சாகித்திய அகாதெமி: இலக்கியவியலின் போர்க்களம்


“சாகித்திய அகாதெமியின் விருதுகளைத் திரும்பத்தருதல்” என்பதற்குள் இப்போது நுழைய வேண்டியதில்லை. ‘திருப்பித் தந்தேயாக வேண்டும்’ என்று எதிர்பார்க்கவும் தேவையில்லை. அது அவரவர் விருப்பமும் நிலைபாடும் சார்ந்தது. அதேநேரத்தில் அரசதி காரமும், அதன் துணையில் வளரும் பிளவுசக்திகளும் தொடர்ந்து சகிப்பின்மையை விதைக்கும்போது எழுத்தை வெளிப்பாட்டுக் கருவியாகக் கொண்டியங்கும் ஓர் எழுத்தாளன், தனது எதிர்ப்புணர்வைக் காட்டாமலும் இருந்து விடக்கூடாது. சகிப்பின்மையையும் தேசத்தின் பல்லிணக்க நிலைக்கெதிரான கருத்துநிலையையும் முன்வைத்து இந்தியா முழுவதும் நிகழ்ந்த போராட்டத்தில் தானே முன்வந்து சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எந்தத் தமிழ் எழுத்தாளரும் பங்கேற்கவேண்டுமென நினைக்கவில்லை என்பது தமிழ் எழுத்துலகத்திற்கு ஒரு களங்கம் என்பதிலும் சந்தேகமில்லை.

தமிழ் எழுத்தாளர்கள் ஒருவரும் சாகித்திய அகாதெமி விருதைத் திரும்பத் தரமாட்டார்கள் என்பதற்கான அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தெரிந்தன. விருதுகளைப்பெறுவதற்காகப் பெருமுயற்சியெடுத்துச் சிபாரிசுகளை ஏற்பாடு செய்தவர்கள், மனமுவந்து திரும்பத்தருவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஒவ்வொராண்டும் தமிழின் சாகித்திய அகாதெமி விருதுக்குரியவர்களைத் தேர்வுசெய்யும் உள்வட்டத்திற்கு எவ்வளவு நெருக்கடியும் அழுத்தமும் வரும் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களின் கூற்றுப்படி ஒவ்வோராண்டும் அந்த விருது கடுமையான சிபாரிசுகளின் பேரிலேயே முடிவாகியிருக்கின்றது என்பது வெளிபடா உண்மை. சிபாரிசுகளை ஏற்று அறிவிக்கிறவர்களே அகாதெமியின் பிரதிநிதியாக கடைசிக் கட்ட வாசிப்பாளர்களாக நியமனம் பெறுகிறார்கள் என்பது தான் நடைமுறை. அந்த நியமனத்தைச் செய்யும் அதிகாரம் தமிழின் ஒருங்கிணைப்பாளருக்கு இருக்கிறது. அவரே சாகித்திய அகாதெமியின் அனைத்து நடவடிக்கைகளையும் தீர்மானிக்கிறார்.

விருது திருப்புதல் சர்ச்சையை இனியும் தொடர்வதில் அர்த்தமில்லை. சர்ச்சைகள் ஓங்கியிருந்த அக்டோபர் மாதக் கடைசியில் சாகித்ய அகாதெமியின் அதிகாரபூர்வ இணையதளத்திற்குள் நுழைந்து இலக்கின்றி வாசித்துக் கொண்டிருந்தபோது அதன் செயல்பாடுகள் பற்றியும் நிலைபாடுகள் பற்றியும் சுவாரசியமான தகவல்களைக் காண முடிந்தது. சர்ச்சைகள் இல்லாமல் சாகித்திய அகாதெமியின் செயல்பாடுகள் இருந்ததில்லை என்னும் அளவுக்கு அவை இருக்கின்றன.

