ஊடக யுத்தம்: வென்றிலென் என்றபோதும் ?


வென்றி என்பது வெற்றி என்னும் சொல்லின் பழைய வடிவம் என்பதை ஊகிக்கமுடிகிறது. வென்றி என்பது பழைய சொல்லா? வெற்றி என்பது பழைய சொல்லா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
இன்று வெற்றியையெடுக்க அல்லது வெற்றியைக் கைப்பற்றக் களமாட வேண்டும். தனிமனிதர்களும் கூட்டமும் போராட வேண்டும். களம் நிகழ்காலத்தில் போராட்டக் களம். போராட்டங்களில் மௌனமாக இருத்தல் தொடங்கி, ஒத்துழையாமை, உண்ணாநிலை குரல் எழுப்புதல், மறியல், சட்டம் ஒழுங்கைக் குலைத்தல் எனப் பலவடிவங்கள் உள்ளன. ஆனால் முன்பிருந்த வடிவம் போர்க்களம்.ரதகஜதுரகபதாதிகளோடு மோதிவீழ்ந்த போர்க்களம்.

மோதி வீழ்ந்த போர்க்களக்காட்சியின் கூற்றாகவே கம்பன் ‘வென்றிலென் என்றபோதும்’ என்ற சொல்லாடலை அறிமுகம் செய்கிறான். அந்தச் சொல்லாடல் அறிமுகமாவதற்கு முன்பே எனக்கு “வென்றெடுத்தல்” என்ற சொல்லாடல் அறிமுகம் ஆகிவிட்டது. நம்முடைய கருத்தோடு உடன்படாத நபர்களிடம் உரையாடி, விவாதித்து நமது கருத்தை ஏற்கச் செய்து நாம் நம்பும் இயக்கத்திற்குரிய நபராக மாற்றும் வேலையைச் செய்தலைக் குறிக்க வென்றெடுத்தல் என்னும் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள். எனது மாணவப்பருவத்தில் தீவிரமாக இயக்கப்பணியாற்றும் இடதுசாரிகளின் வேலைகளில் ஒன்று இந்த வென்றெடுத்தல் தான். என்னை வென்றெடுத்த தோழர்கள் ஒருவரல்ல; பலர். பலரும் பலரும் பலவிதமாகப் பேசிக் கரைப்பதால் மொத்தத்தில் வென்றெடுக்கப்படாத வீணர்களாய்ச் சிலர் ஆவது. அப்படி வீணாய்ப்போன ஒருவனாகக் கூட என்னை நானே கருதிக் கொள்வதுண்டு. அது இப்போது தேவையில்லை.
கம்பனின் ‘வென்றிலன் என்றபோதும்’ என்ற அந்தப் புகழ்பெற்ற சொல்லாடலைச் சொல்லும் பாத்திரம் ராவணன். யுத்தத்தை உண்மையான யுத்தமாக நினைத்தால் ஒரு பாத்திரம் இப்படிப் பேசும் வாய்ப்பே இல்லை. ‘தனது எதிரி அபாரசக்தி வாய்ந்தவன் என்பதும், அவனது பேரும்புகழும் இங்கே கருத்தியல் ரீதியாக ஆட்சிசெய்யும் வேதங்கள் நிலைபெற்றுள்ள காலம்வரை நிலைபெற்று இருக்கப்போகும் ஒரு பெயர்’ என்பதும் தெரிந்தபின் ராவணன், ராமனை எதிர்த்துப்போரிட்டான் என்பதாக இந்தப் பாடல் அர்த்தப்படுகிறது.
சாதாரண மனிதர்கள் இன்று இருப்பார்கள்; நாளை இருக்க மாட்டார்கள். ஆனால் புகழ்பெற்ற மனிதர்களுக்கு முடிவு - இறுதி என்பது இல்லை.இந்தப் போரில் நான் ராமனை வெற்றிக் கொள்ளாமல் போகலாம். ஆனால் நான் தோற்று, ராமன் வென்றாலும், அந்த ராமனை நினைக்கின்ற மனிதர்கள் என்னையும் நினைக்கவே செய்வார்கள்; ராமனை எதிர்த்ததன் மூலம் நான் சாதாரணன் என்ற நிலையிலிருந்து புகழுக்குரிய எதிரியாக ஆகிவிட்டேன் என்னும் மனநிலையில் ராவணன் பேசுவதாகக் கம்பர் எழுதுகிறார்.
