கமல்ஹாசன்: இரண்டும் கலந்த கலவை



துன்ப உணர்வுகளும் இன்ப உணர்வுகளும் கலவையாக வெளிப்படும் நாடகத்தையோ அல்லது வேறுவகைப்பட்ட இலக்கிய வகையையோ அல்லது இன்ப துன்பங்களை ஒருசேரத் தரும் நிகழ்வையோ குறிக்கும் சொல்லாக துன்ப இன்ப நாடகம் என்றை சொல்லைச் சொல்லலாம். ஆங்கிலத்தில் டிராஜிக் காமெடி (Tragic Comedy) என்று வழங்கும் இச்சொல் பிரெஞ்சு மொழியில் tragicomedie எனவும் இத்தாலிய மொழியில் tragicommedia என்றும் சொல்லப் படுகிறது. இவை அனைத்தும் லத்தீன் மொழிச் சொல்லான Tragicomoedia என்பதிலிருந்து வந்தவைதான். American Heritage Talking Dictionary.

மும்பைXபிரஸ் படத்தைக் காமெடி-நகைச்சுவை- படம் என்று வகைப்படுத்துகிறீர்களா.. ?

அப்படி வகைப்படுத்துவதில் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. ஏனென்றால் நமது சினிமா உலகம் ஒரு காமெடிப் படத்தை எப்படி அணுகும் என்ற பிரச்சினை தான். பொருட்படுத்தத் தக்க சினிமாவாக அது கருதுவதில்லை. ஆனால் எனது படங்களில் முக்கியமானதாக நான் கருதும் படம் பேசும் படம். அதனை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். அவர் தான் இந்த மும்பை Xபிரஸ் படத்தையும் இயக்கியிருக்கிறார். எனது சினிமா வாழ்வில் பேசும் படம் எப்படித் திருப்பு முனையாக அமைந்ததோ அதைப் போல மும்பை Xபிரஸ் படமும் திருப்பு முனையாக அமையும்.

கடந்த தமிழ் புத்தாண்டு [பார்த்திப ஆண்டு சித்திரை] முதல் தேதி வருவதாக இருந்த மும்பை Xபிரஸ் படம் பற்றிய நேர்காணலில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு இப்படிப் பதில் சொன்னவர் கமல்ஹாசன்.அவரே,

"இந்தப் படத்தில் நகைச்சுவை அம்சங்கள் வெளிப்படும்படியாகத் தான் வேலை செய்துள்ளோம். இப்படிச் சொல்வதால் சிரிக்க வேண்டிய இடங்கள் இவையிவை என்று திட்டமிட்டு சிரிப்பதற்கான புள்ளிகளையும் இடைவெளிகளையும் உருவாக்கி யிருக்கிறோம் என்று நினைத்துவிட வேண்டாம். எனது படங்களைத் தொடர்ந்து பார்த்து வரும் பார்வையாளர்கள் மும்பை Xபிரஸ் படத்தை 1990-ல் நான் நடித்த மைக்கேல் மதன காமராசன் படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வாய்ப்புண்டு"

என்றும் சொல்லியிருந்தார். கடைசியாக வந்த கமல்ஹாசனின் மும்பை Xபிரஸ் அவரது கலை விருப்பத்தையும் வியாபார நோக்கத்தையும் நிறைவேற்றத் தவறிவிட்டது. என்றாலும் கமலஹாசன் இன்னொரு நகைச்சுவைப் படத்தில் நடிக்க மாட்டார் என்றோ தயாரிக்க மாட்டார் என்று சொல்லிவிட முடியாது.

வித்தியாசங்களின் மீது விருப்பம்

கமல்ஹாசன் குறிப்பிடும் மைக்கேல் மதன காமராசனுக்குப் பிந்திய அவரது திரையுலக அடையாளம், அதற்கு முந்திய அடையாளங்களிலிருந்து வெகுவாக மாற்றம் பெற்ற அடையாளம்.1990-க்குப் பின்பு தான் கமல்ஹாசன் என்னும் நடிகர், கமல்ஹாசன் என்னும் சினிமாக்காரராகத் தன்னைக் காட்டிக் கொள்ளத் தொடங்கினார். நடிகரிலிருந்து சினிமாக்காரர் என்ற அடையாளத்தை நோக்கிய பயணம் ஒருவிதத்தில் கச்சிதமாகத் திட்டமிட்ட பயணமும் கூட.நடிகன் என்ற அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டே கதாசிரியன்,வசனகர்த்தா, இயக்குநர் என்று கலைஞன் சார்ந்த தேடலும், தயாரிப்பாளர் என்ற வியாபார அடையாளமும் இணைகோடுகளாகச் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டுக் கொண்ட கமல்ஹாசனின் இந்தப் பயணம் தன்னுணர்வுடன் கூடிய பயணமும் தான்.