எல்லாக்காலகட்டத்திலும் தமிழ்நாட்டில் சர்ச்சைகளோடுதான் சாகித்திய அகாதெமியின் மண்டலக்குழு இயங்கிவருகிறது. மண்டலக் குழுவிற்கு உறுப்பினர்களாக ஆவது தொடங்கி, அதன் அமைப்பாளர் தேர்வுவரை கடும்போட்டிகள் மட்டுமே முதன்மையாக இருக்கின்றன. வாரிசுரிமை போல முந்திய அமைப்பாளர்கள், தங்களின் வாரிசுகளை உட்காரவைத்துவிட்டே இடத்தைக் காலி செய்கிறார்கள். அவரது இடத்தில் உட்கார்ந்ததிற்காக ஐந்தாண்டுப் பதவியில் முதலிரண்டு ஆண்டுகள் அவரது கைகாட்டலுக்குச் செவிசாய்ப்பதை வாரிசுகள் சிரம்தாழ்த்திச் செய்கிறார்கள். பிந்திய மூன்று ஆண்டுகளில் தங்களின் வாரிசொருவரை உட்காரவைக்கக் கடும் முயற்சிகளைத் தொடங்குகிறார்கள். அமைப்புக்குழுவில் நடக்கும் இந்த அரசியல், அதன் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வெளிப்படுகிறது. வேண்டியவர்களுக்குப் பயணச்சலுகை தருவது, பிறமாநிலங்களுக்கு அனுப்புவது, புத்தகம் தொகுக்கும் பொறுப்பை ஒப்படைப்பது, கருத்தரங்கிற்கு அழைப்பது, ஆவணப்படம் எடுக்க அனுமதிப்பது என எல்லா வற்றிலும் தமிழ்நாட்டின் வெகுமக்கள் அரசியலுக் கிணையாக அகாதெமியிலும் விருப்பு வெறுப்புசார்ந்த அரசியலுண்டு. சமகால இலக்கியவியலில் திறமான பங்களிப்புச் செய்துள்ள எழுத்தாளரொருவர் அதன் அமைப்பாளராக வரவேண்டு மென்றோ, விருப்பு வெறுப்பின்றி அதன் நடவடிக்கைகள் அமைய வேண்டுமென்றோ எப்போதும் அதனுள் இருந்தவர்களுக்கும்/ இருப்பவர்களுக்கும் அக்கறைகள் இருந்ததில்லை.

சர்ச்சைகளும் விருதுகளும்

அக்கறைகளோடும் இலக்கியவியல் பற்றிய புரிதலோடும் இருந்திருந்தால் முக்கியமான கவிகள் மூன்றுபேருக்கு விருது வழங்கும்போது அவர்களின் அறியப்படாத படைப்புக் களத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்காது. கவி. பாரதிதாசனுக்கு அவரது பிசிராந்தையார்(1969) என்ற நாடகத்துக்கு விருது வழங்கப்பட்டது. கவி. கண்ணதாசனுக்கு அவர் எழுதிய சேரமான் காதலி(1980) என்னும் வரலாற்றுப் புனைகதைக்கு விருது வழங்கப்பட்டது. கவி. வைரமுத்துவுக்கும் கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் தொடர்கதைக்குத் தான் (2003) வழங்கப்பெற்றது. ஒருமொழியின் உயர்ந்த இலக்கிய அமைப்பொன்று அம்மொழியில் செயல்படும் முக்கியமான படைப்பாளியை அவரது முதன்மையான அடையாளத்திற்காக அல்லாமல் வேறொன்றிற்காகப் பெருமைப்படுத்துகிறது என்பது அவரை அவமானப்படுத்தும் செயல். பெருங்கவிஞனாக வலம்வரும் ஒருவர் அதற்காக அல்லாமல் வேறொன்றிற்காகப் பெற்றுக் கொள்வது அவரும் அந்த அவமானத்தை ஏற்றுக்கொள்கிறார் என்றே அர்த்தமாகிறது. கவி கண்ணதாசனும் கவி வைரமுத்துவும் எந்தக்கூச்சமுமில்லாமல் தங்களைப் புனைகதைக்காரர்கள் என்றே நம்பி விருதை வாங்கிக் கொண்டார்கள்; அந்தக் கணத்தில் தான் படைப்பின் தார்மீகம் தொலைகிறது. அதேபோல் தான் எழுதிய ஒரே நாவலுக்காகச் சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுக் கொண்ட வெங்கடேசனிடம் வெளிப்பட்ட தகைமை யேற்பைத் தார்மீகம் தொலைத்த தகைமையேற்பு என்றே வகைப்படுத்தவேண்டும்.

