அடிப்படைவாதத்திற்கெதிரான அரசியல்



அந்த நிறுவனங்களெல்லாம் பெருங்கனவொன்றின் தொகுதிகள்.


பிரிட்டானியர்களிடமிருந்து விடுதலைபெற்ற இந்தியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையவேண்டும்; எதிர்கால இந்தியர்கள் இவ்வுலகத்தோடு எவ்வாறெல்லாம் உறவு கொள்ளவேண்டும் என்பதற்கான வரையறைகளை உருவாக்கித் தந்த  திட்டக்குழுவின் பரிந்துரைகளின்பேரில் முதல் ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளியிடப்பட்டு ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டகாலத்திலும் பெருங்கோலங்களாக - வண்ணவண்ணக் கோலங்களாக ஆன நிறுவனங்கள் அவை.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களின் (IIT) எண்ணிக்கை இப்போது 19. இந்திய மேலாண்மையியல் நிறுவனங்கள்(IIM)  என்ற பெயரில் இயங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 21. இந்தியமொழிகளுக்கான மைய நிறுவனம் (CIIL) ஒன்றே என்றாலும், அவற்றின் வட்டாரக் கிளைகள் இந்தியாவின் ஏழு நகரங்களில் செயல்படுகின்றன. அதன் சகோதர நிறுவனங்களான  அயல்மொழிகளுக்கான இந்திய நிறுவனம் (CIFL) ஹைடிராபாத்திலும், மொழிபெயர்ப்புக்கான நிறுவனம் பெங்களூருவிலும் இருக்கின்றன. மாநிலம் ஒவ்வொன்றிலும் ஒரு மையப் பல்கலைக்கழகமும் நடக்கின்றன. இவையெல்லாமே இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் பெருங்கனவுகள். இந்தக் கனவுகளின் விளைவுகளே இந்தியர்களின் நவீன அறிவாகவும் மனிதவளங்களாகவும் ஆகியிருக்கின்றன.
புனே திரைப்படக்கல்லூரி : தனித்தன்மையான வரலாறு
பெருங்கனவின் துணைக் கனவு புனே திரைப்படக்கல்லூரி (1959). நிலவியல், மொழி, பண்பாடு, சமயம், சாதிகள் எனப் பலப்பலவாய்ப் பிரிந்துகிடக்கும் இந்தத் தேசத்தின் பன்முகத் தன்மையை உள்வாங்கிய ஆட்சித் தலைமையின் கனவால் உருவான நவீனக் கலைமையம். இந்திய அரசின் பல்வேறு பண்பாட்டு நிறுவனங்களுள் ஒன்றான அது, உலகக் கலை இலக்கியப் போக்கிற்குக் கடந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் இந்திய அடையாளத்தோடு ஆகச் சிறந்த படைப்புகளைத் தந்து கொண்டே இருந்தது.  படைப்புகளை மட்டுமல்லாமல் ஆளுமைகளையும் ஆசிரியர்களையும் பெரும்படைப்பாளி களையும் தந்துகொண்டே இருந்த நிறுவனம் பெரும் கேள்விக்குறிக்குள் நிற்கிறது.
புனே பிலிம் இன்ஸ்டிடியூட் என முன்பு அழைக்கப்பட்டு இப்போது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்விக்கான இந்திய நிறுவனம்(FTII)  எனப் பெயர் மாற்றம் செய்யப்பெற்றுள்ளது. அதன் கடந்தகாலம் உருண்டுகொண்டே இருந்த சக்கரம். நிகழ்காலம் நிமிர்ந்து நிற்கும் செவ்வகத்தூண்களின் வரிசை. எதிர்காலம் உருவமற்ற பாறைக்கற்களாக ஆகக்கூடும். எதிர்காலம் பற்றி யார் கணிக்கமுடியும்? திக்குத் தெரியாத நிலையில் போராட்டத்தைத் தொடரும் 50-க்கும் மேற்பட்ட அந்த இளையோர்களை நினைக்கும்போது இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.