   
'திரைப்படம் இப்போது வியாபாரமாக இருக்கிறது; என்றாலும் அடிப்படையில் அது ஒரு கலை. அதுவும் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் தொழில் நுட்பத்தைத் தனது பரப்பிற்குள் உள்வாங்கிக் கொண்டு வளரும் கலை'  என்பதை அறிந்த ஒருவரின் பயணம் அது. அப்படி அறிந்ததின் விளைவாக இரட்டைக் குதிரை பூட்டிய தேரில் - கலையின் நோக்கம், வியாபாரத்தின் சாத்தியம்- என்ற இரட்டைக் குதிரை பூட்டிய தேரில் பயணம் செய்வதை விரும்பியே மேற்கொண்டவர் அவர். ஆபத்தில்லாததும் ரசிக்கத் தக்கதுமான இந்தப் பயணத்தின் வெளிப்பாடாகவே தொண்ணூறிலிருந்து கமல் நடிக்கின்ற படங்களைக் காணமுடிகிறது. இந்தப் பயணத்தில் அவர் ஏற்கும் பாத்திரங்களுக்குக் கச்சிதமான ஒரு வார்ப்பையும் கூட உருவாக்கி வைத்துள்ளார்.

"தன் மனம் சரியென நம்பும் ஒன்றை நிறைவேற்றுவதில் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்ட ஒரு மனிதனிடம் இருக்கும் அன்பும் கனிவும்" எனக் கட்டமைக்கப்பட்ட பாத்திரங்களின் வார்ப்பு.தமிழ்ச் சமூகம் மாற்றத்தில் இருக்கிறது; ஆனால் அதில் உலவும் சில வகை மனிதர்களும், சிலவகைக்குழுக்களும் அந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ளாமல், தடைக்கற்களாகவும், முட்டுக்கட்டைகளாகவும் இருக்கின்றனர் என்ற ஆதங்கம் கூட அந்தப் பாத்திரவார்ப்பின் பின்னணியில் உண்டு. கமல்ஹாசன் நடிக்கும் எல்லாப் படங்களிலும் அவர் ஏற்கும் பாத்திரங்களின் பொதுவார்ப்பான இந்தக் கூறுகள்நகைச்சுவைப் படங்களில் ஒருவிதத்திலும் நகைச்சுவை அல்லாத தீவிரநிலை (serious)ப் படங்களில் இன்னொரு விதத்திலும் வெளிப்படுகின்றன.பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை என்றாலும் வகைப்பாடும் சாத்தியமாகி இருக்கிறது. ஒருவேளை அதில் தான் கமல்ஹாசனின் அடையாளமும் தனிச்சிறப்புகளும்  தங்கி இருக்கின்றன போலும்.

1990 க்குப் பின்னால் வந்த அவரது படங்களை நினைவிலிருந்து பட்டியலிட்டால் பாதிக்குமேலான படங்கள் நகைச்சுவைப் படங்களாகவே உள்ளன.மைக்கேல் மதன காமராஜன், சிங்காரவேலன், காதலா.. காதலா..,ஔவை சண்முகி, பம்மல் கே.சம்பந்தம், பஞ்சதந்திரம், தெனாலி, வசூல் ராஜா எம்பிபிஎஸ், எனத் தொடர்ந்து மும்பை Xபிரஸில் முடிகிறது அந்தப் பட்டியல். இதற்கு மாறான இன்னொரு பட்டியலில், குணா,தேவர் மகன், மகாநதி, குருதிப் புனல், ஹேராம், ஆளவந்தான், அன்பே சிவம், விருமாண்டி போன்ற படங்கள் இடம்பெறுகின்றன. நகைச்சுவைப் படங்கள் என்ற பட்டியலில் இடம்பெற்ற படங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இரண்டாவது வகைப்படங்களை அப்படிச் சொல்ல முடியாது. அப்படங்களுக்காக முதலீடு செய்தவர்களுக்குச் சில படங்கள் நஷ்டத்தையே உண்டாக்கியிருக்கக் கூடும். என்றாலும் விரிவான விவாதங்களையும் விமரிசனங்களையும் அப்படங்கள் உருவாக்கின என்பதும் உண்மை. அந்த வகையில் கமல்ஹாசனுக்குக் கிடைத்த லாபம் அதிகம். லாப, நஷ்டக் கணக்கை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். அவரது நகைச்சுவைப் படங்களுக்குள் செல்லலாம்.

