அரங்கியல் என்னும் கலை அடிப்படைகள்



….. கற்பிக்கின்றவர்களுக்கும் கற்கின்றவர்களுக்குமான குறிப்புகள்


கலை இலக்கியப் படைப்புகளை வகுப்பறைக் கல்வி முறையில் கற்பிப்பதுவும், கற்றுக் கொள்வதும் சாத்தியம் தானா?அப்படிக் கற்றுக் கொண்ட ஒருவர் படைப்பில் ஈடுபடுதலும் திறமான படைப்புகளை உருவாக்குதலும் இயலுமா..? 
இவ்வளவு ஏன்../திறமான ஆசிரியர்களால் திறமான படைப்புகள் எதுவும் உருவாக்கப்படுவது சாத்தியமில்லையே…
இவை போன்ற வினாக்களும் ஐயங்களும் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. இந்த வினாக்களும் ஐயங்களும் இன்றுள்ள கலை, இலக்கியப் படைப்புக் கல்வி முறையின் மீதான வினாக்களாகவும் ஐயங்களாகவும் கூட இருக்கலாம்.
ஒரு படைப்பாளி, தனது படைப்பு வடிவம் சார்ந்து எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்போதைய பட்டம் சார்ந்த கலை, இலக்கியக் கல்வி முறையில் உள்ளதா?கற்றுக் கொள்ளாமல் தவிர்த்துவிட வேண்டியனவற்றைத் தவிர்த்துவிட முடியுமா? இந்த யோசனைகளுக்கெல்லாம் கிடைப்பது எதிர்மறை விடைகள் தான். அந்த விடைகளினூடாக தற்போதைய கல்வி ஒரு படைப்பாளியை உருவாக்கும் நோக்கம் கொண்டதல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அப்படியானால் வேறென்ன நோக்கம் கொண்டது?
நோக்கம் ஒன்றல்ல; இரண்டல்ல. பற்பல நோக்கங்கள் அதற்கு உண்டு. ஒரு மொழியின் இலக்கியக்கல்விக்கு அம்மொழியின் மொத்த இலக்கிய வளத்தை அறிந்து கொள்ளத் தூண்டுவது ஒரு நோக்கம். மொழியின் வளத்தை அறிந்து கொள்வது அங்கு துணை நோக்கமாக இருக்கலாம்.

இலக்கிய வரலாற்றை அறிவது – வடிவங்களின் வரலாறாக – தகவல்களின் வரலாறாக- கருத்துகளின் வரலாறாக – கருத்தியல்களின் வரலாறாக- சமூக இயக்கங்களின் வரலாறாக –இவற்றையெல்லாம் நேர்மறையாக அறிவது போலவே எதிர்மறையாக – அறிவதும் பிறிதொரு நோக்கமாக இருக்கலாம்.

மகத்தான மனிதர்களின் மகத்தான படைப்புப் பிரமாண்டங்களை வியந்து போற்றுவதுங்கூட இலக்கியக் கல்வியின் ஒரு நோக்கம் தான்.

தனித்தனிக் கால கட்டங்களாகப் பகுத்துக் கொண்டு ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கியம் உள்முகமாகவும் புறநிலையாகவும் அடைந்த மாற்றங்களை உணர்வதும் அவ்வக்கால கட்டத்திற்குள்ளேயே வெளிப்பட்ட போக்குகளை அறிந்து கொள்ளும் முயற்சியும் கூட இலக்கியக்கல்விக்கான ஒரு நோக்கம் தான்.

இலக்கியம், சொல்லப்பட்ட முறையினையும், சொல்லப்படும் முறையினையும், சொல்லப்பட வேண்டிய முறையினையும் அறிவதும் கூட இலக்கியக் கல்வியின் ஒரு பகுதிதான்.

