நம்பிக்கையிழப்பின் வெளிப்பாடு; அழகிய பெரியவனின் மிஞ்சின கதை



நாம் மாறிக்கொண்டிருக்கிறோம்; நமது சூழல் மாறிக்கொண்டிருக்கிறது; நம்மை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டது எனத் தனிமனிதன் நினைக்கும்போது பிறப்பது நம்பிக்கை. இதற்கு நேரெதிராகத் தோன்றுவது நம்பிக்கையின்மை அல்லது அவநம்பிக்கை. அதன் காரணிகளாக இருப்பவை நிராகரிப்புகள்; ஒதுக்கிவைத்தல்.
நீண்ட நெடுங்காலமாக விலக்குவதையும் விலகுவதையும் கருத்தியலாக ஏற்றுக்கொண்டு நகர்ந்து வந்துள்ள கெட்டிதட்டிய இறுக்கமான சமூக அமைப்பு இந்திய சமூக அமைப்பு. அதற்கு இன்னொரு பெயர் சாதியம். பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வகைமைகளை உருவாக்கி வேறுபாடுகளை நிலைநிறுத்தும் சாதியத்தின் மீது கடும் நெருக்கடியை உருவாக்கியது இந்திய அரசியல் சட்டம். வெளித்தள்ளும் (Exclusive) சமூகக் கோட்பாட்டிற்கு மாறாக உள்வாங்கும் (Inclusive) சமூகக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அனைத்துத் தளங்களிலும் இந்த நாட்டின் அனைத்துப்பிரிவினரும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற நினைப்பின் வெளிப்பாடே இட ஒதுக்கீடு. அதன் தொடர்ச்சியான தீண்டாமை ஒழிப்பு; அடிமை வேலை அழிப்பு என்பனவெல்லாம். ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாகத்திற்கு உதவுவதற்கான பணியாளர்களை உருவாக்கும்பொருட்டு இங்கு அறிமுகம் செய்த கல்விமுறை மீது சுதந்திரத்துக்குப்பின்னான அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் கடும்விமர்சனத்தை வைத்தபோதும், அதன் வடிவத்தில் அனைவருக்கும் கல்வி என்ற நேர்மறை அம்சம் இருந்தது. அதனை அடைவதற்கு வகை செய்யும் வாய்ப்புகளும் இருக்கிறது.
68 ஆண்டுக்கால இந்திய ஜனநாயகமும் அரசியலும் இந்த நோக்கங்களில் முன்னேற்றம் இருப்பதாக நம்பிக்கை அளித்தன. கல்விமுறையில் பொதுக் கல்வி, வல்லுநர் உருவாக்கக் கல்வி எனப்பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த மாற்றங்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட குழுவினருக்கு வாய்ப்பளிக்கும் நிலைபாட்டைக் கேள்விக்குள்ளாக்கவில்லை. அதனாலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுப்பவர்கள் அதன் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பியதில்லை. வாக்குவங்கி அரசியலுக்காக என்றாலும், அரசுகள் சமூகநலத்திட்டங்களை மேற்கொள்ளும் நிலையிலிருந்து பின்வாங்கவில்லை. ஆனால் கடந்த ஓராண்டாக நடக்கும் ஆட்சியும், அரசியலும் அந்த நம்பிக்கையைச் சிதறடிக்கும் நோக்கம் கொண்டன என்ற நினைப்பு பலருக்கும் உண்டாகியுள்ளது. அப்படி நினைப்பவர்கள் வெளிப்படையாகக் கட்டுரைகள் எழுதுகிறார்கள்; கவிதைவடிவில் நேரடியாகக் கேள்வி கேட்கிறார்கள்; தெருவில் இறங்கிப்போராட்டங்கள் நடத்துகிறார்கள். ஆனால் புனைகதையைத் தனது வடிவமாகக் கொண்டுள்ள ஓர் எழுத்தாளர் என்ன செய்யலாம்? இந்தக் கேள்விக்கான விடை ஒன்றைச் சொல்லும் விதமாக அண்மையில் வந்துள்ள புதுவிசை இதழில் ( எண். 43/ மே, 2015) கதையொன்றை எழுதியுள்ளார் அழகிய பெரியவன். கதையின் தலைப்பு: மிஞ்சின கதை. அந்தக் கதையில் இடம்பெற்றுள்ள ஒரு பத்தியை இங்கே தருகிறேன். வாசித்துப்பாருங்கள்:

தேஸத்தில் இந்த ஸமயம் நிலவும் வர்ணாஸ்ரம விதிகளின்படி இவ்வாறு அவன் கஷ்டத்தோடு காரியமாற்றித்தானாக வேண்டும். தற்ஸமயம் அமலிலுள்ள நாட்டின் சட்டமான மனுஸ்மிருதியும் சொல்வது அதைத்தான். அவனுக்கு ஏதாவது ஸலுகைகள் வேண்டுமென்றால் அவன் மண்டலத்தின் ராஷ்டிரிய ஸேவக்குகள் மூலமாக யாசிக்கவேண்டும். அவர்கள் அம்மண்டலத்தின் ராஜாங்க காரியஸ்தரான ஸாதுவிடம் அவ்விண்ணப்பத்தைக் கொண்டுபோவார்கள்.

