சாரு நிவேதிதா: தந்திரக் கதை சொல்லலின் ஒரு கோடு


என் பெயர் சீஸர்.ரோமானியப்பேரரசர் ஜூலியஸ் சீஸர் அல்ல, வெறும் சீஸர். என்னுடைய பயாலாஜிகல் தந்தை பெயர் டைஸன்.
இப்படித்தொடங்குகிறது போனமாத(டிசம்பர், 2015) உயிர்மையில் வந்து சாருநிவேதிதாவின் கதை. கதையின் தலைப்பு என் பெயர் சீஸர். ஒருவிதத்தில் தன்மைக்கூற்றுக் கதை. கதை எழுதும் சாரு நிவேதிதா நாயாக மாறித் தன் கதையை - நாயின் கதையை- கூறுவதாக வாசிக்கவேண்டும் என நிர்ப்பந்திக்கும் கதைகூற்று முறை.

எல்லாக்கவிதைகளும் எல்லாக் கதைகளும் எல்லா நாடகங்களும் ஆசிரியரால்தான் சொல்லப்படுகின்றன என்பது உண்மை. என்றாலும் மூவகைக்கதைசொல்லும் முறைகள் இருக்கின்றன; ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கமும் சாத்தியங்களும் விளைவுகளும் இருக்கின்றன என்பதும் இலக்கியத்திறனாய்வு முன்வைக்கும் சொல்லாடல்கள். ஆங்கிலத்தில் முதலாமிடக் கதைகூறல்  இரண்டாமிடக் கதைகூறல், மூன்றாமிடக் கதைகூறல்(First person, Second person, Third person Narrative) என்பதைத் தான் தமிழில் தன்மைக்கூற்று, முன்னிலைக்கூற்று, படர்க்கைக்கூற்று என்று வகைப்படுத்திச் சொல்கிறோம். இப்படிச் சொல்வது ஆங்கிலம் இங்கு அறிமுகமான பின்பு உருவாக்கிக்கொண்டதல்ல. தமிழின் தொன்மை இலக்கியக் கோட்பாட்டு நூலான தொல்காப்பியமே உருவாக்கித் தந்துள்ள அறிதல் முறைமை அது. வெளியிலிருந்து வந்ததைத்தான் நாம் பின்பற்றுவோம் என்பது தனிக்கதை.

 மூன்றுவகைக் கதைசொல்லலில் படர்க்கைக்கூற்றுக் கதைசொல்லல் நவீன இலக்கியத்தில் அதிகம் வலியுறுத்தப்படும்; விரும்பப்படும் கூற்றுமுறை.  படர்க்கைக் கூற்றுமுறை வெளிப்படாக் கதைசொல்லியின் கூற்றுமுறை, கடவுளின் பார்வைக் கூற்றுமுறை என வெவ்வேறு பெயர்களால் விதந்து பேசப்படுவதுண்டு. அந்த விதந்து பேசுதலின் வழியாக ஆசிரியனின் சார்போ, விருப்பமோ வெளிப்படுவதில்லை; நடுநிலை பேணப்படும் என்பது நம்பிக்கை. 
என் பெயர் சீஸர்.ரோமானியப்பேரரசர் ஜூலியஸ் சீஸர் அல்ல, வெறும் சீஸர். என்னுடைய பயாலாஜிகல் தந்தை பெயர் டைஸன்.
என ஆரம்பித்துவிட்டு,
எப்படியிருந்தாலும் எங்களுக்கு உங்களைப் போல் மதம் இல்லை. ஆனால் ஜாதி உண்டு.நான் லாப்ரடார் ஜாதி.
எனத் தொடரும் நாயின்கதை ஒரேநேரத்தில் தன்மைக்கூற்றுக் கதையாகவும் படர்க்கைக் கூற்றுக் கதையாகவும் மாறும் தந்திரத்தை கொண்டிருக்கிறது. இதனைத் தந்திரம் என்று சொல்லவேண்டியதில்லை. எல்லா எழுத்தாளர்களும் பின்பற்றும் சாதாரண உத்தி. எழுத்தாளர் தனது பெயரை மறைப்பதற்காக “என் பெயர் ராமசேஷன்” என்றோ,  “நான்  கருப்பாயி” என்றோ தொடங்குவது ஒரு உத்திதான். இப்படித் தொடங்குவதற்குள் இன்னொரு மனிதரின் குணமும் நெருக்கடிகளும் வெளியும் கதையாக மாறுகின்றன. ஆனால் இங்கே ஒரு விலங்கின் - நாயின் கூற்றாக மாறும்போது நாயின் கதையாகவும், நாயை எழுதும் ஆசிரியரின் கதையாகவும் மாறிவிடுகிறது. அதனைச் செய்யும் எழுத்தாளருக்கு நேரடியான நோக்கத்தைத் தாண்டி வேறுசில நோக்கங்களும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். அப்படியொரு நிலையில் அதனைச் சாதாரண உத்தி எனச் சொல்ல முடியாது; தந்திரம் என்றுதான் சொல்லவேண்டும். இங்கே சீஸர் என்னும் நாயின் விருப்பங்களும், முன்வைப்புகளும் அந்தக் கதையை எழுதிய ஆசிரியரின் விருப்பங்களாகவும், முன்வைப்புகளாகவும் மாறிவிடுவது தவிர்க்கமுடியாத ஒன்று. சாரு நிவேதிதாவின் கதையில் வரும் சீசர் முன்வைக்கும் தகவல்கள் சிலவற்றைக் காணலாம்:

