை வாசித்தபோது தனது கிராமமும் அதன் நிலவெளியும் மனிதர்களும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புலம்பலாக இல்லாமல் இல்லாமல் அடுக்கியடுக்கிக் கவிதைகளாக ஆக்கிய பி. மதியழகன் நினைவுக்கு வந்தார். பாண்டிச்சேரியில் இருந்தபோது அவர் எழுதும் கவிதைகளை வாசித்துப் பேசிக்கொண்டிருப்போம். பத்திரிகைகளுக்கு அனுப்பச் சொன்னால் அனுப்ப மாட்டார். கையெழுத்துத் தொகுப்பாக ஆக்கி அப்போதே-2000-க்கும் முன்பே- வாசித்தவை அவை அவரது கவிதைத் தொகுப்பைக் காலச்சுவடு வெளியிட்ட ஆண்டு 2012. பாண்டிச்சேரி நகரத்தில் வாழ நேர்ந்தபின் அவரது நினைவுகள் பெரம்பலூர் மாவட்டக் கிராமத்திலேயே நிலைகொண்டிருக்கிறது என்பதையும், அந்த வாழ்க்கையை நிகழ்கால இருப்போடு மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறது என்பதையும் பல தடவை சொல்லியிருக்கிறேன். அவரது கவிதைகளையெல்லாம் தமிழின் கவிதைப் பிரியர்கள் வாசித்ததாகத் தெரியவில்லை. அந்தத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை.



பருவத்தின் முதல் மழை
==============================

பருவத்தின் முதல் மழை
பூரிக்கும் ஊர் ஒட்டிய
நிலத்தில்
நல்லேர் களை கட்டும்.

சூந்துப் போட்டத் தேங்காயும்
பச்சரிசி வெல்லமும்
சூழலை இனிப்பூட்டும்

விளைந்த நிலம்
சாமை தலை சாய்க்க
திணறும் தினை
காற்றில் இசை உமிழ
சோளம் சொக்க வைக்கும்
கம்பு களிப்பூட்டும்

எள்ளு
பூத்து எழிலூட்ட
துவரை
தூங்காமல் சலசலக்க
கொத்தமல்லி மணம்
கொள்ளையிட
மண்புதைந்த வேர்க்கடலை
கண் சுண்டி இழுக்கும்

நரிப்பயிறும் தட்டைப் பயிறும்
நெறிந்துக் கரை புரள
மொச்சையும் கடலையும்
கச்சிதமாய் வளங்கொழிக்க
பருத்திப் படர்ந்து
பலமாகச் சிரித்திருக்கும்

வானம் பார்த்த நிலம்!!
வறுமையால் வளைக்கப்பட்டு
கொத்துக் கொத்தாய்க் கொள்ளையாகி
சிமெண்டு போர்த்திய இரும்பு மரங்களால்
முனைகளாய்
நிறைந்து போச்சுப் பாதி

பொருளாதாரச் சிறப்புக்காய்
அரைகுறை விலையில்
அள்ளி எடுக்கப்பட்டு
மீண்டும் மீண்டும் பணம் சேர்க்கப்
பாய் விரித்து வானம் பார்க்கும் பாதி.

நாற்கரச் சாலைக்காய்
சந்ததிகள் கடந்த பெருமரங்கள்
வெட்டிச் சாய்த்து
அடையாளம் இழந்து கொஞ்சம்.

வேலை இழந்த எங்களூர் மக்கள்
உயிர் உண்ணும் எலும்போடு
சாலையோரக் கடைகளில்
பீடி புதைத்து
எதையும் பிடிக்கத் தயாராய். பக். 44-45
================================================================
வியூகம் கொள்ளும் காகங்கள்
 பி.மதியழகன், காலச்சுவடு பதிப்பகம், 2012

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்