இப்படியான பலவித நோக்கங்களோடு திட்டமிடப்படும் இலக்கியக் கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர், அதனைக் கற்கும் மாணாக்கர்களுக்கு ஒரு நோக்கத்தையும் உறுதி செய்யாமல் போவதும் சாத்தியமான ஒன்று தான். எந்தவொரு நோக்கத்திலும் கவனஞ் செலுத்தாமல், பட்டத்தை வாங்கிக் கொண்டு இலக்கியங்கற்ற மாணாக்கராக ஒருவர் வெளியேறவும் முடியும்; பலரும் அப்படியே வெளியேறுகிறார்கள்.


ஆனால், படைப்பாளி ஒருவனின் இலக்கியக் கல்வி இப்படியாக இல்லை. அவனும் அவனது மொழியின் இலக்கிய வளத்தையும், வரலாற்றையும் சொல்முறைகளையும் கற்கத்தான் செய்கிறான். அவனது கற்கும் முறை- அறிதல் முறை வேறானது. எல்லாம் அவனது தேர்வு சார்ந்ததாக இருக்கிறது. தான் இயங்கப் போகும் படைப்பு வடிவம் சார்ந்து, தனது இயங்குவெளியையும் தனது முன்னோடிகளையும் அவனே முடிவு செய்கிறான்; அவர்களது ஆளுமைகளையும் படைப்புகளையும் ஒருசேரக் கற்கிறான். அவண் காலத்திய சோதனைகளை- புதுவரவுகளைப் பரீட்சித்துப் பார்க்கிறான். அவனது அறிதல் முறையில் – அறிந்த முறையில்- எழுதும் தேர்வுகளுக்கு அவனே திருத்துபவன்; மதிப்பிடுவதும் அவனே. தேர்வு செய்து ஈடுபடுவது என்பதில் மட்டுமல்ல, விலக்கி வைத்து விட்டுத் தூர இருப்பதும் அவனது விருப்பங்கள் சார்ந்தனவே. நிர்ப்பந்தங்கள் அற்ற கல்வியை அவனுக்கு அவனே உருவாக்கிக் கொள்கிறான்.


தேர்வு செய்வது, தேடுவது, கற்பது, கற்பிப்பது, எழுதுவது… இவையெல்லாம் கூட ஒரே நேர்கோட்டுப் பாதையில் அல்ல. வளைந்தும் நெளிந்தும், நுனிகளைத் தொட்டும் செல்லும் பாதையில்.. நடந்து கொண்டே இருக்கின்றன.



இலக்கியத்தைக் கொஞ்சம் தள்ளி வைப்போம். நாடகக்கலைக்கு வருவோம். இயல். இசை, நாடகம் என்ற மூன்றில் இயல் தமிழ் கற்பிக்கப்பட்டதற்கும், கற்றதற்கும் முறைகளும் வரலாறுகளும் உள்ளன. நாடகக்கலை கற்பிக்கப்பட்டதின் தமிழ் மரபு என்ன? நாடகக்கலை மட்டுமல்ல; அதனோடு தொடர்புடைய இசை, நாட்டியம் போன்ற நிகழ்த்துக்கலைகளும் (Performing Arts ) சிற்பம், ஓவியம் போன்ற நுண்கலைகளும் (Fine Arts ) அறியப்பட்ட மரபு என்ன?

அறியப் பட்ட முறை குறித்த வரலாறுகள் எழுதி வைக்கப்படவில்லை என்றாலும் முறையான கற்பித்தலின் வழியே தான் அவை அறியப்பட்டுள்ளன. என யூகிக்க ஆதாரங்கள் உள்ளன. அறிந்து கொண்ட மாணவர்கள் (சீடர்கள்) தங்களின் குருவின் பணியைத் தொடர்வதும், பின்னர் அதிலிருந்து மாறுவதும், புதிய பாணிகளை உருவாக்குவதுமெனத் தங்களை வெளிப் படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் பாரம்பரியமான கற்பிக்கும் – கற்கும் – முறைகளில் உண்டு. இன்னும் கூடச் சில துறைகளில் அம்முறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நடனமும் இசையும் வெளிப்படையான உதாரணங்கள். 


