அரசியல் பேசும் ஊடகங்கள்

வரப்போகும் சட்டமன்றத்தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பைச் செய்துவிட்டுத் தேர்தல் களம்காண நினைக்கின்றன ஒவ்வொரு கட்சியும் கூட்டணிகளும். இதுதான் சரியானது என்பதுபோல ஊடக விவாதங்களும் நடக்கின்றன. கூட்டணி என்றால் யார் முதல்வர் என்பதைத் தாண்டி. அதனை அறிவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது போன்ற விவாதங்களும் நடக்கின்றன.
இப்படியான அறிவிப்பு அடிப்படையில் மக்களாட்சி முறைக்கும் அந்த முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்த விரும்பியவர்கள் உருவாக்கிய கோட்பாட்டுக்கும் எதிரானது. முதல்வர் வேட்பாளர் அல்லது பிரதமர் வேட்பாளர் என நபரை முன்னிறுத்தும் மனநிலை மன்னராட்சி அல்லது அதிபர் ஆட்சி முறைக்குக் கொண்டு செல்லும் நோக்கம் கொண்டது. இந்திய ஊடகங்கள் - அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் - அனைத்தும் இந்தவகையில் மக்களாட்சிக்கு விரோதமாக எழுதுகின்றன.
திரள்மக்கள் அரசியலில் செயல்படும் அரசியல்வாதிகளைப் போலவே ஊடகங்களில் செயல்படும் பலரும் கொள்கை, கோட்பாடு, அரசியல் அடிப்படைகள் மீது அக்கறை இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். நபர்களை முன்னிறுத்துவது வெகுமக்கள் பண்பாட்டைக் கட்டமைப்பதற்கு ஏற்றவழி; எளிமையான வழி. எழுதுவதற்கும் பேசுவதற்கும் இதுபோதும் என நினைக்கிறார்கள்.அந்த நினைப்பே அரசியல்வாதிகள் தங்களை முன்னிறுத்துவதைத் தூண்டுகிறது. இந்தத் தூண்டுதலின் காரணமாகவே வெகுமக்கள் சினிமாவில் நாயகனாக நடித்த நடிகர்களை முதல்வர் வேட்பாளர்களாக நினைக்கத்தூண்டுகிறது. அரசியல் இயக்கம் அல்லது கட்சி, அவற்றிற்கான கொள்கைகள், நடைமுறைச் செயல்பாடுகள், நிறைவேற்றும் பொறிமுறைகள் என எதனையும் பேசாமல் ‘என்னை முதல்வராக்கு’ அதன்பிறகு நான் எல்லாவற்றையும் சரிசெய்துவிடுவேன் எனப் பேசுகின்றனர்.
விடுதலைக்குப்பின்னான இந்திய அரசியல் மற்றும் ஊடகப் போக்கில் 1990 கள் வரை இது உள்ளடங்கி இருந்தது. உலகமய/ தனியார்மய/ தாராளவாதத்திற்குப் பிந்திய அரசியலில் ஊடகங்களே இந்தப் போக்கை முதன்மையாக்கிக் கொண்டிருக்கின்றன. கடைசி மூன்று மாத த்தில் ஒருவரை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்புச் செய்தாலும் அதனைக் கேள்வியற்று ஏற்றுக்கொண்டு விவாதங்கள் நட த்தி அவரது பிம்பத்தைக் கட்டமைத்துவிடத் தயாராகிவிட்ட ஊடகங்களின் செயல்பாடுகள் அச்சமூட்டுவனவாக உள்ளன. இந்தவகையில் இந்திய மக்களாட்சிக்குப் பெரும் ஆபத்து தாராளவாதத்தால் உருவாகியுள்ள பல்லமைப்பு ஊடக நிறுவனங்கள் தான்.