இந்திய சினிமாவின் வெகுமக்கள் பரப்பும், விவாதங்களை முன்வைக்கும் கலைவிரும்பிகளும் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் பெயர்கள் நம் மனக்கண் முன் வந்துபோகின்றன. தமிழ்நாட்டின் பாலுமகேந்திரா, கேரளத்தின்  அடூர் கோபாலகிருஷ்ணன், ஜான் ஆப்ரகாம், கன்னடத்தின் கிரிஷ் காசரவள்ளி, மராத்தியின் மணிகௌல் அதன் பழைய மாணவர்கள். இந்திப்படவுலகின் வழியாக இந்தியாவுக்கே சொந்தமாகிவிட்ட ஜெயாபச்சன், மிதுன் சக்ரவர்த்தி, ஓம் பூரி, கேதன் மேத்தா, போன்றவர்களும் அதன் முன்னாள் மாணாக்கர்களே என்பதும் நமக்குத் தெரியும். இவர்களில் சிலர் பின்னர் அதன் ஆசிரியர்களாகவும் இயக்குநர்களாகவும் கூட ஆனார்கள்.
சினிமா சார்ந்த உலகவரைபடத்தில் இந்திய சினிமாவை மிளிரச் செய்த சத்யஜித்ரேயும், ரித்விக்கடக்கும் அதன் தகைமைசால் பேராசிரியர்களாக இருந்தவர்கள். முழுநேரப் பட்டயப்படிப்புகளோடு குறுகியகாலத் திரைப்பட ரசனைமூலம் இந்தியர்களுக்கு சினிமாவின் நுட்பங்களையும் நோக்கங்களையும் சொன்னதோடு, உலகசினிமாவுக்குள் இந்திய/ வட்டாரமொழி சினிமாக்களைக் கொண்டுபோவதற்கான வழிமுறைகளையும் முன்னெடுத்தது இந்நிறுவனமே. துறைசார் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் இடத்தில் இருக்கும் ஆட்சிக்குழுவில்  ஆர்.கே. லக்ஷ்மன், ஷ்யாம் பெனகல், மிர்னாள் சென், கிரிஷ் கர்னாட், வினோத் கன்னா, யு. ஆர். அனந்தமூர்த்தி போன்ற கலை இலக்கியத் தேசிய ஆளுமைகளெல்லாம் அதன் தலைவர்களாக இருந்தவர்கள் என அதன் வரலாறு சொல்கிறது. ஆனால் கடந்த மூன்று மாதங்களாகத் தள்ளாடிக் கொண்டிருக்கிறது அந்நிறுவனம். அதன் வளாகம் போராட்ட மேகங்களால் மட்டுமல்ல, அச்சத்தின் இருளிலும் நிரம்பிக் கிடக்கிறது.

போராட்டப் பின்புலம்
மூன்று மாதங்களாக நடக்கும் போராட்டத்தின் முதன்மைக்காரணம் மத்திய அரசின் அணுகுமுறை மட்டுமே. மத்திய அரசின் தகவல்&ஒளிபரப்பு அமைச்சகத்தின் நேரடிக் கவனிப்பில் இயங்கும் இந்நிறுவனத்தின் தலைவராக திரு. கஜேந்திர சௌகான் என்பவர் நியமனம் செய்யப்பட்டபோது முணுமுணுப்புகள் கிளம்பின. மகாபாரதத் தொலைக்காட்சித் தொடரில் (பி.ஆர்.சோப்ராவின் தயாரிப்பு) தர்மனாக நடித்ததே அவரது முக்கியமான பங்களிப்பு. அதுதவிரச் சின்னச்சின்னப் பாத்திரங்களில் பல சினிமாக்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். நிறுவனத்தின் ஆட்சிக்குழுத் தலைவராக அவரது நியமனம், நிறுவனத்தின் கடந்தகாலப் பெருமைகளைச் சிதைத்துவிடும் என்பது மாணவர்களின் கவலை. எதிர்ப்புகளை அறிக்கைகளாக வெளியிட்டனர். எதனையும் பொருட்படுத்தாத அரசு