வென்றிலென் என்றபோதும் வேதம்
உள்ளளவும் யானும்
நின்றுனென்அன்றோ, மற்றுஅவ்
இராமன் பேர் நிற்குமாயின்?
பொன்றுதல்ஒரு காலத்தும்
தவிருமோ? பொதுமைத் தன்றோ?
இன்றுளர் நாளை மாள்வார்;
புகழுக்கு இறுதி யுண்டோ?
நிகழ்காலப் போர்க்களமாக ‘ ஊடகவிவாதங்கள்’ நடக்கின்றன. தொலைக்காட்சி ஊடகங்களில் நடக்கும் விவாதங்களைப் பார்க்கும்போது பங்கேற்கும் நால்வரும் ஒருவரையொருவர் வென்றெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகச் சொல்லமுடியாது. அவர்களெல்லாம் ஏற்கெனவே வென்றெடுக்கப் பட்டவர்கள்; விவேகமானவர்கள். அவர்களின் முயற்சி தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களை வென்றெடுக்க வேண்டும் என்பதாகவே இருக்கின்றது. பங்கேற்பவர்களின் வென்றெடுப்போடு, தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்துபவர்களின் வென்றெடுப்பும் அதன் பின்னணியில் இருக்கவே செய்யும். வென்றெடுக்கத் தேவை போராட்டங்கள் அல்ல; புத்திசாலித்தனம்.
தொலைக்காட்சி அலைவரிசையை நடத்துபவர்கள் எப்படியாவது திரளான பார்வையாளர்களைத் தங்கள் பக்கம் திருப்பவேண்டும்; திரும்பி வந்தவர்களைத் தக்கவேண்டும் என்பதாக இருக்கும் என்பது பொதுவான பார்வை. இதற்கு மாறான பார்வையும் உண்டு. ஏற்கெனவே தங்களது தொலைக்காட்சிக்கு நிலையான பார்வையாளர்கள் உண்டு என நினைப்பவர்கள், அவர்களைத் தக்கவைப்பதற்கான தகவல்களையும் நிகழ்ச்சிகளையும் மட்டுமே தருவார்கள். செய்தி அலைவரிசையல்லாத தொலைக்காட்சிகள் அதனதன் உள்ளடக்கங்களைத் தருவதன் வழியாக இந்த வேலையைச் செய்கின்றன.
சன் தொலைக்காட்சி தனது தொடர்களின் பார்வையாளர்களைத் தக்கவைப்பதற் காகத் தொடர்களில் செலுத்தும் கவனத்தை அறிந்தவர்கள் இதனைப் புரிந்துகொள்ளலாம். சன் தொலைக்காட்சியின் பார்வையாளர்களை வாரயிறுதி நாட்களில் தன் பக்கம் இழுத்த விஜய்தொலைக்காட்சி, இப்போது வார நாட்களில் தொடர்களை ஒளிபரப்புவதன் மூலம் சன் தொலைக் காட்சியின் பார்வையாளர்களை வென்றெடுத்தது
ஏற்கெனவே காலையிலும் மாலையிலும் செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்த சன், கலைஞர், ஜெயா , மக்கள் தொலைக்காட்சியின் பார்வையாளர்களை வென்றெடுக்க நினைத்த புதிய தலைமுறை தொலைக்காட்சியினர் கையிலெடுத்த ஆயுதமே இந்த நேரலை விவாதங்கள். நீயா? நானா? போன்ற பேச்சுக்கச்சேரிகள் பதிவுசெய்து, ஒழுங்கு செய்யப்பட்டவை. உணர்ச்சிகரமான பேச்சுகளுக்கோ, காட்சிகளுக்கோ வாய்ப்பு குறைவு. ஆனால் நேரலைகளில் இந்த வாய்ப்புகள் அதிகம். உணர்ச்சிகரமான பேச்சுகளும் காட்சிகளும் நாமும் பங்கேற்பதான பாவனையைத் தரக்கூடியவை.
