தாரை தப்பட்டை என்னும் கீதாசாரம்


தனது படங்களுக்காக இந்திய அளவில் விருதுகளைப் பெற்றுள்ள -தமிழின் முக்கிய இயக்குநராகக் கருதப்படுகிற பாலாவின் ஏழாவது படம் தாரை தப்பட்டை. இவரைப் பாராட்டும் மணிரத்னம்  ‘அவ்வப்போது வேறுவேறு சூத்திரங்களை முன்வைத்துத் திரைக்கதையை அமைத்துப் படங்களை இயக்குகிறார்; ஒரே சூத்திரத்தைப் பின்பற்றுவதில்ல்லை’ என்கிறார்.  சேது, நந்தா, பிதாமகன் வரையிலான பாலாவின் முதல் மூன்று படங்கள் வரையிலும் வித்தியாசங்களைத் தேடும் இயக்குநர் பாலா என்றொரு தோற்றம் இருந்தது. ஆனால் நான் கடவுள், அவன் இவன், பரதேசி என பிந்திய மூன்று படங்களோடு தாரை தப்பட்டை என்னும் ஏழாவது படத்தையும் பார்த்தபின்பு, ஒட்டுமொத்தமாக அவரது எல்லாப் படங்களுமே ஒரேவிதக் கருத்தை முன்வைப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

அவரது முதல் தேடல்  “முன்னிறுத்தப்பட வேண்டியது நல்லதோ நாயகத்தனமோ அல்ல என நம்பியது என்பது கவனிக்கவேண்டிய ஒன்று.  நிர்மூலமாக்கப்பட வேண்டிய தீமையைத் தேடியே நீண்ட காலம் காத்திருந்து தனது படங்களைத் தொடங்குகிறார். தேடிக் கண்டுபிடித்தபின்பு அதன் வழியே தனது படங்களுக்கான புதிய பின்புலத்தையும் குறிப்பான வெளியையும் உருவாக்கிறார். அதனாலேயே அவரது ஒவ்வொரு படமும் வித்தியாசமான படம் போலத்தோன்றுகிறது. யோசித்துப் பார்த்தால் அவை வித்தியாசமானவையல்ல; எல்லாப் படங்களும் ஒரே கருத்தியலிலிருந்தே உருவாகின்றன. தான் நம்பும் அந்தக் கருத்தை முன்வைப்பதற்கு குறிப்பான நிலவியல் மற்றும் சமூகப் பின்புலத்தைப் புதிதாக கண்டடைவது மட்டுமே பாலா செய்யும் புதுமை. 
‘நல்லது காப்பாற்றப்படவேண்டும்; கெட்டது ஒழிய வேண்டும்’ என்பது உலகம் முழுவதும் நம்பப்படும் எளிய கருத்தியல்;முதன்மையான வெற்றிச் சூத்திரம். இந்த வெற்றிச் சூத்திரத்தில் பாலா உருவாக்கும் வித்தியாசம் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளைப் புதிதுபுதிதாகக் கண்டுபிடிப்பது மட்டுமே. அதோடு அவர் “குற்றமிழைப்பவர்கள், அழிக்கப்பட வேண்டியவர்கள்; வாழத் தகுதியற்றவர்கள் அவர்கள். அவர்களை அழித்தல் நீதி” என்ற கருத்தில் நம்பிக்கையோடு இருக்கிறார். வணிகப்பட இயக்குநர்கள் வில்லன் - நாயகன் என்ற தனிமனித மோதலை வளர்த்தெடுத்து, வில்லன் தண்டிக்கப்படுகிறான் அல்லது மன்னிக்கப்படுகிறான் எனப் படம் எடுக்கிறார்கள். ஆனால் பாலாவின் படங்களில் தண்டனையும் இல்லை; மன்னிப்பும் இல்லை. அழிப்பு மட்டுமே இருக்கின்றன. 