மைக்கேல் மதனகாமராஜன் தொடங்கி மும்பை Xபிரஸ் வரையிலான படங்கள் திரையரங்கில் அமர்ந்திருக்கும் போது பார்வையாளர்களுக்குச் சிரிப்பலைகளையும் நகையுணர்வு களையும் தந்தன. அந்த அடிப்படையில்  அந்தப்படங்கள் நகைச்சுவைப் படங்கள் என வகைப்படுத்தவும்பட்டன. நகைச்சுவை உணர்வை உண்டாக்கிய அப்படங்களுக்கு சிரிப்பலைகளை உண்டாக்குதல் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே இருந்தன என்பதும் உண்மை இல்லை. அப்படங்கள் உண்டாக்க விரும்பிய அல்லது விவாதிக்க விரும்பிய கருத்தியல்கள் அல்லது செய்திகள் என்பன நகைச்சுவை என்ற அளவில் விட்டுவிடத் தக்கன அல்ல. படங்களில் உண்டாக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள் தந்த சிரிப்பலைகளைத் திரை அரங்கிலேயே விட்டுவிட்டுப் பார்வையாளன் தனது சொந்த வாழ்க்கைக்குள் நுழைந்து கொள்வது போல இப்படங்கள் தந்த செய்தியையும் திரை அரங்கிலேயே  விட்டுவிட்டுப் போக வேண்டும் என்று கமல்ஹாசனும் நினைத்திருக்க மாட்டார்; அப்படங்களை இயக்கிய இயக்குநர்களும் நினைத்திருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மையும் கூட. 

கடைசியாக வந்த மும்பை Xபிரஸ், வசூல் ராஜா எம்பிபிஎஸ், தெனாலி போன்ற படங்கள் சமூக வெளிக்குள் சில வகை மனிதர்களின் மாதிரிகள் மீது விமரிசனங்களை வைத்த படங்கள். பெரு நகரவாழ்க்கையில் எல்லாத் தரப்பு மனிதர்களின் வாழ்க்கையும் - சேரிவாழ் மனிதர்களிலிருந்து உயர் வர்க்க மேட்டுக்குடி வாழ்க்கை வரை - பண உறவுகளால் தீர்மானம் செய்யப்படுகின்றன. அதில் ரத்த உறவுகளும் கணவன்- மனைவி உறவுகளும் கூட அடக்கம் என்பது மும்பை Xபிரஸ் வைக்கும் விமரிசனம். நோயுள்ள மனிதர்களின் மனத்தைத் தெரிந்து கொள்ளாதவர்களாக மருத்துவர்கள் மாறிப் போனதை விமரிசிக்கும் படங்கள் தெனாலியும் வசூல் ராஜா எம்பிபிஎஸ்ஸும். இவையெல்லாவற்றிலும் நாயகனின் பார்வைக் கோணமே ஏற்கத்தக்க கோணமாக நிற்கின்றன என்பது படங்களைப் பார்த்தவர்கள் அறிந்தவை தான்.அதே போல்தான் குடும்ப வெளிக்குள் ஆணின் நியாயங்களை- கணவன் அல்லது காதலனின் நாயக பிம்பத்தை வளர்த்தெடுக்கும் படங்களாக மற்ற படங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

ஔவை சண்முகியில் வரும் மனைவி [மீனா] கணவனின் தொழிலையும் தன்னம்பிக்கையையும் புரிந்து கொள்ளாத குழந்தை மனமுடையவள்; ஆனால் கணவன் [கமல்] அவள் மீது அன்பும் காதலும் கொண்டவன். பஞ்ச தந்திரத்தில் சந்தேகப்படும் மனைவி X அவளைத் தவிர வேறு ஒரு பெண்ணை நினைத்தும் பார்க்காத ஏகபத்தினி விரதனான கணவன் [கணவன் மனைவியாக நடித்த கமல்ஹாசனும் சிம்ரனும் ஏற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் கூட ஏகபத்தினி விரதத்தை முன்மொழிந்த ராமாயணக் கதாபாத்திரங்களின் பெயர்களான ராம் - ஜானகி தான்]. பம்மல் கே.சம்பந்தத்திலும், காதலா.. காதலா..விலும், உடன்பிறவாச் சகோதரனுக்காக- நண்பனுக்காகத் தனது நலனைக் கருதாது காரியங்கள் செய்பவன் நாயகன்.  