நாடகக்கலையை இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும், தொடர்ந்த ஆண்டுகளிலும் கற்றுத்தந்த பாலர்சபைகளில் கற்பித்தல் முறைகளும் இத்தகையனவே. நாடகக்கலையின் எழுத்துப் பகுதியான பிரதியுருவாக்கம் தவிர்த்த மற்ற பகுதிகளைத் தனது உறுப்பினர்களான பாலர்களுக்கு அச்சபைகள் கற்றுத் தந்தன.  உடற்பயிற்சி, குரல்வளம், பேச்சுப்பாணி, பாட்டுப் பயிற்சி, மனனப் பயிற்சி- இவையெல்லாம் இணைந்த மேடை நடிப்புப் பயிற்சி அச்சபைகளின் முக்கிய நோக்கம்; நடிகர்களை உருவாக்கும் நோக்கத்தோடு, சீன் செட்டிங் எழுதுவது, உடைகள் தயாரிப்பு, ஒப்பனைப் பொருட்கள் தயாரிப்பு எனப் பிற துறைகளிலும் அப்பாலர் சபைகள் பயிற்சிகளை அளித்ததுண்டு. இப்பால சபைகளில் பயிற்சி பெற்றவர்களே எண்பதுகள் வரை தமிழ்ச் சினிமாவின் நாயகர்களாகவும். பின்னணிக்கலைஞர்களாகவும் வலம் வந்தனர்.


பாலர் சபைக்கல்வி நடிகனை உருவாக்கும் பயிற்சிகளைக் கொண்டிருந்தது. பின்னரங்கக் கலைஞனை உருவாக்கிடும் பயிற்சிகளைத் தந்தது.  ஆனால் நாடகப் பிரதியை உருவாக்கும் பயிற்சிகளைத் தன்னிடம் கொண்டிருக்கவில்லை;அல்லது கற்றுத் தரவில்லை என்று சொல்லலாம். ஒரு நாடகப் பிரதி எப்படி உருவாகியுள்ளது; அதன் கட்டமைப்புக்குள் கதாபாத்திரங்கள் எப்படி உருவாக்கப்பட்டு எதிர்நிலைப் படுத்தப்படுகிறார்கள்; பிரதியின் கட்டமைப்பு கொண்டிருக்கும் புதிர்கள் எத்தகையவை; அப்புதிர்கள் விடுவிக்கப்படும்பொழுது தோன்றும் விளைவுகள் என்ன வகையான மெய்ப்பாடுகளை – பாவங்களை – உண்டாக்கும் என்பன போன்ற – பிரதியினுடனான அறிதல் முறைப் பயிற்சி, பாரம்பரியக் கலைப்பயிற்சி முறைகளில் தரப்பட்டதாகத் தெரியவில்லை. 


பாலர் சபையின் வாத்தியார்கள் தங்களின் நாடகப் பிரதிகளுக்கான வாரிசுகளை உருவாக்கிட விரும்பாதது ஏன்? என்று தெரியவில்லை. ஒருவேளை உருவாக்கிடும் முறைகளை அவர்கள் அறியாமல் இருந்திருக்கலாம்; இல்லையென்றால் அதுவெல்லாம் கற்றுத் தந்து வருவதில்லை; கருவிலே திருவுடையார்க்கு மட்டும் உடையது என்றும் கருதியிருக்கலாம். 