அவரது படங்களில் அழிப்பை நிகழ்த்தும் வன்முறையாளர்கள் எங்கிருந்தோ வருபவர்கள் அல்ல. பெரும்பாலும் தீமை நடக்கும் வெளிகளிலிருந்தே உருவாகின்றவர்கள். அப்படி உருவாகின்றவர்களால் அழிக்கப்படுகின்றவர் களும் தனிமனித விரோதித்தால் அழிக்கப்படு கின்றவர்கள் அல்ல; அவர்கள் ஒவ்வொருவருமே பொதுச் சமூகத்தின் விரோதிகள். அவர்கள் கைக்கொள்ளும் தொழில் நமது சமூகத்திற்கே பெருங்கேட்டை விளைக்கும் சட்டவிரோதத் தொழில்கள். அதனால் சமூக விரோதிகளை நிர்மூலம் செய்வது ஏற்கத்தக்கதே எனப் படத்தின் முடிவு நகரும்போது பார்வையாளர்கள் அதனை ஏற்றுக் கொண்டு பாலாவை வித்தியாசமான படம் தருபவர் எனப் பாராட்டிக்கொண்டு வெளியேறுகிறார்கள். இதுவும் மற்ற வணிகப்பட இயக்குநர்களிடமிருந்து அவர் வேறுபடும் விதமாக இருக்கிறது. 
‘அழித்தல் நீதி’ என்பது ஒருவிதத்தில் கீதையின் சாரம். அழிக்கப்பட வேண்டியவர்களை முடிவு செய்து விட்டால் சட்டம், முறைமை, நியதி என்றெல்லாம் பார்க்கவேண்டியதில்லை என்ற நிலைபாட்டையே அர்ச்சுனனுக்குக் கண்ணன் உபதேசிக்கிறான். அந்தக் கருத்தே பாலாவின் படங்களில் தூக்கலாக வெளிப்படும் கருத்தியல். கஞ்சாத் தோட்டம் வைத்துப் பராமரித்து விற்பனை செய்பவன், பிச்சைக்காரர்களை உருவாக்கி வியாபாரம் செய்பவர்கள், அடிமைகளாகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை நடத்தும் முதலாளிகளும் கங்காணிகளும், மாடுகளைச் சட்டவிரோதமாக ஓட்டிச்சென்று வெட்டி வியாபாரம் செய்பவர்கள் என இதற்கு முந்திய படங்களில் சமூகவிரோத வில்லன்களைக் கண்டுபிடித்து அழித்துக் காட்டிய பாலாவின் நாயகர்களை நாம் அறிவோம். அவர்களின் வன்முறையின் மூர்க்கத்தையும் கொலைவெறியின் குரூரத்தையும் அழகியல் காட்சிகளாகத் தமிழ் ரசிகர்கள் ரசிக்கவே செய்தனர். அதைப் போலவே இந்தப் படத்தில் ஒரு குரூர சமூகவிரோதியை வில்லனாக உருவாக்கிக் கொலைசெய்கிறார். 
அப்பாவியாக - அனாதையாக நடித்து இளம்பெண்கள் பலரைத் திருமணம் செய்துகொண்டே இருப்பதுதான் வில்லனின் வேலை. அவனால் தாலி கட்டப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் விபச்சாரியாக வாழ்க்கையைத் தொடரவேண்டும். பணக்காரர்களின் ஆசைக்குரியவர்களாக வாழ வேண்டும். அந்த ஆசைகள் ஒரே மாதிரியானவை அல்ல. வெவ்வேறு விதமானவை. ஒவ்வொரு விதத்திற்கும் கிடைக்கும் பணமும் வெகுமதிகளும் விதம்விதமானவை. 