கவிதைக்காக விருதுபெறவேண்டியவர்களுக்குப் புனைகதைக்காக விருது வழங்கிய அகாதெமி இதுவரை 6 பேர்களுக்குத் தான் கவிதைக்காக வழங்கியுள்ளது. 1968 இல் தனது வெள்ளைப்பறவைக்காக ஸ்ரீனிவாச ராகவன் விருதுவாங்கிய பிறகு -31 ஆண்டுகள் காத்திருந்தபின் தனது ஆலாபனை என்ற கவிதைக்காக விருதுவாங்கியவர் கவி அப்துல் ரகுமான். ஆண்டு 1999. அதன்பிறகு கவிதை இலக்கியம் வேகம்பிடித்தது. வானம்பாடிகளான சிற்பி(2002), தமிழன்பன் (2004 ) மு.மேத்தா( 2006), புவியரசு( 2009) ஆகியோர் ஓராண்டு இடைவெளியில் எளிமையாகப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் அதற்கு முன்பும் பின்பும் அரூபக் கவிகள், வட்டாரக்கவிகள், நையாண்டிக்கவிகள், தத்துவக் கவிகள், திராவிடக்கவிகள், தலித்கவிகள், பெண்ணியக் கவிகள், ஹைக்கூக்கவிகள், பாலியல் கவிகள், பின் நவீனக் கவிகள், பின்காலனியக்கவிகள் என ஒவ்வொருவகைக்குமாக கால்சதம் பேர் வரிசையில் நிற்கிறார்கள். இவர்களில் ஒருகால் சதம் பேராவது பெருங்கவிகளென (Major Poets) அடையாளப்படுத்தத் தக்கவர்கள். இவர்களுக்கெல்லாம் அகாதெமி விருதுக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.

பாரதிதாசனின் மரணத்திற்குப் பிறகு அவரது நாடகத்திற்கு விருது வழங்கப் பெற்றதற்குப் பாரதிதாசனைப் பொறுப்பாக்க முடியாது. என்றாலும், அவருக்குப் பிறகு ஒரு நாடகக் காரரைக் கூடவா விருதுக்குத் தேர்வு செய்யக் கூடாது? நாடக எழுத்தாளராகவும், இயக்குநராகவும் இருந்த கோமல் சாமிநாதனையோ, 20 -க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதிய சுஜாதாவையோ, ஜெயந்தனையோ சாகித்திய அகாதெமி கண்டு கொண்டதில்லை. அரங்கியல் செயல் பாட்டிற்காகச் சங்கீத நாடக அகாதெமி விருதுகளைப் பெற்ற ந.முத்துசாமியும் இந்திரா பார்த்தசாரதியும் நாடக இலக்கியத்திற்கும் கணிசமான பங்களிப்புச் செய்தவர்கள் என்பதை சாகித்திய அகாதெமி நினைவில் கொள்வதில்லை.