இதைப் படிக்கும் நீங்கள் எப்படியோ, ஆனால் நான் ஜாதியை நம்புகிறேன். பரிபூரணமாக நம்புகிறேன். குஜராத்தில் வேறு பெரிய பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் போய் ஜாதி பற்றிப் பேசுகிறாயே என்கிறீர்களா? பயம் வேண்டாம்.

இந்தக் கூற்றிலிருந்து இந்த நாய் சாதாரண நாயல்ல. சமகால அரசியலைக் குறிப்பாக இந்தியாவில் தவிர்க்கமுடியாமல் இருக்கும் சமூக நீதி அல்லது இட ஒதுக்கீட்டு அரசியலைத் தனது கோணத்தில் புரிந்து வைத்திருக்கும் நாய் என்று புரிந்துகொள்கிறோம். அதுமட்டுமல்லாமல், அதற்கு ஒரு மனிதன் சூழலால் உருவாக்கப்படுகிறான்; மாறுகிறான் என்பதிலெல்லாம் நம்பிக்கையில்லை; பிறப்பே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பதில் கூட நம்பிக்கையிருக்கிறது. அந்நாய் அதற்கு நாய்களின் குடும்பத்திலிருந்து எடுத்துக்காட்டை முன்வைக்காமல், மனிதர்களிலிருந்து - நோபல் பரிசு பெற்ற இந்தியப்பிராமணக்குடும்பத்திலிருந்து- உதாரணத்தை முன்வைக்கிறது.
ஒரே குடும்பத்தில் இரண்டு பேர்  (சர் சி.வி.ராமன், சந்திரசேகர்) ஒரே துறையில் ( இயற்பியல்) நோபல் வாங்கினார்கள் என்றால் ஜெனெடிக்ஸ் என்பதில் நான் நம்பிக்கை வைப்பதில் தவறு என்ன இருக்கிறது.!
இன்னொரு இடத்தில் மனித அறிவைக் குறித்துக் கடுமையான விமரிசனத்தை வைக்கும்போது அதன் இடம் கேள்விக்கப்பாற்பட்ட பெருவெளியில் பயணம் செய்கிறது. அந்தக் கூற்றைக் கேளுங்கள்:
தர்க்கம் மனிதகுலத்தின் மீது விழுந்த சாபம். விஞ்ஞானம் மனிதனின் அகக்கண்களை மறைக்கும் திரை. இந்த இரண்டினாலும் பீடிக்கப் பட்டிருக்கும் மானுடரே, உங்களுக்கு நாங்கள் சொல்வது புரியாது. நம்பவும் முடியாது. என்றாலும் பொய் பேசுவது எங்கள் இனத்துக்கு உரிய பண்பன்று.
தத்துவம், சமூகவியல், அறிவியல் போன்ற உயர்வான பொருள்கள் பற்றிப்பேசும் அந்த நாய் நடைமுறை வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போது தப்பும் தவறுமாகவும் பேசுகிறது. அதற்குத் தெரியாத விசயங்களே இல்லை என்று முடிவு செய்துவிட்டதோ என்னவோ, எல்லாவற்றையும் தெரிந்தவன் என்ற இறுமாப்போடு அள்ளிவிடுகிறது. அப்படி அள்ளிவிடும் தகவலொன்றைக் கேளுங்கள்:
நெட் எல்லாம் பாஸ் பண்ணினால் லாட்டரி. ஐம்பது அறுபது ஆயிரம் அரசு ஊதியம். ஆனால் நெட் பாஸ் பண்ணுவது தேவகௌடா போன்ற அரசியல்வாதிகள் பிரதம மந்திரி ஆனது எப்படியோ அப்படி நடக்கும் ஒரு அபூர்வ விஷயம். 97 மதிப்பெண் வாங்கியிருந்தால்கூட தோல்வியடையும் வாய்ப்பு இருக்கிறது.
கல்லூரிகளில் ஆசிரியராக நியமனம் பெற நெட்தேர்வில் பாஸ் ஆகவேண்டும் என்பது ஓர் அடிப்படைத் தகுதி மட்டுமே என்ற தகவலை அது அறிந்திருக்கவில்லை. கடந்த கால் நூற்றாண்டாக நடத்தப்பெறும் நெட் தேர்வு எழுதித் தேர்வுபெற்ற ஒரு கூட்டம் பத்தாயிரம் சம்பளத்திற்கு இரண்டு ஷிப்ட் வேலை செய்வதை அந்த நாய் அறிந்திருக்கவில்லை. நெட் தேர்வில் வெற்றிபெற்ற பின்னும் லாட்டரி விழாமல் மூனுவேலை சாப்பாட்டுக்கு  ‘லாட்டரி’ அடிக்கும் மானிடர்கள் இந்த நாயிடம்  வழி கேட்கலாம்; அல்லது நாய் மீது வழக்குப்போடலாம்.
போகிற போக்கில் ஒரு கதையைச் சொல்கிறது அந்த நாய். அக்கதையைச் சொல்லும் முறையிலும் கடைசியில் எழுப்பும் கேள்வியிலும் தானொரு ஆண் நாய் என்பதையும் தனக்குப் பெண்களின் துரோகமும் ஏமாற்றுகளும் நன்கு தெரியும் என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது.  கதையை உயிர்மையில் வாசித்துக்கொள்ளுங்கள்; கேள்வியை மட்டும் இங்கே படித்துக்கொள்ளுங்கள்:  