அழகிய பெரியவனின் மிஞ்சின கதையின் பகுதிகளில் ஐந்தில் நான்கு பங்கு இந்த நடையில் தான் இருக்கிறது. சமஸ்கிருத மொழிச்சொற்களோடு தேவநாகரி எழுத்துகளால் நிரப்பப்பட்ட பகுதிகள். எழுதிய கதையொன்று அரசின் தடைக்கும் தண்டனைக்கும் உரியது எனப் பயந்து தீக்கிரையாக்கப் பட்ட பின் தனித்தனியாகக் கிடந்த தாள்களில் மிஞ்சிய பகுதிகளைக் கொண்டு ஒரு கதையை உருவாக்குகிறான் ஒரு இளைஞன். அந்தக் கதைசார்ந்து அவனுக்கு எழும் சந்தேகங்களைத் தன் தந்தையிடம் கேட்டுத் தெளிவு பெறவும் முயல்கிறான் என்பதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மொழி நடை தமிழில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்த மணிப்பிரவாள நடையைச் சிலருக்கு நினைவூட்டலாம். மணிப்பிரவாள நடையை ஏறத்தாழ மறந்துபோன இந்த நடை ஒரு அந்நியமொழியின் நடையாகக் கூடத் தோன்றலாம்.

பொதுவாகக் கதைகள் கடந்தகாலத்தின் பதிவுகளாகவும் நினைவுகளின் அசைபோடுதலாகவும் இருக்கும். ஆனால் இந்தக் கதை எதிர்காலவியலின் அடிப்படையைக் கொண்டு முக்கால் நூற்றாண்டைத் தாண்டிய நிகழ்வாக அமைக்கப்பட்டிருக்கிறது. அப்படியான கதைகள் அறிவியல் புனைகதைகள் என அழைக்கப்படும். அறிவியல் எதிர்காலத்தில் பல ஆச்சரியங்களையும் எதிர்பாராத விளைவுகளையும் உண்டாக்கிவிடும் என்ற நம்பிக்கையில் புனைகதையாளர்கள் அறிவியல் புனைகதைகளை எதிர்காலத்தில் நடப்பனவாக எழுதுவதுண்டு. ஆனால் அழகிய பெரியவன் இந்தக் கதையை அறிவியல் புனைகதையாக எழுதவில்லை. சமூக நடப்புக்கதையாக எழுதியுள்ளார். எதிர்காலத்தில் இதுதான் நடப்பாக இருக்கப்போகிறது என்று எந்தவித ஆச்சரியமும் படாமல் எழுதிச் சென்றுள்ளார்

பின்பற்றப்பட்ட மனுதர்மக் கோட்பாடு காணாமல் போய் மக்களாட்சிக் கோட்பாடுகள் மலர்ந்துவிடும் என்ற நம்பிக்கையைத் தந்தது அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டம். ஆனால் அரசுகளின் செயல்பாடுகள் நம்பிக்கையை உருவாக்குவதற்குப் பதிலாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்தே வந்திருக்கின்றன. இதைக் கோபமாகச் சொல்ல விரும்பியது மட்டுமல்ல அழகிய பெரியவனின் நோக்கம் என்பது புரிகிறது. இந்த 68 ஆண்டுகளைத் தாண்டியதைப்போல இன்னுமொரு 68 ஆண்டுகளைத் தாண்டி விட்டால் திரும்பவும் மனுதர்மமே ஆட்சிக்குரிய சட்டம் என்பது முழுமையாகிவிடும் என்று நினைக்கிறார் அவர். நடக்கும் நிகழ்வுகளும் கருத்தியல்களும் அதைநோக்கியே இருக்கின்றன என்பதை உணர்த்தக் கதையை முன்னோக்கு உத்தியில் எழுதியுள்ளார்.

முன்னோக்கு உத்தியில் எழுதப்பட்ட இந்தக் கதை வாசிப்பவர்களை கவனம் குவிக்கச் செய்யும்பொருட்டுப் பின்னர் வரப்போகும் காலத்தில் இந்திய மனிதர்களும் அவர்களது இயல்புகளும் நம்பிக்கைகளும் வாழ்க்கைமுறையும் எப்படி மாறப்போகிறது என்பதை எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. நீங்கள் மட்டும் மாறப்போவதில்லை; நீங்கள் மட்டும் கடந்த காலத்திற்குள் பயணம் செய்யப்போவதில்லை; நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மொழியின் அழகும், அடிப்படைகளும், சொற்களும் காணாமல் போகும் வாய்ப்பு தெள்ளத்தெளிவாக இருக்கிறது என்பதைச் சொல்லவும் விரும்பியுள்ளார். அதன் பொருட்டுக் கதையின் மொழிநடையைக் கவனமாக மாற்றித்தந்துள்ளார்.

ஒரு கதையின் நோக்கத்தைக் கதாபாத்திரங்களும் அவை எதிர்கொள்ளும் சிக்கல்களும் மட்டுமே வெளிப்படுத்தக் கூடும் என்று நினைக்க வேண்டியதில்லை. அதன் மொழிநடையேகூடப் பெருந்துணை புரியக்கூடும். அதற்கொரு உதாரணக்கதையாக இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. நிகழ்கால அரசியல் விமரிசனத்தை இப்படியும் சொல்லமுடியும் எனக்காட்டியுள்ளார் அழகியபெரியவன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்