******************************

பாரதிக்கு முன்னாலிருந்த தமிழ்ப்புலவர்கள் எட்டு ஊர்களுக்கு அதிபதியான வட்டாரத்தலைவரை - ஜமீந்தாரை - மூவேழ் உலகுக்கும் அதிபதியே எனக் கவிபாடிப் பரிசில் பெற்றுப்போவார்கள். ஒரு மூட்டை நெல்லையோ, சிறுதானியத்தையோ அக்கவியின் வீட்டிற்கு அனுப்பிவைக்கும் ஜமீந்தாரும் தன்னைத் திரிபுவனச் சக்கரவர்த்தியெனக் கருதிக்கொண்டு அரண்மனை மாடத்தில் காமக்கிழத்தியர்களுடன் உலா வருவான். இது கடந்த காலம் மட்டுமல்ல. நிகழ்கால ஊடகங்களில் சிலவும் அப்படித்தான் இருக்கின்றன.

அரசியல் செய்யும் தொலைக்காட்சி ஊடகங்கள், தங்களது பார்வையாளர்கள் மட்டும்தான் உலகம் என நினைப்பது வேடிக்கையான ஒன்று. சன் தொலைக்காட்சிக்கெதிராக நடக்கும் சதியைக் கண்டித்து இந்தியாவின் சகல அமைப்புகளும் கூட்டங்களும் வரிசைகட்டுவதாகச் சொல்வதும், முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறையிலிருந்தபோது தமிழகமே கண்ணீர்க்கடலில் மூழ்கிக் கரைசேர முடியாமல் கோயில், குளம் என்று அலைகிறது என்று காட்டியதற்கும் என்ன வேறுபாடு? அதுவும் அரசியல். இதுவும் அரசியல். இரண்டும் வேறுவேறல்ல. கொடுத்துப் பெற்றுக்கொள்ளும் அரசியல்.

இந்திய ஊடகங்கள் அரசியல் பேசத் தொடங்கியதன் பின்னணிக் காரணங்களில் முதலிடம் உலகமயம் என்னும் பொருளாதாரச் சொல்லாடலுக்குரியது. ஆனால் அதற்கான தத்துவப் பின்புலம் பின் அமைப்பியலுக்குரியது. ”எல்லாச் சொல்லின் பொருளும் இடுகுறித் தன்மையுடையன” எனச் சொன்னவர்கள் இதன் சிந்தனையாளர்கள். ஆனால் தமிழ் இலக்கணம் கற்றவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.  ’எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பிய விதிதான் மாறியிருக்கிறது என்பது புரியும்.

 உலகமயம், தனது பொருளாதார நகர்வுகளைப் பின்னங்கால்களில் வைத்துக் கொண்டு தகவல் தொடர்பின் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது என்பதை விளக்கிக் காட்ட முனைந்த போது 'ஊடகங்களைப் பற்றிய பேச்சும், ஊடகங்களின் பேச்சும்' அரசியல் பேச்சாக ஆகிப் போயின. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பைப் பார்ப்பதற்காக கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு கைகாட்டி வழியனுப்பிய இந்திய நடுத்தர வர்க்கம், பெருநகரங்களில் ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ அலைவரிசைகளின் மூலம் நுகர்வுக் கலாச்சாரத்தின் மெல்லிதழ்களால் வருடப் பெற்றதைச் சுகம் எனக் கருதித் தழுவிக் கொண்டன. அரசாங்கம் தொடங்கிய மெட்ரோ அலைவரிசைகள் ஓராண்டிற்குள் ஒடுங்கிப் போக பன்னாட்டு ஊடக முதலாளி முர்டாக் ஆயிரம் தலை வாங்கும் அபூர்வ சிந்தாமணியாய் தனது ஊடக வலைப்பின்னலை இந்தியாவிற்குள் இறக்கி அனுப்பினார். இதெல்லாம் 1990-களின் கதை.