நீங்கள் யாரை நம்புவீர்கள்? ஷியாமளாவையா? பிரஸன்னாவையா?
நிச்சயம் சீசரின் சொல்முறையிலிருந்து நிச்சயம் நீங்கள் ஷியாமளாவை நம்பப் போவதில்லை; பிரஸன்னாவைத்தான் நம்புவீர்கள். சந்தேகமே தேவையில்லை. ஏனென்றால் பெண்கள் பற்றிய உண்மையான பார்வை அப்படிப்பட்டது. பொதுப் புத்தியில் இருக்கும் பெண்கள் பற்றிய கருத்தை சாருநிவேதிதா நிலை நிறுத்தவில்லை; அவர் உருவாக்கிய சீசர் தான் நிலைபெறச்செய்கிறது என்று நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதே போல் கதையின் கடைசியில் வாசிக்கப்படும் அன்புவின் கடிதத்திற்குப் பிறகு சீசரின் அப்பாவின் மேல் - வளர்ப்புத் தந்தையின்மேல் இரக்கமும் பரிதாபமும் கொள்வீர்கள். அவரைப்போல ஒரு உன்னத மனிதரைப் புரிந்துகொள்ளாமல் போய்விட்டோமே என்று வருத்தமும் படுவீர்கள். கடிதத்திற்கு முன் அந்த அப்பாவைப் பற்றியொரு குறிப்பை வாசித்துக்கொள்ளுங்கள்;
ஆனால், டாக்டர் அளவுமீறிச் சாப்பிட்டதனால் மட்டும் அல்ல.இவனுடைய அப்பாவுக்கு இந்தப் பிரச்சினை இருந்தது என்றார்.என்னை இந்த உலகத்துக்கு அளித்த நிஜ அப்பாவின் தஸ்தாவெஜுகளிலிருந்து கண்டு பிடித்தாராம். பார்த்தீர்களா ஜெனடிக்ஸ்!
இப்போது கடிதத்தின் கடைசிப் பகுதியிலிருந்து:
இந்தப் பழக்கம் அப்போதிருந்தே எனக்குள் ஒரு பெரிய நோயை ஏற்படுத்திவிட்டது. அதாவது கனவில் நான் நாய்களைத் துரத்திக் கொண்டு ஆரவாரமாக ஓடுவேன். திடீரென என் முன்னால் ஓடும் நாய் என் பிரியத்துக்குரிய ஒருவராக மாறிவிடும். நான் அடிப்பதை நிறுத்திவிட்டு அழத்தொடங்குவேன். ஆனால் மற்றவர்கள் அந்த நபரைப்போட்டுத் துவைத்தெடுப்பார்கள். என் பிரியத்துக்குரியவரை. ஒரு முறை இப்படி என் தம்பி வந்தான். பிறிதொரு நாள் எங்கள் விக்கி. அப்புறம் என் தோழி ஒருத்தி. இப்படியாக அந்தக் கனவு என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது. நேற்று அதிகாலையும் அதே கனவு. இந்த முறை கனவில் நாய் உங்கள் உருவிற்கு மாறிவிட்டது.
அன்புடன்
அன்பு.
சொல்லப்படுவது நாயின் கதையா? நாயின் வழியாகத் தான் நம்பும் ஒரு மனிதப் பிம்பத்தின் கதையா? அந்தப் பிம்பம் ஆசிரியரின் விருப்பங்களைச் சுமந்து திரியும் இன்னொரு பிம்பமா? அல்லது ஆசிரியரின் நகலா? என்பதைக் கதையை நுட்பமாக வாசிக்கும்போது உணரமுடியும்.
சாரு நிவேதிதா கைக்கொண்டுள்ள இந்தத் தந்திரக்கூற்று முறையில் சாதனை படைத்த கதைகள் இரண்டை நீங்கள் வாசித்திருக்கக்கூடும். ஒன்று உலக அளவில் அறியப்பெற்ற ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப்பண்ணை. அக்கதையின் பாத்திரங்கள் எல்லாம் விலங்குகளே. சோசலிச அரசு என்பதும் அதிகாரத்தின் கெட்டிதட்டிய வடிவமாகவே மாறிப்போய்விட்டது என்பதைச் சொன்ன புனைகதை. அதேபோலொரு கதையைப் புதுமைப்பித்தனும் எழுதியிருக்கிறார். கதையின் தலைப்பு. எப்போதும் முடிவிலே இன்பம். அதன் தொடக்கமும் முடிவும் மட்டும் இங்கே:
அது மிகவும் ஆசாரமான முயல் - நாலு வேதம், ஆறு சாஸ்திரம் மற்றும் தர்க்கம் வியாகரணம் எல்லாம் படித்திருந்தது. திரிகரண சுத்தியாகத் தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு, வாழ்வின் சுகங்கள் எல்லாம் ஒன்று பாக்கிவிடாமல் அனுபவித்து வந்தது.