பெரும்பாலும் மரபான குடும்பம் மற்றும் சமூக வெளிக்குள் உண்டாகும் பொதுப்புத்திசார்ந்த முரண்களையே திரைக்கதையின் அடிப்படையாகக் கொண்டுள்ளன இவ்வகைப்படங்கள் . நமது சமூகம் ஏற்றுக் கொண்ட கருத்துக்களை அல்லது நம்பிக்கைகளை உறுதிப்படுத்துவது அல்லது மறுநிர்மாணம் செய்வது அவ்வகைப் படங்களின் நோக்கமாக இருக்கின்றன. குணாவிலிருந்து விருமாண்டி வரை பட்டியலிடப்பட்ட இரண்டாவது வகைப் படங்களுக்கும் கூட அத்தகைய நோக்கங்கள் இருந்துள்ளன. அந்த வகையில் கமலின் நகைச்சுவைப் படங்கள் பெரிதும் வேறுபடுவதில்லை. திரைப்படத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் இந்த ஒருவரிகள் (One line Stories) இருவகைப் படங்களிலும் ஒன்றாகவே உள்ளன. குறிப்பாக ஆணின் நியாயங்களை- நாயகன் தரப்பு வாதங்களை- ஏற்கச் சொல்வனவாகவே அவை உள்ளன. இரண்டு வகைப்படங்களிலும் ஒற்றை நோக்கமே செயல்படும் நிலையில் மைக்கேல் மதனகாமராசன் தொடங்கி மும்பை Xபிரஸ் வரையிலான பட்டியலில் உள்ள படங்களை, நகைச்சுவைப் படங்களை என வகைப்படுத்தும்படி தூண்டுவன எவை? நடிகர் கமல்ஹாசனின் நடிப்பா? அல்லது ஒட்டுமொத்த வெளிப்பாடுகளுமா..?

ஒவ்வொரு படத்திற்கும் இடையில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான கால இடைவெளியுடன் வேலையைத் தொடங்கும் கமல்ஹாசன் ஒரு நடிகராகவே கூடச் சில முன் தயாரிப்புக்களைச் செய்பவராக அறியப்படுகிறார். ஒவ்வொரு படத்திலும் தான் ஏற்கப் போகும் கதாபாத்திரத்திற்கேற்ற வகையில் தாடி, மீசை, கிருதா போன்றவற்றை மாற்றுவதின் மூலம் வித்தியாசங்களைக் கொண்டுவர முயலும் கமல்ஹாசன், உடலின் எடை மற்றும் பருமன் போன்றவற்றிலும் கூட வித்தியாசங்களைக் காட்டவே செய்துள்ளார்.  ஒரே படத்திலேயே கூட இத்தகைய வேறுபாடுகளைக் காட்ட அவரால் முடிந்திருக்கிறது. ஹே ராம் படத்தில் கால மாற்றத்திற்கேற்ப உடல் மாற்றம் அமைந்திருந்ததைப் பலரும் கவனித்திருக்கலாம். அதே போல் ஆளவந்தான் படத்தில் அண்ணன் , தம்பி என்ற இரு கதாபாத்திரங்களை ஏற்ற நிலையில் அவ்விருவருக்குமான வேறுபாடு உடல் அளவிலும் வெளிப்படுத்தப் பட்டிருந்தது.

உடல் மற்றும் ஒப்பனை அளவில் வேறுபாடுகள் தேவை எனக் கருதும் அவர், வெளிப்படும் கதாபாத்திரத்தின் உணர்வு ஒவ்வொரு படத்திற்கும் வேறானவை என்பதை உணர்ந்துள்ளாரா என்ற ஐயம் பல நேரங்களில் உண்டாகிறது. நகைச்சுவை நடிப்புக்கான குரல், உடல் மற்றும் மனம்  ஆகியனவற்றை ஒருசேரப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ள சந்திரபாபு, நாகேஷ், வடிவேலு போன்றவர்களின் நடிப்போடு ஒப்பிட்டுப் பார்த்தால் கமலின்  நகைச்சுவை நடிப்பு முயற்சி எவ்வளவு குறைவான முயற்சி என்பது புரியக்கூடும். அதிலும்  நகைச்சுவை நடிப்புக்கான உடல் மொழியையும், குரல் வெளிப்பாட்டையும் முழுமையாக நம்பாமல் நகைச்சுவையை உண்டாக்க வேறுவகையான உத்திகளையே அதிகம் நம்பும் அவரது போக்கு இந்த ஐயத்தை அதிகமாக்கவே செய்கிறது.