வில்லன்களை மையப்படுத்தித் திரைக்கதை அமைக்கும்போது உருவாக்கும் பின்புலம் பெரும்பாலும் பொதுச்சமூகத்தின் கவனத்தைப் பெறாத - விளிம்பு நிலைநிலை வாழ்க்கையாக இருக்குமாறு பார்த்துக் கொள்வதன் மூலம் தனது வெற்றிச் சூத்திரத்தின் இன்னொரு பரிமாணத்தை உருவாக்குகிறார் பாலா. இந்தப் படத்தில் அவர் கண்டடைந்த விளிம்புநிலைக்குழு ‘ஆட்டக்காரர்கள்’ என்னும் தொழில்சார் விளிம்புநிலைக்குழு. சினிமாக் கொட்டகைகளின் வருகைக்கு முன்பு தமிழ்நாட்டின் ஊர்த் திருவிழாக்களிலும் கும்பிடுகளிலும் கூட்டத்தை மகிழ்விக்கும் பொறுப்பில் இருந்த ஆட்டமும் பாட்டுமான கலைஞர்கள். தாரை, தப்பட்டை, ஒத்து, நாயனம், முகவீணை, துந்துபி எனப் பல்வேறு இசைக்கருவிகளோடு கிளர்ச்சியூட்டும் இசையையும் ஆட்டத்தையும் வாழ்க்கையின் பகுதியான கலையாக வைத்திருந்த சமூகக்குழு, சமூக மாற்றத்தாலும் ஊடகங்களில் வளர்ச்சியாலும் நலிந்து கொண்டிருக்கிறது. நலிந்துகொண்டிருக்கும் அந்தக் கூட்டத்திலிருந்து ஒருபெண்ணைப் பிய்த்து எடுத்துத் தனது வழக்கமான கதைப்பின்னலின் வழியாக முன்னிறுத்துவதன் மூலம் நலிவடையும் கலையைப் பேணும் அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளார் இந்தப் படத்தில். அதன் வழியாகவே தனது கருத்தியலுக்குள் பயணம் செய்கிறார். தொடர்ச்சியாக இதையேதான் எல்லாப் படங்களிலும் அயற்சியில்லாமல் செய்துகொண்டிருக்கிறார். பார்ப்பவர்களும் அயற்சியில்லாமல் பார்ப்பார்கள் என்று நம்புகிறார். 

தாரை தப்பட்டையில் உருவாக்கப்பட்ட வில்லன், இந்திய மரபான வாழ்க்கையில் இருக்கும் திருமணம் என்னும் புனித அமைப்பைக் கொச்சைப் படுத்துபவன். மனைவிகளைப் பண்டமாகக் கருதி விற்பவன். என்பதுதான் முக்கியமான திருப்பம். அந்தத் திருப்பத்திற்குப் பிறகு படத்தின் நிகழ்வுகளே இடம்மாறி விடுகின்றன. விவாதங்களும் கூடத் திசைமாறியுள்ளன. அந்தத் திசைமாற்றம் முக்கியமான விவாதத்திற்குள் பார்வையாளர்களைக் கொண்டு போகிறது. ஒருவிதத்தில் அந்த விவாதம் அரசியல் சொல்லாடலாகவே மாறூகிறது எனலாம். 