     அந்த முயல் எலியட்ஸ் ரோடில் உள்ள ஒரு கலெக்டர் பங்களாவில் வசித்து வந்தது. வெகு காலமாகத் தான் வசிக்கும் இடம் ஒரு கலெக்டரின் பங்களா என்பது அதற்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொண்ட பிற்பாடு அதற்குப் பெருமை சொல்லி முடியாது. வனராஜனான சாக்ஷாத் மிருகேந்திரனே போல அதன் நடையில் மிடுக்கு ஏற்பட்டது. உலகத்தில் தன்னை ஏறெடுத்துப் பார்க்க யாருக்கும் அருகதை இல்லை என நினைக்கவும் ஆரம்பித்து விட்டது அந்த முயல்.

இது தொடக்கம், இனி முடிவு:
முயல்கள் கண்ணுக்குத் தென்படாததைக் கண்டு கலெக்டர் அதிசயப்படவில்லை. தமக்கு எதிராகப் பெரிய சதி நடந்ததும் அவருக்குத் தெரியாது.

புதுமைப்பித்தனின் இந்தக் கதை எழுதப்பெற்ற ஆண்டு . இந்தியாவில் சாதி அமைப்பையும், உயர்தாழ்வையும் தக்கவைத்துச் சொகுசு வாழ்க்கையை நீட்டிக்கப் பிராமணர்கள் செய்யும் முயற்சியை விமரிசிக்க ,’நான்கு வேதமும் ஆறு சாஸ்திரமும் படித்த முயலையும் முயலினியையும் எழுதிக்காட்டினார். அதனோடு நாயொன்றையும் நரியொன்றையும் உருவாக்கிச் சாதிப்பிளவுகளையும் செயல்படும் அதிகார முரண்களையும் கடுமையான விமரிசனத்தோடு பேசியிருப்பார்.

2015 இல் சாரு நிவேதிதா எழுதும் கதை , இந்தியாவின் அதிகாரத்திற்கு வந்துள்ள கட்சியும், அதன் ஆதரவுக்கூட்டமும் இந்திய மரபு, இந்திய அறிவு, இந்திய ஞானம் என எதையெல்லாம் ஏற்கிறதோ அதையெல்லாம் ஏற்றுப் பேசும் நாயொன்றை உருவாக்கிக் கதைசொல்ல வைத்துள்ளார். அதற்கு சீஸர் என்னும் மேற்கத்தியப் பெயர்கொடுத்தது வெறும் உத்தி அல்ல; தந்திரம்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்