புதிய தலைமுறையைத் தொடர்ந்து அதே உத்தியோடு களம் இறங்கின செய்தி அலைவரிசைகள், தந்தி தொலைக்காட்சி. சன் செய்திகள், கலைஞர் செய்திகள், ஜெயா செய்திகள் என எல்லாம் களமிறங்கினாலும் தனித்து நிற்பன புதிய தலைமுறையும் தந்தியும் மட்டுமே. மற்ற மூன்றும் வென்றெடுக்கும் நோக்கம் கொண்டன அல்ல. தக்கவைக்கும் நோக்கம் கொண்டன. ஜெயா செய்தி அஇஅதிமுகவின் வாக்குவங்கிக்கான நேரலை விவாதங்களை நடத்துவதன் மூலம் தக்கவைக்கும் வேலையை கச்சிதமாகச் செய்கிறது. இருப்பதில் பெரிய கட்சி என்பதில் அதன் ஆதரவுத் தொலைக்காட்சிக்குத் தக்கவைப்பதே தேவையான பணியாக இருக்கிறது. தமிழக அரசியல் சார்ந்த முக்கியமான நிகழ்வுகள் நடக்கும்போது மட்டுமே நேரலை விவாதங்களை நடத்தும் ஜெயா செய்திகள் மற்ற நேரங்களில் வழக்கமான நிகழ்ச்சிகளோடு நிறுத்திக்கொள்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குவங்கிக்கான விவாதத்தை சன் செய்திகளும் கலைஞர் செய்திகளும் பங்கு போடுவதால் இரண்டையும் கவனிக்காமல் அதன் பார்வை யாளர்கள் திசைமாறுகிறார்கள். புதிய தலைமுறைக்கும், தந்திக்குமாக அலைபாய்கிறார்கள். இவ்விரண்டுக்கும் திட்டமான அரசியல் கட்சியோடு தொடர்பில்லை என்பதால், “ நடுநிலை” என்னும் மாயயதார்த்தத்தை உண்டாக்கிக் கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால் அந்த மாயயதார்த்தத்தை உருவாக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்னும் மையக்கதாபாத்திரங்களின் தெளிவான பார்வையால் (ரங்கராஜ் பாண்டே, ஹரிஹரன்) வென்றெடுக்கும் சூட்சுமம் கொஞ்சம்கொஞ்சமாகத் திரைவிலக்கம் கிடைக்கிறது. புதிய தலைமுறையில் தெளிவற்ற பார்வையில்லாதவர்கள் போலவும் எல்லாவற்றையும் அங்கீகரிக்கும் தாராளவாதப் பின்னணியாளர்கள் போலவும் முன்னிறுத்தப்படும் ஒருங்கிணைப்பாளர்களால் வென்றெடுக்கும் நிகழ்ச்சிகள் கச்சிதமாக நடைபெறுகின்றன.
ஒருங்கிணைப்பாளர்கள் தாங்கள் பணிபுரியும் அலைவரிசை களுக்குப் பார்வையாளத்திரளை வென்றெடுக்கும் வேலையில் கவனம் செலுத்தும்போது பங்கேற்கும் புத்திசாலிகள் தங்களின் கருத்துகளின் பக்கம் பார்வையாளத்திரளை வென்றெடுத்து விட முடியும் என நம்பி அதில் பங்கேற்கிறார்கள். குடிமைச் சமூகத்தை தன்னுரிமை கொண்ட சமூகமாகவும், பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கும் கூட்டமாகவும் மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் மாற்றி விடவும் முடியுமென நம்பி பத்திரிகையாளர்களும் நடுநிலைச் சிந்தனையாளர்களும், இடதுசாரிகளும் அவற்றில் பங்கேற்கிறார்கள். ஆனால் அவர்களோடு விவாதிக்க வருபவர்கள் நிகழ்ச்சியைத் திசைதிருப்பித் தாங்களும் பெருந்திரளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் உணர்ச்சிகரமாக ஆக்கிவிடுகிறார்கள்.