ஆட்சிக் குழுவினைக் கலைத்துவிட்டுப் புதிதாக 8 பேரை நியமித்தது. அதில்  பிரதமர் நரேந்திரமோடியைப் பற்றிய ஆவணப்படங்களை இயக்கிய அனகா கையாஸ், மகாராட்டிர மாநிலத்தின் அகிலபாரத வித்யார்த்தி பரிஷத்தின் முன்னாள் தலைவரான நரேந்திர பாதக், ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்பொன்றின் நிர்வாகக்குழு உறுப்பினரான பிரான்சிலால் சைக்யா, பி.ஜே.பி.யோடு நெருங்கிய தொடர்புகொண்டிருக்கும் ராகுல் சோலாபுர்கர் ஆகிய நால்வருக்கு இடமளிக்கப்பட்டது. இந்நியமனங்கள் மேலும் எதிர்ப்பை வலுப்படுத்தியது. இவர்கள் ஆளுங்கட்சிக்குக் கருத்துவளம் தரும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் அமைப்பிலிருந்து வந்தவர்கள் என்பதே மாணவர்களின் எதிர்ப்பிற்கான காரணமாகியது. மாணவர்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கிய குழுதான் ஆட்சிக்குழு உறுப்பினர்களை நியமிக்கும். ஆனால் இவர்களின் நியமனங்களின் அந்த மரபை -நடைமுறையைக் கடைப்பிடிக்கவில்லை அரசு. இவர்களின் நுழைப்பைக் கருத்தியல் ரீதியாகப் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராக விடப்படும் சவால் என மாணவர்கள் அச்சப்பட்டார்கள். அதனால் போராட்டக்களத்தைத் தேர்வு செய்தனர். 
 போராட்டமும் அரசின் நிலைபாடும்
‘இந்த நியமனங்கள் திரும்பப்பெறவேண்டும்’ என்ற மாணவர்களின் கோரிக்கைக் கிணற்றில் போடப்பட்ட கல்லாக ஆனது. கண்மூடித்தனமான கட்சி அரசியலின் பாற்பட்ட எதிர்ப்பு அல்ல என்பது மாணவர்களின் வாதம் மட்டுமல்ல. அங்கிருந்து வெளியேறிய முன்னாள் மாணவர்களும் பேராசிரியர்களும் முன்வைக்கும் வாதங்களாக இருக்கின்றன. தன்னாட்சி அமைப்புகளின் தன்மை காப்பாற்றப்பட வேண்டுமென நினைக்கும் பலரும் அரசின் செயலைக் கண்டிக்கின்றனர். இந்திய அளவில் சில ஊடகங்களும் கூட அதன் மீது கவனத்தைக் குவித்துவிட்டன. ஆனால் அரசு இறங்கிவரவில்லை.  “நாங்களொன்றும் புதிதாகச் செய்யவில்லை; கடந்த ஆட்சியாளர்கள் இதுபோன்ற நிறுவனங்களைத் தங்களின் கருத்துருவாக்கத்திற்குப் பயன்படுத்தினார்கள்; நாங்களும் இந்தத் தேசத்திற்கு எதுசரியான கருத்து என்று நம்புகிறோமோ அதை உள்ளடக்கமாகக் கொண்ட படைப்புகளை உருவாக்கும் வழிகாட்டு நெறிகளைத் தரவிரும்புகிறோம். அதற்குப் பொருத்தமானவர்களை அமர்த்துவதில் தவறேதும் இல்லை” என்ற வாதத்தோடு பிடிவாதமும் செய்கிறது. அரசை ஆதரிக்கும் கருத்துச்சொல்லிகளின் குரலைத் தொலைக்காட்சி ஊடகங்களின் விவாதங்களில் நீங்கள் கேட்டிருக்கலாம். பானுகோம்ஸ், எஸ்.வி.சேகர். போன்றவர்களின் வாய்ச்சொல்லாகத் தமிழிலும் நான் கேட்டிருக்கிறேன்.