தொடர்ந்து மனித உடலை ஒரு காரியத்தில் ஈடுபடச் செய்வதன் மூலம் – அக்காரியத்தை செவ்வனே செய்யும் திறனுடைய ஒன்றாக அந்த உடலை மாற்ற முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்தியக் கற்பிக்கும் முறை; மனித மூளையையும் கூட அப்படிப் பயிற்றுவித்து விட முடியும் என்று நம்புகிறது. காலையில் எழுந்தவுடன் வேதங்களை – மந்திரங்களை – குறள்களை- தேவார, திவ்யப் பிரபந்தப் பண்களை – ஒப்புவிக்கும்படி வலியுறுத்தும் முறைகள் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுகள் தான். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் பாலர் சபைகள் நடிகர்களை உருவாக்கும் பயிற்சிகளைக் கொண்டிருந்தன.  தொடர்ந்து பாடுவது; வசனங்களை மனனம் செய்வது; ஒப்புவிப்பது என அப்பயிற்சிகள் நீண்டன. பின்னரங்க வேலைகளிலும் உதவியாளனாக – எடுபிடியாக இருந்து – ஆசிரியன் செய்வதைத் திரும்பச் செய்து கற்றுக் கொள்வது என்ற முறையே வலியுறுத்தப்பட்டது. நடிகன் உருவாக்கம், பின்னரங்க பணியாளர்கள் உருவாக்கம் போன்றன தனித்தனியாகக் கவனஞ் செலுத்திக் கற்றுத்தரப்பட வேண்டியவைகளும் கூட அல்ல. குழுவினராக இருந்து கற்றுக் கொள்ளக்கூடியவை. 


ஆனால், நாடகப் பிரதியுருவாக்கம் குழுவினருக்கெனக் கற்றுத்தர முடியாது. தனிமனிதனின் சிந்தனையையும் வாழ்வனுபவ வெளிப்பாட்டையும், சமூகத்தோடு கொள்ள விரும்பும் உறவு நிலைகளையும் சார்ந்தது பிரதியுருவாக்கம். இதனைச் செய்தவன் ஒவ்வொரு குழுவிலும் ஆசிரியனாக ( ) இருந்தான். பாலர் சபை ஆசிரியர்களிடம் அதனை கற்றுத் தரும் முறைகள் இல்லையென்பதை விடத் தான் உருவாக்கும் முறையைப் பார்த்து; படித்துத் தானே கற்று- அவருக்குப் பின் ஒருவன் ஆசிரியனாகக் காட்டும்- நடிக ஆசிரியனாகக் காட்டும் என்ற மனநிலை நிலவியிருக்கும் எனக் கூறலாம். 


ஆங்கிலேயர்களின் வருகையால் நமக்கு அறிமுகமான மேற்கத்திய அறிதல் முறை, இந்திய அறிதல் முறையிலிருந்து வேறுபடும் முக்கியமான இடம் இதுதான். ’ஒரு படைப்பின் அம்சங்களில் கற்றுத் தர முடியாதது என்று எதுவும் இல்லை’ என்று மேற்கத்திய அறிதல் முறை நம்புகிறது. ‘ கருவி திருவுடையான்’ என்ற கருத்தியலுக்கு மாறாக யாராலும் கற்றுக் கொள்ளும் முறைகளின் தொகுப்பு அது. ஒரு கலையின் – ஒருதுறையின் – அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்ளும் நிலையில் ஒருவன், அவனுக்கான துறையினைத் தேர்வு செய்து கொள்வதும் அவனிடமே விடப்படுகிறது. அனைத்து மனிதர்களும் சமமானவர்களே என்ற வாழ்நிலைத் தத்துவத்தோடு தொடர்புடைய ஐரோப்பிய அறிதல் முறை; கற்பிக்கவும் கற்கவும் ஒரு சிறுபான்மைக் குழுவினருக்கே உரிமை- தகுதி- உண்டு என நம்பும் இந்திய அறிதல் முறையோடு முரண்படுவது தவிர்க்க இயலாதது. இதன் கற்பித்தல் முறையை “ கலைத்துச் சேர்த்துக் கலைத்துச் சேர்த்து” பார்க்கும் முறையெனக் கூறலாம். 