தொடக்க நிலையில் அப்படியிருந்ததில்லை. அண்மைக் காலத்தில் புனைகதையாசிரியர்களே அதிகமும் விருது வாங்குகிறார்கள். 1955 தொடங்கி 2014 வரையிலான 60 ஆண்டுகளில் புனைகதைக்காரர்களே அதிகமான விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். 25 பேர் தங்களின் நாவல்களுக்காகவும் 6 பேர் சிறுகதைக்காகவும் விருது பெற்றிருக்கிறார்கள். சிறுகதைக்காரராக இருந்தாலும் நாவல் எழுதினால் தான் விருது கிடைக்குமென்று நினைக்கும் அளவுக்கு நாவலாசிரியர்கள் விருதுகளைத் தட்டிக் கொண்டு போயிருக்கிறார்கள். அங்கேயும் சில குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன. நாவல் எழுத்தில் தங்கள் அடையாளத்தைத் தீவிரமாக வெளிப்படுத்திய ஆதவன், அசோகமித்திரன், தி.ஜானகிராமன், மேலாண்மை பொன்னுச்சாமி, நாஞ்சில் நாடன் ஆகியோருக்குச் சிறுகதைத் தொகுப்புகளை முன்வைத்து விருதுகள் வழங்கப்பெற்றதன் காரணங்கள் தெரியவில்லை.

நாவலே எழுதாமல் சிறுகதைகள் மட்டுமே எழுதி விருதுபெற்ற ஒருவராக கு. அழகிரிசாமியை மட்டுமே சொல்லமுடியும். புனைகதையில் சாதனைகள் செய்த ல.சா.ராமாம்ருதத்திற்கு அவரது ஜிந்தாநதியென்னும் தன்வரலாற்று எழுத்துக்காக அகாதெமி விருது வழங்கியிருக்கிறது. நாவல் எழுதுவதில்லை என்று பிடிவாதமாக இருக்கும் வண்ணதாசனுக்கோ, அம்பைக்கோ விருது கிடைப்பது சந்தேகம் தான். சிறுகதைக்காகவே அறியப்பட்ட சூடாமணி, ஜெயந்தன், திலீப்குமார், சுரேஷ்குமார் இந்திரஜித் போன்றவர்களும் வரிசையில் இருக்கிறார்கள். இரண்டிலும் தன் பங்களிப்பைச் செய்திருக்கும் சிவகாமி, சோ. தர்மன், சுப்பிரபாரதி மணியன் போன்றவர்களுக்கெல்லாம் வயதும் கூடிக்கொண்டே இருக்கிறது.

புனைகதைகளை அடுத்து விருதுபெற்ற வகையினமாக இருந்தது இலக்கிய விமரிசனம். ஆம்; இருந்தது. கடைசியாக இலக்கிய விமரிசனத்திற்கு விருது கிடைத்த ஆண்டு 2000. விருதுபெற்ற நூல் தி.க.சிவசங்கரனின் விமரிசனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள். 1982 இல் மணிக்கொடி காலம் என்ற நூலுக்காகப் பி எஸ் ராமையாவுக்கு விருது வழங்கிய போது அதை இலக்கிய வரலாறு எனப் பட்டியலிட்டுள்ளது அகாதெமி. ஆனால் மா.ராமலிங்கத்தின் புதிய உரைநடை (1981) வல்லிக் கண்ணனின் புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1978) இரா.தண்டாயுதத்தின் தற்காலத் தமிழ் இலக்கியம்(1975) ஆகியனவற்றை விமரிசன நூல்கள் எனச் சுட்டியுள்ளது. இம்மூன்றையும் வாசித்தால் அவை இலக்கிய வரலாற்று நூல்களென எளிதாக அறிந்து கொள்ளலாம். சரியாகச் சொல்வதானால் விமரிசனம் என்ற வகைப்பாட்டில் இருக்கும் 10 நூல்களில் தொ.மு.சி. ரகுநாதனின் பாரதி : காலமும் கருத்தும் (1983) மட்டுமே அசலான விமரிசன நூல். தமிழின் முக்கிய விமரிசகரான க.நா.சு.வுக்கு விருது பெறக்காரணமான இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் (1986) என்ற நூலே இலக்கிய விமரிசன நூல் அல்ல. பல்வேறு புத்தகங்களை அறிமுகம் செய்த அறிமுகக் கட்டுரைகளின் தொகுதி அது. க.நா.சு.வையும் தி.க.சிவசங்கரனையும் விருதுபெற்ற நூல்களின் வழி பிற மொழிகளில் விமரிசகராக அறிமுகம் செய்யும் முயற்சியை மேற்கொண்டால், அவர்களின் விமரிசன அறிவைக் கொலைசெய்வதாகவே அமையும்.