மத்தியிலிருக்கும் இந்த அரசும், அரசின் ஆதரவாளர்களும் மக்களாட்சி தரும் உரிமைகளை - நடைமுறைகளை மதிக்கப் போவதிலை என்பது  தெரிந்ததுதான். பாராளுமன்றத்தில் கிடைத்துள்ள அறுதிப்பெரும்பான்மை என்பது இந்தியாவின் அனைத்து நிறுவனங்களையும் தங்கள் போக்கில் மாற்றியமைத்து அதிகாரம் செய்ய வழங்கப்பெற்ற அனுமதியெனக் கருதுகிறது பாரதீய ஜனதா கட்சி. திரைப்படத் தணிக்கைக் குழுவின் பெயரை மாற்றியதோடு, அதிலிருந்த நடுநிலைக் கருத்தாளர்களை வெளியேறச் செய்த போதே அதன் திட்டங்கள் வெளிப்பட்டுவிட்டன. இந்திய வரலாற்றுக்கழகத்தின் உறுப்பினர்களின் வெளியேற்றம், அமர்த்தியா சென் தன்னை நாளந்தா பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கிக்கொண்டது போன்றனவற்றையெல்லாம் இப்போது நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

சொந்தக் கருத்துள்ளவர்கள், அரசின் கருத்திற்கு மாறிக்கொண்டால் பணியிலும் பதவியிலும் தொடரலாம். தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளத் தயாரில்லாதவர்கள் கௌரவமாக விலகிக்கொள்ளலாம் என்பதை ஏற்கெனவே உணர்த்திவிட்டனர். நிகழ் அரசாங்கத்தின் வலிமை மற்றும் பிடிவாதத்தை அறிந்த பலர் அரசின் கொள்கைகளோடும், நடைமுறைகளோடும் ஒத்துப் போகத் தொடங்கிவிட்டனர்.  அரசின் கொள்கையோடு ஒத்துப்போகத் தயாரில்லாதவர்கள் தங்களின் கீழிருப்பவர்களை முக்கியக் கூட்டத்திற்கு அனுப்பிவிட்டுப் பணியில் தொடரும் நிலையும் இந்திய அளவில் நடக்கவே செய்கின்றன.  ‘அரசின் திட்டம் இதுதான்; இதற்கு உடன்படுபவர்கள் பங்கேற்கலாம்; முன்னெடுத்துச் செல்லலாம். விரும்பாதவர்கள் விலகிக்கொள்ளலாம்’ என்ற வாய்மொழி உத்தரவுகளை பெரும்பதவிகளில் இருக்கும் ஒவ்வொருவரின் செவியும் ஒவ்வொருநாளும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. கேட்காத செவிகளை உடையவர்களுக்கு கண்ணுக்குத் தெரியாத தண்டனைகளும் மிரட்டல்களும் தொடரும். அதற்கும் இங்கே பல உதாரணங்கள் இருக்கவே செய்கின்றன. மிகச்சக்திவாய்ந்தவை எனத் தங்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிக்கொள்ளும் இந்திய ஊடகங்களின் குரல்கள் எவ்வாறு மாறிவிட்டன என்பது அறியாத ஒன்றல்ல.
இந்தப் பொதுப்போக்கிற்கு - பணிந்துபோகும் நிலைபாட்டுக்கு- எதிராக நிற்கிறார்கள் புனே மாணவர்கள் என்பதுதான் பிரச்சினையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.   அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பறிக்கை என்ற நிலையிலிருந்து மாறிப் போராட்டம், வேலைநிறுத்தம் எனத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக் குழுவில் நுழைக்கப்பெற்றுள்ள கலை இலக்கியம் சாராத நபர்களையும் தலைவரையும் நீக்கவேண்டும் என்ற போராட்டம் அரசால் கண்டுகொள்ளப்படவில்லை. தாங்கள் கற்ற கல்வி மற்றும் கலைக்கோட்பாடுகள் தந்த அறிதல் முறையோடும், தன்னாட்சிக் கல்வி நிறுவனங்களின் செயல்பாடு பற்றிய புரிதலோடும், இந்திய  ஜனநாயகம் தங்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பயன்படுத்தியும் நாங்கள் போராடுகிறோம் என்று நம்பிக்கொண்டிருந்தவர்களின் நிலை இப்போது பெரும் ஆபத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது.