ஒரு படைப்பின் பகுதிகளை, உறுப்புகளாக – கூறுகளாகப் பிரித்துப் போட்டு ஒவ்வொன்றும் உருவாக்கப்படும் விதத்தை விளக்கிப் பேசும் இயல்புடையது. உறுப்புகளின் நுட்பங்களையும் சேர்மான விகிதங்களையும் உணர்ந்து கொள்ளும் மாணாக்கன், அவனே உறுப்புகளை உருவாக்கி, சேர்த்துப் பின்னர் கலைத்துப் போட்டுத் திரும்பவும் வேறு முறையில் சேர்த்துத் தான் விரும்பிய வடிவில் படைப்பினை உருவாக்கிக் கொள்ள இயலும் என்பது ஐரோப்பியக் கல்வி முறையின் – அறிதல் முறையின் நம்பிக்கை. இத்தகைய நம்பிக்கையின் மேல் இயங்கும் ஐரோப்பியமுறை, உறுப்புகள் எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்றோ, என்ன அளவு கொண்டனவாக அமைய வேண்டும் என்றோ தீர்மானமான விதிகள் எதையும் வகுத்துக் கொள்ளவில்லை. அவற்றைப் படைப்பாளியின் விருப்பம் சார்ந்தனவாக விட்டுவிட்டது.


இதற்கு மாறாக இந்தியக் கல்வி முறை, படைப்பை முழுமையான ஒன்றாக முன்னிறுத்தி, மாணாக்கனை அம்முழுமையான வடிவத்திலேயே உள்வாங்கிக் கொள்ள வலியுறுத்துகிறது. நாடகப் பிரதியின் கூறுகளாக (அர்த்தப்ரக்ரிதீஸ்) பீஜம் (விதை அல்லது கரு), பிந்து (உந்துசக்தியின் சிந்தனை அல்லது வளர்நிலை), பாடகம் ( கிளை அல்லது கதை), ப்ரகதி ( நிகழ்வுகள் விரிப்பு), கார்யம் (கனி அல்லது முடிவு) எனப் பேசும் சமஸ்கிருத நாடகவியல் பிரதியை ஒரு தாவரத்தின் வாழ்நிலைக்குள் வைத்துப் பேசுகிறது. ஒன்றின் முடிவில் இன்னொன்று தொடக்கம் என்ற முழுமைப் பார்வையின் கோணம் இது.


ஐரோப்பிய அறிதல் முறையின்படி ஒரு நாடகப்பிரதியைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு முறையை இங்கே காணலாம். இந்த முறை ஒரு பிரதியை வாசிக்கும் ஒருவர் அதனைப் புரிந்து கொள்ள உதவுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. புரிந்து கொண்ட அவனைத் திறனாய்வாளனாக உயர்த்துவது இம்முறையின் இரண்டாவது நோக்கம். மூன்றாவதும் இறுதியுமான நோக்கம் அவனைப் படைப்பாளையாக மாற்றுவது.

இம்முறையின்படி ஒரு நாடகப்பிரதி வகுப்பில் வாசிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படையானது. நாடகத்தின் கதாபாத்திரங்கள் மாணவ, மாணவியரிடம் பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரு முறையாவது வாசிக்கப்பட வேண்டும். பல தடவை வாசிக்கப்படும் நாடகம் பயிற்றுவித்தலை எளிமையாக்கி விடும். 


வாசிக்கப்பட்ட நாடகப் பிரதியை நோக்கி மூன்று அடிப்படைகளில் வினாக்களை எழுப்பி விடை காண முயற்சி செய்யலாம். முதல் அடிப்படை நாடகம் எழுப்பும் உணர்வு (Emotions ) தொடர்புடையது.

இரண்டாவது அடிப்படை கதைப்பின்னல் (Plot ) தொடர்புடையது

மூன்றாவது அடிப்படை கதாபாத்திரங்கள் (Characters )  தொடர்புடையது

இம்மூன்று அடிப்படையிலும் கேள்விகள் எழுப்பினால் தான் ஒரு நாடகம் புரியும் என்பதில்லை. எதாவது ஒரு அடிப்படைக்கான வினாக்களுக்கு விடைகள் தெரிந்தாலே புரிந்து விடும்.


·          உணர்வு அடிப்படையிலான வினாக்கள்

1.   இந்த நாடகம் ஆர்வத்தைத் தூண்டுவதன் காரணம் என்ன? தூண்டப்படும் ஆர்வம் போதுமானதா?. குறைபாடுடையதா?

