ஏற்கத்தக்க தொனியல்ல



இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணமும் உணரும் கருத்தாகவும் நிகழ்வாகவும் இருக்கும் சொல் சாதி. பேசத்தக்க பொருளாக இருக்கும் சாதியின் குரூரவடிவமான ’தீண்டாமை’ பேச வேண்டிய பொருள் மட்டுமல்ல; பேசித் தீர்க்கவேண்டிய ஒன்றும்கூட. அனைத்துத் தளத்திலும் விசாரணைகளையும் விவாதங்களையும் கோரும் இச்சொற்களைப் பேசாமல் அறிவுத் துறையினர் தப்பித்துவிட முடியாது. தீர்த்துக் கட்டுவதற்காகப் பேசப்படவேண்டிய தீண்டாமையையும் சாதியையும் பற்றிப்பேசும் சிறுநூலொன்றை மணற்கேணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
சாதியைத் தொடர்ந்து பேசுபொருளாக மாற்றவேண்டும் என்ற அக்கறைகொண்ட ரவிக்குமார் அதற்கொரு முன்னுரையும் எழுதியுள்ளார். அதற்கு அவர் வைத்துள்ள தலைப்பு: அறிவுலகத்தீண்டாமையை அகற்றுவோம் என்பது.

அமெரிக்காவில் வாழும் இந்நூலின் ஆசிரியர் வீ.எஸ். ராஜம் முதன்மையாகச் சொல்லாய்வாகவே நூலைக் கட்டமைத்துள்ளார். சாதி மற்றும் தீண்டாமையோடு தொடர்புடைய சொற்களைத் தெரிவுசெய்துகொண்டு, அவை நிகழ்காலத்தில் இருக்கும் அர்த்தத்தில் அப்போதில்லை என்று விளக்கியுள்ளார். பிறப்பு அடிப்படையில் ஒதுக்கிவைக்கும் தீண்டாமைப் பொருளில் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை என விரிவாக வாதிட்டுள்ளார். அதேபோல் மனிதக் கூட்டத்தைப் பிரிக்கப்பயன்பட்ட பல சொற்களைப்போலவே சாதி என்ற சொல்லும் மனிதர்களின் பிரிவைக் குறிக்கும் ஒரு சொல்லே என்பதும் , சொற்களின் பொருளில் மேல்xகீழ் என்ற எதிர்வுநிலைப் பொருள் இல்லை என்பதும் அவரது வாதமாக உள்ளது. வீ.எஸ். ராஜம் அவர்களின் இந்த வாதங்கள் ஏற்கத்தக்கன  என்றே நானும் நம்புகிறேன். ஆனால், வி.எஸ். ராஜத்தின் இச்சிறுநூலைப் பொருட்படுத்தத்தக்க ஆய்வுநூலாகக் கொள்ளாமல் தள்ளிவிடுவதற்கான முதன்மையான காரணம் ஒன்று உண்டு என்பதைச் சொல்லியாக வேண்டியுள்ளது.  

சங்க இலக்கியத்தில் சாதி, தீண்டாமை என்ற சொற்கள் இன்று இருக்கும் அதே அர்த்தத்தில் இருப்பதாக நம்பி ஆய்வு செய்துள்ள ஆய்வாளர்கள் யாரெல்லாம் என்பதை எடுத்துக்காட்டி முன்வைத்துவிட்டு, அவர்களின் இந்த முடிவு சரியல்ல என்று வாதிட்டிருக்க வேண்டும். இந்தச் சிறுநூலில் அப்படி யாரையும் காட்டவில்லை. பொதுவாக அப்படியொரு கருத்து நிலவுவதாகச் சொல்லிவிட்டுத் தனது வாதங்களை முன்வைக்கிறார். ஆனால்,  சங்க இலக்கியங்களைச் சமூகவியல் நோக்கில் ஆய்வு செய்த கே.கே. பிள்ளை, ந.சுப்பிரமணியன், க.சுப்பிரமணியன், க. கைலாசபதி, கா.சிவத்தம்பி, கோ.கேசவன், வ.சுப. மாணிக்கம், கனகசபைப்பிள்ளை, ஆ.வேலுப்பிள்ளை, சி. இலக்குவனார், தமிழண்ணல், அறவாணன், தி.சு. நடராசன்,  பெ.மாதையன் போன்ற எவரும் சங்ககாலத்தில் சாதியும் தீண்டாமையும் இன்றைய அர்த்தத்தில் இருப்பதாக எழுதவில்லை என்பதே என் வாசிப்பு.