நிர்வாகம் மாணவர்களைப் பிரித்தாளும் நிலைபாட்டை மேற்கொண்டு விட்டது. 2008 இல் நுழைந்த மாணவர்கள் தங்களின் திட்ட ஏடுகளையும் தேர்வுக்கான தயாரிப்புகளையும் ( project films and dissertations) உரிய காலத்தில் அளிக்காமல் வளாகத்தில் தங்கி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிர்வாகத்தின் குற்றச்சாட்டாக மாறியிருக்கிறது.  குறித்த காலத்தில் தங்கள் வேலையை முடிப்பதற்கான அடிப்படைக்கருவிகளும் சோதனைச் சாலை வசதிகளும் இல்லை என்பது மாணவர்களின் பதில்களாக இருக்கின்றன. ஒழுங்கின்மை, போதைப்பழக்கம் கொண்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, புதிய கல்வித்திட்ட அறிமுகம் என நிர்வாகம் தனது திசையை மாற்றியதன் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தைக்  கேள்விக்குறியாக்கிவிட்டது. போராடிய மாணவர்கள் 5 பேரைக் கைது செய்வதற்காகக் காவல்துறை நுழைந்த பின் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மாறிவிட்டது. மத்திய அரசை விமரிசனம் செய்யும் ராகுல் காந்தியும், அரவிந்த் கேஜ்ரிவாலும் வந்துபோனபின் மொத்தப்பிரச்சினையும் பேரரசியல் தளத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது.
 மாணவர்களும் அவரது ஆதரவாளர்களும் நாட்டின் பிற பகுதிகளில் இருக்கும் திரைப்படப் பயிற்சி நிறுவனங்களுக்கும் தன்னாட்சி நிறுவனங்களுக்கும் இந்தச் செய்தியை எடுத்துச் சென்று போராட்டத்தை வலுப்படுத்த நினைப்பதன் மூலம்  கருத்தியல் போராட்டமாக மாற்ற நினைக்கின்றனர். அவர்கள் தங்கள் வாதங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளனர். பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களையும், தன்னாட்சி அமைப்புகளையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதோடு, அதன் தொடர்ச்சியாகப் பன்னாட்டுக்குழுமங்களிடம் ஒப்படைக்கும் நோக்கமும் இந்த அரசுக்கு இருக்கிறது  என்ற அவர்களின் விமரிசனங்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஏனென்றால் இந்தியாவிலிருந்து அதிக விலைக்கு விற்கக் கூடிய பண்டங்களில் ஒன்றாக மனித மூளைகளும் இருக்கின்றன. அதிலும் கலை, இலக்கியக் கோட்பாடுகளால் நிரம்பிய மூளைகள் இன்னும் அதிகவிலைக்குரியதாக ஆகக்கூடுமல்லவா? அந்த மூளைக்குள் வேதங்கள், ஸ்மிருதிகள், யோகா, தாந்திரிக், வாத்ஸ்யாயனா, கௌடல்யா என இந்தியப் பாரம்பரிய அறிவைச் செலுத்திவிட்டால் விலை இன்னும் கூடலாம் என்பது அதன் நம்பிக்கை.
புனே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடக்கும் இந்தப் போராட்டம் நிர்வாகப் பிரச்சினையா? அரசியல் கட்சிகள் தூண்டி நடத்தும் பேரரசியலா? தேசப்பற்று, சொந்தப் பண்பாடு என்ற பெயரில் தங்களை மறைத்துக் கொண்டு பிற்போக்குக் கருத்தியலை முன்வைக்கும்  வலதுசாரிகளுக்கும், ஜனநாயகம், கருத்துரிமை, கலைச்சுதந்திரம் என்ற பெயரில் வளர்ச்சிக்கெதிரான அரசியலை முன்னெடுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் நடக்கும் கருத்தியல் முரண்பாடா? என்ற விவாதங்களையெல்லாம் இனியும் தொடரமுடியுமா? என்ற உணர்வைப் புனே நிறுவன வளாக நிகழ்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்தியா முழுக்கச்  சட்ட விதிகளும் காவல்துறையும் வளைந்துகொடுக்கும் அமைப்புகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. வளைந்து கொடுத்தலும் பணிந்துபோதலும் அங்குமட்டும் நடக்கின்றன என்பது உண்மையல்ல. சுதந்திர இந்தியாவின் பெருங்கனவு நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் நடக்கப்போகின்றன.