தமிழ்ச்சினிமாவில் செயல்படு கிறவர்கள் தங்கள் படங்களைப் பார்வையாளர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்குப் பின்பற்றும் உத்திகள் பலவிதமானவை. படத்திற்குப் பெயர் வைத்துப் பூஜை போடுவதிலிருந்து தொடங்கி, வெளியிட்டு லாபம் பார்ப்பது வரை அவர்கள் பின்பற்றும் உத்திகள் பலரகமானவை; பலவிதமானவை. சின்னச் சின்னத் தகவல்களாகக் கசியவிட்டுப் பார்வையாளர்களிடம் ஓர் எதிர்பார்ப்பை உண்டாக்கித் தக்கவைத்து அப்படம் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்க வைப்பது ஒருசில இயக்குநரின் உத்தியாக இருக்கிறது. ஒரு சில இயக்குநர்கள் ரகசியத்தைப் பேணும் உத்தியைக் கடைப்பிடித்துக் கடைசியில் எல்லாவற்றையும் சொல்வதும் உண்டு. ஆனால் நகைச்சுவைப் படங்களைத் தயாரிப்பவர்கள் ரகசியம் காக்கும் உத்தியை அதிகம் பின்பற்றுவதில்லை. பின்பற்றவும் இயலாது. ஏனெனில்  நகைச்சுவையுணர்வு அடிப்படையில் ரகசியத்திற்கும் மர்மங்களுக்கும் எதிரானது. நேரடித்தன்மையையும் வெளிப்படைத் தன்மையையும்  அதிகம் வேண்டி நிற்பது. ஆகவே ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை முழுமையாகக் காட்டிக் கொள்வதையே அது விரும்பும்.

கமல்ஹாசன் நடித்துள்ள நகைச்சுவைப் படங்களும் கூட, படத்திற்குப் பெயர் வைப்பதில் தொடங்கி, வெளிப்படையாக நகைச்சுவைப் படங்கள் எனக் காட்டிக் கொள்ளவே செய்துள்ளன. அத்துடன், மையக் கதாபாத்திரத்தின் சமுக அடையாளம், அப்பாத்திரத்திரம் மேற்கொள்ளும் தந்திரங்கள் அல்லது ஏமாற்றுக்கள், தர்க்கம் சாரா வினைகள், நெருக்கடிகளை உருவாக்கித் தப்பிக்கும் காட்சிகளை அமைத்தல், இவற்றிற்கெல்லாம் உதவக்கூடிய துணைக் கதாபாத்திரங்கள் எனப் பலவகையான உத்திகளைப் பயன்படுத்தி அப்படங்கள் நகைச்சுவைப் படங்கள் என்ற வகைப்பாட்டை உறுதி செய்துகொள்கின்றன.

நகைச்சுவைப் படங்களுக்குப் பெயரிடுவதில் இரண்டுவிதமான உத்திகள் பின்பற்றப்பட்டுள்ளன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல ஏற்கெனவே நகைச்சுவை நடிப்போடு அல்லது உணர்வோடு தொடர்புடைய பாத்திரங்களின் பெயர்களையும், மனிதர்களின் பெயர்களையும் படத்தின் பெயராக வைப்பது ஒரு உத்தி.இன்னொரு உத்தியாக மக்களிடம் அறிமுகமான சொல்லைச் சிறிய அளவில் மாற்றிப் போடுவதன் மூலம் ஒரு புன்முறுவலை உண்டாக்கிப் படத்தின் நகைச்சுவை அம்சத்தை வெளிப்படையாக்கிக் காட்டுவது. இரண்டாவது உத்தியின் படி, எம்பிபிஎஸ் என்ற மருத்துவப் பட்டம் வசூல் ராஜா தாதாத்தனத்தோடு சேர்க்கப்பட்டும், எக்ஸ்பிரஸ் என்று எழுதுவதற்குப் பதிலாக Xபிரஸ் என்று எழுதிக் காட்டியதன் மூலமும் அப்படங்கள் நகைச்சுவைப் படங்கள் என்று படங்கள் வெளியாவதற்கு முன்பே பார்வையாளர்களுக்குச் சொல்லப்படுகிறது.