உணர்ச்சிகரமான சொல்லாடலில் தெறிக்கும் தேசியவாதம், மதவாதத்தை முன்மொழியும் பெரும்பான்மைவாதம், ஆண் -பெண் உறவுசார்ந்த ஒழுக்கம், குடும்ப அமைப்பு பற்றிய பொது ஒழங்கு, கட்டுப்பாடான வாழ்க்கை, ஆன்மீகம் என்பதை மையப்படுத்தும் பண்பாட்டுவாதம்,மேல் -கீழ் என்பதை நம்பும் சாதீயவாதம் போன்ற அனைத்தும் வெகுமக்கள் மனங்களில் கேள்விகளற்றவனவாக அப்படியே தங்கியிருக்கின்றன.
நூற்றாண்டுகளாக உருவாக்கப்பெற்ற அக்கருத்தோட்டங்களைத் தேசிய அளவில் முற்போக்கான கருத்துகளைக் கொண்டதாகச் சொல்லிக் கொண்ட காங்கிரஸ் கட்சியும், தமிழக அளவில் பெரியாரின் அறிவொளிவாதத்தை முன்னெடுத்தவர்களாகச் சொல்லிக்கொள்ளும் திராவிட இயக்கத்தவரும் கொஞ்சமும் அசைத்துவிடவில்லை. ஓட்டுவங்கி அரசியலில் அதிகமாக்கவே செய்துள்ளனர் என்பது நடப்பு உண்மை. அவர்களின் ஆட்சியில் கல்வி நிலையங்களில் விரைவான மாற்றங்களைச் செய்ய வில்லை. ஊடகங்களில் திட்டமிட்டுப் பிரச்சாரங்களை நடத்தவில்லை. எல்லாத்தளங்களிலும் ஊடறுத்துச் சென்று பெருந்திரளை வென்றெடுக்கவில்லை.
இப்போது பழைமையைத்தூக்கிப் பிடிக்கும் கூட்டம் அதிகாரத்திற்கு வந்துள்ளது. பழையனவற்றின் மீது கேள்விகளற்று இருக்கும் கூட்டத்தை எளிதில் வென்றெடுத்துவிடும் என்று நம்புகிறது. ஊடகங்கள் அதற்குப் பக்கபலமாக நிற்கின்றன. இந்தப் போரில் நீங்கள் வென்றிலனாகவே இருக்கப்போகிறார்கள் ராவணாதிகள். ராமனைப் போற்றிக் கொண்டு வேதங்களைத் தூக்கிப் பிடிப்பவர்கள் வென்றவர்களாகவே ஆகப்போகிறார்கள்.
இந்த நேரத்தில் ராவணர்கள் ஒரு முடிவை எடுக்கலாம். ராமன் புகழிருக்கும்வரை எனது புகழும் இருக்குமென ஏமாந்து போரிட்ட ராவணனாக நீங்கள் இருப்பதில் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. ராமனோடு இனி யுத்தமில்லை என்பதே அந்த முடிவு. நீங்கள் களத்திற்குப் போனால் தானே இந்தத் தொலைக்காட்சி அலைவரிசைகளின் விவாதக்களங்கள் போர்க்களங்களாக மாறும். ராமனின் புகழில் உங்களுக்கும் பங்கு வேண்டுமென்றல் நினைத்த ராவணன்போல நீங்கள் கலந்துகொண்டு பங்கேற்பு செய்யுங்கள். ‘ இன்றுபோய் நாளை வா” என அவன் அனுப்பிய அவமானத்தைத் தாங்கிக் கொண்டு திரும்பவும் போய்ச் சண்டையில் மரணித்துப் புகழ்பெற்றது போல புகழ் பெறுங்கள்.

கருத்துகள்

naanjil இவ்வாறு கூறியுள்ளார்…
/நிகழ்காலப் போர்க்களமாக ‘ ஊடகவிவாதங்கள்’ நடக்கின்றன./
அருமையான கட்டுரை; நிகழ்கால நிகழ்வுகளை முன்னெறித்தியது எழுதியிருப்பது சிறப்பு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்