2.   நாடகம் என்னவகையான உணர்வை உண்டாக்க முயல்கிறது? நகைச்சுவை உணர்வா? ஆழ்ந்த சிந்தனை உணர்வையா? இரண்டையும் கலந்து உணர்வையா? அதில் தலையாய உணர்வு இதுதான் என்ற முடிவுக்கு எப்படி வருகிறீர்கள்?

3.   நாடகத்தில் பெரிய காட்சிகள் எவை? அவற்றில் உண்டாக்கப்படும் உணர்வுகள் எத்தகையவை? அவற்றின் தொடர்புகள் என்ன? 


·          கதைப்பின்னல் அடிப்படையிலான வினாக்கள்

1.   கதைப்பின்னலின் தன்மை என்ன? பின்னல் எழுப்பும் சிக்கல் எது? அதனை விடுவிக்கும் படிநிலைகள் எவை?

2.   நாடகம் எழுப்பும் முக்கிய கேள்வி என்ன?  அதற்கு விடை எப்படி கிடைக்கிறது?

3.   நாடகத்தின் விவாதப்புள்ளிகள் எவை? முக்கியமான மையப்புள்ளி எது?

4.   நாடகத்தின் நிகழ்ச்சி வரிசை என்ன? அவற்றிற்கிடையே உள்ள தொடர்புகள் யாவை?


·          கதாபாத்திரங்கள் அடிப்படையிலான வினாக்கள்

1.   நாடகத்தில் முரண் உள்ளதா? அதன் தன்மை என்ன? முரண் உண்டாகக் காரணம் எது? அல்லது யார்? அணிகளைத் தலைமை ஏற்பவர்கள் யார்? யார்? ஒரே கதாபாத்திரத்திற்குள் முரண் உண்டா?

2.   யார் தலைமைக் கதாபாத்திரம்? யார் எதிர்நிலைக் கதாபாத்திரம்? அவர்களின் முக்கியமான விவரங்கள் எவை?

3.   கதாபாத்திரங்களுக்கிடையே உள்ள உறவுகள் என்ன?

4.   நாடகம் யாருடைய நாடகம்? ஒன்றிற்கு மேற்பட்ட பாத்திரங்களின் நாடகமா..?

கதாபாத்திரங்களோடு இயங்கும் நாவல் , சினிமா, சிறுகதை போன்ற வடிவங்கள் பெரும்பாலும் கதாபாத்திரங்களின் இயங்குமுறை கொண்டே விளங்கிக் கொள்ளப்படுகின்றன. அக்கதாபாத்திரங்களை – சமூகத்தின் உறுப்பினர்களாகவும் தனிமனிதர்களாகவும் புரிந்து கொள்ளவும் அவைகளச் சுற்றிக் கட்டமையும் பிம்பங்களையும் பின்வரும் ( ) கூறுபாடு உதவுக்கூடும்.

பொதுவாக மனிதர்களுக்கு –மனிதர்களின் பிரதியுருவங்களான கதாபாத்திரங்களுக்கு மூன்று வித அடையாளங்கள் உண்டு. அவை :

1.   உடலியல் சார்ந்த அடையாளங்கள்

2.   சமூகவியல் சார்ந்த அடையாளங்கள்

3.   உளவியல் சார்ந்த அடையாளங்கள்

இம்மூன்று அடையாளங்களும் சேர்ந்தே ’மனிதன்’ என்ற தன்னிலை (Subjectivity) யை – கதாபாத்திரம் என்ற  தன்னிலையை – உருவாக்குகின்றன. அம்மூன்றின் கூறுகளை இப்படிப் பட்டியல் இடலாம். இம்மூன்று.அடிப்படை அமைப்புகள் ஒரு பாத்திரத்தின் முதுகெலும்பு (BONE STRUCTURE) போன்றவை. உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களுக்¢கும் மூன்று பரிமாணங்கள் உண்டு. நீளம் , அகலம், உள்ளீடு என்பன. இதனோடு மனிதர்களுக்குக் கூடுதலாக உடல், சமூகம், உள்ளம், என்ற பரிமாணங்கள் உள்ளன. இம்மூன்று பற்றிய அறிவின்றி ஒரு மனிதப் பாத்திரத்தைப் புரிந்து கொள்ள முடியாது.