நிகழ்கால இந்தியாவில் மரபுக்குத் திரும்புதல் என்னும் அரசியலைச் சொல்லும் இயக்கங்கள், ‘திருமணம் என்னும் புனிதமே’ இந்திய வாழ்வின் அடையாளமெனத் திரும்பத்திரும்பச் சொல்கின்றன. பெண்களின் தன்னிலையை அங்கீகரிக்காத, ஆணின் ஆதரவில் இருக்க வேண்டியவளாகக் கட்டிப்போடும் திருமணம் பற்றிய இந்தக் கூற்றுகள் விவாதத்திற்குரியன என்கின்றன நவீனத்துவச் சிந்தனைகள். தாரை(சூறாவளி) பெண்ணென்றால், தப்பட்டை(சன்னாசி) அதனை இயங்கச் செய்யும்- உத்வேகம் தரும் ஆணென்னும் இசைக்கருவி. இவ்விரண்டும் இணைந்து நிற்கும்போதே கச்சேரி களைகட்டும். ஆட்டம் களைகட்ட இவ்விரண்டும் சேர்ந்திருக்கவேண்டும்; சேராதபோது மொத்தக்குழுவின் ஆட்டமும் களைகட்டவில்லை; வருமானமே இல்லை. ஆட்டம் களைகட்டவேண்டும் என்பதைப் போல இவர்களின் குடும்ப வாழ்க்கையும் களைகட்ட வேண்டுமென்றால், சிக்கல் இல்லாமல் போக வேண்டுமென்றால் சூறாவளியும் சன்னாசியும் இணைந்திருக்க வேண்டும். அதற்கு மாறாக ஆட்டக்கார வாழ்க்கையில் நிம்மதியான பிழைப்பு இல்லை என நினைக்கும்போது அதிலிருந்து விடுபட வேண்டுமென மனம் அவாவுகிறது. அந்த அவாவுதலில், தனக்கில்லையென்றாலும், தனது அன்புக்குரிய சூறாவளிக்காவது கிடைக்கட்டும் என நினைக்கும் சன்னாசி செய்து வைத்ததுதான் அவளது திருமணம். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை என்ன ஆனது என்பதே பின் பாதிக்கதை. சூறாவளியின் திருமண வாழ்க்கை முழுமையும் சிதைந்துபோன ஒன்று எனக் காட்சிகள் விரிக்கப்படுகின்றன.
 
ஒரு தாரைக்குத் தேவையான தப்பட்டையை அடைய எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. இந்திய மரபான சமூக அமைப்பு, சாதி மற்றும் உறவு முறைத் திருமணம் என்னும் அமைப்பாக அருகருகே இருக்கும்படியாகவே வைத்திருக்கின்றது. அதை மீறவேண்டியதில்லை. அதைப் பின்பற்றினாலே போதும் என்பதை வலியுறுத்திச் சொல்கிறார் பாலா. அதைச் செய்யாமல் மீறினால் - சாதி கடந்து, உறவுகளைத் தாண்டி அந்நிய சமூகவெளியில் கணவனை அடைந்தால் கிடைப்பது சூறாவளிக்குக் கிடைத்த சீரழிவான வாழ்க்கைபோல இருக்கக் கூடும் என்று எச்சரிக்கை செய்கிறார்; பயமூட்டுகிறார் பாலா. 

கீதையின் சாரம் நிலவுடமைக்காலத்து அரசியல் கருத்தியல். அது முன் வைப்பது அழித்தொழிப்பு. நிகழ்கால மக்களாட்சித் தத்துவத்திற் கெதிரானது. மக்களாட்சி முறைமை வலியுறுத்துவது மன்னிப்பையும் தண்டனையையும். பாலாவின் எந்தப் படத்திலும் மன்னிப்போ, தண்டனையோ கிடையாது.  அழிப்பது மட்டுமே தீர்வு. அப்படி அழிப்பதும் சட்டப்படியான மரண தண்டனைகூடக் கிடையாது. எந்தச் சட்டத்தையும் பின்பற்றாத உதிரித் தனமான மனிதர்களைக் கொண்டே அழித்தொழிப்பை நியாயப்படுத்துகிறார். அத்தோடு இந்தப் படத்தில் உறவுமுறைத் திருமணம் என்னும் புனிதத்தை நிலைநிறுத்தும் நோக்கத்தோடு கதைப்பின்னலைச் செய்துள்ளார். இவ்விரண்டுமே நிகழ்கால அரசியலில், நவீனத்துவத்திற்கெதிராக நிற்பவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள். இந்தப் படத்தின் வழியாகத் தான் நவீனத்துவத்திற்கெதிரானவர் என்பதையும் பழைமைக்குத் திரும்புதலை முழுமையாக ஆதரிப்பவர் என்பதையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் பாலா. அந்தக் கருத்தியலில் நம்பிக்கைகொண்டவர்கள் பாலாவைக் கொண்டாடவே செய்வார்கள். நான் கொண்டாடப்போவதில்லை. 



================================ நன்றி; அம்ருதா, பிப்ரவரி, 2016

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்