விமரிசகர்களாக விருதுபெற்றுள்ள கி.வ.ஜகந்நாதன், க.த.திருநாவுக்கரசு, அ.ச.ஞானசம்பந்தன், வா.செ.குழந்தைசாமி ஆகியோரது நூல்கள் விமரிசன நூல்கள் அல்ல; இவை ஆய்வு நூல்கள். ஆய்வுநூல்களுக்கு விருது வழங்கக் கூடாது என்று சொல்லவில்லை. அவைகளை ’ஆய்வு நூல்கள்’ என்றே வகைப் படுத்தி வழங்குவதே சரியாக இருக்கும். தொடர்ந்து அரசியல்வாதிகள் சாகித்திய அகாதெமி விருதைப் பெற வேண்டுமென்று விரும்புவதைத் தூண்டியவர்கள் ராஜாஜியும் ம.பொ.சி.யும் என்பதையும் பட்டியல் காட்டி நிற்கிறது. பி.ஸ்ரீ. ஆச்சார்யா (1965), ம.பொ.சி (1962), ஆகியோருக்குத் தன் வரலாற்றுக்காக விருது வழங்கப்பட்டது எனவும், ராஜகோபாலாச்சாரியாருக்கு இராமாயணக்கதையைச் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ (1958) எனக் கதையாகச் சொல்லியதற்காக வழங்கப்பட்டது எனவும், ரா.பி.சேது பிள்ளைக்கு (1955) இலக்கிய இன்பம் என்னும் கட்டுரைத் தொகுதிக்காக விருது வழங்கப்பட்டது எனவும் குறிப்பிடும் போது நேர்மையான சுட்டிக்காட்டல் வெளிப்பட்டுள்ளது. ஆனால் திறனாய்வு நூல்களில் அந்த நேர்மையைக் காண முடியவில்லை. நேர்மையைக் காட்டா விட்டாலும் பரவாயில்லை. வருங்காலத்தில் அவ்வப்போது தமிழின் முக்கியமான விமரிசகர்களுக்கும் விருதுகள் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளத்தோன்றுகிறது. ஏனென்றால் விமரிசனமும் இலக்கியவியலின் பகுதிதானே.

ஆய்வாளராகவும் திறனாய்வாளராகவும் தன்னை நிறுவிக் கொண்ட நா.வானமாமலைக்கோ, மார்க்சியத் திறனாய்வின் வழியாக ஆழமான கருத்துகளை உருவாக்கித் தந்துவிட்டுப் போய்விட்ட கோ.கேசவனுக்கோ, பெரும்போக்குக்கு எதிராகக் குரலெழுப்பிப் பின் பெரும் போக்கின் ஆதரவாளராக மாறிப்போன வெங்கட் சாமிநாதனுக்கோ அகாதெமி விருதுக்கு வாய்ப்பில்லை. அவர்களின் காலம் முடிந்து விட்டது. அதே வரிசையில் மூத்த திறனாய்வாளர்களாக எஸ்.வி. ராஜதுரை, தமிழவன், ராஜ்கௌதமன், தி.சு.நடராசன் ஆகியோர் இருக்கிறார்கள். அவர்களையடுத்து ஆய்வாளர்களின் பட்டியலும் விமரிசகர்களின் பட்டியலும் தனித்தனியாக நீண்டு கொண்டிருக்கிறது.

விருது தருவதிலும் விருதுபெற்ற நூல்களை வகைப் படுத்துவதிலும் சரியான அக்கறை காட்டாத அகாதெமி ஐந்து ஆண்டுகள் விருதுகளை அளிக்காமல் நிறுத்தியும் வைத்திருக்கிறது. அதற்கான காரணம் என்னவாக இருக்குமென்று இப்போது ஊகிக்கவும் முடியாது; ஏனென்று கேட்கவும் முடியாது. விருதுகள் வழங்கப்படாத 1957, 1959, I960, 1964 ,1976 ஆகிய ஆண்டுகளில் அகாடெமியில் இருந்தவர்கள் ஒருவரும் இப்போது இருக்கவாய்ப்பில்லை.