அதேநேரத்தில் சங்ககாலம் தொடங்கிப் பின்னிடைக்காலம் வரையிலான தமிழ்ச் சமூகவரலாற்றைப் பல்வேறு சான்றுகளோடு இலக்கியச் சான்றுகளையும் உள்ளடக்கி ஆய்வுநூல்களையும், பாடநூல்களையும் எழுதியவர்கள் பல்லவர்கள் காலம், பிற்காலச்சோழர்கள், நாயக்கர்கள் காலம் வரையிலான 10 நூற்றாண்டுகளில் சாதியமைப்பு இறுக்கமானதையும், தீண்டாமையென்னும் கருத்தியல் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாக மாறியதையும் எழுதியுள்ளனர். குறிப்பாக இலக்கண நூல்கள் மொழியின் இலக்கணத்தைச் சொல்லும்போது சமூகத்தின் இலக்கணத்தோடு தொடர்புபடுத்திப்பேசி நிறுவியுள்ளன என்பதையும் விவாதித்துள்ளனர். மனுஸ்மிருதியை மொழிபெயர்த்ததைப் போன்ற சதகங்களையும் வீரசோழியம், நிகண்டுகள், பாட்டியல் இலக்கணங்களையெல்லாம் வாசிக்கவேண்டும். அவைகளெல்லாம் சாதியமைப்பை இறுக்கமாக்கவும், தீண்டாமையையும் உறுதிசெய்யும் நோக்கம் கொண்டவை. குறிப்பாகக் கா.சிவத்தம்பியின் இலக்கணமும் சமூக உறவுகளும் என்ற ஒருநூலை வாசித்தாலே இது புரியக்கூடும். இச்சிறுநூலை எழுதிய வீ.எஸ். ராஜம் இத்தகைய ஆய்வுகள் எதனையும் கவனத்தில் கொள்ளாமல் சங்ககாலத்திலிருந்து நேரடியாக 18 ஆம் நூற்றாண்டிற்கு வந்துவிடுகிறார்.  இடையில் 1500 ஆண்டுக்கால இலக்கியங்களைக் கணக்கில் கொள்ளாமல் தவிர்ப்பது ஏனென்று தெரியவில்லை. 

வந்தவர், தனது முன்வைப்பை ஏற்கமுடியாத ஒருதொனியில் வெளிப்படுத்துகிறார்.  சாதி மற்றும் தீண்டாமை என்னும் சொற்களை அகராதியில் சேர்த்த அகரமுதலிகளின் ஆசிரியர்களே -குறிப்பாக வின்சுலோ, ஜான் பிலிப் போன்ற ஐரோப்பியர்களே இன்றுள்ள அர்த்தத்தை உருவாக்கிவிட்டனர் என்ற பொருளில் வாதத்தைத் தொடங்கியுள்ளார். அவர்களைப் பின்பற்றித் தமிழில் அகரமுதலிகளும் மேற்கத்தியச் சொற்களஞ்சியங்களும் உருவாக்கியவர்கள் அதனை நிலை நிறுத்திவிட்டனர் என்பதாக அவரது கருதுகோளும் ஆய்வுமுறையும் அமைந்துள்ளன. இக்கருதுகோள் நிகழ்காலத்தில் இந்துத்துவ ஆய்வாளர்கள், இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக ஐரோப்பியரின் வருகையைச் சுட்டிக்காட்டுவதை ஒத்ததாக இருக்கிறது.
=========================================================
சங்கப்பாடல்களில் சாதி, தீண்டாமை. இன்னபிற..
வீ.எஸ். ராஜம் , மணற்கேணி பதிப்பகம்( மே, 2015), முதல் தளம், புதிய எண்:10/ பழைய எண்:288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005, பக். 80, விலை.ரூ.60/-  ================================================

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்