தேசிய முக்கியத்துவ நிறுவனங்கள்

 இந்திய விடுதலைக்குப் பின் இந்திய வரலாற்றின் முக்கியமான ஆண்டாக இருந்தது 1950. அந்த ஆண்டு ஜனவரி 26, ஜனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டதை நாமறிவோம்.  அந்த அறிவிப்பு ஓரடையாளம் மட்டும் தான்.  அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் உருவாக்கப்பட்ட நாட்டின் திட்டக் குழு, அரசியல், பொருளாதாரத் தளத்தில் மட்டுமல்லாமல், பண்பாட்டுத் தளத்திலும் இந்தியாவின் தனித்தன்மையை நிலைநாட்ட வேண்டும் எனத் திட்டவரைவை முன்வைத்ததது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு சிலநூறு தேசங்களாகக் கிடந்த துணைக்கண்டம் ஒற்றை நாடாக ஆகியிருக்கிறது. அதைத் தக்கவைப்பதற்குத் தேவை பல்லினங் களையும், பலமொழிகளையும் பலசமயங்களையும் அரவணைத்துச் செல்லும் சமத்துவக் குடியரசு என்பதை உணர்ந்த அரசியல் அமைப்புச் சட்டம் திரும்பத் திரும்பச் சொன்ன வார்த்தை பன்முகத்தன்மை. அந்த பன்முகத்தன்மையைத் தக்கவைக்கும் நோக்கத்தோடு கூடிய பண்பாட்டுக்கொள்கைகளும் உருவாக்கப்பட்டன. முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களில் அக்கொள்கைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகத் தனித்தன்மையான தகைமைசால் பண்பாட்டு நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன.
பண்பாட்டுப் பரிவர்த்தனைக்கான இந்தியக் குழு (ICCR,1950) முதலில் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இசை மற்றும் நாடகத்துறையை வளப்படுத்த சங்கீதநாடக அகாடெமி (SNA,1953) உருவாக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் (1954) இலக்கியத்திற்காக சாகித்திய அகாடெமி, ஓவியம் மற்றும் நுண்கலைகளுக்காக லலித் கலா அகாடெமி, தொல்லியல் பொருட்களைப் பாதுகாக்க தேசிய அருங்காட்சியகம், நவீனக் கலைப்பொருட்கள் உருவாக்கவும் காட்சிப்படுத்தவும் தேசிய நவீன ஓவியக்கூடம் என ஒவ்வொன்றாகத் தொடங்கப்பட்டன.  ஐந்தாண்டுகளுக்குப் பிறகு  தேசிய அளவில் அரங்கியலைக் கற்பிப்பதற்காகத் தேசிய நாடகப்பள்ளி (NSD,1959), டெல்லியிலும்  திரைப்படவியலுக்காக தேசிய திரைப்படநிறுவனம் புனேயிலும் தொடங்கப்பட்டன.  அடுத்ததொரு நிறுவனமான தேசிய வரைகலை நிறுவனம் தொடங்க இரண்டு ஆண்டுகள் (1961)ஆனது.
‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்’ என்ற தனித்தன்மையோடு விளங்கும்  இவையனைத்தும் மைய அரசின் தொடர்புடைய அமைச்சகங் களோடு நேரடித் தொடர்புடையவை. அந்தந்த அமைச்சகங்களுக்கான கொள்கைமுடிவுகளை உருவாக்கித் தரக்கூடிய வல்லுநர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் கொண்டவை. அதனால் அவற்றிற்கான அடிப்படைக்கட்டுமானங்கள் சிறப்பாக உருவாக்கித் தரப்பட்டன; நிதித்தேவை கேட்காமலேயே அரசிடமிருந்து கிடைத்தது 
இவையெல்லாம் புதிய உலகத்தின் சாளரங்கள் எனக் கருதப்பெற்றன. உலகநாடுகள் ஒவ்வொன்றிலும் கண்டுபிடிக்கப்படும் தொழில் நுட்பங்களையும், கோட்பாடுகளையும் இந்தியாவிற்குள் கொண்டு வந்துசேர்க்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டவை. பன்னாட்டுக் கலைவிழாக்களிலும், இலக்கிய அமைப்புகளிலும் உருவாக்கப்படும் சொல்லாடல்களை இந்தியர்களுக்கு - இந்தியமொழியில் பேசுவதற்கு வாய்ப்பளிக்க விரும்பிய அமைப்புகள். நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்வதற்காக உருவாக்கப்பெற்ற ஐந்தாண்டுத் திட்டங்களைத் தந்த முதல் தலைமையமைச்சர் பண்டித ஜவஹர்லால் நேருவோடு இணைந்து அவரது முதல் கல்வி அமைச்சரான மௌலான அபுல்கலாம் ஆசாத் செய்த பணிகளின் விளைவுகள். இவ்விருவரின் பின்னணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்ற தத்துவப்பேராசிரியர்களும் பி.என்.ஹக்‌ஷர், பபுல் ஜெயஹர், ஆர். பார்த்தசாரதி போன்ற இந்திய அறிவுஜீவிகளும் சேர்ந்து உருவாக்கினார்கள்;கலைஞர்களைப்பாராட்டினார்கள்; இந்தியவிழாக்களை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தினார்கள். அந்தச் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் இந்தியாவைப் பல்லினப் பண்பாடு கொண்ட நாடு என்ற தன்னுணர்வு இருந்தது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயர்ந்த கருத்தோட்டம் இருந்தது.
மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரம் செலுத்தும் நிகழ்கால அரசுகள் ஜனநாயகத்திலும் விவாதங்களிலும் நம்பிக்கையற்றனவாக மாறிக் கொண்டிருக்கின்றன. அரசியல் நீக்கம் என்ற பெயரில் பின்னோக்கிச் செல்லும் அரசியலை முன்னெடுக்கின்றன.  ‘கதவைத் திற; காற்றுவரட்டும்’ என்று சொன்ன பசுவய்யாவின் கவிதைவரிகளை மாற்றிப்போட்டு “மூடு; மூடுண்ட சமூகமே முன்னோர்களின் அடையாளம்” எனச் சொற்கோவைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் அவற்றின் ஆதரவாளர்கள்.  இவற்றைச் செய்வதற்கேற்றவர்களாக இருக்கக் கூடியவர்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்படுகிறார்கள். அமைச்சுப் பணியிலிருந்து நிறுவனத் தலைமைப் பணிவரை கலை, இலக்கியம், பண்பாட்டுத் துறைகளில் அமர்த்தப்பட்டுள்ள ஆளுமைகளின் பெயர்களைப் பட்டியலிட வேண்டிய தேவையில்லை.
பிடிவாதமான அரசியல் கருத்துடையவர்கள் அல்லது அரசியலற்ற ஆளுமைகள் தேடப்படுகிறார்கள். தமிழ்நாட்டிலிருக்கும் மையநிறுவனங்கள் எல்லாம் தலைமையற்றுக் காலியாக இருக்கின்றன என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள்.    நவீன வாழ்க்கை,சமூகமாற்றம் பற்றிச் சொந்தக் கருத்தில்லாத நிறுவன இயக்குநர்களும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் மேலிருந்து வரும் ஆணைகளுக்குப் பணிந்து போவார்கள்; கட்டுப்படுவார்கள். அவர்களுக்குக் கீழிருப்பவர்களை அவ்வாறே பணிந்துபோகவும் கட்டுப்படவும் வலியுறுத்துவார்கள். மீறுபவர்களைத் தண்டிக்க மாற்றுவழிகளைக் கண்டுபிடிக்கத் தயங்கவும்மாட்டார்கள். பணம் கொடுத்தால் பட்டங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைத்த தரகர்களால் நிரம்பிவழிந்த கல்வி வளாகங்கள், தாதாக்களின் இருப்பிடங்களாக ஆகப்போகின்றன. தரகர்களுக்கும் தாதாக்களுக்கும் வேறுபாடுகள் தெரியாமல் தவிக்கக்கூடிய நாட்கள் வெகு தொலைவில் இல்லை. கல்வி நிறுவனங்களின் சூழல் அச்சத்தின் கறுப்புநிழலால் கனன்று கொண்டிருக்கின்றன.

 ===================================
 நன்றி: உயிர்மை செப்டம்பர்,2015

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்