அதே போல் நகைச்சுவையோடு தொடர்புடைய தொன்மப்பெயர் களான தெனாலி (ராமன்), பஞ்சதந்திர(க் கதைகள்)ன், போன்ற பெயர்களும் அத்தகைய நோக்கம் சார்ந்த உத்திதான். ஒளவை சண்முகி , பம்மல் கே.சம்பந்தம் என்ற படப் பெயர்கள் முறையே அவ்வை தி.க. சண்முகம், பம்மல் சம்பந்த முதலியார்  என்ற நாடகக்காரர்களின் பெயர்களை நினைவூட்டினாலும், அப்பெயர்களில் செய்யப்பட்டுள்ள சிறிய மாற்றங்கள் நகைச்சுவைப் படங்கள் என்பதை முன்னறிவிக்கவே அதிகம் பயன்பட்டன. அதே போல், வேலன், வேடன், விருத்தன் எனப் பல வேஷங்கள் பூண்டு வள்ளியை மணந்த முருகனின் பெயரை நினைவூட்டும் சிங்காரவேலன், பெண்க¨ளை வசப்படுத்துவதில் கில்லாடியான மதன காமராஜன்போன்ற பெயர்களும் கூட தொன்மம் சார்ந்து வேறு வகையான அர்த்தங்களுக்குள் பார்வையாளர்களை நுழையச் செய்து பார்க்கின்ற படம் நகைச்சுவைப் படம் என்று நம்பும்படி தூண்டத்தக்க பெயர்கள் தான்.

பார்வையாளர்களின் மனம் தாங்கள் பார்க்கின்ற படம் நகைச்சுவைப் படம் என்று நம்பத்தொடங்கிய பிறகு அப்படத்தின் காட்சிகள் தர்க்கம் சார்ந்தவையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை.  ஒவ்வொரு காட்சியும் தொடர்ந்து சிரிப்பலைகளை மட்டும் உண்டாக்கினால் போதும் என்ற எதிர்பார்ப்பிற்குள் நுழைந்து பயணத்தைத் தொடங்கிவிடும். அப்படிப் பட்ட பார்வையாளனின் மனப் பயணத்தை மேலும் மேலும் அதே பாதையில் செலுத்திட கமலின் நகைச்சுவைப் படங்கள் மேலும் பல உத்திகளை கையாண்டுள்ளன. அதர்க்கம் சார்ந்த உத்திகளோடு, வேகம், ஆள்மாறாட்டம், மாறுவேடத்தின் மூலம் ஏமாற்றுதல், பொய்யான தகவலின் வழி உண்டாக்கப்படும் மர்மம், அறியப்பட்ட நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு, நகைச்சுவை நடிகராக அறியப்படாத நடிகரை நகைச்சுவை நடிகராக அறிமுகம் செய்வது என அந்த உத்திகளைப் பட்டியலிடலாம்.

தர்க்கம் சார்ந்த காட்சி அமைப்புகளை நகைச்சுவைப் படத்தில் எதிர்பார்க்காத வகையில் பார்வையாளர்களின் மனத்தைத் தயார்படுத்திவிட்டுப் பார்வையாளர்களுக்கு வழங்குவது வேகமான காட்சிகளைத் தான். வேகமான காட்சிகளை அமைக்கத் தோதான பின்னணியை உருவாக்குவது நகைச்சுவைப் படத்தின் இயக்குநரின் முன்னாள் உள்ள சவால்களில் தலையாயதும் கூட. சார்லி சாப்ளினின் நவீனயுகம் [Modern Times] என்ற படத்தின் வேகத்தை அந்தப் படத்தின் கருத்தியல் சார்ந்த தலைப்பே உருவாக்கித் தந்தது என்பதை நினைவுக்குக் கொண்டு வந்தால், நகைச்சுவைப் படத்திற்கு வேகத்தின் பங்கைப் புரிந்து கொள்ளலாம்.