சாதனைகள்


சாகித்திய அகாதெமியின் தமிழ் ஒருங்கிணைப்புக்குழு மேல் வீசப்படும் சர்ச்சைகளை விட்டுவிட்டு தன் முக்கியமான சாதனையாக ஒன்றிரண்டைச் சுட்டிக் காட்டலாம் என்று தோன்றுகிறது. விருதுபெற்ற தமிழ்ப் படைப்புகளைப் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யும் பொறுப்பை மைய சாகித்திய அகாதெமியே மேற்கொள்கிறது என்றாலும், அதனைத் தாண்டித் தமிழின் படைப்புகள் இந்தியமொழிகளுக்குப் போவதை உறுதிசெய்ய வேண்டும்; அத்தகைய முயற்சியில் கொஞ்சமும் கவனம் செலுத்துவதாகத் தமிழ் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் இல்லையென்பதே உண்மை. ஆனால் அதற்குப் பதிலாக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் தமிழ் ஆளுமைகளைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தைத் தரும் நூல்களைத் தமிழிலும் ஆங்கிலம்வழிப் பிற மொழிகளிலும் வெளியிட்டு வருகிறது. அதேபோல் யாராவது ஒருவரிடமோ அல்லது இரண்டுபேரிடமோ பொறுப்பை ஒப்படைத்து அவ்வப்போது தொகுத்து வெளியிடப்படும் சிறுகதைத் தொகுதிகளைப் பெரிய சாதனை என்று சொல்ல முடியாவிட்டாலும் அவை செய்யப்பட வேண்டியவை என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.

இந்த வரிசையில் அண்மைக்காலத்தில் குறிப்பான வகைப்பாட்டில் சில தொகுப்புகள் வந்துள்ளன. இரா. பிரேமா தொகுத்த பெண்மையச் சிறுகதைகளும், மு.இராமசுவாமி தொகுத்த நாடகங்களின் தொகுப்பும், அ.அ. மணவாளன் தொகுத்து விரிவான ஆய்வுரை எழுதியுள்ள ‘பக்தி இலக்கியங்கள்’ தொகுப்பும் இலக்கியவாசகர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய பணிகள். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரின் தேர்ந்தெடுக்கப்பெற்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டதற்குப் பின் அத்தகைய முயற்சி எதுவும் நடக்கவில்லை. இவைகளோடு சேர்த்து அண்மையில் சாகித்திய அகாதெமி வெளியிட்ட இலக்கிய வரலாற்றுப் பெருந்தொகுதிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்தொகுதிகளில் ஏராளமான பிழைகளும் ஓர்மையின்மையும் இருக்கின்றன என்றாலும் சாகித்திய அகாதெமியின் பணிகளில் பொறுப்பான பணியாக அவற்றைக் கூறலாம். அத்தொகுதிகளை முறையான மேலாய்வுக் குழுவின் மூலம் அவற்றைச் சரிசெய்து வெளியிடும் நிலையில் நீண்ட காலத்துக்குப் பலவகையான வேலைகளுக்கும் அவை பயன்படும். மு.வ.வின் தமிழ் இலக்கிய வரலாறு நூலைப் பலபதிப்புகள் வெளியிட்டுள்ள அகாதெமி, அதன் பின்னிணைப்பாகச் சமகாலவரலாற்றை இணைத்து அதனைத் தொடரவேண்டும்.