இருபது ஆண்டுகளுக்குப் பின்பு நிலைமை முற்றிலும் மாறிப் போய் விட்டது. இந்தியப் பெருமுதலாளிகளே பன்னாட்டு ஊடகத் தொழிலைக் கைப்பற்றி, இந்திய மனத்தோடு- தமிழ்த் தன்னிலையோடு- உலக மக்களாக வாழப் பழக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிரான்சில் வாழும் புதுக்கோட்டைப் பெண்மணியும், ஆஸ்திரேலியாவில் இருக்கும் நாகர்கோவில்காரரும், ஆண்டாள் அழகரையும், வள்ளியையும் பார்த்து இந்தியப் பெண் தன்னிலைக்குள் தங்களைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். இளம்பெண்களும் யுவன்களும் மானாகவும் மயிலாகவும் நம்பர் ஒன் ஜோடிகளாகவும்  ஆடிக் காட்டும் நடனத்தில் மெய்மறக்கிறார்கள். இல்லையென்றால் ” ஒருவார்த்தை ஒருலட்சம்?”காதல் கீதங்கள்’ என்பதைக் கேட்டுவிட்டுத் தொலைபேசியில் விவாதிக்கிறார்கள்.

பெண்களுக்கான சரக்குகள் இவையென்றால் ஆண்களுக்குத் தேவை அரசியல். சொந்தக் கருத்தில்லாத மனிதர்களைத் திரும்பத் திரும்ப அ இ அதிமுக,x திமுக என்ற எதிர்வுகளுக்குள் நிறுத்த முயலும் வாதங்களும் பிரதிவாதங்களும் நடக்கின்றன. எப்படியாவது பாரதீய ஜனதாவின் கருத்துக்களை விதைத்துவிடலாம் என நம்பிய செய்தி அலைவரிசைகள் தேர்தல் நெருங்கியவுடன் இரட்டை எதிர்வுக்குள் நகர்வதே உத்தமம் என முடிவுக்கு வரப்போகின்றன.

காட்சி ஊடகம் மட்டுமல்லாமல் அச்சு ஊடகங்களும், ஒலிவழி ஊடகங்களும் பெருங்கருவிகளின் உதவியோடு எல்லா வற்றிலும் அலையும் தன்மையைக் கொண்டுவந்து விட்டன.இந்த மாற்றம் இயல்பாகவே தீவிரத் தன்மைக் கெதிரானவை. நாளொன்றுக்கு மூன்று தடவை சாப்பிடும் ஒருவனுக்கு உணவுப் பட்டியல் ஒன்றைத் தயாரித்து வழங்கலாம். ஆனால் 24 மணிநேரமும் சாப்பிடுவேன் எனச் சொல்பவனுக்கு எந்த உணவு வகைகளைப் பரிந்துரை செய்ய முடியும்? எதையாவது தான் முன்னே வைக்க வேண்டும். அப்படித்தான் நமது ஊடகங்கள் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஊதிப் பெருக்கித் தந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு விகடனுக்குப் பதிலாக ஐந்தாறு விகடன்கள். ஒரு குமுதம் வந்த நிறுவனத்திலிருந்து ஏழு நாளைக்கு ஏழு குமுதங்கள், முன்னொட்டோடும் பின்னொட்டோடும். சன் குழுமத்திலிருந்து காட்சி, அச்சு, ஒலி எனப் பல வரவுகள். இப்படி வரும்  அவை ஒவ்வொன்றிலும் எதுவும் இல்லையென்று நீங்கள் நினைத்தால் எதுவும் இல்லை. எல்லாவற்றிலும் ஏதோ இருக் கிறது என நினைத்தால் எல்லாம் இருக்கிறது. எல்லாம் இருப்பதில் அரசியலும் இருக்கிறது. அன்றாடச் சிக்கல்களும் இருக்கின்றன. எல்லா வற்றையும் கவனம் செலுத்தாமல் நகர்ந்து செல்லும்படி தூண்டும் அரசியல் தான் இன்றைய ஊடகங்களின் ஆழமான அரசியல். அதையெல்லாம் பேசும்போது ஊடகம் பற்றிய பேச்சு அரசியல் பேச்சாக இருக்கிறது. பொழுது போக்கின் அரசியலைப் பேச விரும்பினால் பொழுதுபோக்கின் கருவிகளான ஊடகங்களைத் தானே நாம் கவனித்தாக வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்