உடல் அடையாளங்கள்

1.  பாலினம்

2. வயது

3.  உயரமும் எடையும்

4.  தலைமுடி, கண்கள், தோலின் நிறங்கள்

5.     உடலின் நிலை
          6.  தோற்றம்: பார்க்கத்தக்க தோற்றம், தடிய அல்லது ஒல்லியான தோற்றம், சுத்தமான, பொலிவான,மகிழ்ச்சியான, கடுகடுப்பான தோற்றம், தலையின் வடிவம், முகத்தோற்றம், பிற உறுப்புக்கள்
7.குறைகள்: அமைப்பற்ற, இயல்பற்ற, பிறவிக்குறைகள், நோய்க்குறைகள்

8.     பரம்பரை


சமூகவியல் அடையாளங்கள்

1.         வர்க்கம் -அடித்தட்டு, நடுத்தர , உயர் வர்க்கம்

2.   தொழில் - பணியின் தன்மை, வேலை நேரம், வருமானம், பணிக்கட்டுப்பாடுகள், தொழிற்சங்க உறுப்பின்மை அல்லது உறுப்பின்மை, அமைப்புகள் பற்றிய பார்வைக் கோணம், பணிக்கான பொருத்தம்

3.       கல்வி: செலவழித்த தொகை, படித்த கல்விக் கூடங்களின் தன்மை, பெற்ற மதிப்பெண்கள், விருப்பப்பாடங்கள்,

விருப்பமில்லாத பாடங்கள், அவை பற்றிய பார்வைக்கோணம்

4.     குடும்ப வாழ்க்கைபெற்றோர் இருப்பு அல்லது இல்லாமை, பெற்றோர் சேர்ந்து அல்லது தனித்து அல்லது

விவாகரத்துப் பெற்று வாழ்வு,சம்பாதிக்கும் திறன், அனாதை. பெற்றோரின் பழக்கவழக்கங்கள், பெற்றோரின் மூளைத்திறன், பெற்றோரின் குற்றச்செயல்கள, ஒதுக்கல்கள், பாத்திரத்தின் மணவாழ்க்கை முறை

5.                மதம்

6.                இனம், தேசம்

7.                சமூகத்தில் இடம், நண்பர்களுக்குள் தலைமை, சங்கம் அல்லது விளையாட்டுக் குழுவில் பொறுப்பு

8.                அரசியல் ஈடுபாடு

9.                வேடிக்கை விருப்பங்கள், விருப்பச்செயல்கள், விருப்பமான புத்தகங்கள், விரும்பும் செய்தித்தாள்கள், இதழ்கள்.


உள்ளம் சார் அடையாளங்கள்

1.                பாலியல் , ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள்

2.                சொந்த நோக்கம் , இலட்சியம்

3.                இயலாமை, தோல்விமனப்பான்மை

4.                நிலைப்பாடுகள் - நம்பிக்கைகொண்ட அல்லது நம்பாத , சுலபமாக எடுத்துக் கொள்ளுதல் அல்லது கடுமையுடன்

நடத்தல்,

5.     வாழ்க்கையைப் பற்றிய பார்வை- விலகலான, தீவிரமான, தோல்வியடைந்த

6.                மனப்பான்மைகள்- மிகை விருப்பம், கூச்சம், அதீதத்தன்மை, ஒன்றின்மேலானக் காதல்

7.                வெளிப்படையான, உள்முகமான, குழப்பமான

8.                ஆற்றல்கள்¢: மொழித்திறன்கள், நினைவாற்றல்

9.                குணங்கள்:கற்பனை, முடிவு எடுத்தல், சுவை, சமநிலை

10.              புத்திசாலித்தனம்

இம்மூன்றும் பாத்திரத்தின் முதுகெலும்புகள். இவைபற்றிய அறிவு ஒரு நாடகாசிரியருக்கு அவசியம். இதன் மேல் தான் பாத்திரத்தைக் கட்டியெழுப்பிட வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்