கமல்ஹாசனின் நகைச்சுவைப் படங்களில் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படும் மைக்கேல் மதன காமராஜனில் அவர் ஏற்ற பாத்திரங்கள் நான்கு. இன்ஸ்பெக்டர், திருடன், சமையல்காரப் பிராமணரின் உதவியாள் என்ற மூன்றிற்கும் உள்ள உருவ ஒற்றுமை உண்டாக்கும் குழப்பம்தான் முழுப்படமும். திருடனைத் தேடும் இன்ஸ்பெக்டர், அவரிடமிருந்து தப்பிக்கும் திருடன், இடையில் மாட்டிக் கொள்ளும் அப்பாவிப் பிராமணச் சமையல்காரன் என ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் போக்கில் வேகம் எடுத்து ஓடிக் கொண்டே இருக்க, அவர்களைக் காதலிக்கும் காதலிகளும் குழப்பத்துடனும், ஆள்மாறாட்டத்துடனும் துரத்த என்று படம் முழுதும் பார்வையாளனுக்குக் கிடைப்பது பெஞ்ச் நுனியில் அமரும் வாய்ப்புதான். அப்படத்தில் உண்டாக்கப்பட்ட வேகத்தை அடுத்தடுத்து வந்த நகைச்சுவைப் படங்களிலும் தொடர முயற்சி செய்திருந்தார் கமல்ஹாசன்.

 ஆணாகவும் பெண்ணாகவும் இருந்து ஒரேநாளில் திரைப்பட நடன இயக்குநராகவும் அய்யர் வீட்டு வேலைக்காரியாகவும் இருக்க வேண்டிய நெருக்கடி ஒருவனுக்கு நேர்கிறது என்ற பின்னணியில் ஔவை சண்முகியில் வேகக் காட்சிகள் இடம் பிடித்துக் கொள்கின்றன. அதேபோல் நண்பனின் திருமணத்தை எப்பாடுபட்டாவது நடத்திவிட முடிவு செய்யும் ஸ்டண்ட் மாஸ்டர் சம்பந்தத்தின் முடிவு அப்படத்திற்கான வேகத்தைத் தரும் பின்னணியாக அமைகிறது. மும்பை Xபிரஸில் சிறுவனைக் கடத்துவதில் ஏற்பட்ட ஆள்மாறாட்டம், வசூல் ராஜாவில் பெற்றோரிடம் டாக்டர் என்று சொன்ன பொய் என வேகக்காட்சிகளுக்கான பின்புலங்கள் உருவாக்கப் பட்டுப் பார்வையாளன் முன்னால் விரிக்கப்படுகின்றன.

சிங்காரவேலனில் வரும் மாட்டுக்கார வேலன் மட்டுமே வேகமானவன் என்று நினைக்க வேண்டியதில்லை. தாதா, (வசூல் ராஜா), சர்க்கஸ் பைக் ஓட்டுபவன் மும்பை), ஸ்டண்ட் மாஸ்டர் (பம்மல்), நடன இயக்குநர் ( ஔவை) போன்ற பாத்திரங்களும் கூட வேகத்தோடு தொடர்புடையவர்கள் தான். ஆண் பெண்ணாக மாறி ஏமாற்றுவது, தாதா மாணவனாகப் பொய் சொல்லி மருத்துவக் கல்லூரியில் படிப்பது, அசைவச் சமையல்காரரான நாசரைச் சைவச் சமையல்காரராகச் சொல்லி பிராமண வீட்டில் வேலைக்குச் சேர்ப்பது (ஔவை), நண்பனின் ஓவியத்தைத் தன்னுடையதாகச் சொல்லி ஏமாற்றுவது (காதலா..காதலா..) பணத்தைப் பெற்றுக் கொண்டு படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வந்தவளை மனைவி என அறிமுகப்படுத்துவதன் பின்விளைவுகள் (பஞ்சதந்திரம்) என ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு உத்திகள் விரவிக் கிடந்ததைப் பார்வையாளர்களின் மனம் இயல்பான நகைச்சுவைக் காட்சிகள் எனப் பார்த்து ரசிப்பதில் தான் அத்தகைய படங்களின் இயங்குதளம் வெற்றி பெறுகிறது.