இந்தப் பணிகளில் காட்டிய பொறுப்புணர்வை யெல்லாம் விடக் கூடுதல் பொறுப்புணர்வுடன் சாகித்திய அகாதெமி ஒரு தொகுப்பைக் கொண்டு வந்துள்ளது. பேராசிரியர்களாகவும் திறனாய்வாளர்களாகவும் அறியப் பெற்றுள்ள தி.சு.நடராசனும் க.பஞ்சாங்கமும் இணைந்து “தமிழில் திறனாய்வுப் பனுவல்கள்” (2013) என்றொரு கட்டுரைத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளனர். மேற்கத்தியக் கல்விப்புலங்களில் தொகுக்கப்படும் ஒரு துறை சார்ந்த களஞ்சியங்களைப் போன்ற தொகுப்பு அது. ஆங்கிலத்தில் அதனை ரீடர் -Reader என்பார்கள். டேவிட் லாட்ஜ் தொகுத்த களஞ்சியம் இன்றளவும் மேற்குலகின் திறனாய்வுக்கான வாயிலாக இருக்கிறது. சாகித்திய அகாதெமியின் இந்தத் தொகுப்பிலும் அதன் சாயலைப் பார்க்கமுடிகிறது.

இலக்கியத்திறனாய்வின்தொடக்ககாலப் பங்களிப்பாளர்களான திருமணம் செல்வக் கேசவராய முதலியார், ஆ. முத்துசிவன், ரசிகமணி தொடங்கி 46 பேர்களின் கட்டுரைகளை உள்ளடக்கியிருக்கும் இப்பெருந்தொகுப்பு தமிழின் திறனாய்வுப் பெருவெளியை ஓரளவு அறிமுகப்படுத்தித் திறனாய்வின் ஆழங்களுக்குள் திசைதிருப்பும் பணியைச் செய்யக்கூடியன என்பதில் ஐயமில்லை. திறனாய்வின் பல தளங்களை விளக்கும் கட்டுரைகளை அதிக எண்ணிக்கையிலும், செயல்முறை விமரிசனத்தைச் செய்யும் கட்டுரைகளைக் குறைவான எண்ணிக்கையிலும் கொண்டிருக்கும் இந்தத் தொகுப்பு சாகித்திய அகாதெமி தமிழுக்குத் தந்துள்ள முக்கியமான பங்களிப்பு. ரசனைமுறை, மனப்பதிவு முறையெனத் திறனாய்வு முறைகளையும், மார்க்சியத்திறனாய்வு, பெண்ணியத்திறனாய்வு, அமைப்பியல், தலித்தியம், பின் காலனியம், பின் நவீனம் போன்ற கோட்பாட்டுநிலைத் திறனாய்வுகளையும் பொதுப்படையாக முன்வைத்துள்ள கட்டுரைகளைத் தொகுப்பதில் காட்டிய முனைப்போடு, இலக்கியவியலின் வகைப்பாட்டிற்கேற்பச் சிறப்புக் கட்டுரைகளையும் தனித்தனிப் பிரிவுகளாகத் தந்திருந்தால் கூடுதல் பயனளிப்புக் கொண்டதாக மாறியிருக்கும்.
========================================================

நன்றி. தீராநதி/ டிசம்பர், 15

கருத்துகள்

s.arshiya இவ்வாறு கூறியுள்ளார்…
நாவல் எழுத்தில் தங்கள் அடையாளத்தைத் தீவிரமாக வெளிப்படுத்திய ஆதவன், அசோகமித்திரன், தி.ஜானகிராமன், மேலாண்மை பொன்னுச்சாமி, நாஞ்சில் நாடன் ஆகியோருக்குச் சிறுகதைத் தொகுப்புகளை முன்வைத்து விருதுகள் வழங்கப்பெற்றதன் காரணங்கள் தெரியவில்லை. நாவல்களில் மேலாண்மை பொன்னுச்சாமியின் பங்களிப்பு பிரதானமாகவோ பிரமாதமானதாகவோ இல்லை. எழுதிய ஆறேழு நாவலும் குப்பை. அதிலொன்று முரண் மார்க்சியம்.

கட்டுரை நுட்பமாக இருப்பதென்னவோ உண்மைதான். பின்னணியில் யாரையோ பரிந்துரைப்பதாகவே படுகிறது. மாணவர் ஆசிரியருக்கு ஆற்றும் நன்றிக்கடன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்