எல்லாவகையான உத்திகள் இருந்தாலும் நகைச்சுவைப் படம் நகைச்சுவை நடிப்பு இல்லாவிட்டால் பார்வையாளர்களின் ரசனைக்குரியதாக இல்லாமல் போகும் வாய்ப்பும் உண்டு. இந்த உண்மையை உணர்ந்த நிலையில் அறியப்பட்ட நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பையும் நகைச்சுவை நடிகர்களாக அறியப்படாத நடிகர்களின் பங்களிப்பையும் கமல்ஹாசனின் நகைச்சுவைப் படங்கள் பயன் படுத்திக் கொள்வதைத் தவற விட்டவை அல்ல. சிங்காரவேலனில் அவரின் தாயாக நடிப்பவர் சுமித்ரா. அவரது ஆணையை ஏற்று மாமன் மகளைத் (குஷ்புவை) தேடிப் போகும் வேலனுக்கு உதவும் நண்பர் கூட்டத்தில் கவுண்டமணி, செந்தில், வடிவேல் போன்ற அறியப்பட்ட நகைச்சுவை நடிகர்களோடு பாடகர் மனோவும் இருப்பார். அவ்வை சண்முகியில் நாகேஷ், மணிவண்ணன் ஆகியோரோடு காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பாத்திரமே நகைச்சுவையைத் தூண்டும் வகையில் முதுமைக் காதலனாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அப்படத்தில் வில்லனாக அறியப்பட்ட நடிகர் நாசரும்கூட நகைச்சுவைக்கு துணையாக இருந்தார். பஞ்சதந்திரத்தில் கமலின் நண்பர்களாக வரும் நான்கு பேரும் நான்கு மொழிக்காரர்கள் என்பதே நகைச்சுவைக்கான அடித்தளத்தைப் போட்டுத் தந்துவிடும் வாய்ப்பு கொண்ட உத்தி தான். தென்னிந்திய மொழிகளின் கலவையாக அவர்களின் ஐந்து மனைவிகளாக வரும் ஐந்து நடிகைகளும் நகைச்சுவை நடிகர் நாகேஷுடன் சேர்ந்து சிரிப்பலைகளை உண்டாக்குவார்கள். வசூல் ராஜாவில் நாயக நடிகர் பிரபுவுடன் சேர்ந்து துணை நடிகர் பட்டாளம்  களத்தில் இறக்கிவிடப்பட்டிருந்தது. மும்பை Xபிரஸில் வில்லனாக அறிமுகமான நடிகர் பசுபதியுடன் நகைச்சுவை நடிகர் வையாபுரியும், இயக்குநர் சந்தானபாரதி, ஹிந்தி நடிகர் சரத் சக்சேனா எனப் பலரும்  சேர்ந்து உண்டாக்கிய சிரிப்பலைகளும் கூட இவற்றோடு சேர்த்துக் கொள்ள வேண்டியவைதான்.

இத்தனை உத்திகளும் சேர்ந்து உண்டாக்கிய நகைச்சுவை உணர்வுகளின் ஊடாக  நாயக நடிகரான கமல்ஹாசன் தன்னை ஒரு தேர்ந்த நகைச்சுவை நடிகராக நிலை நிறுத்திக் கொள்கிறார் என்பது மட்டுமல்ல. அப்படங்களின் இயக்குநர்கள் அவர்கள் சொல்ல நினைத்த  செய்தியை அல்லது கருத்தியலைப் பார்வையாளனின் மனப் பிரதேசத்திற்குள் இறக்கிவிட்டு விவாதத்தைத் தூண்டவும் செய்கின்றனர் என்பதும் கூட உண்மைதான்.இந்த விவாதங்கள் நிகழ்கால மனிதனின் மனத்திற்குள் மாற்றங்கள் சார்ந்து எழுப்ப வேண்டிய விவாதங்கள் என்பதுதான் ஆறுதலான ஒன்று. அந்த வகையில் கமல்ஹாசன் நடித்த நகைச்சுவைப் படங்கள் இனிப்பில் தோய்த்து தரப்படும் மருந்துக் கலவைகள் தான்.

உணர்வுகள் அல்ல; உத்திகள்

சிரிப்பு .... இதன்

சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே

தனது பொறுப்பு!

  மு.கருணாநிதி வசனத்தில் வந்த ராஜாராணி படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன்




கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
உணர்வுகள் அல்ல; உத்திகள்

சிரிப்பு .... இதன்

சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே

தனது பொறுப்பு

very nice,
latha
Joshva இவ்வாறு கூறியுள்ளார்…
கமல் பற்றி தங்களின் அருமையான பகிர்வுக்கு நன்றி...
Joshva

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்